இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு என்னும் சொற்பிரயோகங்களை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கவும் படிக்கவும் நேருகின்றது.எந்தவொரு பொருளாக இருப்பினும் அதனை அணுகுவதற்கு ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் இருக்கின்றது. அவ்வகையில் விடுதலை குறித்த இஸ்லாமிய கண்ணோட்டம் என்னவென இக்கட்டுரை ஆராய்கின்றது.
விடுதலை என்றால் என்ன?'தளை'யேதுமற்ற 'கட்டுப்பாடுகள்' எதுவுமில்லாத நிலையே 'விடுதலை'யாகும். சிறையில் அடைபட்டுக் கிடப்போருக்கு விடுதலை வேண்டும் என்கிறோம். துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கவேண்டும்;;, விடுவிக்கப்படவேண்டும் என்கிறோம். கொத்தடிமைகளாக இருப்போரை 'விடுவிக்கிறோம்'.பரிபூரண சுதந்திரம் என்பதும் நிறைந்த விடுதலை என்பதும் மனித இயல்புக்கு மாற்றமான விஷயங்களாகும்.
'எல்லாவகையிலும்' விடுதலை பெற்றவனாக ஒரு மனிதனையும் நீங்கள் காண இயலாது.மனிதன் தனித்து வாழும் இயல்பினன் அல்லன். சமூகமாக வாழும் உயிரினமாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான சமூகம் என்றாலேயே ஒருசில கட்டு;ப்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கும்.சமூகம் என்னும் அடிப்படையில் எத்தகைய கட்டுப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்னும் போதனையை வழங்கும் இறைவனின் வழிகாட்டுதலே இஸ்லாம் ஆகும்.இவ்வடிப்படையில் 'அந்நியர் ஆதிக்கம்' என்னும் 'அடிமைத்தளை'யிலிருந்து அரசியல் விடுதலை பெறுவதை ;சுதந்திரம்' 'விடுதலை' என்றெல்லாம் கூறுகிறோம். அரசியல் விடுதலை என்னும் சொற்பிரயோகம் கூட சரியானதுதானா எனத் தெரியவில்லை. ஏனெனில் ஆட்சியதிகாரத்திலில் இருந்து 'அந்நியர்' அகலுகின்றனர். 'ஆதிக்கம்' அப்படியேதான் இருக்கின்றது.
எல்லொருக்குமான சமத்துவம் என்பதுதான் ஜனநாயகத்தின் உயிரோட்டம் என பொதுவாக சொல்லப்படுகின்றது. நல்ல கொள்கைதான்! நடைமுறையில் சாத்தியப்படுமா என்பதை பார்க்கலாம்.உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் என்னுடைய சகோதரர்கள் என்னும் உணர்வு உளப்பூர்வமாக நிறைந்திருந்தால்தான் இது நடைமுறையில் சாத்தியப்படும். இல்லையென்றால் வெறும் ஏட்டளவில் நின்று இளித்துக் கொண்டிருக்கும்.
ஆட்சி யாருடைய கரங்களில் உள்ளதோ அவர்கள் அதனை தமக்கு சாதகமாகத்தான் பயன்படுத்துவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். தம்முடைய சொந்த வாழ்க்கையின் வளத்திற்கும் தமது இனத்தின் முன்னேற்றத்திற்கும் ஜாதியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்ளூ கொள்கிறார்கள். அனைவருக்குமான பொதுவிதி இது. விதிவிலக்கு என்பதே கிடையாது. அப்பழுக்கற்ற மாமனிதர், கறைபடாத கரங்களைக் கொண்டவர், கர்மவீரர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட யாருக்குமே தகுதியில்லை. அங்ஙனம் வர்ணிக்கப்படுவோரை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினால் அவர்களுடைய நேர்மையும் பித்தளையாய் இளிக்கும்.
என்னுடைய ஜாதி, என் மக்கள் என சிந்திக்காத அமைச்சர் ஒருவர் கூட கிடையாது. மக்கள் பணத்தில் ஊழல் செய்து வளமடையாத அமைச்சர் ஒருவர் கூட கிடையாது என்பதே உண்மை.இந்தியா விடுதலை பெற்றபிறகு என்னவானது? என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். 'அந்நியரிடமிருந்து' ஆட்சி கைமாறியது. தென்னக மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்னும் குற்றச்சாட்டு வலுவாய் எழுந்தது. வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது என்னும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதோ, இப்போது மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் பற்றி 'இது ஏதோ மேற்குவங்க பட்ஜெட் போல இருக்கின்றது' எனக் கூறப்படுகின்றதா? இல்லையா?ஆக, ஆதிக்கம் என்பது யாரிடம் இருந்தாலும் அதனை அவர்கள் தமக்காகவும் தம்முடைய இனத்திற்காகவும் தம்முடைய ஜாதிக்காகவும் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். இதில் சந்தேகமே இல்லை.
சொந்த இனத்தின் நலனை காவு கொடுத்துவிட்டு தனது குடும்பத்தின் மேன்மைக்காக இயலாத நிலையிலும் அயராது உழைக்கும் காட்சிகளையும் நாம் கண்டுவருகிறோம்.ரோமானியத்தளபதியிடம் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமியப் படைகளின் தரப்பிலிருந்து 'ரபீஆ இப்னு ஆமிர்' என்னும் நபித்தோழர் சென்றார். படையெடுத்து வந்துள்ள முஸ்லிம்களைப் பார்த்தால் நாடு பிடிக்கும் நோக்கிலோ பொருளீட்டும் எண்ணத்திலோ வந்திருப்பதாகத் தெரியவில்லை. எந்நோக்கத்திற்காக வந்திருக்கிறார்கள் என்பது ரோமானிய படைத்தளபதியான ருஸ்துமுக்கு தெரியவில்லை.'எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?' என அவர் வினவினார்.தெளிவாக சொற்களி;ல் இஸ்லாமியர்கள் வந்த நோக்கத்தை ரபீஆ எடுத்துரைத்தார். வரலாறு அதனை பொன்னெழுத்துகளில் பதிவு செய்து வைத்துள்ளது.'மனிதர்களை மனிதர்களுடைய ஆதிக்கத்திலிருந்து மீட்டு ஓரிறைவனின் ஆதிக்கத்தின் கீழ்க் கொணர்வதற்காக வந்துள்ளோம்'.
ஆதிக்கம் என்பதே ஒருவகையான அடிமைத்தளை. அதிலிருநது மீள வேண்டுமானால் ஓரிறைவனை ஏற்றுக்கொண்டு அவன் ஒருவனுக்கு மட்டுமே கட்டுப்படவேண்டும். இதற்காகத்தான் இஸ்லாம் வந்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் இறைத்தூதர் அனுப்பப்பட்டார்.الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوبًا عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالإِنْجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَآئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالأَغْلاَلَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُواْ بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُواْ النُّورَ الَّذِيَ أُنزِلَ مَعَهُ أُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ'எழுதப்படிக்கத் தெரியாமல் அனுப்பப்பட்ட தூதரைப் பின்பற்றுகிறார்களோ தம்முடைய வேதங்களான தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.நன்மையைக் குறித்து அவர் ஏவுகிறார்ள தீமைகளை விட்டும் தடுக்கிறார்ள தூய்மையானவற்றை ஆகுமானதாக ஆக்குகிறார்ள கேடுகெட்டவற்றை அசுத்தத்தை கூடாதெனத் தடுக்கிறார்ள அவர்கள் மீது அழுத்திக்கிடக்கும் பளுவான சுமைகளையும் விலங்குகளையும் அகற்றுகிறார்.அவரை நம்பி ஏற்றுக்கொண்டோரும் அவரைக் கண்ணியப்படுத்தியோரும் அவருக்கு துணை நின்றோரும் அவரைப் பின்பற்றியோரும் அவரோடு அனுப்பப்பட்டுள்ள பேரொளியைப் பின்பற்றியோரும் வெற்றிபெற்ற மக்களாவர்.'(அல்குர்ஆன் 7:157)
இறைவனின் சட்டதிட்டங்களை விட்டுவிட்டு மதக்குருமார்களும் சமூகத்தலைவர்களும் தமது இஷ்டப்படி சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தனர். அவையே இங்கு 'தளைகள்' 'விலங்குகள்' எனக் குறிப்பிடப் படுகின்றன. அவை அனைத்தையும் இந்தத்தூதர் அகற்றிவிடுவார். அவற்றிலிருந்து அவர்களை விடுவிப்பார். ஒரேயோர் இறைவனின் ஆதிக்கத்தின் கீழாக அவர்களைக் கொண்டுவருவார்.படைத்த இறைவனின் ஆதிக்கத்தை விட்டுவிட்டு வேறு எந்த ஆதிக்கத்தின் கீழ் மனிதன் இருந்தாலும் அவன் 'சுதந்திரமானவனாகத்' திகழவே முடியாது. தளைகளாகவும் விலங்குகளாகவும் மாறி அந்த ஆதிக்கங்கள் அவனை வாட்டிக் கொண்டிருக்கும். நுகத்தடியாய் மாறி அவனுடைய கழுத்தில் சுமையாய் அழுத்திக் கொண்டிருக்கும்.பாரம் சுமக்கும் மாடுகள் உடல்வதைகளை அனுபவிப்பதோடு சிந்தனை வதைகளுக்கும் ஆளாகின்றன. சுமக்கவே தாம் பிறந்துள்ளோம் என எண்ணத் தலைப்படுகின்றன. அடிமைச்சமூகம் உடலளவில் அடிமைப்பட்டுக் கிடப்பதோடு சிந்தனை அளவிலும் அடிமைப்பட்டுக் கிடக்கும்.மோதித் தோற்றவர்களும் மிதிபட்டுக் கிடப்பவர்களும் 'எப்படி' யோசிக்கவேண்டும் என்பதையும் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்துவோரே தீர்மானிக்கிறார்கள்.
வரலாற்றின் பின்பக்க சாளரத்தைக் கொஞ்சம் திறந்து பார்த்துவிட்டு 'இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கு' என்னும் விஷயத்திற்கு வரவேண்டும். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கம் வரை முஸ்லிம் நாடுகள் அனைத்தையும் ஐரோப்பியா வென்றுகொண்டே சென்றது. பிரிட்டனும் பிரான்ஸும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள நாடுகள் அனைத்தையும் பங்குபோட்டுக் கொண்டன. எஞ்சியவற்றை பிற நாடுகள் பிரித்துக்கொண்டன. காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட மொராக்கோ, டுனிஸியா, எகிப்து, லிபியா, இந்தியா, துருக்கி, ஃபலஸ்தீன், அரேபிய வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள் என அனைத்து நாடுகளும் முஸ்லிம் நாடுகளே!
தொலைத்தவன்தானே தேடி அலைவான்? இதுதானே இயற்கை? அதுவும் உலகியல் அருட்கொடைகளிலேயே சிறந்த அருட்கொடையான ஆட்சியதிகாரத்தை இழந்தவர்கள் வெறுமனெ கைகளைக் கட்டிக்கொண்டா உட்கார்ந்திருப்பார்கள்? எகிப்து, இந்தியா, லிபியா, செசன்யா என அனைத்து நிலங்களிலும் முஸ்லிம்கள் வல்லாதிக்கத்தை எதிர்த்துப் போராடியதற்கு இதுதான் காரணம்.அமைதியையும் நிம்மதியையும் உலகிற்கே அறிமுகப்படுத்திய இஸ்லாமிய ஆட்சியை அவர்கள் தொலைத்துவிட்டதுதான் காரணம்.தேசியவாதத்தை இலக்கணமாக வைத்துக்கொண்டு 'முஸ்லிம்கள் அனைவரும் இயல்பாகவே விடுதலை வேட்கையைக் கொண்டவர்கள்' என்னும் தவறான முடிவிற்கு நாம் வந்துவிடக் கூடாது. அது வரலாற்றுச் சறுக்கலாக ஆகிவிடும். கெடுவாய்ப்பாக, அந்தச் சறுக்கல் பாதையில்தான் இன்று இந்திய இஸ்லாமியர்கள் வெகுவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
சையத் அஹ்மத்; ஷஹீத், ஷாஹ் இஸ்மாஈல் ஷஹீத் போன்றோர் இந்தியாவில் படையெடுத்த அந்நியரான ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்கள் என நாம் நம்பினாலோ பதிவு செய்து வைத்தாலோ அவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாக ஆகிவிடும்.கிலாஃபத்தை வீழ்த்திய கொடுங்கோலரான ஆங்கிலேயரை எதிர்த்தே அவர்கள் போரிட்டார்கள். இதுதான் உண்மை! பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடும் முன் துருக்கி கலீஃபாவின் அனுமதியை திப்புஸுல்தான் பெற்றார் என்றும் ஒரு தகவல் உள்ளது.வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள்.
அவர்கள் எழுதிக்குவித்துள்ள பொய்யான வரலாற்றில் நாம் இடம்பெறவில்லை என்பதற்காக வருத்தப்படுகின்ற நாம் தாழ்வு மனப்பான்மைக்கு பலியாகிப் போய் நம் அளவிற்கு நாமும் பொய்யான வரலாற்றுத் தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி? இதுதான் 'மாற்று' வரலாறோ?ஆக, உண்மையான விடுதலை உலக மக்களுக்கு பெற்றுத் தருகின்ற உன்னதப் பணியை செய்யவேண்டிய சமூகமாக இஸ்லாமிய சமூகம் உள்ளது. அதற்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டுள்ளது. விடுதலை என்றால் என்ன? என்பதையே விளங்காமல் தவறான திசைகளில் தாறுமாறாகப் போய்க்கொண்டிருக்கும் உலக மக்களைத் தடுத்து நிறுத்தி சரியான திசையை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம்.செய்தாகவேண்டிய பொறுப்பைக் குறித்து நாளை இறைவனுக்கு முன்னால் நின்று பதில் அளிக்கவேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆக்கம் : அப்துர் ரஹ்மான் உமரி
No comments:
Post a Comment