Monday, May 9, 2016

அரசியலில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா - தமிழக முஸ்லீம் கட்சிகள் !

தலைப்பில் முதல் பகுதி ஒரு நகைச்சுவை நடிகர் தமிழ் சினிமாவில் பயன்படுத்தும் பிரபலமான வசனம். 'அரசியலில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா" என சொல்லும் அச்சொல்வடையுடன் தமிழக முஸ்லீம் கட்சிகளை இணைத்து சொல்லப்பட்டிருப்பது அச்சுப் பிழையா அல்லது அசலாக நாம் நினைக்கும் முஸ்லீம் கட்சிகளே பிழையா என்ற குழப்பத்திற்கான பதிலே இக்கட்டுரை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமேயே நாடாளுமன்ற தேர்தலின் போதே 90களுக்கு முன் முஸ்லீம் உம்மத்தில் அரசியல் கட்சிகள் தனியாகவும் இஸ்லாமிய அமைப்புகள் தனியாகவும் பார்க்கப்பட்டதையும் 90களுக்கு பின் இஸ்லாமிய / சமூக அமைப்புகளே அரசியல் கட்சியாக மாறியதன் மூலம் இஸ்லாமிய முலாம் பூசப்பட்ட அரசியல் செய்ததனால் ஏற்பட்ட வீழ்ச்சியையும் பதிந்திருந்தோம்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்ட சூழலில் அதிமுகவே தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்ட சூழலிலும் அக்கட்டுரையை மறு பரீசீலனை செய்யலாமே என்றால் நிலைமை எவ்விதத்திலும் மாற வில்லை என்பது மாத்திரமல்ல இன்னும் மோசமாகவே உள்ளது என்பதை கள நிலவரம் தெளிவாக உணர்த்துகிறதுதன் சொல் பேச்சு கேட்டு நடக்கும் முஸ்லீம் லீக் தமிழகத்தில் இத்துணை லீக்குகளாக வீக்காகியதில் திமுகவுக்கு உள்ள பங்கு தெரிந்த போதிலும் உடன் பிறவா சகோதரனாக திமுகவை பாவிக்கும் முஸ்லீம் லீக் குறித்தோ .பி.எஸ்ஸை விட மோசமாக அம்மாவிடம் பணிவு காட்டும், அல்லாஹ் ஹராமாக்கிய மதுவை கூட ஆதரிக்கும் அளவு அம்மா விசுவாசம் கொண்ட ஷேக் தாவூத்தோ இக்கட்டுரையின் பேசு பொருள் அல்ல.

அரசியல் அரங்கில் வர இஸ்லாமிய அமைப்புகள் தயங்கி கொண்டிருந்த கால கட்டத்தில் முதன் முதலாக தாம்பரத்தில் பெருங் கூட்டம் கூடி மாற்று அரசியலை கட்டமைப்போம் என்ற முழக்கத்துடன் இஸ்லாமிய வாதிகளால் கட்டமைக்கப்பட்ட தமுமுகவிலிருந்து வெளி வந்தது அதன் அரசியல் பிரிவான மமக. ஆனால் மமக அரசியல் பிரிவாக முழு அதிகாரத்துடன் தன் மீதான லகானை கழட்டி பயணப்பட்டதன் விளைவாகவே  இரண்டாக பிளவுபட்டதை நாமறிவோம். தங்கள் கைகளை மீறி போகிறார் என்றவுடன் தங்களால் உருவாக்கப்பட்டவரை நீக்கி கட்சியை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை எடுத்தவர்களால் சென்னை, கடலூர் மாவட்டங்கள் பெரு மழையில் பாதிக்கப்பட்ட போது ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனை போல விளங்கிய தமிழ் நாட்டின் அல்லி ராணியை கண்டிக்காததற்கான காரணம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பின்பு ஸ்டாலின் மருமகனின் கரண்சியின் மூலமே தம் கட்சியில் பிளவு ஏற்பட்டதாக பொருமியவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை அம்மாவை ஆதரித்தவர்கள் தங்களுக்கு அம்மாவின் இதயத்திலும் இடமில்லை என்பதறிந்து உடனே கலைஞரோடு கூட்டணி கண்டது ராமதாஸுக்கே பொறாமையை ஏற்படுத்தியிருக்கும். எதை தின்றால் பித்தம் தெளியும் எனும் சூழலில் உள்ள கலைஞர் இதயத்தில் மட்டுமல்ல அவர்களே எதிர்பார்க்காமல் ஐந்தை கொடுத்ததும் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்ததால்(!) ஒன்றை திருப்பி கொடுத்ததும் வரலாறு.

"எங்களை விலைக்கு வாங்கும் ரூபாய் நோட்டுகள் இன்னும் அச்சடிக்கப்படவில்லை" என்று முழக்கமிடும் தலைவரின் நிலைமை மத்தி மீன் கூட கிடைக்காத கடலில் நீச்சலடிப்பதை போல் ஆகி விட்டது. கனல் தெறிக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர் பாவம் அம்மாவுக்கு ஏற்பட்ட தீடீர் பயத்தால் கொடுத்த இரண்டு இடத்துக்கு வாழ்வின் இலக்கையை அடைந்தது போல் மற்றவர்களுக்கு ஒன்று தான், எனக்கு இரண்டு என்று நெடுஞ்சாண் கிடையாக அம்மாவிடம் சரணாகதி அடைந்து விட்டார். இரட்டை டம்ளர் முறையை ஒழிக்கும் சக்தி கொண்ட ஓரே கொள்கையான இஸ்லாத்தின் பிரதிநிதியாக கர்ஜிக்க வேண்டியவர் இரட்டை மேடை எனும் நவீன தீண்டாமைக்கு பலியானதும் அவலம். தான் போட்டியிடுவதற்காக அதிமுகவின் உறுப்பினராகவே ஆன பிறகு இதெல்லாம். பார்த்தால் முடியுமா என்று கேட்பதும் சரி தான்.

அல்லாஹ்வுக்கு கொடுக்க வேண்டிய அதிகாரத்தை 'அதிகாரம் மக்களுக்கே' என்று ஆரம்பத்திலேயே சறுக்கிய நம் இன்னொரு சகோதர அமைப்பு கடந்த தேர்தலில் யாரிடமும் கூட்டணி வைக்கவில்லை என்பதாலே கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கப்பட்டது. பிற கட்சிகளை போலல்ல, போர்குணம் கொண்ட திப்புவின் வாரிசுகளாகிய நாங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றவர்கள் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அய்யாவுடன் கூட்டணிக்கு ஆயத்தமானார்கள். பிற கட்சிகள் போலல்லாமல் தங்கள் கூட்டணியில் மமகவையும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் சேர்க்க ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக இவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட இது வரை வாசித்த திமுக மேளத்தை ஓரத்தில் வைத்து விட்டு தங்களை தவிர பிற கட்சிகள் சுயநலத்துக்காக போட்டியிடுவதாகவும் திமுக அதிமுகவும் சம தூரத்தில் வைக்கப்பட வேண்டிய கட்சிகளாகவும் கச்சை கட்டி களத்தில் இறங்கியுள்ளனர்.


ஆளில்லா கடையில் டீ ஆத்த கிளம்பியுள்ள வெல்பேர் பார்ட்டியோ இன்ன பிற லெட்டர் பேடு கட்சிகளோ குறித்து அதிகம் அலட்டி கொள்ள வேண்டியதில்லை. இந்த ஜாஹிலிய்யா செட்டப்பில் கூட யாரோடு கூட்டணி சேர வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை கூட இவர்களுக்கு இல்லாமல் போனது அவலம். அம்மாவிடம் சீட் கிடைக்காது என்பதால் அய்யாவுடன் கூட்டணி வைப்பதும், சரத்குமார் போன்று கறிவேப்பிலையாக அம்மா நம்மவர்களை இரட்டை இலையேயிலே நிற்க வைப்பதும் அதிமுகவின் பி டீம் என்று சொல்லப்படுபவர்கள் கூட கூட்டணியில் சேர்க்க மறுக்கும் நிகழ்வுகளை பார்த்தால் தலைப்பை நீங்கள் ஒத்து கொள்வீர்கள் தானே.