Wednesday, March 18, 2009

பாபரி பள்ளிவாசலை விட்டுக்கொடுத்து விடலாமா?

நீண்ட நெடிய காலமாக பாபரி பள்ளிவாசலை மூடி வைத்து அதனுள் சிலைகளை வைத்தார்கள். அதன் பின்னர் பூஜைக்காக பள்ளிவாசலைத் திறந்து விட்டார்கள். பின்னர் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கினார்கள். தொடர்கின்றார்கள் அந்த இடத்தில் கோவில் கட்டும் முயற்சியை !
இத்தனை நிகழ்ச்சிகளுக்கும் உறுதுணையாய் நின்றது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு. பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த நிவாரணமும் முஸ்லிம்களுக்குத் தென்படவில்லை.
இந்நிலையில் பள்ளிவாசலை இடித்தவர்கள் மத்தியில் ஆட்சியை பிடித்திருக்கின்றார்கள். இது முஸ்லிம்களுக்கு எந்த நிவாரணமும் இனி கிடைக்காது என்பதை ஊர்ஜிதம் செய்கின்றது.
இத்தனை அவலங்கள், முதுகில் குத்துதல், நெஞ்சில் குத்துதல், கீழவுப்புகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, என்றாவது ஒரு நாள் நியாயம் கிடைக்கும்; தங்கள் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், இல்லை புழுக்களாக நெளிந்து கொண்டிருக்கின்றார்கள், இன்றைய இந்திய முஸ்லிம்கள்.
முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையைத் தகர்த்து அவர்களை மனதளவில் பலவீனப்படுத்த வேண்டும் என்று சிலர் செயல்படுகின்றனர்.இப்படி செயல்படுபவர்கள் முஸ்லிம்களின் எதிரிகளான ஃபாசிஸ்ட்டுகளாக இருந்தால் நாம் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவர்களிடமிருந்து நாம் வேறெதையும் எதிர்பார்க்கவில்லை.
இப்படி செயல்படுபவர்கள் முஸ்லிம்களாக இருந்திடும்போது நாம் கவலைப்பட்டாக வேண்டியது வருகின்றது. அதிலும் அவர்கள் "இஸ்லாமிய அறிஞர்கள்" என்றும், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்றும் தங்களைக் காட்டிக் கொள்ளும்போது சில விளக்கங்களை தந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம்.
இப்படி செயல்பட்டு வருபவர்களில் முக்கியமானவர் மௌலானா வஹ“துத்தீன் கான் அவர்கள்.
இன்று தமிழகத்தில் இவருடைய கருத்துக்களைப் பரப்புவதற்கு சிலர் முன்வந்துள்ளதால் இந்த விளக்கம் இங்கே இரட்டிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
அத்தோடு பாபரி பள்ளி வாசல் குறித்து இஸ்லாமியப் பார்வை என்ன என்பதையும் இது விளக்கி விடுகின்றது.
மௌலானா தன்னுடைய கருத்துக்களைத் தான் நடத்தும் அர்ரிசாலா என்ற பத்திரிகையில் வெளியிட்டு வருகின்றார். இந்த அர்ரிசாலா என்ற பத்திரிகையில் மே 1993 இதழில் பாபரி மஸ்ஜித் பிரச்னைக்கும் இப்படி தீர்வு சொல்கின்றார்.
"முஸ்லிம்கள், பாபரி மஸ்ஜித் மீட்புக்காக போராடுவதை நிறுத்த வேண்டும். இஸ்லாமிய ஷரீஅத்தில் அடிப்படையில் அவர்கள் இப்போது அப்படிச் செய்வது நியாயமானதே. இதில் அவர்கள் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்தால் என்ன நடக்கும் என்ற பார்வையே அவர்களை வழி நடத்த வேண்டும். ஒரு காலத்தில் பாபரி பள்ளி வாசலைப் பாதுகாப்பதும், அதற்காகப் போராடுவதும் அவர்களின் கடமையாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது மாறிப்போய்விட்ட இந்தச் சூழ்நிலையில் அவர்கள் அப்படியொரு கடமையைச் சுமக்கவில்லை."
" 'சூழ்நிலைகளின் கட்டாயம்' என்ற கொள்கையின் அடிப்படையில், அவர்கள் இந்தப் பாபரி பள்ளிவாசல் பிரச்னையை விட்டு ஒதுங்கிட வேண்டும். இதனால் அவர்கள் இனிமேல் வரும் அவமானங்களிலிருந்தும் அழிவுகளிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். "
"பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்டு விட்ட இன்றைய சூழ்நிலையில் சூழ்நிலைகள் முற்றாக மாறிப்போய்விட்டன. இதனால் நாம் இன்றைய சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் திட்டங்களை புதிதாக தீட்ட வேண்டும். சூழ்நிலைகள் மாறும்போது மார்க்கத் தீர்ப்புகளும் மாறிட வேண்டும், மாற்றிட வேண்டும் என்பது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நியதியாகும்" - அர் ரிசாலா பக்கம் 4
சூழ்நிலைகள் மாறிடும்போது, புதிதான சூழ்நிலைகள் ஏற்பட்டிடும்போது புதிதான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும், செயல்பாடுகள் மாற்றப்பட வேண்டும் எனப்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
ஆனால் மௌலானா அவர்கள் ' நீங்கள் எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திட வேண்டும்' என்றல்லவா கூறுகின்றார். இனி பாபரி பள்ளிவாசலுக்காகப் போராடுவது உங்கள் மீது கடமையல்ல' என்று கூறி முஸ்லிம்களை முடக்கிப் போட்டிட அல்லவா முனைகின்றார்!
இதுதான் திட்டங்களை மாற்றுவதா?
திருக்குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் வழிகாட்டுதல்களுக்கு வெளியே வந்து விடாமல் நின்று கொண்டுதான் முஸ்லிம்கள் முடிவுகளை எடுக்க முடியும்; மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். அல்லாமல் இவை இரண்டையும் ஒதுக்கி வைத்துக் கொண்டு, வெறும் புதிய சூழ்நிலைகளை மட்டுமே கொண்டு முடிவுகளை முஸ்லிம்கள் எடுத்திட முடியாது.
மௌலானா அவர்களும், அவரது பாணியில் சிந்திப்பவர்களும் 'சூழ்நிலைகள் மாறிவிட்டதால் நீங்கள் இப்படிச் செயல்படுங்கள்' என வழிகாட்டுவதற்குப் பதிலாக ' நீங்கள் எதையும் செய்ய வேண்டாம் ' என்றல்லவா சொல்கின்றார்கள்!
இதற்கு இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான அல்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் எதையும் சொல்லவில்லை. உண்மையில் மௌலானாவின் கருத்தை ஆதரிக்கும் அளவில் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களில் எதுவுமில்லை என்பதே உண்மை.
ஒரு இடத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டு விட்டால் அது பள்ளிவாசலாகவே இருக்கும். அது காலாகாலத்திற்கும் பள்ளிவாசலே!
அதனை விட்டுத் தருவதற்கு முஸ்லிம்களுகே உரிமை இல்லை. இந்த உண்மையை மௌலானா அவர்களும் ஏற்றுக் கொள்கின்றார்கள். என்னதான் சூழ்நிலைகள் மாறினாலும் ஒரு பள்ளிவாசல் பள்ளிவாசலாகத்தான் இருக்கும் என்பதில் மௌலானாவிற்கு சந்தேகங்கள் இல்லாதபோது, மாறிவிட்ட சூழ்நிலையில் அதனை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?
இதற்கு மௌலானா அவர்கள் சொல்லும் காரணம், " நாம் ஒதுங்கியிருந்தால் மேற்கொண்டு வரும் அவமானங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்" என்பது.
மௌலானாவின் கவனத்திற்கும் கருத்திற்கும் இன்னும் அவரைப் போல் சிந்திப்பவர்களுக்கும் ஒன்றை நாம் சொல்ல வேண்டும்.
பாபரி மஸ்ஜிதை மீட்கும் பணியில் நாம் அழிக்கப்படுவோம் என்ற அச்சம் ஏன் வந்தது?
இன்றைய ஆட்சியாளர்களோ, இதற்கு முன்னால் இருந்த ஆட்சியாளர்களோ ' நீங்கள் பாபரி பள்ளி வாசலை மீட்கப் போராடினால் நாங்கள் உங்களை அழித்து விடுவோம்" என்று சொல்லவில்லையே !
இப்படி ஒரு அச்சம் வந்ததற்கான அடிப்படையை மௌலானா அவர்கள் சொல்லவேண்டும். இல்லையேல் அடிப்படையற்ற அச்சங்களை அவர் அவனியில் திணிப்பதிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
இன்றைய ஆட்சியாளர்களும், பொதுமக்களும் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் பாபரி பள்ளிவாசலை மீட்கின்ற பணியில் நாம் யாரையும், எதையும் அழிக்கவோ, அழிக்க வழி வ்குக்கவோ கூடாது என்பதைத்தான்.
இப்படி செய்வதற்கு இஸ்லாமும் அனுமதிக்கவில்லை என்கின்றபோது இது போன்ற அழிப்புகளுக்கு இடமே இல்லை.
இவற்றையெல்லாம் கடந்து முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காக எடுக்கும் முயற்சியில் அவர்களை யாரேனும் அழித்தால் அந்த முஸ்லிம்களுக்கு அல்லாஹ் போதுமானவன்!
அவர்களை பின்வரும் இறைவசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் அரவணைத்துக் கொள்வான் :
அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை "இறந்தவர்கள்" என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கின்றார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகின்றார்கள். - அல் குர்ஆன் 3:169
இதில் இன்னொரு திருமறை வசனத்தையும் மௌலானா அவர்களுக்கும் அவர் பாணியில் சிந்திப்பவர்களுக்கும் சமர்ப்பிக்கின்றோம்:
"எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து ஜகாத்தும் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களைப் பரிபாலனம் செய்யக் கூடியவர்கள். இத்தகையோர்தாம், நேரான வழியில் இருப்பதாக நம்பத்தகுந்தவர்கள். " - அல் குர்ஆன் 9:18
தன்னுடைய வாதத்தை வலுப்படுத்த மௌலானா அவர்கள் இன்னொரு உத்தியையும் முன் வைக்கின்றார்.
"இஸ்லாம் பயன்படக்கூடிய செயல்களை செய்யும்படிதான் தூண்டுகின்றது. பலன் பயக்காத செயல்களை செய்வதற்கு இஸ்லாம் ஒருபோதும் தூண்டவில்லை" - அர் ரிசாலா
இப்படி மௌலானா சொல்வதன் விரிந்த பொருள் - பாபரி பள்ளிவாசலைக் கட்டுவது என்பது அல்லது அரசு வாக்களித்தபடி கட்டித் தருவது என்பது நடக்கப் போவதில்லை. அப்படி இருக்க அந்தத்திசையில் எடுக்கப்படும் முயற்சிகள் பலன் அற்றவை என்பதே!
இப்படியொரு நிராசைக்கும் - பின்னர் விரக்திக்கும் மௌலானா அவர்கள் வருவதற்கு என்ன காரணம் என்பதை நாமறியோம். மௌலானா அவர்களும் இதற்கு எந்தக் காரணத்தையும் சொல்லவில்லை.
அடுத்து இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்பதற்கு மௌலானா அவர்கள், திருக் குர்ஆனி லிருந்தோ, நபி வாழ்விலிருந்தோ இஸ்லாமிய வரலாற்றிலிருந்தோ எந்த ஒரு ஆதாரத்தையும் எடுத்துக்காட்டவில்லை.
மௌலானா அவர்கள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிராக சூல்கொண்டலையும் திட்டங்களையும் தீவிரவாதங்களையும் கண்டு அரண்டு போய் இருக்கிறார் என்பதையே தெளிவு படுத்தியிருக்கின்றார்.
விழலுக்கு நீர் இறைப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால் அநியாயத்தைத் தடுத்து நிறுத்துவதையும் எதிர்த்துப் போராடுவதையும் இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இது திருக்குர்ஆனின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் நாம் பெறும் பயனுள்ள பாடம்.
இந்த கடமையை நிறைவேற்றுவதில் நாம் இந்த உலகில் வெற்றிகளைக் குவிக்காவிட்டாலும், நிச்சயமாக இந்த வகையில் நாம் எடுத்து வைக்கும் சிறிய முயற்சிகளிலிருந்து பெரிய முயற்சிகள் வரை அனைத்திற்கும் மறுமையில் நற்கூலி உண்டு!. இன்னும் சொன்னால் ஈமானின் கடைசிப்படி - அநியாயத்தை மனதளவிலாவது வெறுப்பதுதான்.
இன்னும் மௌலானா அவர்கள் பின்வரும் இறைவசனங்களை ஆழ்ந்து கவனிப்பது நல்லது :
(நபியே!) கடற்கரை ஓரத்திலிருந்த ஓர் ஊர் மக்களைப் பற்றி அவர்களைக் கேளும். (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் வேட்டையாடக் கூடாது என தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடிக்) கொண்டிருந்தார்கள். ஏனென்றால் சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் (அவ்வாறு) அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு கடினமான சோதனைக்குள்ளாக்கினோம்.
இதனை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதனைக் கண்ட அவர்களில் ஒரு கூட்டத்தினர் இவர்களை நோக்கி, ''அல்லாஹ் எவர்களை அழித்து விட வேண்டுமென்றோ அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ ( நாடி ) இருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கின்றீர்கள்?'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் இதனால் நாம் உங்கள் இறைவனிடம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக நாங்கள் நல்லுபதேசம் செய்கின்றோம். அதனால் மீன் பிடிக்கும் அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம் என்றும் கூறினார்கள்.
அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து பின்னும் மீன் பிடிக்க முற்படவே, பாவத்திலிருந்து விலகி வந்தவர்களை நாம் இரட்சித்துக் கொண்டு, வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்." - அல் குர்ஆன் 7:163-165
இந்த வரலாறு நமக்கோர் உண்மையை உணர்த்துகின்றது.
அநியாயத்தை செய்பவர்களை - வரம்பு மீறுபவர்களை நாம் பார்த்துக்கொண்டிருந்தால் அல்லாஹ் நம்மைச் சும்மா விடமாட்டான். நாம் அநியாயத்தை தடுக்க நம்மால் முடிந்ததையெல்லாம் செய்வது, நாளை மறுமையில் இறைவனிடம் நமது பொறுப்பை நாம் நிறைவேற்றினோம் என்பதை நிரூபிக்கவே! அல்லாஹ்வின் நாமம் துதிக்கப்பட்ட இடத்தை இணைவைப்போர் ஆக்கிரமிப்பதும், தீவிரவாதிகள் இடிப்பதும், நாம் பார்த்துக் கொண்டிருப்பதுமா? இல்லை. நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வை " ஸஜ்தா " செய்த இடத்தை மீட்க உளத்தூய்மையோடு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் அல்லாஹ் நிரம்ப நற்கூலிகளை நல்கிடவே செய்வான் - மறுமையில்.
இந்த உலகில் எதிர்ப்படும் சிரமங்களைத் தாங்கிக் கொண்டு மறுமையை மனதில் கொண்டு வாழ்பவர்கள் உண்மையான அல்லாஹ்வின் அடியார்களல்லவா? இவர்கள்தானே மார்க்கத்திற்கு உண்மையான சாட்சியங்களாக வாழ்பவர்கள். பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் இல்லங்கள். அவற்றைச் சிதைப்பதும் இடிப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். இறைவன் இதை இப்படி சுட்டிக்காட்டுகின்றான்:
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய நாமத்தைத் துதி செய்வதைத்தடுத்து அவற்றைப் பாழாக்க முயற்சி செய்பவனை விட மகா அக்கிரமக்காரன் யார்? - அல் குர்ஆன் 2:114
இங்கே இந்தியாவிலும், பள்ளிவாசலுக்குள் சிலைகளை வைத்தவர்கள் மீதும் பின்னர் அதை இடித்தவர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. யதார்த்தங்கள் இப்படி இருக்கவே, மௌலானா அவர்கள் ஏன் இப்படி நடுங்குகின்றார்கள்? மௌலானா அவர்கள் இன்னொரு வாதத்தையும் இங்கே முன் வைக்கின்றார்கள்.
அது , " டிசம்பர் 6,1992 வரை பள்ளிவாசலைப் பாதுகாப்பதே நமக்கு மிக முக்கியமான கேள்வியாக இருந்தது. பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின் முஸ்லிம்களின் உயிரும், ஜ“விதமும் கேள்விக்குறியாகி விட்டது. ஆகவே இப்போது முஸ்லிம்களின் உயிர்களைக் காப்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும்" என்பதாகும்.
மௌலானா அவர்களும் அவர்களின் கருத்துகளை விதைக்க விரும்புவோரும் ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளவில்லை! முஸ்லிம்களின் உயிரும், உடைமைகளும் ஆண்டாண்டு காலமாக இங்கே ஆபத்துக்களையும் அழிவுகளையும் சந்தித்தே வந்திருக்கின்றன. நாளொன்றுக்கு ஒரு வகுப்புக்கலவரம் ; அதில் முஸ்லிம்களின் உயிர்கள் நூற்றுக்கணக்கில் சேதம் ; திட்டமிட்டு அவர்கள் பொருளாதாரத்துறையில் அழிக்கப்பட்டார்கள் என அழுத்தமாகப் பேசுகின்றன ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள்.
இந்நிலையில் பாபரி பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின்னர்தான் முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் ஆபத்திற்குள்ளானது என்பது வரலாறு மறந்த பயமும் பீதியுமாகும்.
பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களின் பட்டியலில் இன்னும் 3000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. ஆகவே மௌலானா அவர்கள் காலாகாலத்திற்கும் கதிகலங்கியே வாழ வேண்டியிருக்கும். ஆமாம்! நமக்கு மத்திய, மாநில அரசுகளும் அவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கும்போது மௌலானா ஏன் நடுநடுங்குகின்றார்கள்?
இந்த அரசமைப்புகள் நம்மைப் பாதுகாக்காது என அவர்கள் எண்ண ஆரம்பித்து விட்டார்களா? அரசு இயந்திரங்களில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றால் அதை அவர்கள் அப்படியே அறிவிக்கட்டுமே...! வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள் அல்லல்களுக்கு ஆட்பட்டு வந்திருக்கின்றார்கள்! அவற்றில் ஒன்றுதான் முஃமின்கள் நெருப்புக்குண்டத்தில் எறியப்பட்டு அவர்கள் எரிக்கப்பட்ட வரலாறு. இத்தனைக் கொடுமையான தண்டனையைப் பெறும் அளவுக்கு அவர்கள் அப்படி என்ன தவறைச் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வே அதைக்கூறுகின்றான் :
விசுவாவாசங்கொண்ட அவர்களில் யாதொரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்கப் புகழுடையோனும் யாவரையும் மிகைத்தோனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததையன்றி (ஈமான் கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டார்கள். ) - அல்குர்ஆன் 85:8
ஃபைஸாபாத்தில் பா.ஜ.கவின் முக்கியப் பொறுப்பைச் சுமந்த ஒரு முஸ்லிம் கோரமான வகையில் கொலை செய்யப்பட்டார் என்பது உண்மையாக இருக்கும்போது வஹ“துத்தின் அவர்களது வாரிசுகள் எங்கே ஓடப்பார்க்கின்றார்கள்? கஷ்டங்களுக்கிடையேயும் நாம் உறுதியாக நின்றால் அல்லாஹ் நம்மை நிலைப்படுத்தி வைப்பான் என்ற அல்லாஹ்வின் உறுதிமொழிகள் நம்மை வழி நடத்தட்டும்.
"விசுவாசிகளே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால் அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கி வைப்பான்." - அல் குர்ஆன்- 47:7
இன்னொன்றையும் இங்கே நினைவு கூர்வோம் :
(விசுவாசிகளே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்வோர் ஒருவருமில்லை! உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ, அதற்குப் பின்னர், உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் நம்பிக்கை கொள்ளட்டும்.
இன்னும் அல்லாஹ் தன் திருமறையில் இப்படிக் குறிப்பிடுகின்றான்:
இவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து (விரோதிகளால்) துரத்தப்பட்டவர்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம்! மனிதர்களில் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாகத் துதிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கின்றானோ, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுக்கு உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலவானும் யாவரையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான். - அல் குர்ஆன் - 22:40
- நன்றி : குலாம் முஹம்மது , இலக்கியச் சோலை.

No comments: