மனித மூளைகளின் மனோ இச்சையின் அடிப்படையிலான ஆட்சியிலிருந்து இறையாட்சியை நோக்கிய பயணத்தின் முதல் படி.....
Sunday, December 13, 2009
அகீதாவும் அஹ்லாக்கும்
அல்லாஹ்வின் நபி மீது தினந்தோறும் குப்பைக் கொட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த பெண், நோய்வாய்ப்பட்ட செய்தி கேட்டு அவரை நோய் விசாரிக்கச் சென்ற தூதரின் மனோபாவத்தை அனுமானிக்கத் திராணியற்றவர்களாக உள்ளோம். அது நம்பிக்கைக்குரிய சிறப்புப் பண்பு எனவும், எமது அயலிலுள்ள ஹேமலதா அல்லது பார்வதி எமக்குக் கொடுமை இழைத்தால் அவர்களுடன் அப்படி நடந்து கொள்வது சாத்தியமற்ற செயல் எனவும் சிலர் இதை அலட்சியப்படுத்தும் அதேவேளை வேறு சிலரோ, அல்லாஹ்வின் நபி அப்படி நோய் விசாரிக்கச் சென்ற அச்சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்தி அம்மாதுவை மதம் மாற்றியதாக விளக்கம் செய்ய முயற்சிப்பதையும் நாம் பார்க்கலாம்.
எமது நம்பிக்கையிலும் நாம் ரஸூலுல்லாஹ்வின் வாழ்க்கையை விளங்கி வைத்துள்ள விதத்திலும் ஏதோ ஒரு அடிப்படைத் தவறு இருப்பது போல் தோன்றுகிறது. எமது அடிப்படை நம்பிக்கை சார்பான விஷயங்களில் கூட தளம்பல் இருக்கிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது. இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்ட ஒருவரின் அகீதா உறுதியாக இருப்பது அவசியம். அகீதா என்பது ஒரு முஸ்லிம் ஈமான் கொள்ள வேண்டிய அடிப்படையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும். ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அம்சங்களையும் நாம் பள்ளிக் கூடத்திலும் வேறு வழிகளிலும் படிக்கிறோம். “அல்லாஹ்வைத்தவிர வணங்கி வழிபடத் தகுதியானவன் வேறெவருமில்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதரும், அவனது அடியாரும் ஆவார். அவன் இணை துணையற்றவன்; அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் அவனே; அவன் தந்த மார்க்கம் மட்டுமே சத்தியமானது” என்ற ஒப்புதலையே பிரதானமாக அகீதா உள்ளடக்கியுள்ளது.
இஸ்லாம் மார்க்கத்தின் மூலமும் இஸ்லாமிய வாழ்க்கையமைப்பின் ஊற்றுக்கண்ணும் இந்த அகீதாவே. இந்த அகீதாவானது மாசற்றதாகவும் மூடக்கொள்கைகள் கலந்து அதன் புனிதத்தன்மை சிறப்புடையதாகவும் இருப்பது அவசியமாகும். ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் ஏனைய விஷயங்களில் நெகிழ்ந்து கொடுக்க இடமுண்டு, ஆனால் அவனது அகீதாவில் எந்த நெகிழ்வுக்கோ பேரம் பேசலுக்கோ இடம் கிடையவே கிடையாது. அகீதாவின் சில கூறுகளை விட்டுக் கொடுக்கவோ அல்லது தள்ளிப்போடவோ முடியாது. தளம்பலோ அல்லது சோர்வோ தோன்ற முடியாது. முஸ்லிமின் அகீதா அந்தளவு இறுக்கமானதாக அமைய வேண்டும் என்பதை இஸ்லாம் அழுத்தமாக கூறுகிறது. ஏனெனில் அதில் பலவீனம் காணப்பட்டால் ஒருவர் இஸ்லாத்தை சரிவர பின்பற்ற முடியாது. அறுபடவோ துருப்பிடிக்கவோ முடியாத கயிற்றை ஒருவர் பற்றிப் பிடித்திருப்பதைப் போல் ஒரு முஸ்லிம் தனது அகீதாவை பற்றிப் பிடித்துக் கொண்டால் மட்டுமே சவால்களுக்கு அசைந்து கொடுக்காது அல்லாஹ்வுடைய தீனில் பற்றுறுதியுடன் இருக்க முடியும்.
இந்த அகீதாவானது ஒரு தனிமனிதன் வாழ்வில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒரு மனிதன் கோழையாக இருக்கலாம் சோம்பலும் பொடுபோக்கும் உடையவனாக இருக்கலாம் அல்லது தலைக்கணம் பிடித்து பெருமையடித்து திரியலாம் அல்லது படாடோப வாழ்க்கை வாழ்பவனாக இறை நிராகரிப்பில் ஊறித்திளைத்து அதன் காவலனாக, கல் நெஞ்சம் படைத்தவனாக, கொடூர குற்றங்கள் புரிபவனாக, தில்லு முல்லுகளில் மூழ்கி சம்பாத்தியம் செய்பவனாக அல்லது வேறு எப்படியான மனிதனாக இருந்தாலும் கூட அவனைப் புடம்போடப்பட்ட தங்கமாக்கி விடுகிறது இந்த அகீதா.
ஒரு மனிதன் ஏகதெய்வக் கோட்பாடான தவ்ஹீதை ஏற்ற பின் அவனுள் ஒன்பது வகையான மாற்றங்கள் ஏற்படுவதாக ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள். இந்த ஒன்பது மாற்றங்களையும் முஹம்மது (ஸல்) அவர்களதும் சஹாபிகளதும் வாழ்வில் நாம் அவதானிக்க முடிகிறது.
“என்னை விடுங்கள் அந்த முஹம்மதை தீர்த்துக் கட்டி விட்டு வருகிறேன்” என ஆவேசத்துடன் கிளம்பிய உமரை முழு உலகும் புகழும் நீதிமிக்க ஆட்சியாளனாக மாற்றியது இந்த அகீதாவே. காலா காலமாக அற்பத்தனமான சண்டையில் ஈடுபட்டு அழிந்து கொண்டிருந்த அவ்ஸ் கஸ்ரஜ் கோத்திரங்களை சகோதர வாஞ்சையால் பிண்ணிப் பிணைத்து முழு மனித குலத்தின் சுபிட்சத்திற்காக ஒன்றிணைந்து உழைக்கும் அணியாக மாற்றியமைத்ததும் இந்த அகீதாவே. தலைநிமிர்ந்து எஜமானின் முகத்தைப் பார்க்கவும் தைரியமற்ற கொடூர அடிமைத்துவம் அரசோச்சிய காலத்தில் ‘அல்லாஹு அஹத்’ (அல்லாஹ் தனித்தவன்) என்ற பிரகடனத்தை, முழங்குவதற்கான தைரியத்தை ஹபஷிப் பெண்ணின் மகனான பிலாலுக்கு இந்த அகீதாவே கொடுத்தது.
தன்னடக்கமும் பணிவும் இஸ்லாமிய அகீதா ஒருவனில் ஏற்படுத்தும் பிரதான பண்புகளாகும். ஒரு முஃமின் கர்வம் கொண்டவனாகவோ தலைக்கணம் பிடித்தவனாகவோ அகந்தையுடன் காரியமாற்றுபனாகவோ இருக்க முடியாது. அவன் புகழ் தேடி அலைந்து திரிபவனாக, தற்பெருமை கொள்பவனாக இருக்க முடியாது. அவன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என பிரகடணம் செய்யும் போது சர்வ புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியவை என்பதை ஒப்புக் கொள்கிறான். அவனிடம் காணப்படும் செல்வம், செல்வாக்கு, அறிவு, ஆற்றல்கள், வசதிவாய்ப்புகள் அனைத்தும் தனக்கு அல்லாஹ் அருளியவை என்பது அவனுக்கு தெரியும். அவை அல்லாஹ்வின் நாட்டமின்றி தனக்கு கிடைத்திருக்காது என்பதும் தெரியும். ஆகையால்தான் அற்பமானவன் எனக் கருதி இவ்வுலகில் அடக்கத்துடனும், பணிவாகவும் காரியமாற்றுவான். தற்பெருமையும், அகந்தையும் ‘ஷிர்க்’ இன் இரு அடையாளங்கள் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.
மேற்படி பணிவும் அடக்கமுமே ரஸூலுல்லாஹ்வை தனது மேனியில் தினந்தோறும் குப்பைக் கொட்டிய பெண்மணியை நோய் விசாரிக்கச் செல்லும்படி உந்தித் தள்ளியது.மக்காவில் ரஸூலுல்லாஹ் நேசித்த மனிதர்களில் அபூஜஹ்லும் ஒருவர். அவரை இஸ்லாத்திற்கு தந்துதவும்படி துஆ கேட்கிறார்கள். அபூஜஹ்ல் பத்ர் யுத்தத்தில் கொலையுண்ட போது ரஸூலுல்லாஹ் வருத்தப்படவும் செய்தார்கள்.
அபூதாலிபின் மரணத் தருவாயில் அவரை நரகத்திலிருந்து காப்பாற்ற எடுத்த கடினமுயற்சி எத்தகையது?!அப்போதைய உலகின் விசாலமானதொரு பகுதியை ஆட்சி செய்த உமர் (ரலி) அவர்கள் குத்பா மேடையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, பெண்களின் மஹர் தொகை தொடர்பான அவர்களது கருத்தில் பிழையிருப்பதை அங்கே அமர்ந்திருந்த பெண் சுட்டிக்காட்டிய வேளை, “அல்லாஹ்வின் அடிமையாகிய உமர் தவறு செய்து விட்டார்” என ஒப்புக் கொள்ளத் தூண்டியது மேற்படி அடக்கமும் பணிவுமே.
இந்த அகீதா ஒருவனை நன்மையின்பால் ஈர்க்கப்பட்டவனாகவும் தலை நிமிர்ந்து நடக்கக் கூடியவனாகவும் ஆக்குகிறது. ஏனெனில் தனது உள்ளத்தை தூய்மைப்படுத்தி, ஆத்ம சுத்தியுடன் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் பூரணமாக சரணடைவதிலேயே தனது இம்மை மறுமை வெற்றி தங்கியுள்ளது என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் தன்னால் முடியுமான அளவு நன்மைகள் செய்து அல்லாஹ்வை நெருங்க முயற்சிக்கிறான். இந்த அகீதா அவனை எந்த ஒரு மனிதனின் முன்னிலையிலும் தலைசாய்க்கவோ அல்லது சிரம் பணியவோ விடாது. ஏனெனில் அப்படிச் செய்வதன் மூலம் அவர்களால் அவனுக்கு எந்த நன்மையோ அல்லது தீமையோ ஏற்படுத்த முடியாது; அவனுக்கு வெற்றியையோ அல்லது தோல்வியையோ அளிக்க முடியாது. ரஸூலுல்லாஹ்வின் தூதுவர் ருபியா பின் ஆமிர் (ரலி) அப்போதைய வல்லரசான பாரசீக ராஜ்யத்தின் மேலதிகாரியான ருஷ்துமிடம் சென்ற போது, நிமிர்ந்து நின்று ஆணித்தரமாக தஃவாவை எத்திவைப்பதற்கு இந்த அகீதாவே தூண்டியது.
பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்பட்ட பின், அதன் சாவியை கொடுப்பதற்காக உமர் (ரலி) அவர்களை கிறிஸ்தவ பாதிரிமார் எதிர்பார்த்திருந்தனர்; பட்டாளம் சூழ கலீஃஃபா வந்திறங்குவார் என்பதே பாதிரிமார்களின் எதிர்பார்ப்பு. ஆனால் கலீஃபா தனது வேலையாளை வாகனத்தில் அமர்த்தி அதன் மூக்கணத்தை கையில் பிடித்தவராக வருவதைக் கண்ட பாதிரிகளுக்கு திக்பிரமை ஏற்பட்டது. பாதிரிகளுக்கு தனது எளிமையையும், பணிவையும் பிரச்சாரம் செய்வதற்காக கலீஃபா அப்படிச் செய்யவில்லை.மாறாக தாம் போகவேண்டிய இடத்தை அடையும் வரையில் சுழற்சி முறையில் ஒருவர் மாறி ஒருவர் சவாரி செய்வதுதான் ஏற்பாடு. சுழற்சியின் கடைசிக் கட்டமாக வேலையாள் சவாரி செய்யும் சந்தர்ப்பம் வந்தது. இந்தப் பணிவையும், தன்னடக்கத்தையும் அகீதாவின்றி வேறு எது உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்திறுக்க முடியும்? சர்வ வல்லமை கொண்ட ஆட்சியாளனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் தான் ஓர் அற்பப் படைப்பே என உமர் (ரலி) அவர்கள் விளங்கி வைத்திருந்தமையே இதற்குக் காரணம்.
மதீனாவுக்கான ஹிஜ்ரத் எந்த நேரமும் நடை பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் அதற்குப் பொருத்தமான ஒட்டகைகளை தயார் செய்து, அதற்காகவே வீட்டு வாசலில் காத்திருந்து, ரஸூலுல்லாஹ் அழைத்ததும் உடனே வெளியேறி, ரஸூலுல்லாஹ்வின் உடலில் ஒரு சிறு முள்கூட தைக்காமல் பாதுகாப்பாக மதீனா கொண்டுபோய்ச் சேர்க்கத் தேவையான தைரியத்தையும், பொறுப்புணர்வையும் இந்த அகீதாவே அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு கொடுத்தது.
தனது அன்புக்குரிய சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களை வெட்டிக் கொலை செய்து, நெஞ்சைப் பிளந்து ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவை மன்னிப்பதற்கும், மஸ்ஜிதில் சிறுநீர் கழித்த நாட்டுப்புற அரபியை கனிவான வார்த்தைகள் கொண்டு நேர்வழிபடுத்துவதற்கும், ஹுதைபியா உடன்படிக்கையின்போது இஸ்லாத்தின் எதிர்கால நன்மை கருதி தூரநோக்குடன் நிராகரிப்பாளர்களுக்கு பல விட்டுக் கொடுப்புகளை செய்வதற்கும் தேவையான மனோ வலிமையையும் இந்த அகீதாவே ரஸூலுல்லாஹ்வுக்கு கொடுத்தது.
அகீதா ஒரு மனிதனுள் ஏற்படுத்தும் நடத்தை மாற்றங்களில் ‘அல்இஹ்ஸான்’ என்ற பக்குவநிலை பிரதானமானது. அல்இஹ்ஸான் என்பது அல்லாஹ்வைக் காண்பது போல் வணங்குதல். அவ்வாறு முடியாத போது அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வோடு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இப்பிரபஞ்சத்தில் அவனால் பார்க்க முடியாத இடமோ அல்லது அவனது ஆட்சிக்கு வெளியுள்ள பகுதி என்ற இடம் எதுவும் கிடையாது. இத்தகைய கட்டுப்பாடுகளும், பலவீனங்களும் மனிதர்களுக்குரியவை. இந்த தன்னம்பிக்கை ஒருவனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்ததின் பிரதிபலிப்பு எப்படி அமையுமெனில், அல்லாஹ்வின் பார்வையிலிருந்து தான் ஒருபோதும் தப்பிவிட முடியாதென மனிதன் உணர்கிறான். தான் கடும் இருளில் இருந்தாலும், காற்றுப் புக முடியாத பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்தாலும், கருங்கல் பாறையினாலான இருண்ட குகைக்குள் ஒளிந்திருந்தாலும், கடலுக்கு அடியில் சென்றிருந்தாலும், மனிதர்கள் நுழைய முடியாத அளவு விஷஜந்துக்கள் நிறைந்த வனாந்தரத்தில் இருந்தாலும் கூட, தன்னை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்திலேயே காலம் கழியும்.
இத்தகைய ஒருவரிடத்தில் உங்களுடைய செல்வப் பெட்டகத்தின் சாவியை ஒப்படைக்கலாம். உங்களது தொழில் நிறுவனத்தின் பணக்காப்பாளராக அவரை நியமிக்கலாம். மோசடிகளோ, வாக்குறுதி மீறலோ நடைபெறலாம் என நீங்கள் அஞ்சாது பெறும் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பொதுச்சொத்துக்களைப் பராமரிப்பதற்கு அச்சமின்றி நியமிக்கலாம். நீங்கள் அவருக்கு நியமித்த சம்பளத்துக்கு மேலால் எதனையும் அவர் தொட்டுப் பார்க்க மாட்டார்; நீங்கள் விதித்த பொறுப்புகளை உங்களின் மேற்பார்வை இல்லாமலே செய்து முடிப்பார்.
இத்தகைய ஒருவர் கடும் உஷ்ண காலத்தில் நோன்பு வைத்திருப்பார். சிரமப்பட்டு வேலை செய்வார். அவருக்கு களைப்பு ஏற்படும்; குளிர்பானமும் அருகிலிருக்கும். சுற்றுப்புறத்தில் எந்தவொரு மனிதனும் இருக்க மாட்டார். இருப்பினும் அவர் அதனை தீண்டவும் மாட்டார். ஈனத்தனமாக பாவங்களில் ஈடுபட அவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மனிதர்களை ஏமாற்றுவதற்கும், பலவீனர்களின் சொத்துகளை சூறையாடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் மோசடி செய்வதற்கும், மனிதர்களுக்கிடையில் பாரபட்சமாக நடந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்; கோள்மூட்டுவதற்கும், மனிதர்களைப் பிரித்து வைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் இவை ஒன்றிலும் அவர் பங்கேற்க மாட்டார். ஏனெனில், தன்னை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவரைத் தடுத்துக் கொண்டிருக்கும்.
அகீதா ஒரு மனிதனில் ஏற்படுத்தும் இத்தகைய புரட்சிகர நடத்தை மாற்றத்தினையே ‘அஹ்லாக்’ என்கிறோம். அஹ்லாக் என்பது அகீதாவின் செயல் ரீதீயான வெளிப்பாடாகும். அல்லாஹுத்தஆலாவை தனது எஜமானனாக ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு தனிமனது வாழ்விலும் அஹ்லாக் ரீதியான பல அடிப்படை மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அப்படி மாற்றம் ஏற்படாவிட்டால் அவனது அகீதாவில் கோளாறு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய அகீதா என்பது ஒரு வகையில் ஒரு பண்பாட்டுப் புரட்சிதான்.
இஸ்லாமிய அகீதா என்பது ஒரு வகையில் ஒரு பண்பாட்டுப் புரட்சிதான். அப்படி இருந்திராவிட்டால் தமது சொந்தப் பாலகர்களை உயிருடன் புதைத்து கல்லையும் பிசாசையும் வணங்கி அறியாமையின் அடித்தட்டில் மூழ்கியிருந்த அற்ப மனிதர்கள் உலகின் வழிகாட்டிகளாக மாறியிருக்கவே முடியாது.
அஹ்லாக் என்பது அதிசக்திவாய்ந்த ஆயுதம் என குர்ஆன் குறிப்பிடுகிறது. ரசூலுல்லாஹ் அதி உன்னத அஹ்லாக்குடைய மனிதரென குர்ஆன் வர்ணிக்கிறது. ரசூலுல்லாஹ் தனது பணியின் நோக்கம் பற்றிக் குறிப்பிடும் போது ” நான் சங்கைமிக்க அஹ்லாக்கை பூர்த்தி செய்வதற்காகவே அனுப்பப்பட்டேன்” என்றார்கள். ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ரசூலுல்லாஹ்வின் பண்புகள் எப்படி இருந்தன எனக் கேட்டதற்கு, “அன்னாரது அஹ்லாக் குர்ஆனாகவே இருந்தது” என மொழிந்தார்கள்.
”இந்தக் (குர்ஆனைக்) கொண்டு உண்மையான ஜிஹாதை மேற்கொள்ளுங்கள்...” என அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் என்பது துப்பாக்கியோ அணுகுண்டோ அல்ல. அப்படியெனில் குர்ஆனைக் கொண்டு எப்படி ஜிஹாத் மேற்க்கொள்ள முடியும்? இந்த அஹ்லாக்கே அந்த ஆயுதம்! அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா குறிப்பிட்டதும் இதே அயூதத்தைதான். ரசூலுல்லாஹ்வின் இருபத்து மூன்று வருடகால அயராத முயற்சியின் பலனாக ஏற்பட்ட சமூக மாற்றம் அஹ்லாக் என்ற ஆயுதம் மூலமே உருவானது.
இன்று இஸ்லாமிய சமூக அமைப்பொன்றை கட்டியெழுப்புவதற்கும் சமூகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குமாக பல்வேறு மட்டங்களில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் பணியாற்றுவது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம். இத்தகைய அமைப்புக்களின் காத்திரமான பணிகள் நிச்சயம் நல்ல மாற்றங்களையும் விருத்திகளையும் சமூகத்தில் ஏற்படுத்தும். ஒவ்வொரு ஊழியரிடத்தும் சிறந்த அஹ்லாக் இருப்பது பிராதானமாகும்.
ரசூலுல்லாஹ் எவ்வாறு சிறந்த பண்பாடுகள் மிக்க மனிதராகத் திகழ்ந்தார்? இதனைக் கண்டுபிடிப்பதற்காக மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை. இதற்கான விளக்கம் மிக எளிதானது. குர்ஆனிய போதனைகளை அல்லாஹ்வை திருப்திபடுத்தும் நோக்கில் எடுத்து நடந்தார்கள். அவ்வளவுதான்! அதனை அவதானித்த மக்கள், இதைவிடச் சிறந்த வாழ்க்கை முறை எங்கே இருக்க முடியும் எனக் கருதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும்போது ஒரு தாஇ இவ்விரண்டுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவது முக்கியம். சிலர் சமூகத்தில் சீரான அகீதாவை ஸ்தாபிப்பதற்க்கு மாத்திரம் கூடுதல் அழுத்தம் கொடுகின்றனர். வேறு சிலரோ ஒருவனது அடிப்படை அகீதா என்னவானாலும் பரவாயில்லை என்றாற்போல் அஹ்லாக் அம்சங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். இவ்விரண்டு அணுகுமுறைகளும் ரசூலுல்லாஹ்வின் வழிக்கு புறம்பானவை. ரசூலுல்லாஹ்விடம் எவர் அகீதாவை கற்றாரோ அந்த மனிதரது நடைமுறை வாழ்க்கையில் அது செல்வாக்கு செலுத்தியது; அவரது அஹ்லாக்கை அது செம்மைப்படுத்தியது. அவரது அகீதா வெறும் நம்பிக்கையாக மாத்திரம் நின்று விடவில்லை.
இஸ்லாமிய தஃவா இரு பகுதிகளை தன்னுள் அடக்கியுள்ளது. ஒன்று நன்மையான காரியங்களை மக்கள் மத்தியில் ஏவுதல். இதனை அல்அம்ர் பில் மஃரூஃப் என்கிறோம். நன்மையை ஏவுவதன் மூலம் தீமை தானாக விலகிவிடும் என்ற வாதம் குர்ஆனிய போதனைக்குப் புறம்பானது. ரசூலுல்லாஹ் நன்மையை ஏவுவதற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ, அதேயளவு முக்கியத்துவம் தீமையின் ஊற்றுக்கண்களை அடைப்பதற்கும் கொடுத்தார்கள். தஃவாவின் அடுத்த பகுதி தீமையை தடுத்தல் என்பதாகும். இதனை அன்னகி அனில் முன்கர் என்கிறோம். இஸ்லாம் எதிர்பார்க்கும் நன்மைகள் சமூகத்தில் விளைய வேண்டுமென்றால் ஷைத்தானும் அவனது சாகாக்களும் புரையோடியுள்ள அனாச்சாரங்கள் கிள்ளி எறியப்பட வேண்டும்.
ஓர் ஆரோக்கியமான இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்க்கு இந்தச் சமநிலையான அணுகுமுறை முக்கியமானது. இஸ்லாமிய தஃவாவின் குறிக்கோள் சமூகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே; சீர்குலைவுகளை ஏற்படுத்துவதல்ல. ரசூலுல்லாஹ் ஒரு சீர்திருத்தவாதியாகவே அனுப்பப்பட்டார்கள். நன்மாராயம் கூறுபவராகவும் நரக வேதனையிலிருந்து பாதுகாப்பதற்கான எச்சரிக்கையை விடுப்பவர்களாகவுமே அனுப்பப்பட்டார்கள். மக்கள் மீது இரக்கம் காட்டி அவர்கள் மேல் அளவிலா பிரியத்தோடு அவர்களை அரவணைப்பவர்களாகவே அனுப்பப்பட்டார்கள். குர்ஆன் கீழ்வருமாறு வர்ணிக்கிறது:
"உங்களிலிருந்தே ஒரு ரசூல் உங்களிடம் திண்ணமாக வந்துவிட்டார். உங்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்துவது அவருக்கு தாங்க முடியாத வேதனையைக் கொடுக்கிறது. உங்களது நலனில் அதிக அக்கறை கொண்டவராகவும் முஃமின்கள் மீது அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார்.” (அத்தெளபா: 128) ஒவ்வொரு மனிதனும் இஸ்லாத்தில் நுழைந்து நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என ரசூலுல்லாஹ் பேரார்வம் கொண்டவராக காணப்பட்டார்கள். அதற்கு
இசைவான சூழ்நிலையையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தினார்கள். மக்கள் அன்னாருடன் சேர்ந்து இருப்பதற்கு அதிக ஆர்வம் காட்டினார்கள். மன நிம்மதி தேடியும் தமது பிரச்சினைகளை முறையிட்டு ஆறுதல் பெறுவதற்கு அல்லது தீர்வு, ஆலோசனை பெறுவதற்க்குமாக ரசூலுல்லாஹ்வை நோக்கி வந்தனர். அவர்கள் கடுகடுப்பானவர்களாகவும் மக்களை விமர்சித்துத் தள்ளுபவராகவும் அவர்கள் மீது சீறிப் பாய்பவராகவும் இருந்திருந்தால், எமக்கு அபூபக்கரின் இறைபக்தியும், உமரின் நிர்வாக ஒழுங்கும், உஸ்மானின் தாராள மனமும், அலியின் நீதி நெறியும் கிடைத்திருக்காது. மேலும், முழு மனித வரலாற்றிலேயே ஜொலித்த புனிதமிக்க மனிதர்களை கண்டிருக்கவும் மாட்டோம். ரசூலுல்லாஹ்வை தனிமையில் விட்டுவிட்டு அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள். அல்லாஹ் கூறுகிறான்: ”அல்லாஹ்வின் பேரருள் காரணமாகவே அவர்களிடம் நீர் மிருதுவாக நடந்து கொண்டீர். நீர் கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், உம் சூழலை விட்டும் அவர்கள் பிரிந்தே போயிருப்பார்கள். ” (ஆலு இம்ரான்: 159)
அநேகமாக எல்லா தஃவா அமைப்புகளினதும் சீர்திருத்தப் பணிகள் அல்லது அத்தகைய பெரும்பாலான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே இருக்கின்றன என்ற அடிப்படை உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, சமூகத்தில் ஓரளவேனும் நிலவும் ஒழுங்கமைப்பை சீர்குலைத்து, சிறிய பிரச்சினைகளை ஊதிப் பிளவுபடுத்தும் முயற்சி நபி வழிக்குப் புறம்பானது. எனவே, தஃவா சீர்திருத்தத்துக்குப் பதிலாக சீரழிவை ஏற்படுத்துமானால் நிச்சயமாக எமது அழைப்பு முறையில் கோளாறு இருக்கிறது.
இஸ்லாமிய அமைப்புக்கள் வளர்த்தெடுக்கும் தஃவா ஊழியர்கள் உறுதியான அகீதாவைக் கொண்டிருப்பது போன்று சிறப்பான அஹ்லாக்குடையோராகவும் வளர்க்கப்பட வேண்டும். ஸஹாபிகளும் மற்றும் முன் சென்ற நல்லடியார்களும் இப்படியான மனிதர்களாகவே திகழ்ந்தனர். சீரான நீதிநெறிமிக்க இஸலாமிய சமூக அமைப்பை இவர்களாலேயே கட்டியெழுப்ப முடியும். இதற்கு மாற்றமாக கடின சித்தம் கொண்டு மக்கள் மீது துவேசத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து குழப்பத்தையும் பிளவையும் தூண்டிவிடும். ஊழியர்களை உருவாக்குவது ஆபத்தானது. ஏனெனில், இத்தகையோரது பிரசாரப் பணிகளால் கவரப்பட்டு இணைந்து கொள்ளும் மனிதர்களிடையேயும் இத்தகைய நடத்தைகள் தாக்கம் செலுத்தும். இவ்வழியில் உருவாகும் சந்ததி கலவர உணர்வும் பிடிவாதமும் சகிப்புத்தன்மையற்றதுமான சந்ததியாகவே அமையும். இத்தகையதொரு சந்ததியை ” முன்னுதாரண இஸ்லாமிய சந்ததி “ என எடுத்துக் காட்டமுடியாது. ஏனெனில், இஸ்லாத்தின் மூலம் அமைதியை நாடும் மக்கள் விரண்டோடுவார்கள். நபியவர்கள் நவின்றார்கள்: “ இலகுபடுத்துங்கள், கடினமாக்காதீர்கள். நன்மாராயம் கூறுங்கள், விரண்டோடச் செய்யாதீர்கள்...”
நன்றி : ஆஸிம் அலவி அல்ஹஸனாத் அக்டோபர், நவம்பர் 2009
Saturday, November 7, 2009
இறுதி மூச்சு வரை இதே பணி தான்
உண்மையான,என்றும் மாறாத,நிலையான,சரியான விழுமங்களுக்கு பெயர் தான் சத்தியம். உலக மக்கள் ஏற்றுக் கொள்வதால் யாதொன்றும் சத்தியம் ஆவதில்லை.”சுயமாக” இருப்பது தான் சத்தியம். இதனை தெளிவாக நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.
ஒட்டு மொத்த மக்களும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் முற்றாக ஒதுக்கி தள்ளினாலும் சத்தியம் அசத்தியம் ஆகி விடாது. அப்போதும் அது சத்தியமாகதான் இருக்கும். உலக மக்கள் ஏற்று கொண்டால் தான் சத்தியமாக நீடிக்கும் என்கிற கட்டாயத்திற்கு அப்பாற்பட்டது தான் சத்தியம்.
உலகம் சத்தியத்தை ஏற்கின்றதா இல்லையா என்பது ஒரு பொருட்டே கிடையாது. உலகம் ஏற்று கொள்ள மறுப்பதால் சத்தியம் தோற்று போவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி அசத்தியத்தை ஏற்றுக் கொண்ட உலகம் தான் தோற்று போனது.
துன்பங்களும் துயரங்களும் சத்தியத்திற்கு வருவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மீது தான் அவை மழையாய் பொழியும். நன்கு ஆராய்ந்து எல்லாக் கோணங்களிலும் சீர்தூக்கிப் பார்த்து முழுமையான மனதிருப்தியுடன் சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள், சத்தியமே மேலோங்க வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் ஓயாமல் ஒழியாமல் உழைப்பவர்கள்,சத்தியமே மேலோங்க வேண்டும் என்பதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் மீது துன்பங்களும் துயரங்களும் புயலாய் வீசலாம். ஆனால் அவர்களை தோற்றுப் போனவர்களாகச் சொல்ல முடியாது.
இறைத்தூதர்களில் சிலர் வாழ்நாள் முழுவதையும் சத்திய அழைப்பில் செலவிட்ட பிறகும் அவர்களை பின்பற்றி நடக்க எவருமே முன் வரவில்லை என்கிற வரலாற்று குறிப்பை நபிமொழிகளில் வாசிக்க முடிகின்றது. அப்படியானால் அந்த இறைதூதர்களை தோற்றுப் போனவர்கள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக கிடையாது. அவர்களை ஏற்று கொள்ள மறுத்த அசத்தியவாதிகளைத் தங்களின் தலைவர்களாக ஏற்று கொண்ட சமூகத்தினர் தான் தோற்றுப் போனவர்கள்...!
நம்முடைய கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமக்கு முன் இருக்கின்ற பணி ஒன்றே ஒன்றுதான். இருள்களை விரட்டியடிக்க வழி விளக்குகளை ஏற்றுவது தான்...! சாகின்ற வரை இதனை செய்து கொண்டிருப்போம்...!
வழிகெட்டுப் போனவர்கள்,வழிகெடுப்பவர்களின் பட்டியலில் நம்முடைய பெயர் இடம் பெற்று விடக்கூடாது என்பது தான் நமக்கு இருக்கின்ற ஒற்றை கவலை...! இதற்காக இறைவனிடம் பாதுகாவலைத் தேடிக் கொண்டே இருப்போம்...!
அசத்திய இருட்டை விரட்டியடிக்கின்ற மிக பெரும் பணியில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்தியிருக்கின்றான். இந்த மாபெரும் பணிக்காக அல்லாஹ் நம்மை தேர்ந்தெடுத்திருக்கின்றான். இவ்வாறு நம் மீது மிகப்பெரும் அருளை பொழிந்திருக்கின்றான்.
அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்கு ஓரே வழிதான் இருக்கின்றது. இருளை விரட்டி அடிக்க விளக்குகளை ஏற்றிக் கொண்டே போவது...! அதே பணியில் உயிரைத் துறப்பது...!
மெளலானா மெளதூதி (ரஹ்) நன்றி : சமரசம்
Wednesday, September 30, 2009
தீனை நிலைநாட்டுதல் என்றால் என்ன ?
இறைத்தூதர்கள் அனைவருக்கும் தீனின் தன்மை கொண்ட சட்ட திட்டம்தான் அருளப்பட்டது. அதுவும் ஒரு முக்கியமான வழிகாட்டுதலுடனும் அறிவுறுத்தலுடனும் தான் அருளப்பட்டது.
அதாவது இறைத்தூதர்கள் அனைவருமே இந்த தீனை நிலைநாட்டுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டனர். இந்தக் கட்டளையுடன்தான் அவர்களுக்கு இந்த தீன் அருளப்பட்டது.
‘அக்கீமுத்தீன்’ என்பதற்கு ஷா வலியுல்லாஹ் அவர்கள் ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஷா ரஃபீயுத்தீன் சாகிபும் ஷா அப்துல் காதிர் அவர்களும் இதற்கு ‘நிலை நிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருங்கள்’ என மொழி பெயர்த்துள்ளனர்.
இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளும் பொருத்தமானவையே! இகாமத் என்பதற்கு நிலைநாட்டுதல் என்கிற பொருளும் உண்டு. நிலை நிறுத்தப்பட்ட நிலையில் வைத்திருத்தல் என்கிற பொருளும் உண்டு. இறைத்தூதர்கள் எல்லோருமே இந்த இரண்டு பணிகளையும் செய்வதற்காகவே பணிக்கப்பட்டிருந்தார்கள்.
எங்கு இந்த தீன் நிலைநாட்டப்படவில்லையோ அங்கு இந்த தீனை நிலைநாட்டுவது அவர்களின் முதன்மைக் கடமையாக இருந்தது. எங்கு இந்த தீன் நிலைநாட்டப்பட்டு விட்டதோ அங்கு நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தீனை வைத்திருப்பது அவர்களின் இரண்டாவது கடமையாக இருந்தது.
நிலைநிறுத்தப்பட்ட நிலையில் ஒன்றை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் எப்போது வரும்? அது ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும்போதுதானே..! இல்லையெனில் முதலில் அதனை நிலை நாட்ட வேண்டியிருக்கும். பிறகு அது நிலை நிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருப்பதற்காகத் தொடர்ந்து இடைவிடாமல் பாடுபடவேண்டியிருக்கும்.
இப்போது இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக தீனை நிலை நாட்டுதல் என்பது என்ன? இரண்டாவது எதனை நிலைநாட்டும்படியும் எதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்யும்படியும் நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கின்றதோ அந்த தீன் எது? எதனைக் குறிக்கின்றது? இந்த இரண்டையும் நல்ல முறையில் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
ஒரு திடப் பொருளை நிலை நாட்டுங்கள் என்றால் என்ன பொருள்? சாய்ந்து கிடப்பதை நேராக நிறுத்துங்கள் என்பது தானே! எடுத்துக்காட்டாக கீழே விழுந்து கிடக்கின்ற கோலையோ, தூணையோ நிமிர்த்தி நேராக நிலைநிறுத்தி வைத்தல்; அல்லது சிதறிக்கிடக்கின்ற உட்பகுதிகளை ஒன்று சேர்த்து மேலெழுப்புதல் என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, வெற்று மைதானத்தில் கட்டிடம் கட்டி எழுப்புதல். அதே போன்று உயிருள்ளவற்றை நிலை நாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அமர்ந்திருப்பவரை நிற்கச் செய்வதுதானே! எடுத்துக்காட்டாக, உட்கார்ந்திருக்கின்ற மனிதனையோ, விலங்கையோ நிற்கச் செய்தல்.
ஆனால் திடப் பொருளாகவோ, உயிருள்ள பொருளாகவோ இல்லாத, சிந்தனையை நிலைநாட்டுங்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்; மக்கள் மத்தியில் அந்தச் சிந்தனையைக் குறித்துப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பது தானா? இல்லை. சிந்தனையை அல்லது சித்தாந்தத்தை நிலைநாட்டுங்கள் என்றால் அந்தச் சிந்தனையைப் பரப்புங்கள்;மக்கள் மத்தியில் அதனைக் குறித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்யுங்கள் என்பதோடு பொருள் முடிந்துவிடுவதில்லை. அந்தச் சித்தாந்தத்தைக் கூடுதலோ குறைவோ இல்லாமல் முழுமையாகச் செயல்படுத்துங்கள்; அதனையே நடைமுறையாக்கி விடுங்கள்; அதனை அன்றாட வாழ்வில் நிறுவி விடுங்கள் என்று அதன் பொருள் விரிந்து கொண்டே போகும்.
எடுத்துக்காட்டாக, இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியை நிறுவினார் என்று சொல்லும்போது அதற்கு என்ன பொருள்? இன்னாரின் மகன் இன்னார் தம்முடைய ஆட்சியின் பக்கம் மக்களை அழைத்தார் என்பதா? இல்லை. அதற்கு மாறாக, அவர் தம்முடைய நாட்டு மக்களைத் தம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பவர்களாக ஆக்கிக் கொண்டார்; அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் தம்முடைய ஆணைகளுக்கு ஏற்ப செயல்படுகின்றவையாக மாற்றி அரசாங்கத்தின் மீது தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். தம்முடைய விருப்புவெருப்புகளின் அடிப்படையில் நாட்டின் அனைத்து விவகாரங்களும் அரங்கேறுகின்ற வகையில் எல்லாவற்றிலும் தம்முடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டார் என்றுதான் அதற்குப் பொருள்.
இதே போன்று இந்த நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்? அழகான கட்டடங்கள் கட்டப்பட்டுவிட்டன என்பதா? நீதியரசர்கள் பல்லாண்டுகள் நாட்டின் சட்ட திட்டங்களைப் படித்து மக்களுக்கு சட்ட நுணுக்கங்கள் குறித்து பாடம் நடத்துகின்றார்கள் என்பதா? நீதி, நியாயம் ஆகியவற்றின் முக்கித்துவத்தையும் சிறப்பையும் வலியுறுத்தி மணிக்கணக்காகப் பேசுகின்றார்கள்; மக்களும் அவர்களின் எழுச்சிமிகு உரைகளைக் கேட்டு மனம் லயித்து நீதியின் சிறப்பை உணர்ந்து கொண்டார்கள் என்றா பொருள்? நிச்சயமாக இல்லை.
அதற்கு மாறாக, அழகான, பரந்து விரிந்த கட்டடங்களும் இருக்கின்றன; நீதியை நிலைநாட்டுவதற்காக நீதியரசர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கின்றார்கள்; நீதம் செறிந்த திர்ப்புகளையும் குறித்த நேரத்தில் அளிக்கின்றார்கள்; மக்களுக்கு நீதி தாமதமின்றி, செலவின்றி கிடைத்துவிடுகின்றது என்பதுதான் ‘நாட்டில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன’ என்பதற்குப் பொருள் ஆகும்.
இதே போன்று தொழுகையை நிலைநாட்டுங்கள் என குர்ஆனில் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது எனில், அதற்குப் பொருள் தொழுகையின் முக்கியத்துவம், சிறப்பு போன்றவற்றைக் குறித்தும் தொழுகையினால் கிடைக்கின்ற நன்மைகள் பற்றியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதல்ல. தொழுகையை அழகாக, நேர்த்தியாக, குறைவில்லாமல் தாமும் நிறைவேற்றுவதுடன் நம்பிக்கையாளர்கள் எல்லோருமே ஐவேளைகளிலும் ஜும்ஆவிலும் குறித்த நேரத்தில் எவ்வித சிரமுமில்லாமல் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கும் வசதி செய்தல் வேண்டும்; பள்ளி வாசல்கள் பாங்குடன் இயங்க வேண்டும்; குறித்த நேரத்தில் தொழுகைக்காக அழைப்பும் கொடுக்கப்பட வேண்டும்; இமாம்களும், கதீப்களும் நியமிக்கப்பட்டு அவர்களும் தத்தமது பணிகளைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்; மக்களும் ஐவேளையும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது போகின்றவர்களாக மலர வேண்டும். இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தொழுகை நிலைநாட்டப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியும்.
இதுவரை சொன்ன விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் படித்த பிறகு ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என இறைத்தூதர்களுக்குத் தரப்பட்ட கட்டளையின் முழுவீச்சையும் முழுமையான பரிமாணங்களையும் ஒருவரால் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். அதில் யாதொரு சிரமமோ, குழப்பத்திற்கோ இடமிருக்காது.
இறைத்தூதர்களுக்கெல்லாம் ‘தீனை நிலைநாட்டுங்கள்’ என்கிற கட்டளை இடப்பட்டதெனில் அதற்கு என்ன பொருள்? இறைத்தூதர்கள் எல்லோருமே தீனின் கட்டளைகளுக்கேற்பச் செயல்பட வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.
இறைத்தூதர் அந்த தீனைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; தீனின் சிறப்பியல்புகளையும், முக்கிய கோட்பாடுகளையும் எந்தவிதச் சிரமத்திற்கும் இடமில்லாத வகையில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்; நேர்வழி என்றும், சரியான, உண்மையான வழிகாட்டுதல் என்றும் மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு தீனை நல்ல முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தானா? இல்லை.
மக்கள் அந்த தீனை ஏற்றுக்கொண்ட பிறகு இன்னும் ஒருபடி முன்னேறி தீன் முழுவதையும் தம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தி நிலைநாட்ட வேண்டும்; வாழ்வின் அனைத்து துறைகளும் தீனின் போதனைகளுக்கேற்ப இயங்குகின்ற அளவுக்கு முழுமையான மாற்றம் மலர வேண்டும்; அந்த மாற்றம் நீடித்து நிலைக்க வேண்டும்.
அந்த முழுமையான மாற்றம் நிலைபெறுவதற்காக முழுமையான கவனத்துடனும் அக்கறையுடனும் தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துணை பரிமாணங்களிலும் எவ்விதமான குறைவும் இல்லாமல் கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே தீன் நிலைநாட்டப்பட்டதாகச் சொல்ல முடியும்.
அழைப்புப் பணி, பிரச்சாரப் பணி போன்றவற்றுடன்தான் இந்த மிகப்பெரும் பணி தொடங்கும் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.தொடக்கத்தில் இந்த இரண்டு பணிகளும் இன்றியமையாதவை என்பதில் சந்தேகமில்லை. இந்த இரண்டை மேற்கொள்ளாமல் அடுத்தக்கட்ட பணிகளை ஏறெடுத்தும் பார்க்க முடியாது என்பதும் உணமையே. ஆனால் பிரச்சாரமும் அழைப்புப் பணியும்தான் எல்லாமே என்பதல்ல. பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும்தான் முழுமுதல் நோக்கம் என்பதல்ல.
தீனை நிலைநாட்டுங்கள் என்கிற கட்டளையை அறிவார்ந்த முறையில் ஆய்ந்து பார்க்கின்ற எவரும் இதனை எளிதாக விளங்கிக் கொள்வார். பிரச்சாரம் செய்வதும், அழைப்பு விடுப்பதும் துணைக்கருவிகளே தவிர, முதன்மை இலக்குகள் அல்ல என்பதையும் தீனை நிலைநாட்டுவதும், அதனை நிலைநிறுத்தப்பட்ட நிலையிலேயே நீடித்திருக்கச் செய்வதும்தான் உண்மையான இலக்குகள் என்பதையும் புரிந்து கொள்வார்.
இந்த முதன்மை இலக்குகளை அடைவதற்குத் துணைபோகின்ற கருவிகள்தான் அழைப்புப் பணியும், பிரச்சாரப் பணியும் என்பதைப் புரிந்து கொள்வார். இறைத்தூதர்களின் தூதுத்துவப் பணியின் ஒற்றை இலக்கே அழைப்புப் பணியையும், பிரச்சாரப் பணியையும் திறம்பட மேற்கொள்வதுதான் என எவருமே சொல்லத் துணியமாட்டார்.
மெளலானா மெளதூதி (ரஹ்) தமிழில் : அஜீஸ்லுத்புல்லாஹ் நன்றி : சமரசம் செப் 16-31,2009
Wednesday, September 23, 2009
அஞ்சாமையே அழைப்பாளனின் உடைமை
தன்னந்தனியாக ஒருவர் எழுந்து நின்று, ‘நான் ஓரிறைக்கொள்கையை ஏற்றவனாக அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து முஸ்லிமாக இருக்கிறேன்’ எனப் பிரகடணம் செய்வது சாதாரண நிகழ்வன்று.
இது கட்டற்ற கொடுமைகளுக்கும் காட்டுவிலங்காண்டித்தனத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரித்து முகமன் கூறி வரவேற்பதைப் போன்றது.
எனவே ஒரு சத்திய அழைப்பாளன் அல்லாஹ்வின் பால் அழைக்கிறவன் என்பது மட்டுமன்று, உன்னத பண்புகளைக்கொண்ட உத்தமனாக விளங்குபவன் என்பது மட்டுமன்று, கடும் பகைவர்களுக்கு இடையிலும், கடுமையான சூழலிலும் தனி ஒருவனாக நின்று தான் ஒரு முஸ்லிம் என்று அறிவிப்பதில் அச்சமோ, தயக்கமோ, தடுமற்றமோ கொண்டவனாக இருக்க்க் கூடாது. துணிச்சலாக, வெளிப்படையாக, ‘ஆம்; நான் முஸ்லிம்தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’ என்று பறைசாற்றுபவனாக இருக்க வேண்டும்.
வேறு சொற்களில் கூற வேண்டுமெனில் சத்திய அழைப்பாளன் ஒருவன் துணிவும், அச்சமின்மையும், வீரமும், தீரமும் கொண்டவனாக திகழ வேண்டும்.இறைவனின்பால் அழைப்புவிடுக்கும் தூய பணியை சிறிய தீண்டலிலேயே நீர்க்குமிழி போல் அமுங்கிவிடும் ஒரு கோழையால் நிறைவேற்ற இயலாது. இப்படிப்பட்டவனால் எப்போதும் அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுக்க முடியாது.
கடுமையான பகைமையும், பெரும் எதிர்ப்புகளும், பேராபத்துகளும் மிகுந்த பயங்கரமான சூழலில் இஸ்லாத்தின் கொடியை ஏந்தி, விளைவுகளைப்பற்றி அஞ்சாமல் செயல்படுகிறவரால் மட்டுமே இறைவனின் பால் அழைப்பு விடுக்க முடியும்.
பெருமானார் (ஸல்) அவர்கள் வீரமும், தீரமும் கொண்ட ஒரு முன்மாதிரி அழைப்பாளராய் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். மக்கா நகரில் தனி ஒருவராக நின்று வெளிப்படையாக இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள். சத்தியத்திற்கு சான்று பகரும் கடமையை நிறைவேற்றினார்கள்.
அண்ணலாரைக் கொன்றுவிட வேண்டும் எனத்துடிக்கும் இரத்த வெறி கொண்ட மக்களிடையே இந்த அழைப்பு விடுக்கப்பட்ட்து. அண்ணலாரையும் அவருடைய தோழர்களையும் தாங்கொண்ணாத் துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் இலக்காக்கினார்கள்.
அந்தக் கொடுமையாளர்களுக்கு இடையில்தான் ‘அல்லாஹ்வின்பால் வாருங்கள்’ என்ற அழைப்பு விடுக்கப்பட்ட்து.தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் தம் அழைப்பை விரிவுபடுத்திக் கொண்டே போனார்கள். பின்னர் மதீனா சென்ற பிறகு எத்தகைய நிலைமைகள் உருவாகின..! எத்தனை பயங்கரமான சூழல்..! கடும் தாக்குதல்கள்..! ஆயினும் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை.
ஹுனைன் போரின்போது முஸ்லிம் படைகள் பின்வாங்கிய நிலையில், தோல்வியைச் சந்திக்கிற நேரத்தில், பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் உறுதியுடன் இருந்தார்கள். களத்தின் முதல் பகுதியில் பகைவர்களின் அணிகளுக்கிடையில் புகுந்து போர் புரிந்த வண்ணம் முன்னேறுகிறார்கள். அதே சமயம் தாம் யார் என்பதையும் உரக்கச் சொல்கிறார்கள்.
‘அனன் நபிய்யு லாகஸிப் அனப்னு அப்துல் முத்தலிப்’
‘நான் இறைவனின் தூதர். இது பொய்யன்று. நான் அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்’ என்று உரைக்கிறார்கள்.
எப்படிப்பட்ட சூழல் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கடுமையான போர்க்களம். பகைவர்கள் தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணலாருக்கு அருகில் அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் இரண்டு மூன்று பேர்கள் தான் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ஆபத்தான சூழலிலும், ‘ஆம்; நான் இறைவனின் தூதன்தான்; நான் ஒரு நபிதான்’ எனப் பறைசாற்றுகிறார்கள். அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கின்ற ஒரு சத்திய அழைப்பாளன் இந்த அளவுக்கு வீரமும் துணிச்சலும் உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
- மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் ஒரு கட்டுரையிலிருந்து........
தமிழில் : மௌலவி ஜபருல்லாஹ் ரஹ்மானி.
நன்றி : சமரசம் செப்டம்பர் 16-31, 2009
Monday, September 14, 2009
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிராதயமல்ல
தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அள்ளாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்.
நோன்பின் பெறுமதி தக்வாவில் தங்கியிருக்கிறது.
நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தஹஜ்ஜீத்தில் வீங்குமே
இடக்கை அறியாமல் - சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்.
இளைஞர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்.
இந்த நன் நாளில்
கேரம்போர்டு விட்டு கையை எடுங்கள்.
டி.வியிலிருந்துகண்ணை கழட்டுங்கள்.
அந்த டி.வி.டியை இன்றேனும் தூக்கில் போடுங்கள்.
காதுகளுக்கு கீதம்விஷம் என்று சொல்லுங்கள்.
எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும்
இளைஞர்களேஅந்த இரவு நேர மரத்திலிருப்பது தெம்பிலி அல்ல
உங்கள் ஒழுக்கங்கள்- வெட்டாதீர்கள்
அந்த மாமரத்திலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்- ஏன் உடைக்கிறீர்கள்.
வெடிகளை அல்ல- அதை கொளுத்த வேண்டும்
என்ற மடமையை கொளுத்துங்கள்.
நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்.
அந்த இரவுகள் தூய்மையாகவே
இருந்துவிட்டு போகட்டும்.
நாளை உங்கள் இருதயம் வளர்ந்திருந்தால்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோற்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்.
தோழர்களே....
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல.
இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்.
இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்.
இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும் மயானத்தில் அல்ல
காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.
நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்.
நோன்பில்லாத ஹிட்லர்
மண்ணிடம் தோற்றான்.
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்.
நோன்பு மரம்,
இந்த மரம்
மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை
தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு
பெட்ரோல் ஊற்றும்.
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல
இலங்கை ஜமிய்யாவுக்கு மனமார்ந்த நன்றி
Sunday, August 30, 2009
நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தன்னைப் பின்பற்றுவோர் படும் துன்பத்தை தடுக்க கூட முடியாத பலவீனமான நிலையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்க தயங்கிக் கொண்டிருந்த கிறித்தவராயிருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களை நோக்கி சொன்னார்கள் “ஓ! அதீ பின் ஹாத்திமே! ஏன் இஸ்லாத்தை ஏற்கத் தயங்குகிறீர்கள்? இந்த சிறு கூட்டம் உலகில் என்ன ஒரு மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? அறுதியிட்டு சொல்கிறேன் ஒரு காலம் வரும், ஸன்ஆ-விலிருந்து ஹலரமவத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாய் செல்வாள். தங்கத்தையும், வெள்ளியையும் தானம் செய்ய புறப்படுவீர்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்வோர் யாரும் இருக்க மாட்டார்கள். சீசர், கைசரின் சாம்ராஜ்யங்கள் எல்லாம் என்னை பிற்பற்றுவோரை வந்தடையும்”. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் பின்னாளில் சொல்கிறார்கள் “என் வாழ்நாளிலேயே இவை நிறைவேறியதை கண்டுக் கொண்டேன்.
அது போல் ரசூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அவர்களை கொலை செய்ய துரத்தி வந்த சுரகா இன்னு ஜுஷமை நோக்கி “சுரகாவே! ஒரு காலத்தில் ஈரான் மன்னரின் கைகளை அலங்கரித்த ஆபரணங்கள் உங்கள் கைகளை அலங்கரிக்கும்” என்று கூறினார்கள். இது இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் காலத்தில் ஈரான் வெற்றி கொள்ளப்பட்ட போது நிறைவேற்றிக் காட்டப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உஹது மலையடிவாரத்தில் இருந்த போது உஹது சற்றுக் குலுங்கியது. அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் “உஹதே! அமைதியாக இரு. உன்னில் ஒரு தூதர் இருக்கிறார். ஒரு வாய்மையாளர் இருக்கிறார். இரண்டு ஷஹீதுகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி பின்னாளில் உமரும், உஸ்மானும் ஷஹீதாக்கபடவிருப்பதை அப்போதே முன்னறிவிப்பு செய்தார்கள்.
தன் செல்ல மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் தன் குடும்பத்தில் முதலாவதாக தன்னை வந்து அடைவார்கள் என்று நாயகம் (ஸல்) சொன்னதற்கேற்ப ரசூல் (ஸல்) இறந்த ஆறு மாதங்களுக்குள் ஃபாத்திமா (ரலி) இவ்வுலகை விட்டு பிரிந்ததை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். அதுபோல் தன் பேரரான ஹஸன் (ரலி) அவர்களை நோக்கி இவர் இரு கூட்டத்தினருக்கிடையில் சமாதானம் செய்து வைப்பார் என்று சொன்னது நிறைவேறியதையும் வரலாற்றில் பார்க்கிறோம்.
மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி குறிப்பிடும் போது “ஒரு பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பாள்” என்று கூறினார்கள். இன்று எத்தனையோ ஆண்மக்களை பெற்ற போதும் பெண்ணை அண்டி வாழும் நிலையையும், பெண் தன் தாயை வேலைக்காரியை விட மோசமாக நடத்துவதையும் நிதர்சனமாக பார்க்கிறோம். இன்று அரசாங்கங்களே சிவப்பு விளக்கு பகுதிகளை அங்கீகரிக்கும் கொடுமையும் மது அருந்துவது நாகரீகமாக கருதப்படும் அவலத்தையும் பார்க்கிறோம். இதை தான் நாயகம் (ஸல்) அவர்கள் “விபச்சாரம் பெருகும். மது அருந்தும் பழக்கம் பரவலாகும்” என்று முன்னறிவிப்பு செய்தார்கள்.
நாம் இருக்க கூடிய இந்த அமீரக பகுதிக்கு பொருத்தமான ஒரு முன்னறிவிப்பையும் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னார்கள். “வறுமையின் காரணத்தால் வெறுங்காலுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரும் கட்டிடங்களைக் கட்டுவார்கள்”. இன்று உலகின் மிகப் பெரும் கட்டிடங்கள் எல்லாம் இங்கு கட்டப்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.
சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்வினால் புகழப்டுகின்ற இந்த சிறந்த சமுதாயம் இன்று இறை நிராகரிப்பாளர்களாலும், யூத நஸ்ரானிகளிடத்திலும் சிக்கி தவிக்கும் அவல நிலையை நாயகம் (ஸல்) அவர்கள் அன்றே முன்னறிவிப்பு செய்தார்கள். “ஒரு காலம் வரும். அப்போது பிராணி தன் இரையை தேடி பாய்வது போல் பிற சமுதாயங்கள் உங்கள் மீது பாயும்” என்று சொன்னபோது ஸஹாபாக்கள் கேட்டார்கள், யாரசூலுல்லாஹ் எண்ணிக்கையில் நாங்கள் குறைவாக இருப்போமோ? என்று வினவியபோது இல்லை நீங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பீர்கள். ஆனால் உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொல்லி விட்டு வஹ்ன் என்றால் மரணத்தை பற்றிய அச்சமும், உலகத்தை குறித்த ஆசையும் என்று சொன்னார்கள்”. இன்று அந்த வஹ்ன் இந்த உம்மத்திடம் இருப்பதற்கு சாட்சிகள் தாம் குஜராத் முதல் பாலஸ்தீன் வரை நடைபெறும் நிகழ்வுகள்.
“காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது” என்று மறுமையை பற்றி குறிப்பிட்டார்கள். “சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் மூன்றும் நிகழ்வதற்கு முன் ஈமான் கொள்ளுங்கள் ஏனென்றால் மூன்றும் நிறைவேறிவிட்ட பிறகு ஈமான் கொள்வது பலனளிக்காது”. என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பின்னாளில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருப்பதையும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
இப்படி கடந்த, இன்றைய, வருங்காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்திருக்கின்றன நமது முஸ்தபா நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு முன்னறிவிப்பை செய்தார்கள் “என் உம்மத்தில் ஒரு கூட்டம் மறுமை நாள் வரை இருக்கும். அவர்கள் நன்மை செய்யும்படி தூண்டுவார்கள். தீமை செய்வதிலிருந்து தடுப்பார்கள். இவர்கள் தாம் வெற்றியாளர்கள் என்று கூறினார்கள்”. அவ்வாறு நன்மையை ஏவி, தீமையை தடுக்க கூடிய வெற்றியாளர்களுள் ஒருவராக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும் ஆக்கி அருள்வானாக
ஆக்கம் : நெல்லிக்குப்பம் நர்கீஸ் அண்ணன் நன்றி : tamilislam.com
வெட்கம்
ஒரு மனிதனிடம் நாணம் இல்லையானால் அவன் தன் மனம் போன போக்கில் அல்லாஹ்வின் சட்டங்களை மறந்து எதையும் செய்யத் துணிந்து விடுவான். அத்தகைய முஃமின்களிடம் இருக்க வேண்டிய பண்பான வெட்கத்தை பற்றிய ஒரு சிறிய அலசலே இக்கட்டுரை.
மனிதன் தவறானவற்றை செய்திடும் போதும், தன் அறியாமையால் தவறிழைத்திடும் போதும், இப்படிபட்ட தவறை செய்து விட்டோமே என்று அச்சம் கொள்வதே நாணம் என்ற பண்பாகும். தன் குறைகளை எண்ணி நாணி அவற்றை நிறைகளாக்குபவனே உண்மை மனிதனாவான்.
வெட்க உணர்வின் சிறப்புகள்
விலங்குகளுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடுகளில் ஒன்று வெட்க உணர்வாகும். மனிதனுடைய சிறப்பு பண்பு வெட்கமாகும். ஒரு மனிதனிடம் இருக்கும் இறை நம்பிக்கை எவ்வளவு அழுத்தமானது என்பதையும், அவன் எந்த அளவுக்கு ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டவன் என்பதையும், எத்தகைய இங்கிதங்களை கொண்டவன் என்பதையும் எடுத்துக்காட்டும் கருவி அவனிடம் காணப்படும் வெட்க உணர்வாகும். ஈமானும், வெட்கமும் ஒரு மரத்தின் இரு கிளைகள் போன்றதாகும். ஈமானுள்ள ஒரு மனிதனிடம் வெட்கம் இல்லையாயின் அவன் முழுமையான ஈமான் கொண்டவன் அல்லன். ஒவ்வொரு மார்க்கத்துக்கும் அதற்கு உரிய ஒழுக்கம் இருக்கிறது. இஸ்லாத்தின் ஒழுக்கம் வெட்கமாகும்.
அபு சையித் அல் குத்ரி (ரலி)அறிவிக்கிறார்கள்:
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள், திரை போட்டு தம்மை மறைத்துக் கொண்டு வாழும் பெண்களை விட அதிக வெட்க உணர்வுடையவர்களாக இருந்தார்கள். இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதாவது விரும்பத் தகாததைக் கண்டால் அதன் ரேகை அவர் முகத்தில் படருவதை காணலாம் (புகாரி). ஒரு தீமையை கண்டால் அதைக்கண்டு நாணக் கூடியவர்களாய் இருந்தார்கள். நாணம் உள்ள மனிதன் எந்நிலையிலும் தீமையின் பக்கம்கூட செல்ல மாட்டான். தீமை செய்து விட்டால் கூட, தன் தவறை எண்ணி வெட்கப்படுவான். மக்களின் முன்னிலையிலும் இறைவன் முன்னிலையிலும் குற்றவாளியாக நிற்கிறோமே என அஞ்சுவான். அன்சாரிகளை சார்ந்த ஒரு மனிதர் தம் சகோதரர் அதிகம் வெட்கப்படுவதை கண்டித்து கொண்டிருக்கும் போது அந்த வழியில் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவரை கண்டிப்பதை விட்டு விடுங்கள். நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்கள். (புகாரி)
இவ்வாறு இஸ்லாமிய மார்க்கமானது நல்ல விஷயங்கள் மனிதனுள் பரவ வெட்கம் அவசியம் என்பதை உணர்த்துகிறது.
வெட்கமின்மையால் உண்டான சீர்கேடுகள்
இன்று நம்முடைய மக்களின் வெட்கம் இல்லாத தன்மையால் சமுதாயத்தில் அன்றாடம் நடந்து வரும் அவலங்களை கண்கூடாக கண்டு வருகிறோம்.
1. பெண்களில் சிலர் நாணத்தை இழந்து விட்டு (உங்கள் அழகை வெளிக்காட்டாதீர்கள் (அல்குர்ஆன்24:31) என்ற அல்லாஹ்வின் வாக்கை மீறி அரைகுறை ஆடைகளில் அலைகின்றனர். இதனால் இளைஞர்களை ராகிங், கற்பழிப்பு போன்ற தவறுகளை செய்யத் தூண்டி விடுகின்றனர் என்பதை மறுக்க முடியாது.
2. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும் (அல்குர்ஆன் 5:0). இன்றைய மனிதனிடம் நாணம் என்ற பண்பு இருக்குமானால் தன் உடைகள் கலைந்து இருப்பதைக் கூட அறிந்து கொள்ள இயலாத நிலையில் மதுவைக் குடித்துவிட்டு கடைவீதிகளிலும் தெருக்களிலும் படுத்து இருப்பார்களா?
3. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர். அது மானக்கேடானதாகும் மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்து செல்லும்) தீய வழியாகவும் இருக்கிறது (அல்குர்ஆன் 17:32) என குர்ஆன் எச்சரிக்கிறது. ஒரு பக்கம் அரசாங்கம் விபச்சார ஒழிப்பு பற்றி விளம்பரம் செய்தாலும், பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை அவசியம் என்று விபச்சாரத்தை ஊக்குவிப்பது, நம் நாட்டின் நாணமின்மை என்ற பண்பின் வளர்ச்சியை அல்லவா காட்டுகிறது என்பது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்?
4. கொலை, கொள்ளை இவற்றில் ஈடுபட்டு பின் மாட்டிக் கொண்டால் மக்கள் முன் கேவலமாகி விடுமே என்ற எண்ணம் இருப்பின் அவன் இவற்றில் எல்லாம் ஈடுபடுவானா? இப்படி வீட்டில் தெருவில,ஊரில், நாட்டில், உலகில் காணப்படும் பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணமாக அமைவது நாணத்தை இழந்து மக்கள் மனம்போன போக்கில் வாழ்வது தான். எனவே இறைவனின் அடியார்களே ஈமானின் ஓர் அம்சம் நாணம் (புகாரி) என்பதை மனதில் பதிந்து நாணமுள்ள முஃமின்களாக மாறி தவறுகளிலிருந்து திருந்தி மனம் போன போக்கில் வாழாமல் அல்லாஹ்வின் வேதத்தையும் தூதர் மொழிகளையும் பற்றிப் பிடித்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!
ஆக்கம் : ஃபெரோஸ் சகோதரி நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்