Saturday, June 29, 2013

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) – கலப்பற்ற துஆவின் இலக்கணம்

பாலைவன விழுதுகள்
விழுது – 6 அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) – கலப்பற்ற துஆவின் இலக்கணம்


ம்மில் பலர் இறைவனிடம் பிராத்திக்கும் போது பிராத்தனைக்குரிய ஒழுங்குகளை பேணாமல் துஆ கேட்பதும், அத்துஆ இறைவனால் அங்கீகரிக்கப்பட தாமதமானால் இறைவன் ஏன் என் துஆவை ஏற்கவில்லை என்று துவண்டு விடும் குணம் உள்ளவர்களாய் இருப்பதை பார்க்கின்றோம். ஆனால் ஒரு நபித்தோழரின் தக்வா எப்படி இருந்ததென்றால் அவர் கேட்ட துஆவின் அடிப்படையிலேயே அல்லாஹ் அவருக்கு மரணத்தை கொடுத்தான். அந்நபித்தோழரின் வாழ்விலிருந்து இம்மாதம் சில படிப்பினைகளை பார்க்க இருக்கின்றோம்.

ஆரம்ப நாட்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மாமி உமாமாவின் மகனான அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தை ஏற்றக் கொள்கைத் தங்கமாவார். அவரின் சகோதரி ஜைனப் பிந்த் ஜஹ்ஷ் (ரலி) பின்னாளில் நபியவர்களின் மனைவியாக அமைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கத்து குறைஷிகளின் தொல்லையிலிருந்து விடுபட முஸ்லிம்கள் அபீசினியாவிற்கு ஹிஜ்ரத் செய்த போது அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷும் ஹிஜ்ரத் செய்தார். நபி (ஸல்) ஹிஜ்ரத் செய்த போது தன் வளமான வீடு மற்றும் பொருளாதாரத்தை துறந்து தன் குடும்பத்தோடு அப்துல்லாஹ் பின்  ஜஹ்ஷ் (ரலி) ஹிஜ்ரத் செய்தார்.
அப்துல்லாஹ்வின் ஹிஜ்ரத்துக்கு பின் மக்காவில் வளமான அவரது வீட்டை அபூ ஜஹ்ல் உரிமையாக்கி கொண்ட போது அப்துல்லாஹ் வருத்தமடைந்தார். அவரின் வருத்தத்தை கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு பகரமாய் அல்லாஹ் சொர்க்கத்தில் சிறப்பான இல்லம் அளிப்பான் என்றபோது சோகம் மறைந்து சந்தோஷப்பட்டார்.
முதல் தளபதி

பத்ர் போர்களத்துக்கு எல்லாம் முன்னதாக ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) 12 பேர் கொண்ட குழு ஒன்றிற்கு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷை தலைவராக நியமித்தார்கள். இஸ்லாமிய வரலாற்றின் அதிகாரபூர்வமற்ற முதல் தளபதியான அப்துல்லாஹ்விடம் ஒரு கடிதத்தை கொடுத்து இரண்டு நாட்கள் கழித்தேப் பிரித்துப் படிக்க வேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரின் கட்டளைக்கிணங்க இரண்டு நாட்கள் கழித்து அக்கடிதத்தைப் பிரித்துப் படித்தார் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி).  அக்கடிதத்தில் குறைஷியர்களின் நடமாட்டத்தை பற்றிய தகவலை மட்டும் உளவு அறிந்து சொல்லும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. எந்த குறைஷியர்களை அஞ்சி மக்காவிலிருந்து வெளியேறினார்களோ அந்த குறைஷியர்களின் நடமாட்டத்தை உளவு பார்க்கச் செல்வது ஆபத்தான செயல் என்றாலும் சொன்னது நபி(ஸல்) என்பதால் உடனே அவ்விடத்தை நோக்கி நகர்ந்தனர். அவர்களின் கண்ணில் அம்ரிப்னுல் ஹத்ரமீ, அல் ஹகம் பின் கைஸான் மற்றும் அப்துல்லாஹ் இப்னுல் முகீராவின் இரு மகன்களான உத்மான் மற்றும் நவ்பலும் அடங்கிய வணிக குழு கண்ணில் பட்டது.
குழப்பம் கொலையை விட கொடியது

அவர்களின் கண்ணில் வணிகக் குழு தென்பட்டாலும் நபியவர்கள் வெறும் உளவு மட்டும் பார்க்க சொன்னதும் அது ரஜப் மாதம் என்பதும் அவர்களை கையறு நிலையில் ஆக்கியது. ஏனெனில் குறைஷிகள் உள்ளிட்ட அனைத்து அரபியரும் ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய நான்கு மாதங்களை புனித மாதமாக கருதி வந்தனார். அம்மாதங்களில் யாரிடமும் போர், சண்டை, சச்சரவு போன்றவற்றை குறைஷிகள் வைத்து கொள்ள மாட்டார்கள்.
வணிக குழுவைத் தாக்க நினைத்தால் அன்றோ புனித மாதமாகிய ரஜப்பின் கடைசி நாளாகும். இந்த ஒரு நாளை விட்டு விட்டால் அடுத்த நாள் மக்காவின் எல்லைக்குள் சென்று விடுவர். மக்காவில் நுழைந்து விட்டால் எதுவும் செய்ய முடியாது என பல்வேறு ஆலோசனைகள் பரிமாறப்பட்டன. இறுதியாக குறைஷிகளின் வணிக குழுவை தாக்குவது என முடிவெடுக்கப்பட்டது.

ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின் படி முஸ்லீம்கள் குறைஷிகளை தாக்கினர். நால்வரில் ஒருவர் கொல்லப்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் தப்பித்து
ஓடினார். எதிரிகளை வென்ற களிப்போடு கைதிகளுடனும், கைப்பற்றிய பொருட்களுடனும் நபியவர்களிடம் சமர்பித்த முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், பாராட்டு கிடைப்பதற்கு பதில் நபிகளார் (ஸல்) அவர்களைக் கடிந்து கொண்டார்கள். உளவு பார்க்க மட்டுமே பணிக்கப்பட்டிருந்த அவர்கள் செய்த செயல் அதிக பிரசங்கித்தனமானது எனும் தொனியில் அண்ணலார் கடிந்ததோடு அவர்கள் கொண்டு வந்த பொருட்களை யாரும் தொட வேண்டாம் என்றும் கட்டளையிட்டார்கள்.
நன்மையை எதிர்பார்த்து அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் மற்றும் அவரது தோழர்களும் இத்தாக்குதலை தொடுக்க அதன் விளைவுகளோ அவர்களுக்கு தாங்கவியலா சோகத்தை கொடுத்தது. இறைத்தூதரின் கோபத்தோடு இறைத் தூதரின் கட்டளையை மீறியதால் இறைவனின் சாபத்துக்கும் ஆளாகி விடுவோமா என்று பயந்து நடுங்கினர். மேலும் புனித மாதத்தின் புனிதத்தை கெடுத்தவர் என்று முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி குறைஷிகள் குற்றம் சாட்ட தாம் ஒரு காரணமாகி விட்டோமே என்ற கவலையும் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை பிடுங்கித் தின்றது.
இப்புவியில் அவர்கள் பட்ட அத்துணை கஷ்டங்களையும் விண்ணிலிருந்து வந்த ஒரே ஒரு அறிவிப்பு போக்கியது. ஆம் அல்லாஹ் திருமறையில்:
(நபியே!) புனிதமான மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும்  அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” 
- என்று சூரத்துல் பகராவின் 217வது வசனத்தை இறக்கி அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷை குற்றமற்றவராக ஆக்கி நபியின் கோபத்தை தணித்தான் இறைவன்.
கலப்பற்ற துஆவின் இலக்கணம்
பத்ர் போர்களத்தில் தமக்கு நேர்ந்த தோல்வியை ஈடுகட்டும் நோக்குடன் குறைஷிகள் உஹது போரில் முஸ்லிம்களோடு போராடினார்கள். போர் துவங்கும் முன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) மற்றும் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) இருவரும் துஆ செய்தனர். ஸஅதின் பிராத்தனைக்கு அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) ஆமீன் சொல்லி விட்டு பின் இவ்வாறு துஆ செய்தார்.
“ இப்போரில் நான் என் எதிரியோடு கடுமையாக போராட வேண்டும். அவன் என்னை வெல்வதோடு எனது காது மூக்கை சேதப்படுத்த வேண்டும். ஏன் உன் காதும் மூக்கும் சேதப்படுத்தப்பட்டன என நீ என்னை பார்த்து கேட்கும் போது நான் சொல்ல வேண்டும் “உனக்காகவும் தூதருக்காகவுமே” என்று. அப்போது நீ உண்மையே உரைத்தாய் என்று சொல்ல வேண்டும்” என்று ஆழமாய் நெஞ்சுருகத்  துஆ செய்தார்கள்.
அவரின் ஆழமான துஆவில் மெய் சிலிர்த்து போனார்கள் ஸஅத் பின் அபி வக்காஸ் (ரலி) அவர்கள். அடுத்த நாள் போரில் அவர்கள் கேட்ட துஆவுக்கேற்ப அவரது மூக்கும், காதும் சிதைக்கப்பட்டு ஒரு கயிற்றில் கட்டி மரத்தில் தொங்க விடப்பட்டிருப்பதை ஸஅத் பின் வக்காஸ் (ரலி) கண்டார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின்(ரலி)  கலப்பற்ற துஆவை இறைவன் அப்படியே ஏற்று கொண்டு அவர்கள் கேட்ட அடிப்படையில் உறுப்புகளை சேதப்படுத்தி ஷஹீதுடைய அந்தஸ்தை வழங்கினான்.
அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு

            (விழுதுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்!)

Monday, June 24, 2013

விழுது – 5 ஜுலைபிப் : சாதாரண மனிதரின் அசாதரண தியாகம்

பெருமானார் (ஸல்) வாழ்ந்த அரபு சமூகத்தில் பெருமானாரை ஆதரித்த முஸ்லீம்களானாலும் இஸ்லாத்தை எதிர்த்த குறைஷிகளானாலும் இரு பாலர்க்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. சாதாரண மனித ரின் பெயர் சிறியதாக இருந்தாலும் கூடவே நிச்சயம் அவரின் தந்தை பெயர், குலப் பெயர் என மிகப் பெரும் பட்டியலே இருக்கும். நமதூரில் அரசியல் கட்சி கூட்டங்களில் பேச்சை கேட்க வரும் பொதுமக்கள் குறைவாக இருந்தாலும் பேச்சாளர்கள் பெயர்கள் அதிகமாய் நோட்டீஸில் காணப்படுவதை போல் அவர்களது வளமை, பெருமை, குலச்சொத்து எல்லாம் இப்பரம்பரையும் கோத்திரமும் தான்.

இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் ஒருவர் எவ்வித குலம், கோத்திரம் எதுவுமின்றி வாழ்ந்தால் ? அதுவும் இயற்பெயர் கூட வரலாற்றில் அறியப்படாமல் அவரின் அவலட்சணமான தோற்றத்தின் காரணமான பட்டப்பெயரை கொண்டே அழைக்கப்படும் ஒரு நபராக இருந்தால் ? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அல்லவா. ஆம். நாம் அப்படிப்பட்ட ஒரு மனிதரை பற்றி தான் பார்க்க போகின்றோம். ஜுலைபிப் என்பது தான் அவர் பெயர்

ஜுல்பாப் என்றால் முந்தானை அல்லது தலை முக்காடு என்று பொருள்படும். அதிலிருந்து மருவிய ஜில்பாப் என்பதன் சற்றேறக்குறைய மொழிபெயர்ப்பு குட்டையான என்று அர்த்தப்படும். குட்டையன் எனும் பெயரோடு அழகற்றவன் என்று பொருள்படும் தமீம் எனும் உபரி பட்டப்பெயரும் ஜுலைபிப்புக்கு இருந்தது குறிப்பிடத்தக்கதுஇறையச்சத்தை பற்றியும் ரியாவை பற்றியும் சொற்பொழிவு ஆற்றினால் கூட அப்பேச்சை யாரும் வந்து பாராட்ட மாட்டார்களா என்று அங்கீகாரத்துக்கு ஏங்கி கொண்டிருக்கும் நமக்கு ஜுலைபிப்பாக இருப்பதன் கஷ்டம் புரிந்திருக்கும்

அவர் ஒரு அன்ஸார் என்பதை தவிர வேறெந்த குறிப்பும் இல்லை. குலமே பிரதானமாய கோத்திரமே சிறப்பாய் விளங்கும் ஒரு சமூகத்தில் குலமுமின்றி, கோத்திரமின்றி, சொந்தமாய் ஒரு பெயருமின்றி வாழ்வது எவ்வளவு கொடுமை ?

பொதுவாக நம்மில் இப்படிப்பட்ட பலவீனர்களாக உள்ளவர்கள் சக ஆண்கள் எப்போதும் நக்கலும் நையாண்டியும் செய்வார்கள் என்பதால் இயல்பாக மென்மையான மனம் படைத்த எதிர்பாலினரிடம் ஆறுதல் தேடுவதை போல் ஜுலைபிபும் தேடியிருப்பார் போலும். அபூ பர்ஸா எனும் மனிதர் தம் மனைவியிடத்தில் அவர்களுக்கு மத்தியில் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது என்று எச்சரிக்கும் அளவு ஒரு ஜடப்பொருளாய் மதீனாவில் காலத்தை ஓட்டி கொண்டிருந்தார் ஜுலைபிப்.

இப்படியெல்லாம் இருந்த ஜுலைபிப்புக்கு நிச்சயம் திருமணம் முடிக்க ஆசை இருந்தாலும் யாரிடத்திலும் சென்று பெண் கேட்க நிச்சயம் துணிவு இருந்திருக்காது. மதீனாவில் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) உருவாக்கிய மதீனத்து சமூகத்தில் இன, குல வேறுபாடுகள் குறைந்து ஈமான் ஒன்றே உறவுக்கான அளவுகோலாக மாறி போனாலும் அச்சமூகமும் ஆரம்ப நிலையிலேயே இருந்தது என்பதை நாம் மறந்து விடலாகாது.
கருணையின் நாயகம் (ஸல்) ஜுலைபிப்பிற்காக பெண் கேட்க போனார்கள், அதுவும் மதீனத்து பிரமுகர்கள் திருமணம் செய்ய போட்டி போடும் அழகான பெண்ணை. முதலில் நபிகள் நாயகம் (ஸல்) பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று உரைத்ததை நபிகளார் தமக்காகவே கேட்டு வந்திருக்கிறார் என்று தப்பர்த்தம் செய்து கொண்ட பெண்ணின் தந்தை முகம் மலர்ந்தார். ஆனால் ஜுலைபிப்புக்காக பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று பெருமானார் சொன்னவுடன் அதிர்ந்து போன அத்தந்தை தம் மனைவியிடம் ஆலோசனை செய்வதாக சொல்லி நழுவினார்.

அப்பெண்ணின் தாயாரிடம் விஷயத்தை சொன்ன போது ஜுலைபிப்புக்கு தன் மகளை கொடுப்பது பற்றி தாம் நினைத்து கூட பார்க்க முடியாது என்று பட்டவர்த்தனமாக சொல்லி  விட்டார். ஒரு வேளை அரும்பாடுபட்டு தாம் வளர்த்த பெண்ணை எப்படி பாழும் கிணற்றில் தெரிந்தே தள்ளுவது என்று நினைத்தாரோ என்னவோ. மனைவியின் கருத்தை நபிகளாரிடம் சொல்ல அத்தந்தை முன் சென்ற போது அப்பெண் தந்தையை இடைமறித்து விபரம் கேட்க பெற்றோர் முழு விபரத்தையும் ஒப்புவித்தனர்.

ஊரே வெறுத்து ஒதுக்கும் ஜுலைபிப்(ரலி) புக்கு தான் தம்மை நபிகள் நாயகம் (ஸல்) பெண் கேட்டு வந்துள்ளார்கள் என்று தெரிந்தும் அப்பெண் தெளிவாக சொன்னார் "இறைதூதரின் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் என் கடமை. நான் ஜுலைபிப்பை மணமகனாக ஏற்கிறேன்" என்ற போது அப்பெண்ணின் பெற்றோர் மட்டுமல்ல, நாமும் கொஞ்சம் ஆடித் தான் போவோம். ஆடிப் போகும் உள்ளங்களுக்காகவே அப்பெண் கீழ் வரும் குரானின் வசனத்தை ஓதி காண்பித்தார்.
"மேலும்அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை..." (33:36).
அப்பெண்ணின் முடிவை அறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணின் வாழ்வு சிறக்க இறைவனிடம் பிராத்தித்தார்கள். தாம் திருமணம் முடிக்க நினைக்கும் ஆடவனிடத்தில் அவன் தலைமுடியையும், நிறத்தையும், செல்வத்தையும், அழகையும் பார்க்கும் அளவு கூட மார்க்கத்தை பார்க்கா நமக்கு மத்தியில் திருத்தூதரின் தேர்வு என்பதால் தம் சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி ஜுலைபிப்(ரலி) பை மணமகனாக ஏற்ற அப்பெண்ணின் தியாகம் உண்மையில் அர்ப்பணிப்பின் உச்சகட்டம். நபிகளாரின் சிறப்பு பிராத்தனைக்கு உரித்தான அப்பெண்ணின் வாழ்வு ஜுலைபிப் (ரலி) இறக்கும் வரை மனமொத்து சிறப்பாய் இருந்ததை வரலாற்றில் பார்க்கின்றோம்.

ஒரு போர்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படையினரை பார்த்து அவர்கள் யாரையாவது போரில் இழந்து விட்டனரா என்று விசாரிக்க தாங்கள் யாரையும் இழக்கவில்லை என்று தோழர்கள் பதிலளித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "நான் ஜுலைபிப்பை இழந்து விட்டேன். அவரை களத்தில் தேடுங்கள்" என்றார்கள். தோழர்கள் சென்று தேடிய போது ஜுலைபிப் உதிரம் சொட்ட இறந்து கிடந்தார். அவரை சுற்றிலும் ஏழு எதிரிகள் இறந்து கிடந்தனர். ஏழு எதிரிகளை கொன்று ஜுலைபிப் (ரலி) ஷஹீதாகி கிடந்தார்.

ஜுலைபிப்பை பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நெகிழ்ந்து "ஜுலைபிப் என்னுடையவர், நான் அவருடையவர்" என்பதை திரும்ப திரும்ப கூறினார்கள். பின் தம் கரங்களாலேயே ஜுலைபிப்பை ஏந்தி சென்றதோடு தாமே குழி தோண்டி ஜுலைபிப் (ரலி) அவர்களை புதைத்து ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். யாருக்கு கிடைக்கும் இப்பெரும்பேறு.
உடலிலோ, அந்தஸ்திலோ சிறு குறை ஏற்பட்டாலும் துவண்டு துறவியை போல் வாழும் நம்மவர்கள் உருவம் சிறுத்தாலும் தம் செயலால் உயர்ந்து நின்ற ஜுலைபிப் (ரலி) வாழ்வை படிப்பதோடு வாழ வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சும்மாவா சொன்னார்கள்ஜுலைபிப் என்னுடையவர், நான் அவருடையவர்" .

ஜுலைபிப் ரலியல்லாஹு அன்ஹீ