Saturday, October 6, 2012

பாலைவன விழுதுகள்


அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது ( திருக்குரான் 12:111) என்று அல்லாஹ் தன் இறுதி வேதத்தில் சொல்வதைப் போல் நம் வரலாறுகளை படிப்பதோடு அதிலிருந்து நாம் படிப்பினையும் பெற வேண்டும். நம் வரலாறுகளை நாம் படிக்காமல் அலட்சியப்படுத்தியதின் விளைவு நம் எதிரிகளால் திரிக்கப்பட்ட வரலாற்றைப்  படித்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்தியாவில் ஏகத்துவத்தை நிலைநாட்டிய முஹம்மது பின் கஜ்னவியை கோயிலை இடித்த மத வெறியராகவும் நிர்வாக சீர்திருத்தத்தின் சிங்கமாக விளங்கிய முஹம்மது பின் துக்ளக்கை கோமாளியாகவும் பார்க்கப் பழகி விட்டோம்.

அமெரிக்காவில் இஸ்லாம் பரவுவதற்கு முக்கியக் காரணமான, மால்கம் X என்று அறியப்படும் மாலிக் அல் ஷாபாஸ் “ தன் கடந்த கால வரலாற்றை அறியாத சமூகத்தால் புதிய வரலாறை படைக்க இயலாது” என்று கூறியுள்ளார்.

எனவே “பாலைவன விழுதுகள்” எனும் இத்தொடரின் மூலமாக நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய சமூகத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம். நபியவர்களின் தோழர்கள் பாலை மணலில் ஆழ ஊன்றிய விழுதுகள்!
அவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்து எப்படி மாறினார்கள் தெரியுமா?
ரலியல்லாஹ் அன்ஹு வ ரலூ அன்ஹு, அல்லாஹ் அவர்களை பொருந்தி கொண்டான், அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள் ( திருக்குரான் 58:22)  என்று அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறும் சமூகம் எப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது தெரியுமா?

பக்கத்து வீட்டுகாரனுடைய ஒட்டகம் தன் வீட்டு தோட்டத்தில் புல் மேய்ந்து விட்டால் அதற்காக வாள் எடுப்பதோடு நின்று விடாமல் இறக்கும் தருவாயிலும் தன் இளவலை அழைத்து பக்கத்து வீட்டுக்காரனை பழி வாங்கினால்தான் என் ஆன்மா சாந்தி அடையும் என்று சத்திய பிரமாணம் வாங்கும் அளவு கொலை வெறி பிடித்த மக்களாய்-

உலகையே தங்களின் இனத்திமிரினால் அரபி என்றும் அஜமி என்றும் பிரித்ததோடு மட்டுமல்லாமல் தங்களுக்குள்ளேயே பல்வேறு கோத்திரங்களாய் சண்டையிட்டு வாழ்ந்த காட்டுமிராண்டி மக்களாய்-

பெண்களை வெறும் போகப்பொருளாக, அணுகும் மக்களாய்

தகப்பன் முடித்த பெண்ணையே அவன் இறந்து விட்டால் உடமையாக்கிக் கொள்ளும் மக்களாய்-

பெற்றெடுத்த தம் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் அளவு மோசமான நடத்தை கொண்ட மக்களாய்-

மறுவுலக வாழ்வா ! அப்படி ஒன்று உண்டா? என்ன நாங்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட்ட பிறகும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா என்று நக்கல் நையாண்டி செய்து இவ்வுலக வாழ்வே சதம் என்று குடியும் கூத்துமாகவே காலத்தைக் கழித்த மக்களாய் வாழ்ந்து வந்தார்கள். 

இவர்கள்தான்,

யர்முக் போர்க்களத்தில் நா வறண்டு உயிர் இழக்கும் தருவாயில்கூட சக தோழருக்காக, தண்ணீரை தியாகம் செய்பவர்களாக மாறிப்போனார்கள்.

இன்றும் மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், குலத்தின் பெயரால், இயக்கத்தின் பெயரால், நாட்டின் பெயரால் பிரிந்து கிடக்கும் நமக்கு அச்சமூகத்தை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கும். 

ஆம்! ரோமாபுரியைச் சேர்ந்த சுஹைபும் பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் பார்ஸியும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிலாலும் நாட்டு எல்லைகளைக் கடந்து அவ்வரபு சஹாபக்களோடு ஒரு கொள்கையின் கீழ் கட்டுண்டு கிடந்தார்கள்.

பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த சமுதாயம் அனாதையான பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க சீட்டுக் குலுக்கி போட்டா போட்டி போடும் சமுதாயமாக மாறிப்போனார்கள்.

மறுமையை நம்பிய காரணத்தால், மறைவில் புரிந்துவிட்ட விபச்சாரக் குற்றத்தை, இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் தாமே முன்வந்து சொல்லி, கல்லால் அடித்துக் கொல்லப்படும் தண்டனையை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் சமுதாயமாக மாறிப்போனார்கள்.

தாயின் காலடியில் சேயின் சுவனம் உள்ளது என ஸஹாபாக்கள் தெளிவாக விளங்கிய காரணத்தால்தான் ஒரு கவிஞர் இப்படிச் சொன்னார் :
“பிறந்தவுடன் பெண்களை சுவனத்திற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில்
பெண்களின் காலடியில் சுவனத்தை இறக்குமதி செய்து காட்டியது இஸ்லாம்”

அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப் பெற்றால் அவர்களது உள்ளங்கள் நடுநடுங்கும் என்று திருமறை சொல்வதற்கேற்ப வாழ்ந்தவர்கள் என்பதற்கேற்ப ஒரு இணைய தளத்தில் பார்த்த  பொருத்தமான ஒரு கவிதையை பதிவு செய்கிறேன்.
”சத்தியத்தை சுமந்த மனிதர்களே
அல்குரானை தம் அசைவுகளால் அணிந்து காட்டியவர்களே
தூக்கமின்மையை தம் துப்பாக்கி ஆக்கி கொண்டவர்களே
இரவுகளும் பகலான தோர் வெளிச்ச தேசத்தின் சிற்பிகளே
எங்கள் உயிர்சுட்டுகளால் உங்களை நினைவு கூறுகிறோம்

அல்லாஹ் என்றால் அழுதவர்கள்
உயிர் வரைக்கும் கொடுத்தவர்கள்
கொடுத்ததற்கே உரைத்தவர்கள்
அந்த பாலைவனத்தின் ஏழை ஜனாதிபதிகள்
மூச்சு விடும் கபுரடிகளில் முஸ்லீமாய் உறங்கி கொண்டிருப்பவர்கள்

அந்த நிஜ உணர்ச்சிகளை இந்த  எழுத்துகளில் கலக்க முயற்சித்திருக்கிறேன்.
ஈமானிய குளிரோடைகள் நமது இறுகிப் போன இதயங்களைத் தொடட்டும்.
விழிகளும் நெஞ்சும் ஒரு கசிவு நோக்கி நகரட்டும்.
அந்த ஈரத்தில் நனைந்து இன்ஷா அல்லாஹ் இனிய விருட்சங்கள் உயிர் கொள்ளட்டும்.

வரும் இதழிலிருந்து ஒவ்வொரு வாரமும் நமக்கு அறிமுகமான, அறிமுகமில்லாத ஸஹாபாக்களின் வாழ்விலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு சுவையான படிப்பினை அல்லது சம்பவத்தைப் பார்க்க இருக்கின்றோம். ஆதாரபூர்வ தகவல்களின் அடிப்படையில் இத்தொடர் அமைய “Hayatus Sahaba”, “Men around the Messenger”, “தோழர்கள்” , “அண்ணல் நபிகளாரின் அருமை தோழர்கள்” போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை உசாத்துணையாகக் கொண்டுள்ளேன்.
இத்தொடரை வாசிப்பதோடு மட்டுப்படுத்திக் கொள்ளாமல் இன்ஷா அல்லாஹ் முடிந்த வரை வாழ்ந்திடுவோம்.

Tuesday, August 21, 2012

இஸ்லாத்தை நிர்மாணிக்கும் எண்ணம் கொண்டவர்களே!

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ரமழான்கள் வந்துவிட்டுப் போவது பருவகாலக் கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகவல்ல. தனது உள், வெளி வாழ்க்கையை இஸ்லாத்தினால் அழகுபடுத்தி வாழ நினைப்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும், ஊட்டச்சத்தையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காகவே.


ரமழான் வருகின்றபோதுஅவசர அவசரமாகப் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் தயார் செய்யப்படுகின்றன. ஆலிம்களும் ஹாபிழ்களும் மஸ்ஜித் நிருவாகிகளும் சுறுசுறுப்படைகின்றனர். பேச்சாளர்களுக்கு தட்டுப்பாடும் பஞ்சமும் ஏற்படுகின்றது. தராவீஹ், தஸ்பீஹ், கியாமுல்லைல், பயான், இப்தார், ஸகாத், ஸதகா, உம்ரா, ஸியாரத் என ரமழான் களைகட்டுகின்றது. இஸ்லாத்தை நேசிக்கும் எந்த உள்ளம் தான் இந்த ஆன்மிகப்பூரிப்பைக் கண்டு மகிழ்ச்சியடையாதிருக்கும்!

எனினும், பரிதாபம்! அந்த மகிழ்ச்சியின் ஆயுள் ரமழான் 27 வரையில்தான். ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டுவிட்டால் இது நோன்பு நோற்ற சமூகமா? என்று நினைக்கத் தோன்றுமளவு நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது.

பெருநாள் காலை ஃபஜ்ருத் தொழுகைக்கே மஸ்ஜித் வெறிச்சோடி யிருக்கும். ரமழானில் களைகட்டியிருந்த ஆன்மிகம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கும்.


இது ஏன் நடக்கிறது? ரமழானில் நோன்பு நோற்ற சமூகத்திற்கு என்ன நடந்தது?



இந்த வினாவுக்கான விடையை சற்று சீர்தூக்கிப் பார்ப்பதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.அல்லாஹ் மனிதனை இரண்டு பக்கங்கள் கொண்டவனாகப் படைத்திருக்கிறான். ஒன்று அவனது வாழ்க்கையின் வெளிப்பக்கம் மற்றையது உள்பக்கம்.



இதேபோன்று அல்லாஹ்வின் மார்க்கத்திலும் மனிதனது இயல்புக்கு இசைவான இரண்டு பக்கங்களை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். வாழ்வின் வெளிப்புறத் தேவைகளுக்கு வழிகாட்டும் பகுதி, வாழ்வின் உட்புறத் தேவைகளுக்கு வழிகாட்டும் பகுதி என மார்க்கத்தில் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன.



மனிதனது உட்புறம் என்பது அவனது அறிவு, சிந்தனா சக்தி, மனோபாவங்கள், குண இயல்புகள்,இலட்சியங்கள், கனவுகள், நம்பிக்கைகள், ஆசாபாசங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றைக் குறிக்கும். வெளிப்புறம் என்பது அவனது கலை, கலாசாரம், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள்,வழிமுறைகள், வழிபாடுகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றைக் குறிக்கும். இஸ்லாம் முழு வாழ்க்கைக்குமான வழிகாட்டல் என்ற வகையிலும் மனிதனது உள், வெளிப் பகுதிகள் இரண்டையும் நூற்றுக்கு நூறு வீதம் கவனத்தில் கொண்டே அது மனிதனை வழிநடத்துகிறது.



குர்ஆன் பற்றிய அறிவு (இல்ம்), இறை சிந்தனை (திக்ர்), கொள்கைத் தெளிவும் அதில் ஆழ்ந்த பற்றுறுதியும் (ஈமான்), நற்குணங்கள் (அஃக்லாக்) இலட்சியக் கனவுகள் (அல்லாஹ்வின் அன்பினால் கிடைக்கப் பெறுகின்ற மறுவுலக சுவனம், இகாமதுத்தீன் பணியினால் உருவாக்கப்படுகின்ற பூவுலக சுவனம்) போன்றவற்றினூடாக இஸ்லாம் மனிதனது உட்புறத்தை அலங்கரிக்கிறது. மனிதனது உட்புறத்தை இவற்றினால் நிரப்பி அலங்கரிப்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும் அல்லது அத்திபாரமாகும்.



இந்த அத்திபாரத்தின் மீதுதான் இஸ்லாம் மனித வாழ்க்கையின் வெளிப்புறத்தை நிர்மாணிக்கிறது. தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்க வழிபாடுகள் அந்த வெளிப்புற நிர்மாணத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இஸ்லாமியக் கல்வி, கலை, கலாசாரம், பழக்கவழக்கங்கள்,சம்பிரதாயங்கள், ஒழுக்கங்கள் முதலியவை வெளிப்புற நிர்மாணத்தின் மற்றுமொரு பகுதியாகும். வியாபாரம், திருமணம், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, சொத்துரிமை, உறவுகள் இவை ஒவ்வொன்றிலும் பேணப்பட வேண்டிய ஹலால் ஹராம் வரையறைகள் இன்னுமொரு பகுதியாகும். நீதியை நிலை நாட்டி, அக்கிரமங்கள் அநீதிகளை ஒழித்து அமைதி, சுபிட்சம் என்பவற்றைக் கொண்ட ஒரு உலகைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டமும் அதற்கு அடிப்படையாக அமைகின்ற ஆட்சி முறையும் வெளிப்புற வாழ்க்கையின் மற்றுமொரு பகுதியாகும்.



இவ்வாறு மனித வாழ்க்கையின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் ஒன்றிணைத்து, அலங்கரித்து,வழிகாட்டி, வாழ்வளிக்கும் வல்லமை கொண்ட மார்க்கமே இஸ்லாம்.



ஒரு முஸ்லிமின் வாழ்க்கை இவ்வாறு உட்புறத்தில் உறுதியான, ஆழமான அத்திபாரத்தையும்,வெளிப்புறத்தில் பல்வேறு நிர்மாணக் கலைகளையும் கொண்ட பெருமாளிகையாக எழுப்பப்படும் போதுதான் அது இஸ்லாமிய வாழ்வாகப் பரிணமிக்கிறது.

எனினும் துரதிஷ்டம்! இன்று இத்தகைய தொரு நிர்மாணப்பணி களத்தில் இடம்பெறவில்லை. மாறாக அத்திபாரம் சிதைந்து ஆட்டம் கண்டிருக்கும் ஒரு கட்டிடத்தின் ஒரு பக்க வெளித் தோற்றத்தை மட்டும் அழகுபடுத்தி நிறம் பூசும் வேலைதான் நடைபெறுகிறது. ஏனைய பக்கங்கள் சிதைந்து, சீரற்று, அழுக்குகளும், அசுத்தங்களும் நிறைந்து காணப்படுகின்றன. நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அப்பக்கங்களுக்குச் செல்வதேயில்லை. அத்திபாரத்தைப் பலப்படுத்தும் பாரிய பணி, வழிமுறைகள் தெரியாததால் கைவிடப்பட்டு காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டு விட்டது. கட்டிடத்தில் நிறம் பூசப்பட்ட பகுதியை மட்டுமே காட்டிக், காட்டி இப்போது பார்ப்பவர்கள் அனைவரும் அதுவே கட்டிடம் என்று நம்பத்துவங்கி விட்டார்கள். மக்கள் பார்க்கத் தவறிய ஏனைய பகுதிகளை யாராவது காட்ட முயன்றால் அவர் சமூகத்தில் விரும்பத்தகாதவராக நோக்கப்படுகிறார்.



வருடத்தில் ஒரு முறை மஸ்ஜித்கள் நிறம் பூசி அலங்கரிக்கப்படுவது போல் ரமழானுக்கு ஒரு தடவை மார்க்கத்தின் வெளிப்புறப் பகுதியை மக்கள் அலங்கரித்து விட்டுப் போகிறார்கள். ரமழான் முடிய அவர்களது வேலையும் முடிவடைகிறது. ஷவ்வால் ஆகிவிட்டால் இவர்களுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? அதனால்தான் பெருநாள் ஃபஜ்ரிலிருந்தே ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். மேலும்,



இது தவிர்க்க முடியாத விளைவு அன்றி வேறில்லை. எவரையும் குற்றம் கூறிப்பயனுமில்லை. எமது சமூகம் மனிதவாழ்வின் உள், வெளிப் புறங்கள் இரண்டையும் இஸ்லாத்தினால் அழகுபடுத்தத் துணியாத வரை இந்த ஒருபக்க மேற்பூச்சுத் திட்டம் மட்டும்தான் காலாகாலம் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அதிலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பது இலகுவானதல்ல.



மனிதனின் உட்புறத்தை சிறிது நோக்குங்கள். குர்ஆன் ஸுன்னா பற்றிய விளக்கம் அங்கிருக்கிறதா?அல்லது உலகாயத சிந்தனைகளும் உலகின் ஆதாயங்களை தனது கரங்களுக்கு எவ்வாறு கிட்டச் செய்ய வேண்டும் எனம் ஆசையும் அங்கிருக்கிறதா? கொள்கைத் தெளிவும் அதில் ஆழமான பற்றுறுதியும் (ஈமான்) இருக்க வேண்டிய இடத்தில் எத்தனை எத்தனை மூட நம்பிக்கைகளும் கருத்துக் குழப்பங்களும் இன்று முஸ்லிம்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன?



இஸ்லாமியப் பண்பாடுகள் நற்குணங்கள் குடியிருக்க வேண்டிய முஸ்லிம்கள் உள்ளத்தில் பெருமை,பொறாமை, ஆற்றாமை, நயவஞ்சகம், குரோதம், வெறுப்பு, சுயநலம் போன்ற துர்க்குணங்கள் நர்த்தனம் புரிகின்றன.



சுவர்க்கத்தை இலட்சியமாகவும் அமைதிமிக்க ஒரு உலகைக் கட்டியெழுப்புவதை வழிமுறையாகவும் கனவு காண வேண்டிய முஸ்லிம் எத்தனை அற்பமான ஆசைகளை தனது உள்ளத்தில் சுமந்து வாழ்கிறான்!



இப்படி மனிதனின் உட்புறம் சிதைந்து இஸ்லாமிய வாழ்வின் அத்திபாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. இதனை சீர்செய்வது ஒரு முஸ்லிமின் அடிப்படையான கடமை என்பது உணரப்பட்டால் ரமழானோடு ஒரு முஸ்லிமின் கடமைகள் முடிந்துவிடுமா? நிகழ்ச்சி நிரல்கள் ரமழானுக்கு மட்டும் உரியதாய் இருக்குமா? ஆலிம்களுக்கும் ஹாபிழ்களுக்கும் ரமழானில் மட்டுமா? வேலை இருக்கும்.



இன்றைய முஸ்லிம்களின் வெளிப்புற வாழ்வை ஒரு கணம் நோட்டம் விடுங்கள்.

அடிப்படை இபாதத்துகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்பவற்றில் சமூகத்தின் அசிரத்தை ஒருபக்கம்



குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, பொருளீட்டல், வியாபாரம், சொத்துரிமை, கல்வி, கலை,கலாசாரம், அரசியல், வாழ்வொழுங்குகள், உறவுகள் என அனைத்திலும் ஹலால், ஹராம் வரம்புகள் சிதைக்கப்பட்டு இஸ்லாமிய வாழ்க்கை சின்னாபின்னமாகியிருக்கிறது. அநீதிகள், அக்கிரமங்கள்,தலைவிரித்தாடுகின்றன. அமைதி, சுபிட்சம் என்பன தொலைந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் இனி அவை எமக்குக் கிடைக்குமா? என்ற நம்பிக்கையே மனித சமூகத்தில் இல்லாமல் போயிருக்கின்ற அவலம்.



இத்தகைய சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் அயராத உழைப்பு, அர்ப்பணசிந்தை என்பன உருவாக்கப்பட்டால் ரமழானோடு கடமைகள் முடிந்துவிடுமா?



இந்த வினாக்களை ஒரு முறைக்குப் பலமுறை மீட்டிப் பாருங்கள். ரமழானோடு ஆன்மீகம் வெறிச்சோடிப் போவதற்கான காரணத்தை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.



ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை ரமழான்கள் வந்துவிட்டுப் போவது பருவகாலக் கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகவல்ல. தனது உள், வெளி வாழ்க்கையை இஸ்லாத்தினால் அழகு படுத்தி வாழநினைப்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும், ஊட்டச்சத்தையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காகவே.

ரமழான் எங்களை விட்டு விடைபெற்றிருக்கிறது. அத்தகைய உற்சாகம், ஊட்டச்சத்து, பயிற்சி என்பன எமக்குக் கிடைத்திருக்குமானால் நாம் ரமழானைப் போல ஏனைய காலங்களிலும் அயராது உழைப்பவர்களாக இருப்போம்.



இல்லை ரமழானோடு எமது உற்சாகம் குன்றிவிடுமானால் நாம் சிதைந்த கட்டிடத்தின் ஒரு வெளிப்பகுதிக்கு நிறப்பூச்சு செய்திருக்கிறோம். அதுவே கட்டிடம் என்ற நினைப்பில் அவ்வளவுதான். இனி அடுத்த ரமழான் வர வேண்டும் தூரிகையைக் கையிலெடுப்பதற்கு!



இஸ்லாத்தை நிர்மாணிக்கும் எண்ணம் கொண்டவர்களே! முதலில் இஸ்லாம் என்ற மாளிகையின் எல்லாப் பகுதிகளையும் மக்களுக்குக் காட்டுங்கள். பின்னர் அங்குள்ள வேலைகளைக் காட்டுங்கள். பின்னர் அவற்றை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் தெளிவான திட்டங்களையும் முன்வையுங்கள், செயல்படுங்கள். நிச்சயம் இந்த நிலைமாறும், இன்ஷா அல்லாஹ்.



எமது உள், வெளி நிலைமைகளை நாம் மாற்றாதவரை அல்லாஹ் மாற்றப்போவதில்லை.



“நிச்சயமாக ஒரு சமூகத்திலிருப்பவற்றை அவர்கள் மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் மாற்றப் போவதில்லை.”

Thanks to உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

Sunday, July 29, 2012

பர்மா : சர்வதேச சமூகத்தின் வெட்கக்கேடான மெளனம்


கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் முஸ்லீம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அது போல் முஸ்லீம் சமூகத்தின் மீதான தாக்குதலை மூடி மறைக்கும் ஊடக துறையின் நயவஞ்சகத்தனமும் புரிந்து கொள்ள முடியா ஒன்றல்ல. எனினும் தற்போது முஸ்லீம் ஊடகங்கள் உள்ளிட்ட மெயின் ஸ்டீரிம் மீடியா என்றழைக்கப்படும் பொது மீடியாவின் பலத்த மெளனம் முஸ்லீம்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மறுக்க முடியாத ஒன்று.

முஸ்லீம்களின் மீதான வன்முறைகள் குறித்து பொது ஊடகங்களிலும் தேடினாலும் இணையவெளியில் தேடினாலும் ஒரு சில ஈரானிய ஊடகங்கள், தனி நபர்களின் ப்ளாக்குகள், ப்ரஸ் டிவி போன்ற ஒரு சிலவற்றை தவிர மற்றவற்றில் முழுமையாய் இருட்டடிப்பு செய்துள்ளனர். ஒபாமாவின் நாய்குட்டிக்கு உடம்பு சரியில்லை போன்ற அரிய சமூக பயனுள்ள செய்திகளை வெளியிடும் ராய்ட்டர்ஸ், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் உலகெங்கும் உள்ள சர்வதேச ஊடகங்களும் பர்மிய முஸ்லீம்களின் அவலம் குறித்து கிஞ்சிற்றும் வாய் திறக்கவில்லை. எங்கு குண்டு வெடித்தாலும் உடனே முஸ்லீம்களை சம்பந்தப்படுத்தி செய்தி போடும் தினமலம் உள்ளிட்ட இந்திய வகையறா பத்திரிகைகளும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பதோடு ஒன்றிரண்டை தவிர முஸ்லீம் ஊடகங்களும் மெளனமே காத்தன என்பது வேதனைக்குரியது.

பர்மாவின் ராணுவத்தாலும் புத்த மத தீவிரவாதிகளாலும் வேட்டையாடப்படும் ரோஹிங்க்யாஸ் என்று சொல்லப்படும் பர்மிய முஸ்லீம்களின் துயரம் இரண்டாம் உலக போரிலிருந்தே தொடங்குகிறது. பெரும்பாலும் புத்தர்களும் அதற்கடுத்து இந்துக்களும் வாழும் பர்மாவில் ரோஹிங்க்யாஸ் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெறும் 8 இலட்சமே. உலகின் மிக மோசமாக நடத்தப்படும் சிறுபான்மையினராக ஐக்கிய நாடுகள் சபையாலே கணிக்கப்படும் பர்மிய முஸ்லீம்களில் சுமார் 3 இலட்சம் பேர் பல்வேறு ஆண்டுகளாய் நடக்கும் வன்முறையால் ஏற்கனவே பங்களாதேஷுக்கு அகதிகளாய் குடியேறி உள்ளனர். சுமார் 30,000 நபர்கள் மலேஷியாவிலும் குடியேறி உள்ளனர்.

இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷாரின் காலணியாக இருந்த பர்மா ஜப்பானிய படைகளால் வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்தே முஸ்லீம்களின் மீதான வன்முறை தாக்குதலின் சரித்திரம் ஆரம்பித்தது எனலாம். 1942 மார்ச் 28 அன்று 5,000 முஸ்லீம்கள் ராகினே தேசியவாதிகளால் மின்ம்யா மற்றும் ம்ரோஹாங்க் நகரில் கொலை செய்யப்பட்டனர். இன்றளவும் முஸ்லீம்களுக்கு அந்நாட்டின் குடிமக்கள் அந்தஸ்தை வழங்க பர்மிய அரசு மறுத்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வேட்டையாடப்படும் பிராணிகளாக பர்மிய முஸ்லீம்கள் மாறியுள்ளனர். தாய்லாந்து – மியான்மர் எல்லை பகுதியில் மட்டும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

குடிமகன் அந்தஸ்து இல்லாத காரணத்தால் பர்மிய முஸ்லீம்கள் திருமணம் செய்வதற்கு கூட அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளதோடு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. நவீன கால அடிமை முறையின் நீட்சியாக குறைவான சம்பளத்திற்கு வலுக்கட்டாயப்படுத்தப்பட்டு பர்மிய முஸ்லீம்கள் கசக்கி பிழியப்படுகிறார்கள். குடிமகன்களாய் இல்லாத காரணத்தால் முஸ்லீம்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு வீடற்ற அகதி்களாய் திரிவதோடு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுமதியின்றி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது நவீன அடிமைத்துவமே என உறுதிபட சொல்லலாம்.

பர்மிய முஸ்லீம்களுக்கு கல்வி பயில்வதெல்லாம் இத்தகைய சூழலில் சாத்தியமே இல்லை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஏழு வயதான பச்சிளம் பாலகர்கள் கூட பலவந்தமாக பணி புரிய நிர்ப்பந்திக்கப்படுவது சிறுவர்கள் வேலைக்கு செல்வது குறித்து கூக்குரலிடும் மேற்குலகின் காதுகளில் இது வரை விழாத மர்மம் புலப்படவில்லை. பணி செய்ய மறுப்பவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவதோடு கொலை மிரட்டலும் அதிகார வர்க்கத்தால் விடுக்கப்படுவது உண்டு.

அங்கு பெரும்பான்மையாக வாழும் ராகினே பவுத்த பெண் ஒருத்தி ரோஹிங்யா முஸ்லீம் வாலிபன் ஒருவன் வன்புணர்வு செய்யப்பட்டதாக வந்த செய்தி (இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை, வெறுமனே வதந்தியாக கூட இருக்கலாம்) யை தொடர்ந்து அவ்வாலிபனுக்கு அரசு தூக்கு தண்டனை விதித்தது. இருந்தும் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்த பவுத்த தீவிரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்களை கொன்றுள்ளதாக தெரிகிறது. முஸ்லீம் யுவதிகள் வன்புணர்வு செய்யப்பட்டதாலும், அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு கலவரம் ஊதி பெருக்கப்பட்டதால் ஒரு இலட்சம் முஸ்லீம்கள் பர்மாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லீம்கள் ஆளும் நாடுகளில் ஒரு சில வன்முறைகள் நடந்தாலே ஊதி பெரிதாக்கும் யூத, பார்ப்பனிய ஊடகங்கள் சமீபத்தில் கூட பாகிஸ்தானில் ஒரு ஹிந்து சிறுவன் இஸ்லாத்தை தழுவியதை அங்குள்ள ஹிந்துக்களுக்கு மிகப் பெரும் ஆபத்தாக சித்தரித்தன. அது போல் உலக சந்தையின் சிறு ஏற்ற, இறக்கங்களை ஐரோப்பாவின் பொருளாதார குழுப்படியையும் பிரத்யேகமாக ஒளிபரப்பும் மேற்குலக ஊடகங்களுக்கு முஸ்லீம்களின் அவலங்களை ஒளிபரப்ப மனமில்லை. அரபு ஊடகங்களுக்கோ தங்கள் பகுதியில் நடக்கும் சிரியா கலவரம் குறித்து கவலைப்படவே நேரமில்லை எனும் போது பர்மிய முஸ்லீம்களாவது, உலகளாவிய சகோதரத்துவமாவது.

ஆசியாவின் தாதாவாக தன்னை காட்டி கொள்ளும் சீனாவும் உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக தன்னை பறை சாற்றி கொள்ளும் என்னருமை தேசமும் இது வரை கண்டன அறிக்கை ஒன்றை கூட வெளியிடாமல் மெளனமாக இருக்கின்றன. ஆங் சூ கியின் விடுதலைக்கு பிறகு உலகோடு பர்மா நெருக்கமாக உள்ள நிலையில் அந்நாட்டில் இன்னும் வெளியே கொண்டு வரப்படாத இயற்கை வளங்களையும் மலிவான மனித வளத்தையும் கருத்தில் கொண்டே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகு வழமையாய் எழுப்பும் ஜனநாயக கோஷங்களை எழுப்பாமல் அமைதி காக்கிறது. ஒரு சில அமைப்புகளை தவிர நமதூர் முஸ்லீம் அமைப்புகளும் இங்குள்ள அஸ்ஸாமுக்கும் தூரத்திலுள்ள பலஸ்தீனத்திற்கும் கொடுத்த குரலை கூட பர்மிய முஸ்லீம்களுக்கு கொடுக்காதது வேதனையே. காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டு பொறுக்கி அரசியல் கட்சிகளை குறித்து சொல்லவே வேண்டியதில்லை.

பர்மாவில் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக நோபல் பரிசு பெற்று தற்போது உலகை சுற்றி வரும் ஆங் சான் சூ கீயும் இவ்விஷயத்தில் மெளமாக இருப்பது முஸ்லீம்கள் விஷயத்தில் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையோ என்று எண்ண தோன்றுகிறது.  திபெத்திய மக்களின் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்காக குரல் கொடுப்பவரும் நோபல் பரிசு பெற்ற்வருமான தலாய் லாமாவும் இவ்விஷயத்தில் மெளனமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்ததில் ஆதாயம் இல்லையென்றால் முஸ்லீம்கள் மீது நடக்கும் தாக்குதலை வெளிப்படுத்த கூட மனம் இல்லா அளவுக்கே இஸ்லாத்தின் எதிரிகள் இருக்கின்றனர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலகும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளானாலும் முஸ்லீம்கள் விஷயத்தில் இறைவன் திருமறையில் சொல்வது போல் அவர்களின் கொள்கையை ஏற்கும் வரை நம்மிடத்தில் திருப்திபட மாட்டார்கள் என்று சொல்வது போல் தான் அவர்களின் நடத்தை உள்ளது. தொழுகையில் அல்லாஹ்வையும் அதிகாரத்தில் அமெரிக்காவையும் பயப்படும் முஸ்லீம் பெயர் தாங்கி அரசுகளும் இவ்விஷயத்தில் மெளனமாகவே உள்ளன.

துஆக்கள் உடனே ஏற்று கொள்ளப்படும் ரமலானில் நம் பர்மிய சகோதரர்களுக்காக கையேந்துவோம். துஆ எனும் வலிமையான ஆயுதத்தை கொண்டு நம் சகோதரர்கள் துயர் நீங்க கண்ணீர் மல்க கையேந்துவோம்.