Saturday, August 17, 2013

எகிப்து படுகொலைகள் – சவூதி நயவஞ்சக அரசியலின் பின்னணி



ஜமால் அப்துல் நாசர் – 16 வருடங்கள்
அன்வர் சதாத் – 11 வருடங்கள்
ஹோஸ்னி முபாரக் – 31 வருடங்கள் என
மொத்தம்  58 வருடங்கள் மூன்று சர்வதிகாரிகளின் கீழ் பொறுமையாய் இருந்த எகிப்து மக்களால் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முர்சியின் ஆட்சியை ஒரு வருடம் கூட பொறுத்து கொள்ள முடியாமல் போனது ஆச்சர்யப்பட கூடிய ஒரு எதேச்சையான நிகழ்வு அல்ல. மாறாக இதன் பின்னால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நயவஞ்சக வெறுப்பு அரசியல் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இக்வானுல் முஸ்லீமினின் தோற்றம்
எகிப்தை சுரண்டிய அன்னிய ஆட்சியை அகற்றுவதையும் கிலாபத்தை கட்டியெழுப்புவதையும் நோக்கமாக கொண்டு பள்ளிக்கூட ஆசிரியரான ஹசன் அல் பன்னா அவர்களால் 1928ல் ஆரம்பிக்கப்பட்டஇக்வானுல் முஸ்லீமின்என்று அழைக்கப்படும் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் குறுகிய காலத்திலேயே பாலஸ்தீன், சிரியா, சூடான், ஜோர்டான், ஈராக் என பல்வேறு பகுதிகளுக்கு பரவியது
இக்வானுல் முஸ்லீமினின் வளர்ச்சி தங்கள் முடியாட்சிக்கு ஆபத்தாய் முடியும் என்று கருதிய மன்னர் ஃபாரூக் 1948ல் இக்வானுல் பன்னாவை சுட்டு கொன்று ஷஹீதாக்கினார். பின்னர் பாருக்கின் ஆட்சியை கவிழ்த்து ஜமால் அப்துல் நாசர் ஆட்சிக்கு வர இக்வானுல் முஸ்லீமின் உதவினாலும் பதவி வெறி பிடித்த நாசர் 1954ல் மீண்டும் இக்வானுல் முஸ்லீமீனை தடை செய்து அதன் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தார்.

சவூதியில் இஹ்வான்கள்
எகிப்தில் நிலவிய இக்கடும் போக்கால் சில உறுப்பினர்கள் சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் சென்று குடியேறினர். இஹ்வான்களின் கனவான இஸ்லாமிய ஆட்சி என்பது சவூதிக்கு எப்போதுமே அலர்ஜியான ஒன்று. ஏனெனில் கிலாபத்தின் வீழ்ச்சியில் முக்கிய பங்காற்றியதே சவூதி என்பது வரலாறு பொறித்து வைத்திருக்கும் உண்மை. மேலும் 90களில் சதாமுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்த போது அமெரிக்காவுக்கு உறுதுணையாக சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் நிற்க துனிஷியா, சூடான், ஏமன் மற்றும் துருக்கியில் இருந்த முஸ்லீம் சகோதரத்துவ கட்சியோ சதாமுக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

சவூதியில் தொழுகை உள்ளிட்ட வணக்க வழிபாடுகளில் மட்டும் தீவிர போக்கை மேற்கொண்டிருந்த ஸலபிகள் அரசியல் ரீதியாக இஸ்லாமியப்படுத்தப்படுவது சவூதிக்கு நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தும், இத்தவறை தான் இஹ்வான்கள் தெரியாமலேயே செய்தார்கள். ஆம் குறுகிய எல்லைக்குள்ளையே தங்களை நத்தையாக சுருக்கி கொண்டிருந்த ஸலபிகள் இஸ்லாமிய அரசியல் பற்றிய விழிப்புணர்வு பெற்றதற்கு சவூதியில் பணிபுரிந்து கொண்டிருந்த இஹ்வான்களே காரணம் என்பதே சவூதியின் கோபத்திற்கான முக்கிய காரணம்.

சவூதியின் இரட்டை நிலைப்பாடு
தங்கள் மீது செலுத்தப்படும் விசுவாசத்தை இரு புனித தலங்களின் பாதுகாப்பாளர் எனும் போர்வையை கொண்டு புனிதமாக்கிய சவூதிய அரசு தங்கள் குடிமகன்கள் பரிபூரணமான அடிமைத்தனத்தை தங்களுக்கு மட்டுமே செலுத்த வேண்டுமென்று நினைத்தனர். தங்களின் அமெரிக்க விசுவாசத்தை கேள்வி கணக்கின்றி ஒத்து கொள்ளும் சமூகமாகவே தம் குடிமக்களை சவூதி ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். ஹஜ்ஜுக்கு வரும் பெண்களுக்கு மஹ்ரத்தை கடமையாக்கும் அதே வேளையில் தவறுகள் நிகழ சாத்தியம் அதிகமுள்ள வீட்டு பணியாள்கள் விஷயத்தில் மஹ்ரத்தை கண்டு கொள்ளாமல் இருப்பதிலிருந்து தங்கள் ஷேக்குகளின் ஆடம்பர வெளிநாட்டு வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் கேள்வி கணக்கின்றி மக்கள் ஏற்று கொள்ளும் பொருட்டு மார்க்கத்தில் தீவிர நிலைப்பாடு கொண்டவர்களாகவும் தம்மை சவூதி அரேபியா காட்டி கொண்டு வந்துள்ளது.

சவூதியுடன் முரண்பட்ட ஒசாமா
ஆப்கன் ஜிஹாதுக்கு ஒசாமாவுக்கு உதவி செய்த சவூதி ஏமன் ஜிஹாதுக்கு உதவ முயன்ற ஒசாமாவை முடக்கியது போன்ற காரணங்களால் சவூதி அதிகார வர்க்கத்துடன் முரண்பட்டிருந்த ஒசாமா ஈராக் தாக்குதலை தடுக்க தாம் முன் வைத்த திட்டத்தை நிராகரித்து அமெரிக்க துருப்புகளை சவூதி அழைத்ததால் கடும் கோபம் அடைந்தார். பின் சவூது குடும்பம் தூக்கியெறியப்படுவதை தம் இலட்சியமாக அறிவித்தது அனைவரும் அறிந்ததே.

ஒசாமாவுக்கு முன்பே பல சீர்திருத்தவாதிகள் சவூதி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒசாமாவுக்கு பின்பே அந்த எதிர்ப்பு வீரியமடைந்தது. இவ்வாறு சவூதி அரசு கொண்டுள்ள மேற்கத்திய ஆதரவு கொள்கைக்கு எதிர்ப்பாகவும் கிலாபத்தை இலட்சியமாக கொண்டு போராடுவதற்கும் ஸலபிகள் முயல்வதற்கு காரணமாக இஹ்வான்களிடம் பெற்ற அரசியல் அறிவே காரணம் என்று சவூதி உறுதியாக நம்பியது. ஒசாமாவின் வாழ்வு குறித்து புத்தகம் எழுதிய மைக்கேல் ஸ்கூயர் கூட ஒசாமாவின் சிந்தனையை வடிவமைத்த முக்கியமான நபர்களாக  இஹ்வான்களின் சிந்தனை சிற்பி சையது குதுப், அப்துல்லா அஸ்ஸாம் போன்றாரை குறிப்பிடுகிறார். மேலும் சவூதியில் ஒசாமாவுக்கு கல்லூரியில் ஆசிரியராக சையது குதுபின் சகோதரர் முஹம்மது குதுப் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் தான் பெண் என்றும் பாராமல் ஜைனப் கஜ்ஜாலி உள்ளிட்ட இஹ்வான்களை கொடுமைப்படுத்திய சர்வதிகாரி முபாரக்கின் ஆத்ம நண்பராக சவூதி அரேபியா இருந்ததோடு முபாரக்குக்கு எதிரான மக்களின் போராட்டத்தை ஏற்று கொள்ள மறுத்தது. மேலும் எகிப்தில் இஹ்வான்கள் ஆட்சிக்கு வர கூடாது என்பதற்காக எல்லா வித முயற்சியிலும் இறங்கினார்கள்.

ஆட்சியில் இஹ்வான்கள்
அல்ஜீரியா மற்றும் காஸா தந்த படிப்பினையை கணக்கில் கொள்ளாமல் இஹ்வானுல் முஸ்லீமின் எகிப்தில் நடந்த புரட்சிக்கு பின் தேர்தலில் பங்கு பெற்று வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலுக்கு முன்பே ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து ராணுவம் அனைத்து அதிகாரங்களையும் தன் வசப்படுத்தியது. ராணுவம், சவூதி அரேபியா , அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து தரப்பினருடன் முர்ஸி சுமூக உறவை மேற்கொண்டாலும் அவர்கள் முர்ஸியை நம்பாமல் சந்தேக கண்ணோட்டத்துடனேயே பார்த்தனர்.

சர்வ வல்லமையுடன் ராணுவ தளபதியாக இருந்த தந்தாவி முர்ஸியால் பதவி நீக்கப்பட்டவுடன் முர்ஸி ஆட்சியில் இருப்பதன் அபாயத்தை உணர்ந்த ராணுவம், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க அரசுகள் முர்ஸிக்கு எதிரான பிரச்சாரத்தை அங்குள்ள காப்டிக் கிறிஸ்துவர்கள், இடதுசாரிகள், தாராளவாதிகள், மேலைத்தேய மோகிகள் என பல்வேறு தரப்பினரின் மூலம் மேற்கொண்டனர்.

அவர்களின் முயற்சியின் விளைவாக முர்ஸி ஜுலை 3 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டு ராணுவம் முபாரக் ஆட்சி காலத்தில் நீதிபதியாக இருந்த கிறிஸ்தவரான மன்சூரை இடைக்கால அதிபராக நியமித்தது. ஆனால் ராணுவ தளபதியாக உள்ள சிசி தான் உண்மையான அதிகாரத்துடன் கோலோச்சுவது அனைவரும் அறிந்த ஒன்றே. சிசியின் தாய் ஒரு யூதர் என்று சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மை என்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ராணுவத்தின் வெறியாட்டம்
முர்ஸியின் நீக்கத்துக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களை ராணுவம் ஒடுக்க நினைத்தது பலன் தராமல் போகவே தற்பொழுது நேரடியாகவே ராணுவம் களத்தில் இறங்கியுள்ளது. புனித மாதம் தொடங்குவதற்குள்ளாகவே முடித்து விட வேண்டுமே என்ற கவலையில் ராணுவம் கடந்த சில நாட்களாக அமைதியான முறையில் போராடி கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இது வரை 600 நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் கூறினாலும் சுமார் 5000 நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இஹ்வான்கள் தரப்பில் கூறப்படுகிறது. 3000 நபர்கள் இரட்டை கோபுர தாக்குதலில் கொல்லப்பட்டதற்காக ஆண்டுக்கணக்கில் நினைவஞ்சலி நடத்தி ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளை சுடுகாடாக்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எகிப்து விஷயத்தில் நடந்து கொள்ளும் முறை தெளிவான நயவஞ்சகமே.
இஸ்லாத்தை கருவறுக்க நினைக்கும் அமெரிக்கா கூட வாயளவிலாவது இப்படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எகிப்து படுகொலைகளை கண்டித்துள்ள நிலையில் இரு புனித தளங்களின் ஊழியராக தம்மை பிரகடனப்படுத்தியுள்ள சவூதி அரேபியோவின் நடவடிக்கையோ இதற்கு நேர்மாற்றமாக உள்ளது.

ஆயிரக்கணக்கான இஹ்வான்களையும் அவர்களுக்கு ஆதரவளித்த பொதுமக்களையும் கொன்று குவித்த எகிப்திய ராணுவம் பள்ளிவாயில்களில் தஞ்சம் புகுந்துள்ள இஹ்வான்களை வேட்டையாடும் நோக்கில் ராணுவம் புகுந்து வேட்டையாடுகிறது. தன்னை பிர் அவ்ன் என்று வர்ணித்து கொண்ட முபாரக்கின் ஆட்சி காலத்தில் கூட இத்துணை இஹ்வான்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டதில்லை என்றே சொல்லலாம். ஹசன் அல் பன்னாவின் பேரன், இக்வானுல் முஸ்லீமினின் தலைவர் முஹம்மது பதியின் மகன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

சவூதியின் பச்சை துரோகம்
இத்துணை முஸ்லீம்களின் இரத்தத்தை ஓட்டிய எகிப்திய ராணுவத்தை கண்டிக்க மனமில்லாமல் தீவிரவாதத்திற்கெதிராக போராடும் எகிப்துக்கு தம் முழு ஆதரவையும் சவூதி மன்னர் அப்துல்லா தெரிவித்துள்ளார். முர்ஸி பதவியிலிருந்து விலக்கப்பட்டவுடன் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்ததோடு பில்லியன் கணக்கில் நிதியுதவி அளித்த சவூதி அரேபியா எகிப்தின் போராட்டத்திற்கு அரபுகள் துணை புரிய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

தம் அதிகார ருசிக்காக கிலாபத்தையே உடைத்த சவூதி அரேபியா, தம் ஆட்சியை தக்க வைத்து கொள்ள உம்மத்தின் ரத்தத்தையே ஒட்டவும் தயங்காத இவர்களை இனியும் உம்மத்தின் பாதுகாவலர்கள் என நம்பி ஏமாற போகிறதா இச்சமூகம் அல்லது எகிப்தின் படிப்பினையிலிருந்து பாடம் பெற்று உண்மையான போராட்டத்தின் பக்கம் இஹ்வான்கள் சாய்ந்து இறைவனின் திருப்தி பெற்றவர்களாக மாற போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (இறைவனின் இறுதி வேதம் 2 : 151 – 155)