Sunday, November 6, 2011

ஹஜ் பெருநாள் சிந்தனை : இந்த வணிகம் சிறந்தது - செய்வோமா?

மீண்டும் ஒரு முறை இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கையை நினைவு கூறும் விதமாக ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். உம்மா என்பதற்கு விளக்கமளித்த அந்த இறைத்தூதரின் வாழ்க்கையை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். இன்னும், அவரிடம் அவருடைய இறைவன். ''(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்" என்று சொன்னபோது அவர், ''அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்" என்று கூறினார். (2:131) என தன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமையட்டும்.




சமுதாயம் என்றாலே அது அல்லாஹ்விற்கு முற்றிலும் கட்டுப்பட்டதாகவும் நன்மையை ஏவுவதாகவும் தீமையைத் தடுப்பதாகவும் இருக்க வேண்டும் என அல்லாஹ் கூறுவதற்கேற்ப தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தப் பணியை செய்து வந்தார்கள் இப்ராஹிம் (அலை) அவர்கள். இதனால் தனி மனிதர்களாக இருந்த போதிலும் அல்லாஹ் அவரை சமுதாயம் (உம்மா) என சிறப்பிக்கின்றான். ஜமாஅத் என்பது சத்தியத்தினை மையமாக கொண்டிருக்க வேண்டும். அது தனி மனிதராக இருந்தாலும் சரியே! என இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் தெரிவித்திருப்பதும் இதனைத்தான் நமக்கு தெளிவுபடுத்துகிறது.



எண்ணிக்கையை வைத்து இறைவன் வெற்றியளிப்பதில்லை. அவனை முழுமையாக நம்பி அவனுடைய கட்டளைகளை ஏற்று நடப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை வரலாறு நெடுகிலும் நாம் பார்க்க முடிகிறது. நபிகள் நாயகம் (ஸல்) ஒரு முறை கூறினார்கள் – உணவின் மீது ஒரு மிருகம் பாய்வதைப் போல உங்கள் மீது எதிரிகள் பாய்வார்கள். இதனைக் கேட்ட தோழர்களுக்கு சற்று ஆச்சரியம். இப்போது குறைவாக இருக்கும்போதே எதிரிகள் நம்மைத் தொட அஞ்சுகிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக இருந்தால் இந்த நிலை ஏற்படாதே என்ற சந்தேகத்தில் “நாம் அப்போது குறைவாக இருப்போமா?” என கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள் ”நீங்கள் வெள்ளத்தின் நுரையைப் போல அதிகம் இருப்பீர்கள்; ஆனால் உங்களது உள்ளத்தில் ‘வஹன்’ இருப்பதால் இந்த நிலை ஏற்படும் என்றார்கள். வஹன் என்பதற்கு விளக்கமளிக்கும்போது மரணத்தைக் கண்டு பயப்படுவதும் உள்ளத்தில் ‘வஹன்’ இருப்பதால் இந்த நிலை ஏற்படும் என்றார்கள்.



மரணத்தைக் கண்டு அஞ்சுவது ஏன் என ஒரு அறிஞரிடம் வினவப்பட்ட போது இந்த உலகத்திற்காக அனைத்தையும் தயார்படுத்தி மறுமையை பாழாக்கி விடும்போது எதனைத் தயார்படுத்தினீர்களோ அதனை விட்டு எதனை அழித்து விட்டீர்களோ அதனிடம் செல்ல யாருக்குத்தான் அச்சம் ஏற்படாது? என தெரிவித்தார்கள். இவ்வாறு நாம் வாழும் இந்த நிலையில் இறைவனுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்த இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வு நமக்கு மிகுந்த உத்வேகத்தையும் தெளிவையும் தருகிறது. அல்லாஹ்விற்காக என வாழும்போது அவனது படைப்பினங்கள் தனது தன்மையை மாற்றியும் உதவி செய்ய அல்லாஹ் வழி ஏற்படுத்துவான் என்பதை நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்ட போது அது இதம் தரும் குளிராக மாறியது நமக்கு உணர்த்துகிறது. இதைத்தான் ஒரு கவிஞர்,

நெருப்பு குளிரும்!


நீங்கள் இப்ராஹிம் ஆக இருந்தால்!


-எனக் குறிப்பிடுகிறார். நாம் நமது வாழ்வை இறைவனுக்கு உகந்ததாக மாற்றும் போது நெருப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. இஸ்லாமிய விரோதிகளின் வெறுப்பைக் கண்டும் கவலைப்படத் தேவையில்லை. இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் நாம் படிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் இறைவனுக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கும் உள்ளம். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு முறை கூறினார்கள் - நான் கொண்டு வந்ததற்கேற்ப உங்களின் வாழ்வு மாறாதவரை நீங்கள் உண்மையான முஸ்லிமாக மாற முடியாது என்றார்கள். நமது வாழ்வில் பஜ்ருத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுதாலே நமக்கு ஏதோ மிகப் பெரிய தியாகம் செய்த உணர்வு ஏற்படுகிறது. ஐவேளைத் தொழுகையை முறையாகத் தொழுதால் சுவனத்திற்கு சொந்தக்காரர்களாகி விட்டோம் என நினைத்துக் கொள்கிறோம். ஆனால் தொழுகை என்பது நமது கடமை. தொழாதவன் காஃபிர் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தெரிவித்தார்கள். ஒரு முஸ்லிம் அவனுடைய வாழ்வு முழுமையாக இறைவனுக்கு அடிபணியக் கூடியதாக மாற்றவேண்டும்.



இந்த உயிர், செல்வம் அனைத்தும் அல்லாஹ் தந்தது என்ற எண்ணம் யாரிடம் வந்துவிடுகிறதோ அவர்கள் தாங்கள் மிகப்பெரிய செயல்களை அல்லாஹ்வுக்காக செய்தாலும் தியாகம் செய்ததாக எண்ணிக் கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது;

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள். (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். ( 9-111) என கூறுகிறான்.



நாம் ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு பேனாவை ஒருவரிடம் இலவசமாக கொடுக்கிறோம். அந்த பேனாவை மீண்டும் அவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன், தாருங்கள் எனக் கேட்டால் அவர் உடனடியாக தந்து விடுவார். சிறிதும் யோசனை செய்ய மாட்டார். சொல்பவரின் வார்த்தையின் மீது சந்தேகம் இருந்தால் மட்டுமே கொடுப்பதற்கு தயங்குவார். பேனாவைத் தந்த அவர் நான் பேனாவை தியாகம் செய்து விட்டேன் எனச் சொன்னால் கேலிக்குரியதாக இருக்காதா? அவ்வாறே அல்லாஹ் நமக்கு உயிர், செல்வம் மற்றும் அனைத்தையும் தந்து திரும்பத் தாருங்கள் சுவனம் தருகிறேன் என்கிறான். கொடுத்த பொருளை எந்த பரிசுமில்லாமல் திரும்ப பெறுவதற்கு அவனுக்கு உரிமையிருக்கிறது. ஆனால் கருணையாளனான அந்த ரஹ்மான் கொடுத்ததை திருப்பிக் கொடுப்பதற்கு விலை மதிப்பற்ற, சாட்டை வைக்கும் ஓர் சிறிய இடம் இந்த உலகத்தையும் அதிலுள்ளதையும் விட சிறந்ததான சுவனத்தைத் தருகிறான். இந்த வணிகம் மிகச் சிறந்தது. செய்வோமா நாம்?
(இக்ரா துல்ஹஜ் மாத இதழில் வெளிவந்தது)

No comments: