சத்திய அழைப்பாளன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பு ‘கால இன்னனி மினல் முஸ்லிமீன்’ அதாவது ‘நான் நிச்சயமாக முஸ்லிமாக உள்ளேன்’ என்பது. இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் மக்கா நகரின் சூழலுக்கு ஒரு மீள் பயணம் செய்ய வேண்டும்.
தன்னந்தனியாக ஒருவர் எழுந்து நின்று, ‘நான் ஓரிறைக்கொள்கையை ஏற்றவனாக அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து முஸ்லிமாக இருக்கிறேன்’ எனப் பிரகடணம் செய்வது சாதாரண நிகழ்வன்று.
இது கட்டற்ற கொடுமைகளுக்கும் காட்டுவிலங்காண்டித்தனத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரித்து முகமன் கூறி வரவேற்பதைப் போன்றது.
எனவே ஒரு சத்திய அழைப்பாளன் அல்லாஹ்வின் பால் அழைக்கிறவன் என்பது மட்டுமன்று, உன்னத பண்புகளைக்கொண்ட உத்தமனாக விளங்குபவன் என்பது மட்டுமன்று, கடும் பகைவர்களுக்கு இடையிலும், கடுமையான சூழலிலும் தனி ஒருவனாக நின்று தான் ஒரு முஸ்லிம் என்று அறிவிப்பதில் அச்சமோ, தயக்கமோ, தடுமற்றமோ கொண்டவனாக இருக்க்க் கூடாது. துணிச்சலாக, வெளிப்படையாக, ‘ஆம்; நான் முஸ்லிம்தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’ என்று பறைசாற்றுபவனாக இருக்க வேண்டும்.
வேறு சொற்களில் கூற வேண்டுமெனில் சத்திய அழைப்பாளன் ஒருவன் துணிவும், அச்சமின்மையும், வீரமும், தீரமும் கொண்டவனாக திகழ வேண்டும்.இறைவனின்பால் அழைப்புவிடுக்கும் தூய பணியை சிறிய தீண்டலிலேயே நீர்க்குமிழி போல் அமுங்கிவிடும் ஒரு கோழையால் நிறைவேற்ற இயலாது. இப்படிப்பட்டவனால் எப்போதும் அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுக்க முடியாது.
கடுமையான பகைமையும், பெரும் எதிர்ப்புகளும், பேராபத்துகளும் மிகுந்த பயங்கரமான சூழலில் இஸ்லாத்தின் கொடியை ஏந்தி, விளைவுகளைப்பற்றி அஞ்சாமல் செயல்படுகிறவரால் மட்டுமே இறைவனின் பால் அழைப்பு விடுக்க முடியும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் வீரமும், தீரமும் கொண்ட ஒரு முன்மாதிரி அழைப்பாளராய் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். மக்கா நகரில் தனி ஒருவராக நின்று வெளிப்படையாக இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள். சத்தியத்திற்கு சான்று பகரும் கடமையை நிறைவேற்றினார்கள்.
அண்ணலாரைக் கொன்றுவிட வேண்டும் எனத்துடிக்கும் இரத்த வெறி கொண்ட மக்களிடையே இந்த அழைப்பு விடுக்கப்பட்ட்து. அண்ணலாரையும் அவருடைய தோழர்களையும் தாங்கொண்ணாத் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் இலக்காக்கினார்கள்.
அந்தக் கொடுமையாளர்களுக்கு இடையில்தான் ‘அல்லாஹ்வின்பால் வாருங்கள்’ என்ற அழைப்பு விடுக்கப்பட்ட்து.தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் தம் அழைப்பை விரிவுபடுத்திக் கொண்டே போனார்கள். பின்னர் மதீனா சென்ற பிறகு எத்தகைய நிலைமைகள் உருவாகின..! எத்தனை பயங்கரமான சூழல்..! கடும் தாக்குதல்கள்..! ஆயினும் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை.
ஹுனைன் போரின்போது முஸ்லிம் படைகள் பின்வாங்கிய நிலையில், தோல்வியைச் சந்திக்கிற நேரத்தில், பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் உறுதியுடன் இருந்தார்கள். களத்தின் முதல் பகுதியில் பகைவர்களின் அணிகளுக்கிடையில் புகுந்து போர் புரிந்த வண்ணம் முன்னேறுகிறார்கள். அதே சமயம் தாம் யார் என்பதையும் உரக்கச் சொல்கிறார்கள்.
‘அனன் நபிய்யு லாகஸிப் அனப்னு அப்துல் முத்தலிப்’
‘நான் இறைவனின் தூதர். இது பொய்யன்று. நான் அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்’ என்று உரைக்கிறார்கள்.
எப்படிப்பட்ட சூழல் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கடுமையான போர்க்களம். பகைவர்கள் தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணலாருக்கு அருகில் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் இரண்டு மூன்று பேர்கள் தான் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஆபத்தான சூழலிலும், ‘ஆம்; நான் இறைவனின் தூதன்தான்; நான் ஒரு நபிதான்’ எனப் பறைசாற்றுகிறார்கள். அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கின்ற ஒரு சத்திய அழைப்பாளன் இந்த அளவுக்கு வீரமும் துணிச்சலும் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
- மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் ஒரு கட்டுரையிலிருந்து........
தமிழில் : மௌலவி ஜபருல்லாஹ் ரஹ்மானி.
நன்றி : சமரசம் செப்டம்பர் 16-31, 2009
No comments:
Post a Comment