Friday, May 21, 2010

ரபீஆ பின் கஅப் அல்-அஸ்லமீ

மதீனாவிற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புலம்பெயர்ந்ததும் பள்ளிவாசல் ஒன்று கட்டினார்கள். அந்தப் பள்ளிவாசலின் பின்புறத்தின் வடபகுதியில் சற்றே உயர்ந்த ஓர் வெற்றிடம் இருந்தது. அதன் பெயர் அஸ்ஸுஃப்பா.
பள்ளிவாசலின் பின்புறச் சுவரை ஒட்டிய திண்ணை, மேலே நிழலுக்கான ஒரு தடுப்பு - அதுதான் அஸ்ஸுஃப்பா. இங்கு அனாதரவான முஸ்லிம் ஆண்கள் தங்கி, வாழ்ந்து வந்தார்கள். தொடக்கத்தில் மக்காவை விட்டு வெளியேறி, மதீனா வந்திருந்த முஹாஜிர்கள்தாம் அங்குத் தங்கியிருந்தனர். பின்னர், வசதி வாய்ப்பில்லாத மற்ற முஸ்லிம்கள் சிலரும் அங்கு வந்து தங்கிவிட்டார்கள். அனைவரும் ஏழைகள். குடும்பம், உறவு என்று எதுவும் அவர்களுக்கு அமைந்திருக்கவில்லை. ஸுஃப்பாதான் அவர்களுக்குத் திண்ணை, பள்ளிக்கூடம், வீடு எல்லாமே. அவர்களெல்லாம் "அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா - أصحاب الصفة" என்று அழைக்கப்பட்டனர் - அதாவது திண்ணைத் தோழர்கள்.
சுவர் போன்ற தடுப்பு என்று எதுவும் இல்லாததால் எப்பொழுதும் காயும் வெயில், எப்பொழுதாவது பெய்யும் மழை, குளிர்காலத்தின் கடுங்குளிர், புழுதிக் காற்று என்று அனைத்துப் பொழுதும் அங்குதான் அவர்கள் வாழ்க்கை. மானம் மறைக்கும் அளவு மட்டுமே உடை. மற்றவர்கள் அவ்வப்போது கொண்டு வந்து அளிக்கும் உணவுதான் ஆகாரம் என்று அங்கு இஸ்லாத்தைப் பயின்று கொண்டிருந்தனர் அவர்கள். முஹம்மது நபியும் மற்றத் தோழர்களும் உணவு கிடைத்தால் இவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வேறு சிலர் அவ்வப்போது பேரீச்சம் பழக்கொத்தைக் கொண்டுவந்து அங்கு நடப்பட்டிருக்கும் ஒரு தூணில் மாட்டிவிட்டுச் செல்வார்கள். இவர்களும் ஆளுக்கு ஒன்றோ, இரண்டோ சாப்பிட்டுப் பசியாறிக் கொள்வார்கள்.
சில சமயங்களில் உணவென்று எதுவும் இல்லாமல் நாட்கள் கழியும். பசியில் அவர்களது வாட்டம் எந்தளவு இருக்குமென்றால், தொழுகையின்போது மயக்கமுற்றும் விழுந்துவிடுவார்கள். சரி இப்படியெல்லாம் வாடும் இவர்கள், தொழுகை, வழிபாடு என்பது போலான ஓர் ஆன்மிக வாழ்க்கையை மட்டும் சார்ந்தவர்களோ, துறவி போன்றவர்களோ என்றால் அப்படியெல்லாம் இல்லை. போர் என்று அறிவிப்பு வந்தால், "படைக்கு முந்தி" என்று துள்ளியெழுந்து வந்து நின்றார்கள்.
அந்தத் திண்ணைப் பல்கலையில் பயின்று வந்த மேன்மக்கள் ஏராளம். நமக்குப் பரிச்சயமான கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களில் ஒருவர். பிலால், அபூஹுரைரா போன்ற புகழ்பெற்ற தோழர்களும் ஸுஃப்பாவாசிகள்தாம். பிற்காலத்தில் முதலாவது கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்ரு (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மானும் இந்தத் திண்ணையில் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்; வளர்ந்தவர். இவர்களுக்கு நபியவர்களின் அண்மை பெரும் பேறாய்த் தோன்றியது. விண்ணிலிருந்து இறங்கிய ஞானத்தை, முஹம்மது நபியின் நேரடிப் பரிமாறுதலில் பசி தீர்த்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள். அதற்காகக் காலமெல்லாம் அங்கேயே கிடந்து உழலத் தயாராயிருந்த மாபெரும் உன்னதர்களின் கூட்டம் அது.
பின்னர் காணப்போகும் மற்றத் தோழர்களின் வாழ்க்கையை உணரவும் அவசியமென்பதால்தான் இங்கு ஸுஃப்பா பற்றி இந்த அறிமுகம். ஆக, இத்தகையப் பல்கலையின் மற்றொரு முக்கிய மாணவர் ரபீஆ பின் கஅப்.
அப்போது இளவயதுச் சிறுவர் ரபீஆ. முதல் பார்வையில் வெகுசிலரை நமக்குப் பிடித்துப் போகும். அதேபோல் சிலரைப் பார்க்கும்போதே தகுந்த காரணமின்றி நமக்கு வெறுப்பேற்படும். முதன் முதலாய் முஹம்மது நபியைப் பார்த்ததுமே கவர்ந்திழுக்கப்பட்டார் ரபீஆ. உள்ளத்தை இஸ்லாமிய ஆன்மீகம் ஆக்கிரமிக்க, அவருக்கு உள்ளம் கவர்ந்த தலைவன் ஆகிப் போனார் முஹம்மது நபி. வேறு எது பற்றிய சிந்தனையும் இல்லை. சதா சர்வ காலமும் அல்லாஹ்வின் தூதரைப் பற்றிய எண்ணமும் பிரமிப்புமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தன. அந்தளவுக்கு அந்தத் தலைவர்மீது அவரது மதிப்பும் மரியாதையும் மிகைத்தது. அந்த அவஸ்தையை அவரால் தாங்க முடியவில்லை. மனம் இறுதியாகக் கூறியது:
"ஏன் இந்தத் தொல்லை?. அவருக்குப் பணிவிடை செய்ய உன்னை ஒப்படைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை ஏன் நீ இலேசாக்கிக் கொள்ளக் கூடாது? போ அல்லாஹ்வின் தூதரிடம். பணிவிடை செய்யும் ஊழியனாய் உன்னை நீ அவருக்கு அர்ப்பணிப்பதாய்ச் சொல். அவர் மட்டும் ஒப்புக்கொண்டால், அவரைக் கண்ணாரக் கண்டுகொண்டே இருக்கும் ஆனந்தம் உனக்குக் கிட்டும். அவரது அன்பையும் அரவணைப்பையும் அடையலாம். இம்மை-மறுமையின் நற்பேறு உனதாகும்".
வருணிக்க எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல இவை. வரலாற்றுக் குறிப்புகள் அவரது வாழ்க்கையை அவரது வார்த்தைகளிலேயே பதிவு செய்து வைத்துள்ளன.
இந்த எண்ணம் தோன்றியவுடன் தாமதிக்கவில்லை ரபீஆ. நபியவர்களை விரைந்து சென்று சந்தித்து, தன் எண்ணத்தை வெளியிட்டார். பேராவலிலும் நம்பிக்கையிலும் அவர் மனது படபடத்தது. நம்பிக்கை வீண் போகவில்லை, ஏற்றுக் கொண்டார் முஹம்மது நபி. உலகின் தலைசிறந்த பல்கலையின் மாணவனாக நேரடி அனுமதி கிடைத்துவிட்டது ரபீஆவிற்கு. சரி, தங்கிப் பயில விடுதி? கிடைத்தது திண்ணை. திண்ணைத் தோழரானார் ரபீஆ பின் கஅப், ரலியல்லாஹு அன்ஹு!
நிழல்போல் தொடர்வது என்று உவமைக்குச் சொல்வோமே, அப்படி நபிநிழலாகிப் போனார் ரபீஆ. நபியவர்களுடன் நெருக்கமாகத் தங்கி, எங்கெல்லாம் அவர் சென்றாரோ அப்படியே இவர் பின்தொடர்ந்தார். நபியவர்கள் இவரைப் பார்த்தாலே போதும்; இவர் எழுந்து அவரிடம் ஓடினார். அவரது எந்த அலுவலாக இருந்தாலும் சரி, ஏதாவது செய்ய வேண்டுமென்றாலும் சரி, விரைந்து சென்று உதவுவது ரபீஆவின் இயல்பாகி விட்டது. சுருக்கமாக, தன்னை முழுக்க முற்றும் அர்ப்பணித்துக் கொண்ட பணிவிடை.
வேறு எதுபற்றிய சிந்தனையும் இல்லை. உலகம் பற்றிய அக்கறை இல்லை. அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இரத்தமும் சதையுமாய் தனது கண்ணெதிரே நடமாடும் நபியும்தான் அவரது உடல், ஆவி, மூச்சு அனைத்திலும் வியாபித்திருந்தனர்.
தேடித் தேடி பணிவிடை செய்வதாக நாள்முழுவதும் கழியும். நாள் முடிந்து இரவின் இறுதி இஷாத் தொழுகை முடிந்து நபியவர்கள் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். அடுத்து என்ன செய்வது? முதலில் திரும்பி விடலாம் என்று நினைப்பார். பின்னர் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றும்:
"ரபீஆ ஏன் போகிறாய்? அனேகமாய் இரவில் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்படலாம்" அவ்வளவுதான். இந்த எண்ணம் தோன்றியவுடன் நபியவர்களது வீட்டு வாசலிலேயே அமர்ந்து விடுவார். இறைவனின் மாபெரும் நபி, அரண்மனை, மாளிகை, சேவகர்கள் என்பதெல்லாம் எதுவுமே இல்லாமல் தனது எளிய குடிலுக்குள் புகுந்து கொள்ள, வாயிற்படியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு தோழர்.
தனது அந்த அனுபவத்தை ரபீஆ விவரிக்கும் போது, "நபியவர்கள் இரவில் எழுந்து நின்று தொழுது கொள்வார்கள். சில வேளைகளில் அவர்கள் சூரா அல்-ஃபாத்திஹா ஓதுவதைக் கேட்பேன். அதை அவர்கள் இரவின் பெரும்பாலான பகுதியில் தொடர்ந்து ஓதிக் கொண்டே இருப்பார்கள். சிலவேளை 'தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்' என்பதை சூரா அல்-ஃபாத்திஹாவை விட அதிகமாக உச்சரிப்பார்கள், அதைக் கேட்டுக் கொண்டே அப்படியே அசந்து உறங்கி விடுவேன்"
இப்படியாக அவரது காலம் கழிந்து கொண்டிருந்தது.
தனக்கு உபகாரம் செய்பவர்களுக்கு அதைவிட அதிக அளவில் திருப்பி நல்லுபகாரம் செய்வது நபியவர்களின் இயல்பு. தனது நன்றியை அவர்கள் அப்படித்தான் வெளிப்படுத்துவார்கள். ரபீஆவின் சேவையைப் பாராட்டி எப்படி வெகுமதி அளிப்பது? ஒருநாள் அவரிடம் வந்தார்கள் முஹம்மது நபி.
"ரபீஆ!" என்று அழைக்க,
"இதோ உங்கள் சேவைக்கும் கீழ்படிதலுக்கும் தயாராக உள்ளேன் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு அளவற்ற நற்பேறுகளை நல்குவானாக!" என்று பதிலளித்தார் ரபீஆ.
சற்று கவனிக்க வேண்டும். வெறும் பெயர் சொல்லி அழைக்கிறார் நபி. "செவிமடுத்தேன், அடிபணிந்தேன்" என்று ஓடி வருகிறார் தோழர். குர்ஆனின் வாசகங்கள் மூச்சாய் ஓடிக்கொண்டிருந்த இதயங்கள் அவை.
"நான் உனக்கு அளிக்கும்படியாய் ஏதாவது கேளேன்" என்றார் முஹம்மது நபி.
சற்று சிந்தனையில் மூழ்கியவர், "எனக்குச் சற்று அவகாசம் அளியுங்கள் அல்லாஹ்வின் தூதரே. எனக்கு என்ன தேவை என்று யோசித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்குத் தெரிவிப்பேன், இன்ஷா அல்லாஹ்!"
"நல்லது"
அந்தச் சமயத்தில் ஏழ்மையான நிலையில் இருந்த இளைஞர் ரபீஆ. வீடு, மனைவி, சொத்து, சுகம் என்று எதுவும் கிடையாது. சக ஏழை முஸ்லிம்களுடன் ஸுஃப்பாவில் வாழ்ந்து கொண்டிருந்தார். மக்கள் இவர்களை "இஸ்லாத்தின் விருந்தினர்கள்" என்று அழைப்பார்கள். யாராவது முஸ்லிம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து தானமாய் நபியவர்களிடம் அளித்தால், அதை அவர்கள் இந்தத் திண்ணைத் தோழர்களின் செலவினங்களுக்கு அளித்து வந்தார்கள். ஏதாவது அன்பளிப்புக் கிடைத்தால் மட்டும், அதில் சிறிதை, தான் எடுத்துக் கொண்டு மீதம் அனைத்தையும் இவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்.
அதனால் ரபீஆவிற்குத் தோன்றியது. ஏதாவது கொஞ்சம் பணமோ, பொருளோ நபியவர்களிடம் கேட்போம். கிடைத்தால், ஏழ்மையிலிருந்து மீண்டு, மற்றவர்கள்போல் பணம், மனைவி, குழந்தைகள் என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
ஆனால், மீண்டும் மனம் அதை மறுபரிசீலனை செய்தது. பிறகு சொன்னது:
"உன்னை நீயே அழித்துக் கொள்ளப் போகிறாய் ரபீஆ! இந்த உலக வாழ்க்கை - அது தானாக ஓடிவிடும். இந்த வாழ்க்கையில் செல்வம் என்று உனக்குப் பங்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால், நீ கேட்டாலும் சரி; கேட்காவிட்டாலும் சரி, அல்லாஹ் உனக்கு அளித்து விடுவான். உனக்கு நன்றாகத் தெரியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விற்கு எவ்வளவு பிரியமானவர் என்று. அவர் கோரினால் அவன் நிராகரிக்கப் போவதில்லை. ஆகவே நீ அவரிடம் என்ன கேட்க வேண்டுமென்றால், அல்லாஹ் உனக்கு மறுமையின் வெகுமதியில் பங்கு அளித்தருள அவரைப் பிரார்த்திக்கச் சொல்ல வேண்டும்"
ஆஹா! இதுதான் சரி என்று அவருக்குப் பட்டது. சொற்ப காலத்துக்கான அற்ப செல்வமெல்லாம் வேண்டாம், அனைத்தையும் "அங்கு" வாங்கிக் கொள்வோம் என்ற இந்த முடிவு அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. தெளிவாக இருந்தது. நேராக நபிகளாரிடம் சென்றார்.
அவர் ஒரு முடிவெடுத்து வந்திருப்பது நபிகளாருக்குப் புரிந்தது "என்ன கேட்க விரும்புகிறாய் ரபீஆ?" என்று கேட்டார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். என்னை சொர்க்கத்தில் தங்களின் தோழனாக அவன் ஆக்கி அருள வேண்டும்"
புரிகிறதா? அந்த வேண்டுகோளின் பேராசை புரிகிறதா? உலக இச்சை, பட்டுப் போயிருக்கட்டும். மறுமையில் எத்தகைய நம்பிக்கை இருந்திருந்தால், அந்த மறுமையிலும் அந்த மாமனிதரின் அண்மைதான் சொர்க்க மகா சொர்க்கம் என்று மனதில் நேசம் இருந்திருந்தால் இப்படி ஒரு வேண்டுகோள் பிறக்கும்?
முஹம்மது நபி சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு,
"உனக்கு வேறு ஏதும் வேண்டுகோள் இல்லையா ரபீஆ?"
"இல்லை அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடம் கேட்டதிலிருந்து எனது மனதை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை"
"அப்படியானால் சரி. நீ வேண்டியதை உனக்கு நான் பெற்றுத்தர, நீ எனக்கு உதவ வேண்டும். அதிகமதிகம் நஃபில் தொழுகையும் ஸஜ்தாவும் நீ புரிய வேண்டும்” என்று நபிகளாரிடமிருந்து இறுதி பதில் வந்தது.
பெருமையும் மகிழ்வும் ஏற்பட்டது ரபீஆவிற்கு! அந்த நொடியிலிருந்து உறுதியான இறைவழிபாடு என்பது அவரது சுபாவமாகவே ஆகிவிட்டது. அவரது இலக்கெல்லாம் ஒன்று. ஒன்றே ஒன்று! இப்பொழுது இந்த உலகில் நபியவர்களுடன் பணிவிடை செய்து அண்மிக் கிடக்கும் பாக்கியம் கிடைத்ததுபோல் மறுஉலகிலும் அவரது தோழமை கிடைக்கவேண்டும், அவ்வளவே! வெறும் சொர்க்கம் அல்ல. சிறப்புச் சொர்க்கம்.
சில நாட்களோ, மாதமோ கழிந்தன. முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள். "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லையா, ரபீஆ?"
"தங்களுக்கு சேவை செய்வதிலிருந்து எனது கவனத்தைத் திருப்பும் எதையும் நான் விரும்பவில்லை அல்லாஹ்வின் தூதரே! தவிர ஒரு மணப்பெண்ணுக்கு மணக்கொடை அளிக்க, அவளை வாழவைக்க என்று என்னிடம் பணமும் இல்லை" என்று பதிலளித்தார் ரபீஆ. முஹம்மது நபி அமைதியாக இருந்து விட்டார்கள்.
"என்னது? திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை எதற்குப் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்?" என்று கேட்கக்கூடாது. வியாபாரிகளுக்குத் திருமணம் விளங்குவதில்லை.
மீண்டும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள். "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லை, ரபீஆ?"
ரபீஆவும் அதே பதிலை மீண்டும் கூறிவிட்டார். ஆனால் பின்னர் தனிமையில் இருக்கும் போதுதான் இவ்விதம் நபியவர்களிடம் மறுதலித்துப் பேசியிருக்கக் கூடாதோ என்று ரபீஆவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அது அவருக்கு மிகுந்த வெட்கத்தை அளித்தது. மனதுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
"அட ரபீஆ! உனது ஆன்மீகத்திற்கும் இவ்வுலகிற்கும் மறுமைக்கும் எது சிறந்தது என்று நபியவர்கள் உன்னைவிடச் சிறப்பாய் அறிய மாட்டார்களா? உன்னுடைய ஏழ்மையும் பொருளாதார நிலைமையும்கூட அவர்கள் அறிந்ததுதானே. ஆம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! மீண்டும் ஒருமுறை நபியவர்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பரிந்துரைத்தால் நிச்சயம் கட்டுப்படுவேன்" என்று இறுதியில் அவரது மனம் சமரச உடன்படிக்கை செய்து கொண்டது.
மீண்டும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் முஹம்மது நபி அவரிடம் கேட்டார்கள்: "உனக்குத் திருமணம் புரிந்து கொள்ள ஆசை இல்லையா, ரபீஆ?"
"நிச்சயமாய் திருமணம் செய்து கொள்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் நான் இன்று இருக்கும் நிலையில் யார் எனக்குப் பெண் தருவார்கள்?" என்று கவலை தெரிவித்தார் ரபீஆ.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சொல்லி, அவ்வீட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட பெண்ணைச் சொல்லி, "அவர்கள் வீட்டிற்குப் போ. அல்லாஹ்வின் தூதர் உங்களின் இந்தப் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து தரும்படி கட்டளையிட்டார் என்று கூறு" என்று தெரிவித்தார்கள் முஹம்மது நபி.
மிகவும் கூச்சமாய் இருந்தது ரபீஆவிற்கு. மெதுவாய் அவர்களின் வீட்டிற்குச் சென்றார். தயக்கமாய்த் தெரிவித்தார். "அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பி வைத்தார்கள். உங்களின் இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துத் தருவீர்களாம்" என்று அந்தக் குறிப்பிட்ட பெண்ணின் பெயரைத் தெரிவித்தார்.
"அந்தப் பெண்ணையா!?" என்று அவர்கள் ஆச்சரியமாகக் கேட்க, "ஆம்" என்றார் ரபீஆ.
"அல்லாஹ்வின் தூதர் எங்களது வீட்டில் சிறப்பு விருந்தினராய் வரவேற்கப்படுபவர். அதேபோல்தான் அல்லாஹ்வின் தூதரின் தூதரும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்தத் தூதர் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட மாட்டார்” என்று உற்சாகப்பட்ட அந்தக் குடும்பத்தினர் உடனே அந்தக் குறிப்பிட்ட பெண்ணை இவரது மனைவியாக்கி, திருமண உடன்படிக்கை எழுதிவிட்டனர்.
நம் மொழியில் சொல்வதென்றால், பஞ்சத்தில் அடிபட்டவரைப் போன்ற ஒரு மகா ஏழை, வீட்டிற்கு வருகிறார். நபி சொன்னார் என்று பெண் கேட்கிறார். உடனே அந்த வீட்டினரோ "நீதானய்யா மாப்பிள்ளை" என்று திருமண உடன்படிக்கையே எழுதிவிட்டார்கள். அப்படிக் கட்டுப்பட்டுக் கிடந்தார்கள் தம் தலைவரின் சொல்லுக்கு.
மாப்பிள்ளையோ சீர் தருவார்களா, செனத்தி தருவார்களா என்று யோசிக்கவில்லை, "எப்பேறுபெற்ற தலைவனின் எப்பேறுபெற்ற தொண்டன் நான்", "எவ்வளவு வரதட்சனை எண்ணி வைப்பார்கள்" என்று கேட்கவில்லை. தான் பெண்ணுக்கு மணக்கொடை தரப் பணமில்லையே என்று விசனப்படுகிறார். மனைவியாகி வரும் பெண்ணுக்கு எப்படி உணவளிப்பது என்றுதான் கவலைப்படுகிறார்.
வேகமாக நபியவர்களிடம் திரும்பிய ரபீஆ, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மிகச் சிறந்த குடும்பத்தைக் கண்டுவிட்டுத் திரும்பி வந்திருக்கிறேன். என்னை நம்பினார்கள், அன்பொழுக வரவேற்றார்கள், அவர்கள் வீட்டுப் பெண்ணை எனக்கு மணமுடிக்க உடனே திருமண உடன்படிக்கையும் எழுதித் தந்து விட்டார்கள். நான் இப்பொழுது மணக்கொடை பணத்திற்கு என்ன செய்வேன்?" என்றார்.
புரைதா இப்னுல் ஹஸிப் என்பார் பனூ அஸ்லம் எனும் கோத்திரத்தின் தலைவர். ரபீஆவும் அஸ்லமீதான். அந்த புரைதாவை வரவழைத்தார்கள் முஹம்மது நபி. அவர் வந்து சேர்ந்தார்.
"புரைதா! ரபீஆவிற்குத் திருமணம் செய்ய வேண்டும். தயவுசெய்து ஒரு பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கம் ஏற்பாடு செய்து கொடு" என்று தெரிவித்தார்கள்.
அப்படியே ஆகட்டும் என்று அவரும் ஏற்பாடு செய்து கொண்டு வந்து கொடுத்தார். நபியவர்கள் அதை ரபீஆவிடம் கொடுத்து, "இதை அவர்களிடம் எடுத்துச் செல். அவர்களின் மகளுக்கு இது நீ தரும் மஹர்-மணக்கொடை என்று ஒப்படை".
வாங்கிக் கொண்டு அவர்களிடம் சென்றார் ரபீஆ. அந்தப் பேரீச்சம்பழ விதை அளவிற்கான தங்கத்தைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட அவர்களோ அகமகிழ்ந்தார்கள். "இருந்தாலும் ரொம்ப அதிகம் இது. தவிரவும் தரமான தங்கமாகவும் தோன்றுகிறதே"
நபிகளாரிடம் திரும்பி வந்த ரபீஆ கூறினார். "இத்தகைய பெருந்தன்மையான குடும்பத்தை நான் சந்தித்ததே இல்லை. ஏதோ தேற்றி எடுத்துப் போய்க் கொடுத்த அந்த மிகச் சிறிய அளவு தங்கத்தை அவர்கள் அப்படி சிலாகிக்கிறார்கள். மிகவும் அதிகமாம். தரமான தங்கமாம். அது இருக்கட்டும். இப்பொழுது எனக்கு அடுத்த கவலை வந்து விட்டது. எப்படி நான் திருமண விருந்து அளிக்கப் போகிறேன் அல்லாஹ்வின் தூதரே?"
மீண்டும புரைதாவிடம் பேசினார்கள் நபியவர்கள். பணம் ஏற்பாடு செய்தார் புரைதா. பிறகு அதைக் கொண்டு ஒரு நல்ல கொழுத்த செம்மறியாட்டுக்கடா ஒன்றை வாங்கி வந்தார் ரபீஆ. பிறகு நபியவர்கள் அவரிடம் கூறினார்கள்: "ஆயிஷாவிடம் சென்று வீட்டில் எவ்வளவு வாற்கோதுமை இருக்கிறதோ கேட்டு வாங்கி வா"
அதன்படி அவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அம்மையாரிடம் செல்ல, அவர்கள், "அந்தக் கூடையில் ஏழு சாஉ(படி) வாற்கோதுமை இருக்கிறது, எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதைத் தவிர உமக்கு அளிக்கும் வகையில் வீட்டில் வேறு எதுவும் உணவு இல்லை" என்றார்.
ஒரு சாஉ என்பது தோராயமாய் இரண்டு கிலோ 350 கிராம். ஆக மாப்பிள்ளை ரபீஆ கிடாவையும் பதினாறேகால் கிலோ வாற்கோதுமையும் எடுத்துக் கொண்டு மணப்பெண் வீட்டிற்கு உற்சாகமாய்ச் சென்றார். அவர்கள், "கோதுமையைக் கொடுங்கள், நாங்கள் வேண்டுமானால் ரொட்டி சுட்டுத் தருகிறோம். ஆனால் நீங்கள்தான் ஆட்டை அறுத்து இறைச்சி எடுத்துக் கொண்டு வரவேண்டும்" என்றார்கள். ரபீஆவும் அவர் கோத்திரத்தின் உறவினர்கள் சிலரும் சென்று ஆட்டை அறுத்து, இறைச்சி சமைத்து எடுத்துவர, விருந்தொன்று பிரமாதமாய் தயாரானது. அளவற்ற நெகிழ்ச்சி ஏற்பட்டது ரபீஆவிற்கு. ஒன்றுமே இல்லாமல் கிடந்தவருக்கு விருந்தினர்களையெல்லாம் அழைத்து விருந்தளிக்கும் அளவு ரொட்டியும் இறைச்சியும் கிடைத்ததென்றால்? இல்லாதவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.
இதையெல்லாம் படித்துவிட்டு, "தலைகீழ்க் கலாச்சாரமய்யா அரபு நாட்டுத் திருமணமுறை" என்ற நினைப்புத் தோன்றினால், சற்றேனும் சிந்திக்க முடிந்தால் புரியும் - தலைகீழாக மாறி, கெட்டுக் குட்டிச்சுவராகிப்போய்க் கிடப்பது நம் கலாச்சாரம்தான் என்று.
நபியையும் விருந்திற்கு அழைத்தார் ரபீஆ. அன்புடன் கலந்து கொண்ட முஹம்மது நபி, பின்னர் அவருக்கு அன்பளிப்பொன்றும் அளித்தார்கள். ஒரு சிறு அளவு நிலம். அந்த நிலம் அபூபக்ருஸ் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹுவின் நிலத்திற்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. அது அன்பளிப்பாய்க் கிடைத்தது ரபீஆவிற்கு. வறுமையில் கிடந்த அவருக்கு இவை அனைத்தும் பெரும் செல்வமாய்த் தோன்றியது. உள்ளார்ந்த அகமகிழ்வும், ஏதோ பெரும் செல்வந்தனாகி விட்டதைப்போன்ற உணர்வும் அவருக்கு ஏற்பட்டது. இனிதே இல்லறம் துவங்கினார் ரபீஆ.
சிலநாள் கழிந்திருக்கும். ஒரு பிரச்சனை ஏற்பட்டது ரபீஆவிற்கு. அந்த நிலத்தில் ஒரு ஈச்சமரம் இருந்தது. அபூபக்ரின் நிலமும் ரபீஆவின் நிலமும் அருகருகே இருந்ததால் அந்த மரம் யார் நிலத்திற்கு உரியது என்பது பிரச்சனையாகி விட்டது. சர்வேயர், எண் இட்ட எல்லைக்கல் எதுவும் இல்லாத காலம் அது. ரபீஆ அந்த மரம் தன்னுடையது எனக் கூற, அபூபக்ரோ அது தன்னுடைய நிலத்தில் உள்ளது என்று வாதிட்டார். விவாதம் சற்றுச் சூடேற, அபூபக்ரு வாய் தவறி ரபீஆவைப் பற்றிச் சுடுசொல் ஒன்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆனால் வாயிலிருந்து வார்த்தை வெளியே விழுந்த அடுத்த கணமே தன் தவறு புரிந்து விட்டது அபூபக்ருக்கு.
"ஆமாம்! வாய் தவறி சொல்லிவிட்டேன். அதற்கு என்ன இப்பொழுது? யாருடைய மாமனார் நான்? அவரிடம் எனக்குள்ள செல்வாக்கு என்ன தெரியுமா?" என்றெல்லாம் பெருமை பேசி அகலவில்லை அபூபக்ருஸ் ஸித்தீக். பிரச்சனை முற்றிலும் திசைமாற ஆரம்பித்து விட்டது.
"இதோ பார். நான் உன்னை இகழ்ந்து ஒரு சொல் சொல்லிவிட்டேன். நீயும் என்னை ஒருமுறை இகழ்ந்து சொல்லிவிடு போதும். பழி தீர்ந்து விடும். நமக்குள் நாளை பிரச்சனை இருக்காது" அந்த 'நாளை' மறுநாள் அல்ல, மறுமையின் நாளை.
அபூபக்ரின் தரம், அவரது பெருமை, அவரது தியாகம், நபிகளிடம் அவருக்குள்ள சிறப்புத் தகுதி இதெல்லாம் அறியாதவரா ரபீஆ. ஏதோ, கோபத்தில் வாய் தவறி சொல்லிவிட்டார். அதற்காக, அவரை அதேபோல் நாமும் திட்டுவதாவது? "ம்ஹும்! அதெல்லாம் முடியாது" என்று மறுத்துவிட்டார் ரபீஆ.
"என்னைத் திட்டப் போகிறாயா இல்லையா?"
"முடியாது!"
"அப்படியென்றால் நான் நபிகளிடம் முறையிட வேண்டியிருக்கும்" என்று கிளம்பிவிட்டார் அபூபக்ரு. எதற்கு? தான் திட்டியதற்கு ரபீஆ பதிலுக்குத் திட்டி கணக்கைச் சரிசெய்ய மறுக்கிறார், அவருடைய கணக்கை நேர் செய்து தன்னைக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுவிக்க மறுக்கிறார். இது அநியாயமல்லவா? என்று நியாயம் கேட்பதற்கு.
நபிகளைக் காண்பதற்கு அபூபக்ரு விறுவிறுவென்று நடக்க, அவருக்குப் பின்னால் ரபீஆ வேகவேமாய் ஓட, அவருக்குப் பின்னால் ரபீஆவின் கோத்திரத்தினர் சிலர் கோபத்துடன் பின்தொடர, "நல்ல வேடிக்கை இது" என்பதுபோல் அந்த ஈச்சமரம் மட்டும் காற்றில் தன் கீற்றுகளை அசைத்துக் கொண்டிருந்தது.
"அவர்தான் முதலில் உம்மை இகழ்ந்து பேச ஆரம்பித்தவர். இப்பொழுது அவரே உம்மை முந்திக்கொண்டு உம்மைப் பற்றி நபியவர்களிடம் முறையிடச் செல்கிறாரா?" என்று ஆவேசமுடன் கேட்டனர் ரபீஆவின் உறவினர்கள்.
நின்றார் ரபீஆ. அவர்களை நோக்கித் திரும்பினார். "அமைதியாய் இருங்கள்! நீங்கள் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் தெரியுமா? அவர் அஸ்-ஸித்தீக். பெருமதிப்பிற்குரியவர். உயர்வானவர். அவர் உங்களை எல்லாம் திரும்பிப் பார்ப்பதற்குள் ஓடிவிடுங்கள். நீங்களெல்லாம் அவருக்கு எதிராய் எனக்கு ஆதரவளிக்கக் கூட்டம் திரட்டி வருகிறீர்கள் என்று அவருக்குத் தெரிந்தால் கோபம் ஏற்படலாம். அவர் கோபப்பட்டால், நபிகளும் கோபப்படலாம். அத்துடன் அழிந்தேன் நான். ஏனெனில் நபிகளை அவமதித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் கடுங்கோபம் என் தலைமேல் விழலாம்"
தங்களின் தலைவனையோ, தங்களது குழுவையோ ஆதரிப்பதாக நினைத்துக் கொண்டு, பாட்டில்களை வீசி, வாகனங்களில் ஆயுதங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு ஊர் உலா வரும் உத்தியெல்லாம் அறியாத சுத்தமான போர்க்கள வீரர்கள் அவர்கள். "சரி சரி. நீரே போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வாரும்" என்று சொல்லிச் சென்று விட்டார்கள்.
அபூபக்ரு சென்றார். நபிகளைச் சந்தித்தார். நடந்ததெல்லாம் கூறி முறையிட்டுவிட்டு அழுதார். அழுதது மரத்தை மீட்டுத் தரச் சொல்லி அல்ல; "ரபீஆவை என்னைத் திட்டச் சொல்லுஙகள்" என்று கோரிக்கையிட்டு.
வந்து சேர்ந்தார் ரபீஆ. நபிகள் கேட்டார்கள், "ரபீஆ, உனக்கும் அஸ்-ஸித்தீக்கிற்கும் இடையில் என்ன பிரச்சனை?"
"அல்லாஹ்வின் தூதரே! அவர் என்னை இகழ்ச்சியாகப் பேசியதைப்போல், நான் அவரைப் பேச வேண்டுமாம். நான் மறுத்துவிட்டேன்"
"நீ நன்று செய்தாய் ரபீஆ! உன்னை இகழ்ந்தவரை பதிலுக்கு நீ இகழ்ந்து பேசாதே! மாறாய், அல்லாஹ் அபூபக்ரின் பிழை பொறுக்கட்டும் என்று சொல்லிவிடு"
உடனே உரைத்தார் ரபீஆ: "அல்லாஹ் உமது பிழை பொறுக்கட்டும் அபூபக்ரே!"
கண்கள் குளமாகியிருந்தன அபூபக்ருக்கு. "அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும் ரபீஆ! அல்லாஹ் உமக்கு மாபெரும் கைம்மாறு வழங்கட்டும்" என்று அழுதுகொண்டே சென்றார் அபூபக்ரு.
திண்ணைப் பள்ளியின் பட்டதாரியல்லவா? குணம் மிகைத்தது. அந்த மரத்தைவிட உயர்ந்து உயர்ந்து நெடுந்தோங்கி நின்றது.
ரலியல்லாஹு அன்ஹு!
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!
நன்றி;;;; சத்தியமார்க்கம்.காம்
அன்புடன்; சகோதரன்சதாம் ஹுச்சின்

ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ).

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.


"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" -----

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.

அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார்.

மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார்.

அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்
"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்"
ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது
"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்"

இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.
" நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"

பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...
"நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதர்க்காக"

ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.
" நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்."
பன்றி இறைச்சி மற்றும் குடியை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச் செய்தார்கள்.

அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.
"அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"
1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை அமீனா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
" இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்
"
"நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்"
இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.
ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
.
விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம்.

அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது.

அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும். ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாவிடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்"
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாவிற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்...

தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
மீண்டும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினார். தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்க்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குரான் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிகஅதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
"அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- குரான் 2:286
உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குரான் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.
"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- குரான் 4:36
ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார்.

அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.
" நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்"
அதற்கு அவரது தாய் " அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"...
"அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்"
"ஒ அப்படியா, இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"

சுபானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....
"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.

16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21 ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.

ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமை படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக. எல்லா புகழும் அல்லாவிற்கே.

ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

அல்லாவிற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை.

ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
அன்றோ இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.
"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"
அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர்.

இறைவன் தன்னை நாடிவந்தவர்க்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர்.

கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.




சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.
"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும் நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"
எல்லா புகழும் அல்லாவிற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள்.

இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்து விட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.
"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு" --- குரான் 11:11
" நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- குரான் 17:9
குறிப்பு:

ஆமினா அவர்களின் சொற்ப்பொழிவுகள் பல இணையதளங்களில் கிடைக்கின்றன, யுடுயுப் (youtube) உட்பட. குறிப்பாக பெண்களுக்கான அவரது சொற்ப்பொழிவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
References:1. Interview with Rebecca Simmons of The Knoxville News-Sentinel in Tennessee2. islamreligiondotcom3. youtubedotcom4. famousmuslimsdotcomதமிழாக்கம்: ஆஷிக் அஹ்மத்அ

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

"என்ன ... இப்புடி திடீர்னு ...?"

தன் நண்பர்கள் சிலரின் வினாவுக்கு அண்மையில் உரியவராகிப் போனவர்.
நாடறிந்த நாத்திகர்; நாவன்மை மிக்கவர்; படைத்த கடவுளைப் பாரெங்கும் சுற்றி மறுத்து நின்றவர்; தத்துவ இயல் கற்றவர்-கற்பிக்கின்ற பேராசிரியரா இவர்? என வியக்க வைக்கும் எளிய தோற்றம்; இனிய பேச்சு; பேச்சினூடே இயல்பாக இழையோடும் நகைச்சுவை - முனைவர் அப்துல்லாஹ் எனும் முன்னாள் பெரியார்தாசன்.

இவர் இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதைப் பற்றி, பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளத்தில் கடந்த 01.04.2010 நாளிட்டு, ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தலைப்பு : தோழர் பெரியார்தாசனின் கொள்கை மாற்றம்.அதே கட்டுரை, அதே தலைப்புடன் கீற்று இணைய இதழில் இருநாட்கள் கழித்து 03.04.2010இல் வெளிவந்திருந்தது.

அதில், "இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய் விட்டாரே என்று ஆதங்கப் பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது" என்று பழைய பெரியார்தாசனை 'உன்னிப்பாக'க் கவனித்து வந்த, 'பெரியாரிஸ்ட்' ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவற்றுள்,
ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது.
பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது.
புத்த மார்க்கத்தில் போய் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது.
'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியது.
தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது.
பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்டது.
மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பது.
ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்பதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.

கடந்த 07.05.2010இல் ஐக்கிய அரபு அமீரகங்களின் வணிகநகரான துபையில் நடைபெற்ற 'பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக'த்தின் அமீரக்கிளை அறிமுக விழாவில் 'பெரியார்தாசன்' என்று அறியப்பட்ட முனைவர் அப்துல்லாஹ் சிறப்புரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்ட அழைப்பு வடிவில் அந்த அரிய வாய்ப்பு வந்தது.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவரும் அமீரகத் தமிழர்களின் அன்பரும் சமூக ஆர்வலருமான அன்புத் தம்பி குத்தாலம் அஷரஃப் அவர்களைத் தொடர்பு கொண்டு, "சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக முனைவரோடு ஒரு பத்துநிமிட நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யமுடியுமா?" என்று கேட்டபோது, "இன்ஷா அல்லாஹ்" என்றார்.
நேர்காணலுக்கு முதல்நாள் நிகழ்ச்சியின் முடிவில், முனைவரைச் சந்தித்து நேரடியாகக் கோரிக்கை வைத்தபோது மகிழ்வுடன் ஒப்புதல் அளித்தார். மறுநாள் 08.05.2010 காலையில் தம்பி அஷ்ரஃபுடன் புறப்பட்டு, முனைவரையும் அழைத்துக் கொண்டு, துபையிலுள்ள 'இஸ்லாமியத் தகவல் மையம்' போய்ச் சேர்ந்தோம்.
அந்த மைய நூலகத்தின் ஒரு பகுதியில் நேர்காணல் தொடங்கியது. முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் எனது வினாக்களுக்குப் பொறுமையாகவும் சில கட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டும் விளக்கமளித்தார். அவரது முழுமையான நேர்காணல், இங்குக் காணொளியாக வெளியிடப் பட்டுள்ளது.
"எல்லாவற்றையும் பார்த்துவிடலாம். ஒவ்வொன்றாகக் கேளுங்கள்" என்று முனைவர் அப்துல்லாஹ் கேட்டுக் கொண்டார். அவரது நேர்காணலின் சுருக்கம்:
சத்தியமார்க்கம்.காம்: ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது பற்றிச் சொல்லுங்கள்.
பேரா. Dr. அப்துல்லாஹ்:எனது பதினேழாவது வயதில் நான் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு விழாவில் பேசுவதற்காகப் பெரியார் அங்கு வந்திருந்தார். அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதையின் அடியிலுள்ள எனது இயற்பெயரை மாற்றிப் போடும்படி என் பேராசிரியர் அறிவுறுத்தியபோது "பெரியார்தாசன்" எனப் போட்டுக் கொண்டேன். அதன் பின்னர் பெரியாரைக் கற்று, அவரது சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்டு, அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, அவரது சீர்திருத்தக் கருத்துகளைப் பல்லாண்டுகள் பிரச்சாரம் செய்தேன். ஒரு 17 வயது இளைஞன், அவனது அப்போதைய அறிவுத்திறனுடனே, சிந்தனையுடனேயே 64 வயதிலும் இருக்க வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ஒரு கம்பளிப் பூச்சியை வண்ணத்துப் பூச்சியாக வளர்ச்சி பெறக்கூடாது என்று யாரும் தடுக்கவியலாது. அறியாமை முடிகள் உதிர்ந்த கம்பளிப் பூச்சியாக, அறிவுச் சிறகுகள் முளைத்த வண்ணத்துப் பூச்சியாக நான் இப்போது மாறிப் போனேன். இது என் சொந்த வளர்ச்சி. இதில் குறைகூற, குற்றம் சாட்ட யாருக்கும் உரிமையில்லை.
சத்தியமார்க்கம்.காம்: பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது பற்றி ...
பேரா. Dr. அப்துல்லாஹ்: கம்யூனிஸத்துக்கு நான் போகவில்லை; கம்யூனிஸ்ட்டாக மாறவுமில்லை. கம்யூனிஸம் என்னுடன் எப்போதும் இருக்கிறது; இப்போதும் இருக்கிறது.
சத்தியமார்க்கம்.காம்: புத்த மார்க்கத்தில் போய்ச் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது பற்றி ...
பேரா. Dr. அப்துல்லாஹ்: பாபா ஸாஹிப் அம்பேத்கர் எழுதிய 52 பிரிவுகள் அடங்கிய அவரது நூலை மொழி பெயர்த்தபோது, புத்த மதத்தில் அற்புதமான பல கருத்துகள் இருந்ததைப் படித்து, அவற்றால் ஈர்க்கப் பட்டேன். அப்போதும் எனது இறைமறுப்புக் கொள்கை அப்படியேதான் இருந்தது. ஏனெனில் புத்த மதத்தில் இறையென்று ஒன்றில்லை. "அன்பே இறை" என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். புத்தரின் 2000ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குக் கென்னெத் லேனில் உள்ள புத்தமதத் தலைமையகத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டு சென்ற பெரியர், புத்தமதத்தின் கொள்கைகளைப் பாராட்டிப் பேசினார்."புத்தி கொண்டு சிந்திப்பவன் புத்தன்; எனில் நானும் புத்தன்தான்" என்று கூறினார். பெரியார் புத்தானாக இருந்தபோது பெரியார்தாசன் புத்தனாக இருந்ததில் விமர்சனத்துக்கு இடமேயில்லை.
சத்தியமார்க்கம்.காம்: 'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியதைப் பற்றி ...
பேரா. Dr. அப்துல்லாஹ்:அது நான் எழுதியதல்ல; ஒரு நேர்காணல். ஆதிசங்கரரைப் புகழ்ந்த குற்றச்சாட்டில் கூடுதலாக விளக்க வேண்டியவை உள்ளன. 'இந்துத் தத்துவம்' என்பது வேறு; இந்தியத் தத்துவம் என்பது வேறு. இந்துத் தத்துவம் என்பது வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் மனிதர்களை சாதிவாரியாகக் கூறுபோட்ட பார்ப்பனீயம் ஆகும். இந்தியத் தத்துவம் என்பது சாங்கியம் (கபிலர்), யோகம் (பதஞ்சலி), மீமாம்சம் (ஜெய்மினி), நியாயம் (கோதமர்), வைசேஷிகம் (கணாதர்), வேதாந்தம் (ஆதிசங்கரர்) ஆகியவையாகும். இவற்றை அறுசமயம் என்பர். இந்த ஆறிலும் கடவுள் கொள்கை என்ற ஒன்றே இல்லை. ஆனால், சிலவற்றுள் தவறாக அது புகுத்தப் பட்டது.
ஆதிசங்கரர், தம் ஆசிரியரான கோவிந்த பகவத் என்பவரைப் போற்றிப் பாடிய "பஜகோவிந்தம்" எனும் பாடலை, கோவிந்த'சாமி'க்குப் பாடிய பாட்டாகப் பின்னர் வந்தோர் மாற்றிக் கொண்டனர்.
ஆதிசங்கரரின் பாடல்களுள் அர்த்தமுள்ளவை என நான் குறிப்பிட்ட பாடலை நீங்கள் கேட்டாலும் அவை அர்த்தமுள்ளவைதாம் என ஒப்புக் கொள்வீர்கள். கேட்கலாம், தப்பில்லை:
சத் சங்கத்துவே நித் சங்கத்துவம் (அறிஞர்களோடு சேர்ந்திருந்தால் உன் தனித்தன்மை உனக்குத் தெரியவரும்).
நித் சங்கத்துவே நிர்மோகத்துவம் (உன் தனித்தன்மை உனக்குப் புரிந்துவிட்டால் ஆசைகள் அற்றுப்போகும்).
நிர்மோகத்துவே நிச்சலத் தத்துவம் (ஆசைகள் அற்றுவிட்டால் மனதில் அமைதி உண்டாகும்).
நிச்சலத் தத்துவே ஜீவன் முக்தி (சலனமற்ற அமைதியான மனநிலையே முக்திநிலை).
ஆதிசங்கரர் போட்டிருக்கும் நாமம் அழகாயிருக்கிறது என்பதற்காகவோ அவர் பார்ப்பனர் என்பதற்காகவோ அவரை நான் புகழவில்லை. அத்துவைதம் போதித்த அவரது கருத்துகள் சில அர்த்தமுள்ளவை எனத் தெரிந்து கொண்டு அவற்றைப் புகழ்ந்து, நந்தன் எனும் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டேன்; அவ்வளவுதான். அந்தக் கருத்துகள் அர்த்தமுள்ளவை என்பதில் இன்றைக்கும் எனக்கு வேறுபட்ட கருத்தில்லை.
சத்தியமார்க்கம்.காம்: தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது ஏன்?
பேரா. Dr. அப்துல்லாஹ்: மனோதத்துவக் கருத்தரங்குகளில் 'கல்ராசி' பற்றியெல்லாம் நான் பரப்புரை செய்யவில்லை. ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னர், என் நண்பர் ராஜராஜன் என்பவர், தன் இல்ல நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்திருந்தார். அப்போது நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட நிழற்படத்தை, அவரது 'பெயர்ராசி' விளம்பரத்துக்காகப் பயன் படுத்தியிருக்கிறார் என்பது பிற்பாடு தெரிய வந்தது. மற்றபடி எனக்கும் எந்த ராசிக்கும் எவ்விதத் தொடர்பும் எப்போதும் இருந்ததில்லை.
சத்தியமார்க்கம்.காம் பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்ட விபரம் ...
பேரா. Dr. அப்துல்லாஹ்:பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து ஒரு காலகட்டத்தில் நான் வெளியேற்றப் பட்டேன். அதற்கு, நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதைக் காரணமாகச் சொன்னார்கள். என்னுடன் கல்லூரியில் பணியாற்றிய பெண்ணொருவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்; நானும் விரும்பினேன். திருமணம் செய்து கொண்டோம். அந்தத் திருமணம் முடிந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர் அதைக் காரணமாகச் சொல்லி நான் வெளியேற்றப் பட்டேன். அந்த அநீதியான கேலிக்கூத்தை அன்று யாருமே தட்டிக் கேட்கவில்லை. எனவே, யாராலும் கண்டு கொள்ளப் படாமல் தூசி படிந்து கிடந்த 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'க்குப் புத்துயிர் கொடுக்கலாம் என்றெண்ணி அதற்குத் தலைமை ஏற்றேன். பின்னர், ஒரு கட்சியை நடத்துவதெல்லாம் எனக்குக் கைவராது என்று கண்டு கொண்டு, அதில் தீவிரம் காட்டவில்லை. அது வெறும் லெட்டர்பேடு கட்சிதான்.
சத்தியமார்க்கம்.காம் மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பதுதான் தீவிர விமர்சனமாகியுள்ளது ...
பேரா. Dr. அப்துல்லாஹ்:இஸ்லாத்தை எனது வாழ்வியல் நெறியாக நான் ஏற்றுக் கொண்டது சிலர் கேட்பதுபோல் திடீர் நிகழ்வல்ல; பத்தாண்டுகால மனப் போராட்டத்தின் முடிவு இது. கடவுள் மறுப்பைக் குறித்த மீளாய்வு எனக்குத் தோன்றி வெகுகாலமாகி விட்டது. அதன் எதிரொலியாகக் கல்கி இதழில் 52 வாரம் 'நான் நாத்திகன் இல்லை' எனும் சுய பிரகடனத்தைத் தலைப்பிட்டு எழுதினேன். அத்தொடர் தொடங்கியது 2000ஆம் ஆண்டில். கடவுளைத் தேடிய எனது முயற்சியில் பல மதங்களைப் படித்துப் பார்த்து, இறுதியாக நான் மெய்க்கடவுளைக் கண்டு கொண்டது குர்ஆனில். நான் வெளியில் இருந்தபோது இஸ்லாத்திற்குக் குறைவும் இருந்ததில்லை; இணைந்த பிறது அதற்குத் தனிப் பெருமையும் சேர்ந்துவிடவில்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் அது என்றும் வாழும் மார்க்கம். இஸ்லாத்தைத் தேர்ந்தது என் தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் கேள்வி கேட்க முடியாது. நான் இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டது அரசியலுக்குத்தான். இஸ்லாத்தில் எனக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியாவை உண்மை இஸ்லாம் ஆள வேண்டும் என்ற அரசியல் ஆசை இருக்கிறது. இதை வெளிப்படையாக அறிவிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
நன்றி கூறி, பிரார்த்தனையுடன் நேர்காணலை நிறைவு செய்து, பகல் தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தபோது, பெரியாரைப் பற்றிப் பேச்சு வந்தது.

"எவ்வளவோ பாடுபட்டும் நம் நாட்டில் சாதிகள் ஒழிந்துவிடவில்லை. சாதி ஒழிப்பை மேடைபோட்டுப் பேசிவிட்டு என் சொந்த ஊருக்குப் போனால், என்னை என் சாதியோடு சேர்த்தே எனது ஊரைச் சேர்ந்தோர் குறிப்பிட்டுப் பேசுவதைக் காதால் கேட்க வேண்டிய நிலை இருந்தது!. இப்போது என் சாதி, என்னை விட்டும் தானாக ஓடிப் போனதே! நம் ஊர்ப்பக்கம் சாதி-சனம் என்று சேர்த்துச் சொல்வார்களல்லவா? சாதியோடு சேர்ந்து கொண்டு என் சனமும் என்னை விட்டு ஒதுங்கிப் போனது. கடந்த பத்து நாட்களுக்குள் எனது குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்கு எனக்கு அழைப்பில்லை; ஓர் இறப்புக்கு அறிவிப்பில்லை! இஸ்லாத்தில் இணைவதால் இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் எதிர்பார்த்தே நான் இஸ்லாத்துக்கு வந்தேன்"
"பெரியாரின் மறைவுக்குப் பிறகு கொஞ்சகாலம் சாதியாதிக்கம் அடங்கிக் கிடந்தது. இன்றோ, சங்கங்கள் வளர்க்கும் சாதிகள் என்பதாய்ச் சாதிச் சங்கங்கள் தமிழகத்தில் பெருகிப் போய்விட்டன. சாதி அரசியல் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் ஆட்சி செய்கிறது"

"சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம் போன்ற - கடவுள் மறுப்பு தவிர்த்த - பெரியாரின் கொள்கைகள் இன்றும் என்னிடம் உள்ளன. கடவுள் மறுப்புப் பற்றிய எனது மீளாய்வுகூட ஒருவகையில் பெரியாரின் கொள்கை அடிப்படையில் எழுந்ததுதான்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் முனைவர் அப்துல்லாஹ்.
"எப்படி?"
"உயிர்களின் தொடக்கம் குறித்து இருவகை இயல்களே உள. ஒன்றாவது பரிணாமவியல்; இரண்டாவது படைப்பியல். பரிணாமவியலைப் பெரியார் இறுதிவரை ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில், பரிணாமவியலைப் பற்றி அவர் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். எனவே, மறுதலித்தார். படைப்பியலைப் பற்றிக் கவலைப்படாததால் அதையும் மறுத்தார். இரண்டில் ஒன்று இருக்க வேண்டும்; அது உண்மையானதாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், பரிணாமவியல் தவறென்றால் படைப்பியல் மட்டுமே எஞ்சுகிறது. அந்தச் சிந்தனை என் தேடலாக மாறியது. 'எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும்' எனும் முடிவு எனக்கு ஏற்பட்டு வெகு காலமாகி விட்டது. அது தெளிவாகத் தெரிந்தது இறைவேதமான குர்ஆனை ஆய்வு செய்தபோதுதான். அல்ஹம்து லில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே!"
எல்லாப் புகழுக்கும் உரிய வல்ல இறைவன், நமக்கும் அவருக்கும் ஈமானில் உறுதியையும் இறைமறையில் ஈடுபாட்டையும் இறைவழி இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன்-ஹதீஸில் தெளிவையும் அதிகமதிகம் வழங்கியருள வேண்டும்; உண்மை இஸ்லாத்தில் உறுதியுடன் நடைபயில உதவி புரிய வேண்டும்!
- ஜமீல் (அமீரகப் பிரதிநிதி, சத்தியமார்க்கம்.காம்)
Thanks : சத்தியமார்க்கம்.காம்