Sunday, August 30, 2009

வெட்கம்

ஒரு மனிதனிடம் நாணம் இல்லையானால் அவன் தன் மனம் போன போக்கில் அல்லாஹ்வின் சட்டங்களை மறந்து எதையும் செய்யத் துணிந்து விடுவான். அத்தகைய முஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்பான வெட்கத்தை பற்றிய ஒரு சிறிய அலசலே இக்கட்டுரை.
மனிதன் தவறானவற்றை செய்திடும் போதும், தன் அறியாமையால் தவறிழைத்திடும் போதும், இப்படிபட்ட தவறை செய்து விட்டோமே என்று அச்சம் கொள்வதே நாணம் என்ற பண்பாகும். தன் குறைகளை எண்ணி நாணி அவற்றை நிறைகளாக்குபவனே உண்மை மனிதனாவான்.


வெட்க உணர்வின் சிறப்புகள்
விலங்குகளுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடுகளில் ஒன்று வெட்க உணர்வாகும். மனிதனுடைய சிறப்பு பண்பு வெட்கமாகும். ஒரு மனிதனிடம் இருக்கும் இறை நம்பிக்கை எவ்வளவு அழுத்தமானது என்பதையும், அவன் எந்த அளவுக்கு ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டவன் என்பதையும், எத்தகைய இங்கிதங்களை கொண்டவன் என்பதையும் எடுத்துக்காட்டும் கருவி அவனிடம் காணப்படும் வெட்க உணர்வாகும். ஈமானும், வெட்கமும் ஒரு மரத்தின் இரு கிளைகள் போன்றதாகும். ஈமானுள்ள ஒரு மனிதனிடம் வெட்கம் இல்லையாயின் அவன் முழுமையான ஈமான் கொண்டவன் அல்லன். ஒவ்வொரு மார்க்கத்துக்கும் அதற்கு உரிய ஒழுக்கம் இருக்கிறது. இஸ்லாத்தின் ஒழுக்கம் வெட்கமாகும்.
அபு சையித் அல் குத்ரி (ரலி)அறிவிக்கிறார்கள்:
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள், திரை போட்டு தம்மை மறைத்துக் கொண்டு வாழும் பெண்களை விட அதிக வெட்க உணர்வுடையவர்களாக இருந்தார்கள். இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதாவது விரும்பத் தகாததைக் கண்டால் அதன் ரேகை அவர் முகத்தில் படருவதை காணலாம் (புகாரி). ஒரு தீமையை கண்டால் அதைக்கண்டு நாணக் கூடியவர்களாய் இருந்தார்கள். நாணம் உள்ள மனிதன் எந்நிலையிலும் தீமையின் பக்கம்கூட செல்ல மாட்டான். தீமை செய்து விட்டால் கூட, தன் தவறை எண்ணி வெட்கப்படுவான். மக்களின் முன்னிலையிலும் இறைவன் முன்னிலையிலும் குற்றவாளியாக நிற்கிறோமே என அஞ்சுவான். அன்சாரிகளை சார்ந்த ஒரு மனிதர் தம் சகோதரர் அதிகம் வெட்கப்படுவதை கண்டித்து கொண்டிருக்கும் போது அந்த வழியில் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவரை கண்டிப்பதை விட்டு விடுங்கள். நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்கள். (புகாரி)
இவ்வாறு இஸ்லாமிய மார்க்கமானது நல்ல விஷயங்கள் மனிதனுள் பரவ வெட்கம் அவசியம் என்பதை உணர்த்துகிறது.


வெட்கமின்மையால் உண்டான சீர்கேடுகள்
இன்று நம்முடைய மக்களின் வெட்கம் இல்லாத தன்மையால் சமுதாயத்தில் அன்றாடம் நடந்து வரும் அவலங்களை கண்கூடாக கண்டு வருகிறோம்.
1. பெண்களில் சிலர் நாணத்தை இழந்து விட்டு (உங்கள் அழகை வெளிக்காட்டாதீர்கள் (அல்குர்ஆன்24:31) என்ற அல்லாஹ்வின் வாக்கை மீறி அரைகுறை ஆடைகளில் அலைகின்றனர். இதனால் இளைஞர்களை ராகிங், கற்பழிப்பு போன்ற தவறுகளை செய்யத் தூண்டி விடுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
2. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும் (அல்குர்ஆன் 5:0). இன்றைய மனிதனிடம் நாணம் என்ற பண்பு இருக்குமானால் தன் உடைகள் கலைந்து இருப்பதைக் கூட அறிந்து கொள்ள இயலாத நிலையில் மதுவைக் குடித்துவிட்டு கடைவீதிகளிலும் தெருக்களிலும் படுத்து இருப்பார்களா?
3. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர். அது மானக்கேடானதாகும் மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்து செல்லும்) தீய வழியாகவும் இருக்கிறது (அல்குர்ஆன் 17:32) என குர்ஆன் எச்சரிக்கிறது. ஒரு பக்கம் அரசாங்கம் விபச்சார ஒழிப்பு பற்றி விளம்பரம் செய்தாலும், பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை அவசியம் என்று விபச்சாரத்தை ஊக்குவிப்பது, நம் நாட்டின் நாணமின்மை என்ற பண்பின் வளர்ச்சியை அல்லவா காட்டுகிறது என்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்?
4. கொலை, கொள்ளை இவற்றில் ஈடுபட்டு பின் மாட்டிக் கொண்டால் மக்கள் முன் கேவலமாகி விடுமே என்ற எண்ணம் இருப்பின் அவன் இவற்றில் எல்லாம் ஈடுபடுவானா? இப்படி வீட்டில் தெருவில,ஊரில், நாட்டில், உலகில் காணப்படும் பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணமாக அமைவது நாணத்தை இழந்து மக்கள் மனம்போன போக்கில் வாழ்வது தான். எனவே இறைவனின் அடியார்களே ஈமானின் ஓர் அம்சம் நாணம் (புகாரி) என்பதை மனதில் பதிந்து நாணமுள்ள முஃமின்களாக மாறி தவறுகளிலிருந்து திருந்தி மனம் போன போக்கில் வாழாமல் அல்லாஹ்வின் வேதத்தையும் தூதர் மொழிகளையும் பற்றிப் பிடித்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

ஆக்கம் : ஃபெரோஸ் சகோதரி நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்

No comments: