Tuesday, June 14, 2016

ரமழானில் கையேந்துவோம்

ரமழானில் கையேந்துவோம்
-அபூ அத்திய்யா

ரமழானை முஸ்லீம்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதற்கான பல்வேறு காரணங்களில் ஒன்று இந்த அழகிய மாதத்தில் நம்முடைய பிராத்தனைகளை கருணையாளன் ஏற்று கொள்வான் எனும் நம்பிக்கையாகும். எத்தகைய நிலையில் உள்ள மனிதராயினும் இறைவனிடம் பிராத்திக்க தேவையுடையாராகவே இருக்கிறார் என்பது மறுக்க முடியா உண்மை.

துஆக்களின் பட்டியல்

செருப்பின் வார் அறுந்தாலும் இறைவனிடம் கேட்க கடமைப்பட்ட முஸ்லீமுக்கு கேட்க நிறைய துஆக்கள் குர் ஆன் மற்றும் சுன்னாவில் உள்ளன. அவற்றில் இருந்து சில துஆக்களை இங்கு பட்டியலிடுகிறோம். இந்த துஆக்களில் சிலவற்றை பிரத்யேகமாக குறிப்பிட்ட நேரத்திலும் சிலவற்றை எப்போதும் கேட்கலாம்.

ரமழானுக்கான பிரத்யேக துஆக்கள்

ரமழானுக்கான இரண்டு ஆதாரபூர்வமான துஆக்கள் பின்வருமாறு,

துஆ 1 : இப்தாரில் பிஸ்மில்லாஹ் சொல்லி நோன்பை திறந்து பின் கீழ்காணும் துஆவை ஓதலாம்.
தஹபழ்ழம உ வப் தல்லதில் உரூகு வ தபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் (தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, இறைவன் நாடினால் கூலியும் கிடைத்து விடும்)

துஆ 2 : ரமழானின் கடைசி பத்து நாட்களில் ஓதும் துஆ
அல்லாஹும்ம இன்னக்க அபுவ்வன் துஹிப்புல் அப்வ பவ அன்னி
இறைவா நீ தான் மிகச் சிறந்த மன்னிப்பாளன், மன்னிப்பதை விரும்பக் கூடியவன், என்னை மன்னிப்பாயாக.

ஆழமான பிராத்தனைக்கு அழகிய யோசனைகள்

சிலருக்கு நீண்ட நேரம் பிராத்திக்க ஆசை இருந்தாலும் என்ன கேட்க வேண்டும் என்று தெரியாது. எனவே நமது துஆவில் கீழ்காண்பவற்றை நினைவுபடுத்தி ஆழமாக துஆ கேட்கலாம். நம் துஆக்களில் கருமித்தனம் காட்டாமல் விசாலாமாக இவர்களுக்கும் சேர்த்து மனமுருகி பிராத்திப்போம்.

  • சிரியா, ஈராக், பலஸ்தீனம், ஏமன், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் இன்னும் உலகில் அல்லுறும் முஸ்லீம் உம்மத்துக்காக
  • விதவைகள்
  • அநாதை குழந்தைகள்
  • கருத்தரிக்க முடியாமல் அவதியுறும் தம்பதியினர்
  • திருமணம் தள்ளிப்போகும் பெண்கள் / ஆண்கள்
  • கடும் நோயால் அவதிப்படும் முஸ்லீம்கள்
  • கடன் தொல்லையில் உள்ள முஸ்லீம்கள்
  • கப்ர், தஜ்ஜால், நரக நெருப்பின் வேதனையிலிருந்து பாதுகாப்பு
  • சூரா வாகியா குறிப்பிடும் ஸாபிகூன்களாக திகழ
  • நியாயத்தீர்ப்பு நாளில் அர்ஷின் நிழலில் இருக்கும் பாக்கியத்திற்கு
  • கவ்தர் தடாகத்தில் உத்தம தூதர் (ஸல்) கைகளில் இருந்து நீர் அருந்த
  • முன் சென்ற தலைமுறைக்காக
  • நம் கணவன் / மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவுகளுக்காக
  • யாரிடமும் கையேந்தா நிலைக்காக
  • செல்வத்தில் பரக்கத் / தன்னிறைவு அடைய
  • இறை பாதையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப், உஸ்மான் (ரலி)  போன்று அர்ப்பணிக்கும் செல்வந்தனாய் திகழ
  • கருமித்தனத்திலிருந்து பாதுகாப்பு பெற
  • குரோதம், பொறாமை, கபடம், வெறுப்பு போன்ற கசடுகளிலிருந்து நீங்கிய தூய்மையான நப்ஸுக்காக
  • சிறைச்சாலைகளில் வாடும் சிறைவாசிகளின் விரைவான விடுதலைக்காக மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நல வாழ்வுக்காக
  • ஒட்டு மொத்த மனித குலத்தின் நேர்வழிக்காக
  • கல்வி / அறிவில் சிறந்து விளங்க
  • விரும்பிய (ஹலாலான) இலக்குகளை அடைய
  • ஜன்னத்துல் பிர்தவ்ஸில் வீற்றிருக்க
  • சுவனத்தில் பெருமானார் (ஸல்) மற்றும் ஸஹாபாக்கள் அண்டை வீட்டாராய் அமைய
  • விதியில் உள்ள கடினங்களை அருளாக மாற்ற
  • இஸ்லாத்தை நிலை நாட்டும் பணியில் நிலைகுலையாமல் இருக்கவும், எச்சூழலிலும் பணிவுடன் இருக்க
  • பாதையில் ஏற்படும் தடங்கல்களை எதிர்கொள்ளும் மனோதிடத்திற்காக
  • தன்னுடைய மற்றும் விருப்பமானவர்களின் உடல் நலனுக்காக
  • மக்கா மதீனாவுக்கு ஹஜ் மற்றும் உம்ரா செல்ல
  • உளவியல் சிக்கல்களில் உழலும் முஸ்லீம்கள் மீள
  • கேன்சர் உள்ளிட்ட தீரா நோய்களில் உழலும் நோயாளிகளுக்காக
  • கப்ர் மற்றும் மரண வேதனை எளிதாக்கப்பட
  • சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை ஒளியை விட விரைவாக கடக்க
  • சூனியம் மற்றும் கண்ணேறிலிருந்து பாதுகாப்பு பெற
  • குடும்ப உறவுகள் வலுப்பெறவும், நேசமும் பாசமும் பூத்து குலுங்கவும்
  • ஞானம் நிறைந்த மனிதர்களாக திகழவும்
  • ஸாலிஹான முறையில் பிள்ளைகளை வளர்த்தெடுக்கவும்
  • சிந்தனை ரீதீயிலான குழப்பங்களிலிருந்து தெளிவாகவும்
  • கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் ஓரணியில் ஒற்றுமையாய் விளங்கவும்
  • மண்ணில் விதைக்கப்படும் முன் ஒரு நாளாவது கிலாபாவின் நிழலில் வாழவும்


பிராத்திக்கும் போது அல் வலி, அல் கரீப், அல் வகீல் எனும் இறைவனின் பண்புகளை சொல்லி பிராத்திப்பது சிறப்பானது. இறைவன் நமக்கு புரிந்துள்ள அருட்கொடைகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து, முழு நம்பிக்கையோடு கையேந்தினால் அல்லாஹ் வெறுங்கையுடன் தன் அடியானை திருப்பி அனுப்ப வெட்கப்படுகிறான். பிராத்திப்பதற்கு ஆதாரபூர்வமான துஆக்கள் குரான் மற்றும் சுன்னாவில் நிரம்ப கிடைக்கின்றன. ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட துஆக்கள் நம் மனனம் மற்றும் பிராத்திப்பதற்காக பின் வருமாறு:

1.ஈருலக நன்மைக்காக

எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201

யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! (அஹ்மத்)

யா அல்லாஹ்! தீர்ப்பு நேரத்தில் (நாளில்) வெற்றியையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் நபிமார்களுடன் இருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஸஹீஹ் இப்னு குஸைமா)

2.சுமையை சுமத்தாதிருக்கவும் காபிர்களுக்கு எதிரான வெற்றிக்கும்

எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் 

குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை 

போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் 

தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் 

பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் 

பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி 

செய்தருள்வாயாக! 2:286

3.நேர்வழியிலிருந்து தடம் புரளாமல் இருக்க

ங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து

தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை 

அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8

உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை 

உறுதிப்படுத்துவாயாக! (திர்மிதி)

4. முதல் மனிதன் கேட்ட முதல் துஆ

எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம்நீ எங்களை மன்னித்துக் 

கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23

யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் 

உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை 

மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு 

வழங்குபவன். கருணை பொழிபவன். (புகாரி, முஸ்லிம்) - (முதல் துஆவை ஒத்திருப்பதால் இங்கு 

தொகுக்கப்பட்டுள்ளது)

5. தொழுகை நிலை நிறுத்தவும் பிராத்தனைகள் ஏற்கப்படவும்

என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய 

சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் 

கொள்வாயாக!. 14:40

6. கல்வி ஞானத்துக்காக

என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! 20-114

7. ஸாலிஹான மனைவி மற்றும் வாரிசுகளுக்காக

எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் 

கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக 

(வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74

8. சகோதரத்துவத்துக்கான துஆ

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய 

சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய 

இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க 

இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். 59:10

9. துக்கம், கவலையின் போது
அல்லாஹ்! துக்கம் கவலை இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் கடன் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி7/158
யா அல்லாஹ்! இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)
10. அனைத்து விதமான பாதுகாப்புக்கும் பிழை பொறுத்தலுக்கும்
யா அல்லாஹ்! நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் இரகசியமாய் செய்தவற்றையும் பகிரங்கமாக செய்தவற்றையும் எல்லை கடந்து அதிகப்படியாகச் செய்தவற்றையும் மேலும் எந்தப் பிழைகளை நீ என்னை விட அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப்பிழைகளையும் நீ மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (முஸ்லிம்)
யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.(அபூதாவூத்)

குறிப்பு :
1. அரபி மூலம் பதிப்பதில் தொழில் நுட்ப சிக்கல் ஏற்பட்டதால் அரபி மூலத்தை குரானில் தேடி மனனம் செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்..
2. பிராத்தனை சம்பந்தமான இதே போல் உள்ள கட்டுரை ஆங்கிலத்தில் அனுப்பித் தந்த என்னருமை சகோதரனுக்கு ஜஸாகுமுல்லாஹ் ஹைரா. அதை படித்ததன் தாக்கமாக தமிழில் நமக்கேற்றவாறு இதை எழுதியுள்ளேன்.
3. இறை கிருபை பொழியும் ரமலானில் இதை மனனம் செய்வதோடு நம் பிராத்தனையில் பயன்படுத்த முழு முயற்சி செய்வோம்.
4. ஆங்கிலத்தில் இதை போன்ற கட்டுரையை எழுதியவர், இதை பார்வேர்டு செய்தவர், தமிழில் நம் நடைக்கேற்ப மாற்றி எழுதிய எனக்கும் உங்கள் துஆக்களில் மறவாமல் இடம் கொடுங்கள்.

No comments: