Friday, September 2, 2011

சோமாலியா - பசியின் பிண்ணணி


தன் ஒரு வயது பெண் குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு 4 வயது ஆண் குழந்தையை அழைத்து கொண்டு கடும் பஞ்சம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவின் ஒரு பகுதியிலிருந்து அதிலிருந்து தப்ப இன்னொரு பகுதிக்கு இரண்டு வாரங்களாக வர்தோ முஹம்மது யூசுப் வெறுங்கால்களாலேயே நடந்து கொண்டிருந்தாள். இரண்டு வாரங்களுக்கு பின் இன்னும் ஒரு சில தினங்களில் ஓரளவு சுமாரான பகுதிக்கு சென்றடைய உள்ள நிலையில் அவளுடைய மகன் மூர்ச்சையாகி விடுகிறார். மூர்ச்சையாகி போன தன் மகனை மயக்கத்திலிருந்து எழுப்ப தன்னிடமிருந்த சொற்ப தண்ணீரை தெளிக்கிறார். எஞ்சியிருந்த தண்ணீரும் வற்றி போய்விடும் நிலையில் தன்னுடன் வந்த மற்றவர்களிடம் உதவி கேட்க, தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதே பெரும்பாடாய் இருந்த நிலையில் உதவ முடியாமல் கைவிரிக்க எத்தாயும் எடுக்க முடியா நிலைப்பாட்டை வர்தோ முஹம்மது யூசுப் எடுக்க வேண்டி நேரிட்டது.

ஆம், வர்தோ முஹம்மது யூசுப் மயக்க நிலையில் இருந்த தன் மகனை தன் இறைவனிடம் ஒப்படைத்தவளாக அப்படியே விட்டு விட்டு செல்ல முடிவெடுத்தாள். சில நாட்கள் கழித்து ததாபில் உள்ள அகதி முகாமில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது சொன்னாள்அவனுடைய இறைவன் அவனை காப்பாற்றி இருப்பான் என நம்புகிறேன். இது போன்ற ஒரு முடிவெடுக்கும் நிலைக்கும் உலகின் எத்தாயும் தள்ளப்பட்டு விட கூடாது என பிராத்திக்கிறேன். என் மகனின் வயதை ஒத்த மகன்களை பார்க்கும் போதெல்லாம் என் மகனின் நினைவு வருகிறதுஎன்று 29 வயதான தாய் நிருபர்களிடம் கூறினார். இதே போல் பாத்திமா சகோவ் அப்துல்லா எனும் விதவை தாய் தன் 4 குழந்தைகளுடன் சென்ற போது தன்னிடமிருந்த 5 லிட்டர் கேனில் உள்ள தண்ணீர் வற்ற ஆரம்பித்த போது அவள் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள் யாரை விட்டு விட்டு போவது, யாரை கொண்டு செல்வது என்று. இரு குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மீதமிரு குழந்தைகளை அழைத்து கொண்டு அகதி முகாமை அடைந்தார்.

இது போல் எண்ணற்ற அசாதரணமான சம்பவங்களை சாதாரணமாக சோமாலிய முஸ்லீம்களின் வாழ்வில் பார்க்கலாம். அகதி முகாமிற்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து போன குழந்தைகளை அடக்கம் செய்வதற்கு குழி தோண்ட சக்தியில்லாமல் இலைகளை கொண்டு மூடி சென்ற சம்பவங்கள் ஏராளம். இது போல் அசாதரணமான செயல்களை சாதாரணமாக செய்து விட்டாலும் அவர்களின் வாழ்வில் உளவியல் ரீதியாக ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக உளவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்காவின் இரு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சுமார் 3,000 உயிர்கள் பலியானதை திரும்ப திரும்ப பொதுமக்களின் சிந்தனையில் ஏற்றும் ஊடகங்கள் 3 மாதங்களில் 29,000 குழந்தைகள் இறந்து போனதற்கு எவ்வித முக்கியத்துவம் அளிக்கவில்லை. எவ்வித அரசியல் ஞானமும் இல்லாமல், தொலை நோக்கு பார்வை இல்லாமல் ஒரு நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையே சவாலுக்கு அழைக்கும் ஒரு தனி நபரின் உண்ணாவிரதத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் 29,000 குழந்தைகளின் உயிர்களுக்கு கொடுக்கப்படாததின் பிண்ணணியில் ஊடகங்களின் பாரபட்ச பார்வையும் முஸ்லீம்களின் உயிர்கள் கிள்ளுக்கீரையாக மதிப்பிடப்படுவதின் யதார்த்தத்தை சுட்டி காட்டுகிறது. தமிழகத்தில் கூட மார்க்கத்தின் கிளை பிரச்னைகளுக்கும் தனிப்பட்ட ஈகோ பிரச்னைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை சோமாலியா பிரச்னைக்கு முஸ்லீம் இயக்கங்கள் அளித்தது போல் தெரியவில்லை.

வறட்சியும், பஞ்சமும் சோமாலியாவுக்கு புதிதில்லை என்றாலும் இவ்வளவு மிகப் பெரும் வறட்சி ஏற்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 1998ல் கென்யா மற்றும் தான்ஸானியாவில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தாக்கப்பட்டதற்கு பிறகு, குறிப்பாக அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் அல்காயிதாவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று அமெரிக்காவால் கூறப்பட்ட அல் ஷப்பாப் போராளி குழுக்களை அழிக்கும் நோக்கில் எண்ணற்ற குழுக்களை ஆப்கனில் உருவாக்கியதன் மூலம் உள்நாட்டு போர் வெடித்து சீரழிவில் சோமாலியா வீழ்ந்தது.

2005ல் உள்ளூர் குழுக்களை ஒழித்து இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்பு எனும் குழு 15 வருடத்தில் முதல் முறையாக அமைதியை நிலைநாட்டியது. ஒட்டு மொத்த சோமாலியா மக்களும் ஆதரித்த இக்குழுவை அல்காயிதா தொடர்புடையது என்று கூறி அமெரிக்க ஆதரவுடன் அண்டை நாடான எத்தியோப்பியா படையெடுத்து சுமார் 15,000 பொதுமக்களை கொன்றது. எனினும் சோமாலியா மக்களின் வீரத்தின் முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் அமெரிக்க ஆதரவு படைகள் வெளியேறினாலும் அவைகள் ஏற்படுத்திய பாதிப்புகளும் அவர்கள் உருவாகிய விஷ வித்துகளும் இன்னும் தொடர செய்கின்றன.

ஆனால் அல் ஷபாப்க்கு எதிராக சர்வதேச சமூகம் சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுகிறேன் எனும் பெயரில் தற்காலிக அரசாங்கத்தை அமைத்தார்கள். இதனால் உள்நாட்டு போர் முற்று பெறாமல் பல்லாண்டுகள் மீண்டும் உள்நாட்டு போர் தொடர்ந்ததால் தென் சோமாலியா அல் ஷப்பாப் குழுவிடமும் வட சோமாலியா அமெரிக்க ஆதரவு பெற்ற தற்காலிக அரசாங்கத்திடமும் மீண்டன. அல் காயிதா முத்திரை குத்தப்பட்டதாலும், ஏனோ அல்-ஷப்பாப் குழுவும் உருவாகி வரும் பஞ்சத்தை குறித்த கவலையை சர்வதேச முஸ்லீம் சமூகத்திடமும் பகிராத காரணத்தால், அல்லது சொல்வதற்கு தடுக்கப்பட்ட சூழலால் இக்கொடிய பஞ்சம் உருவாகியுள்ளது.

எனவே 3 மாதத்தில் 29,000 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு 6 இலட்சம் குழந்தைகளை ஈராக்கில் பொருளாதார தடை எனும் பெயரில் கொலை செய்த அமெரிக்காவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பது தெளிவு. அது போல் கடந்த ஒரு வருடமாக இப்பஞ்சத்தை குறித்து ஆய்வு செய்வதில் காட்டிய அக்கறையை தீர்ப்பதில் சர்வதேச சமூகம் செலுத்தவில்லை என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும். இதே நிலை ஒரு வேளை முஸ்லீம் அல்லாத நாடுகளில் ஏற்பட்டிருந்தால் இது மாதிரி ஓர் அலட்சிய போக்கு நிச்சயமாக ஏற்பட்டிருக்காது என்பது உண்மை.

6 நிமிடத்திற்கு ஒரு குழந்தை மரணித்து கொண்டிருக்கும் தென் சோமாலியாவில் முழுக்க முழுக்க வறட்சியின் கோர முகம் முழு வேகத்தில் தாண்டவமாடுகிறது. மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைவால் உயிரிழக்கும் அபாயம் நேரிட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் பலியோனாரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது வரை சோமாலியாவிலிருந்து 8 இலட்சம் நபர்கள் கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, ஏமன் ஆகியவற்றுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இது வரை முஸ்லீம் உலகில் கிலாபத் மீண்டும் கொண்டு வரும் சாத்தியமுள்ள நாடாக கருதப்படும் துருக்கியின் பிரதமர் எர்டோகான் அங்குள்ள அகதி முகாம்களுக்கு சென்று நிவாரண பணிகளை முன்னெடுத்துள்ளது சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவித்ததை போன்றும் முஸ்லீம் உம்மா ஓர் உடம்புக்கு சமமானதாகும், ஓர் உறுப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் எல்லா உறுப்புகளும் பங்கு பெறும் என்பதற்கேற்பவும் அச்சோமாலியா மக்களின் துயர் நீங்க இறைவனிடம் கையேந்துவோம். பொருளாதர உதவி செய்வோம். இது போல் இன்னொரு சோமாலியா உருவாகாமல் இருக்கவும் முஸ்லீமுக்கு பாதிப்புக்கு ஏற்பட்டால் உடனே துயர் துடைக்கும் சுல்தான் ஸலாஹூத்தின் , உமர் பின் அப்துல் அஜீஸ், முஹம்மது பின் கஜ்னவி போன்ற ஒரு நெஞ்சுரம் மிக்க தலைமையின் கீழ் ஒட்டு மொத்த முஸ்லீம்களும் ஓரே தேசமாய் வாழும் பாக்கியம் கிடைக்க படைத்தவனிடம் முறையிடுவோம்.