Monday, December 5, 2011

டிசம்பர் 6 – மீண்டும் ஓர் பாபரியை அனுமதிக்க மாட்டோம்


19 வருடங்களாக இந்திய முஸ்லீம்கள் உள்ளிட்ட உலகளாவிய உம்மத்தின் நெஞ்சத்தில் ஆழமாய் குத்தப்பட்ட கத்தி இன்னும் எடுக்கப்பட முடியாமல் அப்படியே இருக்கிறது. முஸ்லீம்களின் பள்ளிவாயிலை இடித்த போது அன்றைய பிரதமர் நரசிம்மராவின் வாக்குறுதியை நம்பினர் முஸ்லீம்கள். ஆம் பாபரி இருந்த இடத்திலேயே கட்டப்படும் என்று சொன்னார் அவர். வெறும் வாயில் உதிர்த்த வார்த்தைகள் அவை. உண்மையிலேயே அப்படி ஒரு எண்ணம் இருந்தால் பாபரியே இடிக்கப்பட்டு இருக்காது.



பள்ளியை இடித்தவர்கள் தாங்கள் நீதிமன்றத்தை எதிர்பாக்கவில்லை, கோவிலை கட்டியே தீருவோம் என்றனர். பறி கொடுத்த முஸ்லீம்களோ நீதியை இஸ்லாத்துக்கு முரணான இஜ்ஜாலிஹிய்யாவிடம் எதிர்பார்த்தனர். அவர்களை சொல்லி குற்றமில்லை. அல்லாஹ்வின் ஆலயம் ஷஹீதாக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அல்லாஹ்வின் ஆலயம் எழுப்பப்படும் என்று சொல்லி உணர்வூட்ட வேண்டிய தலைவர்களே நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருப்பினும் ஏற்று கொள்வோம் என்று சொல்லி இளைஞர்களின் வீரத்தை முடக்கி போட்டனர்.


இதே நீதிமன்றம் தானே செங்கல் பூஜைக்கு வழி வகுத்தது, பள்ளிவாயிலை இடிப்பார்கள் என்று தெரிந்தும் கல்யாண்சிங்கின் வெற்று வாக்குறுதியை நம்பி பள்ளியை இடிக்க விட்டவர்கள், பள்ளி இடித்த பின் கட்டப்பட்ட சட்டவிரோத கோவிலை அங்கீகரித்து பூஜை செய்ய விட்டவர்கள், நீதிமன்றம் தான் முஸ்லீம்களின் நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கை எதிர் தரப்புக்கு தாரை வார்த்தது.

 
இத்தனையையும் பார்த்தும் இறைவன் படைத்த வேதத்தின் மீது ஏற்படாத நம்பிக்கை நீதிமன்றத்தின் மேல் சமூக தலைவர்களுக்கு இருந்தது. பாபரியை மீட்க டிசம்பர் 6 ல் நடத்தப்படும் போராட்டங்களும் முனை மழுங்கி வெவ்வேறு இயக்கங்களில் ஒரே நோக்கத்திற்காக வெவ்வேறு மூலைகளில் நின்று கூக்குரல் எழுப்பும் வருடாந்திர பாத்திஹாவை போல் ஆகிவிட்டதாக சாமான்ய முஸ்லீம் நினைப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. யாரை நம்பியும் எந்த அமைப்பையும் சார்ந்திருக்காமல் அனைவரும் ஓரணியில் அயோத்தியை நோக்கி பயணிப்பதே பாபரி மீண்டும் எழுப்பப்படவும் இனி ஒரு பாபரி ஏற்படாமல் தடுக்கவும் சிறந்த வழியாகும்.


பாபரியை நினைவு கூறும் பொருட்டு நம் தளத்தில் ஏற்கனவே வெளியான கட்டுரைகளின் லிங்குகளை இங்கு கொடுக்கிறோம்


பாபரியை விட்டு கொடுத்து விடலாமா ?


http://islamiyakolgai.blogspot.com/2009/03/blog-post_2288.html


பாபரிக்கு நம் பங்களிப்பு என்ன ?


http://islamiyakolgai.blogspot.com/2009/03/blog-post_6323.html


சத்தியமார்க்கம்.காம் மற்றும் பாபரி மஸ்ஜித்.காம் தளங்களில் வெளியான கவிதைகளை நன்றியுடன் பிரசுரிக்கிறோம்.


ஓ. இந்திய முஸ்லீமே! நான் பாபரி மஸ்ஜித்


ஐநூறு ஆண்டுகள் நிலைத்து நின்றேன்!


என்னுள் நீங்கள் அல்லாஹ்வைத் தொழுது வந்தீர்கள்..


வரலாறாய் வாழ்ந்து கொண்டிருந்தேன்.


அமைதியாக நின்று கொண்டிருந்த என் மேல்


சில கழுகுப் பார்வைகள் விழத்தொடங்கின.


என்னை இந்தியாவின் அவமான சின்னம் என்றார்கள்,


நான் களங்கப் படுத்தபட்டேன்


என்னை இடித்துத் தரைமட்டம் ஆக்கினார்கள்!


நான் ஷஹீது ஆக்கபட்டேன்....


அல்லாஹுவைத் துதித்து வந்த என் இடத்தின்மேல்


காவிகளின் களியாட்டம் நடக்குதே!






ஓ, இந்திய முஸ்லிமே! நான் இந்தியாவின்


நினைவுச் சின்னம் மட்டும் அல்ல;


நான் ஜனநாயக இந்தியாவின் இதயம்...


என்னை நீ இழந்துவிடத் துணிந்துவிட்டால்


இந்தியா இன்னும் பல இறையில்லங்களை இழந்துவிடும்.


என்னை நீ மறந்து விட்டால் ...


நீயும் மறக்கடிக்கப்படுவாய்!


ஓ, இந்திய முஸ்லிமே! நீ தூங்கிவிட்டால்


எதிரிகள் விழித்து கொள்வார்கள்


நீ உன் பணியை நிறுத்திக் கொண்டால்


நான் அவமானச் சின்னம் என்ற பொய்யை


உண்மை ஆக்கிவிடுவார்கள்.


ஓ! இந்திய முஸ்லிமே!


என்னுடைய அழுகை சப்தம்


உன் செவிகளை எட்டவில்லையா?


அநியாயக்காரர்களின் பிடியிலிருந்து


என்னை நீ மீட்டு எடுக்கும் காலம் எப்பொழுது?


oOo


ஓ,பாபரியே! உன் அழுகை சப்தம்


எங்கள் காதுகளில் விழுகிறது


நாங்கள் எங்களை வருத்தி, உன் கண்ணீரைத் துடைப்போம்!


எங்கள் உதிரத்தைச் சிந்தி, உன் மினாராவை எழுப்புவோம்!


எங்களை மண்ணில் புதைத்து, உன்னைக் கட்டி எழுப்புவோம்!


இன்னும் கொஞ்ச காலத்தில், இன்ஷா அல்லாஹ்!

- திருவை அன்ஸர்




வீழ்த்தப்பட்ட நீதி


450 ஆண்டுகள் பூமி சுமந்த - பிள்ளை


பாபரி வீழ்த்தப்பட்டது கண்டு


பூமி சுமந்த பாரத்தை விட


எங்கள் மனபாரம் அதிகரித்ததே!






வரலாற்றின் சின்னமாய்


வீறுகொண்டு பயணித்த - பள்ளி


பாசிச கல் தாக்கியதால் - வீழ்ந்த நொடி


ஜனநாயக தூண்களுக்கு விழுந்த அடியல்லவா?






விரைப்பான வெண் அங்கிக்குள்


சிறைக்கொண்ட தொகுதி சொந்தங்கள்


வீழ்த்தப்பட்ட நீதிகண்டு


விறைப்பால பேசலியோ!...


விலைபோயிட்டு பேசலியோ!






கல்லடிப்பட்ட குளம்கூட


அலை எழுப்பும் எதிர்ப்பாய்!


கலையாக நின்ற பள்ளி கல்லானபோது


பாடம் கல்லாது போன நமது நிலைதான் சோகம்!






நாட்டரசி பிரசவம் அரண்மணையில்லை


காட்டில் பெற்றதே முரண்பாடு!






பிரசவம் பெயரைச் சொல்லி - பாசிசத்தால்


நாடு பட்ட பாடு... இந்திய வரலாற்று வெட்கக்கேடு!






வில் நாணிலிருந்து பிறந்த அம்பாய்


வீழ்ந்த இடமதிலே வீறுகொண்ட புது பாபரி


ஆட்சி மன்றத்தின் "வாக்கு" மெதுவாய் புரிந்தது


துரோகிகளின் வாக்கு வங்கிக்கான வாக்கு!






சிலை வைத்த பொழுது... பூட்டு உடைக்கப்பட்ட பொழுது...


பூஜைகளுக்கு திறக்கப்பட்ட பொழுது...பள்ளி இடிக்கப்பட்ட பொழுது...


அப்பொழுதினிலே... அனைவரும் கூறுவர் 'அய்யகோ!'






நீதிமன்றமோ...நீதிமன்றாட - நிலைதொடரும் "ஸ்டேட்டஸ் கோ"


ஒரு வாரிசு உள்ள பெற்றோரின் சொத்துக்கு


மூன்று பங்கு எப்படி சாத்தியம்?






விசாரித்திருந்தும் விருட்டென கிழித்தனரே!


விழித்திரையை சாத்தியம் என்று!


நீதிப்புத்தகத்தை பூணூல் சுற்றிவிட்டது!


நீதிதேவதை பாசிச கள் குடித்துவிட்டாள்!






தீர்ப்பு: நீதி தேவதை கைத்தராசின்


ஒரு தட்டு இறங்கிவிட்டது!






நீதி தட்டு சமநிலைக்கு வருவது எப்பொழுது?


நீதிதேவதை மதிமயக்கம் தெளிவது எப்பொழுது?






சுற்றிய பூணூல் அறுபடும் அப்பொழுது!


"முஸ்லிம்கள் நாம்" எனும் சொல் பொருள்படும்


"அக்கணப் பொழுது"






:நு.அபூதாஹிர், திருவிதாங்கோடு.


Friday, December 2, 2011

ஊழலிலிருந்து இந்தியா விடுதலை பெற

நாட்டின் எல்லா திசைகளிலும் ஊழல் சுனாமியாய் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருப்பதை காண்கின்றோம். ஆளுங்கட்சியானாலும் சரி, இப்போதுள்ள எதிர்கட்சி ஆளுங்கட்சியானாலும் சரி ஊழலை ஒழிப்பது ஒரு புறம் இருக்கட்டும், ஊழலை கட்டுபடுத்துவது என்பதே சாத்தியமில்லை என்பதே யதார்த்தம். பொருளாதார ரீதியாக இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் ஊழல் ஒழிப்பு என்பது கனவாகவே உள்ளது. இதை ஊழல் என்பதை விட ஆன்மிக வீழ்ச்சி என்றும் சொல்லலாம்.


நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரின் ஆட்சியில் கூட சில நிறுவனங்கள் ஊழல் கறை படிந்திருந்தாலும் இன்று அதை விட மோசமாக லஞ்சம் கொடுக்காமல் பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எதையும் வாங்க முடியா நிலை உள்ளது. சில சலுகைகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த நிலை மாறி இன்று அது சர்வ சாதரணமான ஒன்றாய் மாறி உள்ளது. லஞ்சம் பெறுபவர்கள் குற்ற உணர்ச்சியுடன் வாங்கிய காலம் மறைந்து போய் லஞ்சம் வாங்காதவர்களை அற்ப ஜந்து போல் பார்க்கும் நிலை உள்ளது. கீழ் முதல் மேல் வரை எல்லா மட்டங்களிலும் காவல்துறை, நிர்வாகம், நீதித்துறை என எல்லா துறைகளிலும் ஊழல் நீக்கமற நிறைந்துள்ளது.

சட்டங்களை உருவாக்குபவர்களை அதை உடைப்பவர்களாய் மாறி போன நிலையும் மாத கணக்கில் முடிய வேண்டிய சில்லறை வழக்குகள் எல்லாம் வருடக் கணக்கில் நீடிக்கும் அவல் நிலையும் நாட்டில் நிலவுவதை பார்க்கின்றோம். உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளே தங்கள் சக நீதிபதிகளை குறித்து ஊழல்வாதிகள் என விமர்சிப்பதை காண்கின்றோம். தீமைகள் நடைபெறுவதை தடுக்கவும் குற்றவாளிகளை தண்டிக்கவும் மட்டுமே சட்டத்தால் முடியும். ஒருவனை திருத்துவது என்பது சட்டத்தால் முடியாது. இன்று வழக்கறிஞர் தொழில் என்பதே சட்டத்தின் பெயரால் பொய் வாதிக்கும் பொய் பிரதிவாதிக்கும் நடக்கும் மோதலாகவும் திறமையாக பொய் சொல்பவர் வெல்வதாகவே இன்றைய சட்ட நடைமுறை இருப்பதை பார்க்கின்றோம்.

சட்டங்களை இயற்ற கூடிய பாராளுமன்றங்களோ, சட்டசபைகளோ சட்டங்களை மீறியவர்களை கொண்டவர்களால் நிரப்பப்பட்டு இருப்பதை காண்கிறோம். சட்டங்கள் சரியானவையாக இருந்தால் நூற்றுக்கணக்கான திருத்தங்கள் செய்திருக்க தேவையில்லை. இவ்வளவும் செய்த பிறகும் நிலைமை சீர்திருந்தவில்லை எனில் அடிப்படையில் எங்கோ கோளாறு என்றல்லவா பொருள்?

ஆம். மனிதனுக்கு சட்டங்களை இயற்ற தேவையான அளவு தகுதி உள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மன்னராட்சி காலத்தில் மன்னர்கள் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டது போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை குற்றமற்றவர்களாக நினைப்பது தான் அடிப்படை கோளாறாக இருக்கிறது. அதனால் தான் அவர்களால் இயற்றப்படும் சட்டங்கள் ஊழல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புகிறோம்.


எனவே பிரச்னை யார் சட்டங்களை அமுல்படுத்துகிறார்கள் என்பதில் அல்ல, யார் சட்டங்களை இயற்றுவது என்பதில் தான். இதில் தெளிவு வராத வரை ஆயிரம் ஹசாரேக்கள் வந்தாலும் ஊழலை ஒழிக்க இயலாது. எனவே இனியாவது சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்ட ஓரே இறைவனின் சட்டங்களை ஏற்பது தான் இந்தியா ஊழல் உள்ளிட்ட எல்லா தீமைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான வழி என்பதை உணர்வோம். அதை அடிப்படையாக ஏற்று கொண்ட ஒரு சமூகத்தை இந்திய மண்ணில் இருவாக்குவதே இன்றைய முஸ்லீம்களின் கடமை.