Saturday, July 26, 2014

காஸா படுகொலைகள் - சபிக்கப்பட வேண்டியவர்கள் யூதர்கள் மட்டுமா ?

காஸாவில் மலரும் பிஞ்சு மொட்டுகள் முதற்கொண்டு முதியவர்கள், பெண்கள் என அப்பாவிகள் 800க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்து வரும் யூத சியோனிச தீவிரவாதிகள் சபிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்று கருத்திருக்க முடியாது. ஆனால் சபிக்கப்பட வேண்டியவர்கள் யூதர்கள் மட்டுமல்ல என்பது தான் சமீப கால செய்திகள் தரும் வேதனையான உண்மை.
ஆம் அல்லாஹ்வின் தூதர் எந்த உம்மத்தை ஒரு உடலுக்கு சமமானவர்கள், உடம்பின் ஒரு பாகத்தில் வேதனை ஏற்பட்டால் பிற பாகங்கள் அவ்வேதனையில் பங்கேற்பதை போல் பங்கேற்கும் என்று கூறினார்களோ அந்த உம்மத்தே அதன் தலைவர்களால் பலஸ்தீன மக்களுக்கு துரோகம் இழைக்கும் செய்தி நிச்சயம் ஆபத்தான போக்கின் அடையாளமே.
செசன்யா, காஷ்மீர், ஆப்கானிஸ்தான், சிரியா , ஈராக் போன்ற பகுதிகளை விட சிறப்பான ஒரு விடயம் பாலஸ்தீனுக்கு உள்ளது. அது தான் முஸ்லீம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ். எனவே பலஸ்தீன விஷயம் என்பது ஏதோ ஒரு நிலப்பரப்போடு சம்பந்தப்பட்ட விஷயம் மாத்திரம் அல்ல. மாறாக இஸ்லாத்தோடு நேரடியான சம்பந்தப்பட்டதாகும்.
கலீபா உமர் (ரலி) அவர்களால் வெற்றி கொள்ளப்பட்டு பின் சுல்தான் ஸலாஹுத்தின் அய்யூபி (ரஹ்) அவர்களால் வெற்றி கொள்ளப்பட்டு ஐக்கிய அயோக்கிய சபையின் உருவாக்கத்திற்கு பின் இங்கிலாந்து - பிரான்ஸ் போன்ற நாடுகளின் நரித்தனத்தால் நாடோடி வந்தேறிகளுக்கு இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கி கொடுத்த காலம் முதல் மீண்டும் அப்புனித பூமி நம் கையை விட்டு அகன்றுள்ளது. முதல் கிப்லாவுக்கு ஆபத்து என்றால் முதலாவதாக ஓடி வர வேண்டிய இரண்டாம் கிப்லாவை ஆட்சி செய்பவர்களே துரோகிகளாக மாறி போனால் முஸ்லீம் உம்மாவின் நிலை கவலைக்கிடமானது தான்.
காஸாவின் மீதான இனச்சுத்திகரிப்பு முழு வீச்சில் நடைபெறுவதற்கு இஸ்ரேலை விட முதன்மையாக குற்றம் சாட்டப்பட வேண்டியது எகிப்தின் சிசி என்பது அனைவரும் அறிந்த உண்மை. (வாய்ப்பிருந்தால் அது குறித்த தனி கட்டுரை பின்னர் வெளிவரும்). எகிப்தில் சாத்வீகமாக போராடிய இஹ்வான்களை வேட்டையாடிய சிசி தெளிவாகவே இஹ்வான்களின் தயாரிப்பான ஹமாஸை எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாலஸ்தீனத்துக்காக அயராது உழைப்பதாக தம்பட்டம் அடிக்கும் பல்வேறு அரபு நாடுகளும் இக்கூட்டு சதியில் ஈடுபட்டிருப்பது தான் வேதனையான விஷயமாகும். எகிப்து காஸாவுக்கு செல்லும் பாதைகளை மூடி வைத்த நிலையில் அமீரகத்தை சார்ந்த 40 மருத்துவ உதவியாளர்களுக்கு மட்டும் காஸா செல்ல அனுமதி அளித்தது. பின்னர் தான் அவர்கள் மருத்துவம் பார்க்க வரவில்லை, ஹமாஸ் குறித்து உளவு பார்க்கவே வந்தனர் என்ற விபரம் வெளிவந்தது.
இஸ்ரேலிய உளவு துறை வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள தெப்கா எனும் இணைய இதழ் காஸாவின் மீதான போரானது இஸ்ரேல், எகிப்து, சவூதியின் முக்கூட்டு சதி என்று தெளிவாக விளக்கியுள்ளது. அப்பத்திரிகையின் குறிப்பின் படி இம்மூன்று நாடுகள் பின் வரும் இலக்குகளை அடைவதற்காக ஒன்று சேர்ந்துள்ளன.

1. ஹமாஸின் ஆயுத வலிமையை இஸ்ரேல் அழிப்பதன் மூலம் அவர்களின் அரசியல் வலிமையை குறைத்தல் அல்லது இல்லாமல் ஆக்குதல்.
2. ஹமாஸை முற்றிலும் அழிப்பது உள்ளிட்ட அனைத்து இலக்குகளையும் அடைந்த பிறகே போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
3. அமெரிக்கா உள்ளிட்ட வேறு எந்நாட்டின் தலையீட்டையும் இப்போரில் நெதன்யாஹு, ஸிஸீ, அப்துல்லா அனுமதிக்க மாட்டார்கள்.
4. இஸ்ரேலின் போர் செலவுகளில் ஒரு பகுதியை சவூதி அரேபியா ஏற்று கொள்ளும்.
5. போர் ஒய்ந்த பின் வழமை போல் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் காஸாவின் புணரமைப்பு பணிகளுக்கு செலவு செய்வர். (சினிமாவில் வில்லன் குடிசையை எரித்து விட்டு பின் அவரே பணம் கொடுப்பது போல்)
6. ஹமாஸின் ராக்கெட்டுகள், ஆயுதங்கள், பங்கர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான ஆயுத பலத்தையும் முழுமையாய் ஒழித்தல்.
7. ஹமாஸை ஆயுத ரீதியாக அழித்த பிறகு, ஹமாஸின் அழிவால் ஏற்பட்ட வெற்றிடத்தை அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன் அத்தாரிட்டியை கொண்டு எகிப்தும் சவூதியும் மேற்கொள்ளும்.
சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா, எகிப்து ஜனாதிபதி சிசி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு ஆகியோர் போர் குறித்த தகவல்களை தொடர்ந்து தங்களுக்குள் பரிமாறி கொண்டனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்து மீடியா பிரசாரங்கள் மூலம் இஹ்வான்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பொய்கள் மூலம் எகிப்து மக்களுக்கு மத்தியில் பலஸ்தீனத்துக்கான ஆதரவை சற்றே நீர்த்து போக செய்துள்ளது என்பது உண்மை. ஆனால் சவூதி ஹமாஸை தீவிரவாத இயக்கமாக அறிவித்தாலும் அம்மக்கள் அவ்வளவு சீக்கிரம் பலஸ்தீனை கைவிட்டு விட மாட்டார்கள் என்பதால் சவூதி வெளியே காட்டி கொள்ளாமல் கமுக்கமாக காரியம் ஆற்றுகிறது.
தம் பங்கு வெளிப்பட்டால் சவூதி மற்றும் முஸ்லீம் மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் பெரும்பாலும் சவூதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உரையாடல்கள் எகிப்து வழியாகவே நடைபெற்றுள்ளது. மேலும் முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை பரிமாறி கொள்ள கெய்ரோவின் ராணுவ விமான தளத்தில் இஸ்ரேல் போர் விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இப்படுகொலைகளில் பலஸ்தீன் அத்தாரிடியின் தலைவர் அப்பாஸுக்கும் மறைமுக பங்கு உள்ளதை சுட்டி காட்டும் ஆய்வாளார்கள் அதற்கு எடுத்து காட்டாக எப்போது காஸாவின் ஹமாஸ் போராடினாலும் அதற்கு ஆதரவாக இஸ்ரேல் மேல் தாக்குதல் நடத்தும் பலஸ்தீன் அத்தாரிட்டியின் ஆயுத பிரிவு இது வரை எத்தாக்குதலையும் நடத்தாததை குறிப்பிட்டு காட்டுகின்றனர்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155) என்ற குர் ஆனின் கூற்றுக்கேற்ப இஸ்லாத்தை மேலோங்க செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதை போல் இன்று காஸா மக்கள் அவதிக்குள்ளாகுகின்றனர்.
ஆக மொத்தம் இஸ்லாத்தை மேலோங்க செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற திருமறை வசனத்திற்கேற்ப இன்று காஸா மக்கள் அவதிக்குள்ளாகுகின்றனர். பிர் அவ்ன்கள் இல்லாமல் மூஸாவின் வரலாறும் நம்ரூத் இல்லாமல் இப்ராஹிமின் வரலாறும் அபூஜஹல்கள் இல்லாமல் ரசூல் (ஸல்) வரலாறும் முழுமை பெறாது. அது போல் இப்பாலஸ்தீனத்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காஸா மக்களும் அவர்களும் வழிநடத்தும் போராளி இயக்கமான ஹமாஸும் சித்தாந்த எதிரிகளான இஸ்ரேலையும் எதிரியாக தன்னை அறிவித்து கொண்ட சிசி முதலான துரோகிகளையும் தங்கள் பதவிகளுக்காக எவ்வித துரோகத்துக்கும் துணை போக தயங்காத அரபு மன்னர்களையும் வென்று இவ்வுலகிலும் இறை வாக்கை மேலோங்க செய்யவும் மறுமையில் தம்முடையை ரப்பை திருப்தியடைந்த ஆத்மாக்களாகவும் சந்திக்க நம் கைகளை ஏந்துவோமாக.


ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (61:10,11)

No comments: