நரேந்திர மோடி தலைமையிலான பாசிச அரசு பதவியேற்றதிலிருந்து சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை ஆரவாரம் இல்லாமல் நிறைவேற்றி வருகிறது. அவற்றில் பால் மக்களின் கவனம் செல்லாமல் வேறு வேறு பிரச்னைகளை ஊடகங்களின் மூலம் வெளியிட்டு கவனத்தை திசை திருப்புவதில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது மோடி அரசு.
கல்வி துறையை காவிமயமாக்கல், நேரடியாக வங்கி கணக்கில் வைப்பு தொகை செலுத்தப்படும் என்று சொல்லி மானியத்தை ஒழிக்க முயல்வது, உலக வங்கியின் கட்டளைக்கேற்ப பாதுகாப்பு துறையிலும் தனியார் மயமாக்கலை ஊக்குவிப்பது என தொடரும் மோடி அரசு சத்தமில்லாமல் ஒரு சதியை நிறைவேற்றுகிறது. ஆம் நாட்டு பிரிவினையின் போது பாகிஸ்தான் எங்களுக்கு வேண்டாம் என்று இந்தியாவிலேயே தங்கிய ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை இந்தியாவின் எதிரியாக்க முயல்கிறது.
பிரிவினையின் போது பல குடும்பங்களில் சிலர் பாகிஸ்தானை தாய் நாடாக தேர்ந்தெடுக்க சிலர் இந்தியாவிலேயே தங்கி விடுவது என்று முடிவெடுத்தனர். 1968ல் நிறைவேற்றப்பட்ட எதிரி சொத்து சட்டம் மூலம் பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தோர் விட்டுச் சென்ற சொத்துக்களை பாகிஸ்தானில் குடியேறியோர் அனுபவிக்க முடியாது என்றாலும் அவர்களின் சட்ட பூர்வ வாரிசுதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அனுபவிக்கும் உரிமை இருந்தது. சட்டப்படி அவ்வாறு அனுமதி இருந்தாலும் அவ்வுரிமைகளை பெறுவதற்கும் பலர் பல தசாப்தங்களை நீதிமன்றத்தில் வழக்காடியே பெற முடிந்தது.
ஏற்கனவே தங்கள் உரிமைகளை பெற பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் சூழலில் அதற்கு முழுமையாக ஆப்பு வைக்கும் முகமாக 1968 எதிரி உடைமை சட்டத்தை திருத்தி மோடி அரசு பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக வைத்திருக்கிறது. 2016 திருத்தத்தின் படி எதிரிகள் என்பதற்கான வரைவிலக்கணம் மாற்றப்பட்டுள்ளது. பழைய சட்டத்தில் எதிரிகள் என்போர் பாகிஸ்தானுக்கு குடியேறியவர்களை குறிக்கும் சூழலில் திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவில் பாகிஸ்தானில் குடியேறியோரின் வாரிசுதாரர்களும் எதிரிகளாக கட்டமைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இம்மண்ணில் வாழும் இந்திய பிரஜைகளாக இருந்தாலும்.
இச்சட்டத்தின் மூலம் மோடி அரசு ஆயிரக்கணக்கான முஸ்லீம் குடும்பங்களின் வாழ்வாதரத்தை பறித்து 70 வருடமாக அனுபவித்து வரும் உடைமைகளை ஒரே இரவில் அரசுடமையாக்கும் அபாயம் கொண்டது என்பதை உணர்ந்தோமென்றால் எவ்வளவு பெரிய சதி வேலை சத்தமில்லாமல் அரங்கேறி கொண்டிருக்கிறது என்பது புலனாகும். ஒரே சட்டத்தின் மூலம் பில்லியன் கணக்கான முஸ்லீம்களின் சொத்துக்கள் பறிக்கப்படும் அபாயம் குறித்து தேர்தல் பரபரப்பில் எந்த கட்சியும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பில்லியன் கணக்கான வக்ப் சொத்துக்கள் மீட்பது குறித்து எவ்வித விழிப்புணர்வு இல்லாத போது இது குறித்து நேர்பட பேசவும், அக்னி பரிட்சையும் எந்த ஊடகத்திலும் நிகழாது என்பது மட்டும் நிச்சயம். ((நன்றி - இந்நேரம்.காம்)
No comments:
Post a Comment