Sunday, July 24, 2011

மனித குலத்தின் விடுதலை இஸ்லாத்தின் மூலமே


உலகெங்கும் அனைத்து இடங்களிலும் தன் அதிகாரத்தை செலுத்தும் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களின் முதலும் கடைசியுமான இலக்கு அதிகாரமே தவிர வேறில்லை. கொடுங்கோன்மை ஆட்சியாளர்கள் தன் அதிகாரத்தை பலவீனமான மனிதனின் மேல் செலுத்தும் போது வேறு வழியின்றியும் எதிர்க்க திராணியற்றுமே அவன் அதை ஏற்று கொள்கிறான். ஏனெனில் மனித இயல்பு கொடுங்கோன்மையை இயல்பாக விரும்புவதில்லை. வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்த்தால் அடக்குமுறைகளால் மனிதனை அடக்கி ஆள்வது நீண்ட காலத்துக்கு முடியவில்லை என்பது தெரியும். அவ்வரலாற்றிலிருந்து நவீன கொடுங்கோலர்கள் எவ்வித படிப்பினையும் பெறுவதில்லை என்பது தான் சோகம்.

கடந்த சில நூற்றாண்டுகளாகவே உலகை ஆள வேண்டும் என்ற ஐரோப்பியாவின் வெறியால் மானுட சமூகத்திற்கு நேர்ந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தேசியவாதத்தின் பெயரால் ஐரோப்பிய தேசங்கள் முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களை நடத்தியதில் யாருக்கும் லாபம் இல்லை. ஆம் தோற்ற தேசங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டது என்றால் வென்ற தேசங்கள் எவ்வித படிப்பினையும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது உலக சட்டாம்பிள்ளையாக உலா வரும் அமெரிக்கா குறுகிய தேசியவாத சிந்தனையால் என்னோடு இரு அல்லது எதிரியாக இருஎன்று உலகை மேலாதிக்கம் செய்து வருவதை கண்கூடாக பார்க்கின்றோம்.
இப்படியாக கடந்த பல தசாப்தங்களாக மன்னராட்சி, சர்வதிகாரம், எதேச்சதிகாரம், காலனியாதிக்கம் என்று அச்சமூட்டும் பெயர்களாலும், சம காலத்தில் மக்களாட்சி, மத சார்பின்மை, தேசப்பற்று, உலகமயமாக்கல் என பசப்பூட்டும் வார்த்தைகளாலும் உலகை மேலாதிக்கம் செய்ய முயலும் அனைத்து கொள்கைகளுக்கும், எதேச்சதிகாரங்களுக்கும், கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ஓரே கொள்கை இஸ்லாம் மட்டுமே. மனித உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசினாலும் இன்று மேற்குலகுக்கு அச்சமூட்டும் ஓரே பெயர் இஸ்லாம் மாத்திரமே.
சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு முன் முஸ்லிம் உலகின் மீது கரிசனையோடு அமெரிக்கா இருந்ததை போல் சிலர் எண்ணுவது வெறும் மாயத்தோற்றமே. ஏனெனில் அப்போது தன் எதிரியான கம்யூனிஸத்தை ஒழிக்க முதலாளித்துவ அமெரிக்கா பயன்படுத்தி கொண்ட ஆயுதமே இஸ்லாம். அதனால் தான் இஸ்லாத்தின் கோரிக்கைக்கு தார்மீக ஆதரவு அளிப்பது போல் நடித்து இஸ்லாத்தின் மூலம் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவை வீழ்த்தியது.
சோவியத் ரஷ்யா வீழ்ந்த பிறகு இஸ்லாம் மட்டுமே தன் மேலாதிக்கத்தை எதிர்க்கும் கொள்கையாக இருந்ததால் தான் மூடி வைத்திருந்த இஸ்லாமிய எதிர்ப்புணர்வை வெளிப்படையாகவே அமெரிக்கா காட்ட தொடங்கியது. தெரிந்தோ தெரியாமலோ முஸ்லிம் நாடுகளின் மன்னர்கள் இவ்வுண்மையை உணர மறுக்கின்றனர். அத்தோடு மட்டுப்படுத்திக் கொள்ளாமல் இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் அமெரிக்காவின் திட்டத்துக்கு கருவிகளாகவும் பயன்படுகின்றனர் என்பது தான் வேதனைக்குரியது. மண்ணில் ஒருவரின் முகத்தை புதைத்து கொள்வதால் புயலின் திசையை மாற்றி விட முடியாது.
நிராகரிப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள மேற்குலகு ஒரு போதும் ஏகத்துவத்தின் அடிப்படையில் உள்ள இஸ்லாத்தை சகித்து கொள்ளாது என்பதை அமெரிக்க ஆதரவு அடிவருடிகளாக உள்ள முஸ்லிம் மன்னர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளை மறுக்க கூடிய மேற்குலகு வெறும் உலகாதய   நோக்கங்களுக்காக    எல்லாவித    ஒழுக்க   மாண்புகளையும் காற்றில் பறக்க விடுகிறது. நபிமார்கள் கண்டித்த      ஓரினச்சேர்க்கைய சட்டபூர்வமாக்கியதன் மூலம் விலங்குகளை விட தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளது.
இஸ்லாமோ மனிதனின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வுக்குத் தேவையான கோட்பாடுகளைத் தெளிவாக்குவதோடு நன்மையின் பக்கம் நிலைத்திருப்பவனாகவும் தீயதை கண்டு பொங்கியெழுபவனாகவும் மாற்றுகிறது. மறுமையை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுபவனாகவும் உலகில் உள்ள எல்லா மனிதர்களிடத்தும் நீதியுடன் நடக்கவும் பணிக்கிறது. நீதி வழங்குவதில் எவ்வித பாரபட்சமும் காட்டாத தெளிவான பார்வையால் தான் இஸ்லாத்தின் காலடியில் அன்றைய பைஸாந்திய பேரரசும் ரோமாபுரியும் வீழ்ந்தது.
1924 வரை ஒரு தலைமையின் கீழ் இருந்த இஸ்லாமிய உம்மா இன்று மேற்குலகின் சதியால் பல கூறுகளாய் பிரிக்கப்பட்டாலும் இன்றும் அது மனித மற்றும் கனிம வளங்களில் நிறைவாகவே உள்ளது. இதனால் தான் உறங்கி கொண்டிருக்கும் உம்மா தன் தூக்கத்தை கலைந்து விழித்து விட்டால் இஸ்லாத்தின் கொடியில் ஓரணியில் திரண்டு விட்டால் தங்கள் ஏகாதிபத்தியங்கள் நொறுங்கி விடும் என்று மேற்கு குறிப்பாக அமெரிக்கா பயப்படுகிறது.
அதனால் தான் இஸ்லாத்தை மனித குலத்தின் விடுதலைக்கான திட்டமாக முன்வைக்க முயலும் இஸ்லாமியவாதிகள் மேற்குலகால் அச்சுறுத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். மேலும் அவர்களையும் இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கைகளின் மூலம் இஸ்லாத்தை நிலைநாட்டலாம் எனும் நப்பாசையை ஊட்டி அவர்களை வலுவிலக்க செய்கின்றனர்.
ஏகாதிபத்தியங்களினால் நியமிக்க பெற்ற முஸ்லிம் உலகின் மன்னர்கள் அமெரிக்காவின் கட்டளைக்கு பணிந்து இஸ்லாத்திற்காக போராடும் இயக்கங்களை நசுக்க முயல்வது வெட்கக்கேடானது. முஸ்லிம்களும் தங்கள் இலக்கை மறந்து மார்க்கத்தின் கிளை பிரச்னைகளில் சண்டையிட்டு கொண்டு சகோதரர்களுக்கு குஃப்ர் பட்டம் கொடுத்து திருப்தி பட்டுக் கொள்கின்றனர். இச்சூழலில் தீண்டாமை, ஜாதி வெறி, நிற வெறி, ஏகாதிபத்தியம், மனிதன் உருவாக்கிய ஜனநாயகம், மதசார்பின்மை, தேசியவாதம் போன்ற அனைத்து விலங்குகளையும் உடைத்தெரிந்து உண்மையான சுதந்திரத்தை பெற்று தர வல்லது இஸ்லாம் மாத்திரமே என்பது உரக்க சொல்லப்பட வேண்டும்.
ஹஜ்ஜாஜ் பின் யூசுப் போன்றோரின் காலங்களில் கூட கொடுங்கோன்மையை எதிர்த்து தியாகம் புரிந்த இமாம்களை போன்று இக்காலகட்டத்தில் இதை உரக்க சொல்ல வேண்டியது உலமாக்களின் மீது கூடுதல் பொறுப்பாக உள்ளது. ஆனால் நடைமுறையில் ஆட்சியாளர்களின் ஊதுகுழல்களாய் ஆலிம்கள் இருப்பது வேதனைக்குரியது. ருஸ்துமின் மேல் படையெடுத்து சென்ற ரபியா பின் ஆமிர் (ரலி) சொன்னதை போல் மக்களை பீடித்துள்ள அடிமைத்தளத்திலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் அடிமைகளாய் மாற்றுவது தான் இன்று உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
 அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (திருக்குரான் 61:8,9)



No comments: