Wednesday, November 23, 2011

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் (மீள்பதிவு)


.இன்னும் சில நாட்களில் இஸ்லாமியப் புத்தாண்டு பிறக்கப் போகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவை நோக்கிப் பயணப்பட்டு, மக்காவில் உருவாக்கிய பத்தரை மாற்று தங்கங்களான, உத்தம தோழர்களைக் கொண்டு உலகம் கண்டிராத ஒரு சமூத்தை உருவாக்கி அதன் மூலம் இறையாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒரு நிலம் தேடிப் புறப்பட்டு 1431 ஆண்டுகள் கடந்து விட்டன. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்திற்காக மக்காவை விட்டு மதீனா நோக்கிச் சென்றார்களோ அந்த நோக்கம், இன்றைக்கும் உணரப்படாத நிலை முஸ்லிம்களிடத்திலே காணப்படுவது வேதனைக்குரியது.



இஸ்லாமியப் புத்தாண்டு கொண்டாடுவதற்கல்ல: 

கிறிஸ்தவர்களும், யூதர்களும் மற்றுமுள்ள மதத்தவர்களும் தங்களது புத்தாண்டை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி வருவது போன்று, நாமும் கொண்டாடுவதற்காக இந்த புத்தாண்டு வருவதில்லை. மாறாக, நம்மீது மிகப் பெரியதொரு சுமையைத் தாங்கி வருகின்றது என்பதை அனைத்து முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். வெறுமனே புத்தாண்டு வாழ்த்துக்கள், அல்லது நாம் வசிக்கும் அரபு நாடுகளிலே கூறுவது போல குல்லு ஆம் வ அன்தும் பி ஃஹைர்என்று சொல்வதற்காக மட்டும் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் நடைபெறவில்லை.

மாறாக, இஸ்லாத்தை வாழ்விப்பதற்கு ஒரு நிலம் தேவை. அந்த இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றுகின்ற மனிதர்கள் தேவை என்ற அடிப்படையில் தான் மக்காவை விட்டு மதீனாவுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். எந்த நோக்கத்திற்காக அவர்கள் பயணப்பட்டார்களோ, அந்த நோக்கத்தை அவர்கள் அடைந்து சாதனைகளைச் சாதித்தும் காட்டினார்கள். அந்த சாதனையைத் தான் இஸ்லாமிய சமூகம் என்று வரலாற்றின் பக்கங்கள் இன்றளவும் அழைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு அந்தச் சமூகம் எங்கே என்று தேடிப்பிடிக்கக் கூட நாதியற்ற சமூகமாக இந்த முஸ்லிம் சமூகம் மாறி விட்டது. வேரை மறந்த மரங்கள் வாழ்வது கடினம். எந்த சமுதாயம் தன்னுடைய வேரைத் தொலைத்து விட்டதோ, அந்த சமுதாயம் விரைவில் தன்னையும் தொலைத்து விடும் என்பது மரபு. தன் கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் எதிர்கால வரலாற்றை படைக்க முடியாது எனும் கூற்றுக்கேற்ப ஹிஜ்ரத்தின் சுருக்கமான வரலாற்றையும் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகளையும் பார்வையிடுவோம்.

நபியவர்கள் இப்பூமிக்கு கொண்டுவந்த தீன் வெறுமனே தனி மனிதர்களை உருவாக்குவது மாத்திரமல்ல, மாறாக தனி மனிதர்களையும், அவர்களின் வழியாக குடும்பங்களையும், சமூகத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் சமைப்பதுமே ஆகும். மக்காவில் இருந்து தனிப்பட்ட கிரியைகளை செய்வதற்கு ஓரளவு சுதந்திரம் இருந்த போதிலும் தீன் முழுமையாய் நிலைநாட்டப்பட அச்சூழல் போதுமானதாக இல்லாததால் நபிகள் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ய நாடினார்கள்.

முதலாவதாக அபூஸலமா (ரலி) அவர்களும், அவரை தொடர்ந்து உமர் (ரலி) உள்ளிட்ட பிற ஸஹாபாக்களும் ஒவ்வொருவராக ஹிஜ்ரத் செய்ய ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக மக்காவை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் இன்று மதீனாவில் ஒன்று கூடி ஒரு சமுதாய அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்டிருப்பது குறைஷிகளுக்கு மிகப் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி;, அதனை எந்த வகையில் தடுத்து அழிப்பது என்பது பற்றியும், இன்னும் அதன் மூல வேர் நம்முடன் தான் இருக்கின்றது, இந்த மூல வேரை அழித்து விட்டால், முழு மரமும் சாய்ந்து விடும் என்பதை மனதில் கொண்டு, இதற்கான சதியாலோசனைக் கூட்டம் ஒன்றை தார் அந்நத்வாஎன்ற இடத்தில் கூட்டினர். இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பிரச்னைகளில் இருந்து முற்றிலும் நாம் நீங்க வேண்டுமென்றால், முஹம்மதைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவரைக் கொல்வதன் மூலமே நாம் இந்தப் பிரச்னையிலிருந்து முற்றிலும் விடுபட முடியும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானமாகியது. இந்தக் கொலையின் மூலம் வரும் எதிர்ப்புகள் மற்றும் இரத்த இழப்பீட்டுக்குப் பழிக்குப் பழி ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஒவ்வொரு குலத்தாரிடமிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகளை நியமித்து, அவர்களைக் கொண்டதொரு கொலைப் படை ஒன்றை உருவாக்குவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இறைவன் நபிகளாருக்கு இத்திட்டத்தை அறிவித்து கொடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானித பொருட்களை உரியவர்களிடம் திருப்பி கொடுப்பதற்காக அலீ (ரலி) அவர்களை தன் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அபூபக்கர் (ரலி) அவர்களுடன் மக்காவை துறந்து மதீனாவை நோக்கி கிளம்புகின்றார்கள். குறைஷிகள் காவல் காத்து கொண்டிருக்கும் நிலையிலேயே வீட்டின் தலை வாயிலின் வழியாகவே அல்லாஹ்வின் உதவியால் எதிரிகள் பார்க்கா வண்ணம் அவர்கள் முன்னாலேயே வெளியேறிச் சென்றார்கள். பின் தன் தோழருடன் சில நாட்கள் வேறு பாதையில் பயணம் சென்று கூபாவில் தங்கி பின் மதீனாவை வந்தடைந்தார்கள் என்பது தான் நபிகளாரின் சுருக்கமான ஹிஜ்ரத் வரலாறு. இதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளை ஒவ்வொன்றாய் சுருக்காமாய் நோக்குவோம்.



திட்டமிடல்: 

ஹிஜ்ரத் எதேச்சையாக நடந்த ஒன்றல்ல, மாறாக அது முழுக்க முழுக்க சரியான திட்டமிடலுடன் நடந்தது என்பதை நபியவர்கள் தாம் புலம் பெயரவிருப்பதை அபூபக்கர் (ரலி) தவிர மற்ற யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வைத்திருந்தது, பயணத்தின் போது எதிரிகளை ஏமாற்ற மக்காவிலிருந்து மதீனாவுக்கு வழமையாய் செல்லும் பாதையில் அல்லாமல் வேறு பாதையில் சென்றது, உணவு கொண்டு வரும் பொறுப்பை அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தது என பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிடலாம். இலக்கில்லாமல் செல்லும் இன்றைய சமூகம் திட்டமிடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன் பாதையை திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

அல்லாஹ்வின் உதவி:

திட்டமிடலில் கவனம் செலுத்திய போதும், அல்லாஹ்வின் உதவியை அதிகம் எதிர்பார்த்த நபிகளாரின் ஹிஜ்ரத்தின் போது அல்லாஹ் பல உதவிகளை செய்தான். உதாரணத்திற்கு தன்னை சுரகா என்பவர் துரத்தி வந்த போதும், எதிரிகளின் கண் முன்னே வந்த போதும், குகையில் நாம் இருவர் மாத்திரம் இருக்கிறோம் என்று அபுபக்கர் (ரலி) கூறிய போது நம்மோடு அல்லாஹ் இருக்கிறான் என்று உறுதியாக கூறியது போன்ற சம்பவங்களின் மூலம் நம்மால் முடிந்த அனைத்து காரியங்களையும் செய்து, அல்லாஹ்வின் பால் பொறுப்பு சாட்டும் போது அவன் உதவ கூடியவனாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.

மஸ்ஜிதுந் நபவியின் பங்களிப்பு:

இந்தப் பள்ளி அமைதியையும், மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய தளமாகவும், போர்ப் பாசறையாகவும், வெற்றித் தளமாகவும் திகழ்ந்தது. இறைத்தூதை பிற மக்களுக்கும், பிற நாட்டவர்களுக்கு அனுப்பி வைக்கக் கூடிய வெளியுறவுத்துறைச் செயலகமாகவும், இறைத்தூதைப் பெற்றுச் செல்வதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்க்க வருபவர்களை வரவேற்கின்ற உள்துறைச் செயலகமாகவும் இந்தப் பள்ளி திகழ்ந்தது. இறைத்தூதைக் கற்றறிந்து கொண்டு, அதனைப் பிறருக்கும் போதிக்க வேண்டும் என்று ஆவல் கொண்ட மாணவர்களைப் பெற்றுக் கொண்ட பல்கலைக்கழகமாகவும், இரவும் பகலும் குர்ஆனைப் பற்றிச் சிந்திக்கக் கூடிய அதனைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடக் கூடிய கல்விக் கலாசாலையாகவும் இப்பள்ளி சிறப்புப் பெற்றது. இன்னும் அன்ஸார்களும், முஹாஜிர்களும் தூர தேசங்களில் இறைத்தூதை எடுத்துச் வைக்கச் சென்ற நாட்களில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய இடமாகவும் இப்பள்ளி திகழ்ந்தது. இன்னும் திண்ணைத் தோழர்கள் என்றழைக்கக் கூடிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், தாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எதனைக் கற்றார்களோ, அதனை அப்பள்ளிக்கு வரக் கூடியவர்களுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடிய ஆசிரியர்களைப் பெற்ற பள்ளிக் கூடமாகவும் அப்பள்ளி திகழ்ந்தது. இஸ்லாமிய அழைப்பான ஜிஹாதிற்கு மக்களை அழைக்கும் பொழுது, தங்களது அனைத்து அலுவல்களையும் விட்டு விட்டு, உலக வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் விட்டு, அந்த மறுமை வெற்றிக்கான அழைப்பாக அதனை ஏற்றுக் கொண்டு, உடனே மக்கள் கூடும் பாசறையாகவும் இந்தப் பள்ளி திகழ்ந்தது

புதிய ஓர் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் நாம் மதீனத்து சமூகத்தில் பள்ளிவாசல் வகித்த பங்கை இன்றைய பள்ளிவாசல்கள் வகிக்கின்றனவா என்பது பற்றி சிந்தித்து விடை காண வேண்டும்.

சகோதரத்துவ கட்டுமானம்:

ஹிஜ்ரத்தின் பின் நடைபெற்ற நிகழ்வுகளை உற்று நோக்கும் போது நபிகளார் தான் கட்டி எழுப்பிய சமூகத்திற்கு முக்கியமான அடிப்படையாக கருதியது சகோதரத்துவமாகும். ஒரு முஃமின் கட்டடத்தை போன்றவன். அதன் ஒரு பகுதி அடுத்த பகுதிக்கு உரமூட்டும் எனும் ஹதீஸ{க்கு ஏற்ப நபி (ஸல்) உருவாக்கிய ஈமானிய சமூகத்தில் குறுகிய இன, வர்க்க, நிற வேறுபாடுகளோ அல்லது தேசிய, பிரதேச வாதங்களோ காணப்படவில்லை.

நபிகளார் உருவாக்கிய சமூகம் தான் இன்று இஸ்லாத்தின் எதிரிகளால் முஸ்லீம்கள் மத்தியில் புகுத்தப்பட்ட இன, நிற, பிரதேச, தேசிய உணர்வுகளால் ஆட்சியையும், அதிகாரத்தையும் இழந்து, பண்பாடும் நாகரீகமும் சீர்குலைந்து நிற்கும் சமூகமாக மாறியுள்ளது. முஸ்லீம்கள் தாங்கள் இழந்த கண்ணியத்தை மீட்டெடுக்க முதலாவதாக தங்களுக்கிடையான வேறுபாடுகளை மறந்து இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடல் வேண்டும்.

எனவே வரும் ஹிஜ்ரா நம்மை எதையும் திட்டமிட்டு செயல்படுபவர்களாகவும், அல்லாஹ்வின் உதவியை நாடி தம் வாழ்வை அமைத்து கொள்பவர்களாகவும், வெறும் தொழுகைக்காக மட்டுமின்றி முஸ்லீம்களின் எல்லா நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் மிக முக்கிய கேந்திரமாக மீண்டும் நம் பள்ளிவாயில்களை செம்மைபடுத்துபவர் -களாகவும், ஒரே இறைவன், ஒரே தலைவர், ஓரே மறை, ஓரே கிப்லாவை பின்பற்றும் நாமனைவரும் நமக்குள் உள்ள சிறிய கருத்து வேறுபாடுகளுக்காக மோதிக் கொள்ளாமல், இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல், ஒற்றுமையாய், மீண்டும் ஒரு மதீனத்து சமூகம் இம்மண்ணில் அமைய பாடுபடுபவர்களாகவும், அண்ணலார் இம்மார்க்கத்தை இம்மண்ணில் முழுமையாய் நிலை நாட்ட போராடியதைப் போல் நாமும் போராடுபவர்களாகவும் மாற்ற அல்லாஹ் உதவி செய்வானாக.

Saturday, November 12, 2011

சவூதி அரேபியா வரலாறு - முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த நம் தள வாசக / வாசகிகளே


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ

சவூதி அரேபியாவின் தோற்றமும் அதன் இன்றைய வரலாறும் எனும் கருப்பொருளில் ஜாஃபர் பங்காஷ் எழுதிய சுவூத் பரம்பரையின் ஜாஹிலிய்யத்தான் அடிவேர்களும் அழிச்சாட்டிய வகிபாகமும் எனும் கட்டுரையும் இக்பால் சித்திகி எழுதிய சவூதி அரசினால் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய பராம்பரிய வரலாற்று தளங்கள் மற்றும் ஸைனப் சீமா எழுதிய எஃகு, இரும்பு மற்றும் காங்கீரிட்டை கொண்டு சவூதி அரேபியா இஸ்லாத்தின் மீது தொடுத்துள்ள போர் என்ற மூன்று கட்டுரைகளை ஆறு பாகங்களாக நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

பரவலான வரவேற்பை இத்தொடர்கள் பெற்ற அதே வேளையில், கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக கப்ருகளை புனித தலங்களாக பெருமைப்படுத்துவதாகவும் தவ்ஹீதின் எழுச்சியை மட்டுப்படுத்துவதாகவும் சில சகோதரர்கள் விமர்சனம் செய்தனர். அதே சமயத்தில் தேசியவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதாகவும் தவ்ஹீதின் பெயரை சொல்லி கொண்டு இஸ்லாத்தை குழி தோண்டி புதைக்கும் செயலை படம் பிடித்து காட்டுவதாகவும் ஆதரித்து விமர்சனங்கள் எழுந்தன.

உண்மையில் தவ்ஹீதின் பெயரை சொல்லி ஷிர்க்கை ஒழிக்கும் பெயரில் வரலாற்று தடங்களை அப்புறப்படுத்தும் முயற்சியாகவும், கிலாபத்தை ஒழிப்பதில் பிரிட்டிஷாருடன் சவூதிய அரசாங்கம் கைகோர்த்த நிகழ்வுகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களுடன் சவூதிய அரசாங்கத்துடன் உள்ள தொடர்பையும் வெளிச்சம் போட்டு காட்டியது. தவ்ஹீத் எனும் பெயரை சொல்வதாலேயே அதை செய்பவர்களின் செய்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட கூடாது எனும் மாயையையும் உடைந்தெரிந்தது. அவ்வகையில் அக்கட்டுரையின் ஆசிரியர்களுக்கு நம் நன்றியை உரித்தாக்கி கொள்கிறோம்.

ஆனால் ஒரு விஷயத்தை நாம் சரியாக சொன்னாலும் அதை புரிந்து கொள்பவர் தவறாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்து விட கூடாது எனும் அடிப்படையிலும் இதில் இடம் பெற்றுள்ள ஒரு சில தகவல்களின் (கட்டுரையின் மையக்கருத்தில் எவ்வித கருத்து வேறுபாடுமில்லை) ஆதாரத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதால், 99% சதவிகித உண்மைகளுடன் 1% ஆதாரமற்றவை கலப்பதன் மூலம் வரலாறு பொய்மைப்பட்டு விடக் கூடாது எனும் நோக்கத்தில் சில நல்ல சகோதரர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் இக்கட்டுரைகளை நீக்குகிறோம். மறைக்கப்பட்டுள்ள வரலாறுகள் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கம் மாத்திரமே இக்கட்டுரை வெளியிடப்படுவதற்கும் அது போல் ஒரு சதவிகித ஆதாரமற்ற தகவல்களும் கலந்து விடகூடாது எனும் எச்சரிக்கை உணர்வுமே இக்கட்டுரைகள் நீக்கப்படுவதற்கான காரணம் என்பதையும் தெரிவித்து கொள்வதோடு இதே நிலைப்பாட்டில் உண்மையை உண்மையாய் சொல்ல கூடிய துணிச்சலை அது யாருடைய வெறுப்பை பெற்று தருமானாலும் தருமாறு இறைவனிடம் பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, November 6, 2011

ஹஜ் பெருநாள் சிந்தனை : இந்த வணிகம் சிறந்தது - செய்வோமா?

மீண்டும் ஒரு முறை இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கையை நினைவு கூறும் விதமாக ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். உம்மா என்பதற்கு விளக்கமளித்த அந்த இறைத்தூதரின் வாழ்க்கையை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். இன்னும், அவரிடம் அவருடைய இறைவன். ''(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்" என்று சொன்னபோது அவர், ''அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்" என்று கூறினார். (2:131) என தன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்.




சமுதாயம் என்றாலே அது அல்லாஹ்விற்கு முற்றிலும் கட்டுப்பட்டதாகவும் நன்மையை ஏவுவதாகவும் தீமையைத் தடுப்பதாகவும் இருக்க வேண்டும் என அல்லாஹ் கூறுவதற்கேற்ப தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தப் பணியை செய்து வந்தார்கள் இப்ராஹிம் (அலை) அவர்கள். இதனால் தனி மனிதர்களாக இருந்த போதிலும் அல்லாஹ் அவரை சமுதாயம் (உம்மா) என சிறப்பிக்கின்றான். ஜமாஅத் என்பது சத்தியத்தினை மையமாக கொண்டிருக்க வேண்டும். அது தனி மனிதராக இருந்தாலும் சரியே! என இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் தெரிவித்திருப்பதும் இதனைத்தான் நமக்கு தெளிவுபடுத்துகிறது.



எண்ணிக்கையை வைத்து இறைவன் வெற்றியளிப்பதில்லை. அவனை முழுமையாக நம்பி அவனுடைய கட்டளைகளை ஏற்று நடப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை வரலாறு நெடுகிலும் நாம் பார்க்க முடிகிறது. நபிகள் நாயகம் (ஸல்) ஒரு முறை கூறினார்கள் – உணவின் மீது ஒரு மிருகம் பாய்வதைப் போல உங்கள் மீது எதிரிகள் பாய்வார்கள். இதனைக் கேட்ட தோழர்களுக்கு சற்று ஆச்சரியம். இப்போது குறைவாக இருக்கும்போதே எதிரிகள் நம்மைத் தொட அஞ்சுகிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக இருந்தால் இந்த நிலை ஏற்படாதே என்ற சந்தேகத்தில் “நாம் அப்போது குறைவாக இருப்போமா?” என கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் ”நீங்கள் வெள்ளத்தின் நுரையைப் போல அதிகம் இருப்பீர்கள்; ஆனால் உங்களது உள்ளத்தில் ‘வஹன்’ இருப்பதால் இந்த நிலை ஏற்படும் என்றார்கள். வஹன் என்பதற்கு விளக்கமளிக்கும்போது மரணத்தைக் கண்டு பயப்படுவதும் உள்ளத்தில் ‘வஹன்’ இருப்பதால் இந்த நிலை ஏற்படும் என்றார்கள்.



மரணத்தைக் கண்டு அஞ்சுவது ஏன் என ஒரு அறிஞரிடம் வினவப்பட்ட போது இந்த உலகத்திற்காக அனைத்தையும் தயார்படுத்தி மறுமையை பாழாக்கி விடும்போது எதனைத் தயார்படுத்தினீர்களோ அதனை விட்டு எதனை அழித்து விட்டீர்களோ அதனிடம் செல்ல யாருக்குத்தான் அச்சம் ஏற்படாது? என தெரிவித்தார்கள். இவ்வாறு நாம் வாழும் இந்த நிலையில் இறைவனுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்த இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வு நமக்கு மிகுந்த உத்வேகத்தையும் தெளிவையும் தருகிறது. அல்லாஹ்விற்காக என வாழும்போது அவனது படைப்பினங்கள் தனது தன்மையை மாற்றியும் உதவி செய்ய அல்லாஹ் வழி ஏற்படுத்துவான் என்பதை நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்ட போது அது இதம் தரும் குளிராக மாறியது நமக்கு உணர்த்துகிறது. இதைத்தான் ஒரு கவிஞர்,

நெருப்பு குளிரும்!


நீங்கள் இப்ராஹிம் ஆக இருந்தால்!


-எனக் குறிப்பிடுகிறார். நாம் நமது வாழ்வை இறைவனுக்கு உகந்ததாக மாற்றும் போது நெருப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. இஸ்லாமிய விரோதிகளின் வெறுப்பைக் கண்டும் கவலைப்படத் தேவையில்லை. இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் நாம் படிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் உள்ளம். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு முறை கூறினார்கள் - நான் கொண்டு வந்ததற்கேற்ப உங்களின் வாழ்வு மாறாதவரை நீங்கள் உண்மையான முஸ்லிமாக மாற முடியாது என்றார்கள். நமது வாழ்வில் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுதாலே நமக்கு ஏதோ மிகப் பெரிய தியாகம் செய்த உணர்வு ஏற்படுகிறது. ஐவேளைத் தொழுகையை முறையாகத் தொழுதால் சுவனத்திற்கு சொந்தக்காரர்களாகி விட்டோம் என நினைத்துக் கொள்கிறோம். ஆனால் தொழுகை என்பது நமது கடமை. தொழாதவன் காஃபிர் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெரிவித்தார்கள். ஒரு முஸ்லிம் அவனுடைய வாழ்வு முழுமையாக இறைவனுக்கு அடிபணியக் கூடியதாக மாற்றவேண்டும்.



இந்த உயிர், செல்வம் அனைத்தும் அல்லாஹ் தந்தது என்ற எண்ணம் யாரிடம் வந்துவிடுகிறதோ அவர்கள் தாங்கள் மிகப்பெரிய செயல்களை அல்லாஹ்வுக்காக செய்தாலும் தியாகம் செய்ததாக எண்ணிக் கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது;

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள். (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். ( 9-111) என கூறுகிறான்.



நாம் ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு பேனாவை ஒருவரிடம் இலவசமாக கொடுக்கிறோம். அந்த பேனாவை மீண்டும் அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன், தாருங்கள் எனக் கேட்டால் அவர் உடனடியாக தந்து விடுவார். சிறிதும் யோசனை செய்ய மாட்டார். சொல்பவரின் வார்த்தையின் மீது சந்தேகம் இருந்தால் மட்டுமே கொடுப்பதற்கு தயங்குவார். பேனாவைத் தந்த அவர் நான் பேனாவை தியாகம் செய்து விட்டேன் எனச் சொன்னால் கேலிக்குரியதாக இருக்காதா? அவ்வாறே அல்லாஹ் நமக்கு உயிர், செல்வம் மற்றும் அனைத்தையும் தந்து திரும்பத் தாருங்கள் சுவனம் தருகிறேன் என்கிறான். கொடுத்த பொருளை எந்த பரிசுமில்லாமல் திரும்ப பெறுவதற்கு அவனுக்கு உரிமையிருக்கிறது. ஆனால் கருணையாளனான அந்த ரஹ்மான் கொடுத்ததை திருப்பிக் கொடுப்பதற்கு விலை மதிப்பற்ற, சாட்டை வைக்கும் ஓர் சிறிய இடம் இந்த உலகத்தையும் அதிலுள்ளதையும் விட சிறந்ததான சுவனத்தைத் தருகிறான். இந்த வணிகம் மிகச் சிறந்தது. செய்வோமா நாம்?
(இக்ரா துல்ஹஜ் மாத இதழில் வெளிவந்தது)