Saturday, December 20, 2014

பெஷாவர் தாக்குதலும் அவசர குடுக்கை தலைமைகளும்

கடந்த வாரம் பெஷாவரில் ராணுவத்தினரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 130 க்கும் மேற்பட்ட பிஞ்சு பாலகர்கள் துடிதுடித்து இறந்ததை நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இத்தாக்குதல் மூலம் பலரின் நடுநிலை (?) முகமூடிகள் வெளிப்படையாகவே கழன்று விழுந்தது.

முக நூலில் ஒரு பதிவர் பதிவிட்டதை போல் கோரிப்பாளையம் தர்காவில் தாயத்து கட்டுபவரை தவிர எல்லா முஸ்லீம்களும் அவசர கதியில் இத்தாக்குதலை கண்டித்தனர். மேலும் தங்கள் தேசப்பற்றை அவசர கதியில் நிரூபிக்க வேண்டிய நிலையில் கடுமையான வார்த்தைகளால் ஒட்டு மொத்த போராளிகளையும் அர்ச்சித்தனர். 
இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் உடனே இந்தியன் முஜாஹிதீன் காரணம் என்று பாஜக சொல்வதை போல் நமது அவசர குடுக்கை தலைமைகளோ யார் குண்டு வைத்தது என்று தெரியாமலே தாலிபான்களை கண்டிப்பதாக போஸ்டர் அடித்தனர்.

இன்னொரு புறம் குஜராத்தில் கவுசர் பீவியின் வயிற்றில் இறந்த சிசுவை சூலாயுதத்தால் குத்தி நெருப்பில் இட்ட கயவர்களும், முள்ளி வாய்க்காட்டில் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடியவர்களும், இஸ்ரேல் பாலஸ்தீன் பிஞ்சுகளை ஆயிரக்கணக்கில் ஏவுகணைகள் வீசி சுட்டு கொன்ற போது ஆதரித்தவர்களும், இதே வசிரிஸ்தான் மக்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு கொன்ற போது அமைதி காத்தவர்களும் கண்டித்தது தான் நகை முரண்.

இத்தாக்குதலை நடத்தியது தாலிபான்களே என்று முதல் பக்கத்தில் வாங்கிய காசுக்கு மேல் கூவின. ஊனமான ஊடகங்களோ ஆப்கானிஸ்தான் மண்ணில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடும் களப்போராளிகளான தாலிபான்கள் இத்தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமானது என்றும் கூறியதை பூசி மெழுகின. தாலிபான்கள் மறுத்த போதிலும் எல்லா ஊடகங்களும் தாலிபான்களை இன்றளவும் பெஷாவர் தாக்குதலுக்காக கண்டிப்பதை கண்கூடாக காணலாம்.

வசீர்ஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் எனும் பெயரில் தங்கள் குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதற்காக தாங்கள் கொடுத்த பதிலடியே பெஷாவர் தாக்குதல் என்று நியாயம் பேசி தஹ்ரீக் இ தாலிபான் எனும் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.  பெயரில் தாலிபான் இருந்தாலும் ஆப்கான் தாலிபான்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்ற விடயம் கவனத்திற்குரியது. 
 
தஹ்ரீக் இ தாலிபான் எனும் பெயரில் மூன்று குழுக்கள் செயல்படுகின்றன என்பது பலருக்கு தெரியாத செய்தியாகவே இருக்கும். பஸலுல்லாஹ் தலைமையில் ஒரு குழுவும் அதன் போட்டியாளர் மசூத் தலைமையில் ஒரு குழுவும் இரண்டுக்கும் சம்பந்தமில்லாத ஒரு குழுவும் உள்ளது. இம்மூன்றாம் குழுவை அமெரிக்கா வழி நடத்துவதாக போராளிகள் தரப்பில் சொல்லப்படுவதை நம்மால் ஒதுக்கி தள்ள முடியாது. இந்திய உளவு துறையான ராவின் பங்களிப்பும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்துள்ள படி கிலாபா மீள் உருவாக்கத்திற்கான காலம் கனியக் கூடிய நேரத்தில் அவ்வெழுச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா தன்னாலான முயற்சிகளை மேற்கொள்கிறது. ஈராக் மற்றும் ஷாமில் இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக போரிட முழு பலத்தையும் பிரயோகிக்க முடியா வண்ணம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கொடுக்கும் குடைச்சலை தடுக்க அமெரிக்கா போட்ட நாடகமே பெஷாவர் தாக்குதல்.

ஏனெனில் உலகில் உள்ள மிகச்சிறந்த ராணுவ பலம் கொண்டுள்ள முஸ்லீம் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. தாலிபான்கள் அரசமைத்த போது ஆதரித்த மூன்றே நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தாலிபான்களோடு நெருக்கமான உறவு வைத்திருந்த பாகிஸ்தான் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க நெருக்கடி காரணமாக தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலும் அதை முழு மனதோடு செய்யவில்லை என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

மேலும் பாகிஸ்தான் ராணுவத்திலும் தாலிபான்கள் ஆதரவு பிரிவு மனோ நிலை இருக்கும் சூழல் அமெரிக்காவை உறுத்தி கொண்டு இருந்தது. தாலிபான்களோடு நல்லுறவை வைத்திருந்த நவாஸ் ஷெரீப்பிடம் தாலிபானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தவும் இத்தகு தாக்குதல் தேவைப்பட்டது. ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவ தளபதி தாலிபானுக்கு எதிரான மன நிலையில் இருந்தது சாதகமாக இருந்தது சதி திட்டத்தை நிறைவேற்றியவர்களுக்கு.

பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் முஸ்லீம்களின் இரத்தத்தை அரசு பயங்கரவாதமாக குஜராத்தில் நிறைவேற்றியவர்கள், அஸ்ஸாமில் உள்ள நெல்லியில் முஸ்லீம்களை வெட்டி விளைநிலைங்களில் உரமாக உபோட செய்தவர்கள், பாபரி மஸ்ஜிதை இழந்த சோகத்தோடு முஸ்லீம்களை மும்பையில் கொன்றும் பசியாறிய வெறி நாய்களும் தாலிபான்களை கண்டிப்பது தான் வேதனையின் உச்சகட்டம்.

ஆனால் முஸ்லீம் சமூகத்துக்கு போராடுவதாக சொல்லி கொள்ளும் சில முஸ்லீம் அமைப்புகளும் உண்மை நிலை புரியாமல் அல்லது வேண்டுமென்றே தாலிபான்களை கொச்சைப்படுத்தும் செயல்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. ஏற்கனவே தவழ்ந்து சென்றாவது பை அத் செய்வோம் என்றவர்கள் இன்று போலி இறையாண்மைக்கு கட்டுப்படுவதாக காட்டி கொள்ள போராளிகளை காட்டி கொடுக்கும் எட்டப்பர் வேலை என்பதை தவிர வேறு என்ன சொல்வது.

தீயவன் ஒருவன் செய்தி கொண்டு வந்தால் அதை தீர விசாரித்து கொள்ளுங்கள் எனும் திருக்குரானின் கட்டளைக்கிணங்க ஊடகங்கள் அதிகாரத்துக்கு பயந்து எச்சில் காசுக்காக போடும் செய்திகளை அப்படியே பரப்பாமல் “ Reading between the lines” என்பதற்கேற்ப எல்லா தரப்பு செய்தியையும் உள் வாங்கி உண்மை செய்தியை உணர்வதும், அப்படி ஒரு நடுநிலை ஊடகம் உருவாக முன்முயற்சி எடுப்பதுமே முஸ்லீம்கள் முன்னுள்ள முக்கிய கடமை.