Saturday, October 6, 2012

பாலைவன விழுதுகள்


அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது ( திருக்குரான் 12:111) என்று அல்லாஹ் தன் இறுதி வேதத்தில் சொல்வதைப் போல் நம் வரலாறுகளை படிப்பதோடு அதிலிருந்து நாம் படிப்பினையும் பெற வேண்டும். நம் வரலாறுகளை நாம் படிக்காமல் அலட்சியப்படுத்தியதின் விளைவு நம் எதிரிகளால் திரிக்கப்பட்ட வரலாற்றைப்  படித்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்தியாவில் ஏகத்துவத்தை நிலைநாட்டிய முஹம்மது பின் கஜ்னவியை கோயிலை இடித்த மத வெறியராகவும் நிர்வாக சீர்திருத்தத்தின் சிங்கமாக விளங்கிய முஹம்மது பின் துக்ளக்கை கோமாளியாகவும் பார்க்கப் பழகி விட்டோம்.

அமெரிக்காவில் இஸ்லாம் பரவுவதற்கு முக்கியக் காரணமான, மால்கம் X என்று அறியப்படும் மாலிக் அல் ஷாபாஸ்தன் கடந்த கால வரலாற்றை அறியாத சமூகத்தால் புதிய வரலாறை படைக்க இயலாதுஎன்று கூறியுள்ளார்.

எனவே பாலைவன விழுதுகள் எனும் இத்தொடரின் மூலமாக நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய சமூகத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம். நபியவர்களின் தோழர்கள் பாலை மணலில் ஆழ ஊன்றிய விழுதுகள்!
அவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்து எப்படி மாறினார்கள் தெரியுமா?
ரலியல்லாஹ் அன்ஹு ரலூ அன்ஹு, அல்லாஹ் அவர்களை பொருந்தி கொண்டான், அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள் ( திருக்குரான் 58:22)  என்று அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறும் சமூகம் எப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது தெரியுமா?

பக்கத்து வீட்டுகாரனுடைய ஒட்டகம் தன் வீட்டு தோட்டத்தில் புல் மேய்ந்து விட்டால் அதற்காக வாள் எடுப்பதோடு நின்று விடாமல் இறக்கும் தருவாயிலும் தன் இளவலை அழைத்து பக்கத்து வீட்டுக்காரனை பழி வாங்கினால்தான் என் ஆன்மா சாந்தி அடையும் என்று சத்திய பிரமாணம் வாங்கும் அளவு கொலை வெறி பிடித்த மக்களாய்-

உலகையே தங்களின் இனத்திமிரினால் அரபி என்றும் அஜமி என்றும் பிரித்ததோடு ட்டுமல்லாமல் தங்களுக்குள்ளேயே பல்வேறு கோத்திரங்களாய் சண்டையிட்டு வாழ்ந்த காட்டுமிராண்டி மக்களாய்-

பெண்களை வெறும் போகப்பொருளாக, அணுகும் மக்களாய்

தகப்பன் முடித்த பெண்ணையே அவன் இறந்து விட்டால் உடமையாக்கிக் கொள்ளும் மக்களாய்-

பெற்றெடுத்த தம் பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கும் அளவு மோசமான நடத்தை கொண்ட மக்களாய்-

மறுவுலக வாழ்வா ! அப்படி ஒன்று உண்டா? என்ன நாங்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட்ட பிறகும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா என்று நக்கல் நையாண்டி செய்து இவ்வுலக வாழ்வே சதம் என்று குடியும் கூத்துமாகவே காலத்தைக் கழித்த மக்களாய் வாழ்ந்து வந்தார்கள்

இவர்கள்தான்,

யர்முக் போர்க்களத்தில் நா வறண்டு உயிர் இழக்கும் தருவாயில்கூட சக தோழருக்காக, தண்ணீரை தியாகம் செய்பவர்களாக மாறிப்போனார்கள்.

இன்றும் மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், குலத்தின் பெயரால், இயக்கத்தின் பெயரால், நாட்டின் பெயரால் பிரிந்து கிடக்கும் நமக்கு அச்சமூகத்தை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கும்

ஆம்! ரோமாபுரியைச் சேர்ந்த சுஹைபும் பாரசீகத்தைச் சேர்ந்த சல்மான் பார்ஸியும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிலாலும் நாட்டு எல்லைகளைக் கடந்து அவ்வரபு சஹாபக்களோடு ஒரு கொள்கையின் கீழ் கட்டுண்டு கிடந்தார்கள்.

பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த சமுதாயம் அனாதையான பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க சீட்டுக் குலுக்கி போட்டா போட்டி போடும் சமுதாயமாக மாறிப்போனார்கள்.

மறுமையை நம்பிய காரணத்தால், மறைவில் புரிந்துவிட்ட விபச்சாரக் குற்றத்தை, இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் தாமே முன்வந்து சொல்லி, கல்லால் அடித்துக் கொல்லப்படும் தண்டனையை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் சமுதாயமாக மாறிப்போனார்கள்.

தாயின் காலடியில் சேயின் சுவனம் உள்ளது என ஸஹாபாக்கள் தெளிவாக விளங்கிய காரணத்தால்தான் ஒரு கவிஞர் இப்படிச் சொன்னார் :
பிறந்தவுடன் பெண்களை சுவனத்திற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில்
பெண்களின் காலடியில் சுவனத்தை இறக்குமதி செய்து காட்டியது இஸ்லாம்

அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப் பெற்றால் அவர்களது உள்ளங்கள் நடுநடுங்கும் என்று திருமறை சொல்வதற்கேற்ப வாழ்ந்தவர்கள் என்பதற்கேற்ப ஒரு இணைய தளத்தில் பார்த்த  பொருத்தமான ஒரு கவிதையை பதிவு செய்கிறேன்.
சத்தியத்தை சுமந்த மனிதர்களே
அல்குரானை தம் அசைவுகளால் அணிந்து காட்டியவர்களே
தூக்கமின்மையை தம் துப்பாக்கி ஆக்கி கொண்டவர்களே
இரவுகளும் பகலான தோர் வெளிச்ச தேசத்தின் சிற்பிகளே
எங்கள் உயிர்சுட்டுகளால் உங்களை நினைவு கூறுகிறோம்

அல்லாஹ் என்றால் அழுதவர்கள்
உயிர் வரைக்கும் கொடுத்தவர்கள்
கொடுத்ததற்கே உரைத்தவர்கள்
அந்த பாலைவனத்தின் ஏழை ஜனாதிபதிகள்
மூச்சு விடும் கபுரடிகளில் முஸ்லீமாய் உறங்கி கொண்டிருப்பவர்கள்

அந்த நிஜ உணர்ச்சிகளை இந்த  எழுத்துகளில் கலக்க முயற்சித்திருக்கிறேன்.
ஈமானிய குளிரோடைகள் நமது இறுகிப் போன இதயங்களைத் தொடட்டும்.
விழிகளும் நெஞ்சும் ஒரு கசிவு நோக்கி நகரட்டும்.
அந்த ஈரத்தில் நனைந்து இன்ஷா அல்லாஹ் இனிய விருட்சங்கள் உயிர் கொள்ளட்டும்.

வரும் இதழிலிருந்து ஒவ்வொரு வாரமும் நமக்கு அறிமுகமான, அறிமுகமில்லாத ஸஹாபாக்களின் வாழ்விலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு சுவையான படிப்பினை அல்லது சம்பவத்தைப் பார்க்க இருக்கின்றோம். ஆதாரபூர்வ தகவல்களின் அடிப்படையில் இத்தொடர் அமைய “Hayatus Sahaba”, “Men around the Messenger”, “தோழர்கள்” , “அண்ணல் நபிகளாரின் அருமை தோழர்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை உசாத்துணையாகக் கொண்டுள்ளேன்.
இத்தொடரை வாசிப்பதோடு மட்டுப்படுத்திக் கொள்ளாமல் இன்ஷா அல்லாஹ் முடிந்த வரை வாழ்ந்திடுவோம்.

No comments: