Sunday, July 10, 2016

ஜாகீர் - நாயக் or கல் நாயக் - பிண்ணணியும் படிப்பினையும்

கடந்த சில நாட்களாக ட்விட்டர், முக நூல், தொலைக்காட்சி, அச்சு ஊடகம் என்று எங்கெனும் நீக்கமற விவாதிக்கப்படும் விடயம் ஜாகீர் நாயக் மீதான சர்ச்சையே. அதை குறித்த காய்தல் உவத்தற்ற நடு நிலை அலசலை தர முயற்சிக்கிறேன். இக்கட்டுரை முழுமையாய் படித்த பின் விமர்சிக்க வேண்டுகிறேன்.

சர்ச்சையின் சாரம் :
வங்கதேச தலைநகர் டாக்காவில் சமீபத்தில் நடந்த உயிர்தியாக  தாக்குதலில் 20 நபர்கள் பலியானர். இத் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் ஜாகீர் நாயக்கின் முக நூல் பக்கத்தை லைக் செய்துள்ளனர் என்பதோடு ஜாகீர் நாயக்கின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு அவரின் பேச்சுக்கள் தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்ததாகவும் சொல்லியுள்ளனர். இதை தொடர்ந்து வங்க தேச அரசு இந்திய அரசிடம் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை விசாரிக்குமாறு கோரியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்திய அரசு தற்போது ஜாகீர் நாயக்கின் பேச்சுக்கள் குறித்து விசாரிக்க 9 கமிட்டிகளை அமைத்துள்ளது. அவரின் முந்தைய பேச்சுக்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனுமதி பெறாமல் ஒளிபரப்படும் பீஸ் தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கத்தி பேசினால் பொய்யை உண்மையாக்கி விடலாம் என்று செயல்படும் அர்னாப் கோஸ்வாமி ஜாகீர் நாயக்கை தீவிரவாதியாகவே சித்தரித்து ஹபீஸ் சையதுயுடன் ஒப்பிட்டு ஜாகீர் நாயக்கின் பேச்சுரிமை பறிக்கப்பட வேண்டும். அவரின் பீஸ் தொலைக்காட்சி முடக்கப்படுவதோடு அவரின் டிரஸ்டுக்கு வரும் ஒவ்வொரு பைசாவும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று விஷத்தை கக்கினார். 

யார் இந்த ஜாகீர் நாயக் ?
அடிப்படையில் மருத்துவரான ஜாகீர் நாயக் ஷேக். அஹ்மத் தீதாத்தின் தஃவாவின் மூலம் கவரப்பட்டு அவரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அழைப்பு பணி செய்ய ஆரம்பித்தவர். பின் தன் மருத்துவ தொழிலை கைவிட்டு முழு நேர அழைப்பாளராக மாறினார். இஸ்லாமிய ஆய்வு மையத்தை  (Islamic Resarch Foundation - IRF) ஆரம்பித்தவர் உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாமும் பிற மதங்களும்  குறித்து சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். பிற தாயிக்கள் போல் அல்லாமல் கோட் சூட் போட்டு ஆங்கிலத்தில் குரான் மற்றும் பல்வேறு மத கிரந்தங்களிலிருந்து மனனமாக பேசும் ஜாகீர் நாயக் முஸ்லீம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். முக நூலில் ஒரு கோடியே 40 இலட்சம் நபர்களும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் யூ டியூபிலும் பின் தொடர்கின்றனர் என்பதோடு 10 கோடிக்கும் மேற்பட்டோர் பீஸ் (PEACE) தொலைக்காட்சியை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்லாமிய அறிஞரா அல்லது ஸலபி பிராச்சகரா
ஜாகீர் நாயக் குறித்து பல்வேறு பிம்பங்கள் பல்வேறு குழுவினரால் முன் வைக்கப்படுகின்றன. அவரை ஆதரிப்பவர்கள் கொஞ்சம் அதிகமாகவே அவர் அனைத்தையும் கற்ற மார்க்க அறிஞராகவும் அரபு இஸ்ரேல் போரில் ஈடுபட்ட போராளி போன்றும் சித்தரிக்கும் அதே வேளை வேறு சில முஸ்லீம்களோ அவரை வஹ்ஹாபியாகவும் முஸ்லீம்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துபவராகவும் பார்க்கின்றனர். ஜாகீர் நாயக்குக்கு தடை என்றதும் காவிகளுக்கு ஒப்பாக தரீக்காவாதிகளும், ஷியாக்களும் கிறித்துவ மிஷனரிகளும் சந்தோஷப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகையானதல்ல.

ஜாகீர் நாயக்கே தன்னை இஸ்லாம் மற்றும் பிற மதங்கள் குறித்த ஆய்வு மாணவன் என்றே அறிமுகம் செய்கிறார். அவரின் பேச்சாற்றலும் அவரின் வீச்சும் பிரமிப்பானவை என்றாலும் கிலாபத் குறித்தோ, ஜாஹிலிய்யா அரசை விமர்சித்தோ இஸ்லாம் மற்றும் பிற சித்தாந்தங்கள் குறித்து ஆய்வு அல்ல பேச கூட தயங்கும் ஒருவரை நிச்சயம் முஜத்தித் எனும் அந்தஸ்தில் வைத்து பார்க்க இயலாது. அதே சமயம் இஸ்லாத்திற்கு மாற்றமான தர்கா வழிபாடு, தாயத்து, வரதட்சணை குறித்த பேச்சுக்களால் அவரை ஸலபி பேச்சாளர்  என்று சுருக்கவோ இயலாது. இது ஒவ்வொரு முஸ்லீமின் அடிப்படை நம்பிக்கையாகும். வேண்டுமெனில் அவரை ஸலபி ஆதரவு போக்கு கொண்ட இஸ்லாம் மற்றும் பிற மதங்கள் குறித்து பேசும் பேச்சாளர் என்று சொல்லலாம். ஜாகீர் நாயக் அப்படி முழுமையான இஸ்லாத்தை பேசி இருந்தால் அவரால் துபாய், ஷார்ஜா, சவூதி, மலேசியா மற்றும் காம்பிய நாட்டின் அரசுகளின் உயரிய விருதுகளை வாங்கியிருக்க முடியாது.

ஜாகீர் நாயக்கும் தீவிரவாதமும்
ஜாகீர் நாயக் மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகளில் முதன்மையானது அவர் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார் மற்றும் ஐ எஸ் ஐ எஸ் போன்ற குழுக்களில் சேர்வோருக்கு உந்து சக்தியாக விளங்குகிறார் என்பதே. ஆனால் இதற்கு மாற்றமாக ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை கடுமையாக ஜாகீர் நாயக்கை விமர்சித்துள்ளதோடு ஒரு அப்பாவியை கொலை செய்வது ஒட்டு மொத்த மனித குலத்தை அழிப்பதற்கு சமம் என்று தீவிரவாதத்திற்கு எதிராக போர் பரணி பாடுகிறார். ஒசாமா பின் லேடன் மற்றும் செப்டம்பர் 11 தாக்குதல் குறித்து பேசும் போது ஊடகத்தில் வெளியாகும் தகவல்களை வைத்து தன்னால் ஒருவரை தீவிரவாதி என்றோ நல்லவர் என்றோ சொல்ல முடியாது என்று விளக்கமளிக்கிறார். அவர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்பது எள்ளளவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.

ஏன் பல்வேறு நாடுகள் தடை விதித்தன?
ஜாகீர் நாயக்குக்கு ஏற்கனவே அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து , மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் தடை விதிக்கும் போது இந்தியா ஏன் தடை விதிக்க கூடாது என்று ஜாகீர் நாயக்குக்கு எதிராக கேள்வி எழுப்புகின்றனர். உண்மையில் இங்கிலாந்து தவிர எந்நாட்டிலும் அவருக்கு தடைஎதுவுமில்லை. மலேஷியாவில் ஹிந்த்ராப்பின் எதிர்ப்பை மீறி நடந்த ஜாகீர் நாயக்கின் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மதும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் கூட பெண்களின் ஆடை குறித்து குரான் கூறும் கருத்துக்களை ஜாகீர் நாயக் சொன்னதே அவரை சர்ச்சைக்குள்ளாக்கியது. கனடாவில் அவருக்கு அனுமதி மறுக்கப்படும் என்று சொல்லப்பட்டதே தவிர எழுத்து பூர்வமாக அவ்வாறு எந்த ஓர் தடையும் கிடையாது. 

ஊடக (அ)தர்மம்
ஜாகீர் நாயக்கின் விடயத்தில் இந்திய ஊடகங்கள் எவ்வித அடிப்படை பத்திரிகை தர்மத்தையும் கடைப்பிடிக்கவில்லை என்பது தெளிவு.குறிப்பாக எந்த வங்க தேச செய்தி தாளை அடிப்படையாக வைத்து செய்தி வெளியிட்டார்களோ அச்செய்தி தாளே அவ்வாறான எண்ணத்தில் செய்தி வெளியிடவில்லை என்று மன்னிப்பு கேட்டது. சிறையில் உள்ள தீவிரவாதிகளான அசீமானந்தா, பிரக்யாசிங் போன்றவர்கள் குறித்து முஸ்லீம்களை குறித்து விஷ கருத்துகளை விதைக்கும் சாமியார்கள் குறித்தோ பேச தயங்கும் அர்னாப் ஜாகீர் நாயக்கை தீவிரவாதியாகவே சித்தரித்தான். அவர்களின் டைம்ஸ் நவ் இரு முறை வெவ்வேறு தொனியில் ஜாகீர் நாயக்கிடம் பேட்டி கண்டது அம்பலத்துக்கு வந்துள்ளது. எல்லா ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் எவ்வித விசாரணையும் ஆரம்பிக்கும் முன்பே அவரை தீவிரவாதியாகவே சித்தரிப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

பெற வேண்டிய படிப்பினைகள்

இஸ்லாத்தை ஒரு கொள்கையாக முழுமையாய் எடுத்து சொல்வதும் அதை முழுமையாய் நிலை நாட்டுவதும் தான் ஒரு முஃமினின் இலக்காக இருக்க முடியும். அதை விடுத்து ஜாஹிலிய்யாவுடன் சில விஷயங்களில் சமரசம் செய்தால் குறைந்த பட்சம் அழைப்பு பணியின் மூலம் இஸ்லாத்தை பரவ செய்யலாம் என்று நாம் நினைத்தாலும் எதிரிகளுக்கு அதுவும் பிடிக்காது என்பதுடன் அவர்களுக்கு அவ்லாகியும் ஜாகீர் நாயக்கும் ஒன்று தான் என்பதை உணர வேண்டும். ஜாஹிலிய்யாவுடன் சமரசம் செய்து கொண்டு அதனூடாக பயணித்து இஸ்லாமிய அரசியல் செய்வதாக நினைக்கும் அமைப்புகள் நிச்சயம் படிப்பினை பெற வேண்டும்.
ஜாகீர் நாயக் மதங்கள் குறித்த ஒப்பீட்டை குறித்து மட்டுமே பேசினாலும் படைப்புகளை விடுத்து படைப்பாளனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற தவ்ஹீத் சிந்தனை மக்கள் மத்தியில் பரவும் போது அதை குறித்து மேலும் ஆய்வு செய்யும் மக்கள் மத்தியில் இஸ்லாமிய சிந்தனை முழுமையாக பரவிடும் என்பதும் தேர்தலுக்கு முன் வாங்கு வங்கியை அதிகரிப்பதும் ஊழல் பிரச்னைகளை திசை திருப்புவதுமே எதிரிகளின் திட்டமாகும்.

ஏன் ஜாகீர் நாயக்கை ஆதரிக்க வேண்டும்
ஜாகீர் நாயக்கின் மீதான பாசிச அரசின் நடவடிக்கை என்பது ஏதோ ஒரு தனி நபர் மீதான நடவடிக்கை அல்ல. மாறாக முழுமையாக இல்லையென்றாலும் பெயரளவுக்கு கூட தவ்ஹீதையும், ரிஸாலத்தையும் உச்சரிக்க நினைக்கும் அழைப்பாளர்களை முடக்கும் சதி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் பிண்ணணி அரசியலை புரிந்து அனைவரும் ஓரணியில் ஒன்று பட்டு நிற்க வேண்டும். மேலை நாடுகளில் ஒரு உதாரணம் சொல்வார்கள். ஒரு நாயை கொல்வதற்கு முன் அதை வெறி பிடித்த நாய், மனிதர்களை கடிக்கிறது என்று கதை கட்டுவார்கள். இக்கதை பரவிய பிறகு அந் நாயை கொன்றால் யாரும் ஏன் என கேட்க மாட்டார்கள், மாறாக அந் நாய் கொல்லப்பட வேண்டியது என சொல்வார்கள். பாசிசம் இதையே தான் செய்கிறது. ஒரு மனிதரின் மீது நடவடிக்கை எடுக்கும் முன் அவரை பற்றி தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி விட்டால் பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது யாரும் எதிர்க்க மாட்டார்கள். இது தனி நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் பொருந்தும் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.

இன்று இந்தியாவில் முஸ்லீம்களின் முக்கிய அமைப்புகளின் பல்வேறு தலைவர்களை, ஆளுமைகளை முஸ்லீம் லீக்கின் அப்துல் சமது தொடங்கி, தமுமுகவின் ஜவாஹிருல்லா, ஐ.என்.டி.ஜேவின் பாக்கர், வைகறை வெளிச்சத்தின் குலாம் முஹம்மது, பாப்புலர் பிரண்டின் ஈ.எம்.அப்துர் ரஹ்மான், ஜமாத்தே இஸ்லாமியின் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, முஸ்லீம் பெர்சனல் லா போர்டின் எஸ்.க்யூ.ஆர்.இல்யாஸ் (கன்னையா குமார் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உமர் காலிதின் தந்தை), ஜன்சேவாவின் இப்னு சவூத், வஹ்ததே இஸ்லாமியின் புஹாரி என பல்வேறு ஆளுமைகளை உருவாக்கிய அமைப்பு, பி.ஜே, அவரது அண்ணண் பி.எஸ். அலாவுதீன் என பல்வேறு நபர்களுக்கு அவர்களின் ஆரம்ப சோதனை நாட்களில் தோள் கொடுத்த அமைப்பான இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் தீவிரவாத குற்றச்சாட்டின் பெயரால் தடை செய்யப்பட்ட போது அது உருவாக்கிய தலைவர்களால், தலைவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கங்களால் எதுவும் செய்திட முடியவில்லை. சிலர் தங்களுக்கும் தாய்ச்சபைக்கும்  ஒட்டும் இல்லை, உறவுமில்லை என்றும் ஒதுங்கிட முனைந்ததே வரலாறு.

இடிக்கப்பட்ட இடத்தில் பாபரி கட்டப்பட வேண்டும் என்று சமரசமின்றி முழங்கிய இயக்கம் அதன் மீதான ஒரு தீவிரவாத குற்றச்சாட்டும் இன்று வரை நிரூபிக்கப்படாத நிலையில் தடை செய்யப்பட்டது. இதே போல் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த அப்சல் குரு எவ்வித ஆதாரமுமில்லாமல் கழுவில் ஏற்றிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் கழுவில் ஏற்றப்பட்டார். பாஜக ஆண்டாலும் காங்கிரஸ் ஆண்டாலும் நிலைமையில் எவ்வித மாற்றமுமில்லை. இதே தவறை ஜாகீர் நாயக்கின் விடயத்தில் செய்தால் து முஸ்லீம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்பதோடு நாளை நீங்களும் நானும் பாதிக்கப்படும் போது நமக்காக குரல் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் ஜாகிர் நாயக் மீதான சூழ்ச்சி வலைகளுக்கு எதிராக ஒன்றாய் அணி திரள்வோம்.

Tuesday, June 14, 2016

ரமழானில் கையேந்துவோம்

ரமழானில் கையேந்துவோம்
-அபூ அத்திய்யா

ரமழானை முஸ்லீம்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதற்கான பல்வேறு காரணங்களில் ஒன்று இந்த அழகிய மாதத்தில் நம்முடைய பிராத்தனைகளை கருணையாளன் ஏற்று கொள்வான் எனும் நம்பிக்கையாகும். எத்தகைய நிலையில் உள்ள மனிதராயினும் இறைவனிடம் பிராத்திக்க தேவையுடையாராகவே இருக்கிறார் என்பது மறுக்க முடியா உண்மை.

துஆக்களின் பட்டியல்

செருப்பின் வார் அறுந்தாலும் இறைவனிடம் கேட்க கடமைப்பட்ட முஸ்லீமுக்கு கேட்க நிறைய துஆக்கள் குர் ஆன் மற்றும் சுன்னாவில் உள்ளன. அவற்றில் இருந்து சில துஆக்களை இங்கு பட்டியலிடுகிறோம். இந்த துஆக்களில் சிலவற்றை பிரத்யேகமாக குறிப்பிட்ட நேரத்திலும் சிலவற்றை எப்போதும் கேட்கலாம்.

ரமழானுக்கான பிரத்யேக துஆக்கள்

ரமழானுக்கான இரண்டு ஆதாரபூர்வமான துஆக்கள் பின்வருமாறு,

துஆ 1 : இப்தாரில் பிஸ்மில்லாஹ் சொல்லி நோன்பை திறந்து பின் கீழ்காணும் துஆவை ஓதலாம்.
தஹபழ்ழம உ வப் தல்லதில் உரூகு வ தபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் (தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, இறைவன் நாடினால் கூலியும் கிடைத்து விடும்)

துஆ 2 : ரமழானின் கடைசி பத்து நாட்களில் ஓதும் துஆ
அல்லாஹும்ம இன்னக்க அபுவ்வன் துஹிப்புல் அப்வ பவ அன்னி
இறைவா நீ தான் மிகச் சிறந்த மன்னிப்பாளன், மன்னிப்பதை விரும்பக் கூடியவன், என்னை மன்னிப்பாயாக.

ஆழமான பிராத்தனைக்கு அழகிய யோசனைகள்

சிலருக்கு நீண்ட நேரம் பிராத்திக்க ஆசை இருந்தாலும் என்ன கேட்க வேண்டும் என்று தெரியாது. எனவே நமது துஆவில் கீழ்காண்பவற்றை நினைவுபடுத்தி ஆழமாக துஆ கேட்கலாம். நம் துஆக்களில் கருமித்தனம் காட்டாமல் விசாலாமாக இவர்களுக்கும் சேர்த்து மனமுருகி பிராத்திப்போம்.

  • சிரியா, ஈராக், பலஸ்தீனம், ஏமன், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் இன்னும் உலகில் அல்லுறும் முஸ்லீம் உம்மத்துக்காக
  • விதவைகள்
  • அநாதை குழந்தைகள்
  • கருத்தரிக்க முடியாமல் அவதியுறும் தம்பதியினர்
  • திருமணம் தள்ளிப்போகும் பெண்கள் / ஆண்கள்
  • கடும் நோயால் அவதிப்படும் முஸ்லீம்கள்
  • கடன் தொல்லையில் உள்ள முஸ்லீம்கள்
  • கப்ர், தஜ்ஜால், நரக நெருப்பின் வேதனையிலிருந்து பாதுகாப்பு
  • சூரா வாகியா குறிப்பிடும் ஸாபிகூன்களாக திகழ
  • நியாயத்தீர்ப்பு நாளில் அர்ஷின் நிழலில் இருக்கும் பாக்கியத்திற்கு
  • கவ்தர் தடாகத்தில் உத்தம தூதர் (ஸல்) கைகளில் இருந்து நீர் அருந்த
  • முன் சென்ற தலைமுறைக்காக
  • நம் கணவன் / மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் உறவுகளுக்காக
  • யாரிடமும் கையேந்தா நிலைக்காக
  • செல்வத்தில் பரக்கத் / தன்னிறைவு அடைய
  • இறை பாதையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப், உஸ்மான் (ரலி)  போன்று அர்ப்பணிக்கும் செல்வந்தனாய் திகழ
  • கருமித்தனத்திலிருந்து பாதுகாப்பு பெற
  • குரோதம், பொறாமை, கபடம், வெறுப்பு போன்ற கசடுகளிலிருந்து நீங்கிய தூய்மையான நப்ஸுக்காக
  • சிறைச்சாலைகளில் வாடும் சிறைவாசிகளின் விரைவான விடுதலைக்காக மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நல வாழ்வுக்காக
  • ஒட்டு மொத்த மனித குலத்தின் நேர்வழிக்காக
  • கல்வி / அறிவில் சிறந்து விளங்க
  • விரும்பிய (ஹலாலான) இலக்குகளை அடைய
  • ஜன்னத்துல் பிர்தவ்ஸில் வீற்றிருக்க
  • சுவனத்தில் பெருமானார் (ஸல்) மற்றும் ஸஹாபாக்கள் அண்டை வீட்டாராய் அமைய
  • விதியில் உள்ள கடினங்களை அருளாக மாற்ற
  • இஸ்லாத்தை நிலை நாட்டும் பணியில் நிலைகுலையாமல் இருக்கவும், எச்சூழலிலும் பணிவுடன் இருக்க
  • பாதையில் ஏற்படும் தடங்கல்களை எதிர்கொள்ளும் மனோதிடத்திற்காக
  • தன்னுடைய மற்றும் விருப்பமானவர்களின் உடல் நலனுக்காக
  • மக்கா மதீனாவுக்கு ஹஜ் மற்றும் உம்ரா செல்ல
  • உளவியல் சிக்கல்களில் உழலும் முஸ்லீம்கள் மீள
  • கேன்சர் உள்ளிட்ட தீரா நோய்களில் உழலும் நோயாளிகளுக்காக
  • கப்ர் மற்றும் மரண வேதனை எளிதாக்கப்பட
  • சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை ஒளியை விட விரைவாக கடக்க
  • சூனியம் மற்றும் கண்ணேறிலிருந்து பாதுகாப்பு பெற
  • குடும்ப உறவுகள் வலுப்பெறவும், நேசமும் பாசமும் பூத்து குலுங்கவும்
  • ஞானம் நிறைந்த மனிதர்களாக திகழவும்
  • ஸாலிஹான முறையில் பிள்ளைகளை வளர்த்தெடுக்கவும்
  • சிந்தனை ரீதீயிலான குழப்பங்களிலிருந்து தெளிவாகவும்
  • கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் ஓரணியில் ஒற்றுமையாய் விளங்கவும்
  • மண்ணில் விதைக்கப்படும் முன் ஒரு நாளாவது கிலாபாவின் நிழலில் வாழவும்


பிராத்திக்கும் போது அல் வலி, அல் கரீப், அல் வகீல் எனும் இறைவனின் பண்புகளை சொல்லி பிராத்திப்பது சிறப்பானது. இறைவன் நமக்கு புரிந்துள்ள அருட்கொடைகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து, முழு நம்பிக்கையோடு கையேந்தினால் அல்லாஹ் வெறுங்கையுடன் தன் அடியானை திருப்பி அனுப்ப வெட்கப்படுகிறான். பிராத்திப்பதற்கு ஆதாரபூர்வமான துஆக்கள் குரான் மற்றும் சுன்னாவில் நிரம்ப கிடைக்கின்றன. ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட துஆக்கள் நம் மனனம் மற்றும் பிராத்திப்பதற்காக பின் வருமாறு:

1.ஈருலக நன்மைக்காக

எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201

யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! (அஹ்மத்)

யா அல்லாஹ்! தீர்ப்பு நேரத்தில் (நாளில்) வெற்றியையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் நபிமார்களுடன் இருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். (ஸஹீஹ் இப்னு குஸைமா)

2.சுமையை சுமத்தாதிருக்கவும் காபிர்களுக்கு எதிரான வெற்றிக்கும்

எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் 

குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை 

போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் 

தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் 

பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் 

பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி 

செய்தருள்வாயாக! 2:286

3.நேர்வழியிலிருந்து தடம் புரளாமல் இருக்க

ங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து

தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை 

அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8

உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை 

உறுதிப்படுத்துவாயாக! (திர்மிதி)

4. முதல் மனிதன் கேட்ட முதல் துஆ

எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம்நீ எங்களை மன்னித்துக் 

கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23

யா அல்லாஹ்! எனக்கு நானே அதிக அளவு அநீதி இழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவன் 

உன்னைத்தவிர வேறு யாருமில்லை. எனவே, உனது பிரத்யேக மன்னிப்பில் என்னை 

மன்னித்தருள்வாயாக! மேலும் என் மீது அருள் பொழிவாயாக! நிச்சயமாக நீயே அதிகம் மன்னிப்பு 

வழங்குபவன். கருணை பொழிபவன். (புகாரி, முஸ்லிம்) - (முதல் துஆவை ஒத்திருப்பதால் இங்கு 

தொகுக்கப்பட்டுள்ளது)

5. தொழுகை நிலை நிறுத்தவும் பிராத்தனைகள் ஏற்கப்படவும்

என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய 

சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் 

கொள்வாயாக!. 14:40

6. கல்வி ஞானத்துக்காக

என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! 20-114

7. ஸாலிஹான மனைவி மற்றும் வாரிசுகளுக்காக

எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் 

கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக 

(வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74

8. சகோதரத்துவத்துக்கான துஆ

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய 

சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய 

இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க 

இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். 59:10

9. துக்கம், கவலையின் போது
அல்லாஹ்! துக்கம் கவலை இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் கடன் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி7/158
யா அல்லாஹ்! இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (அபூதாவூத்)
10. அனைத்து விதமான பாதுகாப்புக்கும் பிழை பொறுத்தலுக்கும்
யா அல்லாஹ்! நான் முன்னர் செய்தவற்றையும் பின்னர் செய்தவற்றையும் இரகசியமாய் செய்தவற்றையும் பகிரங்கமாக செய்தவற்றையும் எல்லை கடந்து அதிகப்படியாகச் செய்தவற்றையும் மேலும் எந்தப் பிழைகளை நீ என்னை விட அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப்பிழைகளையும் நீ மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியவன் நீயே! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. (முஸ்லிம்)
யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.(அபூதாவூத்)

குறிப்பு :
1. அரபி மூலம் பதிப்பதில் தொழில் நுட்ப சிக்கல் ஏற்பட்டதால் அரபி மூலத்தை குரானில் தேடி மனனம் செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்..
2. பிராத்தனை சம்பந்தமான இதே போல் உள்ள கட்டுரை ஆங்கிலத்தில் அனுப்பித் தந்த என்னருமை சகோதரனுக்கு ஜஸாகுமுல்லாஹ் ஹைரா. அதை படித்ததன் தாக்கமாக தமிழில் நமக்கேற்றவாறு இதை எழுதியுள்ளேன்.
3. இறை கிருபை பொழியும் ரமலானில் இதை மனனம் செய்வதோடு நம் பிராத்தனையில் பயன்படுத்த முழு முயற்சி செய்வோம்.
4. ஆங்கிலத்தில் இதை போன்ற கட்டுரையை எழுதியவர், இதை பார்வேர்டு செய்தவர், தமிழில் நம் நடைக்கேற்ப மாற்றி எழுதிய எனக்கும் உங்கள் துஆக்களில் மறவாமல் இடம் கொடுங்கள்.