Wednesday, September 30, 2009

தீனை நிலைநாட்டுதல் என்றால் என்ன ?

இறைத்தூதர்கள் அனைவருக்கும் தீனின் தன்மை கொண்ட சட்ட திட்டம்தான் அருளப்பட்டது. அதுவும் ஒரு முக்கியமான வழிகாட்டுதலுடனும் அறிவுறுத்தலுடனும் தான் அருளப்பட்டது.
அதாவது இறைத்தூதர்கள் அனைவருமே இந்த தீனை நிலைநாட்டுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டனர். இந்தக் கட்டளையுடன்தான் அவர்களுக்கு இந்த தீன் அருளப்பட்டது.
‘அக்கீமுத்தீன்’ என்பதற்கு ஷா வலியுல்லாஹ் அவர்கள் ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஷா ரஃபீயுத்தீன் சாகிபும் ஷா அப்துல் காதிர் அவர்களும் இதற்கு ‘நிலை நிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருங்கள்’ என மொழி பெயர்த்துள்ளனர்.
இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளும் பொருத்தமானவையே! இகாமத் என்பதற்கு நிலைநாட்டுதல் என்கிற பொருளும் உண்டு. நிலை நிறுத்தப்பட்ட நிலையில் வைத்திருத்தல் என்கிற பொருளும் உண்டு. இறைத்தூதர்கள் எல்லோருமே இந்த இரண்டு பணிகளையும் செய்வதற்காகவே பணிக்கப்பட்டிருந்தார்கள்.
எங்கு இந்த தீன் நிலைநாட்டப்படவில்லையோ அங்கு இந்த தீனை நிலைநாட்டுவது அவர்களின் முதன்மைக் கடமையாக இருந்தது. எங்கு இந்த தீன் நிலைநாட்டப்பட்டு விட்டதோ அங்கு நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருப்பது அவர்களின் இரண்டாவது கடமையாக இருந்தது.
நிலைநிறுத்தப்பட்ட நிலையில் ஒன்றை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எப்போது வரும்? அது ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும்போதுதானே..! இல்லையெனில் முதலில் அதனை நிலை நாட்ட வேண்டியிருக்கும். பிறகு அது நிலை நிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருப்பதற்காகத் தொடர்ந்து இடைவிடாமல் பாடுபடவேண்டியிருக்கும்.
இப்போது இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக தீனை நிலை நாட்டுதல் என்பது என்ன? இரண்டாவது எதனை நிலைநாட்டும்படியும் எதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்யும்படியும் நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கின்றதோ அந்த தீன் எது? எதனைக் குறிக்கின்றது? இந்த இரண்டையும் நல்ல முறையில் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
ஒரு திடப் பொருளை நிலை நாட்டுங்கள் என்றால் என்ன பொருள்? சாய்ந்து கிடப்பதை நேராக நிறுத்துங்கள் என்பது தானே! எடுத்துக்காட்டாக கீழே விழுந்து கிடக்கின்ற கோலையோ, தூணையோ நிமிர்த்தி நேராக நிலைநிறுத்தி வைத்தல்; அல்லது சிதறிக்கிடக்கின்ற உட்பகுதிகளை ஒன்று சேர்த்து மேலெழுப்புதல் என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, வெற்று மைதானத்தில் கட்டிடம் கட்டி எழுப்புதல். அதே போன்று உயிருள்ளவற்றை நிலை நாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அமர்ந்திருப்பவரை நிற்கச் செய்வதுதானே! எடுத்துக்காட்டாக, உட்கார்ந்திருக்கின்ற மனிதனையோ, விலங்கையோ நிற்கச் செய்தல்.
ஆனால் திடப் பொருளாகவோ, உயிருள்ள பொருளாகவோ இல்லாத, சிந்தனையை நிலைநாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்; மக்கள் மத்தியில் அந்தச் சிந்தனையைக் குறித்துப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பது தானா? இல்லை. சிந்தனையை அல்லது சித்தாந்தத்தை நிலைநாட்டுங்கள் என்றால் அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்;மக்கள் மத்தியில் அதனைக் குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பதோடு பொருள் முடிந்துவிடுவதில்லை. அந்தச் சித்தாந்தத்தைக் கூடுதலோ குறைவோ இல்லாமல் முழுமையாகச் செயல்படுத்துங்கள்; அதனையே நடைமுறையாக்கி விடுங்கள்; அதனை அன்றாட வாழ்வில் நிறுவி விடுங்கள் என்று அதன் பொருள் விரிந்து கொண்டே போகும்.
எடுத்துக்காட்டாக, இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியை நிறுவினார் என்று சொல்லும்போது அதற்கு என்ன பொருள்? இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியின் பக்கம் மக்களை அழைத்தார் என்பதா? இல்லை. அதற்கு மாறாக, அவர் தம்முடைய நாட்டு மக்களைத் தம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பவர்களாக ஆக்கிக் கொண்டார்; அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் தம்முடைய ஆணைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றவையாக மாற்றி அரசாங்கத்தின் மீது தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். தம்முடைய விருப்புவெருப்புகளின் அடிப்படையில் நாட்டின் அனைத்து விவகாரங்களும் அரங்கேறுகின்ற வகையில் எல்லாவற்றிலும் தம்முடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டார் என்றுதான் அதற்குப் பொருள்.
இதே போன்று இந்த நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்? அழகான கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன என்பதா? நீதியரசர்கள் பல்லாண்டுகள் நாட்டின் சட்ட திட்டங்களைப் படித்து மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் குறித்து பாடம் நடத்துகின்றார்கள் என்பதா? நீதி, நியாயம் ஆகியவற்றின் முக்கித்துவத்தையும் சிறப்பையும் வலியுறுத்தி மணிக்கணக்காகப் பேசுகின்றார்கள்; மக்களும் அவர்களின் எழுச்சிமிகு உரைகளைக் கேட்டு மனம் லயித்து நீதியின் சிறப்பை உணர்ந்து கொண்டார்கள் என்றா பொருள்? நிச்சயமாக இல்லை.
அதற்கு மாறாக, அழகான, பரந்து விரிந்த கட்டடங்களும் இருக்கின்றன; நீதியை நிலைநாட்டுவதற்காக நீதியரசர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றார்கள்; நீதம் செறிந்த திர்ப்புகளையும் குறித்த நேரத்தில் அளிக்கின்றார்கள்; மக்களுக்கு நீதி தாமதமின்றி, செலவின்றி கிடைத்துவிடுகின்றது என்பதுதான் ‘நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன’ என்பதற்குப் பொருள் ஆகும்.
இதே போன்று தொழுகையை நிலைநாட்டுங்கள் என குர்ஆனில் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது எனில், அதற்குப் பொருள் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு போன்றவற்றைக் குறித்தும் தொழுகையினால் கிடைக்கின்ற நன்மைகள் பற்றியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதல்ல. தொழுகையை அழகாக, நேர்த்தியாக, குறைவில்லாமல் தாமும் நிறைவேற்றுவதுடன் நம்பிக்கையாளர்கள் எல்லோருமே ஐவேளைகளிலும் ஜும்ஆவிலும் குறித்த நேரத்தில் எவ்வித சிரமுமில்லாமல் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கும் வசதி செய்தல் வேண்டும்; பள்ளி வாசல்கள் பாங்குடன் இயங்க வேண்டும்; குறித்த நேரத்தில் தொழுகைக்காக அழைப்பும் கொடுக்கப்பட வேண்டும்; இமாம்களும், கதீப்களும் நியமிக்கப்பட்டு அவர்களும் தத்தமது பணிகளைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்; மக்களும் ஐவேளையும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது போகின்றவர்களாக மலர வேண்டும். இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தொழுகை நிலைநாட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியும்.
இதுவரை சொன்ன விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் படித்த பிறகு ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என இறைத்தூதர்களுக்குத் தரப்பட்ட கட்டளையின் முழுவீச்சையும் முழுமையான பரிமாணங்களையும் ஒருவரால் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். அதில் யாதொரு சிரமமோ, குழப்பத்திற்கோ இடமிருக்காது.
இறைத்தூதர்களுக்கெல்லாம் ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என்கிற கட்டளை இடப்பட்டதெனில் அதற்கு என்ன பொருள்? இறைத்தூதர்கள் எல்லோருமே தீனின் கட்டளைகளுக்கேற்பச் செயல்பட வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.
இறைத்தூதர் அந்த தீனைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; தீனின் சிறப்பியல்புகளையும், முக்கிய கோட்பாடுகளையும் எந்தவிதச் சிரமத்திற்கும் இடமில்லாத வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்; நேர்வழி என்றும், சரியான, உண்மையான வழிகாட்டுதல் என்றும் மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு தீனை நல்ல முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.
மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொண்ட பிறகு இன்னும் ஒருபடி முன்னேறி தீன் முழுவதையும் தம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி நிலைநாட்ட வேண்டும்; வாழ்வின் அனைத்து துறைகளும் தீனின் போதனைகளுக்கேற்ப இயங்குகின்ற அளவுக்கு முழுமையான மாற்றம் மலர வேண்டும்; அந்த மாற்றம் நீடித்து நிலைக்க வேண்டும்.
அந்த முழுமையான மாற்றம் நிலைபெறுவதற்காக முழுமையான கவனத்துடனும் அக்கறையுடனும் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தீன் நிலைநாட்டப்பட்டதாகச் சொல்ல முடியும்.
அழைப்புப் பணி, பிரச்சாரப் பணி போன்றவற்றுடன்தான் இந்த மிகப்பெரும் பணி தொடங்கும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.தொடக்கத்தில் இந்த இரண்டு பணிகளும் இன்றியமையாதவை என்பதில் சந்தேகமில்லை. இந்த இரண்டை மேற்கொள்ளாமல் அடுத்தக்கட்ட பணிகளை ஏறெடுத்தும் பார்க்க முடியாது என்பதும் உணமையே. ஆனால் பிரச்சாரமும் அழைப்புப் பணியும்தான் எல்லாமே என்பதல்ல. பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும்தான் முழுமுதல் நோக்கம் என்பதல்ல.
தீனை நிலைநாட்டுங்கள் என்கிற கட்டளையை அறிவார்ந்த முறையில் ஆய்ந்து பார்க்கின்ற எவரும் இதனை எளிதாக விளங்கிக் கொள்வார். பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும் துணைக்கருவிகளே தவிர, முதன்மை இலக்குகள் அல்ல என்பதையும் தீனை நிலைநாட்டுவதும், அதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்வதும்தான் உண்மையான இலக்குகள் என்பதையும் புரிந்து கொள்வார்.
இந்த முதன்மை இலக்குகளை அடைவதற்குத் துணைபோகின்ற கருவிகள்தான் அழைப்புப் பணியும், பிரச்சாரப் பணியும் என்பதைப் புரிந்து கொள்வார். இறைத்தூதர்களின் தூதுத்துவப் பணியின் ஒற்றை இலக்கே அழைப்புப் பணியையும், பிரச்சாரப் பணியையும் திறம்பட மேற்கொள்வதுதான் என எவருமே சொல்லத் துணியமாட்டார்.

மெளலானா மெளதூதி (ரஹ்) தமிழில் : அஜீஸ்லுத்புல்லாஹ் நன்றி : சமரசம் செப் 16-31,2009

Wednesday, September 23, 2009

அஞ்சாமையே அழைப்பாளனின் உடைமை

சத்திய அழைப்பாளன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பு ‘கால இன்னனி மினல் முஸ்லிமீன்’ அதாவது ‘நான் நிச்சயமாக முஸ்லிமாக உள்ளேன்’ என்பது. இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் மக்கா நகரின் சூழலுக்கு ஒரு மீள் பயணம் செய்ய வேண்டும்.
தன்னந்தனியாக ஒருவர் எழுந்து நின்று, ‘நான் ஓரிறைக்கொள்கையை ஏற்றவனாக அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து முஸ்லிமாக இருக்கிறேன்’ எனப் பிரகடணம் செய்வது சாதாரண நிகழ்வன்று.
இது கட்டற்ற கொடுமைகளுக்கும் காட்டுவிலங்காண்டித்தனத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரித்து முகமன் கூறி வரவேற்பதைப் போன்றது.
எனவே ஒரு சத்திய அழைப்பாளன் அல்லாஹ்வின் பால் அழைக்கிறவன் என்பது மட்டுமன்று, உன்னத பண்புகளைக்கொண்ட உத்தமனாக விளங்குபவன் என்பது மட்டுமன்று, கடும் பகைவர்களுக்கு இடையிலும், கடுமையான சூழலிலும் தனி ஒருவனாக நின்று தான் ஒரு முஸ்லிம் என்று அறிவிப்பதில் அச்சமோ, தயக்கமோ, தடுமற்றமோ கொண்டவனாக இருக்க்க் கூடாது. துணிச்சலாக, வெளிப்படையாக, ஆம்; நான் முஸ்லிம்தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’ என்று பறைசாற்றுபவனாக இருக்க வேண்டும்.
வேறு சொற்களில் கூற வேண்டுமெனில் சத்திய அழைப்பாளன் ஒருவன் துணிவும், அச்சமின்மையும், வீரமும், தீரமும் கொண்டவனாக திகழ வேண்டும்.இறைவனின்பால் அழைப்புவிடுக்கும் தூய பணியை சிறிய தீண்டலிலேயே நீர்க்குமிழி போல் அமுங்கிவிடும் ஒரு கோழையால் நிறைவேற்ற இயலாது. இப்படிப்பட்டவனால் எப்போதும் அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுக்க முடியாது.
கடுமையான பகைமையும், பெரும் எதிர்ப்புகளும், பேராபத்துகளும் மிகுந்த பயங்கரமான சூழலில் இஸ்லாத்தின் கொடியை ஏந்தி, விளைவுகளைப்பற்றி அஞ்சாமல் செயல்படுகிறவரால் மட்டுமே இறைவனின் பால் அழைப்பு விடுக்க முடியும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் வீரமும், தீரமும் கொண்ட ஒரு முன்மாதிரி அழைப்பாளராய் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். மக்கா நகரில் தனி ஒருவராக நின்று வெளிப்படையாக இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள். சத்தியத்திற்கு சான்று பகரும் கடமையை நிறைவேற்றினார்கள்.
அண்ணலாரைக் கொன்றுவிட வேண்டும் எனத்துடிக்கும் இரத்த வெறி கொண்ட மக்களிடையே இந்த அழைப்பு விடுக்கப்பட்ட்து. அண்ணலாரையும் அவருடைய தோழர்களையும் தாங்கொண்ணாத் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் இலக்காக்கினார்கள்.
அந்தக் கொடுமையாளர்களுக்கு இடையில்தான் ‘அல்லாஹ்வின்பால் வாருங்கள்’ என்ற அழைப்பு விடுக்கப்பட்ட்து.தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் தம் அழைப்பை விரிவுபடுத்திக் கொண்டே போனார்கள். பின்னர் மதீனா சென்ற பிறகு எத்தகைய நிலைமைகள் உருவாகின..! எத்தனை பயங்கரமான சூழல்..! கடும் தாக்குதல்கள்..! ஆயினும் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை.
ஹுனைன் போரின்போது முஸ்லிம் படைகள் பின்வாங்கிய நிலையில், தோல்வியைச் சந்திக்கிற நேரத்தில், பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் உறுதியுடன் இருந்தார்கள். களத்தின் முதல் பகுதியில் பகைவர்களின் அணிகளுக்கிடையில் புகுந்து போர் புரிந்த வண்ணம் முன்னேறுகிறார்கள். அதே சமயம் தாம் யார் என்பதையும் உரக்கச் சொல்கிறார்கள்.
‘அனன் நபிய்யு லாகஸிப் அனப்னு அப்துல் முத்தலிப்’
‘நான் இறைவனின் தூதர். இது பொய்யன்று. நான் அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்’
என்று உரைக்கிறார்கள்.
எப்படிப்பட்ட சூழல் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கடுமையான போர்க்களம். பகைவர்கள் தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணலாருக்கு அருகில் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் இரண்டு மூன்று பேர்கள் தான் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஆபத்தான சூழலிலும், ‘ஆம்; நான் இறைவனின் தூதன்தான்; நான் ஒரு நபிதான்’ எனப் பறைசாற்றுகிறார்கள். அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கின்ற ஒரு சத்திய அழைப்பாளன் இந்த அளவுக்கு வீரமும் துணிச்சலும் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
- மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் ஒரு கட்டுரையிலிருந்து........
தமிழில் : மௌலவி ஜபருல்லாஹ் ரஹ்மானி.
நன்றி : சமரசம் செப்டம்பர் 16-31, 2009

Monday, September 14, 2009

ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிராதயமல்ல

தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அள்ளாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.


நோன்பின் பெறுமதி தக்வாவில் தங்கியிருக்கிறது.
நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தஹஜ்ஜீத்தில் வீங்குமே
இடக்கை அறியாமல் - சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.


இளைஞர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.


இந்த நன் நாளில்
கேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.
டி.வியிலிருந்துகண்ணை கழட்டுங்கள்.
அந்த டி.வி.டியை இன்றேனும் தூக்கில் போடுங்கள்.
காதுகளுக்கு கீதம்விஷம் என்று சொல்லுங்கள்.


எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும்
இளைஞர்களேஅந்த இரவு நேர மரத்திலிருப்பது தெம்பிலி அல்ல
உங்கள் ஒழுக்கங்கள்- வெட்டாதீர்கள்
அந்த மாமரத்திலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்- ஏன் உடைக்கிறீர்கள்.
வெடிகளை அல்ல- அதை கொளுத்த வேண்டும்
என்ற மடமையை கொளுத்துங்கள்.


நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்.
அந்த இரவுகள் தூய்மையாகவே
இருந்துவிட்டு போகட்டும்.

நாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோற்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.


தோழர்களே....
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.

இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.
இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.
இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும் மயானத்தில் அல்ல
காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.

நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.


நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்.
நோன்பில்லாத ஹிட்லர்
மண்ணிடம் தோற்றான்.
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்.


நோன்பு மரம்,
இந்த மரம்
மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை
தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு
பெட்ரோல் ஊற்றும்.


நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல

இலங்கை ஜமிய்யாவுக்கு மனமார்ந்த நன்றி