Wednesday, March 18, 2009

இந்திபாதாவுக்காக இந்தளவாவது செய்யுங்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

சிலர் இப்படிக் கேட்பதுண்டு - 'ஏன் இன்திபாழா பற்றிய உணர்ச்சி பலவீன மடைந்துள்ளது?' 'உலகெங்கும் எழுந்த இன்திபாழா போராட்டத்திற்க்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் ஏன் மறைந்து போயின?' 'பொருளாதாரத் தடைகள் பற்றிய பேச்சுக்கள் ஏன் ஒலிப்பதில்லை?' 'சில நிவாரண அமைப்புகளே வருந்தும் அளவுக்கு இன்திபாழாவுக்கான உதவிகள் ஏன் குறைந்து விட்டன?'
ஆம்! உண்மைதான் இவற்றுக்கெல்லாம் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்திபாழாவைப் பற்றிய சிந்தனையை முஸ்லிம்களை விட்டும் திசைதிருப்புவதற்காக வெளிசக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளும் இவற்றுள் அடங்கும் நமக்குள்ளே இருக்கும் சில அம்சங்களும் இந்நிலைக்கு காரணமாய் அமைந்துள்ளன. அது பற்றியே இங்கு கூற விரும்புகிறோம்.
பலஸ்தீன் இன்திபாழாவும் சரி, வேறு எந்தப் பிரச்சினையும் சரி உள்ளத்தில் ஒரு வித உணர்வை ஏற்படுத்தி அதன் விளைவாக உள்ளமும் உறுப்பும் குழப்பமடைகின்றன இக்குழப்பத்திலிருந்து வெளியேற விரும்பும் ஒருவர். தனது உணர்ச்சியை செயலில் காட்ட முனைகிறார் சாதகமான ஒரு செயலாக இதனை வெளிப்படுத்த முடியாதபோது, பாதகமான செயலின்பால் அவர் தள்ளப்படுகிறார். இந்த வகையில்தான் பலஸ்தீன் இன்திபாழாவும்!
தமது உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் சாதகமான முறையில் வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகள் மூடப்பட்டதாகவும் எதிரியை எதிர்த்துப் போராடுவது முடியாததாகவும் பொருத்தமான நிலைப்பாட்டை எடுக்கும் விடயத்தில் அதிகாரவர்கத்தினரிடம் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாததாகவும், வழங்கப்படும் உதவிகளை உரியவர்களுக்கு சேர்ப்பிப்பதற்கான நம்பிக்கை வாய்ந்த அமைப்புகள் கிடைக்காமையால், பண உதவி செய்வது கூட சாத்தியமற்றதாகவும் தோன்றும் போது உணர்ச்சிகள் குறைந்து வேகம் தணிந்து இன்திபாழா பற்றிய செய்திகள் கேட்பதையே பயனற்ற ஒன்றாகக் கருதுகின்ற பாதகமான ஒரு விளைவு ஏற்படுகிறது.
எனவே மேலே கூறியது போன்ற ஒரு நிலை யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர் தவறிழைத்து விடுகிறார். எதிரி அவரிடம் மிக ஆழமாக ஊடுருவி அவரை ஆக்கிரமித்துள்ளான் என்பதுதான் அதன் அர்த்தமாகும். இன்திபாழா விடயத்தில் பொதுவான செயல்பாடு இல்லாமலிருப்பினும் கூட எம்மில் ஒவ்வொருவரும் செய்ய முடிந்த, யாரும் தடுக்கவோ ஆக்கிரமிக்கவோ முடியாத பல வழிமுறைகள் இருக்கின்றன.

தினசரி வழிமுறை :
பலஸ்தீன் சகோதரர்களுக்காகவும், அல் அக்ஸாவுக்காகவும் உங்கள் நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்குங்கள் அவர்களுக்காக உங்கள் தொழுகையின் போது ஸூஜூதில் பிரார்த்தியுங்கள். நீங்கள் படுக்கைக்காக அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தாயாராகும் நேரத்தில் அவர்களின் பயங்கரமான நிலையை எண்ணிப் பாருங்கள். சுகமாக படுக்கையில் நீங்கள் உறங்கும்போது தகர்க்கப்பட்டுள்ள அவர்களின் இல்லங்களை எண்ணிப் பாருங்கள். நீங்கள் திருப்தியாக உண்னும்போது அவர்களின் பட்டினியை எண்ணி பாருங்கள். உங்கள் குழந்தைகள் சிரித்து விளையாடும் போது அவர்களது குழந்தைகளின் அனாதரவான நிலையை எண்ணிப் பாருங்கள்.
அடுத்த சகோதரனை சந்திக்கும் போது 'நீங்கள் பலஸ்தீனுக்காக, அல் அக்ஸாவுக்காக துஆ செய்தீர்களா?' என்று கேளுங்கள். தொலைபேசியில் ஒருவருடன் கதைத்துவிட்டு 'ரீஸிவரை' வைக்கும் முன் பலஸ்தீனுக்காக துஆ செய்வதை ஞாபகபடுத்துங்கள்.
"அல்குத்ஸே! நான் உன்னை மறக்கமாட்டேன். அல் அக்ஸாவே நான் உன்னை மறவேன்" என்ற வாசங்கள் உங்களின் நிரந்தர அடையாளமாக இருக்கட்டும். "யா அல்லாஹ் ! அல்அக்ஸா தியாகிகளில் என்னையும் சேர்த்து கொள்வாயாக! அல்அக்ஸா விடுதலை பெற்று அதில் தொழும் பாக்கியத்தை எனக்கு அருள்வாயாக" என்பது உங்களின் தொடர்ச்சியான துஆவாக இருக்கட்டும். அக்ஸாவின் படத்தை உங்கள் வீட்டில் தொங்க விடுவதன் மூலம் அதனை சதாவும் நினைவுபடுத்துங்கள்.

செயல்முறை ரீதியிலான வழிமுறை :
'தினசரி வழிமுறை' மூலம் பலஸ்தீனுக்காக நீங்கள் சிந்திக்கின்ற அதே நேரம் எங்களில் ஒவ்வொருவரும் பலஸ்தீனுக்காக செயல்ரீதியான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
முக்கிய வைபவங்கள் போன்றவற்றுக்காக புதிய ஆடைகள் வாங்குவதை தவிர்ந்து கொள்ளல். இதன் மூலம் உங்களிடமிருப்பது போதுமானது என்பதையும் மேலதிகமாகவும் இருக்கிறது என்பதையும் கண்டுகொள்வீர்கள்.
ஆடம்பர உணவுகளுக்காக செலவு செய்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையற்ற பிரயாணங்களை தவிர்ந்து கொள்ளுதல்.
இவற்றிக்காக செலவுசெய்யும் பணத்தை 'இன்திபாழா'வுக்காக செலவு செய்வது எவ்வளவு மேலானது என்பதை எண்ணிப் பாருங்கள்.
நெருங்கியவர்களுக்காக கொடுக்கும் அன்பளிப்புகளைத் தவிர்ந்து கொள்ளல். இது பற்றிக் கேட்கபட்டால், 'அது உரியவருக்கு (பலஸ்தீனுக்கு) போய்விட்டது' என்று கூறுவதன் மூலம் பிறரிடத்தில் இதன் முக்கியத்துவத்தை உணரச் செய்வது.
பலஸ்தீன் குடும்பம் ஒன்றிற்க்கு மாதாந்த குடும்பச் செலவுக்காக தேவையாகும் பணத்தை தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ இனைந்து கொடுத்து உதவுதல். "ஒரு போராளியை யார் தயார் செய்கிறாரோ அவரும் போர் செய்தவராவர்." என்ற நபிமொழி இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.
பொருட்கள் வாங்கச் செல்லும்போது ஒரு நிமிடம் நின்று இஸ்ரேலுடைய அல்லது அதற்க்கு ஆதரவான நாடுகளின் உற்பத்திகளை வாங்கலாமா என்பதை சிந்தியுங்கள். இவ்வுற்பத்திப் பொருட்களை வாங்குவதற்காக நீங்கள் செலவு செய்யும் பணம் உங்கள் சகோதரனைக் கொல்வதற்க்காக பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இஸ்லாமிய நாடுகள் மற்றும் பலஸ்தீன் ஆதரவு நாடுகளின் உற்பத்திப் பொருட்களை வாங்குங்கள். இதன் மூலம் மாற்றுவழி நிறைய உண்டு என்பதையும் பழக்கம், விளம்பர மயக்கம் காரணமாகவே நாம் இவற்றை வாங்கிப் பழகியிருக்கிறோம் என்பதையும் கண்டுகொள்ள முடியும்.
நாம் கூறியவற்றிக்கு வேறாகவும் பல வழிமுறைகள் இருக்கமுடியும். இவை அனைத்தையும் செயல் படுத்துவோமாயின் இன்திபாழாவில் நாமும் உணர்வுபூர்வமாக பங்கு கொள்ளமுடியும். எமது உள்ளங்களைப் பலவீனப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சதிகளை முறியடித்து நாமும் பலஸ்தீனுக்காக பங்களிப்புச் செய்ய முடியும். இந்தளவாவது செய்ய நாம் தயார்தானா?
--- அபூ முஸ் அப்நன்றி: அல்ஹஸனாத் (டிசம்பர் - 2001)

No comments: