Sunday, December 13, 2009

அகீதாவும் அஹ்லாக்கும்

“திண்ணமாக நீர் அதி உன்னதமான பண்புகளை உடையவராக இருக்கின்றீர்….” என்ற குர்ஆன் வசனத்தை சரிவர புரிந்து கொள்வதற்கு எமக்கு நேரமெடுக்கிறது. மேற்படி குர்ஆன் வசனத்தை பல்லாயிரம் தடவை ஓதியிருப்போம். ஆனால், அல்லாஹ்வின் தூதரது உயர்ந்த பண்புகளை மெச்சிப் பாராட்டும் வார்த்தைகள் அவை என்பதற்கு அப்பால் செல்வதில்லை. குர்ஆன் எமது உள்ளத்தின் ஆழத்திற்குச் சென்று ஆன்மாவை உசுப்புவதற்கு நாம் அனுமதி கொடுப்பதில்லை.

அல்லாஹ்வின் நபி மீது தினந்தோறும் குப்பைக் கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த பெண், நோய்வாய்ப்பட்ட செய்தி கேட்டு அவரை நோய் விசாரிக்கச் சென்ற தூதரின் மனோபாவத்தை அனுமானிக்கத் திராணியற்றவர்களாக உள்ளோம். அது நம்பிக்கைக்குரிய சிறப்புப் பண்பு எனவும், எமது அயலிலுள்ள ஹேமலதா அல்லது பார்வதி எமக்குக் கொடுமை இழைத்தால் அவர்களுடன் அப்படி நடந்து கொள்வது சாத்தியமற்ற செயல் எனவும் சிலர் இதை அலட்சியப்படுத்தும் அதேவேளை வேறு சிலரோ, அல்லாஹ்வின் நபி அப்படி நோய் விசாரிக்கச் சென்ற அச்சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்தி அம்மாதுவை மதம் மாற்றியதாக விளக்கம் செய்ய முயற்சிப்பதையும் நாம் பார்க்கலாம்.

எமது நம்பிக்கையிலும் நாம் ரஸூலுல்லாஹ்வின் வாழ்க்கையை விளங்கி வைத்துள்ள விதத்திலும் ஏதோ ஒரு அடிப்படைத் தவறு இருப்பது போல் தோன்றுகிறது. எமது அடிப்படை நம்பிக்கை சார்பான விஷயங்களில் கூட தளம்பல் இருக்கிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்ட ஒருவரின் அகீதா உறுதியாக இருப்பது அவசியம். அகீதா என்பது ஒரு முஸ்லிம் ஈமான் கொள்ள வேண்டிய அடிப்படையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும். ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அம்சங்களையும் நாம் பள்ளிக் கூடத்திலும் வேறு வழிகளிலும் படிக்கிறோம். “அல்லாஹ்வைத்தவிர வணங்கி வழிபடத் தகுதியானவன் வேறெவருமில்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதரும், அவனது அடியாரும் ஆவார். அவன் இணை துணையற்றவன்; அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் அவனே; அவன் தந்த மார்க்கம் மட்டுமே சத்தியமானது” என்ற ஒப்புதலையே பிரதானமாக அகீதா உள்ளடக்கியுள்ளது.

இஸ்லாம் மார்க்கத்தின் மூலமும் இஸ்லாமிய வாழ்க்கையமைப்பின் ஊற்றுக்கண்ணும் இந்த அகீதாவே. இந்த அகீதாவானது மாசற்றதாகவும் மூடக்கொள்கைகள் கலந்து அதன் புனிதத்தன்மை சிறப்புடையதாகவும் இருப்பது அவசியமாகும். ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் ஏனைய விஷயங்களில் நெகிழ்ந்து கொடுக்க இடமுண்டு, ஆனால் அவனது அகீதாவில் எந்த நெகிழ்வுக்கோ பேரம் பேசலுக்கோ இடம் கிடையவே கிடையாது. அகீதாவின் சில கூறுகளை விட்டுக் கொடுக்கவோ அல்லது தள்ளிப்போடவோ முடியாது. தளம்பலோ அல்லது சோர்வோ தோன்ற முடியாது. முஸ்லிமின் அகீதா அந்தளவு இறுக்கமானதாக அமைய வேண்டும் என்பதை இஸ்லாம் அழுத்தமாக கூறுகிறது. ஏனெனில் அதில் பலவீனம் காணப்பட்டால் ஒருவர் இஸ்லாத்தை சரிவர பின்பற்ற முடியாது. அறுபடவோ துருப்பிடிக்கவோ முடியாத கயிற்றை ஒருவர் பற்றிப் பிடித்திருப்பதைப் போல் ஒரு முஸ்லிம் தனது அகீதாவை பற்றிப் பிடித்துக் கொண்டால் மட்டுமே சவால்களுக்கு அசைந்து கொடுக்காது அல்லாஹ்வுடைய தீனில் பற்றுறுதியுடன் இருக்க முடியும்.

இந்த அகீதாவானது ஒரு தனிமனிதன் வாழ்வில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதன் கோழையாக இருக்கலாம் சோம்பலும் பொடுபோக்கும் உடையவனாக இருக்கலாம் அல்லது தலைக்கணம் பிடித்து பெருமையடித்து திரியலாம் அல்லது படாடோப வாழ்க்கை வாழ்பவனாக இறை நிராகரிப்பில் ஊறித்திளைத்து அதன் காவலனாக, கல் நெஞ்சம் படைத்தவனாக, கொடூர குற்றங்கள் புரிபவனாக, தில்லு முல்லுகளில் மூழ்கி சம்பாத்தியம் செய்பவனாக அல்லது வேறு எப்படியான மனிதனாக இருந்தாலும் கூட அவனைப் புடம்போடப்பட்ட தங்கமாக்கி விடுகிறது இந்த அகீதா.

ஒரு மனிதன் ஏகதெய்வக் கோட்பாடான தவ்ஹீதை ஏற்ற பின் அவனுள் ஒன்பது வகையான மாற்றங்கள் ஏற்படுவதாக ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள். இந்த ஒன்பது மாற்றங்களையும் முஹம்மது (ஸல்) அவர்களதும் சஹாபிகளதும் வாழ்வில் நாம் அவதானிக்க முடிகிறது.

“என்னை விடுங்கள் அந்த முஹம்மதை தீர்த்துக் கட்டி விட்டு வருகிறேன்” என ஆவேசத்துடன் கிளம்பிய உமரை முழு உலகும் புகழும் நீதிமிக்க ஆட்சியாளனாக மாற்றியது இந்த அகீதாவே. காலா காலமாக அற்பத்தனமான சண்டையில் ஈடுபட்டு அழிந்து கொண்டிருந்த அவ்ஸ் கஸ்ரஜ் கோத்திரங்களை சகோதர வாஞ்சையால் பிண்ணிப் பிணைத்து முழு மனித குலத்தின் சுபிட்சத்திற்காக ஒன்றிணைந்து உழைக்கும் அணியாக மாற்றியமைத்ததும் இந்த அகீதாவே. தலைநிமிர்ந்து எஜமானின் முகத்தைப் பார்க்கவும் தைரியமற்ற கொடூர அடிமைத்துவம் அரசோச்சிய காலத்தில் ‘அல்லாஹு அஹத்’ (அல்லாஹ் தனித்தவன்) என்ற பிரகடனத்தை, முழங்குவதற்கான தைரியத்தை ஹபஷிப் பெண்ணின் மகனான பிலாலுக்கு இந்த அகீதாவே கொடுத்தது.

தன்னடக்கமும் பணிவும் இஸ்லாமிய அகீதா ஒருவனில் ஏற்படுத்தும் பிரதான பண்புகளாகும். ஒரு முஃமின் கர்வம் கொண்டவனாகவோ தலைக்கணம் பிடித்தவனாகவோ அகந்தையுடன் காரியமாற்றுபனாகவோ இருக்க முடியாது. அவன் புகழ் தேடி அலைந்து திரிபவனாக, தற்பெருமை கொள்பவனாக இருக்க முடியாது. அவன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என பிரகடணம் செய்யும் போது சர்வ புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியவை என்பதை ஒப்புக் கொள்கிறான். அவனிடம் காணப்படும் செல்வம், செல்வாக்கு, அறிவு, ஆற்றல்கள், வசதிவாய்ப்புகள் அனைத்தும் தனக்கு அல்லாஹ் அருளியவை என்பது அவனுக்கு தெரியும். அவை அல்லாஹ்வின் நாட்டமின்றி தனக்கு கிடைத்திருக்காது என்பதும் தெரியும். ஆகையால்தான் அற்பமானவன் எனக் கருதி இவ்வுலகில் அடக்கத்துடனும், பணிவாகவும் காரியமாற்றுவான். தற்பெருமையும், அகந்தையும் ‘ஷிர்க்’ இன் இரு அடையாளங்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.

மேற்படி பணிவும் அடக்கமுமே ரஸூலுல்லாஹ்வை தனது மேனியில் தினந்தோறும் குப்பைக் கொட்டிய பெண்மணியை நோய் விசாரிக்கச் செல்லும்படி உந்தித் தள்ளியது.மக்காவில் ரஸூலுல்லாஹ் நேசித்த மனிதர்களில் அபூஜஹ்லும் ஒருவர். அவரை இஸ்லாத்திற்கு தந்துதவும்படி துஆ கேட்கிறார்கள். அபூஜஹ்ல் பத்ர் யுத்தத்தில் கொலையுண்ட போது ரஸூலுல்லாஹ் வருத்தப்படவும் செய்தார்கள்.

அபூதாலிபின் மரணத் தருவாயில் அவரை நரகத்திலிருந்து காப்பாற்ற எடுத்த கடினமுயற்சி எத்தகையது?!அப்போதைய உலகின் விசாலமானதொரு பகுதியை ஆட்சி செய்த உமர் (ரலி) அவர்கள் குத்பா மேடையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, பெண்களின் மஹர் தொகை தொடர்பான அவர்களது கருத்தில் பிழையிருப்பதை அங்கே அமர்ந்திருந்த பெண் சுட்டிக்காட்டிய வேளை, “அல்லாஹ்வின் அடிமையாகிய உமர் தவறு செய்து விட்டார்” என ஒப்புக் கொள்ளத் தூண்டியது மேற்படி அடக்கமும் பணிவுமே.
இந்த அகீதா ஒருவனை நன்மையின்பால் ஈர்க்கப்பட்டவனாகவும் தலை நிமிர்ந்து நடக்கக் கூடியவனாகவும் ஆக்குகிறது. ஏனெனில் தனது உள்ளத்தை தூய்மைப்படுத்தி, ஆத்ம சுத்தியுடன் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் பூரணமாக சரணடைவதிலேயே தனது இம்மை மறுமை வெற்றி தங்கியுள்ளது என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் தன்னால் முடியுமான அளவு நன்மைகள் செய்து அல்லாஹ்வை நெருங்க முயற்சிக்கிறான். இந்த அகீதா அவனை எந்த ஒரு மனிதனின் முன்னிலையிலும் தலைசாய்க்கவோ அல்லது சிரம் பணியவோ விடாது. ஏனெனில் அப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் அவனுக்கு எந்த நன்மையோ அல்லது தீமையோ ஏற்படுத்த முடியாது; அவனுக்கு வெற்றியையோ அல்லது தோல்வியையோ அளிக்க முடியாது. ரஸூலுல்லாஹ்வின் தூதுவர் ருபியா பின் ஆமிர் (ரலி) அப்போதைய வல்லரசான பாரசீக ராஜ்யத்தின் மேலதிகாரியான ருஷ்துமிடம் சென்ற போது, நிமிர்ந்து நின்று ஆணித்தரமாக தஃவாவை எத்திவைப்பதற்கு இந்த அகீதாவே தூண்டியது.

பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்பட்ட பின், அதன் சாவியை கொடுப்பதற்காக உமர் (ரலி) அவர்களை கிறிஸ்தவ பாதிரிமார் எதிர்பார்த்திருந்தனர்; பட்டாளம் சூழ கலீஃஃபா வந்திறங்குவார் என்பதே பாதிரிமார்களின் எதிர்பார்ப்பு. ஆனால் கலீஃபா தனது வேலையாளை வாகனத்தில் அமர்த்தி அதன் மூக்கணத்தை கையில் பிடித்தவராக வருவதைக் கண்ட பாதிரிகளுக்கு திக்பிரமை ஏற்பட்டது. பாதிரிகளுக்கு தனது எளிமையையும், பணிவையும் பிரச்சாரம் செய்வதற்காக கலீஃபா அப்படிச் செய்யவில்லை.மாறாக தாம் போகவேண்டிய இடத்தை அடையும் வரையில் சுழற்சி முறையில் ஒருவர் மாறி ஒருவர் சவாரி செய்வதுதான் ஏற்பாடு. சுழற்சியின் கடைசிக் கட்டமாக வேலையாள் சவாரி செய்யும் சந்தர்ப்பம் வந்தது. இந்தப் பணிவையும், தன்னடக்கத்தையும் அகீதாவின்றி வேறு எது உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்திறுக்க முடியும்? சர்வ வல்லமை கொண்ட ஆட்சியாளனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் தான் ஓர் அற்பப் படைப்பே என உமர் (ரலி) அவர்கள் விளங்கி வைத்திருந்தமையே இதற்குக் காரணம்.

மதீனாவுக்கான ஹிஜ்ரத் எந்த நேரமும் நடை பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் அதற்குப் பொருத்தமான ஒட்டகைகளை தயார் செய்து, அதற்காகவே வீட்டு வாசலில் காத்திருந்து, ரஸூலுல்லாஹ் அழைத்ததும் உடனே வெளியேறி, ரஸூலுல்லாஹ்வின் உடலில் ஒரு சிறு முள்கூட தைக்காமல் பாதுகாப்பாக மதீனா கொண்டுபோய்ச் சேர்க்கத் தேவையான தைரியத்தையும், பொறுப்புணர்வையும் இந்த அகீதாவே அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு கொடுத்தது.

தனது அன்புக்குரிய சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை வெட்டிக் கொலை செய்து, நெஞ்சைப் பிளந்து ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவை மன்னிப்பதற்கும், மஸ்ஜிதில் சிறுநீர் கழித்த நாட்டுப்புற அரபியை கனிவான வார்த்தைகள் கொண்டு நேர்வழிபடுத்துவதற்கும், ஹுதைபியா உடன்படிக்கையின்போது இஸ்லாத்தின் எதிர்கால நன்மை கருதி தூரநோக்குடன் நிராகரிப்பாளர்களுக்கு பல விட்டுக் கொடுப்புகளை செய்வதற்கும் தேவையான மனோ வலிமையையும் இந்த அகீதாவே ரஸூலுல்லாஹ்வுக்கு கொடுத்தது.

அகீதா ஒரு மனிதனுள் ஏற்படுத்தும் நடத்தை மாற்றங்களில் ‘அல்இஹ்ஸான்’ என்ற பக்குவநிலை பிரதானமானது. அல்இஹ்ஸான் என்பது அல்லாஹ்வைக் காண்பது போல் வணங்குதல். அவ்வாறு முடியாத போது அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இப்பிரபஞ்சத்தில் அவனால் பார்க்க முடியாத இடமோ அல்லது அவனது ஆட்சிக்கு வெளியுள்ள பகுதி என்ற இடம் எதுவும் கிடையாது. இத்தகைய கட்டுப்பாடுகளும், பலவீனங்களும் மனிதர்களுக்குரியவை. இந்த தன்னம்பிக்கை ஒருவனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்ததின் பிரதிபலிப்பு எப்படி அமையுமெனில், அல்லாஹ்வின் பார்வையிலிருந்து தான் ஒருபோதும் தப்பிவிட முடியாதென மனிதன் உணர்கிறான். தான் கடும் இருளில் இருந்தாலும், காற்றுப் புக முடியாத பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும், கருங்கல் பாறையினாலான இருண்ட குகைக்குள் ஒளிந்திருந்தாலும், கடலுக்கு அடியில் சென்றிருந்தாலும், மனிதர்கள் நுழைய முடியாத அளவு விஷஜந்துக்கள் நிறைந்த வனாந்தரத்தில் இருந்தாலும் கூட, தன்னை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்திலேயே காலம் கழியும்.

இத்தகைய ஒருவரிடத்தில் உங்களுடைய செல்வப் பெட்டகத்தின் சாவியை ஒப்படைக்கலாம். உங்களது தொழில் நிறுவனத்தின் பணக்காப்பாளராக அவரை நியமிக்கலாம். மோசடிகளோ, வாக்குறுதி மீறலோ நடைபெறலாம் என நீங்கள் அஞ்சாது பெறும் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பொதுச்சொத்துக்களைப் பராமரிப்பதற்கு அச்சமின்றி நியமிக்கலாம். நீங்கள் அவருக்கு நியமித்த சம்பளத்துக்கு மேலால் எதனையும் அவர் தொட்டுப் பார்க்க மாட்டார்; நீங்கள் விதித்த பொறுப்புகளை உங்களின் மேற்பார்வை இல்லாமலே செய்து முடிப்பார்.

இத்தகைய ஒருவர் கடும் உஷ்ண காலத்தில் நோன்பு வைத்திருப்பார். சிரமப்பட்டு வேலை செய்வார். அவருக்கு களைப்பு ஏற்படும்; குளிர்பானமும் அருகிலிருக்கும். சுற்றுப்புறத்தில் எந்தவொரு மனிதனும் இருக்க மாட்டார். இருப்பினும் அவர் அதனை தீண்டவும் மாட்டார். ஈனத்தனமாக பாவங்களில் ஈடுபட அவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மனிதர்களை ஏமாற்றுவதற்கும், பலவீனர்களின் சொத்துகளை சூறையாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் மோசடி செய்வதற்கும், மனிதர்களுக்கிடையில் பாரபட்சமாக நடந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்; கோள்மூட்டுவதற்கும், மனிதர்களைப் பிரித்து வைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் இவை ஒன்றிலும் அவர் பங்கேற்க மாட்டார். ஏனெனில், தன்னை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவரைத் தடுத்துக் கொண்டிருக்கும்.

அகீதா ஒரு மனிதனில் ஏற்படுத்தும் இத்தகைய புரட்சிகர நடத்தை மாற்றத்தினையே ‘அஹ்லாக்’ என்கிறோம். அஹ்லாக் என்பது அகீதாவின் செயல் ரீதீயான வெளிப்பாடாகும். அல்லாஹுத்தஆலாவை தனது எஜமானனாக ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு தனிமனது வாழ்விலும் அஹ்லாக் ரீதியான பல அடிப்படை மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அப்படி மாற்றம் ஏற்படாவிட்டால் அவனது அகீதாவில் கோளாறு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய அகீதா என்பது ஒரு வகையில் ஒரு பண்பாட்டுப் புரட்சிதான்.

இஸ்லாமிய அகீதா என்பது ஒரு வகையில் ஒரு பண்பாட்டுப் புரட்சிதான். அப்படி இருந்திராவிட்டால் தமது சொந்தப் பாலகர்களை உயிருடன் புதைத்து கல்லையும் பிசாசையும் வணங்கி அறியாமையின் அடித்தட்டில் மூழ்கியிருந்த அற்ப மனிதர்கள் உலகின் வழிகாட்டிகளாக மாறியிருக்கவே முடியாது.

அஹ்லாக் என்பது அதிசக்திவாய்ந்த ஆயுதம் என குர்ஆன் குறிப்பிடுகிறது. ரசூலுல்லாஹ் அதி உன்னத அஹ்லாக்குடைய மனிதரென குர்ஆன் வர்ணிக்கிறது. ரசூலுல்லாஹ் தனது பணியின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் போது ” நான் சங்கைமிக்க அஹ்லாக்கை பூர்த்தி செய்வதற்காகவே அனுப்பப்பட்டேன்” என்றார்கள். ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ரசூலுல்லாஹ்வின் பண்புகள் எப்படி இருந்தன எனக் கேட்டதற்கு, “அன்னாரது அஹ்லாக் குர்ஆனாகவே இருந்தது” என மொழிந்தார்கள்.
”இந்தக் (குர்ஆனைக்) கொண்டு உண்மையான ஜிஹாதை மேற்கொள்ளுங்கள்...” என அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் என்பது துப்பாக்கியோ அணுகுண்டோ அல்ல. அப்படியெனில் குர்ஆனைக் கொண்டு எப்படி ஜிஹாத் மேற்க்கொள்ள முடியும்? இந்த அஹ்லாக்கே அந்த ஆயுதம்! அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா குறிப்பிட்டதும் இதே அயூதத்தைதான். ரசூலுல்லாஹ்வின் இருபத்து மூன்று வருடகால அயராத முயற்சியின் பலனாக ஏற்பட்ட சமூக மாற்றம் அஹ்லாக் என்ற ஆயுதம் மூலமே உருவானது.

இன்று இஸ்லாமிய சமூக அமைப்பொன்றை கட்டியெழுப்புவதற்கும் சமூகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குமாக பல்வேறு மட்டங்களில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் பணியாற்றுவது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம். இத்தகைய அமைப்புக்களின் காத்திரமான பணிகள் நிச்சயம் நல்ல மாற்றங்களையும் விருத்திகளையும் சமூகத்தில் ஏற்படுத்தும். ஒவ்வொரு ஊழியரிடத்தும் சிறந்த அஹ்லாக் இருப்பது பிராதானமாகும்.
ரசூலுல்லாஹ் எவ்வாறு சிறந்த பண்பாடுகள் மிக்க மனிதராகத் திகழ்ந்தார்? இதனைக் கண்டுபிடிப்பதற்காக மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை. இதற்கான விளக்கம் மிக எளிதானது. குர்ஆனிய போதனைகளை அல்லாஹ்வை திருப்திபடுத்தும் நோக்கில் எடுத்து நடந்தார்கள். அவ்வளவுதான்! அதனை அவதானித்த மக்கள், இதைவிடச் சிறந்த வாழ்க்கை முறை எங்கே இருக்க முடியும் எனக் கருதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும்போது ஒரு தாஇ இவ்விரண்டுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவது முக்கியம். சிலர் சமூகத்தில் சீரான அகீதாவை ஸ்தாபிப்பதற்க்கு மாத்திரம் கூடுதல் அழுத்தம் கொடுகின்றனர். வேறு சிலரோ ஒருவனது அடிப்படை அகீதா என்னவானாலும் பரவாயில்லை என்றாற்போல் அஹ்லாக் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இவ்விரண்டு அணுகுமுறைகளும் ரசூலுல்லாஹ்வின் வழிக்கு புறம்பானவை. ரசூலுல்லாஹ்விடம் எவர் அகீதாவை கற்றாரோ அந்த மனிதரது நடைமுறை வாழ்க்கையில் அது செல்வாக்கு செலுத்தியது; அவரது அஹ்லாக்கை அது செம்மைப்படுத்தியது. அவரது அகீதா வெறும் நம்பிக்கையாக மாத்திரம் நின்று விடவில்லை.

இஸ்லாமிய தஃவா இரு பகுதிகளை தன்னுள் அடக்கியுள்ளது. ஒன்று நன்மையான காரியங்களை மக்கள் மத்தியில் ஏவுதல். இதனை அல்அம்ர் பில் மஃரூஃப் என்கிறோம். நன்மையை ஏவுவதன் மூலம் தீமை தானாக விலகிவிடும் என்ற வாதம் குர்ஆனிய போதனைக்குப் புறம்பானது. ரசூலுல்லாஹ் நன்மையை ஏவுவதற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ, அதேயளவு முக்கியத்துவம் தீமையின் ஊற்றுக்கண்களை அடைப்பதற்கும் கொடுத்தார்கள். தஃவாவின் அடுத்த பகுதி தீமையை தடுத்தல் என்பதாகும். இதனை அன்னகி அனில் முன்கர் என்கிறோம். இஸ்லாம் எதிர்பார்க்கும் நன்மைகள் சமூகத்தில் விளைய வேண்டுமென்றால் ஷைத்தானும் அவனது சாகாக்களும் புரையோடியுள்ள அனாச்சாரங்கள் கிள்ளி எறியப்பட வேண்டும்.

ஓர் ஆரோக்கியமான இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்க்கு இந்தச் சமநிலையான அணுகுமுறை முக்கியமானது. இஸ்லாமிய தஃவாவின் குறிக்கோள் சமூகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே; சீர்குலைவுகளை ஏற்படுத்துவதல்ல. ரசூலுல்லாஹ் ஒரு சீர்திருத்தவாதியாகவே அனுப்பப்பட்டார்கள். நன்மாராயம் கூறுபவராகவும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பதற்கான எச்சரிக்கையை விடுப்பவர்களாகவுமே அனுப்பப்பட்டார்கள். மக்கள் மீது இரக்கம் காட்டி அவர்கள் மேல் அளவிலா பிரியத்தோடு அவர்களை அரவணைப்பவர்களாகவே அனுப்பப்பட்டார்கள். குர்ஆன் கீழ்வருமாறு வர்ணிக்கிறது:

"உங்களிலிருந்தே ஒரு ரசூல் உங்களிடம் திண்ணமாக வந்துவிட்டார். உங்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்துவது அவருக்கு தாங்க முடியாத வேதனையைக் கொடுக்கிறது. உங்களது நலனில் அதிக அக்கறை கொண்டவராகவும் முஃமின்கள் மீது அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார்.” (அத்தெளபா: 128) ஒவ்வொரு மனிதனும் இஸ்லாத்தில் நுழைந்து நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என ரசூலுல்லாஹ் பேரார்வம் கொண்டவராக காணப்பட்டார்கள். அதற்கு
இசைவான சூழ்நிலையையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தினார்கள். மக்கள் அன்னாருடன் சேர்ந்து இருப்பதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள். மன நிம்மதி தேடியும் தமது பிரச்சினைகளை முறையிட்டு ஆறுதல் பெறுவதற்கு அல்லது தீர்வு, ஆலோசனை பெறுவதற்க்குமாக ரசூலுல்லாஹ்வை நோக்கி வந்தனர். அவர்கள் கடுகடுப்பானவர்களாகவும் மக்களை விமர்சித்துத் தள்ளுபவராகவும் அவர்கள் மீது சீறிப் பாய்பவராகவும் இருந்திருந்தால், எமக்கு அபூபக்கரின் இறைபக்தியும், உமரின் நிர்வாக ஒழுங்கும், உஸ்மானின் தாராள மனமும், அலியின் நீதி நெறியும் கிடைத்திருக்காது. மேலும், முழு மனித வரலாற்றிலேயே ஜொலித்த புனிதமிக்க மனிதர்களை கண்டிருக்கவும் மாட்டோம். ரசூலுல்லாஹ்வை தனிமையில் விட்டுவிட்டு அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள். அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் பேரருள் காரணமாகவே அவர்களிடம் நீர் மிருதுவாக நடந்து கொண்டீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், உம் சூழலை விட்டும் அவர்கள் பிரிந்தே போயிருப்பார்கள். ” (ஆலு இம்ரான்: 159)

அநேகமாக எல்லா தஃவா அமைப்புகளினதும் சீர்திருத்தப் பணிகள் அல்லது அத்தகைய பெரும்பாலான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே இருக்கின்றன என்ற அடிப்படை உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, சமூகத்தில் ஓரளவேனும் நிலவும் ஒழுங்கமைப்பை சீர்குலைத்து, சிறிய பிரச்சினைகளை ஊதிப் பிளவுபடுத்தும் முயற்சி நபி வழிக்குப் புறம்பானது. எனவே, தஃவா சீர்திருத்தத்துக்குப் பதிலாக சீரழிவை ஏற்படுத்துமானால் நிச்சயமாக எமது அழைப்பு முறையில் கோளாறு இருக்கிறது.

இஸ்லாமிய அமைப்புக்கள் வளர்த்தெடுக்கும் தஃவா ஊழியர்கள் உறுதியான அகீதாவைக் கொண்டிருப்பது போன்று சிறப்பான அஹ்லாக்குடையோராகவும் வளர்க்கப்பட வேண்டும். ஸஹாபிகளும் மற்றும் முன் சென்ற நல்லடியார்களும் இப்படியான மனிதர்களாகவே திகழ்ந்தனர். சீரான நீதிநெறிமிக்க இஸலாமிய சமூக அமைப்பை இவர்களாலேயே கட்டியெழுப்ப முடியும். இதற்கு மாற்றமாக கடின சித்தம் கொண்டு மக்கள் மீது துவேசத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து குழப்பத்தையும் பிளவையும் தூண்டிவிடும். ஊழியர்களை உருவாக்குவது ஆபத்தானது. ஏனெனில், இத்தகையோரது பிரசாரப் பணிகளால் கவரப்பட்டு இணைந்து கொள்ளும் மனிதர்களிடையேயும் இத்தகைய நடத்தைகள் தாக்கம் செலுத்தும். இவ்வழியில் உருவாகும் சந்ததி கலவர உணர்வும் பிடிவாதமும் சகிப்புத்தன்மையற்றதுமான சந்ததியாகவே அமையும். இத்தகையதொரு சந்ததியை ” முன்னுதாரண இஸ்லாமிய சந்ததி “ என எடுத்துக் காட்டமுடியாது. ஏனெனில், இஸ்லாத்தின் மூலம் அமைதியை நாடும் மக்கள் விரண்டோடுவார்கள். நபியவர்கள் நவின்றார்கள்: “ இலகுபடுத்துங்கள், கடினமாக்காதீர்கள். நன்மாராயம் கூறுங்கள், விரண்டோடச் செய்யாதீர்கள்...”
நன்றி : ஆஸிம் அலவி அல்ஹஸனாத் அக்டோபர், நவம்பர் 2009

Saturday, November 7, 2009

இறுதி மூச்சு வரை இதே பணி தான்

சத்தியம் எது? அசத்தியம் என்பது என்ன?

உண்மையான,என்றும் மாறாத,நிலையான,சரியான விழுமங்களுக்கு பெயர் தான் சத்தியம். உலக மக்கள் ஏற்றுக் கொள்வதால் யாதொன்றும் சத்தியம் ஆவதில்லை.”சுயமாக” இருப்பது தான் சத்தியம். இதனை தெளிவாக நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.

ஒட்டு மொத்த மக்களும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் முற்றாக ஒதுக்கி தள்ளினாலும் சத்தியம் அசத்தியம் ஆகி விடாது. அப்போதும் அது சத்தியமாகதான் இருக்கும். உலக மக்கள் ஏற்று கொண்டால் தான் சத்தியமாக நீடிக்கும் என்கிற கட்டாயத்திற்கு அப்பாற்பட்டது தான் சத்தியம்.

உலகம் சத்தியத்தை ஏற்கின்றதா இல்லையா என்பது ஒரு பொருட்டே கிடையாது. உலகம் ஏற்று கொள்ள மறுப்பதால் சத்தியம் தோற்று போவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி அசத்தியத்தை ஏற்றுக் கொண்ட உலகம் தான் தோற்று போனது.

துன்பங்களும் துயரங்களும் சத்தியத்திற்கு வருவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மீது தான் அவை மழையாய் பொழியும். நன்கு ஆராய்ந்து எல்லாக் கோணங்களிலும் சீர்தூக்கிப் பார்த்து முழுமையான மனதிருப்தியுடன் சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள், சத்தியமே மேலோங்க வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் ஓயாமல் ஒழியாமல் உழைப்பவர்கள்,சத்தியமே மேலோங்க வேண்டும் என்பதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் மீது துன்பங்களும் துயரங்களும் புயலாய் வீசலாம். ஆனால் அவர்களை தோற்றுப் போனவர்களாகச் சொல்ல முடியாது.

இறைத்தூதர்களில் சிலர் வாழ்நாள் முழுவதையும் சத்திய அழைப்பில் செலவிட்ட பிறகும் அவர்களை பின்பற்றி நடக்க எவருமே முன் வரவில்லை என்கிற வரலாற்று குறிப்பை நபிமொழிகளில் வாசிக்க முடிகின்றது. அப்படியானால் அந்த இறைதூதர்களை தோற்றுப் போனவர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக கிடையாது. அவர்களை ஏற்று கொள்ள மறுத்த அசத்தியவாதிகளைத் தங்களின் தலைவர்களாக ஏற்று கொண்ட சமூகத்தினர் தான் தோற்றுப் போனவர்கள்...!

நம்முடைய கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமக்கு முன் இருக்கின்ற பணி ஒன்றே ஒன்றுதான். இருள்களை விரட்டியடிக்க வழி விளக்குகளை ஏற்றுவது தான்...! சாகின்ற வரை இதனை செய்து கொண்டிருப்போம்...!

வழிகெட்டுப் போனவர்கள்,வழிகெடுப்பவர்களின் பட்டியலில் நம்முடைய பெயர் இடம் பெற்று விடக்கூடாது என்பது தான் நமக்கு இருக்கின்ற ஒற்றை கவலை...! இதற்காக இறைவனிடம் பாதுகாவலைத் தேடிக் கொண்டே இருப்போம்...!

அசத்திய இருட்டை விரட்டியடிக்கின்ற மிக பெரும் பணியில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்தியிருக்கின்றான். இந்த மாபெரும் பணிக்காக அல்லாஹ் நம்மை தேர்ந்தெடுத்திருக்கின்றான். இவ்வாறு நம் மீது மிகப்பெரும் அருளை பொழிந்திருக்கின்றான்.

அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்கு ஓரே வழிதான் இருக்கின்றது. இருளை விரட்டி அடிக்க விளக்குகளை ஏற்றிக் கொண்டே போவது...! அதே பணியில் உயிரைத் துறப்பது...!

மெளலானா மெளதூதி (ரஹ்) நன்றி : சமரசம்

Wednesday, September 30, 2009

தீனை நிலைநாட்டுதல் என்றால் என்ன ?

இறைத்தூதர்கள் அனைவருக்கும் தீனின் தன்மை கொண்ட சட்ட திட்டம்தான் அருளப்பட்டது. அதுவும் ஒரு முக்கியமான வழிகாட்டுதலுடனும் அறிவுறுத்தலுடனும் தான் அருளப்பட்டது.
அதாவது இறைத்தூதர்கள் அனைவருமே இந்த தீனை நிலைநாட்டுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டனர். இந்தக் கட்டளையுடன்தான் அவர்களுக்கு இந்த தீன் அருளப்பட்டது.
‘அக்கீமுத்தீன்’ என்பதற்கு ஷா வலியுல்லாஹ் அவர்கள் ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஷா ரஃபீயுத்தீன் சாகிபும் ஷா அப்துல் காதிர் அவர்களும் இதற்கு ‘நிலை நிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருங்கள்’ என மொழி பெயர்த்துள்ளனர்.
இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளும் பொருத்தமானவையே! இகாமத் என்பதற்கு நிலைநாட்டுதல் என்கிற பொருளும் உண்டு. நிலை நிறுத்தப்பட்ட நிலையில் வைத்திருத்தல் என்கிற பொருளும் உண்டு. இறைத்தூதர்கள் எல்லோருமே இந்த இரண்டு பணிகளையும் செய்வதற்காகவே பணிக்கப்பட்டிருந்தார்கள்.
எங்கு இந்த தீன் நிலைநாட்டப்படவில்லையோ அங்கு இந்த தீனை நிலைநாட்டுவது அவர்களின் முதன்மைக் கடமையாக இருந்தது. எங்கு இந்த தீன் நிலைநாட்டப்பட்டு விட்டதோ அங்கு நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருப்பது அவர்களின் இரண்டாவது கடமையாக இருந்தது.
நிலைநிறுத்தப்பட்ட நிலையில் ஒன்றை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எப்போது வரும்? அது ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும்போதுதானே..! இல்லையெனில் முதலில் அதனை நிலை நாட்ட வேண்டியிருக்கும். பிறகு அது நிலை நிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருப்பதற்காகத் தொடர்ந்து இடைவிடாமல் பாடுபடவேண்டியிருக்கும்.
இப்போது இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக தீனை நிலை நாட்டுதல் என்பது என்ன? இரண்டாவது எதனை நிலைநாட்டும்படியும் எதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்யும்படியும் நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கின்றதோ அந்த தீன் எது? எதனைக் குறிக்கின்றது? இந்த இரண்டையும் நல்ல முறையில் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
ஒரு திடப் பொருளை நிலை நாட்டுங்கள் என்றால் என்ன பொருள்? சாய்ந்து கிடப்பதை நேராக நிறுத்துங்கள் என்பது தானே! எடுத்துக்காட்டாக கீழே விழுந்து கிடக்கின்ற கோலையோ, தூணையோ நிமிர்த்தி நேராக நிலைநிறுத்தி வைத்தல்; அல்லது சிதறிக்கிடக்கின்ற உட்பகுதிகளை ஒன்று சேர்த்து மேலெழுப்புதல் என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, வெற்று மைதானத்தில் கட்டிடம் கட்டி எழுப்புதல். அதே போன்று உயிருள்ளவற்றை நிலை நாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அமர்ந்திருப்பவரை நிற்கச் செய்வதுதானே! எடுத்துக்காட்டாக, உட்கார்ந்திருக்கின்ற மனிதனையோ, விலங்கையோ நிற்கச் செய்தல்.
ஆனால் திடப் பொருளாகவோ, உயிருள்ள பொருளாகவோ இல்லாத, சிந்தனையை நிலைநாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்; மக்கள் மத்தியில் அந்தச் சிந்தனையைக் குறித்துப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பது தானா? இல்லை. சிந்தனையை அல்லது சித்தாந்தத்தை நிலைநாட்டுங்கள் என்றால் அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்;மக்கள் மத்தியில் அதனைக் குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பதோடு பொருள் முடிந்துவிடுவதில்லை. அந்தச் சித்தாந்தத்தைக் கூடுதலோ குறைவோ இல்லாமல் முழுமையாகச் செயல்படுத்துங்கள்; அதனையே நடைமுறையாக்கி விடுங்கள்; அதனை அன்றாட வாழ்வில் நிறுவி விடுங்கள் என்று அதன் பொருள் விரிந்து கொண்டே போகும்.
எடுத்துக்காட்டாக, இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியை நிறுவினார் என்று சொல்லும்போது அதற்கு என்ன பொருள்? இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியின் பக்கம் மக்களை அழைத்தார் என்பதா? இல்லை. அதற்கு மாறாக, அவர் தம்முடைய நாட்டு மக்களைத் தம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பவர்களாக ஆக்கிக் கொண்டார்; அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் தம்முடைய ஆணைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றவையாக மாற்றி அரசாங்கத்தின் மீது தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். தம்முடைய விருப்புவெருப்புகளின் அடிப்படையில் நாட்டின் அனைத்து விவகாரங்களும் அரங்கேறுகின்ற வகையில் எல்லாவற்றிலும் தம்முடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டார் என்றுதான் அதற்குப் பொருள்.
இதே போன்று இந்த நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்? அழகான கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன என்பதா? நீதியரசர்கள் பல்லாண்டுகள் நாட்டின் சட்ட திட்டங்களைப் படித்து மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் குறித்து பாடம் நடத்துகின்றார்கள் என்பதா? நீதி, நியாயம் ஆகியவற்றின் முக்கித்துவத்தையும் சிறப்பையும் வலியுறுத்தி மணிக்கணக்காகப் பேசுகின்றார்கள்; மக்களும் அவர்களின் எழுச்சிமிகு உரைகளைக் கேட்டு மனம் லயித்து நீதியின் சிறப்பை உணர்ந்து கொண்டார்கள் என்றா பொருள்? நிச்சயமாக இல்லை.
அதற்கு மாறாக, அழகான, பரந்து விரிந்த கட்டடங்களும் இருக்கின்றன; நீதியை நிலைநாட்டுவதற்காக நீதியரசர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றார்கள்; நீதம் செறிந்த திர்ப்புகளையும் குறித்த நேரத்தில் அளிக்கின்றார்கள்; மக்களுக்கு நீதி தாமதமின்றி, செலவின்றி கிடைத்துவிடுகின்றது என்பதுதான் ‘நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன’ என்பதற்குப் பொருள் ஆகும்.
இதே போன்று தொழுகையை நிலைநாட்டுங்கள் என குர்ஆனில் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது எனில், அதற்குப் பொருள் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு போன்றவற்றைக் குறித்தும் தொழுகையினால் கிடைக்கின்ற நன்மைகள் பற்றியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதல்ல. தொழுகையை அழகாக, நேர்த்தியாக, குறைவில்லாமல் தாமும் நிறைவேற்றுவதுடன் நம்பிக்கையாளர்கள் எல்லோருமே ஐவேளைகளிலும் ஜும்ஆவிலும் குறித்த நேரத்தில் எவ்வித சிரமுமில்லாமல் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கும் வசதி செய்தல் வேண்டும்; பள்ளி வாசல்கள் பாங்குடன் இயங்க வேண்டும்; குறித்த நேரத்தில் தொழுகைக்காக அழைப்பும் கொடுக்கப்பட வேண்டும்; இமாம்களும், கதீப்களும் நியமிக்கப்பட்டு அவர்களும் தத்தமது பணிகளைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்; மக்களும் ஐவேளையும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது போகின்றவர்களாக மலர வேண்டும். இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தொழுகை நிலைநாட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியும்.
இதுவரை சொன்ன விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் படித்த பிறகு ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என இறைத்தூதர்களுக்குத் தரப்பட்ட கட்டளையின் முழுவீச்சையும் முழுமையான பரிமாணங்களையும் ஒருவரால் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். அதில் யாதொரு சிரமமோ, குழப்பத்திற்கோ இடமிருக்காது.
இறைத்தூதர்களுக்கெல்லாம் ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என்கிற கட்டளை இடப்பட்டதெனில் அதற்கு என்ன பொருள்? இறைத்தூதர்கள் எல்லோருமே தீனின் கட்டளைகளுக்கேற்பச் செயல்பட வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.
இறைத்தூதர் அந்த தீனைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; தீனின் சிறப்பியல்புகளையும், முக்கிய கோட்பாடுகளையும் எந்தவிதச் சிரமத்திற்கும் இடமில்லாத வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்; நேர்வழி என்றும், சரியான, உண்மையான வழிகாட்டுதல் என்றும் மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு தீனை நல்ல முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.
மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொண்ட பிறகு இன்னும் ஒருபடி முன்னேறி தீன் முழுவதையும் தம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி நிலைநாட்ட வேண்டும்; வாழ்வின் அனைத்து துறைகளும் தீனின் போதனைகளுக்கேற்ப இயங்குகின்ற அளவுக்கு முழுமையான மாற்றம் மலர வேண்டும்; அந்த மாற்றம் நீடித்து நிலைக்க வேண்டும்.
அந்த முழுமையான மாற்றம் நிலைபெறுவதற்காக முழுமையான கவனத்துடனும் அக்கறையுடனும் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தீன் நிலைநாட்டப்பட்டதாகச் சொல்ல முடியும்.
அழைப்புப் பணி, பிரச்சாரப் பணி போன்றவற்றுடன்தான் இந்த மிகப்பெரும் பணி தொடங்கும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.தொடக்கத்தில் இந்த இரண்டு பணிகளும் இன்றியமையாதவை என்பதில் சந்தேகமில்லை. இந்த இரண்டை மேற்கொள்ளாமல் அடுத்தக்கட்ட பணிகளை ஏறெடுத்தும் பார்க்க முடியாது என்பதும் உணமையே. ஆனால் பிரச்சாரமும் அழைப்புப் பணியும்தான் எல்லாமே என்பதல்ல. பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும்தான் முழுமுதல் நோக்கம் என்பதல்ல.
தீனை நிலைநாட்டுங்கள் என்கிற கட்டளையை அறிவார்ந்த முறையில் ஆய்ந்து பார்க்கின்ற எவரும் இதனை எளிதாக விளங்கிக் கொள்வார். பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும் துணைக்கருவிகளே தவிர, முதன்மை இலக்குகள் அல்ல என்பதையும் தீனை நிலைநாட்டுவதும், அதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்வதும்தான் உண்மையான இலக்குகள் என்பதையும் புரிந்து கொள்வார்.
இந்த முதன்மை இலக்குகளை அடைவதற்குத் துணைபோகின்ற கருவிகள்தான் அழைப்புப் பணியும், பிரச்சாரப் பணியும் என்பதைப் புரிந்து கொள்வார். இறைத்தூதர்களின் தூதுத்துவப் பணியின் ஒற்றை இலக்கே அழைப்புப் பணியையும், பிரச்சாரப் பணியையும் திறம்பட மேற்கொள்வதுதான் என எவருமே சொல்லத் துணியமாட்டார்.

மெளலானா மெளதூதி (ரஹ்) தமிழில் : அஜீஸ்லுத்புல்லாஹ் நன்றி : சமரசம் செப் 16-31,2009

Wednesday, September 23, 2009

அஞ்சாமையே அழைப்பாளனின் உடைமை

சத்திய அழைப்பாளன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பு ‘கால இன்னனி மினல் முஸ்லிமீன்’ அதாவது ‘நான் நிச்சயமாக முஸ்லிமாக உள்ளேன்’ என்பது. இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் மக்கா நகரின் சூழலுக்கு ஒரு மீள் பயணம் செய்ய வேண்டும்.
தன்னந்தனியாக ஒருவர் எழுந்து நின்று, ‘நான் ஓரிறைக்கொள்கையை ஏற்றவனாக அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து முஸ்லிமாக இருக்கிறேன்’ எனப் பிரகடணம் செய்வது சாதாரண நிகழ்வன்று.
இது கட்டற்ற கொடுமைகளுக்கும் காட்டுவிலங்காண்டித்தனத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரித்து முகமன் கூறி வரவேற்பதைப் போன்றது.
எனவே ஒரு சத்திய அழைப்பாளன் அல்லாஹ்வின் பால் அழைக்கிறவன் என்பது மட்டுமன்று, உன்னத பண்புகளைக்கொண்ட உத்தமனாக விளங்குபவன் என்பது மட்டுமன்று, கடும் பகைவர்களுக்கு இடையிலும், கடுமையான சூழலிலும் தனி ஒருவனாக நின்று தான் ஒரு முஸ்லிம் என்று அறிவிப்பதில் அச்சமோ, தயக்கமோ, தடுமற்றமோ கொண்டவனாக இருக்க்க் கூடாது. துணிச்சலாக, வெளிப்படையாக, ஆம்; நான் முஸ்லிம்தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’ என்று பறைசாற்றுபவனாக இருக்க வேண்டும்.
வேறு சொற்களில் கூற வேண்டுமெனில் சத்திய அழைப்பாளன் ஒருவன் துணிவும், அச்சமின்மையும், வீரமும், தீரமும் கொண்டவனாக திகழ வேண்டும்.இறைவனின்பால் அழைப்புவிடுக்கும் தூய பணியை சிறிய தீண்டலிலேயே நீர்க்குமிழி போல் அமுங்கிவிடும் ஒரு கோழையால் நிறைவேற்ற இயலாது. இப்படிப்பட்டவனால் எப்போதும் அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுக்க முடியாது.
கடுமையான பகைமையும், பெரும் எதிர்ப்புகளும், பேராபத்துகளும் மிகுந்த பயங்கரமான சூழலில் இஸ்லாத்தின் கொடியை ஏந்தி, விளைவுகளைப்பற்றி அஞ்சாமல் செயல்படுகிறவரால் மட்டுமே இறைவனின் பால் அழைப்பு விடுக்க முடியும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் வீரமும், தீரமும் கொண்ட ஒரு முன்மாதிரி அழைப்பாளராய் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். மக்கா நகரில் தனி ஒருவராக நின்று வெளிப்படையாக இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள். சத்தியத்திற்கு சான்று பகரும் கடமையை நிறைவேற்றினார்கள்.
அண்ணலாரைக் கொன்றுவிட வேண்டும் எனத்துடிக்கும் இரத்த வெறி கொண்ட மக்களிடையே இந்த அழைப்பு விடுக்கப்பட்ட்து. அண்ணலாரையும் அவருடைய தோழர்களையும் தாங்கொண்ணாத் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் இலக்காக்கினார்கள்.
அந்தக் கொடுமையாளர்களுக்கு இடையில்தான் ‘அல்லாஹ்வின்பால் வாருங்கள்’ என்ற அழைப்பு விடுக்கப்பட்ட்து.தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் தம் அழைப்பை விரிவுபடுத்திக் கொண்டே போனார்கள். பின்னர் மதீனா சென்ற பிறகு எத்தகைய நிலைமைகள் உருவாகின..! எத்தனை பயங்கரமான சூழல்..! கடும் தாக்குதல்கள்..! ஆயினும் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை.
ஹுனைன் போரின்போது முஸ்லிம் படைகள் பின்வாங்கிய நிலையில், தோல்வியைச் சந்திக்கிற நேரத்தில், பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் உறுதியுடன் இருந்தார்கள். களத்தின் முதல் பகுதியில் பகைவர்களின் அணிகளுக்கிடையில் புகுந்து போர் புரிந்த வண்ணம் முன்னேறுகிறார்கள். அதே சமயம் தாம் யார் என்பதையும் உரக்கச் சொல்கிறார்கள்.
‘அனன் நபிய்யு லாகஸிப் அனப்னு அப்துல் முத்தலிப்’
‘நான் இறைவனின் தூதர். இது பொய்யன்று. நான் அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்’
என்று உரைக்கிறார்கள்.
எப்படிப்பட்ட சூழல் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கடுமையான போர்க்களம். பகைவர்கள் தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணலாருக்கு அருகில் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் இரண்டு மூன்று பேர்கள் தான் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஆபத்தான சூழலிலும், ‘ஆம்; நான் இறைவனின் தூதன்தான்; நான் ஒரு நபிதான்’ எனப் பறைசாற்றுகிறார்கள். அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கின்ற ஒரு சத்திய அழைப்பாளன் இந்த அளவுக்கு வீரமும் துணிச்சலும் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
- மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் ஒரு கட்டுரையிலிருந்து........
தமிழில் : மௌலவி ஜபருல்லாஹ் ரஹ்மானி.
நன்றி : சமரசம் செப்டம்பர் 16-31, 2009

Monday, September 14, 2009

ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிராதயமல்ல

தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அள்ளாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.


நோன்பின் பெறுமதி தக்வாவில் தங்கியிருக்கிறது.
நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தஹஜ்ஜீத்தில் வீங்குமே
இடக்கை அறியாமல் - சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.


இளைஞர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.


இந்த நன் நாளில்
கேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.
டி.வியிலிருந்துகண்ணை கழட்டுங்கள்.
அந்த டி.வி.டியை இன்றேனும் தூக்கில் போடுங்கள்.
காதுகளுக்கு கீதம்விஷம் என்று சொல்லுங்கள்.


எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும்
இளைஞர்களேஅந்த இரவு நேர மரத்திலிருப்பது தெம்பிலி அல்ல
உங்கள் ஒழுக்கங்கள்- வெட்டாதீர்கள்
அந்த மாமரத்திலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்- ஏன் உடைக்கிறீர்கள்.
வெடிகளை அல்ல- அதை கொளுத்த வேண்டும்
என்ற மடமையை கொளுத்துங்கள்.


நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்.
அந்த இரவுகள் தூய்மையாகவே
இருந்துவிட்டு போகட்டும்.

நாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோற்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.


தோழர்களே....
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.

இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.
இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.
இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும் மயானத்தில் அல்ல
காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.

நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.


நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்.
நோன்பில்லாத ஹிட்லர்
மண்ணிடம் தோற்றான்.
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்.


நோன்பு மரம்,
இந்த மரம்
மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை
தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு
பெட்ரோல் ஊற்றும்.


நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல

இலங்கை ஜமிய்யாவுக்கு மனமார்ந்த நன்றி

Sunday, August 30, 2009

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்

உலகில் மனிதர்கள் நேர்வழியிலிருந்து பிறழும் போது அவர்களை தூய்மைப்படுத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் தூதர் தாம் என்பதற்கு அத்தாட்சியாக சில அதிசயங்களை முன்னறிவிப்பு செய்யக் கூடிய ஆற்றல்களையும் வருங்காலத்தில் நடைபெறவிருக்கின்ற சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய கூடிய திறனையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவ்வாறு இறுதி நபியாக வந்த நமது நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். அவற்றில் சில அவர்களின் வாழ்க்கையிலும் சில இனி வரக்கூடிய காலங்களிலும் நடைபெறவிருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.
நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தன்னைப் பின்பற்றுவோர் படும் துன்பத்தை தடுக்க கூட முடியாத பலவீனமான நிலையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்க தயங்கிக் கொண்டிருந்த கிறித்தவராயிருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களை நோக்கி சொன்னார்கள் “ஓ! அதீ பின் ஹாத்திமே! ஏன் இஸ்லாத்தை ஏற்கத் தயங்குகிறீர்கள்? இந்த சிறு கூட்டம் உலகில் என்ன ஒரு மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? அறுதியிட்டு சொல்கிறேன் ஒரு காலம் வரும், ஸன்ஆ-விலிருந்து ஹலரமவத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாய் செல்வாள். தங்கத்தையும், வெள்ளியையும் தானம் செய்ய புறப்படுவீர்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்வோர் யாரும் இருக்க மாட்டார்கள். சீசர், கைசரின் சாம்ராஜ்யங்கள் எல்லாம் என்னை பிற்பற்றுவோரை வந்தடையும்”. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் பின்னாளில் சொல்கிறார்கள் “என் வாழ்நாளிலேயே இவை நிறைவேறியதை கண்டுக் கொண்டேன்.
அது போல் ரசூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அவர்களை கொலை செய்ய துரத்தி வந்த சுரகா இன்னு ஜுஷமை நோக்கி “சுரகாவே! ஒரு காலத்தில் ஈரான் மன்னரின் கைகளை அலங்கரித்த ஆபரணங்கள் உங்கள் கைகளை அலங்கரிக்கும்” என்று கூறினார்கள். இது இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் காலத்தில் ஈரான் வெற்றி கொள்ளப்பட்ட போது நிறைவேற்றிக் காட்டப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உஹது மலையடிவாரத்தில் இருந்த போது உஹது சற்றுக் குலுங்கியது. அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் “உஹதே! அமைதியாக இரு. உன்னில் ஒரு தூதர் இருக்கிறார். ஒரு வாய்மையாளர் இருக்கிறார். இரண்டு ஷஹீதுகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி பின்னாளில் உமரும், உஸ்மானும் ஷஹீதாக்கபடவிருப்பதை அப்போதே முன்னறிவிப்பு செய்தார்கள்.
தன் செல்ல மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் தன் குடும்பத்தில் முதலாவதாக தன்னை வந்து அடைவார்கள் என்று நாயகம் (ஸல்) சொன்னதற்கேற்ப ரசூல் (ஸல்) இறந்த ஆறு மாதங்களுக்குள் ஃபாத்திமா (ரலி) இவ்வுலகை விட்டு பிரிந்ததை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். அதுபோல் தன் பேரரான ஹஸன் (ரலி) அவர்களை நோக்கி இவர் இரு கூட்டத்தினருக்கிடையில் சமாதானம் செய்து வைப்பார் என்று சொன்னது நிறைவேறியதையும் வரலாற்றில் பார்க்கிறோம்.
மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி குறிப்பிடும் போது “ஒரு பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பாள்” என்று கூறினார்கள். இன்று எத்தனையோ ஆண்மக்களை பெற்ற போதும் பெண்ணை அண்டி வாழும் நிலையையும், பெண் தன் தாயை வேலைக்காரியை விட மோசமாக நடத்துவதையும் நிதர்சனமாக பார்க்கிறோம். இன்று அரசாங்கங்களே சிவப்பு விளக்கு பகுதிகளை அங்கீகரிக்கும் கொடுமையும் மது அருந்துவது நாகரீகமாக கருதப்படும் அவலத்தையும் பார்க்கிறோம். இதை தான் நாயகம் (ஸல்) அவர்கள் “விபச்சாரம் பெருகும். மது அருந்தும் பழக்கம் பரவலாகும்” என்று முன்னறிவிப்பு செய்தார்கள்.
நாம் இருக்க கூடிய இந்த அமீரக பகுதிக்கு பொருத்தமான ஒரு முன்னறிவிப்பையும் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னார்கள். “வறுமையின் காரணத்தால் வெறுங்காலுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரும் கட்டிடங்களைக் கட்டுவார்கள்”. இன்று உலகின் மிகப் பெரும் கட்டிடங்கள் எல்லாம் இங்கு கட்டப்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.
சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்வினால் புகழப்டுகின்ற இந்த சிறந்த சமுதாயம் இன்று இறை நிராகரிப்பாளர்களாலும், யூத நஸ்ரானிகளிடத்திலும் சிக்கி தவிக்கும் அவல நிலையை நாயகம் (ஸல்) அவர்கள் அன்றே முன்னறிவிப்பு செய்தார்கள். “ஒரு காலம் வரும். அப்போது பிராணி தன் இரையை தேடி பாய்வது போல் பிற சமுதாயங்கள் உங்கள் மீது பாயும்” என்று சொன்னபோது ஸஹாபாக்கள் கேட்டார்கள், யாரசூலுல்லாஹ் எண்ணிக்கையில் நாங்கள் குறைவாக இருப்போமோ? என்று வினவியபோது இல்லை நீங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பீர்கள். ஆனால் உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொல்லி விட்டு வஹ்ன் என்றால் மரணத்தை பற்றிய அச்சமும், உலகத்தை குறித்த ஆசையும் என்று சொன்னார்கள்”. இன்று அந்த வஹ்ன் இந்த உம்மத்திடம் இருப்பதற்கு சாட்சிகள் தாம் குஜராத் முதல் பாலஸ்தீன் வரை நடைபெறும் நிகழ்வுகள்.
“காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது” என்று மறுமையை பற்றி குறிப்பிட்டார்கள். “சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் மூன்றும் நிகழ்வதற்கு முன் ஈமான் கொள்ளுங்கள் ஏனென்றால் மூன்றும் நிறைவேறிவிட்ட பிறகு ஈமான் கொள்வது பலனளிக்காது”. என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பின்னாளில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருப்பதையும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
இப்படி கடந்த, இன்றைய, வருங்காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்திருக்கின்றன நமது முஸ்தபா நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு முன்னறிவிப்பை செய்தார்கள் “என் உம்மத்தில் ஒரு கூட்டம் மறுமை நாள் வரை இருக்கும். அவர்கள் நன்மை செய்யும்படி தூண்டுவார்கள். தீமை செய்வதிலிருந்து தடுப்பார்கள். இவர்கள் தாம் வெற்றியாளர்கள் என்று கூறினார்கள்”. அவ்வாறு நன்மையை ஏவி, தீமையை தடுக்க கூடிய வெற்றியாளர்களுள் ஒருவராக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும் ஆக்கி அருள்வானாக
ஆக்கம் : நெல்லிக்குப்பம் நர்கீஸ் அண்ணன் நன்றி : tamilislam.com

வெட்கம்

ஒரு மனிதனிடம் நாணம் இல்லையானால் அவன் தன் மனம் போன போக்கில் அல்லாஹ்வின் சட்டங்களை மறந்து எதையும் செய்யத் துணிந்து விடுவான். அத்தகைய முஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்பான வெட்கத்தை பற்றிய ஒரு சிறிய அலசலே இக்கட்டுரை.
மனிதன் தவறானவற்றை செய்திடும் போதும், தன் அறியாமையால் தவறிழைத்திடும் போதும், இப்படிபட்ட தவறை செய்து விட்டோமே என்று அச்சம் கொள்வதே நாணம் என்ற பண்பாகும். தன் குறைகளை எண்ணி நாணி அவற்றை நிறைகளாக்குபவனே உண்மை மனிதனாவான்.


வெட்க உணர்வின் சிறப்புகள்
விலங்குகளுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடுகளில் ஒன்று வெட்க உணர்வாகும். மனிதனுடைய சிறப்பு பண்பு வெட்கமாகும். ஒரு மனிதனிடம் இருக்கும் இறை நம்பிக்கை எவ்வளவு அழுத்தமானது என்பதையும், அவன் எந்த அளவுக்கு ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டவன் என்பதையும், எத்தகைய இங்கிதங்களை கொண்டவன் என்பதையும் எடுத்துக்காட்டும் கருவி அவனிடம் காணப்படும் வெட்க உணர்வாகும். ஈமானும், வெட்கமும் ஒரு மரத்தின் இரு கிளைகள் போன்றதாகும். ஈமானுள்ள ஒரு மனிதனிடம் வெட்கம் இல்லையாயின் அவன் முழுமையான ஈமான் கொண்டவன் அல்லன். ஒவ்வொரு மார்க்கத்துக்கும் அதற்கு உரிய ஒழுக்கம் இருக்கிறது. இஸ்லாத்தின் ஒழுக்கம் வெட்கமாகும்.
அபு சையித் அல் குத்ரி (ரலி)அறிவிக்கிறார்கள்:
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள், திரை போட்டு தம்மை மறைத்துக் கொண்டு வாழும் பெண்களை விட அதிக வெட்க உணர்வுடையவர்களாக இருந்தார்கள். இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதாவது விரும்பத் தகாததைக் கண்டால் அதன் ரேகை அவர் முகத்தில் படருவதை காணலாம் (புகாரி). ஒரு தீமையை கண்டால் அதைக்கண்டு நாணக் கூடியவர்களாய் இருந்தார்கள். நாணம் உள்ள மனிதன் எந்நிலையிலும் தீமையின் பக்கம்கூட செல்ல மாட்டான். தீமை செய்து விட்டால் கூட, தன் தவறை எண்ணி வெட்கப்படுவான். மக்களின் முன்னிலையிலும் இறைவன் முன்னிலையிலும் குற்றவாளியாக நிற்கிறோமே என அஞ்சுவான். அன்சாரிகளை சார்ந்த ஒரு மனிதர் தம் சகோதரர் அதிகம் வெட்கப்படுவதை கண்டித்து கொண்டிருக்கும் போது அந்த வழியில் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவரை கண்டிப்பதை விட்டு விடுங்கள். நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்கள். (புகாரி)
இவ்வாறு இஸ்லாமிய மார்க்கமானது நல்ல விஷயங்கள் மனிதனுள் பரவ வெட்கம் அவசியம் என்பதை உணர்த்துகிறது.


வெட்கமின்மையால் உண்டான சீர்கேடுகள்
இன்று நம்முடைய மக்களின் வெட்கம் இல்லாத தன்மையால் சமுதாயத்தில் அன்றாடம் நடந்து வரும் அவலங்களை கண்கூடாக கண்டு வருகிறோம்.
1. பெண்களில் சிலர் நாணத்தை இழந்து விட்டு (உங்கள் அழகை வெளிக்காட்டாதீர்கள் (அல்குர்ஆன்24:31) என்ற அல்லாஹ்வின் வாக்கை மீறி அரைகுறை ஆடைகளில் அலைகின்றனர். இதனால் இளைஞர்களை ராகிங், கற்பழிப்பு போன்ற தவறுகளை செய்யத் தூண்டி விடுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
2. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும் (அல்குர்ஆன் 5:0). இன்றைய மனிதனிடம் நாணம் என்ற பண்பு இருக்குமானால் தன் உடைகள் கலைந்து இருப்பதைக் கூட அறிந்து கொள்ள இயலாத நிலையில் மதுவைக் குடித்துவிட்டு கடைவீதிகளிலும் தெருக்களிலும் படுத்து இருப்பார்களா?
3. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர். அது மானக்கேடானதாகும் மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்து செல்லும்) தீய வழியாகவும் இருக்கிறது (அல்குர்ஆன் 17:32) என குர்ஆன் எச்சரிக்கிறது. ஒரு பக்கம் அரசாங்கம் விபச்சார ஒழிப்பு பற்றி விளம்பரம் செய்தாலும், பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை அவசியம் என்று விபச்சாரத்தை ஊக்குவிப்பது, நம் நாட்டின் நாணமின்மை என்ற பண்பின் வளர்ச்சியை அல்லவா காட்டுகிறது என்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்?
4. கொலை, கொள்ளை இவற்றில் ஈடுபட்டு பின் மாட்டிக் கொண்டால் மக்கள் முன் கேவலமாகி விடுமே என்ற எண்ணம் இருப்பின் அவன் இவற்றில் எல்லாம் ஈடுபடுவானா? இப்படி வீட்டில் தெருவில,ஊரில், நாட்டில், உலகில் காணப்படும் பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணமாக அமைவது நாணத்தை இழந்து மக்கள் மனம்போன போக்கில் வாழ்வது தான். எனவே இறைவனின் அடியார்களே ஈமானின் ஓர் அம்சம் நாணம் (புகாரி) என்பதை மனதில் பதிந்து நாணமுள்ள முஃமின்களாக மாறி தவறுகளிலிருந்து திருந்தி மனம் போன போக்கில் வாழாமல் அல்லாஹ்வின் வேதத்தையும் தூதர் மொழிகளையும் பற்றிப் பிடித்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

ஆக்கம் : ஃபெரோஸ் சகோதரி நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்

தலைமையிடம் இருக்க வேண்டிய / இருக்க கூடாத பண்புகள்

தலைமைத்துவத்தை பற்றி கலாநிதி ஹிஷாம் அத்தாலிப் அவர்கள் "வலுக்கட்டாயமற்ற வழிவகைகளை கொண்டு செயலாற்றுவதற்காக ஒரு குழுவை தூண்டி திட்டமிடப்பட்ட திசையில் இட்டு செல்லும் நடவடிக்கையே தலைமைத்துவம்" என்று விவரிக்கிறார். மேலும் இஸ்லாமும் தலைமைத்துவத்திற்கும், கூட்டமைப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
"முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்." (புகாரி, முஸ்லிம்)
"மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்" (புகாரி, முஸ்லிம்)
மேலும் இஸ்லாமிய உம்மத்தின் அடித்தளமே அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பட்டுள்ளது என்பதைத்தான் உமர் (ரலி) இப்படி இயம்பினார்கள் "நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை." (ஸுனன் அத்தாரமி)
தலைமைக்கு வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை கொடுக்கும் அதே வேளை அத்தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான பெருமானார் (ஸல்) வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.
அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் அஹ்ஜாப் -21)


தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்
1. தக்வா - தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. "மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்" (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு ஏற்ப இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் உள்ளவராகவும் தன் செயல்களுக்குரிய கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்க்காமல் குர்ஆனின் (26:109,127,145,164,180) வசனங்கள் குறிப்பிடுவது போன்று இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்க கூடிய தலைவர்களையே இஸ்லாம் எதிர்பார்கின்றது.
2. அறிவு - வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இஸ்லாம் வழி எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம். மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகளை பற்றியும் விரிவான அறிவு கொண்டவராய் இருத்தலின் அவசியத்தை பற்றி உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து ஜாஹிலிய்யாவை அறியா ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
3. உறுதி கொண்ட நெஞ்சம் - "அல்லாஹ்விற்கு மிக உவப்பான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக செய்வதே" (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முடிக்கக் கூடிய திறன் உடையவராக தலைமை இருத்தல் அவசியம். எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் நெஞ்சுரம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.
4. நிலைமையை கணிக்கும் திறன் - தனது பலம், பலவீனத்தை பற்றி இஸ்லாமிய தலைமை தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராய் இருக்க வேண்டும். பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போன்று தெரியாவிட்டாலும் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை கொண்டு செயல்பட வேண்டும். ஹீதைபியா உடன்படிக்கையின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை மிகச்சிறந்த உதாரணம்.
5. நீதி செலுத்துதல் - தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். "மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது." (5:8)
6. திடவுறுதி, பொறுமை, வீரம் - இம்மூன்று பண்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இஸ்லாமிய பாதையானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பனி ஆதலால் பல்வேறு குறுக்கீடுகள் வரும். இடைத்தடங்கள்களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் தீரத்துடன் பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தலைமை இருத்தல் அவசியம்.
7. இஸ்திகாமத் - சத்தியப் பாதையில் இருந்து தன்னை திருப்பி விட எவ்வளவோ உபாயங்களை மேற்கொண்ட போதும் இன்னல்களை கொடுத்த போதும் நிலைகுலையாமல் "அல்லாஹ்வின் மீது ஆணையாக, இம்மனிதர்கள் சூரியனை எனது ஒரு கையிலும் சந்திரனை மறுகையிலும் கொண்டு வந்து வைத்தாலும் கூட நான் இதனை கை விடமாட்டேன், அல்லாஹ் எனக்கு வெற்றியைத் தருவான் அல்லது நான் இதன் வழியில் செத்து மடிவேன்" என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் சூளுரைத்தது போன்ற தன்மை உடையவராக தலைமை இருத்தல் அவசியம்.
8. பொது அறிவு திறன் - இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புரிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலையைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமது எண்ணங்களையம், திட்டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு "சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்" எனும் இறைவாக்கியத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராய் இருத்தல் வேண்டும்.
"முஹம்மத் (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான வார்த்தைகளாகவே காணப்பட்டது. அதனை கேட்ட அனைவரும் எளிதில் விளங்கிக் கொண்டனர்" (அபூதாவூத்)
"நான் சுருக்கமாக, ஆனால் அதிக விளக்கமுள்ள வார்த்தைகளை பேசச்கூடியவனாக அனுப்பப்பட்டுள்ளேன்." (புகாரி)
9. சேவை மனப்பான்மை - "சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்" (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
10. ஷீரா - தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும் ஞானமும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும். "இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வோர் காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்" (ஷீரா 38) சகல காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக (ஆல இம்ரான்- 159)

தலைமையிடம் இருக்க கூடாத பண்புகள்
1. பதவிக்கு ஆசைப்படல் - "பதவிக்காக ஆசைப்படாதீர்கள் நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." (புகாரி) என்ற நபி மொழிப்படி பதவிக்கு ஆசைப்படுபவரை தலைவராக்க மாட்டோம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவிக்கு அலைபவராக தலைமை இருக்கக் கூடாது.
2. குடும்ப சொத்தாக கருதுதல் - ரசூல் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவியை ஒரு அமானிதமாக கருதி பொறுப்புடன் தன் கீழுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டுமே தவிர குடும்ப சொத்தாக பொறுப்பை கருதக் கூடாது. "முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குகிறான்" (புகாரி)
3. தன்னை முன்னிலைப்படுத்துதல், புகழாசை - புகழ் பெறவேண்டும் என்பதற்காக செருக்குடன் பிறரை புறக்கனித்து தன்னை முன்னிலைப்படுத்துபவராக தலைமை இருக்கக் கூடாது "அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்". (முஸ்லிம்)
4. பலவீனமானவர் - அபூதர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பொறுப்புகளை கேட்ட போது முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அபூதர்ரே நிச்சயமாக நீர் பலவீனமானவர் அப்பொறுப்போ மிகப் பளுவான அமானிதமாகும். அதனை உரிய முறையில் நிறைவேற்றாதவருக்கு மறுமையில் அதுவே சாபமாகவும் இழிவாகவும் மாறிவிடும்" (முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப அப்பொறுப்புக்கேற்ற உடல் உள தகுதியுள்ளவர்களே அப்பொறுப்பை ஏற்க வேண்டும்.
5. சொல் வேறு, செயல் வேறு - "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை ஏன் ஏவுகின்றீர்கள்" (அஸ்ஸப் 2) எனும் இறைவாக்கிற்கேற்ப தலைவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. தங்களால் சாத்தியமானதை மட்டும் சொல்ல வேண்டும்.
6. ஆடம்பர வாழ்க்கை - தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தம் உறுப்பினர்களுக்கு முன் மாதிரியாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஆடம்பர வாழ்க்கையில் திளைக்கக் கூடாது. சாம்ராஜ்யங்களிலிருந்து சிறு அமைப்புகள் வரையிலான வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். "அன்றி அவர்கள் செலவு செய்தால் அளவை கடந்து விட மாட்டார்கள் உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள் இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள்" (புர்கான் 67)
7. கோழைத்தனம் - பிரச்சினைகள் ஏற்படும் போதும் தம் கீழுள்ளவர்களை தவிக்க விட்டுவிட்டு ஒளிந்து கொள்ளக் கூடியவராக தலைவர் இருக்கக் கூடாது மேலும் (8:60) ல் அல்லாஹ் சொல்கிறபடி தானும் எத்தியாகத்திற்கும் தயாராவதோடு தன் சமூகத்தையும் தயார்படுத்த கூடியவராய் இருத்தல் வேண்டும்.
8. பொறாமை - பொறாமை தலைவரிடத்தில் இருக்க கூடாத பண்பாகும். ஏனென்றால் அது தான் பிற தீய குணங்களான கோள் சொல்லுதல், குற்றங்களை துருவி ஆராய்தல், புறம் அனைத்திற்கும் முக்கிய காரணமாய் உள்ளது. அதனால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் "உங்களை நீங்கள் பொறாமையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள், ஏனெனில் நெருப்பு விறகை தின்பது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகிறது" (அபூதாவூத்) என பகர்ந்தார்கள்.
மேற்கூறப்பட்டவை அடிப்படையில் ஒரு தலைமை அமையும் போது நிச்சயம் அது இஸ்லாத்தை மலரச் செய்யும் ஓர் உன்னத தலைமையாய் மிளிரும். எனவே எத்தலைமையும் அடிப்படையாக
1. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல், முழுவதும் அவனை சார்ந்திருத்தல்.
2. பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற தேவையான உள, உடல், அறிவு, ஆற்றல்கள், வலிமை.
3. கலந்தாலோசனை மூலம் முடிவெடுத்து செயல்படுதல்.
போன்ற தன்மைகளை அவசியம் பெற்றிருக்க வேண்டும். அத்தலைமை மஹல்லா போன்ற சிறிய பொறுப்பாயிருந்தாலும் ஆட்சி தலைமை போன்ற பெரும் பொறுப்பாயிருந்தாலும் சரியே.

ஆக்கம் : நெல்லிக்குப்பம் நர்கீஸ் அண்ணன் நன்றி : tamilislam.com

Saturday, August 29, 2009

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
முன்னுரை :
சமூகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் தரும் செய்திகளின் ஊடாகவே உலகத்தை அறிந்து கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தது மீடியா எனப்படும் ஊடகத்துறையாகும். ஊடகங்கள்தாம் உலகத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல.ஏனென்றால் ஒரு செய்தி, அது பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் அது மக்களைச் சென்றடைய வேண்டுமா என்பதை முடிவு செய்வதும் ஊடகங்கள்தாம். ஊடகத்தின் அடிப்படை நியதிகளை விட்டு விலகி, செய்திகளைத் திரித்தும் மறைத்தும் கூறும் சமகால ஊடகத்தைப் பற்றியும் அதற்கான தீர்வையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி
ஊடகங்களின் திரித்தலுக்கும் மறைத்தலுக்குமான வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் அதற்கான விதை வரலாற்று காலம் தொட்டே விதைக்கப்பட்டிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இந்திய வரலாற்றைத் தொகுத்த ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்கும் பிற சமூகங்களுக்கும் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உண்டாக்குமாறு வரலாற்றில் முஸ்லிம்கள் செய்த நன்மைகளையும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மறைத்தும் திரித்தும் வரலாற்றைச் சிதைத்துள்ளனர். அதனால்தான் இன்றும் நம் வரலாற்றுப் பாடங்களில், ஆரியர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும்போது "ஆரியர் வருகை" என்றும் "முஸ்லிம்கள் படையெடுப்பு" என்றும் பதிந்துள்ளதைப் பார்க்கலாம். சுயநலனுக்காக மதச் சண்டைகளை உருவாக்கி, மக்களைக் கொன்று குவித்த இந்து மன்னர்களின் வரலாற்றை மறைத்து, அவர்களை உன்னதமானவர்களாகத் திரித்துக் காட்டுகிறது நாம் பயிலும் வரலாறு.
அதுபோல முஸ்லிம் மன்னர்களில் இஸ்லாத்துக்கு மாற்றமான புதிய மதமொன்றை உருவாக்கிய அக்பர், மனைவியின் கல்லறைக்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்த ஷாஜஹான் போன்ற மன்னர்களை - மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தப்புரங்களில் கோலோச்சியவர்களை - நல்லவர்களாக, மகாபுருஷர்களாக, கலைநயம் மிக்கவர்களாகச் சித்தரிக்கும் வரலாறு, தன் சொந்தச் செலவுக்கு அரசாங்க கஜானாவிலிருந்து நிதி எடுக்காமல் குர்ஆனை எழுதி, தொப்பி நூற்று, எளிய வாழ்க்கை வாழ்ந்த மன்னர் ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த துக்ளக்கை ஒரு கோமாளியாகவும் நம் உள்ளத்தில் பதிய வைத்ததில் நெஞ்சில் வஞ்சகம் குடிகொண்டிருந்த வரலாற்றாசிரியர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைமகன் திப்புசுல்தான், கேரளத்து நாயர் பெண்களின் சீர்திருத்திற்காகப் பாடுபட்டதைத் திரித்த வரலாறு, 18 தடவையும் படையெடுத்து வென்ற முஹம்மது பின் கஜ்னவியை முஸ்லிம்களின் உள்ளங்களில்கூட தோற்றுப்போன ஒரு வில்லனாக சித்தரிப்பதில் நம் பாடத் திட்டத்தில் இப்போதும் பயிற்றுவிக்கப் படுகின்ற வரலாறு வென்றிருக்கின்றது.

ஊடகங்களின் பணி:
பத்திரிகையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொன்மையான அமைப்புகளில் ஒன்றான அமெரிக்காவில் உள்ள Society of Professional Journalistயின் கூற்றுப்படி, ஒரு செய்தி என்பது 5 W’s கொண்டதாக இருக்க வேண்டும் (Who, What, When, Where & Why - யாரைக் குறித்து?, எதைக் குறித்து?, எப்போது?, எங்கே?, ஏன்?). அதுபோல செய்தியாளர் என்பவர், "எந்தப் பக்கச் சார்புமில்லாமல், தன் மதம், பிரதேசம், மொழி, இனம் என எந்தப் பாதிப்புமின்றி செய்தியைத் தெளிவாக, உள்ளது உள்ளபடி கொடுப்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் பணி" எனக் குறிப்பிடுகிறது. இறைமறை குர்ஆனும், "நம்பிக்கையாளர்களே ! ஒரு(தீய)வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை(ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்" (49 : 6) என்று கூறுகிறது. "தனக்குக் கிடைக்கும் செய்தியை ஆராயாமல் அப்படியே பரப்புவன் பொய்யன்" என நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலை
Print media என்று சொல்லப்படும் அச்சு ஊடகம், சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் - குறிப்பாகத் தமிழக அளவில் - பத்திரிகை தர்மத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம். இன்று பத்திரிகைகள் - குறிப்பாக நாளிதழ்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க இரண்டு வகையான உத்திகளைத்தான் கையாளுகின்றன. அவை, 'பரபரப்புப் பத்திரிகையியல்' மற்றும் 'மஞ்சள் பத்திரிகையியல்' (Sensational Journalism and Yellow Journalism). குஜராத் ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு 'சந்தோஷ்' எனும் பத்திரிகை இந்துப் பெண்கள் முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கலவரத்தை ஊதிப் பெரிதாக்கியது தெரிந்ததே. முஸ்லிம்கள் மீதோ கிருஸ்த்துவர்கள் மீதோ தாக்குதல் நடந்தால், "இரு பிரிவுகளுக்கு மத்தியில் பிரச்னை" என மென்மையாய் செய்தி தரும் பத்திரிகைகள், நேரெதிர் நிகழ்வுகளில் காட்டும் வேகம் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கும்!
எவர் வைத்து வெடித்த குண்டாக இருந்தாலும் எங்குக் குண்டு வெடித்தாலும் சற்றும் யோசிக்காமல் "முஸ்லிம் தீவிரவாதி", "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்று படுவேகமாகச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு, குண்டு வெடிப்பு நடத்தி, முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்க முயன்றவர்களின் சதி, 'மதச் சார்பற்ற' ஊடகங்களின் பார்வையில் செய்தியாகப் படவில்லை. விடுதலைப்புலிகளை தமிழ்ப் போராளிகள் எனக் குறிப்பிடும் பத்திரிகைகள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு, "தீவிரவாதி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம். பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்று அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம். குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் பயங்கரவாதி ப்ரக்யாசிங்கை, "சாது" என்று பயபக்தியுடன் அழைப்பதாகட்டும், ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தீவிரவாத 'மாஸ்டர் மைண்ட்' ஆகத் திகழ்ந்த புரோஹித்தை தேசப் பற்றாளராகக் காட்டுவதற்கு நமது 'நடுநிலை நாளிதழ்கள்' படாத பாடு படுகின்றன.
டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி, இஸ்லாத்தைத் தூற்றிய இந்தியாடுடே முதல், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் "வைக்கப்பட்டிருந்த" குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிகை தினமலர்வரை, அவற்றில் எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்புப் பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. காரணம், வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் சொந்த கோர முகங்கள்! பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிரபராதியாக வெளி வந்திருக்கிறார் இம்ரான். ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளை பக்கம் பக்கமாக வெளியிட்ட பத்திரிகைகள் நிரபாரதியாக வெளிவந்த செய்தியில் அக்கறை காட்டவில்லை. அவை அடுத்து ஒரு முஸ்லிமைக் குற்றவாளியாக, தீவிரவாதியாகக் காட்ட வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கக் கூடும்..
இன்னொரு புறம் சமீபத்தில் தினமலர் செய்ததைப் போல் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் தலைவரைப் பற்றி அவதூறுகளை, நையாண்டி செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையையும் பத்திரிகைகள் செய்து கொண்டிருக்கின்றன. அதுபோல இஸ்லாத்தைக் குறித்துத் தவறான செய்திகளைக் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மூலம் பதியும் பத்திரிகைகள் அவற்றுக்கான மறுப்புகளை அனுப்பினால் அவற்றைப் புறக்கணிப்பதைப் பார்க்கின்றோம். அதுபோல ஆதிக்க சாதி எழுத்தாளர்கள் மூலமும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, பெயர்தாங்கிகளாக வாழும் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற எழுத்தாளர்கள் மூலமும் "கருத்துச் சுதந்திரம்" என்ற பெயரால் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டுவதைப் பார்க்கின்றோம். எதற்கெடுத்தாலும் "புலனாய்வுப் பத்திரிகையியல் (Investigative Journalism)" என்ற பெயரில் "மதரஸாக்களில் ஆயுதப் பயிற்சி" போன்ற பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பும் பத்திரிகைகள், முஸ்லிம் அமைப்புகளின் பேரணிகளைக்கூட தீவிரவாதப் பயிற்சிகளாகச் சித்தரிக்கும் புலனாய்வு(?)ப் பத்திரிகைகள், சங் பரிவாரங்கள் நடத்தும் வெளிப்படையான ஆயுதப் பயிற்சியை வெறும் செய்தியாகக்கூடத் தராது.

தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் தற்போதைய நிலை
அச்சு ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் - இன்னும் சொல்ல போனால் - அதை மேலும் மோசமாக்கும் வகையில்தான் தொலைக்காட்சி சானல்களும் உள்ளன. புராண புளுகுகளை உண்மை வரலாறாகத் திரிக்கும் தொலைக்காட்சிகள் திப்புவின் உண்மை வரலாற்றை ஒளிபரப்பும்போது நூலை அடிப்படையாகக் கொண்ட "கற்பனை கதை" என்று அறிவிப்புச் செய்து ஒளிபரப்பியது நினைவிருக்கலாம். அதுபோல் "பகுத்தறிவுப் பகலவன்"களால் நடத்தப் படும் தொலைக்காட்சிகளில் மூட நம்பிக்கைகளைப் பார்வையாளர்களின் மனதில், குறிப்பாகப் பெண்களின் மனதில் விதைக்கும் நாடகங்களை ஒளிபரப்புவது, அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மேற்கத்திய கலாசாரத்தைத் திணிப்பது, எங்குக் குண்டுவெடிப்பு நடந்தாலும் Breaking News எனும் பெயரில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவது, போன்ற சமுதாயச் சேவை(?)யாற்றும் தொலைக்காட்சிகள், "தீவிரவாதிகள்" என்று 'சொல்லப் பட்டவர்கள்' நிரபாரதிகள் என விடுதலை செய்யப்படும்போது கள்ள மவுனம் சாதிக்கின்றன. பாராளுமன்றத் தாக்குதல் சதியில் 'மாட்டிக் கொண்ட' அப்சல் குருவுக்குத் தூக்குதண்டனையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் தரவில்லை. மாறாக, தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே எனும் உண்மையை எந்த ஊடகமும் வெளிப்படுத்துவதில்லை. நடுநிலை தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட, "அப்சல் குருவைத் தூக்கிலிடாதது ஏன்?" என கேள்வி எழுப்பி முஸ்லிம் விரோதப் போக்கை விதைக்கின்றனர்.
சமீபத்தில் நடந்த மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னமேயே நடுநிலை ஆங்கிலத் தொலைக்காட்சிகள்கூட நிகழ்வை நான்கு நாட்கள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. அதிலொன்றும் தவறில்லை. ஆனால், ஆங்காங்கே இஸ்லாமிய விரோதப் போக்கை விதைக்க முயன்றதுதான் தவறு. அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம். தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவர் கார்கரே முதலாவதாகக் குறி வைத்து சுடப்பட்டது, அதற்கு முன்னர் அவருக்கிருந்த பரிவாரங்களின் கொலை மிரட்டல், இஸ்ரேலியர்களின் நரிமன் ஹவுஸின் பங்களிப்பு என ஏராளமான சந்தேகங்கள் சங்பரிவார – மொஸாத் – அமெரிக்க பங்களிப்பை நோக்கி விரல் நீட்டினாலும் அவை தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மறைக்கப்பட்டதை உணரலாம். இணையத்தளங்களில் ஓப்பீட்டளவில் முஸ்லிம்கள் முன்னேறியிருந்தாலும் இஸ்லாத்தின் பெயரில் திட்டமிட்ட போலி வலை தளங்கள், தவறான பிரசாரங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.

தீர்வு - ஊடகங்களில் புகுதல்
ஊடகங்களின் திரித்தலும் மறைத்தலும் ஒழிய வேண்டுமெனில், முதல்படியாக அந்த ஊடகங்களில் புகுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டு வேலை, அதிகச் சம்பளம் இவற்றையெல்லாம் தியாகம் செய்து விட்டு, பத்திரிகையியலைப் படிக்க முன்வர வேண்டும். ஆனால் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் தஞ்சாவூரில் RDB கல்லூரியில் பத்திரிகையியல் பட்டப்படிப்பை ஆரம்பித்தபோது மாணவர்களின் பதிவின்மையால் அதே ஆண்டு அந்தத்துறை நீக்கப் பட்டது.
உண்மையிலேயே நாம் பொதுவான செய்தி ஊடகங்களில் புகும்போது நம்மால் ஓரளவாவது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதுபோல் இஸ்லாம் குறித்த தவறான பிம்பத்தை அகற்றும் பொருட்டு, முன்னர் தினமணி முதல் பக்கத்தில் IFT அக்கால சூழலுக்கு ஏற்ற வகையில் வாழ்வியலுக்கு ஏற்ற குர்ஆன் வசனங்களை, நபிமொழிகளை வெளியிட்டதுபோல் வெளியிட மீள்முயற்சி எடுக்கலாம். காவிரிப் பிரச்சினை, பொருளாதர நெருக்கடி, வகுப்புக் கலவரங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ஊடகங்களில் அப்பிரச்னை குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளக்கலாம். தொலைக்காட்சிகளில் அனைவரையும் சென்றடையும் வகையில் விஜய் டி.வியின் "நீயா? நானா?" போன்று பொதுவான தலைப்புகளில் விவாத அரங்குகளை அனைத்து மதச் சகோதரர்களையும் அழைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதே சமயத்தில் எக்காரணம் கொண்டும் தற்போது நடப்பில் உள்ளது போன்று தொலைக்காட்சிகளில் சகோதர முஸ்லிம் அமைப்புகளைக் குறித்தும் தலைவர்களைக் குறித்தும் வசைபாட ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. தொலைக்காட்சிகளில் ஓரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு சேனல்களில் நம் நிகழ்ச்சிகள் வராமல் நமக்குள் ஒருங்கிணைந்து வெவ்வேறு நேரங்களில் ஒளிபரப்ப முயற்சி செய்ய வேண்டும்.

நம் செய்திகள் எல்லோருக்கும் சேரல்
இஸ்லாமியப் பத்திரிகைகள் கிட்டத்தட்ட 40க்கும் மேல் வெளிவருகின்றன. ஆனால் சென்னையில்கூட மண்ணடி போன்ற ஒரு சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் அவை கிடைப்பதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சிறு நகரங்களில் அந்த அமைப்பின் சார்பாளர் ஒருவர் வீட்டில் மட்டுமே அந்தப் பத்திரிகை கிடைக்கும். சாதாரணமாக, குறைந்த அளவில் வெளியாகும் 'புதிய ஜனநாயகம்' போன்ற கொள்கை இதழ்கள்கூட அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். அதன் பிரதிநிதிகள் பேருந்துகளில்கூட அவர்கள் பட்டதாரிகளாக இருந்தால்கூட வெட்கப்படாமல் அதை விற்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் சமூகத்திற்கே நம் பத்திரிகைகள் சேர்வதில்லை. லேபிள் ஓட்டாமல் மருந்து விற்பது என்பதுபோல் கலர் காட்டாமல் நமக்குப் பத்திரிகை நடத்தத் தெரியவில்லை. ஒரு சில இதழ்களைத் தவிர வேறு எதையும் நாம் பிறமதச் சகோதரர்களுக்கு வாங்கிக் கொடுக்க இயலாது. நம்மிடத்தில் இல்லாத, நாம் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டிய Professionalism அதற்கான பெருங்குறை எனலாம். தமிழ் இஸ்லாமிய இதழ்களில் ஒன்றைத் தவிர வேறு எப்பத்திரிகையிலும் இதழியல் படித்தவர்கள் பொறுப்பில் இல்லாதது இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

செய்தி நிறுவனங்களை உருவாக்கல்
நாம் நீண்ட கால நோக்கில் கவனம் செலுத்த வேண்டிய திட்டம் செய்தி நிறுவனங்கள் உருவாக்கம் என்பதாக இருக்க வேண்டும். ஏனெனில், செய்தி நிறுவனங்கள்தாம் ஊடகங்களின் செய்திகளுக்குக் கருவாக இருக்கின்றன. இது கடினமான பணி என்றாலும் அடிப்படையான பணி என்பதை மறுக்க முடியாது. AP, PTI போன்ற செய்தி நிறுவனங்கள்தாம் ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கின்றன. எடுத்து காட்டாக, 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலில் ஒரே நாளில் 3000க்கும் அதிகமானோர் பலியான செய்தி, உலகத்தின் பட்டி-தொட்டி எங்கும் பரவி, இன்றளவும் படித்தவர்களிலிருந்து பாமரர்கள்வரை நினைவில் பதிக்கப் பட்டதற்கு அடிப்படையாகத் திகழ்பவை செய்தி நிறுவனங்களாகும். ஆனால், ஆப்பிரிக்காவில் தினந்தோறும் கொள்ளை நோய்களின் மூலம் 3000 பேர்கள் கொல்லப்படும் தகவல், அதே செய்தி நிறுவனங்களால் அலட்சியப் படுத்தப் படுவதால், ஊடகங்களில் இடம் பெறுவதில்லை. இப்படியாக ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிப்பதில் செய்தி நிறுவனத்தின் பணி முக்கியமானது.

நடுநிலை ஊடகங்களை ஏற்படுத்தல்
இன்று முஸ்லிம் சமுதாயத்தின் கட்டாயத் தேவைகளுள் தலையாயது நமக்கென்று நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள். ஆனால் அவை ஒரு முஸ்லிம் பத்திரிகையாக அல்லாமல், மற்ற பத்திரிகைகளைப் போலல்லாமல் கேரளாவின் மாத்யமம் போன்று பொதுவான நடுநிலை நாளிதழாக நடத்த முயற்சி செய்ய வேண்டும். நடுநிலையோடு செய்திகளை வெளியிடும்போது அனைத்துத் தரப்பினரையும் சென்று செய்திகள் சேரும். அதுபோல் தெஹல்கா போன்ற வார இதழ்களை வெளியிட முயற்சி செய்ய வேண்டும். நம்மிடத்தில் உள்ள செல்வந்தர்கள்கூட தெஹல்கா போன்ற இதழ்களை அவர்களைக் கொண்டே தமிழில் வெளியிட முயற்சி செய்யலாம். சத்தியத்திற்காகப் போராடக் கூடிய, குஜராத் உண்மைகளை உயிரைப் பணயம் வைத்து வெளிக்கொணர்ந்த தெஹல்கா போன்ற பத்திரிகைகளுக்கு சந்தா கட்டி, அவர்களுக்குக் குறைந்த பட்சம் பொருளாதார ரீதியாக உதவலாம். ஒரு அல்-ஜஸீராவும் அல்-அரபியாவும் PEACEம் தொலைக்காட்சியில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் அறிவோம். நம்மால் உடனடியாகத் தொலைக்காட்சி கொண்டு வருவது பொருளாதார ரீதியாக சிரமம் என்றாலும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து அல்லது பிறமத நடுநிலையாளர்களோடு இணைந்து ஒன்றை ஏற்படுத்தலாம். வெறுமனே பிராசாரம் என்றில்லாமல் செய்திகள், விவாதங்கள், குறும்படங்கள் என இஸ்லாமிய வரம்புக்குட்பட்டு நடத்தினால் வெற்றி பெறுவது சாத்தியமானதே.

முடிவுரை
முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு, பத்திரிகைகளில் வெளியாகும் தவறான செய்திகளுக்கு மறுப்பளித்தல், தேவையெனில் சட்ட நடவடிக்கை எடுத்தல், செய்தி நிறுவனங்களையும் ஊடகங்களையும் உருவாக்கல், பத்திரிகை உலகில் புகுதல் என, தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம்கள் தங்களை மட்டுமல்ல, ஓட்டு மொத்த உலகையும் காப்பாற்ற முடியும். சிறந்த சமுதாயம் என அருள்மறை வர்ணிக்கும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இச்சமுதாயத்துக்கு மட்டும்தான் அந்த ஆற்றல் இருக்கிறது.
நீதிக்குக் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் தன் தூக்கத்தைக் களைந்து அறிவாயுதத்தை கையில் ஏந்தி அநீதிகளுக்கெதிராய் போராடும் காலம் நெருங்கி விட்டது.
வாருங்கள் இளைஞர்களே!
ஓரணியில் ஒன்று திரள்வோம்
சத்தியத்தை உணர்ந்தாலே
தியாகங்கள் எளிதாகும்
உணர்ந்த சத்தியத்தை
பிறருக்கும் எடுத்துச் சொல்வோம்
அநீதிகளை, அக்கிரமங்களை
வேரோடு அழித்தொழிப்போம்.

ஆக்கம்: முஹம்மது ஃபெரோஸ்கான்
ஆதார நூல்கள், இணையங்கள்
1. Wikepedia – Free encyclopedia
2. www.satyamargam.com
3. பத்திரிகைதுறையும் முஸ்லீம்களும் – இலக்கியச் சோலை
4. வந்தார்கள் வென்றார்கள் – விகடன் பிரசுரம்

நன்றி : சத்தியமார்க்கம்.காம்
(சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008 சர்வதேச கட்டுரை போட்டியில் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது)

Thursday, August 20, 2009

நோன்பு - மாண்புகளும், படிப்பினையும்

இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளுள் நோன்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் மனித வாழ்க்கையின் முழுமையான நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் இதன் விளைவுகள் அமைந்திருக்கின்றன. மனித வாழ்க்கைக்குரிய இறைவழிக்காட்டலான அல்குர்ஆனை ரமழான் மாதத்தில் இறைவன் இறக்கி வைத்ததிலிருந்து இம்மாதத்தினதும், இக்கடமையினதும் புனிதத்துவத்தைப் புரிந்து கொள்ளமுடியும். ஏனைய எல்லாக் கடமைகளோடும் தொடர்புபட்ட விளக்கங்களை வழங்கும் அல்குர்ஆனின் போதனைகள் இப்புனிதமான மாதத்தோடு தொடர்புபட்டதாகவே அமைந்திருக்கின்றன.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமழான் வந்த போது நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் வளம் மிக்க மாதமொன்று வந்துள்ளது. அதில் உங்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன. ஆயிரம் மாதங்களை விடச்சிறந்த ஓர் இரவு அதில் இருக்கிறது. அந்த நன்மையை இழந்தவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான்.” என்று கூறினார்கள்.(அஹ்மத், நஸாஈ, பைஹகீ) நோன்பு மனித வாழ்வில் ஆத்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகின்றுது.
நோன்பு பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகிறது, ”விசுவாசிகளே! உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போல பயபக்தியுடையோர்களாக மாறலாம் என்பதற்காக உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது (அல்பகரா:183) இந்த வசனத்தில் மனிதனுடைய வாழ்க்கை நெறிப்படுத்தப்படுகின்ற மூன்று முக்கியமான பிரிவுகளை இறைவன் சுட்டிக் காட்டுகின்றான். விசுவாசிகளே என விளீத்துப்பேசுவதிலிருந்து இறைவிசுவாசத்தின் முக்கியத்துவத்தை அவன் உணர்த்திக்காட்டுகிறான். ஒரு மனிதனிடத்தில் உண்மையான விசுவாசம் ஏற்பட்டதன் பின்னரே அவனால் செயல்கள் பற்றிய முடிவுக்கு வரமுடியும். இதனால்தான் அல்குர்ஆனில் ஈமானைப்பற்றிக்குறிப்பிடும் போது 'அமலுஸ் ஸாலிஹாத்" என்ற நல்ல செயல்களையும் இறைவன் தொடர்புபடுத்தி விடுகிறான். ஈமானுக்குப்பின்னர் நோன்பும், இறைவனைப்பற்றிய அச்சமும் அவனைப்புனிதப்படுத்தக் கூடியன என்ற கருத்து இங்கு தெளிவுபடுத்தப்படட்டுள்ளது.
நோன்பு நோற்கின்ற ஒரு முஸ்லிம் இறைவன் கூறுகின்ற கருத்துப்படி மூன்று முக்கியமான மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும்.அவன் முதலாவது வாழ்க்கையின் எல்லாக் கட்டத்திலும் அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்ற ஒரு நிலைக்கு மாற வேண்டும். இரண்டாவது, நேர்வழியை அருளியவனின் புகழ்பாடி அவனுடைய பெருமையை மேலோங்கச் செய்யவேண்டும். நன்மைகளை அருளியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். இங்கு இறையச்சம், இறைவனைப் தூய்மைப்படுத்தல், இறைவனுக்கு நன்றி செலுத்தல் என்ற மூன்று அம்சங்களும் நோன்பின் விளைவுகளாக எடுத்துக் காட்டப்பட்டிருகின்றன. இத்தகைய விளைவுகளை நோன்பு மனிதனிடத்திலே ஏற்படுத்தவில்லையாயின் அது உண்மையில் நோன்பாக அமையமாட்டாது. உயிரற்ற உடலைப் போன்று,நறுமணமற்ற மலரைப்போல அந்நோன்பு காணப்படும்.
உடலின் நோன்பு மட்டும் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பல்ல, உள்ளத்தின் நோன்பையும் சேர்த்தே அதன் பெறுமதியை இஸ்லாம் மதிக்கிறது, இதனைத்தான் நபி(ஸல்)பின்வருமாறு குறித்துக்காட்டினார்கள். ”நோன்பு பிடிப்பவர் பலர் பசியுடனும் தாகத்துடனும் இருப்பவர்களாக மட்டுமே நின்று விடுகின்றனர்.விலக்கப்பட்டதைச் செய்து நோன்பை முறித்துக்கொள்கினறனர். (ஆகுமான உணவு உன்பதை நிறுத்தி மனித ஊணைத்தின்கின்றனர். புறம் பேசுவது மனித மாமிசத்தைப் புசிப்பதாகும். )எத்தனையோ மனிதர்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்கள் தாகித்திருந்ததைத் தவிர வேறு எந்தவொரு பயனும் அவர்களுக்கு இல்லை. எத்தனையோ மனிதர்கள் நின்று வணங்குகின்றனர். அவர்கள் விழித்திருந்ததைத் தவிர வேறு எந்தவொரு பயனும் அவர்களுக்கு இல்லை.(தாரமி) நோன்பு ஓர் அலாதியான ஆத்மீக தெம்பினை மனிதனுக்கு வழங்குகின்றது. ஒருமாதகாலமாக ஆத்மீக மழையில் நனையக் கூடியபாக்கியம் அவனுக்குக்கிடைக்கின்றது. ஒரு வியாபாரி இலாபங்களை ஈட்டிக் கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே தயாராகின்றான். அதிகமாக முதலீடுகளைச் செய்கின்றான். எத்தனையோ சிரமங்களை எதிர்கொள்கின்றான்.
வாழ்க்கையில் ஒருமனிதனுக்கு ஒரு ரமழான் கிடைப்பதே பாக்கியமாகும். அதன் ஒவ்வொரு நிமிடமும் அருளாகும். அல்லாஹ்வின் அருள்மழையில் நனையும் பாக்கியத்தை யார்தான் இழக்க விரும்புவார்? இவவாறான ஒருமாதத்தை அடைந்து கொள்பவர்கள் நோன்பு நோற்பதிலும், இரவுநின்று வணங்குவதிலும், அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதிலும், திக்ர் செய்வதிலும் ஈடுபட்டுவருகிற போது அல்லாஹ்வோடு வாழ்வதில் ஒரு சுவையைப் பெற்றுக் கொள்கிறார்கள். அப்போது இச்சாதாரண அடியானை அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்துநோக்குகின்றான். அவனைப்பற்றி அல்லாஹ் பெருமையடைகின்றான். அல்லாஹ்வின் உயர்ந்த அன்பும் திருப்தியும்தான் இங்கே மனிதனது நோக்கமாக அமைகின்றது. வேறு எத்தகைய உலக இலாபங்களோ முகஸ்துதியோ அங்கு காணப்படமாட்டாது. ஆதமின் மக்கள் செய்யும் அமல்கள் அனைத்தும் அவனுக்காகவே புரியப்படுகின்றன நோன்பைத்தவிர. அது எனக்கே உரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன். எனக்காகவே அவன் உண்பதைத் தவிர்க்கின்றான், எனக்காகவே அவன் பானங்களைப் பருகாதிருக்கிறான் என்னைப் பயந்தே அவன் தனது ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்கிறான் எனக்குப் பயந்தே அவன் தனது மனைவியுடன் சேராதிருக்கிறான்.” என்று அல்லாஹ் நோன்பாளிகளைப்பற்றிக் கூறுகிறான். (இப்னு குதைமா)
நோன்பாளி பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது கொண்டு ஆத்மீக உணர்வுகளை வளர்த்துக்கொள்ளமுடியும். நபி(ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் இவ்வாறுதான் தமது ஆத்மீகப் பசியைத் தீர்த்துக்கொண்டார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸீல்(ஸல்) ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருப்பார்கள்.” (புஹாரி,முஸ்லிம்) ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் தஆலா ரஸீல்(ஸல்) அவர்களை வபாத்தாகும் வரை அவர்கள் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்.” (புஹாரி,முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமழானிலும் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களது உயிர் கைப்பற்றப்பட்ட வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி)
நோன்பு காலங்களில் சாதாரண நாட்களைவிட ஒருவர் தனது பிராத்தனைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நோன்பாளியோடு இறைவன் இரக்கப்படுகின்றான், அன்பு கொள்கின்றான், அவன் தன்னிடம் கேட்கிறானா என்பதை அவன் ஆவலோடு பார்த்திருக்கின்றான். இதனை நபி(ஸல்)அவர்கள் பின்வருமாறு தெளிவுப்படுத்தினார்கள். மூன்று பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தந்தை தனது பிள்ளைக்காகக் கேட்கின்ற துஆ, நோன்பாளியின் துஆ, பிரயாணியின் துஆ.” இன்னொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். நோன்பு நோற்கின்ற நோன்பாளி, நீதியான ஆட்சியாளன்,அநியாயம் இழைக்கப்பட்டவன் ஆகிய மூவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் நிராகரிப்பதில்லை.” (திர்மிதி, அஹ்மத்)
நோன்பில் மனித ஆத்மாவுக்கு கிடைக்கும் இன்னொரு முக்கியமான உணவு இரவுத் தொழுகைகளாகும். அதில் ஓர் அலாதியான சுவை முஃமினுக்குக் கிடைக்கின்றது. அச்சுவையைப் பெற்றவர் ஒரு நாளும் அதனை இழக்க விரும்பமாட்டார். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் இரவில் எழுந்து கால்கள் வீங்கும் அளவுக்கு நீண்ட நேரம் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதரே முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையிலும் ஏன் இப்படி தொழ வேண்டும் என்று கேட்டேன். அதற்கவர்கள் நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா என்று பதிலளித்தார்கள்.” (புஹாரி,முஸ்லிம்) இவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் ஏனையோரும் இதன் உயர்ந்த பலனைப்பெற வேண்டுமென்ற வகையில் அடுத்தவர்களையும் தூண்டினார்கள். மனிதர்களே! நீங்கள் ஸலாத்தைப் பரப்புங்கள். (ஏழைகளுக்கு) உணவளியுங்கள் மேலும், மனிதர்கள் இரவில் ஆழ்ந்து நித்திரை செய்யும் போது நீங்கள் எழுந்து கொள்ளுங்கள்,(அப்படியெனில்) மிக நிம்மதியாக சுவர்க்கத்தில் நுழைவீர்கள்.”(திர்மிதி) இவ்வாறான இரவுத்தொழுகைகளின் மூலம் அல்லாஹ்வை மனிதன் நெருங்க முடியும்.ஹதீஸ் குத்ஸியொன்றில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்தவுடன் அல்லாஹீத்தஆலா அடிவானத்திற்கு இறங்கி வந்து,என்னுடைய அடியார்களில் யார் பாவமன்னிப்புதேடுகிறார்கள்? நான் அவர்களை மன்னிக்க காத்திருக்கின்றேன் யார் என்னிடம் கேட்கிறார்கள் நான் அவர்களுக்கு கொடுக்கக் காத்திருக்கிறேன் அடியான் என்னை நோக்கி ஒரு சாண் வந்தால் நான் அவனை நோக்கி ஒருமுழம் வருவேன் அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்.’
நோன்பின் அதி உயர்ந்த அருட்பாக்கியம் லைலத்துல்கத்ர் இரவாகும். இவ்விரவை பரகத் நிறைந்த இரவென்றும் ஆயிரம் மாதங்களைவிடச்சிறந்த இரவென்றும் அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. நபி (ஸல்)அவர்களும் அவவிரவின் சிறப்பு பற்றி விளக்கிக் காட்டினார்கள். “லைலதுல் கத்ர் இரவில் யாராவது ஒருவர் ஈமானிய உணர்வோடும் அல்லாஹ் தருவான் என்ற எதிர்ப்பார்ப்போடும் வணங்கினால் அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” (புஹாரி,முஸ்லிம்) இப்புனித இரவில் இபாதத் புரிவதென்பது ஆயிரம் மாதங்கள் இபாதத் புரிந்த நன்மையை வழங்ககூடியது என்பதனால் நபி(ஸல்) அவர்கள் அதன் பிரயோசனங்களை எடுத்துக் கொள்ள முற்பட்டதோடு தனது குடும்பத்தினரையும் அதற்காகத் தூண்டினார்கள் என்பதை அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஓர் அறிவிப்பு தெளிவுபடுத்துகின்றது. ரமழானின் இறுதிப் பத்தை அடைந்தால் இரவில் விழித்திருந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள் தனது குடும்பத்தினரையும் எழுப்பி விடுவார்கள் தன் இல்லற வாழ்விருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். (புஹாரி,முஸ்லிம்) லைலத்துல் கத்ர் இரவு நரக விடுதலைக்காக அதிகம் பிரார்த்தனை புரியப்படும் இறுதிப்பத்தில் வருகின்றது ரமழானின் இறுதிப்பத்தில் லைலத்துல் கத்ரை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் (புஹாரி) என நபி(ஸல்) அவர்கள் குறித்துக் காட்டினார்கள். அவ்விரவைத் தேடி அமல்கள் புரிவதும்,பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் மனிதனுக்குக் கிடைக்கும் உயரிய வரப்பிரசாதமாகும்.
சில துர்ப்பாக்கியசாலிகள் நோன்பையே ஒரு சுமையாகக் காண்கின்றனர் அவர்களுக்கு லைலத்துல் கத்ரோ இரவுத் தொழுகைகளோ ஒரு பொருட்டாகத் தென்படுவதில்லை. அவர்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள். யார் இத்தினத்தில் நன்மைகள் செய்வதை விட்டும் தடுத்துக் கொள்கிறாரோ அவர் தன் பாதையில் தடையை ஏற்படுத்திக் கொள்கிறார். நோன்பில் ஸஹர் செய்வதிலும் ஆத்மீக உறவு வளர்கின்றது நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். ஸஹர் செய்யுங்கள் நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரகத் இருக்கிறது. (புஹாரி) ஸஹர் செய்வது பரகத் ஆகும் எனவே ஸஹர் செய்வதை விட்டு விடாதீர்கள். ஒரு மிடர் தண்ணீரை அருந்தியாவது சஹர் செய்யுங்கள். ஏனென்றால் ஸஹர் செய்பவர்களுக்காக அல்லாஹ் அருள் புரிகின்றான்.மேலும் வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். (அஹ்மத்)
உலக வாழ்க்கையில் மனிதன் காரியங்களை ஆற்றுகின்ற போது பல்வேறு தவறுகளைப்புரியலாம். இத்தவறுகள் உலக வாழ்க்கையிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடுவதோடு, மறுமையில் இறைவனது தண்டனைகளையும் ஒருவனுக்கு கொடுத்து விடும். இதனால் தவறு செய்கின்ற ஒரு நிலையிலிருந்து ஒருவனை மாற்றி விடுவதற்காக பாவமன்னிப்பு என்ற அம்சத்தை இறைவன் ஏற்படுத்தியிருக்கின்றான். மிகக் கூடுதலாக பாவமன்னிப்பு பற்றிய விடயம் நோன்போடு தொடர்புபடுத்தி விளக்கப்படுகிறது. யார் ஈமானுடனும், கண்காணிப்புடனும் ரமழான் நோன்பை நோற்கின்றாரோ அவரது முன்,செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் (அஹ்மத்,திர்மிதி,நஸஈ, இப்னுமாஜா, அபுதாவூத்) என நபியவர்கள் கூறினார்கள். ஒரு மனிதன் புரியும் தவறுகள் பாவமன்னிப்பால் நீக்கப்படுகின்ற போது அவன் புது மனிதனாக மாறி சமூக பிரச்சினைகளை நல்ல முறையில் எதிர்கொண்டு தனக்கும், சமுதாயத்துக்கும் பிரயோசனமுள்ளவனாக மாற வழி பிறக்கிறது. நோன்பு மாதம் நன்மைகளை அள்ளிக் கொட்டும்மாதமாகும். இதனால் நோன்பு வருகின்ற போதே நபியவாகள் நன்மைகளை முடிந்தவரை தேடிப் பெற்றுக்கொள்ளத் தயாராகிவிடுவதாக ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன்.ஒரு முஸ்லிம் இச்சந்தர்பத்தை நழுவவிடக் கூடாதென இஸ்லாம் விரும்புகின்றது. பாவங்களிலிருந்து விடுபட்டு சுவர்க்கத்துக்குச் செல்ல அவன் ஆசைப்பட வேண்டும். ஹதீஸ்கள் அவ்வாசையை அவனுக்கு ஊட்டிக் கொண்டே இருக்கின்றன. சுவர்க்கத்தில் அர்ரய்யான் எனப்படும் ஒரு வாயில் உண்டு. நோன்பாளிகள் மாத்திரமே மறுமையில் அதனுடாக நுழைவர். அவர்களைத் தவிர வேறு யாரும் அதனூடாக நுழையமாட்டார்கள்.நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். அப்போது அவர்கள் எழுந்து அதனூடாக நுழைந்து சுவர்க்கம் செல்வார்கள். அவர்களனைவரும் சென்ற பின்பு அந்த வாயில் மூடப்படும்.(புஹாரி,முஸ்லிம்)
அரபுமொழியில் ‘இத்தகா’ என்றால் பாவங்களிலிருந்து தப்பித்தல், அனைத்து பாவங்களிலிருந்தும் உடலையும்,உள்ளத்தையும் பாதுகாத்தல் என்ற பொருள் கொள்ளப்படுகின்றது. இத்தகைய நிலைப்பாடுதான் ‘தக்வா’ என்ற அழைக்கப்படுகிறது. அதற்குரிய பயிற்சியை வழங்குவதே நோன்பாக அமைகிறது. தவறு செய்யாமலும்,பாவங்கள் புரியாமலும் இருப்பதுதான் உண்மையான நோன்பு என இஸ்லாம் உணர்த்துகிறது.இதனைத் தான் நபி(ஸல்); “நோன்பாளி காலையிலிருந்து மாலைவரை இன்னொருவருக்கு தீங்கு செய்யாதவரை இறை வணக்கத்திலேயே உள்ளார். தீங்கிழைத்து விட்டாலோ நோன்பைப் பாழ்படுத்திவிட்டார்".'உண்பதிலிருந்தும், குடிப்பதிலிருந்தும் விலகியிருப்பது நோன்பல்ல, தீய செயல்களிலிருந்து விலகி இருப்பதே நோன்பாகும்’’எனவும் நபி(ஸல்)அவர்கள் கூறிப்பிட்டார்கள். நோன்பின் உண்மையான இலக்கு ஒருவர் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு வாழ்வதே என்பது இங்கு குறித்துக் காட்டப்படுகின்றது. நோன்பு கொடுக்கின்ற இன்னொரு முக்கிய பயன் மனிதன் சர்வசாதாரணமாகச் செய்கின்ற பொய்,புறம் போன்ற தவறுகளிலிருந்து அவனைப்பாதுகாப்பதாகும். 'நோன்பு நேரத்தில் பொய் சொல்வதிலிருந்தும், பிழையான செயல்களிலிருந்தும் ஒருவன் விலகா விட்டால் அத்தகையவர்கள் உண்பதையும்,குடிப்பதையும் பற்றி கவலைப்படுவதற்கில்லை".'நோன்பு (பாவங்களிலிருந்து) காக்கும் கேடயமாகும். எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்.யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி எனறு அவர் சொல்லட்டும்.” (புஹாரி)என நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். இதனால் ஒரு மனிதன் வானவர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவான். ‘மிருகநிலைக்கும் வானவர் நிலைக்கும் இடையிலுள்ள ஒரு தரத்திலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்’’ என்ற இஸ்லாத்தின் போதனைப்படி வானவர் நிலைக்கு மனிதன் உயர்த்தப்பட நோன்பு வழியமைக்கின்றது. இவ்வணக்கத்தைப் புறக்கணிக்கும் போது மிருக நிலைக்கு அவன் தாழ்ந்து விடுவான்.
எந்த நேரத்திலும் உணவு உட்கொணடிருப்பதும், உடலுக்குரிய ஆகாரங்களைப் பெற்றுக்கொண்டு இருப்பதும்,இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதும் மிருகங்களின் பண்புகளாகும்.ஆனால் வானவர்கள் உணபது பற்றியோ சிந்திக்காதவர்கள். நோனபு காலங்களில் உண்ணாமலும், பருகாமலும், இன்பம் அனுபவிக்காமலும் ஒரு மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் போது வானவர்களின் நிலைக்கு உயர்த்தப்படுகின்றான். அடிக்கடி மனித சிந்தனையிலே ஏற்படுகின்ற முரண்பாடுகள் மனித உறவுகளைப் பாதித்து சண்டை சச்சரவுகளை ஏற்படுத்திவிடக் கூடும்.இந்நிலையில் மனிதன் உடனடியாக ஏற்படுகின்ற சில மன எழுச்சிகளுக்கு அடிமைப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மனித இனத்திலே அமைதி தோன்ற வழிபெறக்காது. இவ்வாறு அடிக்கடி கோபங்களுக்குள்ளாகும் மனோ நிலையிலிருந்து நோனபு மனிதனை பாதுகாக்கின்றது.ஒருவன் நோன்பாளியோடு சண்டையிட வேண்டி நேரிட்டால்தான் ஒரு நோன்பாளி எனக்கூறி சண்டைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகிவிடும்படி நபியவர்கள் கூறினார்கள்.
பொறுமை ஒரு மனிதனிடத்திலே கட்டாயம் காணப்பட வேண்டிய ஒரு பண்பாகும். இறை நம்பிக்கை கொண்டவாகள்! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் (அல்பகரா:153) என அல்குர்ஆன் பணிக்கின்றது.இதிலிருந்து இறைவனை நெருங்கச் செய்யும் ஒரு செயலாக பொறுமை அமைகின்றது என்பதைப் புரியலாம். அவ்வாறான பொறுமைக்கு நோன்பு வழிவகுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் அதனை பின்வருமாறு விளக்கினார்கள். எல்லாப் பொருட்களுக்கும் ஸகாத் உண்டு. உடலின் ஸகாத் நோன்பாகும். மேலும் நோன்பு பொறுமையின் அரைவாசியாகும். ஒரு நோன்பாளிக்கு கடுமையான பசி காணப்படுகின்றது போது முன்னால் பசியைத் தீர்த்துக் கொள்ள ருசியான ஆகாரம் இருந்தும், கடும் தாகத்தில் தவிக்கும் போது குளிரான நீர் அவன் முன்னால் இருந்தும், உடலிச்சைகளைத் தீர்த்துக் கொள்ள மனைவி பக்கத்திலிருந்தும் தன்னை அவன் தனது இறைவனுக்காகக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். ஓரிரண்டு நாட்களுக்கின்றி முப்பது நாட்களுக்கு இந்நிலை தொடர்கின்றது. ஜேர்மனைச் சேர்ந்த ஒரு மனோதத்துவ அறிஞர் தனது நூலொன்றில் நோன்பு மனோ வலிமையைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்த வழியென விளக்குகிறார்.சமூக ரீதியிலான தாக்கங்கள் மனித கமுதாயத்தை மனதப் பணபுகளோடு நோக்கிப் பார்க்கினறஉள நிலையை நோன்பு ஒருவனிடத்திலே தோற்றுவிக்கின்றது. பல கஷ்டங்களுக்கு ஒரு மனிதன் உள்ளாகியிருக்கலாம். தீர்க்க முடியாத சிக்கல்களில் குடும்பங்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம். கல்விப் பிலச்சினையாலும் ஒழுக்க ரீதியிலான பிரச்சினைகளாலும், பொருளாதார சிக்கல்களினாலும் மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கலாம். இவ்வாறான கஷ்ட நிலைகளை அடுத்த மனிதர்கள் நீக்கி விடுவதற்குரிய பயிற்சியை நோன்பு வழங்குகின்றது.
தினமும் வயிறுநிறையப் புசிக்கிறவன் நோன்பு காலங்களில் பசித்திருக்கின்ற போது வறுமைநிலைக்கு உட்பட்டவர்களது கஷ்டங்களை உணருவான். தான் ஒரு மாதகாலம் இவ்வளவு சிரமப்பட்டு பசித்திருப்பதே கடினமானது என எண்ணுகின்ற போது பன்னிரெண்டு மாதங்களாக பசித்திருப்போர் பற்றி ஒரு முறை அவனால் நோக்கிப்பார்க்க முடிகிறது. இதனால் வாரி வழங்க வேண்டுமென்ற உணர்வை அம்மனிதனிடத்திலே நோன்பு ஏற்படுத்துகின்றது. பொருளாதார ரீதியில் மனிதர்கள் வரவு செலவு விடயங்களைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்;ள முடியாத நிலை ஏற்படுகின்ற போது கடன்பட வேண்டிய நிலையோ, வட்டிக்குப் பணம் பெற வேண்டிய நிலையோ கொள்ளையடிக்க வேண்டிய நிலையோ உருவாகலாம். தனது வரவுக்கேற்ப செலவுகளை அமைத்துக் கொள்ளும் மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறான பிழையான முடிவுகளுக்கு ஒரு போதும் வரமாட்டான். அத்தகைய லௌகீக ரீதியான பயிற்சியையும் நோன்பு வழங்குகின்றது. எளிமையான முறையில் உண்கின்ற,உடுக்கின்ற, பயணங்களை அமைத்துக் கொள்கின்ற பயிற்சியை நோன்பு வழங்குகிறது. நோன்பு மனிதனின் உள்ளத்தில் தாராளத்தன்மையை வளர்த்து விடுகின்றது. அள்ளிக் கொடுக்க வேண்டுமென்ற உணர்வை அது ஓவ்வொருவரிடத்திலும் வளர்க்கின்றது.
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் சிறந்த கொடைவள்ளலாக இருந்தார்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானில் தன்னை சந்திக்கதின்ற வேளை மிகவும் சிறந்த கொடை வள்ளலாக இருப்பார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதம் முடியும் வரை ஒவ்வோர் இரவும் நபி(ஸல்) அவர்களை சநடதிப்பார்கள். அவர்களுக்கு அல்குர்ஆனை முழுமையாக ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளாரை சந்திக்கும் போது அவர்கள் படுவேகமாக வீசுகின்ற காற்றை விட விரைவாக தான தர்மம் செய்கின்ற வள்ளலாக இருப்பார்கள்.
வறுமை என்ற பயரங்கமான சமூக நோயிலிருந்து ஒருவனைக் காப்பதற்கு நோன்பு வழிவகுக்கின்றது . குப்ரிலிருந்தும் வறுமையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன் என நபியவர்கள் பிரார்த்திப்பார்கள். ஒருவன் வறுமை நிலைககுள்ளாகும் போது கடன் காரான் ஆகின்றான்.ஒருவன் கடன் காரனாகிவிட்டால் பேசினால் பொய் பேசலாம். வாக்களித்தால் மாறு செய்யலாம் என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள். இவ்வாறானோருக்கு உதவிகள் புரிந்து அவர்களையும் தம்மோடு இணைத்துச் செல்லும் பயிற்சியை நோன்பு வழங்குகிறது. எவர் ஒரு முஃமினின் இவ்வுலக கஷ்டமொன்றை நீக்கி வைக்கின்றாரோ அல்லாஹ் அவரை விட்டும் மறுமையின் கஷ்டமொன்றை நீக்கி வைப்பான். எவர் கஷ்டத்திலிருக்கும் ஒருவனுக்கு உதவுவாரோ அல்லாஹ் அவருக்கு உலகிலும் மறுமையிலும் கஷ்டங்களை நீக்கி வைத்து உதவுவான். மேலும் எவர் ஒரு முஸ்லிமின் மானத்தை மறைக்கின்றாரோ அல்லாஹ் அவரது மானத்தை ஈருலகிலும் மறைப்பான்.ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவியாக இருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதிவியாக இருக்கின்றான் என நபியவர்கள் குறித்துக் காட்டினார்கள்.
இப்தார் எனப்படுகின்ற துறத்தல் விடயத்தில் இஸ்லாம் கருணை உணர்வைத் தோற்றுவிக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். எவரொருவர் நோன்பாளியை நோனபு துறக்க வைத்தாரோ அவருக்கு நோன்பாளிக்கு கிடைப்பது போன்ற கூலி கிடைக்கும். என்றாலும் நோன்பாளியின் நற்கூலியில் எதுவும் குறைத்து விடடமாட்டாது.(திர்மிதி) பேரீத்தம் பழத் துண்டை தண்ணீரை ஒரு மனிதனுக்கு நோன்பு திறக்கக் கொடுப்பது கொண்டு தியாகத்தின் பண்புகளில் இஸ்லாம் அத்திவாரமிடுகிறது. அதற்கு பின்னால் அவன் உணவு உடைகள் என்பவற்றை மனிதனுக்கு வழங்கும் நிலைக்கு மாறிவிடுவான். பின்னர் தனது ஸகாத் பணத்தை எளியவர்களுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளவோ வருமானம் பெறக்கூடிய முயற்சிகளில் பயன்படுத்துவதற்கோ வழங்கிவிடுகிறான்.
நோன்பு நோற்று முடிந்து பெருநாளைக் கொண்டாடு முன்னர் மனித சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக பித்ரா என்ற கடமையினை நிறைவேற்றுகிறான். இவ்வாறான பயிற்சிகளால் மனித சமுதாயத்தின் மீது ஒருவித கருணை உணர்வேற்படுகிறது. வாழ்க்கையை நெறிப்படுத்தும் பொறுப்பை ஒரு மனிதன் அல்குர் ஆனிடம் கொடுத்து விட வேண்டுமென்ற நிலையையும் நோன்பு ஏற்படுத்திவிடுகிறது. நோன்பு காலங்களில் ஒரு மனிதன் கூடுதவான அளவில் பல்வேறு நபிலான தொழுகைகளைத் தொழுது வருவான். அவற்றில் பலமுறை அல்குர்ஆனை ஓதக்கூடிய நிலை ஏற்படுகிறது.அதுதவிர வேறு நேரங்களிலும் அல்குர்ஆனை அவன் படிப்பான். இதனால் உலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயங்களை எவ்வாறு அமைத்துக் கொள்வது. அவற்றில் எதிர் கொள்ளப்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற தடுமாற்ற நிலைகளிலிருந்து மீட்சி பெறுகின்றான். அரசியலிலும்,பொருளியலிலும்,ஒழுக்கவியலிலும் சமூக ஒழுங்கமைப்பிலும், குடும்ப வாழ்விலும், வர்த்தக கொடுக்கல் வாங்கல் முயற்சிகளிலும் அல்குர்ஆனே ஒரு மேலான வழிகாட்டியாக அமைகின்றது என்ற உணர்வைப் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்கு நோன்பு பயிற்சியளிக்கிள்றது.
உலகப் பொருட்கள் அனைத்தின் மீதும் ஒருவகைகக் கவர்ச்சியும் ஆசையும் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விடுவது இயல்பானது. இதனால் உலக இன்பங்களில் மூழ்கிக் கிடக்க வெண்டுமென்ற எண்ணம் அவனிலே ஏற்படும் போது அவன் சடவாதியாக மாறுவான். அந்நிலையிலிருந்து அவனைமாற்றி விட்டால் மட்டுமே மரணத்துக்குப் பின்னால் உள்ள வாழ்க்கைக்கு உலக வாழ்க்கையைப் பயன்படுத்தும் நிலை எற்படும்.இதற்காக நோன்பு ஒருபயிற்சியைக் கொடுக்கின்றது. உலகப் பொருட்களும்,உலக இன்பங்களும் கண்முன்னே வைக்கப்படுகின்ற போதும் அவனை எல்லாவற்றையும் தான் மட்டுமே அனுபவித்துக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு மிகைத்து விடுகின்ற போதிலும் எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிடக்கூடிய மனோ நிலையை நோன்பு ஒருவனிடத்திலே ஏற்படுத்துகின்றது. இதனால் உலகக் கவர்சிசிகளிலிருந்து அவன் பாதுகாக்கப்படுகின்றான். இவ்வாறான மேலான பயிறச்சிகளை தொடர்ந்து முப்பது நாட்களுக்கு நோன்பு வழங்குகின்றது. வேறு எந்தவொரு வணக்கமும் நீண்டதொரு காலப்பகுதிக்கு கடமையாக்கப்படவில்லை. நோன்பின் பயன்பாடுகளும்,அது மனித வாழ்வை நெறிப்படுத்துகின்ற முறையும் வித்தியாசமாக அமைந்திருப்பதினால் முப்பது நாட்களுக்கு அவ்வாறானதொரு தொடர்ந்த பயிற்சி அவசியமாகின்றது. நோன்பில் மனிதர்களுக்காக முகஸ்துதிக்கு செய்யப்படுகின்ற செயல்கள் காணப்படாததனால் தான் “மனிதனுடைய எல்லாச் செயல்களும் அவனுக்குரியவை நோன்பைத்தவிர அது எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என அல்லாஹ் கூறுகின்றான் .
இறைவா ! எங்கள் நோன்புகளை உன் திருப்திக்காகவே நோற்று நோன்பில் குரானுடான உறவு செழித்து எங்கள் வாழ்க்கையை ஈருலகிலும் செழிப்பாக்கி வைப்பாயாக !
ஆக்கம் : முஹம்மத் அக்ரம், நடைமுறைக்கேற்ற இஸ்லாம் பாகம் - 2

Sunday, August 16, 2009

நோன்பாளிகளே உங்களைத்தான்!

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.
சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும், அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான் விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’ தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே ஸஹரை, ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை தாமதிப்போமாக!
உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய காலங்களைவிட அதிகமாகவே உண்கின்றனர்.அதிகம் உண்ணுவது அல்லாஹ் விரும்பாத செயலாகும்.
‘லுஹர்’, ‘அஸர்’ போன்ற தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் சடைவு காட்டல், உறக்கம் அல்லது சோம்பல் போன்ற காரணங்களால் இது நிகழலாம்! இதைத் தவிர்க்க வேண்டும்.
புறம் பேசுதல், அடுத்தவர் குறை பேசுதல், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள், அடுத் தவரைக் குழப்புவதற்காகப் பொய் உரைத்தல் போன்ற தவறான நடத்தைகளை விட்டும் விலகா திருப்பது நோன்பின் பலனை அழித்து விடும்.
‘ரமழான்’ எனும் புனித மாதத்தின் கண்ணியமான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்தல். குறிப்பாக ‘ரமழான்’ இரவுகளில் விளையாட்டுக்காக விழித்திருத்தல், பாதையோரங்களில் விளையாடுதல், இதன் மூலம் பிறருக்குத் தொல்லை கொடுத்தல் நோன்பின் கூலிகளை வீணாக்கிவிடும்.
‘துஆ’, ‘திக்ர்’, ‘குர்ஆன்’ ஓதுதல், ‘நபிலான, சுன்னத்’தான தொழுகைகளைக் கடைபிடித்தல் என்பவற்றில் பொடுபோக்குக் காட்டுதல் ஒரு நோன்பாளியிடம் இருக்கக் கூடாது.
‘கியாமுல் லைல்’ தொழுகையில் பொடு போக்குக் காடடுவது ரமழானில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்களை விட்டும் தூரமாக்கிவிடும்.
‘ரமழான்’ இறுதிப் பத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும் என்றிருக்க, அதை பெருநாள் ஏற்பாட்டில் கழித்து பாழாக்கிவிடல்.
‘ரமழான்’ மாதத்தில் ஆரம்பத்தில் அதிக தொழுகையாளிகளையும், இபாதத்தாளிகளையும் காணலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல சோம்பல் அதிகரித்து இபாதத்தாளிகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம்! எனவே, இறுதிப்பத்து கூடுதல் முக்கியத்துவம் கொடுக் கப்பட வேண்டியது என்பதைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமாக!
சிலர் இரவு பூராக இபாதத்தில் ஈடுபட்டுவிட்டு ‘சுபஹ்’ த்தொழுகையை தவறவிட்டு விடுகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
‘ரமழானி’ல் தர்மம் செய்வது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசதியுள்ள பலரும் இதில் கஞ்சத்தனம் செய்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
‘ஸஹரு’டைய நேரம் ‘துஆ’வுக்கும், பாவ மன்னிப்புக்கும் ஏற்றதாக இருக்கும்போது, ‘இப் தாரு’டைய நேரம் ‘துஆ’வுக்குரியதாக இருக்கும் போது, இவ்விரு நேரங்களையும் உண்பதற் கும், பருகுவதற்குமுரிய நேரமாக மட்டும் கருதி ‘துஆ’, ‘இஸ்திஃபார்’ விடயத்தில் அலட்சியமாக இருத்தல்.
பள்ளிக்குச் செல்லும் பெண்கள் அலங்கார ஆடைகளுடனும், வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மனம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவதை தடுத்துள்ளார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
‘ஸகாதுல் பித்ரை’ மிகவும் முற்படுத்துதல், ‘பித்ரா’வின் பெயரில் பிச்சைக்கார சமூகத்தை உருவாக்குதல், வீடுதேடி வருபவர்களுக்கு சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு ‘ஸகாத்’ கொடுத்து விட்டதாக எண்ணிக் கொள்ளல் தண்டணைக்குரிய குற்றமாகும்.
எமது சமூகத்தவர்களில் பலர் புகைத்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். புகைத்தல் ஹராமானது என்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவு என்பதைக் கவனத்தில் கொள்வோமாக!
இவ்வாறான எமது குறைபாடுகளைக் களைந்து இந்த ‘ரமழானை’த் தூய முறையில் கழிக்க முனைவோமாக!

ஆக்கம் : இஸ்மாயில் ஸலபி நன்றி : உண்மை உதயம்

Saturday, August 15, 2009

ஆதிக்கத்தில்' இருந்து விடுதலை!

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு என்னும் சொற்பிரயோகங்களை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கவும் படிக்கவும் நேருகின்றது.எந்தவொரு பொருளாக இருப்பினும் அதனை அணுகுவதற்கு ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் இருக்கின்றது. அவ்வகையில் விடுதலை குறித்த இஸ்லாமிய கண்ணோட்டம் என்னவென இக்கட்டுரை ஆராய்கின்றது.

விடுதலை என்றால் என்ன?'தளை'யேதுமற்ற 'கட்டுப்பாடுகள்' எதுவுமில்லாத நிலையே 'விடுதலை'யாகும். சிறையில் அடைபட்டுக் கிடப்போருக்கு விடுதலை வேண்டும் என்கிறோம். துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கவேண்டும்;;, விடுவிக்கப்படவேண்டும் என்கிறோம். கொத்தடிமைகளாக இருப்போரை 'விடுவிக்கிறோம்'.பரிபூரண சுதந்திரம் என்பதும் நிறைந்த விடுதலை என்பதும் மனித இயல்புக்கு மாற்றமான விஷயங்களாகும்.

'எல்லாவகையிலும்' விடுதலை பெற்றவனாக ஒரு மனிதனையும் நீங்கள் காண இயலாது.மனிதன் தனித்து வாழும் இயல்பினன் அல்லன். சமூகமாக வாழும் உயிரினமாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான சமூகம் என்றாலேயே ஒருசில கட்டு;ப்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கும்.சமூகம் என்னும் அடிப்படையில் எத்தகைய கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்னும் போதனையை வழங்கும் இறைவனின் வழிகாட்டுதலே இஸ்லாம் ஆகும்.இவ்வடிப்படையில் 'அந்நியர் ஆதிக்கம்' என்னும் 'அடிமைத்தளை'யிலிருந்து அரசியல் விடுதலை பெறுவதை ;சுதந்திரம்' 'விடுதலை' என்றெல்லாம் கூறுகிறோம். அரசியல் விடுதலை என்னும் சொற்பிரயோகம் கூட சரியானதுதானா எனத் தெரியவில்லை. ஏனெனில் ஆட்சியதிகாரத்திலில் இருந்து 'அந்நியர்' அகலுகின்றனர். 'ஆதிக்கம்' அப்படியேதான் இருக்கின்றது.

எல்லொருக்குமான சமத்துவம் என்பதுதான் ஜனநாயகத்தின் உயிரோட்டம் என பொதுவாக சொல்லப்படுகின்றது. நல்ல கொள்கைதான்! நடைமுறையில் சாத்தியப்படுமா என்பதை பார்க்கலாம்.உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் என்னுடைய சகோதரர்கள் என்னும் உணர்வு உளப்பூர்வமாக நிறைந்திருந்தால்தான் இது நடைமுறையில் சாத்தியப்படும். இல்லையென்றால் வெறும் ஏட்டளவில் நின்று இளித்துக் கொண்டிருக்கும்.

ஆட்சி யாருடைய கரங்களில் உள்ளதோ அவர்கள் அதனை தமக்கு சாதகமாகத்தான் பயன்படுத்துவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். தம்முடைய சொந்த வாழ்க்கையின் வளத்திற்கும் தமது இனத்தின் முன்னேற்றத்திற்கும் ஜாதியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்ளூ கொள்கிறார்கள். அனைவருக்குமான பொதுவிதி இது. விதிவிலக்கு என்பதே கிடையாது. அப்பழுக்கற்ற மாமனிதர், கறைபடாத கரங்களைக் கொண்டவர், கர்மவீரர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட யாருக்குமே தகுதியில்லை. அங்ஙனம் வர்ணிக்கப்படுவோரை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினால் அவர்களுடைய நேர்மையும் பித்தளையாய் இளிக்கும்.

என்னுடைய ஜாதி, என் மக்கள் என சிந்திக்காத அமைச்சர் ஒருவர் கூட கிடையாது. மக்கள் பணத்தில் ஊழல் செய்து வளமடையாத அமைச்சர் ஒருவர் கூட கிடையாது என்பதே உண்மை.இந்தியா விடுதலை பெற்றபிறகு என்னவானது? என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். 'அந்நியரிடமிருந்து' ஆட்சி கைமாறியது. தென்னக மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்னும் குற்றச்சாட்டு வலுவாய் எழுந்தது. வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதோ, இப்போது மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் பற்றி 'இது ஏதோ மேற்குவங்க பட்ஜெட் போல இருக்கின்றது' எனக் கூறப்படுகின்றதா? இல்லையா?ஆக, ஆதிக்கம் என்பது யாரிடம் இருந்தாலும் அதனை அவர்கள் தமக்காகவும் தம்முடைய இனத்திற்காகவும் தம்முடைய ஜாதிக்காகவும் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். இதில் சந்தேகமே இல்லை.

சொந்த இனத்தின் நலனை காவு கொடுத்துவிட்டு தனது குடும்பத்தின் மேன்மைக்காக இயலாத நிலையிலும் அயராது உழைக்கும் காட்சிகளையும் நாம் கண்டுவருகிறோம்.ரோமானியத்தளபதியிடம் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமியப் படைகளின் தரப்பிலிருந்து 'ரபீஆ இப்னு ஆமிர்' என்னும் நபித்தோழர் சென்றார். படையெடுத்து வந்துள்ள முஸ்லிம்களைப் பார்த்தால் நாடு பிடிக்கும் நோக்கிலோ பொருளீட்டும் எண்ணத்திலோ வந்திருப்பதாகத் தெரியவில்லை. எந்நோக்கத்திற்காக வந்திருக்கிறார்கள் என்பது ரோமானிய படைத்தளபதியான ருஸ்துமுக்கு தெரியவில்லை.'எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?' என அவர் வினவினார்.தெளிவாக சொற்களி;ல் இஸ்லாமியர்கள் வந்த நோக்கத்தை ரபீஆ எடுத்துரைத்தார். வரலாறு அதனை பொன்னெழுத்துகளில் பதிவு செய்து வைத்துள்ளது.'மனிதர்களை மனிதர்களுடைய ஆதிக்கத்திலிருந்து மீட்டு ஓரிறைவனின் ஆதிக்கத்தின் கீழ்க் கொணர்வதற்காக வந்துள்ளோம்'.

ஆதிக்கம் என்பதே ஒருவகையான அடிமைத்தளை. அதிலிருநது மீள வேண்டுமானால் ஓரிறைவனை ஏற்றுக்கொண்டு அவன் ஒருவனுக்கு மட்டுமே கட்டுப்படவேண்டும். இதற்காகத்தான் இஸ்லாம் வந்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் இறைத்தூதர் அனுப்பப்பட்டார்.الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالإِنْجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَآئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالأَغْلاَلَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُواْ بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُواْ النُّورَ الَّذِيَ أُنزِلَ مَعَهُ أُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ'எழுதப்படிக்கத் தெரியாமல் அனுப்பப்பட்ட தூதரைப் பின்பற்றுகிறார்களோ தம்முடைய வேதங்களான தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.நன்மையைக் குறித்து அவர் ஏவுகிறார்ள தீமைகளை விட்டும் தடுக்கிறார்ள தூய்மையானவற்றை ஆகுமானதாக ஆக்குகிறார்ள கேடுகெட்டவற்றை அசுத்தத்தை கூடாதெனத் தடுக்கிறார்ள அவர்கள் மீது அழுத்திக்கிடக்கும் பளுவான சுமைகளையும் விலங்குகளையும் அகற்றுகிறார்.அவரை நம்பி ஏற்றுக்கொண்டோரும் அவரைக் கண்ணியப்படுத்தியோரும் அவருக்கு துணை நின்றோரும் அவரைப் பின்பற்றியோரும் அவரோடு அனுப்பப்பட்டுள்ள பேரொளியைப் பின்பற்றியோரும் வெற்றிபெற்ற மக்களாவர்.'(அல்குர்ஆன் 7:157)

இறைவனின் சட்டதிட்டங்களை விட்டுவிட்டு மதக்குருமார்களும் சமூகத்தலைவர்களும் தமது இஷ்டப்படி சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர். அவையே இங்கு 'தளைகள்' 'விலங்குகள்' எனக் குறிப்பிடப் படுகின்றன. அவை அனைத்தையும் இந்தத்தூதர் அகற்றிவிடுவார். அவற்றிலிருந்து அவர்களை விடுவிப்பார். ஒரேயோர் இறைவனின் ஆதிக்கத்தின் கீழாக அவர்களைக் கொண்டுவருவார்.படைத்த இறைவனின் ஆதிக்கத்தை விட்டுவிட்டு வேறு எந்த ஆதிக்கத்தின் கீழ் மனிதன் இருந்தாலும் அவன் 'சுதந்திரமானவனாகத்' திகழவே முடியாது. தளைகளாகவும் விலங்குகளாகவும் மாறி அந்த ஆதிக்கங்கள் அவனை வாட்டிக் கொண்டிருக்கும். நுகத்தடியாய் மாறி அவனுடைய கழுத்தில் சுமையாய் அழுத்திக் கொண்டிருக்கும்.பாரம் சுமக்கும் மாடுகள் உடல்வதைகளை அனுபவிப்பதோடு சிந்தனை வதைகளுக்கும் ஆளாகின்றன. சுமக்கவே தாம் பிறந்துள்ளோம் என எண்ணத் தலைப்படுகின்றன. அடிமைச்சமூகம் உடலளவில் அடிமைப்பட்டுக் கிடப்பதோடு சிந்தனை அளவிலும் அடிமைப்பட்டுக் கிடக்கும்.மோதித் தோற்றவர்களும் மிதிபட்டுக் கிடப்பவர்களும் 'எப்படி' யோசிக்கவேண்டும் என்பதையும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்துவோரே தீர்மானிக்கிறார்கள்.

வரலாற்றின் பின்பக்க சாளரத்தைக் கொஞ்சம் திறந்து பார்த்துவிட்டு 'இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு' என்னும் விஷயத்திற்கு வரவேண்டும். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கம் வரை முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் ஐரோப்பியா வென்றுகொண்டே சென்றது. பிரிட்டனும் பிரான்ஸும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள நாடுகள் அனைத்தையும் பங்குபோட்டுக் கொண்டன. எஞ்சியவற்றை பிற நாடுகள் பிரித்துக்கொண்டன. காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட மொராக்கோ, டுனிஸியா, எகிப்து, லிபியா, இந்தியா, துருக்கி, ஃபலஸ்தீன், அரேபிய வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள் என அனைத்து நாடுகளும் முஸ்லிம் நாடுகளே!

தொலைத்தவன்தானே தேடி அலைவான்? இதுதானே இயற்கை? அதுவும் உலகியல் அருட்கொடைகளிலேயே சிறந்த அருட்கொடையான ஆட்சியதிகாரத்தை இழந்தவர்கள் வெறுமனெ கைகளைக் கட்டிக்கொண்டா உட்கார்ந்திருப்பார்கள்? எகிப்து, இந்தியா, லிபியா, செசன்யா என அனைத்து நிலங்களிலும் முஸ்லிம்கள் வல்லாதிக்கத்தை எதிர்த்துப் போராடியதற்கு இதுதான் காரணம்.அமைதியையும் நிம்மதியையும் உலகிற்கே அறிமுகப்படுத்திய இஸ்லாமிய ஆட்சியை அவர்கள் தொலைத்துவிட்டதுதான் காரணம்.தேசியவாதத்தை இலக்கணமாக வைத்துக்கொண்டு 'முஸ்லிம்கள் அனைவரும் இயல்பாகவே விடுதலை வேட்கையைக் கொண்டவர்கள்' என்னும் தவறான முடிவிற்கு நாம் வந்துவிடக் கூடாது. அது வரலாற்றுச் சறுக்கலாக ஆகிவிடும். கெடுவாய்ப்பாக, அந்தச் சறுக்கல் பாதையில்தான் இன்று இந்திய இஸ்லாமியர்கள் வெகுவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

சையத் அஹ்மத்; ஷஹீத், ஷாஹ் இஸ்மாஈல் ஷஹீத் போன்றோர் இந்தியாவில் படையெடுத்த அந்நியரான ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்கள் என நாம் நம்பினாலோ பதிவு செய்து வைத்தாலோ அவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாக ஆகிவிடும்.கிலாஃபத்தை வீழ்த்திய கொடுங்கோலரான ஆங்கிலேயரை எதிர்த்தே அவர்கள் போரிட்டார்கள். இதுதான் உண்மை! பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடும் முன் துருக்கி கலீஃபாவின் அனுமதியை திப்புஸுல்தான் பெற்றார் என்றும் ஒரு தகவல் உள்ளது.வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள்.

அவர்கள் எழுதிக்குவித்துள்ள பொய்யான வரலாற்றில் நாம் இடம்பெறவில்லை என்பதற்காக வருத்தப்படுகின்ற நாம் தாழ்வு மனப்பான்மைக்கு பலியாகிப் போய் நம் அளவிற்கு நாமும் பொய்யான வரலாற்றுத் தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி? இதுதான் 'மாற்று' வரலாறோ?ஆக, உண்மையான விடுதலை உலக மக்களுக்கு பெற்றுத் தருகின்ற உன்னதப் பணியை செய்யவேண்டிய சமூகமாக இஸ்லாமிய சமூகம் உள்ளது. அதற்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. விடுதலை என்றால் என்ன? என்பதையே விளங்காமல் தவறான திசைகளில் தாறுமாறாகப் போய்க்கொண்டிருக்கும் உலக மக்களைத் தடுத்து நிறுத்தி சரியான திசையை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம்.செய்தாகவேண்டிய பொறுப்பைக் குறித்து நாளை இறைவனுக்கு முன்னால் நின்று பதில் அளிக்கவேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆக்கம் : அப்துர் ரஹ்மான் உமரி