Friday, June 17, 2011

இஸ்லாமிய ஆட்சி தேவையா ? - விமர்சனங்களுக்கு பதில்



உலக முஸ்லீம்களின் ஓரே தலைமையான கிலாபா 1924ல் வீழ்த்தப்பட்ட பிறகு முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. 30,40 வருடங்களுக்கு முன் கிலாபாவை கொண்டு வர வேண்டும் என்று ஒரு சில சிந்தனையாளார்களால் விதைக்கப்பட்டது இன்று அல்ஹம்துலில்லாஹ் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை குலைக்கும் விதமாய் சில அறிஞர்கள் கிலாபாவின் சிந்தனையை இளைஞர்களில் உள்ளத்திலிருந்து அகற்றும் விதமாய் கிலாபத்துக்கான எதிரான வாதங்களை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கின்றனர். சமீபத்தில் ஒரு அறிஞரால் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை முக புத்தகத்தில் (Face book) சில சகோதரர்களால் எடுத்து வைக்கப்பட்டு பரப்பப்படுகிறது. சத்தியத்தை அறிந்தவர்கள் அதை மக்களுக்கு எடுத்து சொல்வது கடமை எனும் அடிப்படையில் அப்பிராசாரங்களையும் அதற்கான விளக்கங்களையும் இங்கு தருகிறோம்.


மஞ்சள் கலரால் ஹைலைட் செய்யப்பட்டிருப்பவை விமர்சனங்கள். அதற்கான விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. படித்து முடிவு செய்து கொள்ளுங்கள். நேர்வழியில் நிலைத்திருக்க அல்லாஹ் அருள் புரியட்டும்



///  இஸ்லாமிய ஆட்சியை, கிலாஃபத்தை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் இலக்கைக் கொண்டே நுபுவ்வத்நபித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும்.   ///
எத்தீனை, வாழ்க்கை நெறியை நூஹூக்கு நாம் வழங்கினோமோ …………………………………………………… தீனை நிலை நிறுத்துங்கள், அதில் பிரிந்து விடாதீர்கள் (42 :13)
அவன் தான் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான், ஏனைய மார்க்கங்களை விட மேலோங்க செய்ய வேண்டும் என்பதற்காக (61 :9)
மேற்கண்ட வசனங்களை போல் ஏகப்பட்ட வசனங்கள் திருமறையில் உள்ளது.
இப்போது சொல்லுங்கள் நிலை நாட்டுதல், மேலோங்க செய்தால் என்ன என்று ? அதை எப்படி கிலாபா இல்லாமல் செய்வீர்கள்?

///   இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.   ///
இதுவும் சரியான வாதமன்று. ஏனென்றால் முஸ்லீம்களுக்கு முழுமையான முன்மாதிரியாக அண்ணலாரை தான் பின்பற்ற இறைவன் கட்டளையிட்டிருக்கிறான். மூஸா (அலை) அவர்களின் தவ்ராத்தில் சில நல்ல விஷயங்கள் இருக்கிறதே என்று உமர் (ரலி) சொன்ன போது அண்ணலார் தெளிவாக சொன்னார்கள் “மூஸா உயிரோடு இருந்தாலும் என்னை தான் பின்பற்ற வேண்டி இருக்கும்”

///நபி யூசுப் (அலை) அவர்கள், இஸ்லாமிய ஆட்சியல்லாத ஓர் ஆட்சியின் கீழ் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்கள். அந்த ஆட்சியின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துள்ளார்கள்.///
இதற்கான விளக்கம் நமது தளத்திலேயே “ யூசுப் (அலை) ஜாஹிலிய்யா அமைப்பில் பணியாற்றினாரா” எனும் கட்டுரையை பார்க்கவும்

//// நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தாம் அனுப்பப்பட்டதாக எந்தவொரு கட்டத்திலும் குறிப்பிட்டதே இல்லை.

குறைந்தபட்சம் மக்காவில் 13 ஆண்டு காலம் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதாவது, இஸ்லாமிய ஆட்சியே எனது குறிக்கோள் என்று பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்காவில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா? என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும் (ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

(
பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.

அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி)
நூல்: புகாரி 3612, 3852////

இஸ்லாமிய ஆட்சியை அமுல்படுத்துவது குறித்து அண்ணலாருக்கு எவ்வித அக்கறையுமில்லை என்று நிறுவ முயல்வோர்க்கு அவர்கள் உதாரணத்திற்கு எடுத்து காட்டியுள்ள ஹதீதிலேயே அதற்கான சான்று உள்ளது. ///அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள் என்று கூறினார்கள்./// இஸ்லாம் முழுமைப்படுத்தப்படும் என்றால் எப்போது இஸ்லாத்தின் சட்டங்கள் ஆட்சி செய்யும் போதா அல்லது இன்னொரு கொள்கையின் கீழ் ஒரு மதமாக இஸ்லாம் தன்னை தக்கவைத்து கொள்ள போராடும் போதா. மேலும் இந்த ஹதீதில் இஸ்லாமிய ஆட்சி வருவதற்கு முன் அவசரப்படாதீர்கள் என்றும் நபி (ஸல்) அறிவுறுத்துகிறார்கள்.

//// எனவே இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வாதம் புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், ஒற்றுமை ஒன்றையே மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்கிறோம்.

சமாதி வழிபாட்டையும், மத்ஹபுகளையும் கண்டித்துப் பேச வேண்டும் என்றால் இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்தால் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு ஆட்சி ஏற்படுத்தப்பட்டாலும் அது எப்படி இஸ்லாமிய ஆட்சியாக இருக்க முடியும்
? ///

இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால் ஜனநாயகத்திற்கும் இஸ்லாத்திற்குமா சம்பந்தம் ? என்ன சொல்ல வருகிறார்கள் ? இஸ்லாத்துக்கு முரணாண கொள்கைகளான ஜனநாயகம், தேசியவாதம், மதசார்பின்மை போன்றவைகளுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று சொல்ல வருகிறீர்களா ?

இஸ்லாமிய ஆட்சியை எதிர்ப்போர்கள் அடிக்கடி கிலாபா ஏகத்துவத்துக்கு எதிர்ப்பானது என்று ஒரு பொய் பிரசாரம் செய்கின்றனர். இப்னு தைமிய்யா அவர்களின் கூற்றை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாய் இருக்கும் “ ஏகத்துவம் முழுமைப்படுத்த வேண்டுமானால் கிலாபா அவசியம் “. ஆம் விரலை ஆட்டுவதும் நெஞ்சில் கை வைப்பதும் 8 ரக் அத் தொழுவது மாத்திரம் தவ்ஹீத் அல்ல. முழுமையான தவ்ஹீதே இறை சட்டங்களை பின்பற்றுவதில் தான் உள்ளது. அதனால் தான் அதீ இப்னு ஹாதிம் (ரலி) யிடம் அல்லாஹ்வின் தூதர் கிறிஸ்துவர்கள் வேதத்திற்கு மாற்றமாக தங்கள் பாதிரிமார்களின் சட்டங்களுக்கு அடிபணிவதை பாதிரிமார்களை இலாஹ்வாக எடுத்து கொள்வதற்கு சமம் என்று சொன்னார்கள். குரான் சுன்னாவை மட்டும் அடிப்படையாக கொண்ட ஆட்சியை ஏற்படுத்துவது தான் கிலாபாவின் நோக்கம் என்பதை ஏன் மறந்து போகிறார்கள்.

//// இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும்; அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர். இதுவும் அபத்தமான வாதமாகும். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்தியாவில் நமக்கு உள்ள பிரச்சார உரிமை, வணக்க வழிபாட்டு உரிமைகள் கூட இஸ்லாமிய ஆட்சி உள்ளதாகக் கூறும் நாடுகளில் வழங்கப்படுவதில்லை.

நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது
.///
முதலில் உலகில் எங்குமே இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை என்பதே நம்முடைய வாதமாகும். இந்தியாவில் விபசாரத்தையும் மதுவையும் ஹராமாக்க வேண்டுமானால் கிலாபா இல்லாமல் முடியாது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற போர்களில் கூட ஏராளமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இஸ்லாமிய ஆட்சியை மையமாய் வைத்து கொல்லப்பட்டதால் இஸ்லாமிய ஆட்சி கூடாது என்பதற்கு என்ன சான்று?

பைஅத் குறித்து விளக்கம் அளிப்பதற்கு முன் இக்குப்ர் நடைமுறையில் தேர்தலில் வென்று பின் சட்டமன்றத்தில் உறுப்பினராக பதவியேற்கும் முன் பதவி பிரமாணம் எடுப்பதற்கும் இவர்கள் விமர்சிக்கும் பைஅத்க்கும் என்ன வித்தியாசம் விளக்க முடியுமா ?

இறுதியாக ஒரு கேள்வி – நீங்கள் எதை ஆசைப்படுகிறீர்கள். இவ்வுலகை எவன் படைத்தானோ அவ்வல்லோனின் வார்த்தைகளே இவ்வுலகை ஆள வேண்டும் என்றா அல்லது ஷிர்க்கான கொள்கைகள் இவ்வுலகை ஆள வேண்டும் என்றா, முந்தையது தான் விருப்பம் என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு கொள்கையும் நிலைபெற அதிகாரம் வேண்டும்.  எக்கொள்கையும் இன்னொரு கொள்கையின் நிழலின் கீழ் வாழ விரும்பாது. எனவே முடிந்தால் இஸ்லாமிய ஆட்சி நிலைபெற உதவி செய்யுங்கள் அல்லது உபத்திரமாவது செய்யாமல் அமைதியாய் இருங்கள். குப்ர் கொள்கைகள் தான் இவ்வுலகை ஆள வேண்டும் என்று ஆசைப்படுவீர்களானால் நம்முடைய விவகாரத்தை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவோம். 

Monday, June 6, 2011

அல் குர்ஆன் ஸுன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ…!

(இஸ்லாத்தின் பெயரால் இணைய வேண்டிய இதயங்களில் வெறுப்பும், குரோதமும் கோலோச்சி கொண்டிருக்கும் நிலையில், உண்மையான சகோதரத்துவம் மலர்வதற்கு உதவலாம் எனும் நல்லெண்ணத்தில் வெளியிடப்படுகிறது.  வாசகர்கள் படித்து கருத்து தெரிவிக்கவும்)

நேற்றுவரை சிரித்தார், பேசினார், அழைக்கும்போது வந்தார், நன்மைகளை வளர்ப்பதற்கு பரஸ்பரம் ஒத்துழைத்தார், செலவு செய்தார், உழைத்தார். இன்று அவரைப் பார்த்து பரிதாபப்படுவதா? அல்லது அவருக்கு நடந்ததை எண்ணிக் கவலைப்படுவதா? புரியவில்லை.

இன்று அவர் சிரிப்பதில்லை, பேசுவதில்லை, அழைத்தால் வருவதில்லை சமூகத்தின் நிலை குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கோபப்படுவதாகவே உணர முடிகிறது. வெறுப்படைந்திருக்கிறார் முகத்தை திருப்பிக் கொள்கிறார் நாம் பேச முற்பட்டால் எரிச்சலடைகிறார். அவர் பேசத் துவங்கினால் விமர்சிக்கிறார் மனிதர்களை அவமதித்துப் பேசும் தொனியை இப்போது அவர் நன்கு கற்றிருக்கிறார். இவை யாவும் இப்போது அவருக்கு மிக உயர்ந்த நன்மைகளாகத் தெரிகின்றன.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

காரணம் இப்போது அவர் இஸ்லாம்(?) படித்திருக்கிறார். யாரோ அவரை அழைத்துக் கொண்டு போய் இஸ்லாம்(?) சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்த மாற்றம்.

நேற்று இவரிடம் இருந்த இஸ்லாம் நல்ல பல குணங்களை அவரிடம் வளர்த்து விட்டிருந்தது. அவர் பிற மனிதர்கள், அறிஞர்கள், இமாம்கள், இயக்கங்கள் மீது வெறுப்படைந்திருக்கவில்லை. மனிதர்களோடு நல்லவராக இருந்தார். இன்று அவருக்கு இஸ்லாம்(?) கிடைத்திருக்கிறது நேர்வழி பெற்றிருக்கிறார். அதனால் சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களையும் உலமாக்கள், அறிஞர் பெருமக்களையும் இவர் வெறுக்கிறார் விமர்சிக்கிறார்.

சகோதரர்களே, சகோதரிகளே! புரிகிறாதா? இன்று போதிக்கப்படும் இஸ்லாம்(?) எத்தகையதென்று?. எந்தக் காரணமும் இல்லாமல் நேற்றைய நற்குணங்களை இன்றைய இழி குணங்களாக மாற்றிவிடுகிறது இன்று பலரால் போதிக்கப்படுகின்ற இஸ்லாம். இது இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் செய்யும் நன்மை என்று அந்த அழைப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா?

சீரான நடத்தையும் நேரிய ஒழுக்கமும் உள்ளவர்கள் பிறரைப் பற்றித் தப்பாக நினைப்பதில்லை. ஏதாவது ஒரு நன்மையான காரியத்திற்கு அழைத்தால் உடனே சென்று விடுகிறார்கள். அழைப்பவர்கள் வெறுப்பு, குரோதம் போன்ற விஷங்களை தங்களது உள்ளங்களில் நிறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது இந்தத் தூய்மையான உள்ளம் கொண்டவர்களுக்குத் தெரியாது. நல்லவற்றைக் கேட்போமே என்ற தூய்மையான எண்ணத்தில் இவர்கள் அந்த அழைப்பாளர்களிடம் செல்கிறார்கள்.

அங்கு சென்றவுடன் இவர்களது இஸ்லாமிய ஆர்வத்தை பிழையான வழியில் மெதுவாக திசை திருப்ப ஆரம்பிக்கிறார்கள் அந்த அழைப்பாளர்கள். அவர்கள் கூறுகிறார்கள்:

“இஸ்லாத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது. (யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலுமல்ல) எம்மத்தியில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களாலும் அவர்கள் சார்ந்த அறிஞர்களாலும்தான்.”

-என்று கூறி, மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) முதல் கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி வரை இஸ்லாமிய உலகில் செல்வாக்குப் பெற்று விளங்கும் மாண்புமிகு அறிஞர்களையும் உலகளாவிய இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகப் பாடுபடும் அமைப்புக்களையும் இஸ்லாமிய மரபுகள் அனைத்துக்கும் அப்பால் நின்று விமர்சிக்கவும் தூற்றவும் துவங்குகின்றனர்.

இஸ்லாத்தின் பரம வைரிகளாக செயற்படும் யூத, ஸியோனிஸ ஆதரவு சக்திகள் மீதும் குறிப்பாக பலஸ்தீன், கஷ்மீர், ஆப்கானிஸ்தான், ஈராக் முஸ்லிம்களைக் கொன்றொழிக்கும் அரக்கர்கள் மீதும் அரபு, முஸ்லிம் சமூகத்தை மத்திய கிழக்கில் இஸ்லாத்தின் எதிரிகளது நலன்களுக்காக அடகு வைத்திருக்கும் அமெரிக்காவின் அடிதாங்கிகளான பொம்மைத் தலைவர்கள் மீதும் காட்டாத வெறுப்பையும் குரோதத்தையும் இஸ்லாத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட இந்த உத்தமர்கள் மீது கொட்டித் தீர்ப்பதுதான் இந்த அழைப்பாளர்கள் போதிக்கும் இஸ்லாமாகும்.

இவர்கள் இஸ்லாமிய அமைப்புக்களையும் அறிஞர்களையும் விமர்சிப்பதற்கும் தூற்றுவதற்கும் கையாளும் உத்திகள் பண்பாட்டு வீழ்ச்சியின் இறுதி எல்லைக்கே இவர்கள் சென்று விட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன.

இஸ்லாமிய அறிஞர்களின் எழுத்துக்களிலிருந்தும் பேச்சுக்களிலிருந்தும் சிறு சிறு துண்டுகளை வெட்டி எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றை எழுத்துருவிலோ வீடியோ ஓடியோ ‘கிளிப்ஸ்’ களியோ தொகுத்து வைத்துக் கொள்கிறார்கள். அல்லது இவ்வறிஞர்கள் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளின் நிழற்படங்களைத் தேடி வைத்துக் கொள்கிறார்கள்.

இஸ்லாத்துக்காகவே தம்மையும் தமது வாழ்வையும் அர்ப்பணித்த அந்த அறிஞர்களின் வார்த்தையிலிருந்தும் வாழ்விலிருந்தும் சிறு சிறு துண்டுகளை முன் பின் தொடர்புகளற்ற விதமாகவும் பின்னணிகள் மறைக்கப்பட்ட நிலையில் வெட்டி வைத்துக் கொண்டு அவ்வறிஞர்களை மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். இந்தக் கீழ்த்தரமான குணத்தை பண்பாட்டு வீழ்ச்சியின் எல்லை என்று சொல்லாமல் வேறு எப்படி வர்ணிக்க முடியும்?

இந்தக் கீழ்த்தரமான அணுகுமுறையினூடாகவே இவர்கள் தங்களது உள்ளங்களில் இருக்கின்ற வெறுப்பு, குரோதம் எனும் விஷத்தை அப்பாவி உள்ளங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள். நாளடைவில் அந்த உள்ளங்களும் வெறுப்பு, குரோதங்களால் நிறைந்து வழிகிறது. முஸ்லிம் சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களை இன்முகத்துடன் பார்க்கவோ சிரிக்கவோ ஸலாம் சொல்லவோ உறவாடவோ முடியாதளவு பாரிய இடைவெளியை உள்ளங்களிடையே ஏற்படுத்தி சாகசம் புரிவதுதான் இவர்கள் வளர்க்கும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்களாகும். பிஞ்சு உள்ளங்களில்கூட இந்த விஷத்தைப் பாய்ச்சி சிறு வயதிலேயே உள்ளங்களை நாசமாக்கும் கைங்கரியத்தில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

விஷம் பாய்ச்சும் இந்த அழைப்பாளர்கள் உண்மையில் அப்பாவிகளா? அல்லது இஸ்லாத்தின் எதிரிகளது ஏஜன்டுகளா? இவர்கள் யூத, ஸியோனிஸ சக்திகளுக்கு எதிராக தங்களது வெறுப்பைக் காட்டாமல் யூத, ஸியோனிஸ சக்திகள் உலகில் யாரை அதிகம் வெறுக்கின்றனவோ அவர்கள் மீதுதான் தமது வெறுப்பை அதிகம் காட்டுகிறார்கள். உண்மையில் யார் இவர்கள்?

இவர்கள் ஏஜன்டுகளுமல்ல, அப்பாவிகளுமல்ல. இவர்கள் நோயாளிகள். இவர்களது நோய் என்னவென்றால், யார் மீதாவது வெஞ்சத்தை வரவழைத்து கொட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதுதான். வெறுப்புக் காட்டாமல், பகை பாராட்டாமல் இவர்களால் வாழ முடியாது. போதைவஸ்துக்கு ஒரு மனிதன் அடிமையாவது போல பகைக்கும் வெறுப்புணர்வுகளுக்கும் இவர்கள் அடிமையாகி விட்டார்கள். தூரத்தில் இருப்பவர்கள் மீது எப்போதும் வெறுப்புக் காட்டி பகை பாராட்ட முடியாது என்பதால் இவர்கள் பகை பாராட்டுவதற்கு யாரையாவது எப்போதும் தேடிக் கொண்டிருப்பார்கள். சிறிய முரண்பாடுகள் எழுந்தாலே போதும், உடனே இவர்களது உள்ளத்திலிருக்கும் பகையும் குரோதமும் வெகுண்டெழுந்து விடும். நேற்று மிக நெருக்கமாக இருந்தவர்களை இன்று பரம வைரிகளாக இவர்கள் ஆக்கிக் கொள்வார்கள்.

இத்தகையோர் தங்களுக்குள்ளேயே முரண்பட்டு, முரண்பட்டு விலகிச் செல்வதும் அவ்வாறு விலகிச் சென்ற ஒருவர் அடுத்தவரை பரம எதிரியாகப் பார்ப்பதும் வெளிப்படையான உண்மைகள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அணிகளையே உடைத்து தமக்குள் பிரிந்து எங்கனம் பரம வைரிகளாக மாறி இருக்கிறார்கள் என்பதை பெயர், ஊர்களோடு இங்கு சுட்டிக்காட்ட முடியும். எனினும், அதைத் தவிர்த்துக் கொள்கிறேன். காரணம் தஃவாக் களத்தில் உள்ள ஒரு நோயை சுட்டிக்காட்டவே நான் முயற்சித்துள்ளேன். அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தாம் என பெயர் குறிப்பிட்டுப் பேசி ஒரு சாரார் மீது வெறுப்பு, குரோதம் எனும் விஷம் ஏற்ற நான் முயற்சிக்கவில்லை.

தஃவாக் களத்தில் நாளாந்தம் பல நல்ல மனிதர்கள் வெறுப்பு, குரோதம் என்ற நோயால் பீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அத்தகையோர் நேற்று வரை மிக அன்பாகவும் அந்நியோன்யமாகவும் இருந்தார்கள். இன்று அவர்கள் நல்லெண்ணத்துடனும் மலர்ந்த முகத்தோடும் மக்களை சந்திக்கத் திராணியற்றவர்களாக திசை மாறியிருக்கிறார்கள்.

இன்னும் சொன்னால், சிலர் தம்மை வளர்த்துக் கொள்வதற்கும் தமது அமைப்பு தொடர்ச்சியாக நிலைத்து நிற்பதற்கும் ஈமானின் அடித்தளமான அன்பை வளர்ப்பதற்குப் பதிலாக ஜாஹிலிய்யத்தின் அடித்தளமான பகையையும் குரோதத்தையும் வளர்க்கிறார்கள். அவர்கள் இந்தப் பகையையும் குரோதத்தையும் தமது வாரிசுச் சொத்தாக அடுத்த பரம்பரைக்கும் புதியவர்களுக்கும் கொடுத்துவிட்டே செல்கிறார்கள்.

மக்களிடம் இருக்கும் இஸ்லாமிய ஆர்வத்தைப் பிழையான வழியில் திசை திருப்புவதன் மூலமே இந்த அக்கிரமத்தை இவர்கள் அரங்கேற்றுகிறார்கள். இத்தகையோரிடம் கற்பதனைத்தும் இஸ்லாம் என நினைக்கிறார்கள் அப்பாவி நன்மக்கள். அவர்கள் தங்களது உள்ளங்களில் இதுவரை காலமில்லாத வெறுப்பும் குரோதத்தீயும் கொழுந்துவிட்டெரிவதைப் பிழையென உணருவதில்லை. மாறாக, அடுத்தவர்கள் மீது குறிப்பாக, இஸ்லாமிய அறிஞர்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகள் மீதும் ஏற்பட்டுள்ள பகையும் வெறுப்பும் ஈமானிய வளர்ச்சி என்றே அவர்களுக்கு பாடம் புகட்டப்படுகிறது.

ஆக, ஈமானின் உச்ச கட்டத்துக்குத் தாம் சென்றுவிட்டதாக அவர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். விஷம் பரப்பும் இந்த அழைப்பாளர்களிடம் இஸ்லாம் கற்கச் சென்றவர்கள் ஓரிரு மாதங்கள் செல்லும்போதே அடுத்தவர்களை கடுமையாக வெறுக்கத் துவங்குகிறார்கள். நாலு விடயங்களைக் கேட்டுப் படித்த தம்மைப் போன்றவர்கள் நேர்வழிக்கு வந்துவிட்டதாக நினைக்கிறார்கள். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நூற்களை எழுதிய பேரறிஞர்களை வழிகேடர்கள் என்றும் நரகவாதிகள் என்றும் இவர்கள் முத்திரை குத்துகிறார்கள்.

இஸ்லாம் கற்கப் போன இடத்தில் வெறுப்பையும் பகையையும் குரோதத்தையும் வளர்த்துக் கொண்ட இது போன்ற அனுபவம் உங்களுக்குண்டா? சற்று சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறாயின் நீங்கள் கற்றது இஸ்லாம் அல்ல. மனிதர்களது உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி சந்தேகத்தைப் படர விட்டு வெறுப்பு, குரோதத்தை வளர்க்கும் ஷைத்தானின் வழிமுறையையே நீங்கள் கற்றிருக்கிறீர்கள். மனிதர்களிலும் ஜின்களிலும் இருக்கும் இத்தகைய ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு அல்லாஹ் எங்களை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறான்.

இஸ்லாம் கற்கப் போன இந்தக் கசப்பான அனுபவத்தைத் துறந்து ஓர் இனிப்பான அனுபவத்தை நோக்கி நீங்கள் வர விரும்பினால் ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தும் இஸ்லாமியக் கற்கை நெறிகளில் ஒரு முறை வந்து அமர்ந்து பாருங்கள். இஸ்லாத்தின் மகோன்னதங்களை உணரவும் அவற்றிலிருந்து தூரமாகியிருக்கும் சமூகத்தை அன்போடும் அனுதாபத்தோடும் நோக்கவும் அந்த சமூகத்தின்பால் உங்களுக்குள்ள பொறுப்புக்களை விளங்கவும் அந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கும் வழிகாட்டும். உங்களது இஸ்லாமிய ஆர்வத்தைப் பிழையான திசைகளில் திருப்பி உங்களது வளமான உள்ளத்தை வெறுப்பு, குரோதங்களால் நிரப்பும் இழிவான உத்திகளையோ அணுமுறைகளையோ நீங்கள் அங்கு சிறிதளவேனும் காண மாட்டீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.

அல்லது ஒரு சிலர் செய்வது போல வெளிப்படையாக அன்பையும் சகோதரத்துவத்தையும் பேசிவிட்டு திரைக்குப் பின்னால் பகையையும் குரோதத்தையும் வளர்க்கும் குரூர மனப்பான்மையையும் நீங்கள் அங்கு காண மாட்டீர்கள்.

களத்தில் பகை வளர்க்கிறார்களே விஷம் பரப்பும் அழைப்பாளர்கள், அவர்கள் குர்ஆனையும் ஸுன்னாவையும் பயன்படுத்தி இஸ்லாத்தின் எழுச்சிக்காக தாம் மட்டுமே அயராது உழைப்பதாகக் கூறி இஸ்லாத்தின் பெயராலேயே குரோதத் தீயை மூட்டுகிறார்கள். அந்தத் தீயால் நிச்சயம் எரியப்போவது அவர்களே!

இப்போதும் அவர்கள் அந்தத் தீயில் வெந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகத்தில் தீ மூட்ட வந்தவர்கள் தமக்குள்ளேயே அந்தக் குரோதத் தீ படர்ந்திருப்பதையும் அதனால் தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் தீராத பகை கொண்டவர்களாக மாறியிருப்பதனையும் உணராதவர்களாக இருக்கிறார்கள்.

நாமும் அவர்களுக்கெதிராக குரோதத் தீயை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. அந்த நோய் எம்மைத் தொற்றாமல் பாதுகாத்துக் கொள்வதே எம்மீதுள்ள பொறுப்பும் கடமையுமாகும். அதனைச் சரியாக நிறைவேற்றி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வெறுப்பு, பகை, குரோதம் போன்றன வளராதிருப்பதற்கு ஒத்துழைப்போமாக....

-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி-
நன்றி : அல் ஹசனாத்