அன்பு சகோதர, சகோதரிகளே
நபிகளாரின் 23 ஆண்டு கால வாழ்க்கையில் அவரின் இலட்சிய பயணத்தில் உறு
துணையாய் விளங்கிய எண்ணற்ற ஸஹாபாக்கள், அதை தொடர்ந்த இஸ்லாமிய இலட்சிய பயணத்தில்
தீனை நிலை நாட்டுவதில் முன்னின்ற தளபதிகள் என நமக்கு அவ்வளவாக
அறிமுகமில்லாவதர்களின் வாழ்விலிருந்து படிப்பினைக்கான சில சம்பவங்கள் மூலம்
அறிமுகப்படுத்துவதே இத்தொடரின் நோக்கம். நம்முடைய தூய்மையான நோக்கங்களை அல்லாஹ்
ஏற்று கொள்வானாக
குருதியை விட குரானை நேசித்த அப்பாத் இப்னு பிஷ்ர்
(ரலி)
ஹிஜ்ரி 4ம் ஆண்டு. ஒப்பந்தத்தை
முறித்து நபிகளாரை கொல்லவும் திட்டமிட்ட பனூ நளீர் எனும் யூத கோத்திரத்தை நபிகளார்
மதீனாவை விட்டு வெளியேற்றியிருந்தார்கள். இச்சூழலில் நஜ்த் பகுதியில் உள்ள
யூதர்கள் மதீனாவை தாக்க திட்டமிடும் செய்தி பெருமானாருக்கு கிடைக்கவே உத்மான்
இப்னு அப்பானை மதீனாவுக்கு காவல் வைத்து விட்டு 400 படை வீரர்களோடு நஜ்தை நோக்கி
சென்றார்கள்.
நஜ்தை அடைந்த நபிகளார் (ஸல்), தொழுகையின் போது எதிரிகள் தாக்க கூடும் என்பதால் முஸ்லீம்களை இரு அணிகளாக பிரித்து அஸர் வக்தை தொழுதார்கள். முதல் அணி தொழும்போது இரண்டாவது அணி பாதுகாப்பாகவும், இரண்டாவது அணி தொழும்போது முதல் அணியினர் பாதுகாப்பாகவும் நின்று தொழுகையை நிறைவேற்றினர். அன்றிரவு முஸ்லீம்கள் பள்ளத்தாக்கில் தங்க வேண்டிய
சூழல் ஏற்பட்ட போது எதிரிகள் தாக்கும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு பணியில் யார்
ஈடுபட போகிறார்கள் என்று முஹம்மது (ஸல்) கேட்ட போது , அப்பாத் பின் பிஷ்ரும் (ரலி), அம்மார் பின் யாஸிரும் (ரலி) முன் வந்தனர். இவர்கள் இருவரும் நபிகளாரால் சகோதரத்துவ பந்தம் ஏற்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் தோழர் அம்மார் சற்றே அயற்சியாக இருப்பதை அவதானித்த அப்பாத்
(ரலி) அவர்கள் முதல் பாதி தான் பாதுகாப்புக்காக நிற்பதாக கூறி அம்மாரை ஓய்வெடுக்க சொன்னார். அம்மாரும்
இரண்டாம் பகுதியில் தான் காவல் காக்க எழுப்புமாறு கூறி உறங்க சென்றார். அமைதியான ரம்யமான சூழலில், நட்சத்திரங்கள், மரங்கள், பாறைகள் அனைத்தும் அல்லாஹ்வை துதிப்பது போல் அப்பாத்துக்கு காட்சியளிக்க. வெறுமனே பாதுகாப்புக்கு நிற்பதற்கு பதிலாக தொழுகையில் குர்ஆனை ஓதலாமே என்று நினைத்தார் அப்பாத் (ரலி).
ஹிஜ்ரத்தின் ஆரம்ப காலத்தில் தன் பதினைந்தாவது வயதில், முஸ் அப் பின் உமைர் (ரலி) அவர்களின் அழகிய காந்த குரலில் குர் ஆன் ஓதுவதை கேட்டதிலிருந்தே குர் ஆனுடன் அப்பாத்துக்கு இனம் புரியா அலாதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அன்றிலிருந்து அப்பாத்தின்
நெஞ்சில் குரான் ஆழமாக வேரூன்றியதால் குரானை ஓதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்
அப்பாத். ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தன்
இல்லத்திலிருந்து தொழுகைக்கு பள்ளிக்கு செல்ல தயாரான போது அழகிய குரலில் குர் ஆன்
ஓதும் சத்தத்தை கேட்டு ”வானவர் ஜிப்ரீல் ஓதுவதை போன்று தெளிவாகவும், அழகாகவும் ஓதுகின்றாரே அப்பாத் தானே அது?” என்று கூறியவாறு அவர்கள் பால் நேசம் கொண்டதோடு அப்பாத்துக்காக விசேடமாக பிராத்திக்கவும் செய்தார்கள்.
குரானின் நண்பன் என
ஸஹாபாக்களால் அழைக்கப்படும் அளவு குரானோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அப்பாத் நேரத்தை இன்னும் பயனுள்ளதாக மாற்ற எண்ணி தொழுகையில் நின்று சூரா பாத்திஹாவிற்கு பின் சூரா கஹ்பை தன் அழகிய குரலால் ஓத ஆரம்பிக்கின்றார். அந்த நேரம் முஸ்லிம் படைகளை வேவு பார்க்க வந்த எதிரிப்படையை சேர்ந்தவன். அப்பாத் அவர்கள் தனியே நின்று கொண்டு தொழுவதை பார்த்ததும் சரியான சந்தர்ப்பம் வாய்த்தது என கருதி
சப்தமில்லாமல் அம்பு கூட்டிலிருந்து அம்பை எடுத்து அப்பாத் மீது வீசினான். வீசிய
அம்பும் பிசிறில்லாமல் அப்பாதின் சதையை பிய்த்தது.
சதையை அம்பு பிய்த்தும்
சலனமில்லாமல் அதை உடம்பிலிருந்து உருவிய அப்பாத் தன் அழகு குரலில் குரானை ஓதியவாறு
தொழுகையை தொடர்ந்தார். இரண்டாவது, மூன்றாவது
அம்பும் சரியாக சதையை பிய்க்க, அதை ஒவ்வொன்றாக
பிய்த்து எறிந்த அப்பாத் தன் தொழுகையை தொடர்ந்தார். ருகூவை முடித்து பின் சஜ்தாவை
தொடர்ந்த அப்பாத் பலவீனத்தால் வலி தாங்க முடியாமல் தன் வலது கையால் அம்மாரை
எழுப்பினார். தொழுகையை முடித்த அப்பாத் தான் காயம்பட்டிருப்பதை சொல்லி தன்
இடத்தில் அம்மாரை காவல் காக்க சொன்னார்.
அப்பாத்தையும் அம்மாரையும் ஒரு
சேர பார்த்த எதிரி இருளில் தப்பி ஓட அம்பு தைத்த இடத்திலிருந்து குருதி
பாய்ந்தோடிய அப்பாதை தரையில் கிடத்தியவாறே ஏன் தன்னை முதலிலேயே எழுப்பவில்லை என
அம்மார் கடிந்து கொண்டார். அதற்கு அப்பாத் தான் அழகுற ஓதிக் கொண்டிருந்த குரானிய
கிராத்தை இடை நிறுத்த தனக்கு மனம் வர வில்லை என்றார். மேலும் நபிகளார் தன்னை சூரா
கஹ்பை மனனம் செய்ய சொல்லி இருந்ததாகவும் சூரா கஹ்பை இடையில் நிறுத்துவதை விட மரணம்
தனக்கு உவப்பானது என்றும் அப்பாத் நெகிழ்ச்சியுடன் கூறினார். சுப்ஹானல்லாஹ். வஹ்ன்
பிடித்த சமூகமாய் டாலரும் திர்ஹமுமே இலட்சியமாய் வாழும் நமக்கு, சிறு இடருக்கும் அல்லாஹ் சக்திக்கு மேல் சோதிக்க மாட்டான் என்று குரானை கொண்டே
நம் பலவீனத்தை பலமாக்கும் நம்மவர்களுக்கு பொங்கி ஒழுகும் குருதியை விட குரானை
நேசித்த அப்பாதை புரிந்து கொள்வது சற்று கடினமே.
அல்லாஹ் மற்றும் அவனது தூதர்
மீது கொண்ட அதீத அன்பின் காரணத்தாலேயே குரானோடு அப்பாத் நெருக்கமான உறவு
வைத்திருந்தார். வணக்க வழிபாடுகளில் மூழ்கியிருந்தல், கட்டற்ற வீரம், இறை பாதையில் கணக்கின்றி செலவு செய்தல்
போன்றவற்றிக்காக அப்பாத் நினைவு கூறப்படுபவராக இருந்தார். தியாகத்தின் போது முன்
வரிசையில் முதல் ஆளாக நிற்க கூடிய அப்பாத்தை அவருக்கான கனீமத் பொருட்களை கொடுக்க
கஷ்டப்பட்டே அவரை தேட வேண்டியதாக இருந்தது. இத்தகைய நற்குணங்களின் காரணத்தால் தான்
முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அன்சார்களில் ச அத் இப்னு மு ஆத், உஸைத் இப்னு குதைர், அப்பாத் இப்னு பிஷ்ரை மிகைத்த குணசீலர்கள் இல்லை
என்று புகழாரம் சூட்டினார்கள்.
யமாமா போரின் போது உற்சாகம் குன்றி
பலவீனப்பட்டிருந்த முஸ்லீம்களை உற்சாகப்படுத்த அன்சார்களையும் முஹாஜிர்களையும்
தனியாக ஒழுங்கு செய்த அப்பாத் 400 அன்சார்களுக்கு
தலைமையேற்று வீரத்துடன் போரிட்டு ஷஹீதானார். அவரின் உடம்பில் விழுந்த எண்ணற்ற
தழும்புகளின் காரணத்தால் அப்பாத்தின் உடலை கண்டு பிடிப்பது சிரமமாக இருந்தது. தன்
குருதியை விட குரானை அதிகம் நேசித்த அப்பாத் முஸ்லீமாகவே வாழ்ந்து, முஸ்லீமாகவே போரிட்டு, முஸ்லீமாகவே மடிந்தார். ரலியல்லாஹு அன்ஹு.
குரானின் மீது அப்பாத் கொண்ட
காதலின் ஒரு பகுதியாவது அல்லாஹ் நம் உள்ளத்தில் விதைத்து குரான் மறுமை நாளில்
சிபாரிசு செய்ய கூடிய ஷுஹதாக்களில் கூட்டத்தில் நம்மை சேர்ப்பானாக.
No comments:
Post a Comment