Wednesday, September 30, 2009

தீனை நிலைநாட்டுதல் என்றால் என்ன ?

இறைத்தூதர்கள் அனைவருக்கும் தீனின் தன்மை கொண்ட சட்ட திட்டம்தான் அருளப்பட்டது. அதுவும் ஒரு முக்கியமான வழிகாட்டுதலுடனும் அறிவுறுத்தலுடனும் தான் அருளப்பட்டது.
அதாவது இறைத்தூதர்கள் அனைவருமே இந்த தீனை நிலைநாட்டுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டனர். இந்தக் கட்டளையுடன்தான் அவர்களுக்கு இந்த தீன் அருளப்பட்டது.
‘அக்கீமுத்தீன்’ என்பதற்கு ஷா வலியுல்லாஹ் அவர்கள் ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஷா ரஃபீயுத்தீன் சாகிபும் ஷா அப்துல் காதிர் அவர்களும் இதற்கு ‘நிலை நிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருங்கள்’ என மொழி பெயர்த்துள்ளனர்.
இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளும் பொருத்தமானவையே! இகாமத் என்பதற்கு நிலைநாட்டுதல் என்கிற பொருளும் உண்டு. நிலை நிறுத்தப்பட்ட நிலையில் வைத்திருத்தல் என்கிற பொருளும் உண்டு. இறைத்தூதர்கள் எல்லோருமே இந்த இரண்டு பணிகளையும் செய்வதற்காகவே பணிக்கப்பட்டிருந்தார்கள்.
எங்கு இந்த தீன் நிலைநாட்டப்படவில்லையோ அங்கு இந்த தீனை நிலைநாட்டுவது அவர்களின் முதன்மைக் கடமையாக இருந்தது. எங்கு இந்த தீன் நிலைநாட்டப்பட்டு விட்டதோ அங்கு நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருப்பது அவர்களின் இரண்டாவது கடமையாக இருந்தது.
நிலைநிறுத்தப்பட்ட நிலையில் ஒன்றை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எப்போது வரும்? அது ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும்போதுதானே..! இல்லையெனில் முதலில் அதனை நிலை நாட்ட வேண்டியிருக்கும். பிறகு அது நிலை நிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருப்பதற்காகத் தொடர்ந்து இடைவிடாமல் பாடுபடவேண்டியிருக்கும்.
இப்போது இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக தீனை நிலை நாட்டுதல் என்பது என்ன? இரண்டாவது எதனை நிலைநாட்டும்படியும் எதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்யும்படியும் நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கின்றதோ அந்த தீன் எது? எதனைக் குறிக்கின்றது? இந்த இரண்டையும் நல்ல முறையில் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
ஒரு திடப் பொருளை நிலை நாட்டுங்கள் என்றால் என்ன பொருள்? சாய்ந்து கிடப்பதை நேராக நிறுத்துங்கள் என்பது தானே! எடுத்துக்காட்டாக கீழே விழுந்து கிடக்கின்ற கோலையோ, தூணையோ நிமிர்த்தி நேராக நிலைநிறுத்தி வைத்தல்; அல்லது சிதறிக்கிடக்கின்ற உட்பகுதிகளை ஒன்று சேர்த்து மேலெழுப்புதல் என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, வெற்று மைதானத்தில் கட்டிடம் கட்டி எழுப்புதல். அதே போன்று உயிருள்ளவற்றை நிலை நாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அமர்ந்திருப்பவரை நிற்கச் செய்வதுதானே! எடுத்துக்காட்டாக, உட்கார்ந்திருக்கின்ற மனிதனையோ, விலங்கையோ நிற்கச் செய்தல்.
ஆனால் திடப் பொருளாகவோ, உயிருள்ள பொருளாகவோ இல்லாத, சிந்தனையை நிலைநாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்; மக்கள் மத்தியில் அந்தச் சிந்தனையைக் குறித்துப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பது தானா? இல்லை. சிந்தனையை அல்லது சித்தாந்தத்தை நிலைநாட்டுங்கள் என்றால் அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்;மக்கள் மத்தியில் அதனைக் குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பதோடு பொருள் முடிந்துவிடுவதில்லை. அந்தச் சித்தாந்தத்தைக் கூடுதலோ குறைவோ இல்லாமல் முழுமையாகச் செயல்படுத்துங்கள்; அதனையே நடைமுறையாக்கி விடுங்கள்; அதனை அன்றாட வாழ்வில் நிறுவி விடுங்கள் என்று அதன் பொருள் விரிந்து கொண்டே போகும்.
எடுத்துக்காட்டாக, இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியை நிறுவினார் என்று சொல்லும்போது அதற்கு என்ன பொருள்? இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியின் பக்கம் மக்களை அழைத்தார் என்பதா? இல்லை. அதற்கு மாறாக, அவர் தம்முடைய நாட்டு மக்களைத் தம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பவர்களாக ஆக்கிக் கொண்டார்; அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் தம்முடைய ஆணைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றவையாக மாற்றி அரசாங்கத்தின் மீது தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். தம்முடைய விருப்புவெருப்புகளின் அடிப்படையில் நாட்டின் அனைத்து விவகாரங்களும் அரங்கேறுகின்ற வகையில் எல்லாவற்றிலும் தம்முடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டார் என்றுதான் அதற்குப் பொருள்.
இதே போன்று இந்த நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்? அழகான கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன என்பதா? நீதியரசர்கள் பல்லாண்டுகள் நாட்டின் சட்ட திட்டங்களைப் படித்து மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் குறித்து பாடம் நடத்துகின்றார்கள் என்பதா? நீதி, நியாயம் ஆகியவற்றின் முக்கித்துவத்தையும் சிறப்பையும் வலியுறுத்தி மணிக்கணக்காகப் பேசுகின்றார்கள்; மக்களும் அவர்களின் எழுச்சிமிகு உரைகளைக் கேட்டு மனம் லயித்து நீதியின் சிறப்பை உணர்ந்து கொண்டார்கள் என்றா பொருள்? நிச்சயமாக இல்லை.
அதற்கு மாறாக, அழகான, பரந்து விரிந்த கட்டடங்களும் இருக்கின்றன; நீதியை நிலைநாட்டுவதற்காக நீதியரசர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றார்கள்; நீதம் செறிந்த திர்ப்புகளையும் குறித்த நேரத்தில் அளிக்கின்றார்கள்; மக்களுக்கு நீதி தாமதமின்றி, செலவின்றி கிடைத்துவிடுகின்றது என்பதுதான் ‘நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன’ என்பதற்குப் பொருள் ஆகும்.
இதே போன்று தொழுகையை நிலைநாட்டுங்கள் என குர்ஆனில் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது எனில், அதற்குப் பொருள் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு போன்றவற்றைக் குறித்தும் தொழுகையினால் கிடைக்கின்ற நன்மைகள் பற்றியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதல்ல. தொழுகையை அழகாக, நேர்த்தியாக, குறைவில்லாமல் தாமும் நிறைவேற்றுவதுடன் நம்பிக்கையாளர்கள் எல்லோருமே ஐவேளைகளிலும் ஜும்ஆவிலும் குறித்த நேரத்தில் எவ்வித சிரமுமில்லாமல் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கும் வசதி செய்தல் வேண்டும்; பள்ளி வாசல்கள் பாங்குடன் இயங்க வேண்டும்; குறித்த நேரத்தில் தொழுகைக்காக அழைப்பும் கொடுக்கப்பட வேண்டும்; இமாம்களும், கதீப்களும் நியமிக்கப்பட்டு அவர்களும் தத்தமது பணிகளைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்; மக்களும் ஐவேளையும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது போகின்றவர்களாக மலர வேண்டும். இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தொழுகை நிலைநாட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியும்.
இதுவரை சொன்ன விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் படித்த பிறகு ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என இறைத்தூதர்களுக்குத் தரப்பட்ட கட்டளையின் முழுவீச்சையும் முழுமையான பரிமாணங்களையும் ஒருவரால் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். அதில் யாதொரு சிரமமோ, குழப்பத்திற்கோ இடமிருக்காது.
இறைத்தூதர்களுக்கெல்லாம் ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என்கிற கட்டளை இடப்பட்டதெனில் அதற்கு என்ன பொருள்? இறைத்தூதர்கள் எல்லோருமே தீனின் கட்டளைகளுக்கேற்பச் செயல்பட வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.
இறைத்தூதர் அந்த தீனைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; தீனின் சிறப்பியல்புகளையும், முக்கிய கோட்பாடுகளையும் எந்தவிதச் சிரமத்திற்கும் இடமில்லாத வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்; நேர்வழி என்றும், சரியான, உண்மையான வழிகாட்டுதல் என்றும் மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு தீனை நல்ல முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.
மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொண்ட பிறகு இன்னும் ஒருபடி முன்னேறி தீன் முழுவதையும் தம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி நிலைநாட்ட வேண்டும்; வாழ்வின் அனைத்து துறைகளும் தீனின் போதனைகளுக்கேற்ப இயங்குகின்ற அளவுக்கு முழுமையான மாற்றம் மலர வேண்டும்; அந்த மாற்றம் நீடித்து நிலைக்க வேண்டும்.
அந்த முழுமையான மாற்றம் நிலைபெறுவதற்காக முழுமையான கவனத்துடனும் அக்கறையுடனும் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தீன் நிலைநாட்டப்பட்டதாகச் சொல்ல முடியும்.
அழைப்புப் பணி, பிரச்சாரப் பணி போன்றவற்றுடன்தான் இந்த மிகப்பெரும் பணி தொடங்கும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.தொடக்கத்தில் இந்த இரண்டு பணிகளும் இன்றியமையாதவை என்பதில் சந்தேகமில்லை. இந்த இரண்டை மேற்கொள்ளாமல் அடுத்தக்கட்ட பணிகளை ஏறெடுத்தும் பார்க்க முடியாது என்பதும் உணமையே. ஆனால் பிரச்சாரமும் அழைப்புப் பணியும்தான் எல்லாமே என்பதல்ல. பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும்தான் முழுமுதல் நோக்கம் என்பதல்ல.
தீனை நிலைநாட்டுங்கள் என்கிற கட்டளையை அறிவார்ந்த முறையில் ஆய்ந்து பார்க்கின்ற எவரும் இதனை எளிதாக விளங்கிக் கொள்வார். பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும் துணைக்கருவிகளே தவிர, முதன்மை இலக்குகள் அல்ல என்பதையும் தீனை நிலைநாட்டுவதும், அதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்வதும்தான் உண்மையான இலக்குகள் என்பதையும் புரிந்து கொள்வார்.
இந்த முதன்மை இலக்குகளை அடைவதற்குத் துணைபோகின்ற கருவிகள்தான் அழைப்புப் பணியும், பிரச்சாரப் பணியும் என்பதைப் புரிந்து கொள்வார். இறைத்தூதர்களின் தூதுத்துவப் பணியின் ஒற்றை இலக்கே அழைப்புப் பணியையும், பிரச்சாரப் பணியையும் திறம்பட மேற்கொள்வதுதான் என எவருமே சொல்லத் துணியமாட்டார்.

மெளலானா மெளதூதி (ரஹ்) தமிழில் : அஜீஸ்லுத்புல்லாஹ் நன்றி : சமரசம் செப் 16-31,2009

Wednesday, September 23, 2009

அஞ்சாமையே அழைப்பாளனின் உடைமை

சத்திய அழைப்பாளன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பு ‘கால இன்னனி மினல் முஸ்லிமீன்’ அதாவது ‘நான் நிச்சயமாக முஸ்லிமாக உள்ளேன்’ என்பது. இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் மக்கா நகரின் சூழலுக்கு ஒரு மீள் பயணம் செய்ய வேண்டும்.
தன்னந்தனியாக ஒருவர் எழுந்து நின்று, ‘நான் ஓரிறைக்கொள்கையை ஏற்றவனாக அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து முஸ்லிமாக இருக்கிறேன்’ எனப் பிரகடணம் செய்வது சாதாரண நிகழ்வன்று.
இது கட்டற்ற கொடுமைகளுக்கும் காட்டுவிலங்காண்டித்தனத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரித்து முகமன் கூறி வரவேற்பதைப் போன்றது.
எனவே ஒரு சத்திய அழைப்பாளன் அல்லாஹ்வின் பால் அழைக்கிறவன் என்பது மட்டுமன்று, உன்னத பண்புகளைக்கொண்ட உத்தமனாக விளங்குபவன் என்பது மட்டுமன்று, கடும் பகைவர்களுக்கு இடையிலும், கடுமையான சூழலிலும் தனி ஒருவனாக நின்று தான் ஒரு முஸ்லிம் என்று அறிவிப்பதில் அச்சமோ, தயக்கமோ, தடுமற்றமோ கொண்டவனாக இருக்க்க் கூடாது. துணிச்சலாக, வெளிப்படையாக, ஆம்; நான் முஸ்லிம்தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’ என்று பறைசாற்றுபவனாக இருக்க வேண்டும்.
வேறு சொற்களில் கூற வேண்டுமெனில் சத்திய அழைப்பாளன் ஒருவன் துணிவும், அச்சமின்மையும், வீரமும், தீரமும் கொண்டவனாக திகழ வேண்டும்.இறைவனின்பால் அழைப்புவிடுக்கும் தூய பணியை சிறிய தீண்டலிலேயே நீர்க்குமிழி போல் அமுங்கிவிடும் ஒரு கோழையால் நிறைவேற்ற இயலாது. இப்படிப்பட்டவனால் எப்போதும் அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுக்க முடியாது.
கடுமையான பகைமையும், பெரும் எதிர்ப்புகளும், பேராபத்துகளும் மிகுந்த பயங்கரமான சூழலில் இஸ்லாத்தின் கொடியை ஏந்தி, விளைவுகளைப்பற்றி அஞ்சாமல் செயல்படுகிறவரால் மட்டுமே இறைவனின் பால் அழைப்பு விடுக்க முடியும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் வீரமும், தீரமும் கொண்ட ஒரு முன்மாதிரி அழைப்பாளராய் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். மக்கா நகரில் தனி ஒருவராக நின்று வெளிப்படையாக இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள். சத்தியத்திற்கு சான்று பகரும் கடமையை நிறைவேற்றினார்கள்.
அண்ணலாரைக் கொன்றுவிட வேண்டும் எனத்துடிக்கும் இரத்த வெறி கொண்ட மக்களிடையே இந்த அழைப்பு விடுக்கப்பட்ட்து. அண்ணலாரையும் அவருடைய தோழர்களையும் தாங்கொண்ணாத் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் இலக்காக்கினார்கள்.
அந்தக் கொடுமையாளர்களுக்கு இடையில்தான் ‘அல்லாஹ்வின்பால் வாருங்கள்’ என்ற அழைப்பு விடுக்கப்பட்ட்து.தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் தம் அழைப்பை விரிவுபடுத்திக் கொண்டே போனார்கள். பின்னர் மதீனா சென்ற பிறகு எத்தகைய நிலைமைகள் உருவாகின..! எத்தனை பயங்கரமான சூழல்..! கடும் தாக்குதல்கள்..! ஆயினும் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை.
ஹுனைன் போரின்போது முஸ்லிம் படைகள் பின்வாங்கிய நிலையில், தோல்வியைச் சந்திக்கிற நேரத்தில், பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் உறுதியுடன் இருந்தார்கள். களத்தின் முதல் பகுதியில் பகைவர்களின் அணிகளுக்கிடையில் புகுந்து போர் புரிந்த வண்ணம் முன்னேறுகிறார்கள். அதே சமயம் தாம் யார் என்பதையும் உரக்கச் சொல்கிறார்கள்.
‘அனன் நபிய்யு லாகஸிப் அனப்னு அப்துல் முத்தலிப்’
‘நான் இறைவனின் தூதர். இது பொய்யன்று. நான் அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்’
என்று உரைக்கிறார்கள்.
எப்படிப்பட்ட சூழல் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கடுமையான போர்க்களம். பகைவர்கள் தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணலாருக்கு அருகில் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் இரண்டு மூன்று பேர்கள் தான் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஆபத்தான சூழலிலும், ‘ஆம்; நான் இறைவனின் தூதன்தான்; நான் ஒரு நபிதான்’ எனப் பறைசாற்றுகிறார்கள். அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கின்ற ஒரு சத்திய அழைப்பாளன் இந்த அளவுக்கு வீரமும் துணிச்சலும் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
- மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் ஒரு கட்டுரையிலிருந்து........
தமிழில் : மௌலவி ஜபருல்லாஹ் ரஹ்மானி.
நன்றி : சமரசம் செப்டம்பர் 16-31, 2009

Monday, September 14, 2009

ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிராதயமல்ல

தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அள்ளாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.


நோன்பின் பெறுமதி தக்வாவில் தங்கியிருக்கிறது.
நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தஹஜ்ஜீத்தில் வீங்குமே
இடக்கை அறியாமல் - சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.


இளைஞர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.


இந்த நன் நாளில்
கேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.
டி.வியிலிருந்துகண்ணை கழட்டுங்கள்.
அந்த டி.வி.டியை இன்றேனும் தூக்கில் போடுங்கள்.
காதுகளுக்கு கீதம்விஷம் என்று சொல்லுங்கள்.


எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும்
இளைஞர்களேஅந்த இரவு நேர மரத்திலிருப்பது தெம்பிலி அல்ல
உங்கள் ஒழுக்கங்கள்- வெட்டாதீர்கள்
அந்த மாமரத்திலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்- ஏன் உடைக்கிறீர்கள்.
வெடிகளை அல்ல- அதை கொளுத்த வேண்டும்
என்ற மடமையை கொளுத்துங்கள்.


நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்.
அந்த இரவுகள் தூய்மையாகவே
இருந்துவிட்டு போகட்டும்.

நாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோற்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.


தோழர்களே....
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.

இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.
இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.
இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும் மயானத்தில் அல்ல
காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.

நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.


நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்.
நோன்பில்லாத ஹிட்லர்
மண்ணிடம் தோற்றான்.
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்.


நோன்பு மரம்,
இந்த மரம்
மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை
தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு
பெட்ரோல் ஊற்றும்.


நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல

இலங்கை ஜமிய்யாவுக்கு மனமார்ந்த நன்றி

Sunday, August 30, 2009

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்

உலகில் மனிதர்கள் நேர்வழியிலிருந்து பிறழும் போது அவர்களை தூய்மைப்படுத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் தூதர் தாம் என்பதற்கு அத்தாட்சியாக சில அதிசயங்களை முன்னறிவிப்பு செய்யக் கூடிய ஆற்றல்களையும் வருங்காலத்தில் நடைபெறவிருக்கின்ற சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய கூடிய திறனையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவ்வாறு இறுதி நபியாக வந்த நமது நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். அவற்றில் சில அவர்களின் வாழ்க்கையிலும் சில இனி வரக்கூடிய காலங்களிலும் நடைபெறவிருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.
நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தன்னைப் பின்பற்றுவோர் படும் துன்பத்தை தடுக்க கூட முடியாத பலவீனமான நிலையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்க தயங்கிக் கொண்டிருந்த கிறித்தவராயிருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களை நோக்கி சொன்னார்கள் “ஓ! அதீ பின் ஹாத்திமே! ஏன் இஸ்லாத்தை ஏற்கத் தயங்குகிறீர்கள்? இந்த சிறு கூட்டம் உலகில் என்ன ஒரு மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? அறுதியிட்டு சொல்கிறேன் ஒரு காலம் வரும், ஸன்ஆ-விலிருந்து ஹலரமவத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாய் செல்வாள். தங்கத்தையும், வெள்ளியையும் தானம் செய்ய புறப்படுவீர்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்வோர் யாரும் இருக்க மாட்டார்கள். சீசர், கைசரின் சாம்ராஜ்யங்கள் எல்லாம் என்னை பிற்பற்றுவோரை வந்தடையும்”. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் பின்னாளில் சொல்கிறார்கள் “என் வாழ்நாளிலேயே இவை நிறைவேறியதை கண்டுக் கொண்டேன்.
அது போல் ரசூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அவர்களை கொலை செய்ய துரத்தி வந்த சுரகா இன்னு ஜுஷமை நோக்கி “சுரகாவே! ஒரு காலத்தில் ஈரான் மன்னரின் கைகளை அலங்கரித்த ஆபரணங்கள் உங்கள் கைகளை அலங்கரிக்கும்” என்று கூறினார்கள். இது இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் காலத்தில் ஈரான் வெற்றி கொள்ளப்பட்ட போது நிறைவேற்றிக் காட்டப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உஹது மலையடிவாரத்தில் இருந்த போது உஹது சற்றுக் குலுங்கியது. அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் “உஹதே! அமைதியாக இரு. உன்னில் ஒரு தூதர் இருக்கிறார். ஒரு வாய்மையாளர் இருக்கிறார். இரண்டு ஷஹீதுகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி பின்னாளில் உமரும், உஸ்மானும் ஷஹீதாக்கபடவிருப்பதை அப்போதே முன்னறிவிப்பு செய்தார்கள்.
தன் செல்ல மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் தன் குடும்பத்தில் முதலாவதாக தன்னை வந்து அடைவார்கள் என்று நாயகம் (ஸல்) சொன்னதற்கேற்ப ரசூல் (ஸல்) இறந்த ஆறு மாதங்களுக்குள் ஃபாத்திமா (ரலி) இவ்வுலகை விட்டு பிரிந்ததை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். அதுபோல் தன் பேரரான ஹஸன் (ரலி) அவர்களை நோக்கி இவர் இரு கூட்டத்தினருக்கிடையில் சமாதானம் செய்து வைப்பார் என்று சொன்னது நிறைவேறியதையும் வரலாற்றில் பார்க்கிறோம்.
மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி குறிப்பிடும் போது “ஒரு பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பாள்” என்று கூறினார்கள். இன்று எத்தனையோ ஆண்மக்களை பெற்ற போதும் பெண்ணை அண்டி வாழும் நிலையையும், பெண் தன் தாயை வேலைக்காரியை விட மோசமாக நடத்துவதையும் நிதர்சனமாக பார்க்கிறோம். இன்று அரசாங்கங்களே சிவப்பு விளக்கு பகுதிகளை அங்கீகரிக்கும் கொடுமையும் மது அருந்துவது நாகரீகமாக கருதப்படும் அவலத்தையும் பார்க்கிறோம். இதை தான் நாயகம் (ஸல்) அவர்கள் “விபச்சாரம் பெருகும். மது அருந்தும் பழக்கம் பரவலாகும்” என்று முன்னறிவிப்பு செய்தார்கள்.
நாம் இருக்க கூடிய இந்த அமீரக பகுதிக்கு பொருத்தமான ஒரு முன்னறிவிப்பையும் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னார்கள். “வறுமையின் காரணத்தால் வெறுங்காலுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரும் கட்டிடங்களைக் கட்டுவார்கள்”. இன்று உலகின் மிகப் பெரும் கட்டிடங்கள் எல்லாம் இங்கு கட்டப்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.
சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்வினால் புகழப்டுகின்ற இந்த சிறந்த சமுதாயம் இன்று இறை நிராகரிப்பாளர்களாலும், யூத நஸ்ரானிகளிடத்திலும் சிக்கி தவிக்கும் அவல நிலையை நாயகம் (ஸல்) அவர்கள் அன்றே முன்னறிவிப்பு செய்தார்கள். “ஒரு காலம் வரும். அப்போது பிராணி தன் இரையை தேடி பாய்வது போல் பிற சமுதாயங்கள் உங்கள் மீது பாயும்” என்று சொன்னபோது ஸஹாபாக்கள் கேட்டார்கள், யாரசூலுல்லாஹ் எண்ணிக்கையில் நாங்கள் குறைவாக இருப்போமோ? என்று வினவியபோது இல்லை நீங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பீர்கள். ஆனால் உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொல்லி விட்டு வஹ்ன் என்றால் மரணத்தை பற்றிய அச்சமும், உலகத்தை குறித்த ஆசையும் என்று சொன்னார்கள்”. இன்று அந்த வஹ்ன் இந்த உம்மத்திடம் இருப்பதற்கு சாட்சிகள் தாம் குஜராத் முதல் பாலஸ்தீன் வரை நடைபெறும் நிகழ்வுகள்.
“காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது” என்று மறுமையை பற்றி குறிப்பிட்டார்கள். “சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் மூன்றும் நிகழ்வதற்கு முன் ஈமான் கொள்ளுங்கள் ஏனென்றால் மூன்றும் நிறைவேறிவிட்ட பிறகு ஈமான் கொள்வது பலனளிக்காது”. என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பின்னாளில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருப்பதையும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
இப்படி கடந்த, இன்றைய, வருங்காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்திருக்கின்றன நமது முஸ்தபா நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு முன்னறிவிப்பை செய்தார்கள் “என் உம்மத்தில் ஒரு கூட்டம் மறுமை நாள் வரை இருக்கும். அவர்கள் நன்மை செய்யும்படி தூண்டுவார்கள். தீமை செய்வதிலிருந்து தடுப்பார்கள். இவர்கள் தாம் வெற்றியாளர்கள் என்று கூறினார்கள்”. அவ்வாறு நன்மையை ஏவி, தீமையை தடுக்க கூடிய வெற்றியாளர்களுள் ஒருவராக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும் ஆக்கி அருள்வானாக
ஆக்கம் : நெல்லிக்குப்பம் நர்கீஸ் அண்ணன் நன்றி : tamilislam.com

வெட்கம்

ஒரு மனிதனிடம் நாணம் இல்லையானால் அவன் தன் மனம் போன போக்கில் அல்லாஹ்வின் சட்டங்களை மறந்து எதையும் செய்யத் துணிந்து விடுவான். அத்தகைய முஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்பான வெட்கத்தை பற்றிய ஒரு சிறிய அலசலே இக்கட்டுரை.
மனிதன் தவறானவற்றை செய்திடும் போதும், தன் அறியாமையால் தவறிழைத்திடும் போதும், இப்படிபட்ட தவறை செய்து விட்டோமே என்று அச்சம் கொள்வதே நாணம் என்ற பண்பாகும். தன் குறைகளை எண்ணி நாணி அவற்றை நிறைகளாக்குபவனே உண்மை மனிதனாவான்.


வெட்க உணர்வின் சிறப்புகள்
விலங்குகளுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடுகளில் ஒன்று வெட்க உணர்வாகும். மனிதனுடைய சிறப்பு பண்பு வெட்கமாகும். ஒரு மனிதனிடம் இருக்கும் இறை நம்பிக்கை எவ்வளவு அழுத்தமானது என்பதையும், அவன் எந்த அளவுக்கு ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டவன் என்பதையும், எத்தகைய இங்கிதங்களை கொண்டவன் என்பதையும் எடுத்துக்காட்டும் கருவி அவனிடம் காணப்படும் வெட்க உணர்வாகும். ஈமானும், வெட்கமும் ஒரு மரத்தின் இரு கிளைகள் போன்றதாகும். ஈமானுள்ள ஒரு மனிதனிடம் வெட்கம் இல்லையாயின் அவன் முழுமையான ஈமான் கொண்டவன் அல்லன். ஒவ்வொரு மார்க்கத்துக்கும் அதற்கு உரிய ஒழுக்கம் இருக்கிறது. இஸ்லாத்தின் ஒழுக்கம் வெட்கமாகும்.
அபு சையித் அல் குத்ரி (ரலி)அறிவிக்கிறார்கள்:
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள், திரை போட்டு தம்மை மறைத்துக் கொண்டு வாழும் பெண்களை விட அதிக வெட்க உணர்வுடையவர்களாக இருந்தார்கள். இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதாவது விரும்பத் தகாததைக் கண்டால் அதன் ரேகை அவர் முகத்தில் படருவதை காணலாம் (புகாரி). ஒரு தீமையை கண்டால் அதைக்கண்டு நாணக் கூடியவர்களாய் இருந்தார்கள். நாணம் உள்ள மனிதன் எந்நிலையிலும் தீமையின் பக்கம்கூட செல்ல மாட்டான். தீமை செய்து விட்டால் கூட, தன் தவறை எண்ணி வெட்கப்படுவான். மக்களின் முன்னிலையிலும் இறைவன் முன்னிலையிலும் குற்றவாளியாக நிற்கிறோமே என அஞ்சுவான். அன்சாரிகளை சார்ந்த ஒரு மனிதர் தம் சகோதரர் அதிகம் வெட்கப்படுவதை கண்டித்து கொண்டிருக்கும் போது அந்த வழியில் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவரை கண்டிப்பதை விட்டு விடுங்கள். நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்கள். (புகாரி)
இவ்வாறு இஸ்லாமிய மார்க்கமானது நல்ல விஷயங்கள் மனிதனுள் பரவ வெட்கம் அவசியம் என்பதை உணர்த்துகிறது.


வெட்கமின்மையால் உண்டான சீர்கேடுகள்
இன்று நம்முடைய மக்களின் வெட்கம் இல்லாத தன்மையால் சமுதாயத்தில் அன்றாடம் நடந்து வரும் அவலங்களை கண்கூடாக கண்டு வருகிறோம்.
1. பெண்களில் சிலர் நாணத்தை இழந்து விட்டு (உங்கள் அழகை வெளிக்காட்டாதீர்கள் (அல்குர்ஆன்24:31) என்ற அல்லாஹ்வின் வாக்கை மீறி அரைகுறை ஆடைகளில் அலைகின்றனர். இதனால் இளைஞர்களை ராகிங், கற்பழிப்பு போன்ற தவறுகளை செய்யத் தூண்டி விடுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
2. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும் (அல்குர்ஆன் 5:0). இன்றைய மனிதனிடம் நாணம் என்ற பண்பு இருக்குமானால் தன் உடைகள் கலைந்து இருப்பதைக் கூட அறிந்து கொள்ள இயலாத நிலையில் மதுவைக் குடித்துவிட்டு கடைவீதிகளிலும் தெருக்களிலும் படுத்து இருப்பார்களா?
3. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர். அது மானக்கேடானதாகும் மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்து செல்லும்) தீய வழியாகவும் இருக்கிறது (அல்குர்ஆன் 17:32) என குர்ஆன் எச்சரிக்கிறது. ஒரு பக்கம் அரசாங்கம் விபச்சார ஒழிப்பு பற்றி விளம்பரம் செய்தாலும், பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை அவசியம் என்று விபச்சாரத்தை ஊக்குவிப்பது, நம் நாட்டின் நாணமின்மை என்ற பண்பின் வளர்ச்சியை அல்லவா காட்டுகிறது என்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்?
4. கொலை, கொள்ளை இவற்றில் ஈடுபட்டு பின் மாட்டிக் கொண்டால் மக்கள் முன் கேவலமாகி விடுமே என்ற எண்ணம் இருப்பின் அவன் இவற்றில் எல்லாம் ஈடுபடுவானா? இப்படி வீட்டில் தெருவில,ஊரில், நாட்டில், உலகில் காணப்படும் பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணமாக அமைவது நாணத்தை இழந்து மக்கள் மனம்போன போக்கில் வாழ்வது தான். எனவே இறைவனின் அடியார்களே ஈமானின் ஓர் அம்சம் நாணம் (புகாரி) என்பதை மனதில் பதிந்து நாணமுள்ள முஃமின்களாக மாறி தவறுகளிலிருந்து திருந்தி மனம் போன போக்கில் வாழாமல் அல்லாஹ்வின் வேதத்தையும் தூதர் மொழிகளையும் பற்றிப் பிடித்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

ஆக்கம் : ஃபெரோஸ் சகோதரி நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்

தலைமையிடம் இருக்க வேண்டிய / இருக்க கூடாத பண்புகள்

தலைமைத்துவத்தை பற்றி கலாநிதி ஹிஷாம் அத்தாலிப் அவர்கள் "வலுக்கட்டாயமற்ற வழிவகைகளை கொண்டு செயலாற்றுவதற்காக ஒரு குழுவை தூண்டி திட்டமிடப்பட்ட திசையில் இட்டு செல்லும் நடவடிக்கையே தலைமைத்துவம்" என்று விவரிக்கிறார். மேலும் இஸ்லாமும் தலைமைத்துவத்திற்கும், கூட்டமைப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
"முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்." (புகாரி, முஸ்லிம்)
"மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்" (புகாரி, முஸ்லிம்)
மேலும் இஸ்லாமிய உம்மத்தின் அடித்தளமே அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பட்டுள்ளது என்பதைத்தான் உமர் (ரலி) இப்படி இயம்பினார்கள் "நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை." (ஸுனன் அத்தாரமி)
தலைமைக்கு வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை கொடுக்கும் அதே வேளை அத்தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான பெருமானார் (ஸல்) வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.
அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் அஹ்ஜாப் -21)


தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்
1. தக்வா - தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. "மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்" (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு ஏற்ப இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் உள்ளவராகவும் தன் செயல்களுக்குரிய கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்க்காமல் குர்ஆனின் (26:109,127,145,164,180) வசனங்கள் குறிப்பிடுவது போன்று இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்க கூடிய தலைவர்களையே இஸ்லாம் எதிர்பார்கின்றது.
2. அறிவு - வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இஸ்லாம் வழி எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம். மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகளை பற்றியும் விரிவான அறிவு கொண்டவராய் இருத்தலின் அவசியத்தை பற்றி உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து ஜாஹிலிய்யாவை அறியா ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
3. உறுதி கொண்ட நெஞ்சம் - "அல்லாஹ்விற்கு மிக உவப்பான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக செய்வதே" (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முடிக்கக் கூடிய திறன் உடையவராக தலைமை இருத்தல் அவசியம். எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் நெஞ்சுரம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.
4. நிலைமையை கணிக்கும் திறன் - தனது பலம், பலவீனத்தை பற்றி இஸ்லாமிய தலைமை தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராய் இருக்க வேண்டும். பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போன்று தெரியாவிட்டாலும் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை கொண்டு செயல்பட வேண்டும். ஹீதைபியா உடன்படிக்கையின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை மிகச்சிறந்த உதாரணம்.
5. நீதி செலுத்துதல் - தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். "மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது." (5:8)
6. திடவுறுதி, பொறுமை, வீரம் - இம்மூன்று பண்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இஸ்லாமிய பாதையானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பனி ஆதலால் பல்வேறு குறுக்கீடுகள் வரும். இடைத்தடங்கள்களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் தீரத்துடன் பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தலைமை இருத்தல் அவசியம்.
7. இஸ்திகாமத் - சத்தியப் பாதையில் இருந்து தன்னை திருப்பி விட எவ்வளவோ உபாயங்களை மேற்கொண்ட போதும் இன்னல்களை கொடுத்த போதும் நிலைகுலையாமல் "அல்லாஹ்வின் மீது ஆணையாக, இம்மனிதர்கள் சூரியனை எனது ஒரு கையிலும் சந்திரனை மறுகையிலும் கொண்டு வந்து வைத்தாலும் கூட நான் இதனை கை விடமாட்டேன், அல்லாஹ் எனக்கு வெற்றியைத் தருவான் அல்லது நான் இதன் வழியில் செத்து மடிவேன்" என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் சூளுரைத்தது போன்ற தன்மை உடையவராக தலைமை இருத்தல் அவசியம்.
8. பொது அறிவு திறன் - இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புரிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலையைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமது எண்ணங்களையம், திட்டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு "சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்" எனும் இறைவாக்கியத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராய் இருத்தல் வேண்டும்.
"முஹம்மத் (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான வார்த்தைகளாகவே காணப்பட்டது. அதனை கேட்ட அனைவரும் எளிதில் விளங்கிக் கொண்டனர்" (அபூதாவூத்)
"நான் சுருக்கமாக, ஆனால் அதிக விளக்கமுள்ள வார்த்தைகளை பேசச்கூடியவனாக அனுப்பப்பட்டுள்ளேன்." (புகாரி)
9. சேவை மனப்பான்மை - "சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்" (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
10. ஷீரா - தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும் ஞானமும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும். "இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வோர் காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்" (ஷீரா 38) சகல காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக (ஆல இம்ரான்- 159)

தலைமையிடம் இருக்க கூடாத பண்புகள்
1. பதவிக்கு ஆசைப்படல் - "பதவிக்காக ஆசைப்படாதீர்கள் நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." (புகாரி) என்ற நபி மொழிப்படி பதவிக்கு ஆசைப்படுபவரை தலைவராக்க மாட்டோம் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவிக்கு அலைபவராக தலைமை இருக்கக் கூடாது.
2. குடும்ப சொத்தாக கருதுதல் - ரசூல் (ஸல்) அவர்கள் கூறியது போன்று பதவியை ஒரு அமானிதமாக கருதி பொறுப்புடன் தன் கீழுள்ளவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டுமே தவிர குடும்ப சொத்தாக பொறுப்பை கருதக் கூடாது. "முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குகிறான்" (புகாரி)
3. தன்னை முன்னிலைப்படுத்துதல், புகழாசை - புகழ் பெறவேண்டும் என்பதற்காக செருக்குடன் பிறரை புறக்கனித்து தன்னை முன்னிலைப்படுத்துபவராக தலைமை இருக்கக் கூடாது "அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்". (முஸ்லிம்)
4. பலவீனமானவர் - அபூதர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பொறுப்புகளை கேட்ட போது முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அபூதர்ரே நிச்சயமாக நீர் பலவீனமானவர் அப்பொறுப்போ மிகப் பளுவான அமானிதமாகும். அதனை உரிய முறையில் நிறைவேற்றாதவருக்கு மறுமையில் அதுவே சாபமாகவும் இழிவாகவும் மாறிவிடும்" (முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப அப்பொறுப்புக்கேற்ற உடல் உள தகுதியுள்ளவர்களே அப்பொறுப்பை ஏற்க வேண்டும்.
5. சொல் வேறு, செயல் வேறு - "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை ஏன் ஏவுகின்றீர்கள்" (அஸ்ஸப் 2) எனும் இறைவாக்கிற்கேற்ப தலைவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. தங்களால் சாத்தியமானதை மட்டும் சொல்ல வேண்டும்.
6. ஆடம்பர வாழ்க்கை - தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தம் உறுப்பினர்களுக்கு முன் மாதிரியாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர ஆடம்பர வாழ்க்கையில் திளைக்கக் கூடாது. சாம்ராஜ்யங்களிலிருந்து சிறு அமைப்புகள் வரையிலான வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். "அன்றி அவர்கள் செலவு செய்தால் அளவை கடந்து விட மாட்டார்கள் உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள் இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள்" (புர்கான் 67)
7. கோழைத்தனம் - பிரச்சினைகள் ஏற்படும் போதும் தம் கீழுள்ளவர்களை தவிக்க விட்டுவிட்டு ஒளிந்து கொள்ளக் கூடியவராக தலைவர் இருக்கக் கூடாது மேலும் (8:60) ல் அல்லாஹ் சொல்கிறபடி தானும் எத்தியாகத்திற்கும் தயாராவதோடு தன் சமூகத்தையும் தயார்படுத்த கூடியவராய் இருத்தல் வேண்டும்.
8. பொறாமை - பொறாமை தலைவரிடத்தில் இருக்க கூடாத பண்பாகும். ஏனென்றால் அது தான் பிற தீய குணங்களான கோள் சொல்லுதல், குற்றங்களை துருவி ஆராய்தல், புறம் அனைத்திற்கும் முக்கிய காரணமாய் உள்ளது. அதனால் தான் பெருமானார் (ஸல்) அவர்கள் "உங்களை நீங்கள் பொறாமையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள், ஏனெனில் நெருப்பு விறகை தின்பது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகிறது" (அபூதாவூத்) என பகர்ந்தார்கள்.
மேற்கூறப்பட்டவை அடிப்படையில் ஒரு தலைமை அமையும் போது நிச்சயம் அது இஸ்லாத்தை மலரச் செய்யும் ஓர் உன்னத தலைமையாய் மிளிரும். எனவே எத்தலைமையும் அடிப்படையாக
1. அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிதல், முழுவதும் அவனை சார்ந்திருத்தல்.
2. பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற தேவையான உள, உடல், அறிவு, ஆற்றல்கள், வலிமை.
3. கலந்தாலோசனை மூலம் முடிவெடுத்து செயல்படுதல்.
போன்ற தன்மைகளை அவசியம் பெற்றிருக்க வேண்டும். அத்தலைமை மஹல்லா போன்ற சிறிய பொறுப்பாயிருந்தாலும் ஆட்சி தலைமை போன்ற பெரும் பொறுப்பாயிருந்தாலும் சரியே.

ஆக்கம் : நெல்லிக்குப்பம் நர்கீஸ் அண்ணன் நன்றி : tamilislam.com

Saturday, August 29, 2009

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
முன்னுரை :
சமூகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் தரும் செய்திகளின் ஊடாகவே உலகத்தை அறிந்து கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தது மீடியா எனப்படும் ஊடகத்துறையாகும். ஊடகங்கள்தாம் உலகத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல.ஏனென்றால் ஒரு செய்தி, அது பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் அது மக்களைச் சென்றடைய வேண்டுமா என்பதை முடிவு செய்வதும் ஊடகங்கள்தாம். ஊடகத்தின் அடிப்படை நியதிகளை விட்டு விலகி, செய்திகளைத் திரித்தும் மறைத்தும் கூறும் சமகால ஊடகத்தைப் பற்றியும் அதற்கான தீர்வையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வரலாற்று காலம் தொட்டே உருவான சூழ்ச்சி
ஊடகங்களின் திரித்தலுக்கும் மறைத்தலுக்குமான வரலாற்றை ஆராய்ந்து பார்த்தோமானால் அதற்கான விதை வரலாற்று காலம் தொட்டே விதைக்கப்பட்டிருப்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். இந்திய வரலாற்றைத் தொகுத்த ஆங்கிலேயர்கள் முஸ்லிம்களுக்கும் பிற சமூகங்களுக்கும் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உண்டாக்குமாறு வரலாற்றில் முஸ்லிம்கள் செய்த நன்மைகளையும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மறைத்தும் திரித்தும் வரலாற்றைச் சிதைத்துள்ளனர். அதனால்தான் இன்றும் நம் வரலாற்றுப் பாடங்களில், ஆரியர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும்போது "ஆரியர் வருகை" என்றும் "முஸ்லிம்கள் படையெடுப்பு" என்றும் பதிந்துள்ளதைப் பார்க்கலாம். சுயநலனுக்காக மதச் சண்டைகளை உருவாக்கி, மக்களைக் கொன்று குவித்த இந்து மன்னர்களின் வரலாற்றை மறைத்து, அவர்களை உன்னதமானவர்களாகத் திரித்துக் காட்டுகிறது நாம் பயிலும் வரலாறு.
அதுபோல முஸ்லிம் மன்னர்களில் இஸ்லாத்துக்கு மாற்றமான புதிய மதமொன்றை உருவாக்கிய அக்பர், மனைவியின் கல்லறைக்காக மக்களின் வரிப்பணத்தைச் செலவழித்த ஷாஜஹான் போன்ற மன்னர்களை - மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தப்புரங்களில் கோலோச்சியவர்களை - நல்லவர்களாக, மகாபுருஷர்களாக, கலைநயம் மிக்கவர்களாகச் சித்தரிக்கும் வரலாறு, தன் சொந்தச் செலவுக்கு அரசாங்க கஜானாவிலிருந்து நிதி எடுக்காமல் குர்ஆனை எழுதி, தொப்பி நூற்று, எளிய வாழ்க்கை வாழ்ந்த மன்னர் ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் ஏராளமான நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த துக்ளக்கை ஒரு கோமாளியாகவும் நம் உள்ளத்தில் பதிய வைத்ததில் நெஞ்சில் வஞ்சகம் குடிகொண்டிருந்த வரலாற்றாசிரியர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைமகன் திப்புசுல்தான், கேரளத்து நாயர் பெண்களின் சீர்திருத்திற்காகப் பாடுபட்டதைத் திரித்த வரலாறு, 18 தடவையும் படையெடுத்து வென்ற முஹம்மது பின் கஜ்னவியை முஸ்லிம்களின் உள்ளங்களில்கூட தோற்றுப்போன ஒரு வில்லனாக சித்தரிப்பதில் நம் பாடத் திட்டத்தில் இப்போதும் பயிற்றுவிக்கப் படுகின்ற வரலாறு வென்றிருக்கின்றது.

ஊடகங்களின் பணி:
பத்திரிகையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொன்மையான அமைப்புகளில் ஒன்றான அமெரிக்காவில் உள்ள Society of Professional Journalistயின் கூற்றுப்படி, ஒரு செய்தி என்பது 5 W’s கொண்டதாக இருக்க வேண்டும் (Who, What, When, Where & Why - யாரைக் குறித்து?, எதைக் குறித்து?, எப்போது?, எங்கே?, ஏன்?). அதுபோல செய்தியாளர் என்பவர், "எந்தப் பக்கச் சார்புமில்லாமல், தன் மதம், பிரதேசம், மொழி, இனம் என எந்தப் பாதிப்புமின்றி செய்தியைத் தெளிவாக, உள்ளது உள்ளபடி கொடுப்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் பணி" எனக் குறிப்பிடுகிறது. இறைமறை குர்ஆனும், "நம்பிக்கையாளர்களே ! ஒரு(தீய)வன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதை(ஏற்றுக் கொள்ளும் முன்னர்)த் தீர விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல் உண்மை) அறியாமல் ஒரு (குற்றமற்ற) சமூகத்துக்கு நீங்கள் தீங்கு விளைவித்து விடக் கூடும். பின்னர் (உண்மை வெளிவரும்போது) நீங்கள் செய்ததைக் குறித்து உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியவர்களாவீர்கள்" (49 : 6) என்று கூறுகிறது. "தனக்குக் கிடைக்கும் செய்தியை ஆராயாமல் அப்படியே பரப்புவன் பொய்யன்" என நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.
அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலை
Print media என்று சொல்லப்படும் அச்சு ஊடகம், சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் - குறிப்பாகத் தமிழக அளவில் - பத்திரிகை தர்மத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம். இன்று பத்திரிகைகள் - குறிப்பாக நாளிதழ்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்க இரண்டு வகையான உத்திகளைத்தான் கையாளுகின்றன. அவை, 'பரபரப்புப் பத்திரிகையியல்' மற்றும் 'மஞ்சள் பத்திரிகையியல்' (Sensational Journalism and Yellow Journalism). குஜராத் ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பிறகு 'சந்தோஷ்' எனும் பத்திரிகை இந்துப் பெண்கள் முஸ்லிம்களால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கலவரத்தை ஊதிப் பெரிதாக்கியது தெரிந்ததே. முஸ்லிம்கள் மீதோ கிருஸ்த்துவர்கள் மீதோ தாக்குதல் நடந்தால், "இரு பிரிவுகளுக்கு மத்தியில் பிரச்னை" என மென்மையாய் செய்தி தரும் பத்திரிகைகள், நேரெதிர் நிகழ்வுகளில் காட்டும் வேகம் ஆச்சரியமளிக்க கூடியதாக இருக்கும்!
எவர் வைத்து வெடித்த குண்டாக இருந்தாலும் எங்குக் குண்டு வெடித்தாலும் சற்றும் யோசிக்காமல் "முஸ்லிம் தீவிரவாதி", "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்று படுவேகமாகச் செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு, குண்டு வெடிப்பு நடத்தி, முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்க முயன்றவர்களின் சதி, 'மதச் சார்பற்ற' ஊடகங்களின் பார்வையில் செய்தியாகப் படவில்லை. விடுதலைப்புலிகளை தமிழ்ப் போராளிகள் எனக் குறிப்பிடும் பத்திரிகைகள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு, "தீவிரவாதி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதைப் பார்க்கின்றோம். பிற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறும் தீவிரவாதிகள் என்று அழைக்கும் ஊடகங்கள் முஸ்லிம்களை மட்டும் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்று அழைப்பது கடைந்தெடுத்த கயமைத்தனம். குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் பயங்கரவாதி ப்ரக்யாசிங்கை, "சாது" என்று பயபக்தியுடன் அழைப்பதாகட்டும், ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு தீவிரவாத 'மாஸ்டர் மைண்ட்' ஆகத் திகழ்ந்த புரோஹித்தை தேசப் பற்றாளராகக் காட்டுவதற்கு நமது 'நடுநிலை நாளிதழ்கள்' படாத பாடு படுகின்றன.
டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி, இஸ்லாத்தைத் தூற்றிய இந்தியாடுடே முதல், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் "வைக்கப்பட்டிருந்த" குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிகை தினமலர்வரை, அவற்றில் எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்புப் பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. காரணம், வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் சொந்த கோர முகங்கள்! பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிரபராதியாக வெளி வந்திருக்கிறார் இம்ரான். ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளை பக்கம் பக்கமாக வெளியிட்ட பத்திரிகைகள் நிரபாரதியாக வெளிவந்த செய்தியில் அக்கறை காட்டவில்லை. அவை அடுத்து ஒரு முஸ்லிமைக் குற்றவாளியாக, தீவிரவாதியாகக் காட்ட வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கக் கூடும்..
இன்னொரு புறம் சமீபத்தில் தினமலர் செய்ததைப் போல் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் தலைவரைப் பற்றி அவதூறுகளை, நையாண்டி செய்து அவர்களின் உணர்வுகளைத் தூண்டி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையையும் பத்திரிகைகள் செய்து கொண்டிருக்கின்றன. அதுபோல இஸ்லாத்தைக் குறித்துத் தவறான செய்திகளைக் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் மூலம் பதியும் பத்திரிகைகள் அவற்றுக்கான மறுப்புகளை அனுப்பினால் அவற்றைப் புறக்கணிப்பதைப் பார்க்கின்றோம். அதுபோல ஆதிக்க சாதி எழுத்தாளர்கள் மூலமும் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து, பெயர்தாங்கிகளாக வாழும் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்ற எழுத்தாளர்கள் மூலமும் "கருத்துச் சுதந்திரம்" என்ற பெயரால் முஸ்லிம்களின் உணர்வுகளைச் சீண்டுவதைப் பார்க்கின்றோம். எதற்கெடுத்தாலும் "புலனாய்வுப் பத்திரிகையியல் (Investigative Journalism)" என்ற பெயரில் "மதரஸாக்களில் ஆயுதப் பயிற்சி" போன்ற பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பும் பத்திரிகைகள், முஸ்லிம் அமைப்புகளின் பேரணிகளைக்கூட தீவிரவாதப் பயிற்சிகளாகச் சித்தரிக்கும் புலனாய்வு(?)ப் பத்திரிகைகள், சங் பரிவாரங்கள் நடத்தும் வெளிப்படையான ஆயுதப் பயிற்சியை வெறும் செய்தியாகக்கூடத் தராது.

தொலைக்காட்சி மற்றும் இணையத்தின் தற்போதைய நிலை
அச்சு ஊடகத்துக்குச் சற்றும் சளைக்காமல் - இன்னும் சொல்ல போனால் - அதை மேலும் மோசமாக்கும் வகையில்தான் தொலைக்காட்சி சானல்களும் உள்ளன. புராண புளுகுகளை உண்மை வரலாறாகத் திரிக்கும் தொலைக்காட்சிகள் திப்புவின் உண்மை வரலாற்றை ஒளிபரப்பும்போது நூலை அடிப்படையாகக் கொண்ட "கற்பனை கதை" என்று அறிவிப்புச் செய்து ஒளிபரப்பியது நினைவிருக்கலாம். அதுபோல் "பகுத்தறிவுப் பகலவன்"களால் நடத்தப் படும் தொலைக்காட்சிகளில் மூட நம்பிக்கைகளைப் பார்வையாளர்களின் மனதில், குறிப்பாகப் பெண்களின் மனதில் விதைக்கும் நாடகங்களை ஒளிபரப்புவது, அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மேற்கத்திய கலாசாரத்தைத் திணிப்பது, எங்குக் குண்டுவெடிப்பு நடந்தாலும் Breaking News எனும் பெயரில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவது, போன்ற சமுதாயச் சேவை(?)யாற்றும் தொலைக்காட்சிகள், "தீவிரவாதிகள்" என்று 'சொல்லப் பட்டவர்கள்' நிரபாரதிகள் என விடுதலை செய்யப்படும்போது கள்ள மவுனம் சாதிக்கின்றன. பாராளுமன்றத் தாக்குதல் சதியில் 'மாட்டிக் கொண்ட' அப்சல் குருவுக்குத் தூக்குதண்டனையை உயர்நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் தரவில்லை. மாறாக, தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே எனும் உண்மையை எந்த ஊடகமும் வெளிப்படுத்துவதில்லை. நடுநிலை தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட, "அப்சல் குருவைத் தூக்கிலிடாதது ஏன்?" என கேள்வி எழுப்பி முஸ்லிம் விரோதப் போக்கை விதைக்கின்றனர்.
சமீபத்தில் நடந்த மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னமேயே நடுநிலை ஆங்கிலத் தொலைக்காட்சிகள்கூட நிகழ்வை நான்கு நாட்கள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. அதிலொன்றும் தவறில்லை. ஆனால், ஆங்காங்கே இஸ்லாமிய விரோதப் போக்கை விதைக்க முயன்றதுதான் தவறு. அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம். தீவிரவாதத் தடுப்பு பிரிவின் தலைவர் கார்கரே முதலாவதாகக் குறி வைத்து சுடப்பட்டது, அதற்கு முன்னர் அவருக்கிருந்த பரிவாரங்களின் கொலை மிரட்டல், இஸ்ரேலியர்களின் நரிமன் ஹவுஸின் பங்களிப்பு என ஏராளமான சந்தேகங்கள் சங்பரிவார – மொஸாத் – அமெரிக்க பங்களிப்பை நோக்கி விரல் நீட்டினாலும் அவை தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மறைக்கப்பட்டதை உணரலாம். இணையத்தளங்களில் ஓப்பீட்டளவில் முஸ்லிம்கள் முன்னேறியிருந்தாலும் இஸ்லாத்தின் பெயரில் திட்டமிட்ட போலி வலை தளங்கள், தவறான பிரசாரங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.

தீர்வு - ஊடகங்களில் புகுதல்
ஊடகங்களின் திரித்தலும் மறைத்தலும் ஒழிய வேண்டுமெனில், முதல்படியாக அந்த ஊடகங்களில் புகுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டு வேலை, அதிகச் சம்பளம் இவற்றையெல்லாம் தியாகம் செய்து விட்டு, பத்திரிகையியலைப் படிக்க முன்வர வேண்டும். ஆனால் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் தஞ்சாவூரில் RDB கல்லூரியில் பத்திரிகையியல் பட்டப்படிப்பை ஆரம்பித்தபோது மாணவர்களின் பதிவின்மையால் அதே ஆண்டு அந்தத்துறை நீக்கப் பட்டது.
உண்மையிலேயே நாம் பொதுவான செய்தி ஊடகங்களில் புகும்போது நம்மால் ஓரளவாவது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதுபோல் இஸ்லாம் குறித்த தவறான பிம்பத்தை அகற்றும் பொருட்டு, முன்னர் தினமணி முதல் பக்கத்தில் IFT அக்கால சூழலுக்கு ஏற்ற வகையில் வாழ்வியலுக்கு ஏற்ற குர்ஆன் வசனங்களை, நபிமொழிகளை வெளியிட்டதுபோல் வெளியிட மீள்முயற்சி எடுக்கலாம். காவிரிப் பிரச்சினை, பொருளாதர நெருக்கடி, வகுப்புக் கலவரங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ஊடகங்களில் அப்பிரச்னை குறித்த இஸ்லாமிய நிலைப்பாட்டை விளக்கலாம். தொலைக்காட்சிகளில் அனைவரையும் சென்றடையும் வகையில் விஜய் டி.வியின் "நீயா? நானா?" போன்று பொதுவான தலைப்புகளில் விவாத அரங்குகளை அனைத்து மதச் சகோதரர்களையும் அழைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதே சமயத்தில் எக்காரணம் கொண்டும் தற்போது நடப்பில் உள்ளது போன்று தொலைக்காட்சிகளில் சகோதர முஸ்லிம் அமைப்புகளைக் குறித்தும் தலைவர்களைக் குறித்தும் வசைபாட ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. தொலைக்காட்சிகளில் ஓரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு சேனல்களில் நம் நிகழ்ச்சிகள் வராமல் நமக்குள் ஒருங்கிணைந்து வெவ்வேறு நேரங்களில் ஒளிபரப்ப முயற்சி செய்ய வேண்டும்.

நம் செய்திகள் எல்லோருக்கும் சேரல்
இஸ்லாமியப் பத்திரிகைகள் கிட்டத்தட்ட 40க்கும் மேல் வெளிவருகின்றன. ஆனால் சென்னையில்கூட மண்ணடி போன்ற ஒரு சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர வேறு எங்கும் அவை கிடைப்பதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சிறு நகரங்களில் அந்த அமைப்பின் சார்பாளர் ஒருவர் வீட்டில் மட்டுமே அந்தப் பத்திரிகை கிடைக்கும். சாதாரணமாக, குறைந்த அளவில் வெளியாகும் 'புதிய ஜனநாயகம்' போன்ற கொள்கை இதழ்கள்கூட அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். அதன் பிரதிநிதிகள் பேருந்துகளில்கூட அவர்கள் பட்டதாரிகளாக இருந்தால்கூட வெட்கப்படாமல் அதை விற்பதைப் பார்க்கலாம். ஆனால் நம் சமூகத்திற்கே நம் பத்திரிகைகள் சேர்வதில்லை. லேபிள் ஓட்டாமல் மருந்து விற்பது என்பதுபோல் கலர் காட்டாமல் நமக்குப் பத்திரிகை நடத்தத் தெரியவில்லை. ஒரு சில இதழ்களைத் தவிர வேறு எதையும் நாம் பிறமதச் சகோதரர்களுக்கு வாங்கிக் கொடுக்க இயலாது. நம்மிடத்தில் இல்லாத, நாம் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டிய Professionalism அதற்கான பெருங்குறை எனலாம். தமிழ் இஸ்லாமிய இதழ்களில் ஒன்றைத் தவிர வேறு எப்பத்திரிகையிலும் இதழியல் படித்தவர்கள் பொறுப்பில் இல்லாதது இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

செய்தி நிறுவனங்களை உருவாக்கல்
நாம் நீண்ட கால நோக்கில் கவனம் செலுத்த வேண்டிய திட்டம் செய்தி நிறுவனங்கள் உருவாக்கம் என்பதாக இருக்க வேண்டும். ஏனெனில், செய்தி நிறுவனங்கள்தாம் ஊடகங்களின் செய்திகளுக்குக் கருவாக இருக்கின்றன. இது கடினமான பணி என்றாலும் அடிப்படையான பணி என்பதை மறுக்க முடியாது. AP, PTI போன்ற செய்தி நிறுவனங்கள்தாம் ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கின்றன. எடுத்து காட்டாக, 9/11 இரட்டை கோபுரத் தாக்குதலில் ஒரே நாளில் 3000க்கும் அதிகமானோர் பலியான செய்தி, உலகத்தின் பட்டி-தொட்டி எங்கும் பரவி, இன்றளவும் படித்தவர்களிலிருந்து பாமரர்கள்வரை நினைவில் பதிக்கப் பட்டதற்கு அடிப்படையாகத் திகழ்பவை செய்தி நிறுவனங்களாகும். ஆனால், ஆப்பிரிக்காவில் தினந்தோறும் கொள்ளை நோய்களின் மூலம் 3000 பேர்கள் கொல்லப்படும் தகவல், அதே செய்தி நிறுவனங்களால் அலட்சியப் படுத்தப் படுவதால், ஊடகங்களில் இடம் பெறுவதில்லை. இப்படியாக ஒரு செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிப்பதில் செய்தி நிறுவனத்தின் பணி முக்கியமானது.

நடுநிலை ஊடகங்களை ஏற்படுத்தல்
இன்று முஸ்லிம் சமுதாயத்தின் கட்டாயத் தேவைகளுள் தலையாயது நமக்கென்று நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள். ஆனால் அவை ஒரு முஸ்லிம் பத்திரிகையாக அல்லாமல், மற்ற பத்திரிகைகளைப் போலல்லாமல் கேரளாவின் மாத்யமம் போன்று பொதுவான நடுநிலை நாளிதழாக நடத்த முயற்சி செய்ய வேண்டும். நடுநிலையோடு செய்திகளை வெளியிடும்போது அனைத்துத் தரப்பினரையும் சென்று செய்திகள் சேரும். அதுபோல் தெஹல்கா போன்ற வார இதழ்களை வெளியிட முயற்சி செய்ய வேண்டும். நம்மிடத்தில் உள்ள செல்வந்தர்கள்கூட தெஹல்கா போன்ற இதழ்களை அவர்களைக் கொண்டே தமிழில் வெளியிட முயற்சி செய்யலாம். சத்தியத்திற்காகப் போராடக் கூடிய, குஜராத் உண்மைகளை உயிரைப் பணயம் வைத்து வெளிக்கொணர்ந்த தெஹல்கா போன்ற பத்திரிகைகளுக்கு சந்தா கட்டி, அவர்களுக்குக் குறைந்த பட்சம் பொருளாதார ரீதியாக உதவலாம். ஒரு அல்-ஜஸீராவும் அல்-அரபியாவும் PEACEம் தொலைக்காட்சியில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் அறிவோம். நம்மால் உடனடியாகத் தொலைக்காட்சி கொண்டு வருவது பொருளாதார ரீதியாக சிரமம் என்றாலும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து அல்லது பிறமத நடுநிலையாளர்களோடு இணைந்து ஒன்றை ஏற்படுத்தலாம். வெறுமனே பிராசாரம் என்றில்லாமல் செய்திகள், விவாதங்கள், குறும்படங்கள் என இஸ்லாமிய வரம்புக்குட்பட்டு நடத்தினால் வெற்றி பெறுவது சாத்தியமானதே.

முடிவுரை
முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றுபட்டு, பத்திரிகைகளில் வெளியாகும் தவறான செய்திகளுக்கு மறுப்பளித்தல், தேவையெனில் சட்ட நடவடிக்கை எடுத்தல், செய்தி நிறுவனங்களையும் ஊடகங்களையும் உருவாக்கல், பத்திரிகை உலகில் புகுதல் என, தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் முஸ்லிம்கள் தங்களை மட்டுமல்ல, ஓட்டு மொத்த உலகையும் காப்பாற்ற முடியும். சிறந்த சமுதாயம் என அருள்மறை வர்ணிக்கும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இச்சமுதாயத்துக்கு மட்டும்தான் அந்த ஆற்றல் இருக்கிறது.
நீதிக்குக் குரல் கொடுக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் தன் தூக்கத்தைக் களைந்து அறிவாயுதத்தை கையில் ஏந்தி அநீதிகளுக்கெதிராய் போராடும் காலம் நெருங்கி விட்டது.
வாருங்கள் இளைஞர்களே!
ஓரணியில் ஒன்று திரள்வோம்
சத்தியத்தை உணர்ந்தாலே
தியாகங்கள் எளிதாகும்
உணர்ந்த சத்தியத்தை
பிறருக்கும் எடுத்துச் சொல்வோம்
அநீதிகளை, அக்கிரமங்களை
வேரோடு அழித்தொழிப்போம்.

ஆக்கம்: முஹம்மது ஃபெரோஸ்கான்
ஆதார நூல்கள், இணையங்கள்
1. Wikepedia – Free encyclopedia
2. www.satyamargam.com
3. பத்திரிகைதுறையும் முஸ்லீம்களும் – இலக்கியச் சோலை
4. வந்தார்கள் வென்றார்கள் – விகடன் பிரசுரம்

நன்றி : சத்தியமார்க்கம்.காம்
(சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008 சர்வதேச கட்டுரை போட்டியில் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது)