Sunday, July 31, 2011

குற்ற உணர்வில்லாத ரமலான் வேண்டுமா

நம்மில் பலர் ஒவ்வோர் ரமலானிலும் இவ்வார்த்தைகளை சொல்கின்றோம்.


ஒரு வேளை ரமலானுக்காக நான் முன்னேற்பாடு செய்திருந்தால்….”


“ஒரு வேளை பஜ்ர்க்கு எழுந்து சுன்னத்து தொழுவதை முன்னமயே வழமையாக்கி இருந்தால்”


“நோன்பை குறித்து முன்னமே தெளிவாக தெரிந்து வைத்திருந்தால் முக்கியமற்ற கேள்விகளை கேட்பதிலும் அர்த்தமில்லா வினாக்களை தொடுப்பதிலிருந்தும் விலகியிருந்திருப்பேன்”

இப்படி பல்வேறு காரணங்களை கூறிக் கொண்டு இனி அடுத்த ரமலானையாவது ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும், சரியாக கண்ணியப்படுத்த வேண்டும் என்று சொல்லும் பலரில் நீங்களும் ஒருவரா, உங்களுக்காகவே இக்கட்டுரை.

ரமலான் மாதம் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னமேயே நம்மில் பலருக்கு அதை குறித்த ஆர்வம் வந்து விடுகிறது. ரமலான் முன்பு வரை நாம் தொழுகைக்கு செல்லாமல், இஸ்லாமிய முறைப்படி வாழ்வதில் அலட்சியம் காட்டியிருந்தாலும் ரமலானில் முறையாக முதல் பிறையிலிருந்தே சரியாக தொழ வேண்டும், 30 நாட்களும் நோன்பு நோற்க வேண்டும், முழு குரானையும் கரைத்து குடித்து விட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். அதற்காக நோன்பு நோற்கும் நேரம், விடும் நேரம் குறித்த நோன்பு அட்டைகளை எல்லாம் வாங்கி வைத்து கொண்டு ஒவ்வொரு சூப்பர் மார்கெட்டாக ஏறி இறங்கி பேரீத்தம் பழங்களையும் இன்ன பிற பொருட்களையும் வாங்கி தயாராகுவோம்.

அது போல் ஷஃபானின் இறுதியில் தொலைக்காட்சி முன்னாலும் இணையதளங்கள் முன்னாலும் உட்கார்ந்து ரமலான் பிறந்து விட்டதை உறுதிப்படுத்திய சந்தோஷத்தில் தாயகத்துக்கு தொலைபேசியில் செய்தியை சொல்வதில் பிஸியாக இருப்போம். ரமலானின் ஆரம்பத்தில் மிக உன்னதமாகவே இருப்போம். பின் சுருதி குறைந்து ரமலானின் கடைசியில் “ஹும் இந்த ரமலான் என்னில் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த ரமலானிலாவது முழுமையாய் பின்பற்ற வேண்டும்” என்று குற்ற உணர்வில் உழல்பவரா நீங்கள் ? அத்தகையதாக இல்லாமல் குற்றமற்ற ரமலானாக வரும் ரமலான் மாற ஒரு ஆங்கில இணையதளத்தில் என்னை பாதித்த ஒரு கட்டுரையிலிருந்து சுருக்கமாய் ஐந்து விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். (அவ்விணையத்தள லிங்கை எனக்கு அனுப்பிய சகோ. ஷாஹூலுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக)

வரும் ரமலான் குற்றமற்ற ரமலானாக மாற நாமும் இந்த ஐந்து விஷயங்களை பின்பற்றுவோமா.

1. எட்ட முடியா எதிர்பார்ப்புகள் : ஒவ்வோர் வருடமும் மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை சுமந்தவர்களாகவே நாம் ரமலானின் உள்ளே நுழைகிறோம். ரமலானில் 5 தடவை குரானை ஓதி விடுவேன், எல்லா நாட்களிலும் தஹஜ்ஜுத் தொழுகையில் முழு குரானையும் ஓதி முடித்து விடுவேன் என்று நம்மில் பலர் கூறுவதை கேட்கிறோம். மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது தவறல்ல, இன்னும் சொல்லப் போனால் இஸ்லாம் அதை ஊக்குவிக்கிறது. ஆனால் நமது நிலையை எண்ணிக் கொண்டு பின்பு எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும். வருடம் முழுவதும் குரானை தொடாமலேயே இருந்து விட்டு எப்படி ஒரு மாதத்தில் 5 தடவை குரானை முடிக்க முடியும். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் அதை செய்ய முடியவில்லையென்றால் அத்தோடு முழுமையாய் எதையும் செய்ய இயலாமல் அடுத்த ரமலானில் பார்த்து கொள்ளலாம் எனும் எண்ணத்தை தோற்றுவித்து விடும்.

2. செய்யும் செயலை தொடராக செய்யாமல் இருத்தல் : நாம் ரமலானில் செய்யும் இன்னொரு தவறு ரமலானின் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 2 ஜுஸ்வு என்று ஓதுவோம். பின்பு பத்து நாள் கழித்து 2 ஜுஸ்வு ஓத முடியவில்லையென்றால் சோர்வு ஏற்பட்டு அத்தோடு விட்டு விடுவோம். அப்படியில்லாமல் சிறிதளவு அமல் செய்தாலும் அதை ரமலான் முழுவதும் தொடராக செய்பவர்களாக மாற வேண்டும்.

3. அறிவை பெறுவதில் அலட்சியம் / நேர நிர்வாகத்தில் பலவீனம் : ரமலானை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய இஸ்லாமிய அறிவு குறைபாடாக இருப்பதும் இஸ்லாத்தை பற்றிய போதிய ஞானமின்மையும் ரமலானை வீணடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முஸ்லீம்கள் சாதாரணமாகவே நேர நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதிலும் ரமலான் வந்து விட்டால் ”ரமலானில் எல்லாம் நேர நிர்வாகமா, திட்டமிடலா, அவனவன் நோன்பு வைத்து சோர்வாக இருக்கிறான், தூங்குவதற்கே நேரமில்லை” என்று சொல்லி ரமலானை போக்கி விடுகிறோம்.

4. உடலை பாதுகாத்தல் : ரமலானில் உண்ணும் உணவின் ஊட்டச்சத்தும் தூக்கமும் பெரும்பாலும் பலியாகிவிடுகிறது. சஹரில் எழுந்து உணவு உண்ணாமல், நோன்பு திறக்கும் போது உடம்புக்கு கெடுதி ஏற்படுத்தும் உணவுகளை உண்டும் உடலை கெடுத்து கொள்கிறோம். அது போல் தூக்கத்துக்கு நேரத்தை சரியாக திட்டமிடாமல் தூங்காமலும் நம் உடல் நிலையை பாழாக்கி கொள்வதால் ரமலானில் சுறுசுறுப்பாக இல்லாமல் முடங்கி விடுகிறோம். நினைவில் வைத்து கொள்ளுங்கள் ரமலான் சுறுசுறுப்பின் மாதம், சோம்பேறிகளின் மாதம் அல்ல.

5. சரியான முன்னேற்பாடுகள் இல்லாதது : நாம் ரமலானுக்கு திட்டமிடுவதோ, தேவையான முன்னேற்பாடுகள் செய்வதோ இல்லை. நம்பிக்கையாளர்கள் சிறப்பாக அமல் செய்து அதிக கூலிகளை பெற்று கொள்ள கூடிய வசந்த காலமாக ரமலான் இருக்கிறது. ஆனால் அது வெறும் ரமலானில் மட்டும் அமல் செய்வதால் வருவதல்ல. மாறாக எப்படி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வருடம் முழுவதும் தடகள வீரன் பயிற்சி செய்கிறோனோ அது போல் ரமலானுக்கான பயிற்சியும் ரமலானில் கிடைக்கும் பயிற்சியும் முழு வருடமும் இருக்க வேண்டும்.

வரும் ரமலானை அல்லாஹ் நமக்கு குற்றமற்ற மனதுடன் திருப்தியான ரமலானாக ஆக்கி தருவானாக, ஆமின்.

No comments: