Sunday, July 31, 2011

குற்ற உணர்வில்லாத ரமலான் வேண்டுமா

நம்மில் பலர் ஒவ்வோர் ரமலானிலும் இவ்வார்த்தைகளை சொல்கின்றோம்.


ஒரு வேளை ரமலானுக்காக நான் முன்னேற்பாடு செய்திருந்தால்….”


“ஒரு வேளை பஜ்ர்க்கு எழுந்து சுன்னத்து தொழுவதை முன்னமயே வழமையாக்கி இருந்தால்”


“நோன்பை குறித்து முன்னமே தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் முக்கியமற்ற கேள்விகளை கேட்பதிலும் அர்த்தமில்லா வினாக்களை தொடுப்பதிலிருந்தும் விலகியிருந்திருப்பேன்”

இப்படி பல்வேறு காரணங்களை கூறிக் கொண்டு இனி அடுத்த ரமலானையாவது ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும், சரியாக கண்ணியப்படுத்த வேண்டும் என்று சொல்லும் பலரில் நீங்களும் ஒருவரா, உங்களுக்காகவே இக்கட்டுரை.

ரமலான் மாதம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னமேயே நம்மில் பலருக்கு அதை குறித்த ஆர்வம் வந்து விடுகிறது. ரமலான் முன்பு வரை நாம் தொழுகைக்கு செல்லாமல், இஸ்லாமிய முறைப்படி வாழ்வதில் அலட்சியம் காட்டியிருந்தாலும் ரமலானில் முறையாக முதல் பிறையிலிருந்தே சரியாக தொழ வேண்டும், 30 நாட்களும் நோன்பு நோற்க வேண்டும், முழு குரானையும் கரைத்து குடித்து விட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். அதற்காக நோன்பு நோற்கும் நேரம், விடும் நேரம் குறித்த நோன்பு அட்டைகளை எல்லாம் வாங்கி வைத்து கொண்டு ஒவ்வொரு சூப்பர் மார்கெட்டாக ஏறி இறங்கி பேரீத்தம் பழங்களையும் இன்ன பிற பொருட்களையும் வாங்கி தயாராகுவோம்.

அது போல் ஷஃபானின் இறுதியில் தொலைக்காட்சி முன்னாலும் இணையதளங்கள் முன்னாலும் உட்கார்ந்து ரமலான் பிறந்து விட்டதை உறுதிப்படுத்திய சந்தோஷத்தில் தாயகத்துக்கு தொலைபேசியில் செய்தியை சொல்வதில் பிஸியாக இருப்போம். ரமலானின் ஆரம்பத்தில் மிக உன்னதமாகவே இருப்போம். பின் சுருதி குறைந்து ரமலானின் கடைசியில் “ஹும் இந்த ரமலான் என்னில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலானிலாவது முழுமையாய் பின்பற்ற வேண்டும்” என்று குற்ற உணர்வில் உழல்பவரா நீங்கள் ? அத்தகையதாக இல்லாமல் குற்றமற்ற ரமலானாக வரும் ரமலான் மாற ஒரு ஆங்கில இணையதளத்தில் என்னை பாதித்த ஒரு கட்டுரையிலிருந்து சுருக்கமாய் ஐந்து விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். (அவ்விணையத்தள லிங்கை எனக்கு அனுப்பிய சகோ. ஷாஹூலுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக)

வரும் ரமலான் குற்றமற்ற ரமலானாக மாற நாமும் இந்த ஐந்து விஷயங்களை பின்பற்றுவோமா.

1. எட்ட முடியா எதிர்பார்ப்புகள் : ஒவ்வோர் வருடமும் மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை சுமந்தவர்களாகவே நாம் ரமலானின் உள்ளே நுழைகிறோம். ரமலானில் 5 தடவை குரானை ஓதி விடுவேன், எல்லா நாட்களிலும் தஹஜ்ஜுத் தொழுகையில் முழு குரானையும் ஓதி முடித்து விடுவேன் என்று நம்மில் பலர் கூறுவதை கேட்கிறோம். மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது தவறல்ல, இன்னும் சொல்லப் போனால் இஸ்லாம் அதை ஊக்குவிக்கிறது. ஆனால் நமது நிலையை எண்ணிக் கொண்டு பின்பு எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும். வருடம் முழுவதும் குரானை தொடாமலேயே இருந்து விட்டு எப்படி ஒரு மாதத்தில் 5 தடவை குரானை முடிக்க முடியும். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் அதை செய்ய முடியவில்லையென்றால் அத்தோடு முழுமையாய் எதையும் செய்ய இயலாமல் அடுத்த ரமலானில் பார்த்து கொள்ளலாம் எனும் எண்ணத்தை தோற்றுவித்து விடும்.

2. செய்யும் செயலை தொடராக செய்யாமல் இருத்தல் : நாம் ரமலானில் செய்யும் இன்னொரு தவறு ரமலானின் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 2 ஜுஸ்வு என்று ஓதுவோம். பின்பு பத்து நாள் கழித்து 2 ஜுஸ்வு ஓத முடியவில்லையென்றால் சோர்வு ஏற்பட்டு அத்தோடு விட்டு விடுவோம். அப்படியில்லாமல் சிறிதளவு அமல் செய்தாலும் அதை ரமலான் முழுவதும் தொடராக செய்பவர்களாக மாற வேண்டும்.

3. அறிவை பெறுவதில் அலட்சியம் / நேர நிர்வாகத்தில் பலவீனம் : ரமலானை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய இஸ்லாமிய அறிவு குறைபாடாக இருப்பதும் இஸ்லாத்தை பற்றிய போதிய ஞானமின்மையும் ரமலானை வீணடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முஸ்லீம்கள் சாதாரணமாகவே நேர நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதிலும் ரமலான் வந்து விட்டால் ”ரமலானில் எல்லாம் நேர நிர்வாகமா, திட்டமிடலா, அவனவன் நோன்பு வைத்து சோர்வாக இருக்கிறான், தூங்குவதற்கே நேரமில்லை” என்று சொல்லி ரமலானை போக்கி விடுகிறோம்.

4. உடலை பாதுகாத்தல் : ரமலானில் உண்ணும் உணவின் ஊட்டச்சத்தும் தூக்கமும் பெரும்பாலும் பலியாகிவிடுகிறது. சஹரில் எழுந்து உணவு உண்ணாமல், நோன்பு திறக்கும் போது உடம்புக்கு கெடுதி ஏற்படுத்தும் உணவுகளை உண்டும் உடலை கெடுத்து கொள்கிறோம். அது போல் தூக்கத்துக்கு நேரத்தை சரியாக திட்டமிடாமல் தூங்காமலும் நம் உடல் நிலையை பாழாக்கி கொள்வதால் ரமலானில் சுறுசுறுப்பாக இல்லாமல் முடங்கி விடுகிறோம். நினைவில் வைத்து கொள்ளுங்கள் ரமலான் சுறுசுறுப்பின் மாதம், சோம்பேறிகளின் மாதம் அல்ல.

5. சரியான முன்னேற்பாடுகள் இல்லாதது : நாம் ரமலானுக்கு திட்டமிடுவதோ, தேவையான முன்னேற்பாடுகள் செய்வதோ இல்லை. நம்பிக்கையாளர்கள் சிறப்பாக அமல் செய்து அதிக கூலிகளை பெற்று கொள்ள கூடிய வசந்த காலமாக ரமலான் இருக்கிறது. ஆனால் அது வெறும் ரமலானில் மட்டும் அமல் செய்வதால் வருவதல்ல. மாறாக எப்படி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வருடம் முழுவதும் தடகள வீரன் பயிற்சி செய்கிறோனோ அது போல் ரமலானுக்கான பயிற்சியும் ரமலானில் கிடைக்கும் பயிற்சியும் முழு வருடமும் இருக்க வேண்டும்.

வரும் ரமலானை அல்லாஹ் நமக்கு குற்றமற்ற மனதுடன் திருப்தியான ரமலானாக ஆக்கி தருவானாக, ஆமின்.

Sunday, July 24, 2011

மனித குலத்தின் விடுதலை இஸ்லாத்தின் மூலமே


உலகெங்கும் அனைத்து இடங்களிலும் தன் அதிகாரத்தை செலுத்தும் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களின் முதலும் கடைசியுமான இலக்கு அதிகாரமே தவிர வேறில்லை. கொடுங்கோன்மை ஆட்சியாளர்கள் தன் அதிகாரத்தை பலவீனமான மனிதனின் மேல் செலுத்தும் போது வேறு வழியின்றியும் எதிர்க்க திராணியற்றுமே அவன் அதை ஏற்று கொள்கிறான். ஏனெனில் மனித இயல்பு கொடுங்கோன்மையை இயல்பாக விரும்புவதில்லை. வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்த்தால் அடக்குமுறைகளால் மனிதனை அடக்கி ஆள்வது நீண்ட காலத்துக்கு முடியவில்லை என்பது தெரியும். அவ்வரலாற்றிலிருந்து நவீன கொடுங்கோலர்கள் எவ்வித படிப்பினையும் பெறுவதில்லை என்பது தான் சோகம்.

கடந்த சில நூற்றாண்டுகளாகவே உலகை ஆள வேண்டும் என்ற ஐரோப்பியாவின் வெறியால் மானுட சமூகத்திற்கு நேர்ந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தேசியவாதத்தின் பெயரால் ஐரோப்பிய தேசங்கள் முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களை நடத்தியதில் யாருக்கும் லாபம் இல்லை. ஆம் தோற்ற தேசங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டது என்றால் வென்ற தேசங்கள் எவ்வித படிப்பினையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது உலக சட்டாம்பிள்ளையாக உலா வரும் அமெரிக்கா குறுகிய தேசியவாத சிந்தனையால் என்னோடு இரு அல்லது எதிரியாக இருஎன்று உலகை மேலாதிக்கம் செய்து வருவதை கண்கூடாக பார்க்கின்றோம்.
இப்படியாக கடந்த பல தசாப்தங்களாக மன்னராட்சி, சர்வதிகாரம், எதேச்சதிகாரம், காலனியாதிக்கம் என்று அச்சமூட்டும் பெயர்களாலும், சம காலத்தில் மக்களாட்சி, மத சார்பின்மை, தேசப்பற்று, உலகமயமாக்கல் என பசப்பூட்டும் வார்த்தைகளாலும் உலகை மேலாதிக்கம் செய்ய முயலும் அனைத்து கொள்கைகளுக்கும், எதேச்சதிகாரங்களுக்கும், கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஓரே கொள்கை இஸ்லாம் மட்டுமே. மனித உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசினாலும் இன்று மேற்குலகுக்கு அச்சமூட்டும் ஓரே பெயர் இஸ்லாம் மாத்திரமே.
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு முன் முஸ்லிம் உலகின் மீது கரிசனையோடு அமெரிக்கா இருந்ததை போல் சிலர் எண்ணுவது வெறும் மாயத்தோற்றமே. ஏனெனில் அப்போது தன் எதிரியான கம்யூனிஸத்தை ஒழிக்க முதலாளித்துவ அமெரிக்கா பயன்படுத்தி கொண்ட ஆயுதமே இஸ்லாம். அதனால் தான் இஸ்லாத்தின் கோரிக்கைக்கு தார்மீக ஆதரவு அளிப்பது போல் நடித்து இஸ்லாத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவை வீழ்த்தியது.
சோவியத் ரஷ்யா வீழ்ந்த பிறகு இஸ்லாம் மட்டுமே தன் மேலாதிக்கத்தை எதிர்க்கும் கொள்கையாக இருந்ததால் தான் மூடி வைத்திருந்த இஸ்லாமிய எதிர்ப்புணர்வை வெளிப்படையாகவே அமெரிக்கா காட்ட தொடங்கியது. தெரிந்தோ தெரியாமலோ முஸ்லிம் நாடுகளின் மன்னர்கள் இவ்வுண்மையை உணர மறுக்கின்றனர். அத்தோடு மட்டுப்படுத்திக் கொள்ளாமல் இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் அமெரிக்காவின் திட்டத்துக்கு கருவிகளாகவும் பயன்படுகின்றனர் என்பது தான் வேதனைக்குரியது. மண்ணில் ஒருவரின் முகத்தை புதைத்து கொள்வதால் புயலின் திசையை மாற்றி விட முடியாது.
நிராகரிப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள மேற்குலகு ஒரு போதும் ஏகத்துவத்தின் அடிப்படையில் உள்ள இஸ்லாத்தை சகித்து கொள்ளாது என்பதை அமெரிக்க ஆதரவு அடிவருடிகளாக உள்ள முஸ்லிம் மன்னர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளை மறுக்க கூடிய மேற்குலகு வெறும் உலகாதய   நோக்கங்களுக்காக    எல்லாவித    ஒழுக்க   மாண்புகளையும் காற்றில் பறக்க விடுகிறது. நபிமார்கள் கண்டித்த      ஓரினச்சேர்க்கைய சட்டபூர்வமாக்கியதன் மூலம் விலங்குகளை விட தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளது.
இஸ்லாமோ மனிதனின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வுக்குத் தேவையான கோட்பாடுகளைத் தெளிவாக்குவதோடு நன்மையின் பக்கம் நிலைத்திருப்பவனாகவும் தீயதை கண்டு பொங்கியெழுபவனாகவும் மாற்றுகிறது. மறுமையை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுபவனாகவும் உலகில் உள்ள எல்லா மனிதர்களிடத்தும் நீதியுடன் நடக்கவும் பணிக்கிறது. நீதி வழங்குவதில் எவ்வித பாரபட்சமும் காட்டாத தெளிவான பார்வையால் தான் இஸ்லாத்தின் காலடியில் அன்றைய பைஸாந்திய பேரரசும் ரோமாபுரியும் வீழ்ந்தது.
1924 வரை ஒரு தலைமையின் கீழ் இருந்த இஸ்லாமிய உம்மா இன்று மேற்குலகின் சதியால் பல கூறுகளாய் பிரிக்கப்பட்டாலும் இன்றும் அது மனித மற்றும் கனிம வளங்களில் நிறைவாகவே உள்ளது. இதனால் தான் உறங்கி கொண்டிருக்கும் உம்மா தன் தூக்கத்தை கலைந்து விழித்து விட்டால் இஸ்லாத்தின் கொடியில் ஓரணியில் திரண்டு விட்டால் தங்கள் ஏகாதிபத்தியங்கள் நொறுங்கி விடும் என்று மேற்கு குறிப்பாக அமெரிக்கா பயப்படுகிறது.
அதனால் தான் இஸ்லாத்தை மனித குலத்தின் விடுதலைக்கான திட்டமாக முன்வைக்க முயலும் இஸ்லாமியவாதிகள் மேற்குலகால் அச்சுறுத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். மேலும் அவர்களையும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கைகளின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்டலாம் எனும் நப்பாசையை ஊட்டி அவர்களை வலுவிலக்க செய்கின்றனர்.
ஏகாதிபத்தியங்களினால் நியமிக்க பெற்ற முஸ்லிம் உலகின் மன்னர்கள் அமெரிக்காவின் கட்டளைக்கு பணிந்து இஸ்லாத்திற்காக போராடும் இயக்கங்களை நசுக்க முயல்வது வெட்கக்கேடானது. முஸ்லிம்களும் தங்கள் இலக்கை மறந்து மார்க்கத்தின் கிளை பிரச்னைகளில் சண்டையிட்டு கொண்டு சகோதரர்களுக்கு குஃப்ர் பட்டம் கொடுத்து திருப்தி பட்டுக் கொள்கின்றனர். இச்சூழலில் தீண்டாமை, ஜாதி வெறி, நிற வெறி, ஏகாதிபத்தியம், மனிதன் உருவாக்கிய ஜனநாயகம், மதசார்பின்மை, தேசியவாதம் போன்ற அனைத்து விலங்குகளையும் உடைத்தெரிந்து உண்மையான சுதந்திரத்தை பெற்று தர வல்லது இஸ்லாம் மாத்திரமே என்பது உரக்க சொல்லப்பட வேண்டும்.
ஹஜ்ஜாஜ் பின் யூசுப் போன்றோரின் காலங்களில் கூட கொடுங்கோன்மையை எதிர்த்து தியாகம் புரிந்த இமாம்களை போன்று இக்காலகட்டத்தில் இதை உரக்க சொல்ல வேண்டியது உலமாக்களின் மீது கூடுதல் பொறுப்பாக உள்ளது. ஆனால் நடைமுறையில் ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாய் ஆலிம்கள் இருப்பது வேதனைக்குரியது. ருஸ்துமின் மேல் படையெடுத்து சென்ற ரபியா பின் ஆமிர் (ரலி) சொன்னதை போல் மக்களை பீடித்துள்ள அடிமைத்தளத்திலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் அடிமைகளாய் மாற்றுவது தான் இன்று உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
 அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (திருக்குரான் 61:8,9)



Sunday, July 3, 2011

இத்தனை சாக்குப் போக்குகளா ?

“தாத்தா புஷ்ராவோட சிறுநீர் உடுப்புல பட்டிருக்கின்றதே; அது நஜீஸ்….”


“ம்…. தெரியும். அதனால தான் இப்ப நான் தொழுவுறது இல்ல.”

“வாப்பா இஷாத் தொழுகைக்கு அதான் சொல்லப் போறாங்க. மஃக்ரிப் தொழப் போங்களேன்…”

“ஆ…. மகளே… இப்பதான் வேலை முடிஞ்சு வந்தேன்… பிறகு குளிச்சுட்டு இரண்டையும் சேர்த்து தொழுவோம்…”

“தம்பி… தொழப் போங்களேன்… உங்களுக்கு எத்தனை வயசாகுது; இன்னும் சின்னப்புள்ளன்னு நினைப்பா…?”

“அதான் சொல்லியாச்சு. போங்களேன் அவசரமா…. தொழாட்டி என்ன பாவம்னு தெரியும்தானே…?”

“சரி… சரி… போறேன்… இன்னைக்கி இல்ல. நாளையில இருந்து; முதல்ல இருந்து தொழுறேன் போதுமா...?”

“உம்மா ழுஹருக்கு அதான் சொல்லியாச்சு தொழவில்லையா…?”

“நான் அஸர் தொழுகை கிட்டவந்தவுடன் தொழுவுறேன் மகளே. அப்பத்தான் இரண்டையும் ஒரே ஒழுவில் தொழலாம்…”

இன்னும் சிலர் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்களேன்!

“மகளே, நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் எனக்கு கொஞ்சம் கஷ்டம்… நீங்க சொல்லி நான் செய்தால் உங்களுக்காக செய்யிற மாதிரி இருக்கும். அதனால எனக்கு எப்ப செய்யனும்னு தோனுதோ அப்ப செய்ய ட்ரை பண்றேன்…”

சகோதர சகோதரிகளே…! இந்த பதில்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்…?

இவையெல்லாம் நியாயமான காரணங்களா? அல்லாஹ் இவற்றை ஏற்றுக் கொள்வானா?

தொழுகை என்ற வணக்கத்தை இவர்கள் சாதாரண ஒரு விஷயமாக பார்க்கின்றார்களா? அல்லது தாங்கள் செய்யும் நாளாந்த வேலைகளில் ஒன்றாகக் கருதுகின்றார்களா?

மிஃராஜின்போது அல்லாஹுத் தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு (நமது சமுகத்துக்கு) வழங்கிய அற்புதமான பரிசே தொழுகையாகும். நம்மைப் படைத்த அருளாளனுடன் ஐந்து வேளையும் உரையாடும் ஓர் அரிய வாய்ப்பு. இத்தனைக்கும் மேலாக அது இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையுமாகும். 24 மணி நேரங்களில் நமக்கிருக்கும் அன்றாட வேலைகளில் ஒன்றல்ல தொழுகை. அதையும்விட முக்ககயமான ஓர் அமல்.

என்ன வேலையாக இருந்தாலும் அதான் கேட்டு விட்டால் இறைவனைத் துதிப்பதற்காக விரையுங்கள்; பின்னரே உங்கள் வேலைகளைப் பற்றி நினையுங்கள்.

அற்ப காரணங்களுக்காக தொழுகையை விடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. உண்மையில் நமது வாழ்க்கை முழுவதுமே இபாதத்தாக மாற வேண்டும். ஆனால், நமது முழு வாழ்விலும் ஓர் இபாதத்தை மேற்கொள்ள நம்மில் அநேகம் பேருக்கு பொடுபோக்கு. நாம் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

“இறையச்சம் உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு திண்ணமாக தொழுகை ஒரு பாரமான செயல் தான்.” (அல்குர்ஆன் 2:45)


தொழுகை நமக்கு பாரமாக அமைந்து விட்டால் நமது நிலை என்ன? இறையச்சம் இல்லாத கூட்டத்தில் அல்லவா நாம் சேர்ந்து விடுவோம்; அல்லாஹ் பாதுகாப்பானாக!

சகோதர சகோதரிகளே! “திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கிறது.” (அல்குர்ஆன் 29:45)


எம்மைச் சூழ நடப்பவை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். எத்தனைத் தீமைகள், எத்தனை மானக்கேடான நடத்தைகள்! உயிரோட்டமுள்ள தொழுகை இந்த சமூகத்தில் இல்லாததும் இதற்கு காரணம்தானே!

“நான் இப்படியெல்லாம் இல்லை” என்று நீங்கள் மட்டும் தப்பித்துக் கொண்டால் போதுமா? உங்கள் குடும்பம், அயலார், உறவுகள் மற்றும் நமது சமூகத்தின் செயல்களை அங்கீகரிக்கலாமா?

ஒருபோதும் முடியாது. நம்மையும் நம்மைச் சூழவுள்ள இடத்தையும் பாதுகாப்பதில் நமக்குப் பங்கு உண்டு. ஒரு முஃமினுடைய கண்குளிர்ச்சியாக இருக்கவேண்டிய தொழுகையை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருப்போம். நம்மை மட்டுமின்றி நமது சூழலையும், சூழலில் உள்ளவர்களையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வோம்.

சத்தியத் தூதினை நித்தியமாய் நாம் ஒவ்வொருவரும் காக்க வேண்டும். இறைவழியில் நம் பயணமும் தொடர வேண்டும். இன்ஷா அல்லாஹ்..!

(இதை படிக்கும் சகோதர, சகோதரிகள் தொழுகை உள்ளிட்ட இபாதத்துகளை உறுதியாக கடைபிடிக்கவும் முழு வாழ்வையுமே இபாதத்தாய் மாறவும் மீள்பிரசுரித்த எனக்கும் இதை எழுதிய ஸபானா ஸுஹைப்க்கும் பிராத்திப்பீர்களாக)
நன்றி : அல் ஹஸனாத் / ஸபானா ஸுஹைப்