ஒரு நம்பிக்கையாளர் தன் இலக்கான சுவனத்தை அடைவதற்கு இறைவனை நினைவு கூறுபவராக இருத்தல் அவசியம். அதிலும் ரமலானை அடைய இருக்கும் இந்நேரத்தில் எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறை நினைவுடனும் இருப்பது என்பது குறித்து பார்ப்போம்.
நமது தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தும் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறைவனை எந்நேரமும் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருப்பது கடினமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் அது எளிமையாக இருக்க வேண்டுமானால் கீழ்காணும் நான்கை நாம் முறையாக கடைபிடித்தால் இவ்வுலகும் மறுவுலக வாழ்வும் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. முயன்று தான் பார்ப்போமே?
1. எப்போதும் என்னை இறைவன் கண்காணித்தவனாக இருக்கிறான்
நாம் தனியாக இருந்தால் இரண்டாமனாகவும் இரண்டு பேர் இருந்தால் மூன்றாமவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். நாடி நரம்பை விட சமீபத்தில் இருக்கிறான். நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பார்ப்பவனாகவும் நாம் பேசும் அனைத்தையும் செவியுறுபவனாகவும் அல்லாஹ் இருக்கிறான். அவன் இருளிலும் பகலிலும் என எல்லா இடங்களிலும் இருப்பவற்றை அறிய கூடியவனாக இருக்கிறான்.
ஒரு நாளின் எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் போதும் எச்சொல்லை சொல்லும் முன்பும் இதை நினைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே நினைவூட்டி கொள்ளுங்கள். இந்நினைவு உங்கள் சுவாசமாக மாறும் அளவு இதை உங்கள் மனதில் இருத்தி கொள்ள வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளத்தை தூய்மைபடுத்த சிறந்த வழியை கேட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் " நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான் என்று நினைத்து கொள்" (திர்மிதி)
2.என்னிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்ததே
நம்மிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் அளித்த அருட்கொடையே. நாம் மனிதனாக பிறந்தது, முஸ்லீமாக இருப்பது, நம் வாழ்வியல் வசதிகள், நம் அறிவு, ஞானம், பதவி உள்ளிட்ட அனைத்தும் இறைவனின் அருட் கொடையே. எனவே நம்மிடம் இருப்பவைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கூடிய அடியானாக இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இறைவனை புகழ பல துஆக்களை கற்று தந்துள்ளார்கள். அவற்றை நம் வாழ்வின் எல்லா செயல்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு காலையில் கண் விழித்தாலும் ஏதேனும் உணவு உட்கொண்டாலோ இறைவனுக்கு அல்ஹம்துலில்லாஹ் என்று நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்கள்.
நாம் நன்றி சொல்லி விட்டோம் என்று திருப்தி ஏற்பட்டால் இந்த ஹதீதை வாசித்து பாருங்கள் " உடம்பில் உள்ள 360 இணைப்புகளுக்காவும் நீங்கள் ஒவ்வாரு இணைப்புக்கும் ஸதகா தினந்தோறும் செய்ய வேண்டும்" என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றை நாம் புகாரியில் காணலாம். அறிவியலாளர்களின் கூற்று படி நம் இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 தடவை துடிக்கிறது. அத்துணை தடவையும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் துடிக்கிறது. அல்லாஹ் துடிக்க அனுமதி கொடுக்கவில்லையென்றால் நம் நிலை? எனவே நாம் அனைத்திற்கும் நன்றி செலுத்த கூடியவர்களாக வேண்டும்
3. இறைவனின் நாட்டமின்றி எனக்கு எதுவும் நேராது
இறைவன் விதித்ததை தவிர வேறு எந்நன்மையும் எத்தீங்கும் நேராது என்பதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். திருமறையின் 6ஆம் அத்தியாத்தில் 17,18 வசனத்தில் குறிப்பிடுவது போன்று நன்மையும் தீமையும் இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இவ்வாறு துஆ கேட்டார்கள் " நீ எனக்கு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. நீ எனக்கு தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க இயலாது" (புகாரி)
4. ஒரு நாள் இறைவனிடம் செல்ல போகிறேன். அது இன்றாகவும் இருக்கலாம்
எம்மனிதனுக்கும் தாம் எப்போது இவ்வுலகை விட்டு செல்ல இருக்கிறோம் என்பது தெரியாது. அது அன்று மாலையாக, அடுத்த நாள் காலையாக அல்லது அப்போதே கூட இருக்கலாம். எனவே இச்சிந்தனை நம்மிடம் வந்து விட்டால் இது தான் என்னுடைய கடைசி தொழுகை என்று நினைத்து தொழுதால் கண்டிப்பாக அத்தொழுகை ஊசலாட்டமில்லாமல் இருக்கும். அது போல் நாம் இந்நினைவுடன் எல்லா காரியங்களும் செய்தால் இறைவன் நாடினால் அது அவனால் ஏற்று கொள்ளப்பட கூடிய ஒன்றாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
எனவே வர கூடிய ரமலானை பயன்படுத்தி இந்நான்கு நிலைகளை நம்மில் கொண்டு வருவோம். அதை நம் முழு வாழ்விலும் ஸ்திரப்படுத்துவோம். இதை படிக்கும் சகோதரர்கள் தங்களின் துஆவில் எனக்கும் இந்நிலையை இறைவன் கொடுக்க பிராத்தியுங்கள்.
துணை நின்றவை :மறைந்த அறிஞர் குர்ரம் முராத் அவர்களின் அதிகாலை நினைவுகள் எனும் புத்தகம்.
No comments:
Post a Comment