Saturday, September 28, 2013

விழுது – 9 ஸல்மான் பார்ஸி (ரலி) – அகழ் போரின் கதாநாயகன்

பாலைவன விழுதுகள்
விழுது – 9
ஸல்மான் பார்ஸி (ரலி) – அகழ் போரின் கதாநாயகன்

சென்ற இதழில் ஸல்மான் பார்ஸி (ரலி) அவர்களின் சத்திய தேடலை பார்த்தோம். தேடலின் முடிவின் இஸ்லாத்தை ஏற்று கொண்டாலும் அடிமையாய் இருந்த காரணத்தால் பத்ர் மற்றும் உஹது போர்களத்தில் ஸல்மான் பார்ஸி (ரலி) அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. ஸல்மான் பார்ஸி விடுதலை பெற்றவுடன் கலந்து கொண்ட போர்களில் முக்கிய போர்களில் ஒன்றான அகழ் போரை பற்றி இவ்விதழில் பார்ப்போம்.

ஆயிரம் கைகளாலும் மறைக்க முடியாத ஆதவனின் வெளிச்ச கீற்றாய் ஒளி வரும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கவியலா குறைஷிகள் பொறாமை தீயில் ஒரு புறம் வெந்து கொண்டிருக்க மதீனாவில் முஸ்லீம்களின் வருகைக்கு பின் செல்வாக்கு இழந்திருந்த யூதர்கள் இன்னொரு புறமும் ஆக முஸ்லீம்களை பூண்டோடு ஒழித்து விடும் நோக்கில் புதிய போருக்கு ஆயத்தமானார்கள். மேலும் முஸ்லீம்களுடன் உடன்படிக்கை செய்திருந்த யூதர்களின் ஒரு பிரிவான பனூ குரைளாவுடனும் கள்ள ஒப்பந்தம் செய்தனர்.

குறைஷிகளும் அவர்களும் சகாக்களும் வெளியிலிருந்து தாக்கவும் உள்ளிருந்தே குழி பறிக்கும் வேலையில் பனூ குரைளா ஈடுபடவுமாக முஸ்லீம்களை ஒரேடியாக புதைத்து விடும் நோக்கத்தோடு மதீனாவை நோக்கி பெரும்படையாக கிளம்பினர். முழுமையான ஆயத்தங்களோடு மதீனாவை நோக்கி வந்த அவ்வலிமையான 24,000 படையினர் பற்றி கேள்விப்பட்ட மதீனத்து முஸ்லீம்களின் மனநிலையை அல்லாஹ் திருமறையில் இவ்வாறு சொல்லி காட்டுகிறான்.
உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள். அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள். (திருக்குர்ஆன் 33:10,11)
மதீனாவை நோக்கி வரும் பெரும்படையை எங்ஙனம் எதிர்கொள்வது என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) தோழர்களுடன் ஆலோசனை செய்கிறார்கள். மதீனாவை பொறுத்த வரை அதன் கிழக்கு பகுதியில் வகீம் எனும் எரிமலை குன்றும் மேற்கில் வபரா எனும் எரிமலை குன்றும் பாதுகாப்பு அரண்களாய் அமைந்திருந்தது. தெற்கு பகுதியில் அடர்த்தியான பேரீச்சை மரங்கள் அரணாய் இருந்தாலும் வடக்கு பகுதி எவ்வித தடுப்புமில்லாமல் எதிரிகள் எளிதில் ஊடுறுவ ஏதுவாய் இருந்தது தான் முஸ்லீம்களுக்கு சொல்லொண்ணா துயரை தந்தது.

முஸ்லீம்களுடன் நபிகளார் (ஸல்) ஆலோசனை நடத்தி கொண்டிருந்த போது தன் பூர்விகமான பாரசீகத்தில் போர் யுக்திகளில் அனுபவம் வாய்ந்த ஸல்மான் பார்ஸி (ரலி) முஸ்லீம்கள் கேள்விபடாத ஒன்றை ஆலோசனையாக கூறுகிறார்கள். ஆம், வெற்றிடமாக உள்ள வடக்கு பகுதியில் அகழ் தோண்டும் படி ஆலோசனை கூறினார்கள்.

ஸல்மான் பார்ஸி (ரலி) யின் ஆலோசனைக்கேற்ப உடனே நபி (ஸல்) 3000 பேர் கொண்ட ஸஹாபாக்களை ஒரு குழுவுக்கு 10 நபர்கள் வீதம் 300 குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவும் 40 கெஜம் தோண்ட ஆணையிட்டார்கள். எதிரிகள் எப்போதும் வரலாம் என்பதால் போர்கால அடிப்படையில் இரவு பகல் பாராமல் அகழ் தோண்டும் வேலை நடந்தது. இதற்கான குழுவை பிரிக்கும் போது தான் சல்மானை வைத்து ஒரு சுவையான சர்ச்சை உருவானது.

ஸல்மான் எம்மை சார்ந்தவர்

மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்கள் ஸல்மான் தங்களை சார்ந்தவர் என்றும் அன்ஸார்கள் ஸல்மான் தங்களை தான் சார்ந்தவர் என்றும் சண்டை போட்ட போது அல்லாஹ்வின் தூதர் ஸல்மான் தம் குடும்பத்தை சார்ந்தவர் என்று கூறி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அகழ் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஸல்மான் (ரலி) அவர்களால் ஒரு பாறையை உடைக்க முடியவில்லை. ஆஜானுபாகுவான ஸல்மான் எவ்வளவோ முயற்சித்தும் உடைக்க முடியாமல் போகவே நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். ஸஹாபாக்களோடு அகழ் தோண்டும் பணியில் தன்னையும் ஈடுபடுத்தி கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுத்தியலை கொண்டு மூன்று தடவை அப்பாறையில் அடித்து உடைக்கிறார்கள். அவர்கள் அடித்த முதல் அடியில் வெளிப்பட்ட ஒளியில் மதீனா நகரையும் இரண்டாவது அடியில் வெளிப்பட்ட ஒளியில் ரோமாபுரியையும் மூன்றாவது அடியில் வெளிப்பட்ட ஒளியில் சிரியா மற்றும் சனாவின் அரண்மணைகளை ஸல்மான் பார்ஸி கண்டார்.

மதீனாவை நோக்கி பெரும் ஆராவரத்துடன் அபூ சுப்யானின் தலைமையில் வந்த படை அகழை பார்த்து திகைத்து போனது. எவ்வளவோ முயற்சித்தும் அகழை கடக்க முடியாததால் தோல்வியை ஒப்பு கொண்டு வந்த இடத்திற்கே அப்படை திரும்பி போனது வரலாறு.

அறிவில் சிறந்த லுக்மான்

ஸல்மான் பார்ஸி (ரலி) அவர்களின் வாழ்வு எத்தகையது ! சத்தியத்தை தேடி சொத்து சுகம் துறந்து அடிமையாய் மாறி பின் இறைவனின் கிருபையால் இஸ்லாத்தை ஏற்றதோடு அண்ணலாரின் நெருங்கிய தோழராக மாறியதோடு இஸ்லாத்தின் வளர்ச்சியை தன் வாழ்விலே கண்டு கொள்ளும் பேறு அவ்வளவு எளிதானதா என்ன. பயபக்தியின் உறைவிடமாய் திகழ்ந்த ஸல்மான் பார்ஸி உமர் பின் கத்தாபிடம் ஒப்பிடுமளவு அறிவில் சிறந்தவராக திகழ்ந்தார்.

அபுதர்தா (ரலி) மற்றும் சல்மானும் ஓரே வீட்டில் இருந்த போது அபுதர்தா இரவெல்லாம் தூங்காமல் விழித்திருப்பவராகவும் தொடராக நோன்பு வைப்பவராகவும் இருந்தார். அளவுக்கு மீறிய வணக்க வழிபாட்டை ஸல்மான் கண்டித்த போது தன் இறைவனை வணங்குவதை விட்டும் நோன்பிருப்பதை விட்டும் ஸல்மான் தம்மை தடுப்பதாக அபுதர்தா (ரலி) குறைபட்டு கொண்டார். அதற்கு அறிவின் உறைவிடமான ஸல்மான் பார்ஸி (ரலி) “உமது கண்களுக்கும் உம் மேல் உரிமை உள்ளது. உமது குடும்பத்தினருக்கும் உம்மேல் உரிமை உள்ளது. எனவே நோன்பும் வைத்து கொள், நோன்பில்லாமலும் இருந்து கொள். தொழும் அதே சமயத்தில் உறங்கவும் செய்” என்று மறுமொழி பகர்ந்தார்.

இச்செய்தி காருண்ய நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய வந்த போது அறிவு நிறைவாக உள்ளவர் ஸல்மான் என புகழ்ந்தார்கள். அதனால் தான் அலீ (ரலி) அவர்கள் சல்மானை “அறிவிற் சிறந்த லுக்மான்” என அழைத்தார்கள். அடிமையாய் இ்ருந்த ஸல்மான் பார்ஸி அபுபக்கர், உமர், உஸ்மான் (ரலி) போன்றார்கள் கலீபாக்களாய் இருந்த காலத்திலும் வாழ்ந்தார். இஸ்லாம் அகிலமெங்கும் பரவி பைத்துல்மால்கள் செல்வத்தால் நிரம்பி அனைவருக்கும் போதுமான உதவி தொகை கொடுக்கப்பட்டு மன நிறைவாய் இருந்த காலகட்டத்தில் ஸல்மான் எப்பகுதியில் ஆளுநராக இருந்தார் என நினைக்கிறீர்கள்?

பற்றற்ற வாழ்க்கை

ஸல்மான் பார்ஸி (ரலி) எப்பதவியையும் ஏற்று கொள்ளாமல் பனை மர இலைகளிலிருந்து பொருட்களை தயாரித்து தன் வாழ்வாதாரத்தை மேற்கொண்டிருந்தார் என்பது உலகமே எல்லாம் என நினைக்கும் நமக்கு வேண்டுமானால் ஆச்சர்யமாக இருக்கலாம். தனக்கு வருடம் தோறும் கிடைத்த 6000 திர்ஹம் உதவி தொகையில் தனக்கு என்று எதுவும் எடுத்து கொள்ளாமல் மக்களுக்கு அனைத்தையும் தர்மம் செய்பவராக இருந்தார் ஸல்மான் (ரலி). அவர் கையில் இருந்த ஒரு தினாரே அவருடைய முதலீடாக இருந்தது. அம்முதலீட்டை கொண்டு உற்பத்தியாகும் பொருளை முன்று தினாருக்கு விற்று அதில் ஒரு தினாரை மீண்டும் முதலீட்டிற்கும் ஒரு தினாரை குடும்ப தேவைக்கும் ஒரு தினாரை தர்மம் செய்யவும் பயன்படுத்தினார் ஸல்மான் (ரலி).

ஒரு தடவை ச அது இப்னு அபி வக்காஸ் (ரலி) ஸல்மான் பார்ஸியை சந்திக்க சென்ற போது ஸல்மான் (ரலி) அழுது கொண்டிருந்தார். அழுகைக்கான காரணம் குறித்து கேட்கப்பட்ட போது இவ்வுலகின் மீதான பற்றுக்காகவோ அல்லது மரணத்திற்காகவோ தாம் அழவில்லை என்று கூறிய ஸல்மான் (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) ஒரு பயணியை போல் வாழ சொல்லியிருக்கும் போது தாம் இத்துணை பொருட்களை சேகரித்து வைத்திருப்பதை குறித்த கவலையினால் அழுவதாக தெரிவித்தார்கள். உடனே ஸல்மான் பார்ஸி (ரலி) யின் வீட்டை சுற்றி பார்த்த ச அத் (ரலி) அவ்வீட்டில் ஒரு குடிநீர் அருந்தும் குவளையும் உணவருந்தும் பாத்திரம் மட்டுமே இருந்ததாக கூறுகிறார்கள்.

உலக வாழ்வின் எவ்வசதிகளும் ஸல்மானை கவர்ந்திழுக்காத நிலையில் ஒரு  பற்றற்ற வாழ்க்கையை வாழ்ந்த ஸல்மான் (ரலி) தாம் மரணிக்க போகும் தினத்தின் காலையில் தம் மனைவியிடம் தாம் கொடுத்து வைத்திருந்த அமானிதத்தை எடுத்து வரும் படி பணிக்கிறார்கள். ஸல்மான் பார்ஸி (ரலி) எடுத்து வர சொன்ன அமானிதம் தங்கமோ சொத்து பத்திரமோ அல்ல. ஜல்வலா நகரை விடுவித்த போரில் அவருக்கு கிடைத்த ஒரு குடுவை நறுமணமே. பின் ஒரு குடுவை நீரை எடுத்து வர சொன்ன ஸல்மான் அத்தண்ணீரில் நறுமணத்தை கலந்து பின் தன் மனைவியிடம் தன் மேல் அதை தெளித்து விட்டு கதவை தாளிட்டு விட்டு வெளியேற சொல்கிறார். தன்னை சந்திக்க வருபவர்கள் உணவு உண்ண மாட்டார்கள் என்றும் நறுமணம் அவர்களுக்கு பிடிக்கும் என்றும் காரணமும் உரைத்தார் ஸல்மான்.

கதவை தாளிட்டு விட்டு சென்ற ஸல்மானின் மனைவி சிறிது நேரம் கழித்து கதவை திறந்த போது ஸல்மான் (ரலி) உடல் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தது. ஆம், இவ்வுலகை விட்டு நீங்கி தன்னை படைத்தவனை சந்திக்க சென்று விட்டார் பாரசீக செல்வ குடிமகனாய் பிறந்து வசதி வாய்ப்புகளை துறந்து இஸ்லாத்திற்காக அத்துணையும் இழந்து துறவி போல் இறந்த ஸல்மான் பார்ஸி (ரலி). அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு

(தொடர்ந்து வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்)


Monday, September 9, 2013

விழுது – 8 சல்மான் பார்ஸி (ரலி) – சத்தியத்தை தேடியலைந்த உண்மையாளர் பாகம் 1

பாலைவன விழுதுகள்
விழுது – 8
சல்மான் பார்ஸி (ரலி) – சத்தியத்தை தேடியலைந்த உண்மையாளர்

இஸ்லாமிய வரலாற்றில் சத்தியத்தை தேடி இப்படி ஒரு நீண்ட பயணம் செய்த ஒரே நபர் இவராக தான் இருக்க முடியும் என்று அறுதியிட்டு கூறலாம். பெருமானார் (ஸல்) அவர்கள் முன் வைத்த சத்திய கருத்துக்கள் வெறும் அரபு மக்களை மட்டும் கவரவில்லை, மாறாக எல்லா எல்லை கோடுகளையும் தாண்டி உண்மையை தேடுபவர்களை தன் புறம் இழுக்கும் சக்தி தான் இஸ்லாம் என்பதை இந்த பாரசீக ஸஹாபியின் வாழ்வின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆம் ஸல்மான் பார்ஸி (ரலி) வாழ்வு முழுமையுமே படிப்பினை என்றாலும் எடுத்தவுடன் நினைவுக்கு வருவது அவரின் சத்திய தேடலும் அகழ் போரும் தான் என்று சொன்னால் மிகையாகாது.

சத்தியத்தை தேடி சல்மான் பார்ஸி (ரலி) அலைந்ததை அவரின் வார்த்தையிலே இனி கேட்போம்.
" இஸ்பஹான் எனும் இடத்தில் பிறந்த நான் என் தந்தையின் செல்ல பிள்ளையாவேன். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த என் தந்தை நெருப்பை வணங்கி வந்தார். அவரை பின்பற்றிய நான் நெருப்பை அணையாமல் பாதுகாக்கும் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி வந்தேன்.

ஒரு நாள் என் தந்தை அவரின் எஸ்டேட்டுக்கு ஒரு வேலையாய் என்னை அனுப்பி வைத்தார். எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் ஒரு சர்ச்சை கண்ட நான் சூரியன் மறையும் வரை அவர்களின் பிராத்தனைகள் மற்றும் வழிபாட்டு முறைகளை மெய்மறந்து பார்த்து கொண்டிருந்தேன். அவர்களின் வழிபாட்டு முறைகளில் லயித்து போன நான் அவர்களின் மத பூர்விகத்தை பற்றி கேட்க அவர்கள் சிரியா என பதிலளித்தார்கள். என்னை காணாமல் என் தந்தை அனுப்பிய ஆட்கள் வந்த பிறகே நான் என் தந்தையிடம் திரும்பினேன்.

தந்தையிடம் திரும்பிய நான் கிறிஸ்துவர்களின் வழிபாட்டு முறைகள் சிறப்பாக இருக்கிறது என்றும் நம் மதத்தை விட சிறந்ததாக இருக்கிறது என்றும் கூறினேன். கோபமடைந்த தந்தை இரும்பு சங்கிலியால் என்னை கட்டி அறையில் அடைத்தார். பின் அடுத்த முறை சிரியாவிலிருந்து ஏதேனும் குழு வந்தால் எனக்கு தகவல் தெரிவிக்கும் படி அக்கிறிஸ்துவர்களுக்கு செய்தி அனுப்பினேன். சொல்லிய படி அடுத்த கிறிஸ்துவ குழு சிரியாவிலிருந்து வருமுன்னரே எனக்கு தகவல் வந்தது. இரும்பு சங்கிலிகளை உடைத்து விட்டு சிரியாவுக்கு அக்குழுவுடன் உண்மையை தேடி தப்பி விட்டேன்.

சிரியாவுக்கு சென்ற நான் அவர்களில் சிறந்த அறிஞரை குறித்து கேட்டேன். அதற்கு அக்கிறிஸ்துவர்கள் அவர்களின் தலைமை மதகுருவிடம் என்னை ஒப்படைத்தனர். அவரிடம் என் கதையை சொன்ன நான் அவரிடமே தங்கி சேவகம் புரிந்தேன். அனைவர்க்கும் கிறிஸ்துவத்தை சொன்னவர் பணத்தை பிறருக்கு சரியாக விநியோகிக்காமல் பதுக்கி வைப்பவராக இருந்தார். சிறிது காலம் கழித்து அவர் இறந்து போனார்.

அவர் இறந்து போன பிறகு வந்த புதிய தலைமை மதகுரு மிக ஒழுக்கமானவராக, உலக பற்றற்றவராக மிக சிறந்த ஆன்மிகவாதியாக விளங்கினார். வணக்க வழிபாட்டில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்தி கொண்ட அவரை நான் நேசித்தது போன்று வேறு யாரையும் நான் நேசிக்கவில்லை. அவர் இறக்கும் தருவாயை நெருங்கவே அவரிடம் சென்று நான் அடுத்து யாரிடம் செல்ல என்று கேட்டதற்கு மோசல் எனும் இடத்தில் உள்ள ஒரு நபரை தவிர வேறு யாரையும் தான் நல்லவரக கருதவில்லை என்றும் அவரிடம் செல்லுமாறும் என்னை பணித்தார்.
அவர் சொன்ன படி மோசல் எனும் இடத்தில் இருந்த அம்மனிதரை சந்தித்து என் கதையை கூறி அவரிடம் சேவகம் புரிந்தேன். அவர் இறக்கும் தருவாயை அடையவே அவர் அடையாளம் காட்டிய நிஸிபின் எனும் ஊரில் இருந்த ஒரு நல்ல மனிதரிடம் சென்று அவரிடம் தங்கினேன். அவரிடம் வழக்கம் போல் என் கதையை சொல்லி அவரிடம் காலத்தை கழித்த போது அவருக்கும் மரணம் வர பைஸாண்டியத்தில் உள்ள அமூரியா எனும் இடத்தில் உள்ள நபரிடம் சென்றேன். பைஸாண்டியம் சென்று ஆடுகளை மேய்த்து கொண்டே அவரிடம் கல்வி பயின்று சேவகம் செய்தேன்.

இவரும் மரணத்தருவாயை அடைய அதே கேள்வியை இவரிடமும் கேட்டேன். ஆனால் இத்தடவை எம்மனிதரையும் இவர் அடையாளம் காட்டவில்லை. மாறாக நேர்வழியில் உள்ள எம்மனிதரையும் தமக்கு தெரியாது என்றும் இப்ராஹிமின் வழித்தோன்றலில் ஒரு தூதர் வருவார் என்றும் பேரீத்த மரங்கள் அடங்கிய பகுதிக்கு அவர் ஹிஜ்ரத் செய்வார் என்றும் கூறினார். மேலும் அவரை கண்டால் அவரிடம் உண்மையாக இருக்குமாறும் அவரின் அடையாளங்கள் சிலவற்றையும் கூறினார். அத்தூதர் தர்மப் பொருட்களிலிருந்து எதையும் சாப்பிட மாட்டார் என்றும் அன்பளிப்புகளை ஏற்று கொள்வார் என்றும் கூறிய அவர் அவரின் புஜங்களுக்கு மத்தியில் தூதுத்துவ முத்திரை இருக்கும் என்றும் கூறினார்.

அடுத்த நாளே அரேபியாவுக்கு சென்ற ஒரு பயணக்கூட்டத்திடம் என்னை அரேபியாவில் விட்டு விடும் படியும் அதற்கு பகரமாக சில ஆடுகளை தருவதாகவும் பேரம் பேசினேன். அதற்கு ஒத்து கொண்டு ஆடுகளை எடுத்து கொண்ட அவர்கள் வாதி அல் குர்ரா எனும் இடத்தில் என்னை ஒரு யூதனிடம் விற்று எனக்கு மோசடி செய்தனர். அங்கு நிறைய பேரீத்த மரங்கள் இருப்பதை பார்த்த நான் இது தான் அத்தூதர் வருவதாக வாக்களிக்கப்பட்ட இடம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

பின் பனி குரைதாவிலிருந்து இன்னொரு யூதர் வந்து என்னை விலைக்கு வாங்கி சென்றார். பின் அந்த யூதர் என்னை மதீனாவுக்கு கூட்டி வந்தார். அது தான் இறைவனின் இறுதி தூதர் ஹிஜ்ரத் செய்ய போகும் இடம் என்று எனக்கு அப்போது தெரியாது. ஒரு நாள் என் எஜமானனின் பேரீத்த பழ தோட்டத்தில் உள்ள ஒரு பேரீத்த மரத்தில் உச்சியில் உட்கார்ந்திருந்த போது என் எஜமானனை தேடி வந்த அவரது உறவினர் மக்காவில் இருந்து வந்துள்ள ஒரு மனிதர் தன்னை தூதர் என்று பொய் கூறி மக்களை ஏமாற்றுவதாக கூறினார்.

அப்பேச்சை கேட்ட நான் ஆர்வ மேலீட்டால் மரத்திலிருந்து இறங்கி அச்செய்தியை பற்றி கேட்ட போது என் எஜமானன் கன்னத்தில் அறைந்து வேலையை ஒழுங்காக பார்க்க சொல்லி அனுப்பினான். பின் அன்று இரவு கூபாவில் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுடன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்தேன். பெருமானரை நோக்கி சென்ற நான் என்னிடம் சிறிது உணவு இருப்பதாகவும் அதை தானம் செய்ய தற்போது தகுதியான நபராக இருப்பதால் அதை பெருமானாருக்கு தருவதாகவும் சொன்னேன். அல்லாஹ்வின் பெயரை கூறி அவ்வுணவை தன் தோழர்களை சாப்பிட சொன்ன பெருமானார் (ஸல்) தான் உணவு உண்ணாமல் தவிர்த்து கொண்டார். தூதருக்கான முதல் அறிகுறி நிறைவேறி விட்டது என்று எனக்குள் சொல்லி கொண்டேன்.

அடுத்த நாள் நபி (ஸல்) அவர்களை சந்திக்க சென்ற நான் பரிசு பொருட்களை கொடுத்தேன். அப்பரிசு பொருளை ஏற்று கொண்ட நபி (ஸல்) அதை தானும் உண்டு தோழர்களையும் உண்ண சொன்னார். மிச்சமுள்ள ஒரு அடையாளத்தையும் சரி பார்த்து கொள்ள ஆசைப்பட்டேன். மொத்தம் இரண்டு ஆடைகளை வைத்திருந்த நபி (ஸல்) ஒன்றை அணிந்து கொண்டு இன்னொன்றை தன் தோளில் போட்டிருந்தார். அவருக்கு வாழ்த்து சொல்லி அவரின் முதுகை பார்க்க நிமிர்ந்தேன். அதை புரிந்து கொண்ட நபி (ஸல்) தோளில் இருந்த ஆடையை எடுக்க தூதுத்துவ முத்திரையை கண்டு கொண்டேன்.

சத்தியத்திற்காக நாடு நாடாய் அலைந்து திரிந்த சல்மான் பார்ஸி (ரஹ்) இவ்வாய்ப்பை விடுவாரா என்ன. தூதுத்துவ முத்திரையை பார்த்த அவர்கள் பெருமானருக்கு முத்தம் கொடுத்ததோடு ஆனந்த கண்ணீரை சொரிந்து கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்று கொண்டார்.

அன்பு வாசகர்களே, கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் பாரசீகத்தில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும் சத்தியத்திற்காக அலைந்த அக்கோமகன் இறுதியில் மதீனாவை அடைந்து இஸ்லாத்தை ஏற்று கொள்ள எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார். இப்படியான எச்சிரமமும் இல்லாமல் இஸ்லாம் நமக்கு வந்ததே, முஸ்லீம் எனும் பொறுப்பில் நாம் நம் இறைவனுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறோமா? நாளை நம் ரப்பிடத்தில் நமக்கான பொறுப்புகளை நிறைவேற்றாததை குறித்து விசாரிக்கப்படுவோம் என்ற அச்சமாவது இருக்கிறதா?

சல்மான் பார்ஸியின் சத்தியத்தேடலை பார்த்தோம். இறைவன் நாடினால் அடுத்த இதழில் அகழ் போர் என்றாலே சல்மான் பார்ஸியின் நினைவு வரச் செய்யும் அளவு செய்த நிகழ்வை குறித்தும் அவரின் பற்றற்ற வாழ்வை குறித்தும் பார்ப்போம்.

(விழுதுகள் வளரும்)

விழுது-7 முஸ் அப் இப்னு உமைர் (ரலி) -முஹம்மதின் முதல் தூதுவர்

முஸ் அப் இப்னு உமைர் (ரலி) -முஹம்மதின் முதல் தூதுவர்

தற்காலத்தில் இஸ்லாத்தை போதிக்கும் வகுப்புகளுக்கும் திருக்குரான் விளக்கவுரை வகுப்புகளுக்கும் சாமான்ய மக்கள் வரும் அளவு மேல்தட்டு மக்கள் ஆர்வம் காட்டாததற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் பொருளாதார வசதியே. இஸ்லாத்தை பற்றி நிறைய பேசுவார்கள், முக நூலிலும் மின்னஞ்சலிலும் இஸ்லாம் சம்பந்தமாக படிப்பார்கள், ஷேர் செய்வார்கள். குறுந்தகடுகள் வாங்கி கேட்பார்கள். ஆனால் நேரடியாக இம்மார்க்கத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், இம்மார்க்கத்தை பரப்பவும், இம்மார்க்கத்தை நிலைநாட்ட பாடுபடவும் நேரம் கொடுக்க தயங்குவார்கள். இப்படி பொருளாதாரத்தின் காரணத்தால் இம்மார்க்கத்திற்கு நேரம் கொடுக்க தயங்குவோர்க்கு, தியாகம் செய்ய தயங்குவோர்க்கு அழகான முன்மாதிரி முஹம்மது (ஸல்) அவர்களின் முதல் தூதுவர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களின் வாழ்வில் இருக்கிறது.

அன்றைய மக்காவின் முதல் தர மேட்டுக்குடி மகனாக வாழ்ந்தவர் தான் முஸ்அப் இப்னு உமைர் (ரலி). ஆம் அன்றைய மக்கா வாழ்வில் இவரை போல் சொகுசு வாழ்வு வாழ்ந்த இளைஞர் யாருமில்லை என்றே சொல்லலாம். பகட்டான ஆடைகள், வசதியான வாழ்வு என மக்கா பெண்களின் பேசு பொருளாக இருந்தவர் தான் முஸ்அப் இப்னு உமைர். முஸ்அப் ஒரு தெருவில் வந்து விட்டு சென்றாலே அவரின் உடைகள் விட்டுச் சென்ற நறுமணத்தை கொண்டு அடையாளம் கண்டு கொள்வர்.
அப்படிப்பட்ட முஸ்அப் தான் அன்று தன் ஏகத்துவ அழைப்பால் மக்காவில் பேசு பொருளாய் இருந்த முஹம்மது (ஸல்) அவர்களின் செய்தியை கேள்விப்படுகிறார். அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு மக்காவில் முஸ்லீம்கள் ஒன்று கூடும் தாருல் அர்கமிற்கு சென்றார். அங்கு பெருமானார் (ஸல்) அவர்கள் குரான் வசனங்களை முஸ்லீம்களுக்கு கற்று கொடுத்து கொண்டு இருந்தார்கள். பின் சொல்ல வேண்டுமா, குரான் வசனங்களை வாய்மையுடன் கேட்கும் மனிதர் அவர் எவ்வளவு பெரிய சுகவாசியாக இருந்தாலும் அவரை தன் பால் ஈர்க்காமல் விட்டு விடுமா என்ன?

இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்று கொண்ட முஸ்அப் (ரலி) தான் சத்திய மார்க்கத்தை ஏற்று கொண்டதை தாய்க்கு தெரிவிக்காமல் ரகசியமாக வைத்து கொள்ள முடிவு செய்தார். ஒட்டு மொத்த அரேபியாவும் தன்னோடு போர் செய்தாலும் கவலைப்படாத முஸ்அப் தன் தாயின் மேல் வைத்திருந்த பாசத்தாலும் அவரின் தாய் குனாஸ் பின்த் மாலிக் வாய் நீளமான பெண்ணாக இருந்ததுமே அதற்கு காரணம்.

எவ்வளவு காலம் தான் வெறும் கைகளை கொண்டு ஆதவனை மறைக்க முடியும்? முஸ்அப் இஸ்லாத்தை ஏற்று கொண்டதை தெரிந்து கொண்ட அவரது தாயார் இளவரசரை போல் வலம் வந்து கொண்டிருந்த முஸ்அபை சங்கிலியால் கட்டி வீட்டில் மூலையில் விலங்கிட்டார். முஸ்லீம்கள் குறைசிகளிடம் அனுபவித்து வந்த கொடுமைகளிலிருந்து சற்று இளைப்பாறும் பொருட்டு அபிசினியாவுக்கு ஹிஜ்ரத் செய்த நபி (ஸல்) அனுமதி கொடுத்ததை தெரிந்து கொண்ட முஸ்அப் (ரலி) தன் வீட்டிலிருந்து தப்பித்து அபிசினியாவுக்கு சென்றார்.

அபிசினியாவில் இருந்து மீண்டும் மக்காவுக்கு திரும்பிய முஸ்அப்பை கைது செய்ய விரும்பிய அவரது தாய் சிலரை அப்பணிக்கு அனுப்பினார். தனது எதிர்ப்பை காட்டிய முஸ்அப் எவரேனும் தம்மை நெருங்கினால் அவர்களை கொல்வேன் என்று மிரட்டவே அவரது தாய் தமக்கும் முஸ்அப்புக்கும் இடையேயான உறவு இத்துடன் முறிந்து விட்டது என்றார். அப்போதும் தம் தாய் மீதான பாசத்தை வெளிப்படுத்திய முஸ்அப் தன் தாயை சத்திய மார்க்கத்தை ஏற்று கொள்ள சொல்லி அழைப்பு விடுத்த போது அவரது தாயோ இஸ்லாத்தை ஏற்று கொள்ளும் அளவு தம் புத்தி மழுங்கவில்லை என்று அவரது அழைப்பை நிராகரித்து விட்டார்.

புத்தம் புது ஆடைகள், வனப்பான வாழ்வு, எழில் மிகு கேசம், அடுத்த தெரு வரை நீளும் அத்தர் வாசம் என கொகுசு வாழ்க்கையின் கொழுந்தாக விளங்கிய முஸ்அப் இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஒரு நாள் கிழிந்த ஆடைகளுடன் நபித்தோழர்களின் சமூகம் வந்தார். அவரது முந்தைய வாழ்வின் அடிப்படையில் பார்த்து பழகியவர்கள் அவரின் தற்போதைய நிலையை கண்டு கண்களில் கண்ணீரோடு தங்கள் தலையை கவிழ்த்து கொண்டனர். அவரை பார்த்து பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “முஸ்அப்பை போல் தங்கள் பெற்றோரால் செல்லமாய் சீராட்டி வளர்க்கப்பட்ட ஒருவரையும் நான் பார்த்ததில்லை. இப்போது அவர் அனைத்தையும் அல்லாஹ்விற்காகவும் அவனது தூதருக்காவும் துறந்து விட்டு நிற்கிறார்”.

மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காக வந்த யாத்ரீகர்கள் மூலம் பரவிய இஸ்லாமிய அழைப்பால் முதலில் 12 ஆண்கள் மதீனாவிலிருந்து வந்து நபிகளாரை சந்தித்து முதலாம் அகபா உடன்படிக்கை மேற்கொண்டு இஸ்லாத்தை ஏற்று கொள்கின்றனர். மதீனாவில் உள்ள மக்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை சொல்ல சரியான நபரை தருமாறு வேண்ட எத்தனையோ மூத்த ஸஹாபாக்கள் இருக்க அவர்களை விட்டு விட்டு முஸ்அப் (ரலி) அவர்களை தன் முதல் தூதுவராக அனுப்பினார் இறைவனின் தூதர்.

தம்மை அனுப்பிய பணியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்து கொண்ட முஸ்அப் (ரலி) தன் பணியை திறம்பட செய்தார். குரானை அழகாக ஓதும் திறமை கொண்ட முஸ்அப் அதன் மூலம் மக்களின் உள்ளங்களை கவர்ந்தார். அவரது நாவன்மை, சத்தியத்தை தெளிவாக எடுத்துரைக்கும் பாங்கு, அழகிய முறையில் திருக்குரானை ஓதுதல் இவற்றோடு அவரது எளிமை, நற்பண்புகளால் ஏகத்துவம் மதீனாவில் விரைவாக பரவியது. வெறும் 12 நபர்கள் மட்டுமே முதலாம் அகபா உடன்படிக்கையில் முஸ்லீம்களாக ஆக முஸ்அப் மதீனா வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே வந்த அடுத்த யாத்திரையில் 70 நபர்கள் இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்று கொண்டனர்.
மதீனாவில் முஸ்லீம்களுக்கு சாதகமான சூழல் நிலவ ஆரம்பித்தவுடன் மக்காவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக முஸ்லீம்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய ஆரம்பித்தனர். இறுதியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது மதீனாவின் அனைத்து இல்லங்களிலும் அவரின் செய்தி முஸ்அப் மூலமாக ஏற்கனவே சேர்ந்திருந்தது.

முஸ்அப் (ரலி) மரணமடைந்த உஹது போர்கள நிகழ்வை பார்வையிடும் முன் பத்ர் போரின் போது நடந்த சுவையான நிகழ்வொன்றை மட்டும் பார்ப்போம். பத்ர் போரின் போது பிடிபட்ட குறைஷி கைதிகளுள் முஸ்அபின் சொந்த சகோதரர் அபூ அஸீஸும் ஒருவர். ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பதற்கேற்ப தனக்காக முஸ்அப் ஏதேனும் செய்ய கூடும் என்ற நப்பாசையில் அஸீஸ் இருக்க முஸ்அப்போ அஸீஸை பிடித்து சென்றவரிடம் சென்று அஸீஸின் தாயார் செல்வச் சீமாட்டி என்பதால் அவரை நன்கு கட்டி வைப்பதின் மூலம் பெருத்த பணம் கிடைக்கும் என்றார். மேலும் அஸீஸை இழுத்து செல்லும் சகோதரர் தாம் தமக்கு கொள்கை அடிப்படையில் சகோதரர் என்பதையும் அங்கே சொல்லத் தவறவில்லை முஸ்அப் (ரலி). சிறை வைக்கப்பட்ட அஸீஸின் பசி அடங்கும் வரை ரொட்டி கொடுத்த முஸ்லீம்கள் வெறும் பேரீத்தம் பழத்தை கொண்டு தங்கள் பசியாற்றி கொண்டதையும் ஆச்சரியத்தோடு பார்த்தார் அபூ அஸீஸ் இப்னு உமைர்.

பத்ர் போரிலே தங்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரும் தோல்விக்கு பழி தீர்க்கும் முகமாய் உஹது போருக்கு பெரும் படை திரட்டி கொண்டி வந்திருந்தனர் மக்கத்து குறைஷிகள். அப்போரிலே முஸ்லீம்களுக்கு சாதகமாக இருந்த சூழல் தூதரின் கட்டளையை மீறி மலையுச்சியிலிருந்து இறங்கிய வீரர்களால் மாறி போனதும் அதனால் முஸ்லீம்கள் தரப்பில் பலர் உயிரிழக்க நேரிட்டதையும் நம் வாசகர்கள் நன்கறிவார்கள்.
உஹது போரின் போது முஸ்லீம்களின் சார்பில் கொடியை ஏந்தி வரும் மதிப்பு வாய்ந்த பொறுப்பை முஸ்அப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு கையில் கொடியை ஏந்தி கொண்டு நபியவர்களின் பக்கம் விரைய முற்படும் எதிரிகளின் கூட்டத்தை திசை திருப்பும் முகமாய் தனி படையாகவே மாறி அல்லாஹ் அக்பர் என்ற முழக்கத்துடன் எதிரிகளை துவச்மம் செய்து கொண்டிருந்தார் முஸ்அப் (ரலி).

இப்னு காமிய்யா என்ற குறைஷி வீசிய வாள் முஸ்அப்பின் வலது கரத்தை துண்டிக்க “முஹம்மது அல்லாஹ்வின் தூதரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்னும் தூதர்கள் பலர் சென்று போயினர்” என்ற வசனத்தை ஓதி கொண்டே தம் இடது கரத்தால் போரிட்டார். பின் இடது கரமும் துண்டிக்கப்பட ரத்த சக்தியில் விழுந்த முஸ்அப்பை ஈட்டி கொண்டு ஒருவன் தாக்க அவர் ஷஹீதானார் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

உஹது போர்களத்தில் மடிந்து கிடந்த தம் தோழர்களின் உடல்களை பார்வையிட்டே கொண்டு வந்த நபிகளார் முஸ்அப்பின் உடலை பார்த்ததும் ”இறைவனிடம் தாங்கள் மேற்கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றியவர்களும் உங்களில் இருக்கிறார்கள்” என்ற வசனத்தை மேற்கோள் காட்டி கண்ணீர் சிந்தினார்கள். செல்வச் செழிப்பில் மிதந்த அவ்வாலிபர் இஸ்லாத்தை ஏற்ற பின் வறுமையின் அடி நிலையில் உழன்று பின் இம்மார்க்கத்திற்காக தன்னுயிர் இழந்து அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அவரது உடலை முழுமையாய் மூட துணி கிடைக்கவில்லை. காலை மூடினால் தலை தெரிந்தது, தலையை மூடினால் கால் தெரிந்தது பின் இத்கிர் புல்லை கொண்டு முஸ்அப்பின் கால் மூடப்பட்டது. முஸ் அப்பின் தியாகத்தை நினைத்து பார்த்து தான் சொர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) போன்ற தோழர்கள் தங்கள் தியாகம் போதாதோ என பயந்திருக்கிறார்கள்.

உஹது போர் முடிந்தவுடன் நபியவர்களும் தோழர்களும் மதீனா திரும்ப, பெண்களெல்லாம் தங்கள் உறவுகள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) சகோதரி ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) எனும் சஹாபிய பெண்மணியை பார்த்து நபிகளார் “ஹம்னா உன் சகோதரன் அப்துல்லாஹ்விற்காக வெகுமதி தேடி கொள்” என்றார்கள் (அவர் போரில் ஷஹீதாகி விட்டார் என்பது அர்த்தம்). அதை கேட்ட ஹம்னா “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்றார்கள்.

அடுத்ததாக ஹம்னாவை நோக்கி “உம் தாய்மாமன் ஹம்ஸாவிற்காக வெகுமதி தேடி கொள்” என்றார்கள். சகோதரனுக்கு அடுத்து மாமனையும் இழந்த அப்பெண் கண்ணீருடன் பொருந்தி கொண்டார். பின் “ஹம்னாவே உன் கணவன் முஸ்அப்புக்காக வெகுமதி தேடி கொள்வீராக” என்ற போது அப்பெண் உடைந்தே விட்டாள். என்ன தான் வீரம் செறிந்த பெண் எனினும் ஒரே நேரத்தில் சகோதரன், தாய்மாமன், ஆருயிர் கணவன் என அனைவரையும் பறி கொடுப்பது லேசானதா என்ன?. இருந்தாலும் சொன்னார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். அவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே மீளப் போகிறோம்)

அத்தகைய தியாகமும் வேட்கையும் பொறுமையும் இருந்ததால் தான் அவர்களை சொல்கிறோம்

ரலியல்லாஹு அன்ஹு.