Saturday, December 5, 2015

பாபரி மஸ்ஜிதும் தேசியவாதமும்


இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் அதிர்ந்தனர். ஒட்டு மொத்த உலகமும் 14 ஆண்டுகளாக அதை நினைவு நாளாக அனுஷ்டிக்கின்றனர். பிறக்கப் போகும் குழந்தைக்கும் தெரியும் அளவு ஊடகங்கள் அதை பிரஸ்தாபித்தன. அதன் பொருட்டு ஆப்கானிஸ்தான் சிதைக்கப்பட்டது.

பாரீஸில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூட்டின் காரணத்தால் வெகுண்டெழுந்த பிரான்ஸ் 100 உயிர்களுக்கு பகரமாக 430க்கும் மேற்பட்ட பொதுமக்களை சிரியாவில் கொன்று தீர்த்தது. எஸ் எஸ் என்று சொல்லப்படும் இஸ்லாமிய தேசத்தை நிர்மூலமாக்காமல் விட மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் உதாரணங்களே. அவற்றிலாவது மனித உயிர்கள் பலியாகின.

ஆனால்

ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்க்கப்பட்ட போதும்

சிரியாவில் பழங்கால சிலைகள் பாமிராவில் சேதப்படுத்தப்பட்ட போதும்

கூட உலகெங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தன. யாரும் வழிபடாத சிலைகள் என்றாலும், அங்கு அதை வணங்குபவர்கள் இல்லை என்ற போதும் எதிர்ப்பலைகள் எழுந்தன. அரசவை உலமாக்களே அதை வீறு கொண்டு எதிர்த்தனர்.

ஆனால்

மேற்கண்ட அத்துணை சம்பவங்களை விட இலட்சக்கணக்கில் முஸ்லீம் உயிர்களை பலி வாங்கியும் அதனினும் மேலாக முஸ்லீம்கள் இந்திய தேசத்தின் மீது வைத்திருந்த அத்துணை நம்பிக்கையும்

சுக்கு நூறாக்கிய சம்பவம் தான் பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்டது.

ஆனால் 56 முஸ்லீம் நாடுகள் இருந்தும் ஏன் எதிர் வினை வலிமையாக இல்லை ?

பட்டப்பகலில் பகிரங்கமாக அறிவிப்பு செய்து அல்லாஹ்வின் ஆலயம் இடிக்கப்பட்ட போது அதை அனுமதித்த இந்திய அரசுடனான ராஜ்ஜிய உறவை துண்டிக்க எந்த முஸ்லீம் நாடும் முன் வராதது ஏன் ?

இடிக்கப்பட்ட இடத்தில் பாபரி கட்டி தரப்படும் என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய இந்தியாவுக்கு பெட்ரோல் தர முடியாது என்று சொல்ல எந்த முஸ்லீம் நாடும் முன் வராதது ஏன் ?

சிரியாவிலும் பாகிஸ்தானிலும் முஸ்லீம் மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து சென்னையின் அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்ற போதும் இந்திய முஸ்லீம்களின் இதயத்தில் ஈட்டியை குத்திய அத்துயர சம்பவம் குறித்து உலகளாவிய இஸ்லாமிய இயக்கங்கள் கூட அமைதியாக இருப்பதேன் ?

இதே சம்பவம் மத்திய கிழக்கிலோ அல்லது ஆப்பிரிக்க முஸ்லீம் நாடுகளிலோ அல்லது கிழக்காசியா நாடுகளிலோ நடந்திருந்தால் அந்தந்த நாடுகளில் எதிர்ப்பலைகள் எழுந்திருக்காதா என்றால் நிச்சயம் எழுந்திருக்கும்.

அடிப்படை பிரச்னை என்னவென்றால் இன்னமுல் முஃமினூன இஹ்வா என்பதற்கேற்ப ஆஸ்திரேலியா முதற்கொண்டு அமெரிக்கா வரை வாழும் அனைத்து முஸ்லீம்களும் ஓரே உம்மா எனும் சர்வதேச கோட்பாட்டை மறந்து மனிதர்களை பிறந்த இடத்தை அடிப்படையாக கொண்டு பிரித்து போடும் முட்டாள்தனமான கொள்கையான தேசியவாதம் எனும் மாயையில் முஸ்லீம்கள் வாழ்வதே இதற்கான காரணம்.

அன்றைய அரபுகளோடு ரோமாபுரியை சேர்ந்த சுஹைபும், பாரசீகத்தை சரந்த சல்மான் பார்ஸியும் எத்தியோப்பியாவை சேர்ந்த பிலாலும் (அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக) ஓரணியில் எல்லா வித நிற, குல, தேசிய, மொழி வேறுபாடுகளை களைந்து ஓரணியில் நிற்க முடிந்தது. ஆனால் இன்று இன்று இந்திய முஸ்லீமுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் விரோதியாகவும் தமிழக முஸ்லீமுக்கு கேரளத்து முஸ்லீம் அந்நியனாகவும் தமிழ் பேச கூடிய முஸ்லீமுக்கு உருது பேச கூடிய முஸ்லீம் பகைவனாகவும் மாற்றப்பட்டிருக்கிறான்.

சென்னையில் பெய்த பெரு மழையால் இவ்வருட போராட்டங்கள் நடைபெறவில்லை எனினும் வரும் காலங்களிலாவது தேசியவாத தடைகளை தகர்ந்தெறிந்து உலகளாவிய உம்மத்தின் அங்கத்தினராகிய முஸ்லீம்கள் அல்லாஹ்வின் ஆலயத்தில் தொழ அயோத்தியை நோக்கி அணி வகுப்போம் இன்ஷா அல்லாஹ்.

Wednesday, October 21, 2015

லகும் தீனுகும் வலியத்தீனும் மத சார்பின்மையும்


 
இஸ்லாமிய தீவிரவாதம் எனும் சொல்லாடலை போல் லகும் தீனுகும் வலியத்தீனுக்கும் மத சார்பின்மைக்கும் உள்ள உறவு தொடர்பற்றதை போல் தோன்றினாலும் இன்றைய முஸ்லீம் சமூகத்தில் இரண்டுக்கும் மத்தியில் அழுத்தமான உறவு நிலவுகிறது. சொல்லப்போனால் இரண்டையும் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமோ அதற்கு நேர்மாற்றமாகவே சமூகம் புரிந்து வைத்துள்ளது என கருதுவது பிழையானதன்று.

எவ்வாறு விளங்கி வைத்துள்ளோம் ?

சூரத்துல் காபிரூன் அத்தியாத்தின் இறுதி வசனமான லகும் தீனும் வலியத்தீன் என்பதற்கு நேரடி அர்த்தம் "உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம்". இதை முஸ்லீம் சமூகம் அல்லாஹ்வே அவர்கள் அவர்களுடைய மார்க்கத்தை பின்பற்றட்டும். நாம் நம்முடைய மார்க்கத்தை பின்பற்றுவோம். மார்க்கத்தில் கட்டாயம் இல்லை என்று வேறு குர் ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என்ற ரீதியில் மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இவ்வசனத்தை பயன்படுத்துகின்றனர்.

தஃவாவே தேவையில்லை

அழைப்பு பணி செய்ய சிரமப்படும் சகோதரர்கள் அழைப்பு பணி ஒன்றும் அவ்வளவு அத்தியாவசிய அவசர பணி அல்ல என்பதை நிறுவ இவ்வசனத்தை துணைக்கு அழைத்து கொள்கின்றனர். இன்னும் சில சகோதரர்கள் அழைப்பு பணி வேண்டும், ஆனால் சிறுபான்மை நாட்டில் தீனை நிலை நாட்டும் பணி தேவையில்லை என்பதற்கும் இவ்வசனத்தை உபயோகப்படுத்தி கொள்கின்றனர்.

மதசார்பின்மையில் தங்கியுள்ளதா நமது வெற்றி

இஸ்லாத்தை ஓரளவு விளங்கி பின்பற்றும் சகோதரர்கள் கூட இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் நாம் மதசார்பின்மைக்கு எதிராக நடப்பது ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்களின் வெறிக்கு துணை போவதாக அமையும் என்றும் மதசார்பின்மை வாதிகளின் வெற்றியிலேயே நமது வாழ்வு தங்கியுள்ளது என்றும் நம்புகின்றனர். அதனால் தான் தாத்ரியில் மாட்டுக்கறி தின்றிருக்கலாம் எனும் சந்தேகத்தில் முஸ்லீம் முதியவர் அக்லாக் இந்து வெறியர்களால் அடித்து கொள்ளப்பட்ட போது இந்துத்துவாவை எதிர்க்கும் எழுத்தாளர்கள் இந்து அடிப்படை வாத குழுக்களால் கொல்லப்படும் போதோ, சட்டமன்ற உறுப்பினரே மாட்டு கறி பிரியாணி பரிமாறியதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களாலேயே அடிக்கப்பட்ட போதும் வாய் திறக்காமல் இருந்தாலும் நம்மவர்கள் மாத்திரம் உலகில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தினாலும் உடனே அதை கண்டித்து தாங்கள் தேசப்பற்றாளர்கள் என்று நிரூபிக்கும் இரண்டாம் தர குடிமக்கள் மன நிலையில் உள்ளார்கள்.

வசனத்தின் பிண்ணணி

நம்மில் பலர் விளங்கி வைத்திருப்பதை போல் மத சார்பின்மைக்கு ஆதரவாக அவ்வசனம் இறக்கப்படவில்லை. மாறாக இறைவனின் இறுதி தூதர் சத்திய இஸ்லாத்தை அம்மண்ணில் நிலை நாட்டிட எல்லா விதமான முயற்சிகளும் மேற்கொண்டிருந்தார்கள். அம்முயற்சியை முறியடிக்கும் விதமாக குறைஷி குப்பார்கள் மிரட்டல், ஆசை வார்த்தைகள் என்று பல்வேறு உபாயங்களை கையாண்டார்கள். மக்கத்து ஆட்சியை தருவதாகவும், அழகான பெண்ணை மணமுடித்து தருவதாகவும், செல்வ குவியல்களை கொட்டுவதாகவும் சராசரி மனிதனை சபலப்படவைக்கும் அத்துணை சமரச திட்டங்களையும் முன் வைத்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதரோ எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் குப்பார்கள் ஒரு கையில் சூரியனையும் இன்னொரு கையில் சந்திரனையும் கொடுத்தாலும் இப்பாதையில் தமது உயிர் போகும் வரை அல்லது மார்க்கம் மண்ணில் மிகைக்கும் வரை தனது பணி தொடரும் என்று தெளிவாக மொழிந்தார்கள்.


இச்சூழலில் தான் குப்பார்கள் இன்னொரு திட்டத்தை முன் மொழிகிறார்கள். அது என்னவெனில் அவர்கள் வணங்கும் லாத் உஸ்ஸா போன்றவற்றை முஹம்மது (ஸல்) குறிப்பிட்ட காலம் வணங்கினால், தாங்கள் அல்லாஹ்வை வணங்குவோம் என்று சொல்கிறார்கள். அப்போது தான் இவ்வத்தியாயத்தை அல்லாஹ் இறக்குகிறான். அம்மடையர்கள் சொல்வதை போல் அவர்களுடைய தெய்வத்தை நீங்கள் வணங்க முடியாது, உங்களுடைய தெய்வத்தை அவர்கள் வணங்க முடியாது, உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம் என பதிலளிக்க சொல்கிறான்.

இஸ்லாமும் மதசார்பின்மையும் வெவ்வேறானவை

எனவே இவ்வசனம் மதசார்பின்மையையோ மதசகிப்புதன்மையையோ போதிப்பதற்காக வரவில்லை. மாறாக சிலைகளை வணங்குபவர்களால் அல்லாஹ்வை வணங்குவதோ அல்லாஹ்வை வழிபடுபவர்கள் சிலைகளை வழிபடுவதோ முற்றிலும் முடியா விஷயம் என்பதை ஆழ உணர்த்துகிறது. ஒருவர் முஸ்லீமாக இருந்து கொண்டே காபிராகவும் இருக்க இயலாது. ஏனெனில் இரண்டின் வழிமுறையும் வெவ்வேறானவை.

இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் எக்காலத்திலும் ஜாஹிலிய்யாவுடன் ஒன்று சேராது என்பதை பறை சாற்றும் போர் முழக்கமாகவே லகும் தீனுகும் வலியத்தீன் பார்க்கப்பட வேண்டுமே அன்றி வேறு வடிவத்தில் அல்ல. இஸ்லாம் என்பது சிலை வணக்கம்,  மதசார்பின்மை உள்ளிட்ட மனித மனோ இச்சைகளால் உருவாக்கப்பட்ட மதசார்பின்மை போன்ற இசங்களோடு எக்காலத்திலும் சமரசமாகாது. அவைகளை வீழ்த்தி இஸ்லாத்தை மிகைக்க செய்யவே தூதர்களை அனுப்பினோம் என்று அல்லாஹ் கூறுவதற்கேற்ப இஸ்லாத்தை கலப்பற்ற முறையில் விளங்கி நடைமுறைப்படுத்துவோம். இஸ்லாத்துக்கு முழுமையாய் சான்று பகர இயலா பலவீனமானவர்களாக நாம் இருப்போமானால் குறைந்த பட்சம் ஜாஹிலிய்யாவிற்கு வெண் சாமரம் வீசாமல் இருக்க கூடிய ஈமானையாவது அல்லாஹ் நமக்கு வழங்குவானாக.

Saturday, August 8, 2015

இந்துத்துவம் விரும்பும் முஸ்லீம் ?

கடந்த மாதம் மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.என்பதை மறுக்க இயலாது. அதே சமயம் அவரின் மரணம் முஸ்லீம் சமூகத்தில் இரு வேறு அதி தீவிர நிலைப்பாடுகளை நோக்கி முஸ்லீம் சமூகத்தை தள்ளி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மரணத்தை ஒரு சாரார் மதங்களை கடந்த மனிதர் என்று புகழும் அதே நேரத்தில் இன்னொரு சாரார் அவர் முஸ்லீமே அல்ல என்றும் இகழ்கிறார்..
அப்துல் கலாம் முஸ்லீமா ? முனாபிக்கா ?
அப்துல் கலாம் முஸ்லீமாக வாழவில்லை, அதனால் அவருக்கு பிராத்திக்க கூடாது என்று சொல்வதும் அவரை ஷஹீது நிலைக்கு உயர்த்தி பின்பற்றே ஆக வேண்டிய முன்மாதிரியாகவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவும் கட்டமைப்பது என இரண்டும் இரு தீவிர நிலைகளாகும். நாம் இவ்வுலகில் இஸ்லாத்தின் பால் அழைக்க கூடிய தாயீக்களாக (அழைப்பாளார்களாக) இருக்க வேண்டுமே தவிர காழிகளாக (நீதிபதிகளாக) இருக்க கூடாது. நமது வழிகாட்டியான முஹம்மது ஸல் அவர்களுக்கு அல்லாஹ் முனாபிக்கிகளின் பட்டியலை அறிவித்து கொடுத்தும் அவர்கள் அதை பகிரங்கப்படுத்தாத நிலையில் நாம் அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுத்து ஒருவரின் சுவனம், நரகத்தை தீர்மானிப்பது நிச்சயம் தவறான வழியாகும்.
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?
அப்துல் கலாம் எளிமையானவர், படோபகம் விரும்பாதவர் என்பதிலும் அரசு பணத்தை கையாடல் செய்யவில்லை என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக அவரை சித்தரிப்பது சரியான செய்கையல்ல. மேலும் அவர் தமிழின் மீது தீரா காதலும் சுய சார்பு போக்கு உடையவராகவும் சித்தரித்து இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்தார் என்று மிகப் பெரும் பிம்பம் கட்டமைக்கப்படுவது ஆபத்தான போக்காகும்.
மூகமுடி
ஜனநாயகம் எனும் ஜாஹிலிய்யா அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கை தகரும் போதெல்லாம் அதை மீட்டெடுக்க பல பிம்பங்கள் உருவாக்கப்படுகிறது. ராஜிவ் காந்தி, வி.பி. சிங், மன்மோகன் சிங், அன்னா ஹசாரே, ஆம் ஆத்மி வரிசையில் குஜராத் கலவரத்தால் ஏற்பட்ட அவ நம்பிக்கையை துடைத்தெறிய பிஜேபியால் அணிவிக்கப்பட்ட மூகமுடியே அப்துல் கலாம்.
மக்கள் ஜனாதிபதி
மக்களின் ஜனாதிபதி என கொண்டாடப்படும் அப்துல் கலாம் மக்களை பாதிக்கும் எப்பிரச்னையிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளாரா என்றால் எடை குறைவான செயற்கை கால் பொருத்துதல் போன்ற சில நல்ல விஷயங்களை தவிர கார்பரேட்டை பாதிக்கும் எவ்விஷயத்திலும் தலையிட்டதில்லை. மாறாக உழைக்கும் மக்களுக்கு எதிராக தான் களத்தில் இருந்திருக்கிறார். மீனவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடிய போது அதை பிசுபிசுக்கும் விதத்தில் அணு உலை பாதுகாப்பானது என்று அறிக்கை விட்டார். மேலும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களில் கார்பரேட்டுக்கு ஆதரவாகவே தன்னுடைய விசுவாசத்தை காட்டினார்.
கனவு காணுங்கள்
அப்துல் கலாம் மாணவர்கள் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்றும் புகழாரம் செய்யப்படுகிறது. அப்துல் கலாம் நிகர் நிலை பல்கலைகழகங்களிலும் கேந்திர பள்ளிகளிலும் உரையாற்றிய அளவுக்கு அரசு கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. மேலும் நிகழ் காலத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக மாணவர்களை போராட தூண்டாமல் எதிர்காலத்தை குறித்த கனவிலியே லயிக்க வைத்ததின் பின்னால் மாணவர்களின் போராட்ட உணர்வை மங்க செய்யும் உத்தியோ என சந்தேகிக்க தோன்றுகிறது.
இந்துத்துவம் விரும்பும் முஸ்லீம்
அப்துல் கலாமை புகழும் போது இந்துத்துவம் விரும்பும் முஸ்லீம் என்றும் மதங்களை கடந்த மனிதர் என்றும் முஸ்லீம்களே சொல்வது வியப்பாக உள்ளது. இந்துத்துவம் ஒருவரை ஏற்று கொள்வது சரியான மனிதருக்கான அளவுகோல் என்றால் ஷா நவாஸ் உசேன், முக்தார் அப்பாஸ் நத்வி, சல்மான் கான் போன்றோர் தான் நல்லவர்கள் என்பதாக அர்த்தப்படும். மதங்களை கடந்த மனிதர் எனும் பதத்தின் மூலம் ஒருவர் எம்மதத்தை முழுமையாய் பின்பற்றினாலும் அவர் நல்ல மனிதராக இருக்க முடியாது எனும் மதசார்பின்மைவாதிகளின் வாதத்தை தான் முன் மொழிகிறார்கள். மாறாக நல்ல முஸ்லீமே நல்ல மனிதனாக இருக்க முடியும் என்றல்லாவா முழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்துத்துவா அப்துல் கலாமை விரும்புவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
நீங்கள் தனிப்பட்ட முறையில் தொழுகை, நோன்பு போன்றவற்றை கடைபிடித்து நல்ல முஸ்லீமாக இருப்பதை இந்துத்துவா எதிர்க்காது. உங்களுக்கு முன்னால் குஜராத்திலோ, இலங்கையிலோ இனச்சுத்திகரிப்பு நடந்தால் அதை கண்டும் காணாமல் இருப்பதை தான் இந்துத்துவா விரும்புகிறது. கல்வியின் அடிப்படையை மாற்றாமல் மெக்காலே அடிமை கல்வி முறையை ஊக்குவிப்பதை தான் இந்துத்துவா விரும்புகிறது. சுயசார்பு பேசி கொண்டே நம் இயற்கை வளங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழி விடுவதை தான் இந்துத்துவா விரும்புகிறது. இவற்றோடு ஒரு முஸ்லீம் அநீதிக்கு எதிராக அறச்சீற்றம் கொள்ளாமல் "எது நடந்தது அது நன்றாகவே நடந்தது" என்று கீதையை மேற்கோள் காட்டி உபன்யாசம் செய்தால் இவரை விட ஒருவர் இந்துதுவாவிற்கு பிடித்தவராக இருக்க முடியுமோ.
நமது முன்மாதிரி
அப்துல் கலாம் மட்டுமல்ல யாருடைய தனிப்பட்ட வாழ்வையும் துருவி ஆராய்ந்து அவரின் ஈமானை எடைபோடுவது நமது வேலையல்ல. ஆனால் யாரை நம்முடைய வழிகாட்டியாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதற்கு அளவுகோல் நம்முடைய மார்க்கத்தில் உள்ளது. அவ்வடிப்படையில் பார்த்தோமென்றால் தனிப்பட்ட வாழ்வில் நல்லவர்களாக அநீதியை கண்டும் காணாமல் போகும் நல்லவர்கள் நமக்கு முன்மாதிரியில்லை. மாறாக தனிப்பட்ட வாழ்வில் மாத்திரமல்ல பொது வாழ்விலும் நீதிக்கு சான்று வழங்குபவர்களாக அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்பவர்களே இஸ்லாம் விரும்பும் முன்மாதிரிகள்.