Saturday, July 6, 2013

எகிப்து : முர்ஸி ஆட்சி கலைப்பு – இஸ்லாமிய பார்வை


(எகிப்தின் உண்மையான கள நிலவரம், இஹ்வான்களுக்கு இழைக்கப்பட்டது சரியா, இஹ்வான்கள் செய்த தவறு, உலக சக்திகளின் நிலைப்பாடு என எல்லாவற்றையும் அலசும் ஒரு பாமரனின் பார்வை)

88 ஆண்டு கால சர்வதிகார ஆட்சிக்கு பின் ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வந்த முர்ஸி ஓராண்டிலேயே எகிப்தின் ராணுவம் மேற்கொண்ட புரட்சியின் விளைவாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை இஸ்லாமிய உலகில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விடயமாக உருமாறியுள்ளது.

ஊடகங்கள் சொல்வது
மக்களின் ஆதரவுடன் பதவியேற்ற முர்ஸி சர்வதிகாரி போல் ஆட்சி செய்ய முயன்றதாலும் எகிப்தின் பிரச்னைகளை தீர்க்க தவறியதுமாலேயே மக்கள் பொங்கி எழுந்து ஒரே வருடத்திலேயே ராணுவத்தின் துணை கொண்டு முர்ஸியை பதவி நீக்கம் செய்துள்ளது என்று பெரும்பாலான ஊடகங்கள் சொல்வது உண்மை தானா என்பதை பார்ப்பதற்கு முன் முர்ஸியின் பதவி நீக்கம் குறித்து பல்வேறு சர்வதேச மற்றும் அரபு சக்திகளின் நிலைப்பாட்டை கொஞ்சம் அலசுவோம்.

உலக நாட்டாமையின் கருத்து
உலகத்தில் ஜனநாயகத்தின் பாதுகாவலராகவும் உலக நாட்டாமையாகவும் காட்டி கொள்ளும் அமெரிக்கா நியாயப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஒரு ராணுவம் கவிழ்த்ததை கண்டித்திருக்க வேண்டும், அமெரிக்க சட்டப்படி ராணுவ புரட்சி நடத்தும் நாட்டுக்கு உதவி செய்ய கூடாது என்பதை மீறுவதற்காக பட்டும் படாமலும் கருத்து சொன்ன அமெரிக்கா ராணுவ புரட்சி என்றோ அல்லது முர்ஸி மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்றோ குறைந்த பட்சம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றோ கூட சொல்லவில்லை. சற்றேறக்குறைய இதே கருத்தை தான் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா போன்றவையும் சொன்னது.

ஷியாக்களின் தலைவன் பஷரின் வன்மம்
முர்ஸி கவிழ்க்கப்பட்ட உடன் வெளிப்படையாக தம் மகிழ்வை காட்டி கொண்டவர் சிரியாவின் அதிபர் பஷர் அஸத். சிரியாவில் பெரும்பான்மை சுன்னி இன மக்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் அஸத்துக்கு எதிராக போராடுவதை செவிமடுக்காமல் தன் நாட்டு மக்களை கொன்று குவிக்கும் அஸத் எகிப்தின் மக்கள் உணர்வுகளை வரவேற்பதாகவும் மதத்தை அரசியலுக்கு பயன்படுத்துவோரின் நிலை இப்படி தான் ஆகும் என்றும் அகமகிழ்ந்து கூறியுள்ளார். மேலும் இக்வானுல் முஸ்லீமினின் சித்தாந்தமான “இஸ்லாமிய அரசியல்” என்பது தோற்று போய் விட்டது என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஷியாக்களின் ஒரு பிரிவான அலவி பிரிவை சார்ந்த அஸத்தும் அவர் தந்தையும் இக்வானுல் முஸ்லீமினை வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டிருந்தவர்கள் எனும் நிலையில் இதை தவிர வேறு ஒன்றையும் நாம் அஸத்திடமிருந்து எதிர்பார்த்திருக்க முடியாது.

சவூதிய முடியாட்சியின் சந்தோஷம்
ஷியாக்களின் அஸத்தின் மகிழ்வு ஒரு புறம் இருக்க, புனித தலங்களின் பாதுகாவலர் என்று சொல்லி கொண்டு இஸ்லாத்தின் எதிரி அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் சவூதி மன்னரோ ராணுவ புரட்சி நடந்து மன்சூர் இடைக்கால பிரதமராக பதவியேற்கும் முன்பே வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அமீரகமும் இதற்கு விதிவிலக்கல்ல. எகிப்தில் நடந்த மக்கள் புரட்சி தம் நாட்டிலும் வந்து விடுமோ என்ற பயமும் இக்வான்களின் அரசியல் நிலைப்பாடு தம்முடைய இருப்புக்கு உலை வைத்து விடுமோ என்ற எண்ணமும் ஷேக்குகளுக்கு இருந்ததை அவர்களின் அறிக்கைகள் பகிரங்கமாக வெளிப்படுத்தின என்றால் அது மிகையல்ல.

முர்சி கவிழ்ப்பின் பின்னணி
துனிஷியாவை தொடர்ந்து எகிப்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை தந்தது என்றால் மிகையல்ல. அமெரிக்காவின் அடிவருடியாக செயல்பட்ட எகிப்தின் பிர் அவ்னாக தன்னை வடிவமைத்து கொண்ட முபாரக் பதவியிலிருந்தை வீழ்த்தப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை. மக்கள் எதிர்ப்பு அதிகமாகவே முபாரக்கை நீக்கி விட்டு இன்னொரு அடிமையை கொண்டு வரும் பொருட்டு போராட்டக்காரர்களை அமெரிக்கா வளைக்க பார்த்தது. தன்னுடைய பொருளாதாரம், உளவு பிரிவு, தொழில் நுட்பத்தை கொண்டு முகநூல் போராளிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அமெரிக்கா எதிர்பாரா விதமாக அவர்களின் எதிரியான இஹ்வான்களை ஆட்சிக்கு கொண்டு வந்து விட்டது. இப்போராட்டத்தின் ஆரம்பத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்த இஹ்வான்கள் கடைசியில் ஆட்சிக்கு வந்தது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை தந்தது.

முர்ஸி ஆட்சிக்கு வந்த பின்
முர்ஸி ஆட்சிக்கு வந்த பின் தொடக்கத்தில் அமெரிக்கா பயந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. கூடுமானவரை சமாதானமாகவே போக முர்ஸி நினைத்தாலும் முர்ஸியின் மேல் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சந்தேகம் இருந்து வந்ததால் முர்ஸி பதவியேற்ற முதல் நாளிலிருந்தே அவருக்கு எதிராக மத சார்பற்றவர்கள், மேற்கத்திய மோகிகள், உலகாயத மோகம் பிடித்தவர்கள், காப்டிக் கிறிஸ்தவர்கள் என பல்வேறு தரப்பினரை தூண்டி விட்டனர். நிச்சயம் வளைகுடா அதிபர்களின் பணமும் அத்தோடு விளையாடியுள்ளதை அனைவரும் உணர்வர்.
முர்ஸி ஆட்சிக்கு வந்ததை இஸ்ரேல் அச்சத்துடனே பார்த்தது. ஏனெனில் எகிப்தை ஆண்ட முந்தைய சர்வதிகாரிகளின் ஆட்சியில் எகிப்து இஸ்ரேலுடன் போட்ட அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் இஸ்ரேலின் பாதுகாப்பு கேள்விகுறியாகி விடும் என்பதே அவ்வச்சத்தின் அடிப்படை. முர்ஸி ஆட்சிக்கு வந்தாலும் எகிப்தின் ராணுவம் முழுவதும் முபாரக்கின் ஆட்களாகவே இருந்தனர். அதனால் தான் இரண்டாண்டுகளுக்கு முன் மக்கள் எழுச்சியின் போது தொடக்கத்தில் ஒடுக்க முயன்ற ராணுவம் எழுச்சி எல்லை மீறவே வேறு வழியில்லாமல் முபாரக்கை நீக்க உதவியது.

முர்ஸிக்கும் ராணுவத்துக்கும் உள்ள உறவு
தொடக்கத்தில் துருக்கியின் எர்துகானை போல் நிதானமாக சென்று கொண்டிருந்த முர்ஸி முபாரக்கின் வலதுகரமாக இருந்த ராணுவ தளபதி தந்தாவியை அதிரடியாக நீக்கிய போது தான் எகிப்து ராணுவம் முர்ஸியின் அபாயத்தை உணர்ந்தது. மேலும் முர்ஸி எகிப்தின் மத சார்பற்ற அரசியல் சாசனத்தை மாற்றி இஸ்லாமிய அடிப்படையில் (அது முழுமையான இஸ்லாமிய அடிப்படை அல்ல என்பது வேறு விடயம்) உருவாக்க முனைந்த போது இஸ்லாத்தின் எல்லா எதிரிகளும் முர்ஸிக்கு எதிராக ஒன்று கூடி விட்டனர். அமெரிக்காவின் கைக்கூலிகள், யூதர்களின் அடிவருடிகள், முபாரக்கின் சொச்சங்கள், மத சார்பற்றவர்கள், தாராளமயவாதிகள் என எல்லோரும் ஒன்று சேர்ந்தனர். சுருங்க சொன்னால் எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவர்கள், அமெரிக்கா மற்றும் வளைகுடாவின் காசுக்கு அடிமையான கூலி பட்டாளம் , இக்வான்களின் அரசியல் எழுச்சி தங்கள் அரசியல் இருப்புக்கு உலை வைத்து விடுமோ என பயந்தவர்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று கூடி போராடவே ஆபத்வாந்தவானாக வந்த ராணுவம் முர்ஸியை பதவி இறக்கியது.

இஹ்வான்கள் ஆட்டம் முடிந்ததா
முர்ஸியின் ஆட்சியில் மக்களின் ஆதரவை தவறாக பயன்படுத்தி ஆட்டம் போட்டதாகவும் இனி மேல் இஹ்வான்கள் அவ்வளவு தான் என்று சிலர் பிராசரம் செய்கின்றனர். இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரியக்கம் சந்திக்கும் முதல் சோதனையோ அல்லது முடிவான சோதனையோ அல்ல. ஹசனுல் பன்னா முதற் கொண்டு சையத் குதுப், அப்துல் காதர் அவ்தா உள்ளிட்டவர்கள் ஷஹீதாக்கப்பட்டனர். சகோதரன் என்று அழைத்தவர்கள் எல்லாம் வேட்டையாடப்பட்டனர். பெண் என்றும் பாராமல் ஜைனப் கஜ்ஜாலிகள் சிறைப்படுத்தப்பட்டனர். முர்ஸியே சிறையில் இருந்தவர் தான். எனவே இறைவன் நாடினால் இஹ்வான்கள் மீண்டு வருவார்கள் மீண்டும் வீரியமாக. It just a pause not stop.

எங்கே இஹ்வான்கள் தவறு செய்தார்கள்
அல்லாஹ்வே எமது இறைவன், முஹம்மது (ஸல்) எமது தலைவர், குர் ஆன் எமது சட்டம், ஜிஹாத் எமது பாதை, ஷஹாதத் எமது வேட்கை” என்பதை இலக்காக கொண்டு செயல்பட்ட இஹ்வான்கள் சமீப காலமாக தன் இலக்கான இஸ்லாமிய ஆட்சியை இஸ்லாத்துக்கு விரோதமான கொள்கைகளின் மூலம் நிலைநாட்டலாம் என நினைத்ததே அவர்களின் தவறு எனலாம். இஸ்லாத்தை நிலைநாட்ட வேண்டும் எனும் நிய்யத் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை நிலைநாட்டும் வழிமுறைகளும் என்பதை இஹ்வான்கள் உணர தவறினார்களோ என்று எண்ண தோன்றுகிறது.

அமெரிக்காவின் நயவஞ்சக ஜனநாயகம்
இஸ்லாம் எப்படி இந்து மதம், கிறிஸ்துவம், நாத்திகம் போன்ற மதங்களுக்கு எதிரானதோ அது போல் ஜனநாயகம், மதசார்பின்மை, தேசியவாதம், பொருள்முதல்வாதம், கம்யூனிசம் என கொள்கைகளுக்கும் எதிரானது. எப்படி ஒரு முஸ்லீம் முஸ்லீமாக இருக்கும் அதே நேரத்தில் கிறித்துவனாகவோ அல்லது இந்துவாகவோ இருக்க இயலாதோ அதே போல் ஒரு முஸ்லீம் ஒரே சமயத்தில் முஸ்லீமாக இருந்து கொண்டே ஜனநாயகவாதியாகவோ மதசார்பின்மைவாதியாகவோ இருக்க முடியாது என்பதை இஹ்வான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சையத் குதுபின் “மைல்கற்கள்” புத்தகத்தை படித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஜனநாயகத்தின் பாதுகாவலராக தன்னை காட்டி கொள்ளும் அமெரிக்கா அதே ஜனநாயகம் மூலம் இஸ்லாமிய சக்திகள் ஆட்சிக்கு வருவதை பொறுத்து கொள்ளாது என்பதை அல்ஜீரிய, பலஸ்தீன் உள்ளிட்ட உதாரணங்கள் மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

ஆட்சி கவிழ்ப்பு இஹ்வான்களுக்கு லாபமே
இஹ்வான்கள் இவ்வாட்சி கவிழ்ப்பை உண்மையில் லாபமாகவே பார்க்க வேண்டும். இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த மக்கள் புரட்சியில் தொடக்கத்தில் ஒதுங்கி கொண்ட இஹ்வான்கள் பங்கேற்றாலும் தாங்கள் நாடாளுன்றத்துக்கு போட்டியிட மாட்டோம் என்று தெளிவாக அறிவித்தனர். ஆனால் தங்களுக்கு கிடைத்த மக்கள் சக்தியை வைத்து அவர்கள் ஜனநாயகத்தின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்டலாம் என்று நினைத்து ஏமாந்து விட்டார்களோ என தோன்றுகிறது. 88 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை பொறுத்து கொண்ட மக்களால 1 வருட ஜனநாயக ஆட்சியை தாங்க முடியா பொறுமையற்ற மக்கள். இம்மக்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முயல்வதற்காக இச்சிரமங்களை பொறுத்து கொள்ளவில்லையென்றால் அல்லாஹ் இவர்களை பாதுகாக்க வேண்டும். ஒரு வகையில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாமல் இஹ்வான்கள் திணறும் போது மக்களின் கோபம் இஹ்வான்கள் மேல் பாயும், ஓரேடியாக இஹ்வான்களை வேரறுத்து விடலாம் எனும் அமெரிக்காவின் திட்டமோ இது அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும்.

இஹ்வான்கள் என்ன செய்ய வேண்டும்
இஸ்லாமியவாதிகளே ஜனநாயகத்தின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்ட முயன்றாலும் ஜனநாயகமே அதை ஒத்து கொள்ளாது என இறைவன் தெளிவாக காட்டிய அத்தாட்சியாகவே இஹ்வான்கள் இதை கருத வேண்டும். தங்கள் இலக்கை அடைய தவறான வழிமுறையை தேர்ந்தெடுத்ததன் மூலம் ஏற்பட்ட கறையை சரி செய்யும் விதமாக இஹ்வான்கள் இனியாவது மக்களின் மனோ இச்சையின் அடிப்படையான ஜனநாயகத்தை விட்டு தூரமாக வேண்டும். சையது குதுபின் வார்தைகளில் சொல்வதானால் எள்ளளவும் எள்ளின் முனையளவும் முனையின் மூக்களவும் ஜனநாயகத்தோடு சமரசம் செய்து கொள்ளாமல் இஸ்லாமிய அடிப்படையில் ஒரு சமூகத்தை கட்டியமைக்க முயல்வதும், இறைவனின் தூதரால் வாக்களிக்கப்பட்ட படையுடன் சேர்ந்து இவ்வுலகில் இறைவனும் இறைதூதர் (ஸல்) அங்கீகரித்த வழிமுறையில் அடிப்படையில் இஸ்லாத்தை நிலைநாட்ட முயல்வதே இஹ்வான்கள் மேற்கொள்ள வேண்டிய வழியாகும். அதற்கான பொன்னான வாய்ப்பை அல்லாஹ் இவ்வாட்சி கவிழ்ப்பின் மூலம் ஏற்படுத்தி கொடுத்துள்ளான் என்பதை உணர்ந்தால் நிச்சயம் இஹ்வான்கள் ஆட்சி பீடம் ஏறிய போது ஏற்பட்ட மகிழ்வை விட இது இஹ்வான்களை நேசிப்போருக்கு மகிழ்வை தரும் என்பதில் துளியும் ஐயமில்லை.

ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு; (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்; எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!
(இறைவனின் இறுதி வேதம் 61:10-13)

Thursday, July 4, 2013

ரமலானை முழுமையாய் அடைய 15 எளிய வழிகள்

ரமலானை முழுமையாய் அடைய 15 எளிய வழிகள்
-ஃபெரோஸ்கான்-
ரமலானை அடைந்தும் அதை பயன்படுத்தி கொள்ளாதவன் மீது இறைவனின் சாபத்தை நபி (ஸல்) வேண்டிய ஹதீதை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் இம்மாதத்தை முழுமையாய் பயன்படுத்துகிறோமா ? மற்ற மாதங்களை விட 70 மடங்கு அதிக நன்மைகளை தரக் கூடிய இம்மாதத்தின் ஒவ்வொரு விநாடியும் வீணாக்காமல் பயன்படுத்துகிறோமா?

நம்மில் பலர் ரமலானின் ஆரம்பத்தில் இருந்ததை போன்றே ரமலானின் இறுதியிலும் இருக்கிறோம். ஒவ்வொரு ரமலானிலும் "இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலானிலாவது என்னை திருத்தி கொள்வேன்" என்பதே. கடந்து செல்லும் ரமலான்கள் நம்மில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. வரும் ரமலான் அதிலிருந்து மாறுபட்டு நம்மை பாதிக்க கூடிய ஒன்றாக மாற நாம் முழுமையாய் ரமலானின் பலனை அடைந்து கொள்ள எளிமையான 15 வழிகளை பட்டியலிட்டுள்ளேன். படிப்பதோடு நின்று விடாமல் இன்ஷா அல்லாஹ் அமுல்படுத்தவும் செய்யுங்கள்.

நான் பட்டியலிடும் விஷயங்கள் மிக அடிப்படையான ஒன்றாக கூட இருக்கலாம். நாம் பெரும்பாலும் அடிப்படைகளில்  தானே கோட்டை விடுகிறோம். இல்லையென்றால் நம்முடைய பள்ளிகளில் பஜ்ர் தொழுகைக்கும் ஜும்மாவுக்கும் வரக்கூடிய மக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்குமா என்ன?

1.சிதறடிக்கும் செயல்கள்

முந்தைய தலைமுறையை விட நம்மை ரமலானின் நோக்கத்தை அடைய விடாமல் தடுக்கும் செயல்கள் ஏராளமாய் உள்ளன. அனுமதிக்கப்பட்ட செயல்களாக இருந்தாலும் ரமலானின் ஒவ்வொரு விநாடியையும் வீணாக்கி விட கூடாது எனும் அடிப்படையில் சில செயல்களிலிருந்து நம்மை விலக்கி கொள்ளவோ அல்லது குறைத்து கொள்ள வோ முயற்சிக்க வேண்டும். (உம்) தொலைக்காட்சி பார்த்தல், பத்திரிகைகள் படித்தல், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உபயோகித்தல், தேவையின்றி நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடுதல், தேவைக்கு அதிகமாக உறங்கி காலத்தை கழித்தல்.

2. இறைவனின் கண்காணிப்பு குறித்த உணர்வு

அல்லாஹ் நோன்பின் நோக்கத்தை பற்றி சொல்லும் போது தக்வா உடையவர்களாக மாறவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். நோன்பு நோற்கும் போது யார் பார்க்காவிடினும் அல்லாஹ் பார்க்கிறான் எனும் உணர்வால் உண்ணாமல், பருகாமல் இருக்கும் நாம் வாழ்வின் எல்லா நேரங்களிலும் எல்லா செயல்களையும் இறைவன் கண்காணிக்கிறான் எனும் உணர்வை பெற்று கொள்ள வேண்டும்.

3. அறிவு

இஸ்லாத்தை பற்றிய் அறிவை பெறுவதில் முனைப்பு காட்டுவது. குறிப்பாக ரமலான் மாதத்தின் சிறப்புகள், நோன்பின் சிறப்புகள், நோன்பின் ஏவல் - விலக்கல்கள், கியாமுல் லைல் குறித்த விடயங்களை தெரிந்து கொள்வது ரமலானை முழுமையாய் அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.

4. பாவங்களை விட சிறந்த காலம்

நம்மில் விட முடியா பாவங்கள் ஏதும் இருந்தால் அதை முழுமையாய் களைவதற்கு சிறந்த தருணம் ரமலானை விட வேறொன்றுமில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் " யார் பசித்திருந்து தாகித்திருந்து பொய் பேசுவதையும் தீமையான விடயங்களையும் விடவில்லையே அவர் பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் அல்லாஹ்வுக்கு தேவையில்லை" என்பது நாம் அறிந்த விடயமே. எனவே ரமலானில் புகை பிடிப்பது, தீமையான விஷயங்களை பார்ப்பது, புறம் பேசுதல் போன்ற அனைத்து தீய விடயங்களை ரமலானில் விடுவதன் மூலம் ஒட்டு மொத்தமாக வே அவற்றை நம்மிலிருந்து களைய வேண்டும்.

5. தொழுகை

நம்மில் பொதுவாக எல்லோரும் ரமலானின் தொழுவோம் என்றாலும் எல்லா நேரமும் இமாம் ஜமாத்துடன் முறையாக தொழுகைகளை பேண வேண்டும். பர்ளுடன் நிறுத்தி கொள்ளாமல் சுன்னத், நபில் வணக்கங்களையும் பேண வேண்டும். இப்பழக்கத்தை ரமலானுக்கு பிறகும் தொடர வேண்டும். தொழுகை முஃமினின் மிஃராஜ் எனும் அடிப்படையில் அல்லாஹ்வுடன் பேசும் எண்ணத்துடன் ஆர்வத்துடன் செல்ல வேண்டும்.

6. குர் ஆனுடன் தொடர்பு

ரமலானில் குரான் இறக்கப்பட்டதன் காரணமாகவே ரமலானிற்கு இத்தகைய சிறப்பு உள்ளது. மேலும் குரான் இறக்கப்பட்ட இரவே 1000 மாதங்களை விட சிறந்த ஒன்றாக உள்ளது. ஜாஹிலிய்யத்தில் கிடந்த மக்களை நபி (ஸல்) குர் ஆனை கொண்டே நேர்வழிபடுத்தினார்கள். எனவே குர் ஆனுடனான தொடர்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் ஒரு முறையாவது குர் ஆனை முழுமையாய் ஓத வேண்டும். குர் ஆன் ஓத தெரியாதவர்கள் குர் ஆனை கற்று கொள்ள வேண்டும்.

7. தர்மம்

ரமலானில் வீசும் காற்றை விட வேகமாக தர்மம் செய்ய கூடியவராக நபி (ஸல்) இருந்தார்கள் எனும் கூற்றின் மூலம் இம்மாதத்தில் அதிகம் தர்மம் செய்ய முயல வேண்டும். குறிப்பாக ஜகாத் கடமையுள்ளவர்கள் அதை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

8. 30 நோன்புக்கும் அதிகமாக நோன்பிருக்க வேண்டும்.

30 நோன்புக்கும் அதிகமாக நோன்பிருக்க முயற்சிக்க வேண்டும். எப்படி என்று வியக்கிறீர்களா? யார் ஒரு நோன்பாளியின் நோன்பு திறக்க உதவுகிறாரோ அவருக்கு நோன்பாளிக்கு கொடுக்கும் நன்மையை இறைவன் தருகிறான் எனும் ஹதீதை நாம் கேள்விப்பட்டிருப்போம். எனவே குறைந்தது ஒவ்வொரு நாளும் ஒரு நபருக்கு நோன்பு திறக்க உதவி செய்தால் 60 நோன்பின் நன்மை நமக்கு கிடைத்து விடும்.

9. துஆ

அல்லாஹ் மறுக்காத மூன்று நபர்களுடைய துஆக்களில் ஒன்று நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்கும் துஆவும் ஒன்றாகும். பெரும்பாலும் நம்மில் பலர் அந்நேரத்தை விருந்து கொடுப்பது, பள்ளிவாயிலில் இடம் பிடிப்பது, பேசி கொண்டிருப்பது என வீணடிக்கிறோம். எனவே அந்நேரத்தை வீணாக்காமல் நமக்காக, குடும்பத்திற்காக, உறவுகளுக்காக, சமூகத்துக்காக, போராளிகளுக்காக, நபிமார்களுக்காக என துஆ கேட்க வேண்டும்

10. இரவு தொழுகைகள்

கியாமுல் லைல் எனப்படும் இரவு தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த விரைவு தொழுகைகளில் கலந்து கொள்ளாமல் நிதானமாக கிரா அத் ஓதும் அணிவகுப்பு தொழுகைகளில் கலந்து கொள்வதோடு நாமும் அதிகாலை நேரத்தில் தொழ வேண்டும். யார் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடன் ரமலானின் இரவுகளில் நின்று வணங்கினாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற இறைதூதரின் வார்த்தை நம் விஷயத்தில் மெய்யாக வேண்டும்.

11. ஸஹர் உணவு

ஸஹ்ரில் அபிவிருத்தி உள்ளது எனும் பெருமானாரின் கூற்றுக்கேற்ப ஸஹ்ரை நிச்சயம் நாம் செய்ய வேண்டும். சிலர் இரவே உணவு சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவதை போல் செய்ய கூடாது.

12. மிஸ்வாக்

நம்மில் பலர் தக்வா என்று நினைத்து கொண்டு ரமலானில் பல் விளக்காமல், குளிக்காமல் எந்த வேலையும் செய்யாமல் இருப்போம். நோன்பிருக்கும் போது நபி ஸல் பல தடவை மிஸ்வாக் செய்துள்ளார்கள் எனும் ஹதீஸின்  அடிப்படையில் ரமலானிலும் சுத்தமாக இருக்க முயல வேண்டும்.

13. இஃதிகாப்

நபி ஸல் அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இஃதிகாப் வைக்க கூடியவர்களாக இருந்தார்கள். எனவே நாமும் முடிந்த வரை கடைசி பத்து நாட்களோ அல்லது சில நாட்களோ இஃதிகாப் இருக்க முயல வேண்டும்.

14. பிறருக்கு உதவி

ரமலானில் பிறருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதிலும் குறை வைத்து விட கூடாது. இறைவனின் அடியார்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வதிலும் நம்முடைய பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு, சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை குறையின்றி செய்ய வேண்டும்.

15. நமது இல்லத்திலும் ரமதானுடைய சூழல்

நாம் முயலும் இத்துணை காரியங்களும் நம்முடைய இல்ல உறுப்பினர்களும் செய்ய கூடியவர்களாக மாறும் வகையில் நம்முடைய இல்ல சூழல்கள் மாற்றப்பட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர் எனும் நபி (ஸல்) ஹதீதின் அடிப்படையில் நம்முடைய பொறுப்பில் உள்ள நம் மனைவி, மக்கள், உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள் ஆகியோரையும் இவ்வடிப்படையில் வார்த்தெடுக்க முயல வேண்டும்.


அன்பு சகோதரர்களே, படித்து முடித்தவுடன் இதை எழுதிய என்னையும் உங்கள் பிராத்தனையில் இணைத்து கொள்ளுங்கள். நம்மை மறுமையில் நபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் எழுப்புவானாக.