Wednesday, May 6, 2009

ஆகவே தங்கள் பொன்னான வாக்குகளை…

மீண்டும் ஒரு தேர்தல்.

யார் ஜெயித்தாலும் தோற்கப் போவது நாம் என தெளிவாக தெரிந்திருந்தும் திருவாளர் பொதுஜனத்தின் மனதில் ஒரு பரவசம். ஜனநாயகத்தில் நீங்கள் விரும்புபவர் ஆட்சிக்கு வரலாம். ஆனால் உங்களை விரும்புபவர் ஒரு போதும் ஆட்சிக்கு வரமுடியாது என்ற உண்மையை உணர்ந்திருந்தாலும் தெருக்கூத்தை பார்ப்பது போல் தேர்தல் கூத்தை பார்ப்பதிலும் நமக்கு ஒரு அலாதி பிரியம்.

ஆனாலும் இந்த ஜனநாயகத் தேர்தல் முறைகளில் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதை தொடர்ந்து சரிந்து வரும் வாக்குப் பதிவின் மூலம் விளங்கி கொள்ள முடிகிறது.

1984 73.57
1989 69.44
1991 63.83
1996 62.17
2001 59.07

இவ்வாறு 73.57 சதவிகிதமாக 1984ல் இருந்த வாக்குப்பதிவு 2001ல் 59.07 சதவிகிதமாக குறைந்திருப்பதிலிருந்து மக்கள் எந்தளவுக்கு (ஏ)மாறி இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இந்த ஜனநாயக தேர்தல் முறையில் நல்லவர்கள் நிற்க முடிவதில்லை. நின்றாலும் வெல்ல முடிவதில்லை. வென்றால் அவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். காண்டேகர் சொன்னது போல் ஒரே ஒரு அயோக்கியனை சமாளிக்க நேர்ந்தால் சர்வாதிகாரம். ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிக்க நேர்ந்தால் அது ஜனநாயகம் என்பது உண்மையாகி விடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். நயவஞ்சகனின் அடையாளத்தை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், அமானிதத்தை மோசடி செய்வான் என்றார்கள். முஸ்லிம்களிடையே இருக்கும் நயவஞ்சகர்களை பற்றி கூறி இருந்தாலும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தி வருவதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் முஸ்லிம்களின் பணி என்னவாக இருக்க முடியும்? இந்த ஜனநாயக முறையில் மக்களின் சட்டங்கள்தான் அலங்கோலமாக அரங்கேறும். வலுத்தவனுக்கு ஒரு நீதி, இளைத்தவனுக்கு ஒரு நீதி இங்கு சாதாரணம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித்தந்த வழிமுறையில் நம்மை படைத்;த இறைவனின் சட்டங்கள்தான் நம்மை ஆள வேண்டும். இந்த இறைச்சட்டங்கள் கோலோச்சும்போது அனைத்து மனிதர்களுக்கும் நீதி கிடைக்கும், நிம்மதி கிட்டும்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு முறை கூறினார்: ஜனநாயகம் என்பது மோசமான ஒன்று. ஆனால் மற்ற கொள்கைகள் அதைவிட மோசமானவை. இஸ்லாமிய வழிகாட்டுதலை அவர் அறிந்திராத காரணத்தால் இவ்வாறு கூறியிருப்பார். இறைவனால் அருளப்பட்ட சிறந்த மார்க்கமான இஸ்லாத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இதனை நாம் அரசியல் உட்பட வாழ்வின் அனைத்து துறைகளிலும் பின்பற்றினால் வாழ்வில் ஏற்படும் ஒளிமயமான வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

புராக் நதிக்கரையில் ஒரு ஆடு தொலைந்து போனாலும் நான் மறுமையில் பதில் சொல்ல வேண்டும் என அஞ்சுகிறேன் என இறை நம்பிக்கையால் வார்க்கப்பட்ட உமர் (ரழி) அவர்களின் ஆட்சி வேண்டுமா? நிவாரணம் வழங்கும்போது நெரிசலில் சிக்கி மக்கள் இறந்த போதும் ஒருவருக்கொருவர் பழியை மாற்றி போட்டு அரசியல் நடத்தும் ஆட்சியாளர்கள் தேவையா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். நாளுக்கொரு கொள்கை, ஆளுக்கொரு வேஷம் என மக்களை ஏமாற்றும் நயவஞ்சக அரசியலை மக்கள் தெளிவாக விளங்கி வருவதால், நாம் இறைச் செய்தியை எடுத்துரைக்கும்போது இன்ஷா அல்லாஹ் மக்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வார்கள்.

எனவே இனியும் ஸாமிரிக்களுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்காமல் சத்திய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்வோம். அல்லாஹ் உதவி செய்வானாக.

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். – 29:69

நன்றி : அபூஹாரித், பார்வை மே 2006

No comments: