Sunday, July 12, 2009

டாக்டர் ஆஃபியா கைதி எண் 650

மார்ச் 30, 2003 அன்றைய காலையும் அமைதியாகத்தான் விடிந்தது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குல்ஷனே இக்பால் பகுதியிலிருந்து தன் தாய் வீட்டிலிருந்து ராவல்பிண்டிக்குச் செல்ல டாக்ஸியில் ஏறுகிறார் டாக்டர் ஆஃபியா. அவருடன் 7 வயதான மகன் அஹ்மத், 5 வயது மகள் மர்யம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். டாக்டர் ஆஃபியா மடியில் 6 மாதங்களே நிரம்பிய குழந்தை சுலைமான்.

விமானநிலையம் நோக்கிச் சென்ற ஆஃபியா குழந்தைகளுடன் காணாமல் போகிறார். செல்லும் வழியிலேயே பாகிஸ்தான் உளவுத்துறையினரால் (Pakistani Intelligence Agencies) மடக்கப்பட்டு American Federal Bureau of Investigation (FBI) இடம் ஒப்படைக்கப்பட்டார் என்கின்றன ஊடகங்கள். இதற்கு முன்னதாக, மார்ச் முழுவதுமே அமெரிக்க ஊடகங்களில் டாக்டர் ஆஃபியா சித்தீகி சம்பந்தமான தகவல்கள் வெளியாகத் துவங்கின. அல்காஇதாவுடன் நெருக்கமானவர் என்ற முத்திரை குத்தி FBI இனால் தேடப்படும் நபராக ஆஃபியாவின் புகைப்படங்கள் அமெரிக்க தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன.

சொல்லி வைத்தாற்போல் ஓரிரு நாட்கள் கழித்து அமெரிக்காவின் செய்தி ஊடகமான NBC, தனது பாணியில் செய்திகளை வெளியிடத் தொடங்கியது.
டாக்டர் ஆஃபியா, உஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் எங்கிருந்தாலும் உடனடியாக FBIக்கு அறியத் தருமாறும் திரும்பத் திரும்ப அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டன.

டாக்டர் ஆஃபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி. அவரது முனைவர் பட்டத்துக்காக ப்ரெண்டிஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தைசார் நரம்பியல் விஞ்ஞானம் பாடமாக எடுத்து கலாநிதிப் பட்டம் பெற்றவர். தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது “பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்கலும் பெண்களின் மீது அதன் தாக்கமும்” என்ற தலைப்பில் அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுக்காக கரோல் வில்ஸன் விருது பெற்றவர்.

ஆஃபியாவின் தந்தை பிரிட்டனில் கல்வி பயின்ற ஒரு மருத்துவர். அவரது மூத்த சகோதரர் ஒரு கட்டடக்கலை நிபுணர், மூத்த சகோதரி ஒரு பெண் மருத்துவர். ஆஃபியாவின் கணவர் அமெரிக்க மருத்துவமனையொன்றில் வைத்தியராக பணிபுரிந்தவர். 1990ஆம் ஆண்டிலிருந்தே ஆஃபியா அமெரிக்காவின் பொஸ்டன் என்ற இடத்தில் அவரது பெற்றோரோடு வசித்து வந்தார்.

2002இல் அவர் பாகிஸ்தான் திரும்பினார். பொருத்தமான தொழில் கிடைக்காத காரணத்தால் 2003இல் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று சில நிறுவனங்களை நோக்கி தொழில் தேடி விண்ணப்பித்த ஆஃபியா தனக்கான கடிதங்கள் கிடைக்கப் பெறுவதற்காக ஒரு தபால் பெட்டி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார். இக்காலப் பகுதியிலேயே அவரை அல்காஇதாவுடன் தொடர்பு படுத்தி அதிதீவிரமாக் தேடப்படும் நபர்களில் ஒருவராக அமெரிக்க ஊடங்கங்கள் பிரசாரம் செய்யத் துவங்கின. ஆஃபியா மீண்டும் தாயகம் திரும்பினார்.

திடீரென ஆஃபியா காணாமல் போனதை அடுத்து பாகிஸ்தானிய ஊடகங்கள் பரபரப்படைந்தன. 2003 ஏப்ரல் முதலாம் தேதி ஒரு பத்திரிகையளர் சந்திப்பின் போது பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் பைசல் சாலிஹ் டாக்டர் ஆஃபியா கைது செய்யப்பட்டிருப்பதை மறுத்துள்ளார். அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 2, 2003 இல் வேறொரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதே கேள்விக்கு இதே அமைச்சர் அளித்த பதில் வேறு விதமாக இருந்தது “டாக்டர் ஆஃபியாவுக்கு அல்காஇதாவுடன் தொடர்புள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார்”.

கராச்சியின் பிரபல் ஆங்கில இதழில் ஒரு சிறப்புச் செய்தி வெளியானது.
“டாக்டர் ஆஃபியா பற்றிய அமைச்சரின் பேட்டி வெளியானதை அடுத்து, ஆஃபியவின் தாயார் தன் மகள் பற்றிய குற்றச்சட்டை முழுமையாக மறுத்துள்ளார். ஒரு வாரத்திற்குப் பின் உளவுத்துறையினர் டாக்டர் ஆஃபியாவின் வீடு தேடி வந்து, “உங்கள் மகள் காணாமல் போனதைப் பற்றி நீங்கள் பெரிதுபடுத்தினால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று ஆஃபியாவின் தாயாரை மிரட்டி விட்டுச்சென்றனர் என்பதே அது.

ஆஃபியாவைப் பற்றி அவரது சக பல்கலைக்கழக மாணவர்கள் சொல்லும்போது ”மிக மென்மையான உணர்வுகளும் இரக்க சுபாவமும் கொண்ட ஒரு பெண்மணி” என வர்ணிக்கிறார்கள். ஒரு கூட்டத்தினிடையே ஆஃபியா தனித்து விளங்கக்கூடிய அளவுக்கு தோற்றமோ அல்லது தனித்துவமோ வாய்ந்தவர் அல்ல. ஆனால் ஆழ்ந்த இஸ்லாமியப்பற்றும் தஃவா உணர்வும் கொண்டவர்.

தனது ஓய்வு நேரங்களில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு இஸ்லத்தைப் பற்றிய விளக்க வகுப்பு எடுப்பார். சிறைக்கைதிகளுக்கும் பாடசாலை, பல்கலைக்கழகங்களுக்கும் குரான் பிரதிகளை தானே எடுத்துச் சென்று விநியோகிப்பவராகவும் ஒரு சுதந்திரமான பெண்ணாகவும் அவரைக் கண்டதாக அவரது தோழிகள் வர்ணிக்கிறார்கள்.

ஒரு முறை ஆஃபியா தன் பிரதேச பள்ளிவாசலில் பொஸ்னிய முஸ்லிம்களுக்காக உதவி செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்தாராம். அசையாதிருந்த பார்வையாளர்களை நோக்கி, “உங்களில் எத்தனை பேருக்கு ஒரு ஜோடிக்கு மேல் பாதணி இருக்கிறது” என்று கேட்க எல்லா கைகளும் உயர்ந்தனவாம். “உங்கள் பாதணிகளை தர்மம் செய்யுங்கள். பொஸ்னிய முஸ்லிம்கள் கடுமையான குளிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்” என்று ஆஃபியா சொன்ன வார்த்தைகளின் உணர்வைத் தாங்க முடியாமல் பள்ளிவாசல் இமாமும்கூட பாதணியைக் கழற்றிக் கொடுத்தாராம்.

ஸுப்ஹானல்லாஹ்!!!

டொக்டர் ஆஃபியா தனது குழுவின் இணையதளத்தில் தஃவா செய்வது எப்படி என்று எழுதுகிறார்.“எங்களது மிகச்சிறிய ஆனால் தூய்மையான இந்த தஃவா முயற்சி இந்த நாட்டின் மிகப் பெரிய தஃவா இயக்கமாக, சக்தியாக பரிணமிக்கும் ஒரு நாளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.
இந்த இயக்கத்தின் மூலமாக இஸ்லாத்தினை நோக்கி வரும் ஒவ்வொருவருக்காகவும் அல்லாஹ் எங்களுககு அளிக்கப்போகும் வெகுமதிகளை எண்ணிப்பாருங்கள். சிந்தனையை விசாலப்படுத்துங்கள், திட்டமிடுங்கள். அல்லாஹ் எங்களுக்கு அதற்கான சக்தியையும் உளத்தூய்மையையும் தந்தால் இன்ஷா அல்லாஹ் இந்த பூமி, அமெரிக்க தேசம் அல்லாஹ்வின் ஆட்சிப் பிரதேசமாய் மாறிவிடும்.

அல்லாஹு அக்பர்!

சகோதரி ஆஃபியாவின் தூரநோக்கையும் தளராத உறுதியையும் கண்டு பிரமிப்பு ஏற்படுகின்றது. டாக்டர் ஆஃபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம்(Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்திரவதைப்படுத்தப்படுவதாக செய்திகள் கசியத்துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது.

மீடியக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படி Prisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகிஇருப்பதாகவும் சிறைக்காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கொடுமையின் உச்சகட்டமாக Prisoner 650 என்ற அப்பெண், பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும் ஆண் கைதிகளின் முன்னிலையில் தன் இயற்கை உபாதைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத்தப்பட்டார் என்றும் அதனால் ஆண் கைதிகள் அவரை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர், ஜூலை 6, 2008இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கையாளராகவிருந்த இவோன் ரிட்லி. செய்திச் சேகரிப்பிற்க்காக சிறைச்சாலை சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து இச்செய்தியை வெளி உலகிற்குக் கொண்டுவந்தார்.

அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம் என்று மனம் வெதும்பினார் இவோன் ரிட்லி. அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டெடுப்பதற்க்காக பாகிஸ்தான் விரைந்தார்.

இதேவேளை, முஆசம் பெக் என்ற முந்தைய குவாண்டனாமோ சிறைவாசி தன் சிறை அனுபவங்களை நூலாக எழுதியிருந்தார். தான் இஸ்லாமாபாத்தில் வைத்து பெப்ரவரி 2003ல் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனாமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். தனது அறைக்குப் பக்கத்து அறையில் ஒரு பெண், பல ஆண் காவலர்களால் கொடுமைப்படுத்தப்படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ‘ஜஸ்டிஸ் கட்சி’யின் தலைவரான இம்ரான் கான், கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர் ஆஃபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தினார்.

2008 ஆகஸ்ட் 4ஆம் தேதி அமெரிக்க அரசு ஆஃபியா சித்தீகி ஆப்கானில் வைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஜூலை 17ஆம் தேதி பாரியளவிலான தாக்குதலுக்கான வரைபடங்களுடன் குண்டு தயாரிப்பிற்கான குறிப்புக்களுடனும் அவரையும் அவரது மூத்த மகனையும் கைதுசெய்ததாக அறிவித்த அமெரிக்கா, 18ஆம் தேதி ஆஃபியா அமெரிக்க அதிகாரி ஒருவரை அவரது துப்பாக்கியைப் பறித்து சுட்டுக்கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தியது. அத்தோடு ஆஃபியா கடந்த 5 வருடங்களாக எங்கிருந்தார் என்பது தனக்கு தெரியாது என்று முழுப் பூசணியை சோற்றில் மறைத்தது அமெரிக்க அரசு.

ஆகஸ்ட் 4ஆம் தேதி ஆஃபியா அமெரிக்காவின் நியூயார்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரது தோற்றம் முழுமையாக மாறியிருந்தது. சக்கர நாற்காலியொன்றில் ஆஃபியா கொண்டுவரப்பட்ட காட்சி அங்கிருந்த சகலரையும் கண்ணீர் மல்கச்செய்தது. சிறைச்சாலை சீருடை, குவாண்டனாமோவில் அணிவிப்பது போன்ற கையில்லாத மேலங்கியுடன் வந்தவர், அதற்கு மேலால் பக்கத்திலிருந்த ஒருவரிடம் ஒரு துணியை வாங்கி தலையையும் எலும்பில் சதை போர்த்தியது போன்ற கரங்களையையும் மறைத்துக் கொண்ட ஆஃபியாவின் இஸ்லாமிய உணர்வு கண்டு பார்வையாளர்கள் அதிர்ந்துபோயினர்.

டாக்டர் ஆஃபியா சிறையிலிருந்தபோது, அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளதோடு அவரது மனநிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அவரது வழக்குரைஞர்கள் சொல்கிறார்கள். அவரது உடம்பிலிருந்த துப்பாக்கிச்சூட்டுக் காயத்தில் இரத்தம் உறைந்து சரியாகக் கவனிக்கப்படாமல் இருந்ததோடு பற்களும் உடைந்திருந்தன. மூக்கு உடைக்கப்பட்டு உதடு கிழிந்துள்ள ஆஃபியாவின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹுத் தஆலா சகோதரி ஆஃபியாவைப் பொருந்தி கொள்வானாக.

பிப்ரவரி 23, 2009 நியுயார்க் நீதிமன்றத்தில் ஆஃபியாவின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. டாக்டர் ஆஃபியாவின் வழக்கில் அவர் இன்னும் நிரபராதியாகக் கொள்ளப்படவில்லை என்பதை 2009 மே வரையிலான இணையச் செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட கடுங்காவல் சிறை அவரை அழைக்கும்.

அமெரிக்காவின் பார்வையில் எது குற்றமாகக் கொள்ளப்படும் என்பது நமக்குத் தெரிந்ததே.

அல்லாஹ் போதுமானவன்.

ஆஃபியா சித்தீகி என்ற் அன்புச் சகோதரிக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சிறந்த வாழ்க்கையைக் கொடுக்கட்டும்.

டாக்டர் ஆஃபியாவுக்காக ஏந்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கரங்களோடு எம் கரங்களும் இணையட்டும். ஆஃபியா சித்தீகி என்ற நம் சகோதரிக்காக உதவ விரும்புவோர் இணையத்தில் இந்தத் தளத்தைப் பார்வையிடுங்கள்.
www.freedetainess.org.

நன்றி : அல் ஹஸனாத் ஜீன் 2009. ஆக்கம் : சமீலா யூசுப் அலி

1 comment:

அபூ ஸாலிஹா said...

மிகவும் உருக்கமான நிகழ்வு இது! பதிந்தமைக்கு நன்றி!
சத்தியமார்க்கம்.காமில் கடந்த வருடம் வெளியான இது தொடர்புடைய முழுமையான செய்தி இங்கே:

வல்லரசுகளின் விளையாட்டில் தொலைந்து போன டாக்டர் ஆஃபியா சித்திக்கீ
http://www.satyamargam.com/index.php?option=com_content&view=article&id=1007&catid=1&Itemid=300129