கடந்த மாதம் மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.என்பதை மறுக்க இயலாது. அதே சமயம் அவரின் மரணம் முஸ்லீம் சமூகத்தில் இரு வேறு அதி தீவிர நிலைப்பாடுகளை நோக்கி முஸ்லீம் சமூகத்தை தள்ளி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணத்தை ஒரு சாரார் மதங்களை கடந்த மனிதர் என்று புகழும் அதே நேரத்தில் இன்னொரு சாரார் அவர் முஸ்லீமே அல்ல என்றும் இகழ்கிறார்..
அப்துல் கலாம் முஸ்லீமா ? முனாபிக்கா ?
அப்துல் கலாம் முஸ்லீமாக வாழவில்லை, அதனால் அவருக்கு பிராத்திக்க கூடாது என்று சொல்வதும் அவரை ஷஹீது நிலைக்கு உயர்த்தி பின்பற்றே ஆக வேண்டிய முன்மாதிரியாகவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவும் கட்டமைப்பது என இரண்டும் இரு தீவிர நிலைகளாகும். நாம் இவ்வுலகில் இஸ்லாத்தின் பால் அழைக்க கூடிய தாயீக்களாக (அழைப்பாளார்களாக) இருக்க வேண்டுமே தவிர காழிகளாக (நீதிபதிகளாக) இருக்க கூடாது. நமது வழிகாட்டியான முஹம்மது ஸல் அவர்களுக்கு அல்லாஹ் முனாபிக்கிகளின் பட்டியலை அறிவித்து கொடுத்தும் அவர்கள் அதை பகிரங்கப்படுத்தாத நிலையில் நாம் அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்து ஒருவரின் சுவனம், நரகத்தை தீர்மானிப்பது நிச்சயம் தவறான வழியாகும்.
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?
அப்துல் கலாம் எளிமையானவர், படோபகம் விரும்பாதவர் என்பதிலும் அரசு பணத்தை கையாடல் செய்யவில்லை என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக அவரை சித்தரிப்பது சரியான செய்கையல்ல. மேலும் அவர் தமிழின் மீது தீரா காதலும் சுய சார்பு போக்கு உடையவராகவும் சித்தரித்து இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்தார் என்று மிகப் பெரும் பிம்பம் கட்டமைக்கப்படுவது ஆபத்தான போக்காகும்.
மூகமுடி
ஜனநாயகம் எனும் ஜாஹிலிய்யா அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை தகரும் போதெல்லாம் அதை மீட்டெடுக்க பல பிம்பங்கள் உருவாக்கப்படுகிறது. ராஜிவ் காந்தி, வி.பி. சிங், மன்மோகன் சிங், அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி வரிசையில் குஜராத் கலவரத்தால் ஏற்பட்ட அவ நம்பிக்கையை துடைத்தெறிய பிஜேபியால் அணிவிக்கப்பட்ட மூகமுடியே அப்துல் கலாம்.
மக்கள் ஜனாதிபதி
மக்களின் ஜனாதிபதி என கொண்டாடப்படும் அப்துல் கலாம் மக்களை பாதிக்கும் எப்பிரச்னையிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளாரா என்றால் எடை குறைவான செயற்கை கால் பொருத்துதல் போன்ற சில நல்ல விஷயங்களை தவிர கார்பரேட்டை பாதிக்கும் எவ்விஷயத்திலும் தலையிட்டதில்லை. மாறாக உழைக்கும் மக்களுக்கு எதிராக தான் களத்தில் இருந்திருக்கிறார். மீனவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடிய போது அதை பிசுபிசுக்கும் விதத்தில் அணு உலை பாதுகாப்பானது என்று அறிக்கை விட்டார். மேலும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களில் கார்பரேட்டுக்கு ஆதரவாகவே தன்னுடைய விசுவாசத்தை காட்டினார்.
கனவு காணுங்கள்
அப்துல் கலாம் மாணவர்கள் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்றும் புகழாரம் செய்யப்படுகிறது. அப்துல் கலாம் நிகர் நிலை பல்கலைகழகங்களிலும் கேந்திர பள்ளிகளிலும் உரையாற்றிய அளவுக்கு அரசு கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. மேலும் நிகழ் காலத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக மாணவர்களை போராட தூண்டாமல் எதிர்காலத்தை குறித்த கனவிலியே லயிக்க வைத்ததின் பின்னால் மாணவர்களின் போராட்ட உணர்வை மங்க செய்யும் உத்தியோ என சந்தேகிக்க தோன்றுகிறது.
இந்துத்துவம் விரும்பும் முஸ்லீம்
அப்துல் கலாமை புகழும் போது இந்துத்துவம் விரும்பும் முஸ்லீம் என்றும் மதங்களை கடந்த மனிதர் என்றும் முஸ்லீம்களே சொல்வது வியப்பாக உள்ளது. இந்துத்துவம் ஒருவரை ஏற்று கொள்வது சரியான மனிதருக்கான அளவுகோல் என்றால் ஷா நவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நத்வி, சல்மான் கான் போன்றோர் தான் நல்லவர்கள் என்பதாக அர்த்தப்படும். மதங்களை கடந்த மனிதர் எனும் பதத்தின் மூலம் ஒருவர் எம்மதத்தை முழுமையாய் பின்பற்றினாலும் அவர் நல்ல மனிதராக இருக்க முடியாது எனும் மதசார்பின்மைவாதிகளின் வாதத்தை தான் முன் மொழிகிறார்கள். மாறாக நல்ல முஸ்லீமே நல்ல மனிதனாக இருக்க முடியும் என்றல்லாவா முழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்துத்துவா அப்துல் கலாமை விரும்புவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
நீங்கள் தனிப்பட்ட முறையில் தொழுகை, நோன்பு போன்றவற்றை கடைபிடித்து நல்ல முஸ்லீமாக இருப்பதை இந்துத்துவா எதிர்க்காது. உங்களுக்கு முன்னால் குஜராத்திலோ, இலங்கையிலோ இனச்சுத்திகரிப்பு நடந்தால் அதை கண்டும் காணாமல் இருப்பதை தான் இந்துத்துவா விரும்புகிறது. கல்வியின் அடிப்படையை மாற்றாமல் மெக்காலே அடிமை கல்வி முறையை ஊக்குவிப்பதை தான் இந்துத்துவா விரும்புகிறது. சுயசார்பு பேசி கொண்டே நம் இயற்கை வளங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழி விடுவதை தான் இந்துத்துவா விரும்புகிறது. இவற்றோடு ஒரு முஸ்லீம் அநீதிக்கு எதிராக அறச்சீற்றம் கொள்ளாமல் "எது நடந்தது அது நன்றாகவே நடந்தது" என்று கீதையை மேற்கோள் காட்டி உபன்யாசம் செய்தால் இவரை விட ஒருவர் இந்துதுவாவிற்கு பிடித்தவராக இருக்க முடியுமோ.
நமது முன்மாதிரி
அப்துல் கலாம் மட்டுமல்ல யாருடைய தனிப்பட்ட வாழ்வையும் துருவி ஆராய்ந்து அவரின் ஈமானை எடைபோடுவது நமது வேலையல்ல. ஆனால் யாரை நம்முடைய வழிகாட்டியாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதற்கு அளவுகோல் நம்முடைய மார்க்கத்தில் உள்ளது. அவ்வடிப்படையில் பார்த்தோமென்றால் தனிப்பட்ட வாழ்வில் நல்லவர்களாக அநீதியை கண்டும் காணாமல் போகும் நல்லவர்கள் நமக்கு முன்மாதிரியில்லை. மாறாக தனிப்பட்ட வாழ்வில் மாத்திரமல்ல பொது வாழ்விலும் நீதிக்கு சான்று வழங்குபவர்களாக அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்பவர்களே இஸ்லாம் விரும்பும் முன்மாதிரிகள்.