Thursday, April 17, 2014

மமக, ததஜ, எஸ்டிபிஐக்கு கோடிக்கணக்கான நன்றிகள்


ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை ஆன பிறகும் முஸ்லீம்களில் சிலரை தவிர பெரும்பாலோனார் அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்பதை மறந்தவர்களாக, கிலாபத்தின் சிந்தனை இல்லா மனிதர்களாகவே திகழ்ந்தார்கள். முஸ்லீம்களை இந்திய அரசியலில் பிரதிநிதிப்படுத்தும் கட்சியாக முஸ்லீம் லீக் திகழ்ந்தது என்றாலும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளிலும் திமுக, அதிமுக போன்ற மாநில கட்சிகளிலும் முஸ்லீம்கள் பங்களிக்கவே செய்தனர்.

கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு உலகளாவிய அளவில் தோன்றிய "இஹ்வானுல் முஸ்லீமின்", " ஜமாத்தே இஸ்லாமி", "சன்னூசி இயக்கம்" போன்றவைகள் முஸ்லீம்களிடத்தில் இஸ்லாம் என்பது பள்ளிவாயிலின் நான்கு சுவர்களுக்குள் மாத்திரம் கடைப்பிடிக்க கூடிய சடங்கு அல்ல என்பதை உணர வைத்தது. இஸ்லாத்தை ஒரு வாழ்க்கை நெறியாக கொள்வதோடு இறைவன் தன் தூதர்களுக்கு சொன்ன இரண்டு கட்டளைகளான "அல்லாஹ்வை வணங்குங்கள், தாகூத்தை விட்டு விலகி இருங்கள்" என்பதை நடைமுறைப்படுத்த இழந்த கிலாபத்தை மீட்டெடுப்பது அவசியமானது மாத்திரமல்ல, அவசரமானது கூட என்பதை புரிய வைத்தது.

மேற்குறிப்பிட்ட சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களின் பாதிப்புகளில் உருவான மாணவர் இயக்கங்களும், தனிப்பட்ட வாழ்வில் நபிகளாரின் சுன்னத்தை பின்பற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தவ்ஹீத் அமைப்புகளும் சமீப காலம் வரை தேர்தல் அரசியலை எதிர்க்க கூடிய ஒன்றாக அல்லது குறைந்த பட்சம் ஆதரிக்காமல் இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தேர்தல் அரசியலில் தீவிரமாக இருந்த முஸ்லீம் லீக், தேசிய லீக் போன்றவை என்றுமே புனிதத்துவமான கண்ணோடத்தில் பார்க்கப்படாமல் வெறும் அரசியல் கட்சிகளாகவே புத்திஜீவிகளால் நோக்கப்பட்டது.

நபிகளார் (ஸல்) அவர்கள் வழித்தடத்தில் தூய சமூகத்தை சமைக்க விரும்பிய மாணவர் இயக்கங்களால் வார்த்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய ஆளுமைகளும் நபிகளார் காட்டிய வழியில் வணக்க வழிபாடுகளை என்ன விலை கொடுத்தேனும் செய்தாக வேண்டும் எனும் அடிப்படையில் உருவான தவ்ஹீத் சகோதரர்களும் இணைந்து சமூகத்துக்காக பாடுபடும் வகையில் கட்சி ஒன்றை தமுமுக எனும் பெயரில் தொடங்கினர். பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பின் உள்ள முஸ்லீம் உம்மாவின் உணர்வலைகளுக்கேற்ப இவ்வமைப்பின் மேல் பெரும் எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்ததை யாரும் மறுக்க முடியாது. பாக்கர் கைதுக்கு பின் பிற தலைவர்கள் கைதாகாமல் தடுக்கவே நடந்த பேரணி எனும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தமுமுகவின் அரசியல் இஸ்லாமிய முலாம் பூசியதாக தகதகவென மின்னியது. இஸ்லாத்துக்கு முரணான குப்ர் செட்டப்பிலும் தம்மால் அணி திரண்டு நீதியை பெற முடியும் என்று நினைக்குமளவு அதன் செயல்பாடுகள் வீரியம் பெற்றன.

தேர்தல் அரசியல் காரணமாக முஸ்லீம் லீக் போன்ற அரசியல் கட்சிகள் மேலிருந்த வெறுப்பு சூழலில் தேர்தலில் ஈடுபட மாட்டோம் என்ற முழக்கத்துடன் சமூக பணிகளை முன்னிறுத்தி மேலும் தேவையேற்படும் போது நேரடி போராட்டத்திலும் ஈடுபட்டது நம்பிக்கை அளிப்பதாக இருந்ததுஇதன் அமைப்பாளர் ஒட்டு போடுவது ஹராம் என்று 1989ல் எழுதியவர் என்பதும் 1995ல் இதன் தலைவர் ஒட்டு போடுவது நாடாளுமன்ற வடிவில் இன்னுமொரு இலாஹ்வை ஏற்படுத்துவது என்றும் கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப நம்பிக்கையளித்த இவ்வமைப்பானது தேர்தல் நிலைப்பாடு காரணமாக இரண்டாக பிளவுண்டது. ஒன்று நேரடி தேர்தலிலும் இன்னொன்று அரசியல் செய்ய மாட்டோம் என்று சொல்லி அரசியல் செய்யும் அமைப்பாகவும் உள்ளது தெரிந்ததே. இதன் பின்னார் ஜிஹாத் ஒன்றே தீர்வு என்றும் பிற கட்சிகளின் பின்னால் செல்லாமல் தம் பின்னால் அணி வகுக்குமாறும் அறைகூவல் விடுத்து விடியல் காட்டிய மனித நீதி பாசறை பாப்புலர் பிரண்ட்டாக உருமாறி தேர்தல் அரசியலில் போட்டியிகிறது. மேலும் இத்துணைகண்டத்தின் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மெளலானா மெளதூதியால் (ரஹ்) உருவாக்கப்பட்ட ஜமாத்தே இஸ்லாமியோ வெல்பேர் கட்சி எனும் பெயரில் தொடை தட்டி கோதாவில் இறங்கிற்று.

இஸ்லாத்தின் அடிப்படையிலியே இவ்வுலகு வழி நடத்தப்பட வேண்டும், இறைசட்டங்களே இப்புவியை ஆள வேண்டும், இழந்த கிலாபத்தை மீட்டெடுப்பதே முஸ்லீம் உம்மா சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வை தேடும் முயற்சியில் முதல் படிக்கல்லாக அமைய முடியும் எனும் சிந்தனை கொண்ட இயக்கவாதிகளும் இவ்வமைப்புகளின் பின்னால் கொடி பிடித்து கோஷம் போட கூடிய மக்களாக மாறி போனார்கள். ஜனநாயகம் ஜாஹிலியா என்பவர்கள் எம்.எல். ஆனதும், ஒட்டு போடுவது ஹராம் என்று சொன்னவர் வெவ்வேறு தொகுதிகளில் வெவ்வேறு கட்சிக்கு ஒட்டு போட சொல்வதும் கிலாபத்தை கொண்டே கட்சிக்கு விடியல் தேடியவர்கள் தனித்து தேசிய அளவில் களம் காண்பதும் காலத்தின் கோலம் என்பதை தவிர வேறென்ன சொல்ல.



இப்போது தலைப்புக்கு வருவோம். குறைவாக இருந்த இஸ்லாமிய வாதிகளையும் ஜனநாயக தேர்தல் அரசியலில் தள்ளிய கட்சிகளுக்கு ஏன் நன்றி எனும் கேள்வி எழக்கூடும். ஆம் இவர்களின் இஸ்லாமிய இயக்க பாரம்பர்யம், மத்திய கிழக்கில் ஏற்பட்ட மல்லிகை புரட்சி, துருக்கியில் எர்துகானின் எழுச்சி,எகிப்தில் இஹ்வான்களின் ஆட்சி போன்றவை கடும் போக்கு கொண்ட இஸ்லாமிய வாதிகள் மத்தியில் கூட சிறு சலனத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. அவ்வாறான சூழலில் தான் ஜனநாயகத்தின் மீது சிறிதளவேனும் நம்பிக்கை உள்ளவர்களை ஜனநாயக பாதை தவறானது, கழிசடையானது என்பதை உணர வைத்த பெருமை நிச்சயம் இவ்வமைப்புகளையே சாரும் என்பதால் தான் கோடிக்கணக்கான நன்றிகள்.

ஆம். ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானது என்பதும் அல்லாஹ்வின் சட்டங்களுக்கே ஒரு முஸ்லீம் கட்டுப்பட வேண்டும் என்பதும் தெரிந்த விஷயம். ஆனால் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டால் இருக்கும் ஈமானும் பறி போய் விடும், கொஞ்ச நஞ்ச அஹ்லாக்கும் காணாமல் போய் விடும் என்பதை இவர்களின் நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளே பறை சாற்றுகின்றன.

மாற்று அரசியலை முன்னேடுத்த தமுமுகவை பாருங்கள். மமக என்று அரசியல் பிரிவை ஆரம்பிக்கும் போது "எங்களை விலைக்கு வாங்கும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை " என்று சொன்னவர்கள் பாமகவுக்கு இணையாக கட்சி மாறிய கூத்தை பார்த்தோம். ஒரு சீட்டு மட்டுமே கொடுத்ததால் திமுகவுடன் கூட்டணியை முறித்தவர்கள் இன்று அதே ஒரு சீட்டை பெற்று கொண்டு கலைஞர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் என்று சொன்னதை பார்த்தோம். நடுவில் எம்.எல். ஜெவை புகழ்வதற்காக அல்லாஹ்வின் லஹ்னத்தான சுனாமி எங்களுக்கு வராதா என்று மக்கள் ஏங்குகிறார்கள் என்று புகழ்ந்தது தனி கதை.

இவர்கள் தான் அரசியல் வாதிகள். ஆனால் ஒட்டு கேட்டு யாரிடமும் வர மாட்டோம் என்று கட்சி ஆரம்பிக்கும் போது சொன்னதற்கேற்ப தவ்ஹீதை காக்க தனிக்கட்சி தொடங்கிய ததஜவின் நிலை இதை விட மோசமாகவே உள்ளது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதல் துக்ளக் சோ வரைக்கும் தெரிந்த ஜெயா - மோடி உறவு தெரியாமல் உப்பு பெறாத ஆணையத்திற்காக அம்மாவை ஆதரித்தார்கள். பின் மக்களின் வெறுப்பை போக்கவும் வளைகுடா தொண்டர்களின் எதிர்ப்பினாலும் திமுகவுக்கு ஆதரவு என்றார்கள். அதிலும் திமுகவின் பிஜேபி அவாளாகவே கணிக்கப்படும் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவருக்கும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தவ்ஹீத் எதிர்ப்பு காரணமாக ஹைதர் அலிக்கு ஆதரவு தர மாட்டார்களாம். சமூக பிரச்னையை விட தனிப்பட்ட ஈகோ பிரச்னை தான் இவ்வரசியல் அரங்கில் பிரதானம் என்பதை உணர வைத்த ததஜவுக்கு நன்றிகள் சொல்ல தானே வேண்டும்.

இஹ்வான்களின் இந்திய பிரதிநிதியாகவே செயல்பட்ட பாப்புலர் நிலைமையும் அதே தான். அதிகாரம் அல்லாஹ்வுக்கே என்பதிலிருந்து அதிகாரம் மக்களுக்கே என்பதில் தடுமாற தொடங்கியவர்கள் எஸ்.டி.பி. என்றொரு அரசியல் கட்சி ஆரம்பித்தார்கள். அதன் செயல்பாடுகள் எந்தளவுக்கு என்றால் எஸ்.டி.பி. பற்றி விமர்சனம் செய்தால் ஒரே வார்த்தையில் அவர்கள் அரசியல் கட்சி என்று தாய்கழகமான பாப்புலர் பிரண்ட்டே சொல்லி விடுவார்கள். தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத போதும் பிஜேபி ஜெயித்தாலும் பரவாயில்லை , ஒட்டை பிரித்தே தீருவோம் என்று ராமநாதபுரத்தில் களம் கண்டுள்ளதே இதற்கு சாட்சி.


வெறும் மூன்று கட்சிகள் என்றில்லை, அனைத்து அரசியல் கட்சிகளின் நிலையும் அவர்கள் பதவிக்காக நடத்தும் நாடகங்களும் ஜனநாயகத்தில் மீது சிறிதளவேனும் நம்பிக்கை வரும் நிலை இருந்தால் அதை தகர்க்க கூடியதாகவே இருக்கிறது என்பது வெள்ளிடைமலை. இவர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது அல்லாஹ் நம்மை இதிலிருந்து காப்பாற்றியுள்ளான் என்பதற்காக நன்றி செலுத்தவும் பிறருக்கு இச்செய்தியை சொல்வதுமே ஒரு இஸ்லாமியவாதியின் கடமையாக இருக்க முடியும்.

2 comments:

அபூ முஹம்மத் said...

நிறைய புரிதல் பிழைகள். நம் சமூகத்தின் சங்கடமே இதுதான். அவரவர்க்குப் புரிந்தது தான் சரி என்று நினைப்பது. அல்லாஹ்வின் சட்டங்களை மட்டுமே பின்பற்றவேண்டும் என்பது சரியே. ஆனால் ஒரு பன்மைச் சமூகத்தில், மாற்று சமூகங்களும் கலப்புச் சட்டங்களும் கோலோச்சும் பகுதியில், ஜனநாயகம் ஹராம் என்று தன்னைத் தானே ஒதுக்கிக் கொள்ள இஸ்லாம் சொல்லித்தருகிறதா? எங்கே?

Anonymous said...

அன்பு சகோ. அபூ முஹம்மத் மனிதன் எனும் முறையில் இக்கட்டுரையில் தவறு இருக்கலாம். அடிப்படையில் ஒரு கேள்வி நான் தெளிவு பெற - வட்டி என்பது எல்லா காலத்திலும் ஹராம் தான் , நாம் பன்மைத்துவ சமூகத்தில் வாழ்ந்தாலும், நாம் ஒதுங்க முடியா அளவு நம்மோடு கலந்திருந்தாலும் என்பதை ஒத்து கொள்வீர்கள் என நம்புகிறேன். என் கேள்வி ஜனநாயகம் ஹலால் என்று சொல்கிறீர்களா ? ஹலால் என்றால் மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக எடுத்து கொள்ள இஸ்லாம் அனுமதி அளிக்கிறதா ?