Thursday, December 14, 2017

சிறை செதுக்கிய ஷஹீத்

கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராக போற்றப்படும் ஷஹீத் சையது குதுப் (ரஹ்) மரணித்து ஆண்டுகள் சென்றாலும் இன்றளவும் அவரின் எழுத்துக்கள் மூலம் உம்மத்தை உயிர்பிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்க உழைக்கும் இஸ்லாமிய இயக்க வாதிகளுக்கு உணர்வூட்டும் படிப்பினைகள் கொண்ட சிறை செதுக்கிய அக்கோமகனின் வாழ்வெனும் பெருங்கடலில் இருந்து ஒரு சில துளிகளை சுருங்க காண்போம்.

கவிதையிலிருந்து ஆரம்பம்
1906 அக்டோபர் 9 அன்று எகிப்தில் உள்ள அஸ்யுத் எனுமிடத்தில் பிறந்த சையது குதுப் (ரஹ்) தன் பத்து வயதிலேயே குரானை மனனம் செய்தார். பின்னாளில் உலகையே இஸ்லாமிய அரசியலை நோக்கிபிரமிப்போடு பார்க்க வைத்த அவரின் எழுத்தாற்றலின் ஆரம்பம் என்னவோ கவிதை, இலக்கியம் குறித்தே இருந்தது. ஆம். புத்தகங்கள் அரிதாகவும் விலை அதிகமாகவும் இருந்த கால கட்டத்திலேயே 12 வயதில் 25 புத்தகங்களை கொண்ட நூலகத்தையே வைத்திருந்த புத்தகப் புழுவான சையது குதுப் (ரஹ்) தொடக்கத்தில் அரபி கவிதைகள், இலக்கியங்களை விமர்சிக்கும் விமர்சகராகவே தன் எழுத்து பணியை தொடங்கினார்.

முதல் புத்தகம்
தன் 25வது வயதில் தற்போதைய கவிதைகளும் கவிஞனின் வாழ்வின் இலக்கும் என்ற தன் முதல் புத்தகத்தை வெளியிட்ட சையது குதுப் (ரஹ்) 1939ல் எகிப்தின் கல்வி அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அப்போதைய காலகட்டத்தில் தான் எகிப்தெங்கும் ஷஹீத் இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லீமின் அமைப்பு பேசப்பட கூடிய ஒன்றாக இருந்தது. எனினும் சையது குதுப் (ரஹ்) அக்காலகட்டத்தில் இஹ்வான்களை குறித்து முழுமையாக அறிந்து கொண்டார் என்றோ அல்லது இஹ்வான்களின் கொள்கை நோக்கி ஈர்க்கப்பட்டார் என்றோ கூற வலுவான ஆதாரமில்லை.

வாழ்வின் திருப்புமுனை
எகிப்தை ஆண்டு கொண்டிருந்த அரசு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு கொண்டதோடு மேற்கத்தைய நாடுகளின் கையாளாகவே செயல்பட்டு கொண்டு வந்த காரணத்தால் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை அமெரிக்காவுக்கு அரசு செலவில் அனுப்பி எகிப்திய முகம் கொண்ட அமெரிக்க சிந்தனையை தாங்கியவர்களாக உருமாற்றம் செய்யும் பணியை திறம்பட செய்து வந்தது. தற்போதும் முஸ்லீம் சமூகத்தில் வளரும் ஆளுமை கொண்டவர்களை 'மைய நீரோட்டத்தில்' கலக்க அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து மூளை சலவை செய்து இஸ்லாமிய அரசியல் குறித்த பிரக்ஞை இல்லாமல் உருவாக்குவது நாம் அறிந்ததே.

நான் கண்ட அமெரிக்கா
அதே பாணியில் சையது குதுப் (ரஹ்) அவர்களை எகிப்து அரசு  அமெரிக்காவுக்கு அனுப்ப அல்லாஹ்வின் நாட்டமோ வேறாக இருந்தது. அமெரிக்கா சென்ற சையது குதுப் (ரஹ்) கிலாபவை வீழ்த்த மேற்கத்திய நாடுகள் செய்த சதிகள், மீண்டும் கிலாபா உருவாகாமல் இருக்க முஸ்லீம் உலகெங்கும் தேசியவாதம், மதசார்பின்மை, ஜன நாயகம் என இஸ்லாத்துக்கு முரணான கொள்கைகளை திணிக்க நடக்கும் அரசியல் என அனைத்தையும் தெளிவாக கண்டுணர்ந்தார். மேலும் நிறவெறியின் பெயரால் நடக்கும் அநீதிகளையும் கொடுமைகளையும் கண்டு அதிர்ந்த சையது குதுப் (ரஹ்) எகிப்து திரும்பிய பிறகு அமெரிக்காவில் நிலவிய சடவாத போக்கு, தனி நபர் சுதந்திரம் எனும் பெயரில் நடைபெறும் கலாச்சார சீரழிவு, வறியவர்களை மேலும் சுரண்டும் பொருளாதார கொள்கை, நிறவெறி, வன்முறை நிறைந்த குத்துச்சண்டை போட்டிகள், விவாகரத்து கட்டுப்பாடுகள், சர்ச்சுகளிலும் இரு பால் கலப்பு, இஸ்ரேலுக்கு பொது சமூகத்தில் நிலவிய பரிபூரண ஆதரவு என அனைத்தையும் விமர்சித்து நான் கண்ட அமெரிக்கா எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.

இஹ்வானுல் முஸ்லீமினை நோக்கி
பிர் அவ்னின் மாளிகையிலேயே மூஸா (அலை) அவர்களை வளர்க்க வைத்தது போல் அமெரிக்காவுக்கு செல்லும் முன் தான் விதந்தோதிய அமெரிக்காவை விமர்சிக்கும் கடும் விமர்சகராக அல்லாஹ் மாற்றினான். அமெரிக்க பயணத்தை முடித்து எகிப்து திரும்பியவுடன் தன் அரசு உத்தியோகத்தை துறந்து இஹ்வானுல் முஸ்லீமினில் தன்னை இணைத்து கொண்டார். அல் இக்வான் அல் முஸ்லீமின் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் இக்வான்களின் உயர் ஆலோசனை அமைப்பானா ஷூரா கமிட்டி உறுப்பினராகவும் சையது குதுப் (ரஹ்) நியமிக்கப்பட்டார்.

நாசர் - நட்பிலிருந்து துரோகத்துக்கு
அமெரிக்காவுக்கு எகிப்தை தாரை வார்க்கும் விதமாக நடைபெற்று கொண்டிருந்த அரசை கமால் அப்துல் நாசர் தலைமையிலான போராட்டக்காரர்கள் ஜூலை 1952ல் வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர். இப்பதவி கவிழ்ப்புக்கு முன் இஹ்வான்களுக்கும் நாசருக்கும் நெருக்கமான உறவு இருந்ததோடு இஹ்வான்களோடு ஆலோசனை செய்ய கூடியவராகவும் நாசர் இருந்தார். அதனால் இயல்பாகவே நாசர் இஸ்லாமிய அரசை அல்லது குறைந்த பட்சம் அதை நோக்கிய அரசை அமைப்பார் என்று இஹ்வான்கள் நினைத்தனர்.

இஹ்வான்களின் மக்கள் செல்வாக்கை தனக்கு ஆதரவாக பயன்படுத்தவே நாசர் தங்களுடன் நட்புறவாக இருந்தார் என்பதை நாசரின் பதவியேற்பிற்கு பிறகு இஹ்வான்கள் உணர்ந்தனர். நாசரின் மதசார்பின்மை மற்றும் தேசியவாத கொள்கைகள் இஸ்லாத்துக்கு முரணாணவை என்பதால் முந்தைய அரசை போல நாசரையும் இஹ்வான்கள் எதிர்க்க ஆரம்பித்தனர்அதனால் 1954ல் நாசரை கொலை செய்ய சதி செய்தனர் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இஹ்வான்கள் மீது கடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு சையது குதுப் உள்ளிட்டோர் சிறை பிடிக்கப்பட்டனர்.

சிறை தந்த சுவனம்
சிறையில் நாய்களை விட்டு கடிக்க விடுதல் உள்ளிட்ட ஏராளமான கொடுமைகள் சையது குதுப் (ரஹ்) மேல் இழைக்கப்பட்டது. அக்கொடுமைகளிலிருந்து தப்பிப்பதோடு கல்வி அமைச்சர் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகள் தரப்படும் என்று பேரம் பேசப்பட்ட போது இப்னு தைமியா (ரஹ்) கூற்றை சையது குதுப் (ரஹ்) மேற்கோள் காட்டி சொன்னார்கள் "இஸ்லாத்தின் எதிரிகள் என்னை என்ன செய்து விட முடியும்?. தனிமை சிறையில் அடைத்தால் அல்லாஹ்வுடனான உரையாடல், நாடு கடத்தினால் ஹிஜ்ரத், தூக்கிலிட்டால் ஷஹாதத்" என முழங்கினார். சிறைச்சாலையின் கொட்டடியில் தான் "மைல்கற்கள்" மற்றும் திருக்குரானின் நிழலிலே புத்தகத்தை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1964ல் ஈராக்கின் பிரதமர் வேண்டுகோளால் 10 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட சையது குதுப் (ரஹ்) ஆகஸ்டு 1965ல் எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்ற விசாரணையில் மைல்கற்களில் அவர் எழுதியதை வைத்தே அவரின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தான் எழுதியதை சரி என்றே இஸ்லாமிய நோக்கில் சையது குதுப் அவர்கள் வாதாடினார்கள். அவரின் மைல்கற்கள் புத்தகத்தின் அடிப்படையில் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி அக்கோமகனை 29 ஆகஸ்டு 1966 தூக்கிலிட்டார்கள்.

இஸ்லாம் ஒரு கொள்கையாக
இஸ்லாமிய அறிஞர்கள் கூட இஸ்லாத்தை வெறுமனே சில சடங்குகளின் தொகுப்பான மதமாக பாவித்த வேளையில், ஒட்டு மொத்த உலகும் மேற்கின் ஜனநாயகத்திலிருந்தும் கிழக்கின் மார்க்சியத்திலிருந்தும் தேடி கொண்டிருந்த காலத்தில்East or West, Islam is the Bestஎன்று இஸ்லாத்தை ஒரு வாழ்வியல் கொள்கையாக விளக்கியதில் சையது குதுப் (ரஹ்) பங்கு குறிப்பிடத்தக்கது. ஜனநாயகத்தில் இஸ்லாம் கூறும் ஷூரா போன்ற அமைப்புகள் இருப்பதை வைத்து இஸ்லாமும் ஜன நாயகமும் ஒன்றே என்று இஸ்லாமிய ஜனநாயகம் எனும் புதிய சொல்லாடல்களை அறிஞர்கள் உதிர்த்த போது இஸ்லாம் என்பது இஸ்லாம் மட்டுமே, அதவன்றி ஜனநாயகம், தேசிய வாதம், மதசார்பின்மை என அனைத்தும் ஜாஹிலிய்யாவே என்று சையது குதுப் (ரஹ்) பட்டவர்த்தனமாக அறிவித்தார்.

மைல்கற்கள்
அவரின் பல்வேறு புத்தகங்களும் சமூகத்தில் குறிப்பாக அறிவு ஜீவிகளிடத்தில் தாக்கம் ஏற்படுத்தினாலும் மைல்கற்கள் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. இக்கட்டுரையை எழுதும் நான் உள்ளிட்ட பலர் இஸ்லாத்தை ஒரு மதமாக மட்டுமே எண்ணியிருந்த நிலையிலிருந்து இஸ்லாம் ஒரு அரசியல் கொள்கை, புரட்சி குரல், முழுமையான வாழ்வியல் நெறி என்பதை உணர்த்தி தெளிவடைய வைத்தது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.. இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை, தவ்ஹீதில் புறக்கணிக்கப்பட்ட ஹாகிமிய்யத் குறித்தும் அப்புத்தகத்தில் விரிவாக குறிப்பிடும் சையது குதுப் (ரஹ்) மனிதர்களுக்கு மனிதர்களுக்கு அடிமைப்படுவதிலிருந்து அல்லாஹ்வின் அடிமைகளாக மாற்றுவதே இஸ்லாத்தின் நோக்கம் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். அதற்கான தீர்வாக ஜாஹிலிய்யாவின் அமைப்புகளுக்குள் இருந்து கொண்டு தீர்வை தேடாமல் அவ்வமைப்புகளை எதிர்த்து களம் காணல் அவசியம் என்றும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.

திருக்குரானின் நிழலிலே
நவீன தஃப்சீர் எழுதும் கலையில் முன்னோடியாக இருப்பது ஷஹீத் செய்யித் குதுப் எழுதிய 'ஃபீழிலாலில் குர்ஆன்' விரிவுரையே! எகிப்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, குதுப் எழுதிய ஆழமான விரிவுரைதான் நவீன கால தஃப்சீர்களில் மிகச் சிறந்தது என இஸ்லாமிய அறிஞர்கள் சிலாகிக்கின்றனர். பொதுவாக குர்ஆன் வசனங்களில் ஒரு குறிப்பிட்ட வசன இடைவெளியில், வசனங்களுக்கு இடையே ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போன்ற தோற்றம் ஏற்படுவது இயல்பு. அதனை மறுத்து, ஒவ்வொரு வசனமும் எப்படி மற்றொன்றோடு தொடர்புடன் அத்தியாயத்தின் மையக் கருத்தை ஒட்டி மனிதனுக்கு வழிகாட்டுகிறது என்பதை அற்புதமான அரபியில் ஆக்கியிருக்கிறார் குதுப். சமகால உலகின் முஜாஹித்களின் ஆன்மிக பசிக்கு இளைப்பாறும் உணவாக பீ ழாலில் குரான் திகழ்வதை யாரும் மறுக்கவியலாது.

சுவனத்தின் நிழலிலே வீற்றிருக்க பிராத்திப்போம்
சையது குதுப் ரஹ் பற்றி ஒரு விமர்சகர் இவ்வாறு குறிப்பிடுகிறார் " சையது குதுப் அவர்கள் நவீன இஸ்லாமிய அரசியல் கொள்கையை செம்மையாக்கியவர். அவர் இப்னு தைமியாவின் கொள்கை , ரஷீத் ரிழாவின் ஸலபிஸம், மெளதூதியின் ஜாஹிலியா குறித்த பார்வை, ஹசன் அல் பன்னாவின் செயற்பாடு ஆகியவற்றின் கலவையாக இருந்தார். இன்றளவும் உலகில் நடக்கும் இஸ்லாமிய எழுச்சி போராட்டங்களின் வித்தாக சையது குதுபின் எழுத்துக்கள் விளங்குவதே அவரின் வெற்றிக்கு சான்று.ஒரு மாபெரும் இயக்கத்தின் சித்தாந்தவாதியும், அந்தச் சித்தாந்தத்திற்காக சிறையிலடைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவருக்கு இளைப்பாற நிழல் தந்த குர்ஆன், நமக்கும் சொர்க்கத்தில் நிழலைத் தர உதவட்டும் இன்ஷா அல்லாஹ்...

No comments: