Friday, October 8, 2010

பாபர் மசூதி தீர்ப்பு - சீதையின் சமையலறையில் கருகிய நீதி!

பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது
நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.
இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.
கடந்த 24-09-2010 அன்று வெளியாக இருந்த தீர்ப்பு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவின் மீது இடைக்காலத்தடையாணை பெறப்பட்டு 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்றத்தால் அப்புகார் மனு தள்ளுபடி செய்யப்பட, கடந்த 30-09-2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இம்முறையற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றங்களால் தீர்ப்பு கூற இயலாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் அறிவித்திருந்தன. எனினும் பொதுஅமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையிலடைக்கும் "குண்டர் தடுப்புச் சட்டம்", தீர்ப்பு வெளியாகும் சமயம் சங்பரிவாரங்கள் மீது பாயவில்லை. இதனால் சங்பரிவாரங்களில் குண்டர்களே இல்லை என்பது அர்த்தம் அல்ல என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றாகத் தெரியும். சுதந்திர, குடியரசு தினங்களுக்கு முன்னரும் ஒவ்வொரு டிசம்பர் 6 க்கு முன்னரும் சந்தேகத்தின்பேரிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரிலும் முஸ்லிம்களைக் கைது செய்யும் சட்டம், நாட்டில் திட்டமிட்டே கலவரம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சந்தேகிக்கவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கூட கைது செய்யவோ முன்வரவில்லை!
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்புக்குத்தான்; உண்மையான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் என்றும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சமாதானம் சொல்லப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத தீர்ப்புக்கு ஏன் 60 ஆண்டுகால தாமதம் என்ற கேள்விக்கு யாரிடம் பதில் பெறுவது? தாமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதியே என்று கருதப்படும் போது முஸ்லிம்களின் உடமை விசயத்தில் 60 ஆண்டுகள் தாமதப்படுத்தி அலகாபாத் நீதிமன்றம் அநீதி வழங்கியுள்ளது!
24-09-2010 வரை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லிவந்த சங்பரிவாரங்கள் 30-09-2010 தேதியிட்ட தீர்ப்பைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே இதன் லட்சணம் விளங்குகிறது. தீர்ப்பு எப்படி இருப்பினும் "மேல்முறையீடு செய்வது உறுதி" என்ற அத்வானிக்கும் செலக்டிவ் அம்னீஸியா என்று நினைக்குமளவு தீர்ப்பை வரவேற்றுள்ளார். மூன்றில் இருபங்கு உரிமையைப் பெற்றுள்ளபோதும் "இந்துக்கள்" அமைதி காக்க வேண்டும் என்று RSS தலைவர் வேண்டுகோள் வைக்கிறார்! யாரை ஏமாற்ற இந்தக் கபட நாடகங்கள்!
செப்டம்பர் 24 -30 க்கு இடைப்பட்ட ஆறுநாட்களில் என்ன நடந்தது? சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று முழங்கிய சங்பரிவாரங்கள் மகுடிப் பாம்பாய் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அதிசயம் எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விகளுக்கு விடைதேட அலைய வேண்டியதில்லை. சட்டமாவது மண்ணாங்கட்டியாவது என்பது சங்பரிவாரங்களின் இயல்பெனில், நீதியாவது மண்ணாங்கட்டியாவது என்று காங்கிரஸும் நடந்து கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும்கூட நியாயமான தீர்ப்பை உடனடியாக எதிர்பார்க்க முடியாதளவுக்கு நம்நாட்டு சட்டத்தின் ஓட்டைகள் பல்லிளிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாதளவு 'பக்தி'முற்றிப்போன நீதிபதிகளும், லவ் ஜிஹாத், இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் வெளிப்படையாகவே விஷம்கக்கிய காவியுடை தரிக்காத நீதிபதிகளும் நம் நாட்டு நீதிமன்றங்களில் உள்ளதை நினைவில் கொள்ளவும்.
பாபர் மசூதி நடுவில்தான் ராமன் பிறந்தான் என்று இரு நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்னொரு நீதிபதியோ, பாபர் மசூதி கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்கிறார். இடிக்கப்படாத கோவிலில் முஸ்லிம்கள் தொழமாட்டார்கள் என்று தன் பங்குக்கு இன்னொரு நீதிபதி குழப்புகிறார். 1949 வரை முஸ்லிம்கள் அங்கு தொழுது வந்துள்ளதால் அங்கு கோவில் இருந்திருக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும்!
ராமர் பிறந்ததாக நீதிபதிகளால் சொல்லப்பட்டுள்ள (சங்பரிவாரங்களும் இதையேதான் சொல்லி வருகிறார்கள்) இடம் இந்துக்களுக்கு உரியதாம்! அதாவது சிலைகளை வணங்காத முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் நடுவில் இந்துக்கடவுளின் உருவச்சிலை! என்னே ஒரு வக்கிரம் பாருங்கள்! அயோத்தியில் பிறந்ததாக எவ்வித ஆதாரங்களும் இன்றி 'நம்ப'ப்படும் ராமன், பாபர் மசூதிக்குச் சற்று தள்ளி பிறந்ததாக 'நம்பி'னால் குடியா மூழ்கி விடும்?
பாபர்மசூதி, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்ற நீதிபதி கான் அவர்களின் தீர்ப்பை கருத்தில் கொண்டாலே போதும், சங்பரிவாரங்களின் ஐம்பதாண்டுகால மோசடிகள் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் இதுவரை ராமன் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதே பரிவாரங்களின் நம்பிக்கை. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட சங்பரிவாரங்கள் இதையும் ஏற்றுதானே ஆகவேண்டும்! ஆனால் ஏற்பார்களா?
மொத்ததில் மூன்று நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட வில்லை. ஒரு சாராருக்கு இழைக்கப்பட்ட அநீதி, இன்னொரு சாராருக்கான நீதியாகக்கருத முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மென்மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் நீதியான தீர்ப்பாகக் கருத முடியாது. இனிமேல் எந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்று இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கும்முன்னதாக, சட்டம் கடமையைச் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்தான்!
By Nalladiyar Thanks to satyamargam.com

Friday, October 1, 2010

அயோத்தி தீர்ப்பு - முஸ்லீம்கள் செய்ய வேண்டியது என்ன ?

அன்று மனு நீதி
இன்று உச்ச நீதி
எட்டிப்பார்த்தால் பீனல் கோடுகள்
தொட்டுப் பார்த்தால் பூணூல் கோடுகள்

என்ற தோழர் துரை. சண்முகம் அவர்களின் கவிதை வரிகளுக்கேற்ப நேற்று அலஹாபாத் உயர்நீதி மன்றம் முஸ்லீம்களுக்கு சொந்தமான 450 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அல்லாஹ்வின் ஆலயத்தை குரங்கு ஆப்பசைத்த கதையாக சமரச தீர்ப்பு எனும் பெயரில் ஒரு கட்டப் பஞ்சாயத்தை நடத்தியுள்ளது. இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது. ” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.

கிராமங்களில் அப்பாவி ஒருவனின் வீட்டை இடித்தால் அவன் பஞ்சாயத்துக்காக ஊர் முக்கியஸ்தரிடம் போனால் அவர் இருவரிடமும் பணம் வாங்கி கொண்டு இருவருக்கும் பங்கிட்டு கொடுப்பார். இங்கும் அது தான் நடந்திருக்கின்றது. ஓரே ஒரு வித்தியாசம் பணம் மட்டும் வாங்கவில்லை. அதுவும் உறுதியாக தெரியவில்லை. 1992-ல் உலக மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவிப்பு செய்து முஸ்லீம்கள் பதைக்க பதைக்க பார்க்கும் போது இறையில்லத்தை இடித்த காவி கூட்டத்தின் செயலுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்நீதிமன்றங்களின் கட்டப்பஞ்சாயத்தும்.

இப்படி ஒரு தீர்ப்பை சொல்வதற்கு 60 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கின்றது என்பது தான் விந்தையிலும் விந்தை. ராமர் எனும் கற்பனை கதாபாத்திரத்திற்காக வெற்று நம்பிக்கைக்காக வரலாற்று தகவல்களையும் உண்மைகளையும் குழி தோண்டி புதைத்து வெளியிட்டுள்ள தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரங்கள் வரவேற்றுள்ளதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. ஏனெனில் அத்வானியும் மோடியும் நீதிபதிகளாக இருந்தால் கூட இப்படிப்பட்ட தீர்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.

பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் சிலைகள் வைக்கப்பட்ட அன்றே முஸ்லீம்கள் அச்சிலைகளை தூக்கி வீசி எறிந்தால் இச்சம்பவமே இவ்வளவு தூரம் போயிருக்காது. அன்று நம்முடைய அசிரத்தையும் அதைரியமுமே மஸ்ஜித் இடிக்கப்படுமளவு கொண்டு சென்றது. அன்று பள்ளியை காப்பாற்ற சில உயிர்கள் ஷஹீதாகியிருந்தாலும் பாபரி காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் இன்று பாபரியும் போனது. பாபரியின் பெயரில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களும் ஷஹீதானார்கள்.

காலம் காலமாய் மனித மனோ இச்சைகளின் அடிப்படையில் உருவான இந்நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்பை பார்த்திருந்தும் எப்படி நம் தலைமைகள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்வோம் என்று சொன்னார்கள் என்பது புரியவில்லை. உச்சநீதிமன்றமும் இதே தீர்ப்பை சொன்னால் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்பது புரியாத புதிர்.

உண்மையில் அது கோவிலை இடித்து கட்டப்பட்டிருந்தால் கூட 1947-ல் இருந்த நிலையே தொடர வேண்டும் எனும் அடிப்படையிலும் இத்தீர்ப்பு அநீதியானது. அல்லாஹ்வின் ஆலயத்தை விட்டு கொடுப்பதற்கு எம்முஸ்லீமுக்கும் உரிமையில்லை எனும் நிலையில் மீண்டும் அவ்விடத்தில் இறையில்லம் கட்டும் எண்ணத்தை முஸ்லீம்களிடம் ஏற்படுத்தி மக்கள் சக்தியை ஒன்று திரட்டி மீண்டும் பாபரியை கட்டும் முயற்சியை கட்ட ஆரம்பிக்க வேண்டும். அப்படி யாராவது முன் வந்தால் அவர்களின் பின்னால் அணி திரள சமுதாயம் தயாராக வேண்டும்.

அத்தோடு இம்மூட நம்பிக்கைகளையும், பொய் கடவுள்களையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இஸ்லாத்தை ஒவ்வொருவரின் வீட்டிலும் சென்று அழைப்பு பணியாற்றுவதும், இறை சட்டங்களே இப்புவியை ஆளக்கூடிய வகையில் தீனை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுவதுமே பாபரி மீண்டும் எழுப்பப்படவும் இன்னொரு பாபரி நிகழாமல் தடுக்கவும் நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளாகும்.

Tuesday, September 14, 2010

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக

(செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிரியார்)

1. குரான் அதிக விற்பனையானது : அமேசான், உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளிலும் இணையம் மூலமாகவும் குரான் அதிக அளவு விற்பனையானது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட குரானை மானுடம் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.

2. வியாபரம் சூடு பிடித்தது : நிறைய குரான்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனையானதின் மூலம் இஸ்லாமிய நிறுவனங்களின் உரிமையாளர்களூக்கு நல்ல லாபம் கிடைத்தது.

3. பள்ளிவாயில்களுக்கு அதிகமானோர் வருகை : உங்கள் சர்ச்சையால் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பள்ளி வாயில்களுக்கு அதிகமானோர் வருகை புரிந்ததின் மூலம் இஸ்லாத்தின் செய்தியை பெற்று கொன்டனர்.

4. இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது : இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

5. கூகுளில் குரான் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன : நீங்கள் குரானை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்து தேடுவோரின், இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

6. நூலகங்களில் குரான் காணாமல் போயின : எத்துணை பிரதிகள் வாங்கிய போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குரானை அனைவரும் எடுத்து கொண்டு போவதால் குரான் ஸ்டாக் இல்லாமல் போனது.

7. முஸ்லீம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் : மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பிரச்சாரத்தை தங்களின் வெறும் அறிக்கைகள் உண்டாக்கியதால் தஃவாவில் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

8. முஸ்லீம்கள் உணர்வுகள் தூக்கத்திலிருந்து எழுந்தன : உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகம் உங்களின் உரைக்கு பின் தன் தூக்கத்தை கலைத்து குரானின் செய்தியை அறிந்து கொள்வதில், குரானுடனான தங்கள் உறவை புதுப்பித்து கொள்வதில், குரானின் செய்தியை பிற மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டின.

9. நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் : முன்பை காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

10. நீதியை நேசிப்பவர்களை ஒன்றிணைத்தது : இஸ்லாம், கிறிஸ்துவம், யூதர்கள், ஹிந்துக்கள், இறை மறுப்பாளர்கள் என அனைத்து பிரிவிலும் உள்ள நீதியை நேசிப்பவர்களை இக்கொடுமைகளை கண்டித்ததன் மூலம் ஒன்றிணைத்தது.

பாதிரியார் டெர்ரி ஜோன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எரிக்க நினைத்த அக்குரானை திறந்த மனதோடு படியுங்கள். இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால் இயேசுவின் மார்க்கமான, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்ற நபிமார்களின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

குரானோடு மோதியவர்கள் ஒன்று குரானால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அழிந்து போயிருக்கின்றார்கள். எது வேண்டும் என்று தீர்மானிப்பது உங்கள் கையில் தான் உள்ளது சகோதரரே

(Gain peace.org எனும் இணையத்தில் வெளியான மடலை தழுவி சில மாற்றங்களுடன் எழுதப்பட்டது)

Wednesday, August 25, 2010

கிலாபா - உம்மத்தின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டு 89 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் மீண்டும் முழுமையான இஸ்லாமிய வாழ்வு மலர கிலாபத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமையை நம் நினைவுகளில் புதுப்பித்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம். 1924 ல் கிலாபத் வீழ்த்தப்பட்ட பிறகு முஸ்லீம் உம்மா அல்லாஹ்வை விட தங்கள் மேற்கத்திய முதலாளிகளை திருப்திபடுத்த நினைக்கும் மோசமான ஆட்சியாளர்களை பெற்றது என்றால் அது மிகையானதல்ல. இந்த அஸதுகள், முபாரக்குகள், ஜர்தாரிகள் போன்ற சர்வதிகாரிகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மேலாதிக்கத்துக்கு குடை பிடித்து கொண்டிருப்பதால் இச்சமூகம் உலகியல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றது.

உதாரணத்திற்கு

வறுமை - 2002 எக்கானமிஸ்ட் பத்திரிகை நடத்திய ஆய்வின் படி ஐந்தில் ஒரு அரபியர் ஒரு நாளைக்கு வெறும் 2 டாலருக்கும் கீழாகவே சம்பாதிக்கின்றனர்.

ஊழல் - ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் ஆய்வின் படி ஊழல் மலிந்துள்ள 10 நாடுகளில் 8 முஸ்லீம் நாடுகள்.

போர் - ஐ.நா சபை தகவல் படி தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஆப்கனில் 20 இலட்சம் பெண்கள் மற்றும் ஈராக்கில் 7 1/2 இலட்சம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

இச்சூழலை இஸ்லாம் இவ்வுலகில் ஆளும் கொள்கையாக இருந்த போது ஒப்பிட்டு பாருங்கள்

பொருளாதாரம் - இரண்டாம் உமர் என அழைக்கப்படும் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சிகாலத்தில் ஜகாத்தை வாங்க தகுதியான ஆட்கள் இல்லாமல் கஜானா நிரம்பி வழிந்தது.

ஆட்சி - உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) ஆட்சிகாலத்தில் ஒரு மனிதர் தன் தனிப்பட்ட விவகாரங்களை ஆலோசிக்க வந்த போது அரசாங்க வரிப்பணத்தில் வாங்கிய எண்ணையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து தன் சொந்த விளக்கை ஏற்றும் அளவுக்கு அரசாங்க சொத்துக்களை அமானிதமாக கருதினார்.

பாதுகாப்பு : ஒரு பெண்ணின் ஹிஜாப் சேதப்படுத்தப்பட்ட போது அதற்காக அப்பாஸிய கலீபா முத்தஸிம் (ரஹ்) அப்பெண்ணின் கண்ணியம் காக்க ஒரு படையையே ஒன்று திரட்டினார்கள்.


சமூகத்தின் உண்மையான பிரச்னை - தலைமைத்துவமே

முஸ்லீம் உம்மாவின் நலனில் அக்கறை கொண்ட முஸ்லீம் சிந்தனையாளர்கள் சிலர் முஸ்லீம் நாடுகள் பொருளாதர வலிமை இல்லாததே முஸ்லீம் உம்மாவின் பிரச்னைக்கு காரணம் என நினைப்பது தவறு. ஏனென்றால் உலகின் இயற்கை வளங்களில் 60 சதவிகிதம் முஸ்லீம் நாடுகளிலேயே கிடைக்கின்றன. 54 முஸ்லீம் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மாத்திரம் ப்ரான்ஸ் மற்றும் இங்கிலாத்தின் கூட்டு நிலப்பரப்பை கொண்டுள்ளது. உலகின் 6வது மிகப் பெரும் மனித வளமும் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தோனேஷியா, சிரியா, சவூதி அரேபியா மற்றும் மொராக்காவின் ராணுவ பலத்தை ஒன்றாக்கினால் ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகளை விட 20 மடங்கு அதிக ராணுவத்தை திரட்ட முடியும். எனவே முஸ்லீம் நாடுகளில் வளங்களில் பிரச்னை இல்லை. அவை பங்கிடுப்படுவதில் தான் பிரச்னை உள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் பங்கிடப்படாமல் மேற்கின் கட்டளை படி நடப்பதில் தான் பிரச்னை புதைந்துள்ளது.

எனவே பிரச்னை சமூக வளங்களில் அல்ல, மாறாக இஸ்லாத்தின் அடிப்படையிலான ஒருங்கிணைந்த தலைமை இல்லாததே பிரச்னையின் ஆணிவேராகும். நபி (ஸல்) பரிந்துரைத்த, நம்மை பாதுகாக்கும் கேடயம் இல்லாததே பிரச்னையாகும். அக்கேடயத்தை குறித்து முஸ்லீமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீத் பின் வருமாறு பேசுகிறது :

"உங்களின் இமாம் (கலீபா) ஒரு கேடயம் ஆவார், அவரின் பின்னால் போராடுவதற்கும் உங்களை பாதுகாத்து கொள்வதற்கும்"

நம்மை படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவன் ஆட்சியதிகாரத்தில், மக்களின் பொருளாதர விவகாரங்கள், சமூக பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்திலும் குரான் மற்றும் சுன்னாவை கொண்டே தீர்ப்பளிக்க சொல்லியுள்ளான். இறைவனின் வேதத்தின் படி ஆட்சி செய்யாத முஸ்லீம் பெயர்தாங்கிகள் அல்லது நிராகரிப்பாளர்கள் குறித்து நாம் திருப்திபட்டு கொள்ள கூடிய மக்களாக இருந்தால் நம் நிலை பின் வரும் குரான் வசனம் குறிப்பதை போல் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நபியே ! அல்லாஹ் இறக்கி வைத்ததே கொண்டு அவர்களிடம் தீர்ப்பளிப்பீராக.அவர்களின் ஆசாபாசங்களை பின்பற்றினால் அவர்கள் இறைவன் இறக்கி வைத்ததிலிருந்து உங்களை திருப்பி விடக் கூடும் (திருக்குரான் 5:49 வசனத்தின் கருத்து)

கிலாபத்தை மீண்டும் நிலைநாட்டுவதின் மூலம் - நீதித்துறை, சமூக விவகாரங்கள், பொருளாதரம், குடும்ப விவகாரங்கள் இப்படி வாழ்வின் அத்துணை நிலைகளிலும் குரான் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் வழிகாட்டுதல் பெறக் கூடிய முழுமையான இஸ்லாமிய அரசை அமைப்பதின் மூலமே குப்ரின் ஆதிக்கம் மற்றும் பாதிப்பிலிருந்து விடுபட்டு முழுமையான இஸ்லாத்தை நம் வாழ்வில் கொண்டு வர முடியும் என்பது நிச்சயம். வல்ல இறைவன் அப்பாக்கியத்தை நம் வாழ்விலேயே காணும் பாக்கியத்தை அளிப்பானாக.

Thursday, August 5, 2010

இறைவனை நினைவு கூறும் வழிமுறைகள்

ஒரு நம்பிக்கையாளர் தன் இலக்கான சுவனத்தை அடைவதற்கு இறைவனை நினைவு கூறுபவராக இருத்தல் அவசியம். அதிலும் ரமலானை அடைய இருக்கும் இந்நேரத்தில் எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறை நினைவுடனும் இருப்பது என்பது குறித்து பார்ப்போம்.

நமது தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தும் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறைவனை எந்நேரமும் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருப்பது கடினமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் அது எளிமையாக இருக்க வேண்டுமானால் கீழ்காணும் நான்கை நாம் முறையாக கடைபிடித்தால் இவ்வுலகும் மறுவுலக வாழ்வும் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. முயன்று தான் பார்ப்போமே?

1. எப்போதும் என்னை இறைவன் கண்காணித்தவனாக இருக்கிறான்

நாம் தனியாக இருந்தால் இரண்டாமனாகவும் இரண்டு பேர் இருந்தால் மூன்றாமவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். நாடி நரம்பை விட சமீபத்தில் இருக்கிறான். நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பார்ப்பவனாகவும் நாம் பேசும் அனைத்தையும் செவியுறுபவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். அவன் இருளிலும் பகலிலும் என எல்லா இடங்களிலும் இருப்பவற்றை அறிய கூடியவனாக இருக்கிறான்.

ஒரு நாளின் எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் போதும் எச்சொல்லை சொல்லும் முன்பும் இதை நினைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே நினைவூட்டி கொள்ளுங்கள். இந்நினைவு உங்கள் சுவாசமாக மாறும் அளவு இதை உங்கள் மனதில் இருத்தி கொள்ள வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளத்தை தூய்மைபடுத்த சிறந்த வழியை கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் " நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான் என்று நினைத்து கொள்" (திர்மிதி)

2.என்னிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்ததே

நம்மிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்த அருட்கொடையே. நாம் மனிதனாக பிறந்தது, முஸ்லீமாக இருப்பது, நம் வாழ்வியல் வசதிகள், நம் அறிவு, ஞானம், பதவி உள்ளிட்ட அனைத்தும் இறைவனின் அருட் கொடையே. எனவே நம்மிடம் இருப்பவைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கூடிய அடியானாக இருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனை புகழ பல துஆக்களை கற்று தந்துள்ளார்கள். அவற்றை நம் வாழ்வின் எல்லா செயல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு காலையில் கண் விழித்தாலும் ஏதேனும் உணவு உட்கொண்டாலோ இறைவனுக்கு அல்ஹம்துலில்லாஹ் என்று நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்கள்.

நாம் நன்றி சொல்லி விட்டோம் என்று திருப்தி ஏற்பட்டால் இந்த ஹதீதை வாசித்து பாருங்கள் " உடம்பில் உள்ள 360 இணைப்புகளுக்காவும் நீங்கள் ஒவ்வாரு இணைப்புக்கும் ஸதகா தினந்தோறும் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றை நாம் புகாரியில் காணலாம். அறிவியலாளர்களின் கூற்று படி நம் இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கிறது. அத்துணை தடவையும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் துடிக்கிறது. அல்லாஹ் துடிக்க அனுமதி கொடுக்கவில்லையென்றால் நம் நிலை? எனவே நாம் அனைத்திற்கும் நன்றி செலுத்த கூடியவர்களாக வேண்டும்

3. இறைவனின் நாட்டமின்றி எனக்கு எதுவும் நேராது

இறைவன் விதித்ததை தவிர வேறு எந்நன்மையும் எத்தீங்கும் நேராது என்பதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். திருமறையின் 6ஆம் அத்தியாத்தில் 17,18 வசனத்தில் குறிப்பிடுவது போன்று நன்மையும் தீமையும் இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இவ்வாறு துஆ கேட்டார்கள் " நீ எனக்கு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நீ எனக்கு தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க இயலாது" (புகாரி)

4. ஒரு நாள் இறைவனிடம் செல்ல போகிறேன். அது இன்றாகவும் இருக்கலாம்

எம்மனிதனுக்கும் தாம் எப்போது இவ்வுலகை விட்டு செல்ல இருக்கிறோம் என்பது தெரியாது. அது அன்று மாலையாக, அடுத்த நாள் காலையாக அல்லது அப்போதே கூட இருக்கலாம். எனவே இச்சிந்தனை நம்மிடம் வந்து விட்டால் இது தான் என்னுடைய கடைசி தொழுகை என்று நினைத்து தொழுதால் கண்டிப்பாக அத்தொழுகை ஊசலாட்டமில்லாமல் இருக்கும். அது போல் நாம் இந்நினைவுடன் எல்லா காரியங்களும் செய்தால் இறைவன் நாடினால் அது அவனால் ஏற்று கொள்ளப்பட கூடிய ஒன்றாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

எனவே வர கூடிய ரமலானை பயன்படுத்தி இந்நான்கு நிலைகளை நம்மில் கொண்டு வருவோம். அதை நம் முழு வாழ்விலும் ஸ்திரப்படுத்துவோம். இதை படிக்கும் சகோதரர்கள் தங்களின் துஆவில் எனக்கும் இந்நிலையை இறைவன் கொடுக்க பிராத்தியுங்கள்.

துணை நின்றவை :மறைந்த அறிஞர் குர்ரம் முராத் அவர்களின் அதிகாலை நினைவுகள் எனும் புத்தகம்.