Thursday, December 14, 2017

வாசிக்க மட்டுமல்ல… வாழ்வதற்கும் பாகம்-1






அன்பு சகோதர, சகோதரிகளே
நபிகளாரின் 23 ஆண்டு கால வாழ்க்கையில் அவரின் இலட்சிய பயணத்தில் உறு துணையாய் விளங்கிய எண்ணற்ற ஸஹாபாக்கள், அதை தொடர்ந்த இஸ்லாமிய இலட்சிய பயணத்தில் தீனை நிலை நாட்டுவதில் முன்னின்ற தளபதிகள் என நமக்கு அவ்வளவாக அறிமுகமில்லாவதர்களின் வாழ்விலிருந்து படிப்பினைக்கான சில சம்பவங்கள் மூலம் அறிமுகப்படுத்துவதே இத்தொடரின் நோக்கம். நம்முடைய தூய்மையான நோக்கங்களை அல்லாஹ் ஏற்று கொள்வானாக


குருதியை விட குரானை நேசித்த அப்பாத் இப்னு பிஷ்ர் (ரலி)

ஹிஜ்ரி 4ம் ஆண்டு. ஒப்பந்தத்தை முறித்து நபிகளாரை கொல்லவும் திட்டமிட்ட பனூ நளீர் எனும் யூத கோத்திரத்தை நபிகளார் மதீனாவை விட்டு வெளியேற்றியிருந்தார்கள். இச்சூழலில் நஜ்த் பகுதியில் உள்ள யூதர்கள் மதீனாவை தாக்க திட்டமிடும் செய்தி பெருமானாருக்கு கிடைக்கவே உத்மான் இப்னு அப்பானை மதீனாவுக்கு காவல் வைத்து விட்டு 400 படை வீரர்களோடு நஜ்தை நோக்கி சென்றார்கள்.

 நஜ்தை அடைந்த நபிகளார் (ஸல்), தொழுகையின் போது எதிரிகள் தாக்க கூடும் என்பதால் முஸ்லீம்களை இரு அணிகளாக பிரித்து அஸர் வக்தை தொழுதார்கள். முதல் அணி தொழும்போது இரண்டாவது அணி பாதுகாப்பாகவும், இரண்டாவது அணி தொழும்போது முதல் அணியினர் பாதுகாப்பாகவும் நின்று தொழுகையை நிறைவேற்றினர். அன்றிரவு முஸ்லீம்கள் பள்ளத்தாக்கில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது எதிரிகள் தாக்கும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு பணியில் யார் ஈடுபட போகிறார்கள் என்று முஹம்மது (ஸல்) கேட்ட போது , அப்பாத் பின் பிஷ்ரும் (ரலி), அம்மார் பின் யாஸிரும் (ரலி) முன் வந்தனர். இவர்கள் இருவரும் நபிகளாரால் சகோதரத்துவ பந்தம் ஏற்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் தோழர் அம்மார் சற்றே அயற்சியாக இருப்பதை அவதானித்த அப்பாத் (ரலி) அவர்கள் முதல் பாதி தான் பாதுகாப்புக்காக நிற்பதாக கூறி அம்மாரை ஓய்வெடுக்க சொன்னார். அம்மாரும் இரண்டாம் பகுதியில் தான் காவல் காக்க எழுப்புமாறு கூறி உறங்க சென்றார். அமைதியான ரம்யமான சூழலில், நட்சத்திரங்கள், மரங்கள், பாறைகள் அனைத்தும் அல்லாஹ்வை துதிப்பது போல் அப்பாத்துக்கு காட்சியளிக்க. வெறுமனே பாதுகாப்புக்கு நிற்பதற்கு பதிலாக தொழுகையில் குர்ஆனை ஓதலாமே என்று நினைத்தார் அப்பாத் (ரலி).

ஹிஜ்ரத்தின் ஆரம்ப காலத்தில் தன் பதினைந்தாவது வயதில், முஸ் அப் பின் உமைர் (ரலி) அவர்களின் அழகிய காந்த குரலில் குர் ஆன் ஓதுவதை கேட்டதிலிருந்தே குர் ஆனுடன் அப்பாத்துக்கு இனம் புரியா அலாதியான  தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அன்றிலிருந்து அப்பாத்தின் நெஞ்சில் குரான் ஆழமாக வேரூன்றியதால் குரானை ஓதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார் அப்பாத். ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தன் இல்லத்திலிருந்து தொழுகைக்கு பள்ளிக்கு செல்ல தயாரான போது அழகிய குரலில் குர் ஆன் ஓதும் சத்தத்தை கேட்டு வானவர் ஜிப்ரீல் ஓதுவதை போன்று தெளிவாகவும், அழகாகவும் ஓதுகின்றாரே அப்பாத் தானே அது?” என்று கூறியவாறு அவர்கள் பால் நேசம் கொண்டதோடு அப்பாத்துக்காக விசேடமாக பிராத்திக்கவும் செய்தார்கள். 

குரானின் நண்பன் என ஸஹாபாக்களால் அழைக்கப்படும் அளவு குரானோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அப்பாத் நேரத்தை இன்னும் பயனுள்ளதாக மாற்ற எண்ணி தொழுகையில் நின்று  சூரா பாத்திஹாவிற்கு பின் சூரா கஹ்பை தன் அழகிய குரலால் ஓத ஆரம்பிக்கின்றார். அந்த நேரம் முஸ்லிம் படைகளை வேவு பார்க்க வந்த எதிரிப்படையை சேர்ந்தவன். அப்பாத் அவர்கள் தனியே நின்று கொண்டு தொழுவதை பார்த்ததும் சரியான சந்தர்ப்பம் வாய்த்தது என கருதி சப்தமில்லாமல் அம்பு கூட்டிலிருந்து அம்பை எடுத்து அப்பாத் மீது வீசினான். வீசிய அம்பும் பிசிறில்லாமல் அப்பாதின் சதையை பிய்த்தது.

சதையை அம்பு பிய்த்தும் சலனமில்லாமல் அதை உடம்பிலிருந்து உருவிய அப்பாத் தன் அழகு குரலில் குரானை ஓதியவாறு தொழுகையை தொடர்ந்தார். இரண்டாவது, மூன்றாவது அம்பும் சரியாக சதையை பிய்க்க, அதை ஒவ்வொன்றாக பிய்த்து எறிந்த அப்பாத் தன் தொழுகையை தொடர்ந்தார். ருகூவை முடித்து பின் சஜ்தாவை தொடர்ந்த அப்பாத் பலவீனத்தால் வலி தாங்க முடியாமல் தன் வலது கையால் அம்மாரை எழுப்பினார். தொழுகையை முடித்த அப்பாத் தான் காயம்பட்டிருப்பதை சொல்லி தன் இடத்தில் அம்மாரை காவல் காக்க சொன்னார்.



அப்பாத்தையும் அம்மாரையும் ஒரு சேர பார்த்த எதிரி இருளில் தப்பி ஓட அம்பு தைத்த இடத்திலிருந்து குருதி பாய்ந்தோடிய அப்பாதை தரையில் கிடத்தியவாறே ஏன் தன்னை முதலிலேயே எழுப்பவில்லை என அம்மார் கடிந்து கொண்டார். அதற்கு அப்பாத் தான் அழகுற ஓதிக் கொண்டிருந்த குரானிய கிராத்தை இடை நிறுத்த தனக்கு மனம் வர வில்லை என்றார். மேலும் நபிகளார் தன்னை சூரா கஹ்பை மனனம் செய்ய சொல்லி இருந்ததாகவும் சூரா கஹ்பை இடையில் நிறுத்துவதை விட மரணம் தனக்கு உவப்பானது என்றும் அப்பாத் நெகிழ்ச்சியுடன் கூறினார். சுப்ஹானல்லாஹ். வஹ்ன் பிடித்த சமூகமாய் டாலரும் திர்ஹமுமே இலட்சியமாய் வாழும் நமக்கு, சிறு இடருக்கும் அல்லாஹ் சக்திக்கு மேல் சோதிக்க மாட்டான் என்று குரானை கொண்டே நம் பலவீனத்தை பலமாக்கும் நம்மவர்களுக்கு பொங்கி ஒழுகும் குருதியை விட குரானை நேசித்த அப்பாதை புரிந்து கொள்வது சற்று கடினமே.

அல்லாஹ் மற்றும் அவனது தூதர் மீது கொண்ட அதீத அன்பின் காரணத்தாலேயே குரானோடு அப்பாத் நெருக்கமான உறவு வைத்திருந்தார். வணக்க வழிபாடுகளில் மூழ்கியிருந்தல், கட்டற்ற வீரம், இறை பாதையில் கணக்கின்றி செலவு செய்தல் போன்றவற்றிக்காக அப்பாத் நினைவு கூறப்படுபவராக இருந்தார். தியாகத்தின் போது முன் வரிசையில் முதல் ஆளாக நிற்க கூடிய அப்பாத்தை அவருக்கான கனீமத் பொருட்களை கொடுக்க கஷ்டப்பட்டே அவரை தேட வேண்டியதாக இருந்தது. இத்தகைய நற்குணங்களின் காரணத்தால் தான் முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்சார்களில் ச அத் இப்னு மு ஆத், உஸைத் இப்னு குதைர், அப்பாத் இப்னு பிஷ்ரை மிகைத்த குணசீலர்கள் இல்லை என்று புகழாரம் சூட்டினார்கள்.

யமாமா போரின் போது உற்சாகம் குன்றி பலவீனப்பட்டிருந்த முஸ்லீம்களை உற்சாகப்படுத்த அன்சார்களையும் முஹாஜிர்களையும் தனியாக ஒழுங்கு செய்த அப்பாத் 400 அன்சார்களுக்கு தலைமையேற்று வீரத்துடன் போரிட்டு ஷஹீதானார். அவரின் உடம்பில் விழுந்த எண்ணற்ற தழும்புகளின் காரணத்தால் அப்பாத்தின் உடலை கண்டு பிடிப்பது சிரமமாக இருந்தது. தன் குருதியை விட குரானை அதிகம் நேசித்த அப்பாத் முஸ்லீமாகவே வாழ்ந்து,  முஸ்லீமாகவே போரிட்டு, முஸ்லீமாகவே மடிந்தார். ரலியல்லாஹு அன்ஹு.


குரானின் மீது அப்பாத் கொண்ட காதலின் ஒரு பகுதியாவது அல்லாஹ் நம் உள்ளத்தில் விதைத்து குரான் மறுமை நாளில் சிபாரிசு செய்ய கூடிய ஷுஹதாக்களில் கூட்டத்தில் நம்மை சேர்ப்பானாக.

சிறை செதுக்கிய ஷஹீத்

கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராக போற்றப்படும் ஷஹீத் சையது குதுப் (ரஹ்) மரணித்து ஆண்டுகள் சென்றாலும் இன்றளவும் அவரின் எழுத்துக்கள் மூலம் உம்மத்தை உயிர்பிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்க உழைக்கும் இஸ்லாமிய இயக்க வாதிகளுக்கு உணர்வூட்டும் படிப்பினைகள் கொண்ட சிறை செதுக்கிய அக்கோமகனின் வாழ்வெனும் பெருங்கடலில் இருந்து ஒரு சில துளிகளை சுருங்க காண்போம்.

கவிதையிலிருந்து ஆரம்பம்
1906 அக்டோபர் 9 அன்று எகிப்தில் உள்ள அஸ்யுத் எனுமிடத்தில் பிறந்த சையது குதுப் (ரஹ்) தன் பத்து வயதிலேயே குரானை மனனம் செய்தார். பின்னாளில் உலகையே இஸ்லாமிய அரசியலை நோக்கிபிரமிப்போடு பார்க்க வைத்த அவரின் எழுத்தாற்றலின் ஆரம்பம் என்னவோ கவிதை, இலக்கியம் குறித்தே இருந்தது. ஆம். புத்தகங்கள் அரிதாகவும் விலை அதிகமாகவும் இருந்த கால கட்டத்திலேயே 12 வயதில் 25 புத்தகங்களை கொண்ட நூலகத்தையே வைத்திருந்த புத்தகப் புழுவான சையது குதுப் (ரஹ்) தொடக்கத்தில் அரபி கவிதைகள், இலக்கியங்களை விமர்சிக்கும் விமர்சகராகவே தன் எழுத்து பணியை தொடங்கினார்.

முதல் புத்தகம்
தன் 25வது வயதில் தற்போதைய கவிதைகளும் கவிஞனின் வாழ்வின் இலக்கும் என்ற தன் முதல் புத்தகத்தை வெளியிட்ட சையது குதுப் (ரஹ்) 1939ல் எகிப்தின் கல்வி அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அப்போதைய காலகட்டத்தில் தான் எகிப்தெங்கும் ஷஹீத் இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லீமின் அமைப்பு பேசப்பட கூடிய ஒன்றாக இருந்தது. எனினும் சையது குதுப் (ரஹ்) அக்காலகட்டத்தில் இஹ்வான்களை குறித்து முழுமையாக அறிந்து கொண்டார் என்றோ அல்லது இஹ்வான்களின் கொள்கை நோக்கி ஈர்க்கப்பட்டார் என்றோ கூற வலுவான ஆதாரமில்லை.

வாழ்வின் திருப்புமுனை
எகிப்தை ஆண்டு கொண்டிருந்த அரசு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு கொண்டதோடு மேற்கத்தைய நாடுகளின் கையாளாகவே செயல்பட்டு கொண்டு வந்த காரணத்தால் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை அமெரிக்காவுக்கு அரசு செலவில் அனுப்பி எகிப்திய முகம் கொண்ட அமெரிக்க சிந்தனையை தாங்கியவர்களாக உருமாற்றம் செய்யும் பணியை திறம்பட செய்து வந்தது. தற்போதும் முஸ்லீம் சமூகத்தில் வளரும் ஆளுமை கொண்டவர்களை 'மைய நீரோட்டத்தில்' கலக்க அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து மூளை சலவை செய்து இஸ்லாமிய அரசியல் குறித்த பிரக்ஞை இல்லாமல் உருவாக்குவது நாம் அறிந்ததே.

நான் கண்ட அமெரிக்கா
அதே பாணியில் சையது குதுப் (ரஹ்) அவர்களை எகிப்து அரசு  அமெரிக்காவுக்கு அனுப்ப அல்லாஹ்வின் நாட்டமோ வேறாக இருந்தது. அமெரிக்கா சென்ற சையது குதுப் (ரஹ்) கிலாபவை வீழ்த்த மேற்கத்திய நாடுகள் செய்த சதிகள், மீண்டும் கிலாபா உருவாகாமல் இருக்க முஸ்லீம் உலகெங்கும் தேசியவாதம், மதசார்பின்மை, ஜன நாயகம் என இஸ்லாத்துக்கு முரணான கொள்கைகளை திணிக்க நடக்கும் அரசியல் என அனைத்தையும் தெளிவாக கண்டுணர்ந்தார். மேலும் நிறவெறியின் பெயரால் நடக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டு அதிர்ந்த சையது குதுப் (ரஹ்) எகிப்து திரும்பிய பிறகு அமெரிக்காவில் நிலவிய சடவாத போக்கு, தனி நபர் சுதந்திரம் எனும் பெயரில் நடைபெறும் கலாச்சார சீரழிவு, வறியவர்களை மேலும் சுரண்டும் பொருளாதார கொள்கை, நிறவெறி, வன்முறை நிறைந்த குத்துச்சண்டை போட்டிகள், விவாகரத்து கட்டுப்பாடுகள், சர்ச்சுகளிலும் இரு பால் கலப்பு, இஸ்ரேலுக்கு பொது சமூகத்தில் நிலவிய பரிபூரண ஆதரவு என அனைத்தையும் விமர்சித்து நான் கண்ட அமெரிக்கா எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

இஹ்வானுல் முஸ்லீமினை நோக்கி
பிர் அவ்னின் மாளிகையிலேயே மூஸா (அலை) அவர்களை வளர்க்க வைத்தது போல் அமெரிக்காவுக்கு செல்லும் முன் தான் விதந்தோதிய அமெரிக்காவை விமர்சிக்கும் கடும் விமர்சகராக அல்லாஹ் மாற்றினான். அமெரிக்க பயணத்தை முடித்து எகிப்து திரும்பியவுடன் தன் அரசு உத்தியோகத்தை துறந்து இஹ்வானுல் முஸ்லீமினில் தன்னை இணைத்து கொண்டார். அல் இக்வான் அல் முஸ்லீமின் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் இக்வான்களின் உயர் ஆலோசனை அமைப்பானா ஷூரா கமிட்டி உறுப்பினராகவும் சையது குதுப் (ரஹ்) நியமிக்கப்பட்டார்.

நாசர் - நட்பிலிருந்து துரோகத்துக்கு
அமெரிக்காவுக்கு எகிப்தை தாரை வார்க்கும் விதமாக நடைபெற்று கொண்டிருந்த அரசை கமால் அப்துல் நாசர் தலைமையிலான போராட்டக்காரர்கள் ஜூலை 1952ல் வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர். இப்பதவி கவிழ்ப்புக்கு முன் இஹ்வான்களுக்கும் நாசருக்கும் நெருக்கமான உறவு இருந்ததோடு இஹ்வான்களோடு ஆலோசனை செய்ய கூடியவராகவும் நாசர் இருந்தார். அதனால் இயல்பாகவே நாசர் இஸ்லாமிய அரசை அல்லது குறைந்த பட்சம் அதை நோக்கிய அரசை அமைப்பார் என்று இஹ்வான்கள் நினைத்தனர்.

இஹ்வான்களின் மக்கள் செல்வாக்கை தனக்கு ஆதரவாக பயன்படுத்தவே நாசர் தங்களுடன் நட்புறவாக இருந்தார் என்பதை நாசரின் பதவியேற்பிற்கு பிறகு இஹ்வான்கள் உணர்ந்தனர். நாசரின் மதசார்பின்மை மற்றும் தேசியவாத கொள்கைகள் இஸ்லாத்துக்கு முரணாணவை என்பதால் முந்தைய அரசை போல நாசரையும் இஹ்வான்கள் எதிர்க்க ஆரம்பித்தனர்அதனால் 1954ல் நாசரை கொலை செய்ய சதி செய்தனர் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இஹ்வான்கள் மீது கடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு சையது குதுப் உள்ளிட்டோர் சிறை பிடிக்கப்பட்டனர்.

சிறை தந்த சுவனம்
சிறையில் நாய்களை விட்டு கடிக்க விடுதல் உள்ளிட்ட ஏராளமான கொடுமைகள் சையது குதுப் (ரஹ்) மேல் இழைக்கப்பட்டது. அக்கொடுமைகளிலிருந்து தப்பிப்பதோடு கல்வி அமைச்சர் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகள் தரப்படும் என்று பேரம் பேசப்பட்ட போது இப்னு தைமியா (ரஹ்) கூற்றை சையது குதுப் (ரஹ்) மேற்கோள் காட்டி சொன்னார்கள் "இஸ்லாத்தின் எதிரிகள் என்னை என்ன செய்து விட முடியும்?. தனிமை சிறையில் அடைத்தால் அல்லாஹ்வுடனான உரையாடல், நாடு கடத்தினால் ஹிஜ்ரத், தூக்கிலிட்டால் ஷஹாதத்" என முழங்கினார். சிறைச்சாலையின் கொட்டடியில் தான் "மைல்கற்கள்" மற்றும் திருக்குரானின் நிழலிலே புத்தகத்தை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1964ல் ஈராக்கின் பிரதமர் வேண்டுகோளால் 10 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட சையது குதுப் (ரஹ்) ஆகஸ்டு 1965ல் எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்ற விசாரணையில் மைல்கற்களில் அவர் எழுதியதை வைத்தே அவரின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தான் எழுதியதை சரி என்றே இஸ்லாமிய நோக்கில் சையது குதுப் அவர்கள் வாதாடினார்கள். அவரின் மைல்கற்கள் புத்தகத்தின் அடிப்படையில் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி அக்கோமகனை 29 ஆகஸ்டு 1966 தூக்கிலிட்டார்கள்.

இஸ்லாம் ஒரு கொள்கையாக
இஸ்லாமிய அறிஞர்கள் கூட இஸ்லாத்தை வெறுமனே சில சடங்குகளின் தொகுப்பான மதமாக பாவித்த வேளையில், ஒட்டு மொத்த உலகும் மேற்கின் ஜனநாயகத்திலிருந்தும் கிழக்கின் மார்க்சியத்திலிருந்தும் தேடி கொண்டிருந்த காலத்தில்East or West, Islam is the Bestஎன்று இஸ்லாத்தை ஒரு வாழ்வியல் கொள்கையாக விளக்கியதில் சையது குதுப் (ரஹ்) பங்கு குறிப்பிடத்தக்கது. ஜனநாயகத்தில் இஸ்லாம் கூறும் ஷூரா போன்ற அமைப்புகள் இருப்பதை வைத்து இஸ்லாமும் ஜன நாயகமும் ஒன்றே என்று இஸ்லாமிய ஜனநாயகம் எனும் புதிய சொல்லாடல்களை அறிஞர்கள் உதிர்த்த போது இஸ்லாம் என்பது இஸ்லாம் மட்டுமே, அதவன்றி ஜனநாயகம், தேசிய வாதம், மதசார்பின்மை என அனைத்தும் ஜாஹிலிய்யாவே என்று சையது குதுப் (ரஹ்) பட்டவர்த்தனமாக அறிவித்தார்.

மைல்கற்கள்
அவரின் பல்வேறு புத்தகங்களும் சமூகத்தில் குறிப்பாக அறிவு ஜீவிகளிடத்தில் தாக்கம் ஏற்படுத்தினாலும் மைல்கற்கள் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. இக்கட்டுரையை எழுதும் நான் உள்ளிட்ட பலர் இஸ்லாத்தை ஒரு மதமாக மட்டுமே எண்ணியிருந்த நிலையிலிருந்து இஸ்லாம் ஒரு அரசியல் கொள்கை, புரட்சி குரல், முழுமையான வாழ்வியல் நெறி என்பதை உணர்த்தி தெளிவடைய வைத்தது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.. இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை, தவ்ஹீதில் புறக்கணிக்கப்பட்ட ஹாகிமிய்யத் குறித்தும் அப்புத்தகத்தில் விரிவாக குறிப்பிடும் சையது குதுப் (ரஹ்) மனிதர்களுக்கு மனிதர்களுக்கு அடிமைப்படுவதிலிருந்து அல்லாஹ்வின் அடிமைகளாக மாற்றுவதே இஸ்லாத்தின் நோக்கம் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அதற்கான தீர்வாக ஜாஹிலிய்யாவின் அமைப்புகளுக்குள் இருந்து கொண்டு தீர்வை தேடாமல் அவ்வமைப்புகளை எதிர்த்து களம் காணல் அவசியம் என்றும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.

திருக்குரானின் நிழலிலே
நவீன தஃப்சீர் எழுதும் கலையில் முன்னோடியாக இருப்பது ஷஹீத் செய்யித் குதுப் எழுதிய 'ஃபீழிலாலில் குர்ஆன்' விரிவுரையே! எகிப்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, குதுப் எழுதிய ஆழமான விரிவுரைதான் நவீன கால தஃப்சீர்களில் மிகச் சிறந்தது என இஸ்லாமிய அறிஞர்கள் சிலாகிக்கின்றனர். பொதுவாக குர்ஆன் வசனங்களில் ஒரு குறிப்பிட்ட வசன இடைவெளியில், வசனங்களுக்கு இடையே ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போன்ற தோற்றம் ஏற்படுவது இயல்பு. அதனை மறுத்து, ஒவ்வொரு வசனமும் எப்படி மற்றொன்றோடு தொடர்புடன் அத்தியாயத்தின் மையக் கருத்தை ஒட்டி மனிதனுக்கு வழிகாட்டுகிறது என்பதை அற்புதமான அரபியில் ஆக்கியிருக்கிறார் குதுப். சமகால உலகின் முஜாஹித்களின் ஆன்மிக பசிக்கு இளைப்பாறும் உணவாக பீ ழாலில் குரான் திகழ்வதை யாரும் மறுக்கவியலாது.

சுவனத்தின் நிழலிலே வீற்றிருக்க பிராத்திப்போம்
சையது குதுப் ரஹ் பற்றி ஒரு விமர்சகர் இவ்வாறு குறிப்பிடுகிறார் " சையது குதுப் அவர்கள் நவீன இஸ்லாமிய அரசியல் கொள்கையை செம்மையாக்கியவர். அவர் இப்னு தைமியாவின் கொள்கை , ரஷீத் ரிழாவின் ஸலபிஸம், மெளதூதியின் ஜாஹிலியா குறித்த பார்வை, ஹசன் அல் பன்னாவின் செயற்பாடு ஆகியவற்றின் கலவையாக இருந்தார். இன்றளவும் உலகில் நடக்கும் இஸ்லாமிய எழுச்சி போராட்டங்களின் வித்தாக சையது குதுபின் எழுத்துக்கள் விளங்குவதே அவரின் வெற்றிக்கு சான்று.ஒரு மாபெரும் இயக்கத்தின் சித்தாந்தவாதியும், அந்தச் சித்தாந்தத்திற்காக சிறையிலடைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவருக்கு இளைப்பாற நிழல் தந்த குர்ஆன், நமக்கும் சொர்க்கத்தில் நிழலைத் தர உதவட்டும் இன்ஷா அல்லாஹ்...