Saturday, May 9, 2009

இந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
முன்னுரை :
இறை நம்பிக்கையாளர்களே ! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள் “ (அல்குர்ஆன் 2:208) . ஒரு முஸ்லீமின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடுக்களை முதல் ஆன்மீகம் வரை, பள்ளிவாயில் முதல் பாராளுமன்றம் வரை என அனைத்திற்கும் தீர்வை குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரையாக திகழ்ந்த நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தே தேட வேண்டும் என குர்ஆன் வலியுறுத்துகிறது. அதனடிப்படையில் வாழ்வின் மற்ற துறைகளை போல் அரசியல் குறித்த இஸ்லாமிய கொள்கையையும் இந்திய அரசியல் குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இஸ்லாத்தின் அரசியல் கொள்கை
அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) எனும் திருமறை வசனத்திற்கேற்ப அனைத்து விடயங்களிலும் நபி(ஸல்) அவர்களை பின்பற்ற வேண்டிய முஸ்லீம்கள் “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்” (மாலிக் –ஸஹீஹுல் புகாரி 9.352) என்ற ஹதீதின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களை தொழுகையில் பின்பற்றும் முஸ்லீம்கள் கூட இஸ்லாமிய அரசியல் கொள்கை குறித்து தெளிவற்றவர்களாக உள்ளனர். ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனை தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாதென்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 12:40, 4:65, 5:18, 6:57, 7:3) என குர்ஆன் பகர்கின்றது. வானின் அதிபதியே இப்பூமிக்கும் அதிபதி. எந்த இறைவன் பூமியை படைத்தானோ அவனுடைய சட்டங்கள் தான் பூமியை ஆள வேண்டும் என்பதையே பகுத்தறிவு உணர்த்தும்.

இந்திய அரசியல் கொள்கை
நமது நாடு ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பாகும். ஜனநாயகத்தின் ஆங்கில வார்த்தையான Democracy என்பது கிரேக்க சொல்லாகும். Demo என்றால் மக்கள் என்றும் Cracy என்றால் ஆட்சிமுறை என்றும் பொருள். எனவே ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சிமுறை என்று அர்த்தப்படும். ஆப்ரஹாம் லிங்கனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் “மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் ஆட்சி” (For the people, of the people, by the people). “ஜனங்களே அதன் நாயகர்கள்” என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை.

ஜனநாயகத்துக்கு முரணான ஜனநாயகம்
பெரும்பான்மை மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது என்பது ஜனநாயகத்துக்கு ஆதரவாக சொல்லப்படும் வாதமாகும். நடைமுறையில் நம் தேர்தல்களை பார்த்தால் மொத்த வாக்குகளில் 60% - 70% தான் பதிவாகும். பதிவான வாக்குகளில் சுமார் 30% - 35% வாங்கும் கட்சி ஆட்சியை பிடிக்கும். எனவே சுமார் 30% மக்களின் அபிமானத்தை பெறும் ஒரு கட்சி 100% மக்களை ஆளுவது எப்படி பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாக ஆக முடியும்?. உதாரணமாக இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் பிராமணர்கள் இந்தியாவை ஆள்வதும், யூதர்கள் அமெரிக்காவை ஆட்டி படைக்கும் சக்தியாக விளங்குவதையும் பார்க்கலாம்.

(இந்திய) அரசியல் குறித்த அரசியல்வாதிகளின் பார்வை
ஜனநாயகம் தோன்றிய கிரேக்க நாட்டிலே அதை உருவாக்கிய தத்துவஞானிகள் கூட அதை “பலவீனமான ஊழல் நிறைந்த ஆட்சி முறை” என்றே குறிப்பிட்டுள்ளனர். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணா அவர்கள் ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது “ஜனநாயகம் எண்ணிக்கைக்கு மட்டுமே மதிப்பளிக்கும். திறமைக்கோ, தகுதிக்கோ மதிப்பளிக்காது. ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே அனைத்தையும் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இந்தியாவின் தேசிய மிருகமாக புலிக்கு பதில் சொறி நாயையும் தேசிய பறவையாக மயிலுக்கு பதில் காகமும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்” என்றார். நமது பாரத முதல் பிரதமர் நேரு அவர்கள் கூட “அரசியல் என்பது கிரிமினல்களின் கடைசி புகலிடம்” என்று சொன்னார்கள். 60 ஆண்டுகள் கடந்தும் நிலை மாறவில்லை. வேண்டுமென்றால் கிரிமினல்களின் முதல் புகலிடமாக அரசியல் உள்ளது என கூறலாம். அதனால் தான் அறிஞர் காண்டேகர் சொன்னார் “ஜனநாயகத்தில் நீங்கள் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உங்களை விரும்பும் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது”.

இஸ்லாமுக்கும் இந்திய அரசியலுக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகள்
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்பது ஜனநாயகத்தின் அடிப்படை நாதமாகும். “இறை தீர்ப்பே மக்களின் விருப்பம்” என்பதே இஸ்லாமின் கொள்கை. ஜனநாயகம் தனது சட்டங்களை மனித மூளையிலிருந்து பெறும் அதே வேளையில் இஸ்லாமோ வஹி மற்றும் தூதரின் வழிகாட்டலிருந்து மட்டுமே பெறுகிறது. ஜனநாயகம் சட்டமியற்றும் அதிகாரத்தை மக்களின் மனோ இச்சையிடம் ஒப்படைத்திருக்கும் போது இஸ்லாமோ இறைசட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை மட்டுமே மனிதனிடம் ஒப்படைத்திருக்கிறது. ஜனநாயகம் மதத்தையும் அரசியலையும் பிரித்து மதத்தை மனிதனின் தனிப்பட்ட வாழ்வுடன் முடக்கிவிடுகிறது. ஆனால் இஸ்லாமோ மனிதனின் முழு வாழ்வுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாய் மாறி விடுகிறது. ஜனநாயகம் எண்ணிக்கையை மட்டும் பிரதானமாக கருதும் போது இஸ்லாமோ நீதி வழங்குதலை பிரதானமாக வலியுறுத்துகிறது. எனவே மேலோட்டமாக தெரியும் ஒரு சில ஒற்றுமைகளை மட்டும் கருத்தில் எடுத்துக் கொண்டு இஸ்லாமும் ஜனநாயகமும் ஒன்று என்பதோ ஜனநாயகத்தை ஹலாலாக்குவதோ கொக்கும் பாலும் வெண்மை நிறம் என்பதற்காக கொக்கும் பாலும் ஒன்று என்பதற்கு ஒப்பானதாகும்.

பெரும்பான்மை குறித்து இந்திய அரசியலும் இஸ்லாமும்
இந்திய அரசியல் சட்டம் அல்லது ஜனநாயகம் பெரும்பான்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. 100 பேர் உள்ள சட்டமன்றத்தில் 51 பேர் ஒரு விடயத்தை ஆதரித்தால் அது சட்டமாகி விடும். அது நன்மை x தீமை, நியாயம் x அநியாயம், சரி x தவறு என்றெல்லாம் பிரித்து பார்ப்பதில்லை. மாறாக பெரும்பான்மையினர் ஆதரிப்பதால் இன்று நம் நாட்டில் மதுவும், விபசாரமும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதை பார்க்கின்றோம். இஸ்லாமோ மதுவை தீமைகளின் தாய் என்றும் விபசாரத்தின் அருகில் கூட நெருங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றது. ஏனென்றால் இஸ்லாம் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை x பெரும்பான்மை என்று பிரிப்பதில்லை. அதனால் தான் திருமறை “பெரும்பான்மையினரின் விருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் வழி தவறி போவீர்கள் (அல் குர்ஆன் 6:116 ) என்று எச்சரிக்கின்றது. இந்த பெரும்பான்மை தான் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை ஈராக்கில் கொன்றொழித்த புஷ்ஷையும், குஜராத் இனப்படுகொலை நடத்திய மோடியையும் அங்கீகரித்து மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெறும் முறையும் இலட்சியமும்
எத்தகைய முஸ்லீம் தலைவராக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டுமென்றால் கூட இன்றைய சூழலில் குறைந்த பட்சம் சில இலட்சங்களை வாரி இறைக்க வேண்டியதுள்ளது. யாரும் சொந்த பணத்தை செலவு செய்து வெறும் சம்பளத்துக்காக வேலை செய்ய மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் பதவியை கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுக்காதீர்கள்” (அபு மூஸா (ரலி) – புகாரி 2261). அண்ணலாரின் வழிகாட்டுதலுக்கு நேர் முரணாக தனிநபர்கள் தங்களை வேட்பாளராக்க கட்சியை நெருக்குவதும் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளையும் கொடுத்து வெற்றி பெறல் முஸ்லீம்களுக்கு ஹராமான ஒன்றே. நடைமுறை சாத்தியமில்லை என்றாலும் வாதத்திற்காக இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றாலும் இவர் நிச்சயமாக அல்லாஹ்வுடைய வேதத்தின் படி பைஅத் (உறுதிமொழி) செய்வதற்கு பதில் அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் போன்ற இறை நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் படியே பைஅத் செய்ய முடியும். இஸ்லாமிய அமைப்பில் “பைஅத்” செய்வதை விமர்சிக்கும் நாம் எப்படி இந்த பைஅத்தை சரி காண முடியும்?.

நடைமுறை உதாரணங்கள்
ஜனநாயகம் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்ட முடியும் என்று சொல்வோர் பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழும் பாகிஸ்தான், வங்காளதேசம், துருக்கி போன்ற நாடுகளில் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வி அடைந்துள்ளதை பார்க்கலாம். துருக்கி பிரதமர் எர்டகானின் மனைவியால் தலை முக்காடு அணிந்து பாராளுமன்றத்துக்கு வர முடியா நிலை தான் இன்றும் உள்ளது. அல்ஜீரியாவில் இஸ்லாமிய கட்சி ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் தடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். சமூகத்தை மாற்றாமல், அடிப்படைகளை மாற்றாமல், வெறும் முகங்களை மாற்றுவது கொண்டு எம்மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

இந்திய அரசியல் ஹராமா? – குர்ஆனிய பார்வையில்
ஒரு முஸ்லீமை பொறுத்த வரையில் ஒரு விஷயத்தை ஹலால், ஹராம் என முடிவு செய்வது அதன் மூலம் கிடைக்கும் உலகாயத நன்மைகளோ அல்லது சமூகத்திற்கு கிடைக்கும் பயன்களைப் பொறுத்தோ மட்டுமல்ல. மாறாக திருமறை குர்ஆனும் திருத்தூதரின் வழிமுறையும் மட்டுமே ஒன்றை ஹலால், ஹராம் என முடிவு செய்ய கூடிய ஒன்றாக இருக்க முடியும். “யார் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் பாவிகள், நிராகரிப்பாளர்கள், அநிநாயக்காரர்கள் (அல் குர்ஆன் 5:44,45,47) என்று அல்லாஹ் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்விடத்தில் இவரின் கல்வி ஞானத்துக்காக துஆ செய்த திருக்குர்ஆனின் மிகச் சிறந்த விரிவுரையாளரான இப்னு அப்பாஸ் (ரலி) இவ்வசனத்துக்கு கருத்து தெரிவித்த போது தன் தப்ஸீரிலே “ யார் இறைவனுடைய ஆட்சியை அமுல்படுத்த தேவையில்லை என்று கருதுகிறார்களோ, யார் மனித ஆட்சி இறையாட்சியை விட மேலானது எனக் கருதுகிறார்களோ, யார் இறையாட்சி போல் மனித ஆட்சியும் நன்மை பயப்பது என கருதுகிறார்களோ அவர் நிராகரிப்பாளர்” என்று சொன்னார்கள். மேலும் இன்று நம்மில் பலர் இறையாட்சியை தான் விரும்புகிறோம், ஆனால் இறைவன் இறக்காத சட்டத்தின் படியும் ஆட்சி செய்யலாம் என கருதுகிறோம். இப்படிப்பட்டவர்களையும் காபிர் (இறைநிராகரிப்பாளர்) என்றே குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவன் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை மறுக்கிறான். அவன் இறையாட்சியை மனித ஆட்சியை விட மேலானது என கருதினாலும் சரியே என குறிப்பிடுகிறார்கள்.

இந்திய அரசியல் ஹராமா ? – சுன்னாவின் ஒளியில்
நபிமார்களை அனுப்பியதின் நோக்கத்தை பற்றி திருமறையில் இறைவன் பிற மார்க்கங்களை மிகைத்து இஸ்லாத்தை மேலோங்க செய்யவே அனுப்பியதாக (அல்குர்ஆன் 61:9) குறிப்பிடுகிறான்.இந்திய அரசியலின் மூலம் இஸ்லாத்தை மேலோங்க செய்யும் வாய்ப்பிருக்கின்றது என இன்னும் நப்பாசையில் இருப்பவர்கள் நபி (ஸல்) வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் “இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்” (அல்குர்ஆன் 9:31)எனும் வசனத்தை ஓதிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கிறிஸ்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்தில் தாங்கள் மஸீஹை வணங்கியது உண்மை. ஆனால் எக்காலத்திலும் தங்கள் பாதிரிமார்களை வணங்கியதில்லை என்று கூறிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன பதில் நாம் ஆழமாக யோசிக்க வேண்டிய ஒன்றாகும்.
இன்ஜீலில் ஒன்றை ஹலால் என்று சொல்லும் போது உங்கள் பாதிரிமார்கள் அதை ஹராமாக்கினால் ஹராமாக்கிக் கொண்டீர்களா? என்று கேட்டதற்கு ஆம் என்றார்கள். இன்ஜீலில் ஒன்றை ஹராம் என்று சொல்லும் போது உங்கள் பாதிரிமார்கள் அதை ஹலாலாக்கினால் ஹலாலாக்கி கொண்டீர்களா ? என்று கேட்டதற்கு ஆம் என்றார்கள். உடனே நபி (ஸல்) தெளிவாக சொன்னார்கள் “ அப்படியென்றால் நீங்கள் அவர்களை உங்களுடைய இலாஹ்வாக எடுத்து கொண்டீர்கள் என்றார்கள்(திர்மிதி). மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் கிறித்தவர்களை இணைவைப்பாளர்கள் என்று சொன்னதற்கு காரணம் அவர்கள் தங்கள் பாதிரிமார்களுக்கு சுஜுது செய்தார்கள் என்பதற்காகவோ, பிராத்தனை புரிந்தார்கள் என்பதற்காகவோ அல்ல. மாறாக இறைசட்டத்துக்கு மாற்றமான மனித சட்டத்திற்கு அடிபணிந்தார்கள் என்பதற்காகவே. பாதிரிகளின் சட்டங்களுக்கு அடிபணிதல் ஷிர்க் என்றால் நம் நிலை என்ன?. உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) எனும் வசனத்திற்கேற்ப பரிபூரணத்துவம் பெற்ற குர்ஆனை வைத்துக் கொண்டு அதற்கு மாறான சட்டங்களை நிலைநாட்ட போராட முனைந்தால் அது தெளிவான ஷிர்க்கேயாகும்.

இந்திய அரசியல் ஹராமா ? – ஸலபுகள், முன்னோர்களின் கூற்றுபடி
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் தனது அல்பதாவா (Vol 35-1373) வில் கூறும் போது “குர்ஆன் மற்றும் சுன்னாவில் தான் கற்றதை விட்டொழித்து அல்லாஹ், அவன் தூதரின் படி ஆட்சி செய்யாத ஆட்சியாளரை பின்பற்றும் அறிஞர் இறைநிராகரிப்பாளர் ஆவார். இவ்வுலகிலும் மறுமையிலும் தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்” என்று கூறுகிறார். இமாம் இப்னு ஜரீர், இப்னு ஹஜ்ம் அல் அந்தலூஸி போன்றோரும் இதே கருத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுத்துள்ளனர். தன் வரம்புகளை மீறி செயல்படுவர்கள் அவர்கள் வணங்கப்பட்டாலும், பின்பற்றப்பட்டாலும், அவர்களின் சட்டங்கள் பின்பற்றப்பட்டாலும் அவர்கள் தாகூத்தே என இமாம் இப்னு கய்யூம் அல் ஜவ்ஜியா குறிப்பிடுவது போல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், அஹ்மத் ஷாக்கிர் போன்ற எண்ணற்ற முன்னோர்கள், ஸலபுகள் ஜனநாயக அரசியல் ஷிர்க் என்பதில் கருத்தொற்றுமை கொண்டவர்களாக உள்ளனர்

இந்திய அரசியல் ஹராமா ? – சமகால அறிஞர்களின் கருத்து
சமகால அறிஞர்கள் பலரும் ஜனநாயகம் ஹராம் என கூறுகின்றனர். உதாரணத்துக்கு ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் அவர்கள் மனித சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் ஆட்சியை பற்றி குறிப்பிடும் போது “அல்லாஹ்வின் அதிகாரம் நீக்கப்பட்டு அது இன்னொரு அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. மக்களிடத்தில் ஷரீஆவின் அதிகாரம் நீக்கப்பட்டு மனித கற்பனைகளில் உருவான அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. இது தெளிவான குப்ராகும். ஏனென்றால் அவன் இறையடிமையாய் இருக்கும் போது இறைவனுடன் தன்னை சமமாக்கி கொள்கின்றான். இதை அல்லாஹ் கண்டிக்கிறான். இந்த அடிப்படையில் தான் ஷேக் முஹம்மது நஸீருத்தின் அல்பானி அவர்கள் கூட மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட முஸ்தபா கமாலின் ஆட்சியை இஸ்லாத்துக்கு முரணானது என தீர்ப்பளித்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல அறிஞர் அப்துர் ரஹீம் கீரின் அவர்கள் 2004-ல் சென்னையில் நடைபெற்ற PEACE கருத்தரங்கில் “இஸ்லாமும் ஜனநாயகமும்” எனும் தலைப்பில் பேசும் போது “இஸ்லாம் சொல்லும் கடமையை ஒருவர் செய்யத் தவறினால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் அவரது செயலை நியாயப்படுத்தினால் அவர் இஸ்லாத்தின் வரையறையை விட்டு வெளியேறியவராக கருதப்படுவார். உதாரணமாக ஒருவர் தொழவில்லையானால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் தொழுவது தேவையில்லை என்று வாதிட்டால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார். அது போல் ஒருவர் இஸ்லாத்துக்கு முரணாண மனித சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ நேரிட்டால் அவர் பாவியாக கருதப்படுவார். அவர் அந்த மனித சட்டங்களை ஆதரித்தால் அதை நியாயப்படுத்தினால் அதற்காக போராடினால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார்” என்றார். மேலும் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் “ஜனநாயகமும் இஸ்லாமும் ஒன்று என்று யாராவது சொன்னால் ஒருவர் திருமணம் செய்யும் போது மஹராக பணம் கொடுக்கிறார், விபசாரத்துக்கும் பணம் கொடுப்பதால் இரண்டும் ஒன்று என்று சொல்வதற்கு சமமாகும்” என்று விளக்கினார்.

தீர்வுக்கான பாதை – இஸ்லாத்தின் அரசியல் கொள்கையை புரிந்து கொள்ளல்
நம்மில் இஸ்லாமிய அடிப்படையில் வாழ தலைப்படும் மனிதர்கள் கூட இந்தியா போன்ற ஒரு நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் போது நாம் நம் தனிப்பட்ட வாழ்வில் கடமைகளை நிறைவேற்றினால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் மக்கா வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் மிக மிகச் சிறுபான்மையினராக முஸ்லீம்கள் இருந்த போது பனூ அம்ரு பின் ஷாஷா எனும் ஒரு கோத்திர தலைவர் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்து “உங்கள் மார்க்க கடமைகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி செய்கிறேன். ஆனால் நீங்கள் ஆட்சியை கைப்பற்றும் போது உங்களுக்கு பிறகு ஆட்சியில் எங்களுக்கு பதவியில் பங்கு வேண்டும்” என்று கூறுகிறார். ஆட்சியை கைப்பற்றுவது இருக்கட்டும் அடி விழுந்தால் கூட தடுப்பதற்கு ஆளில்லா நம்முடைய நிலையை விட மிக பலவீனமான அச்சூழலிலும் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் கோரிக்கையை மறுத்ததோடு “ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று சொன்னார்கள் (அத்தபரி, பிதாயா வன் நிஹாயா) என்றால் இஸ்லாம் ஆட்சி பீடம் ஏறும் போது தான் தீன் முழுமைப்படுத்தப்படும் என்பதை உணரலாம்.

அல்லாஹ், தூதரின் வாக்குறுதியின் மீது முழுமையான நம்பிக்கை
இஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஏற்படும் என்ற முழுமையான நம்பிக்கை ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும். முஸ்லீம்கள் தற்போது இச்சமூகம் சந்தித்து வரும் சோதனைகளை, வேதனைகளை வைத்து நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவம் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். பின் அல்லாஹ் விரும்பும் காலம் வரைக்கும் நுபுத்துவத்தின் வழிமுறையிலான கிலாபத் இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் பரம்பரை ரீதியிலான ஆட்சிமுறை இருக்கும், அவன் நாடும் போது அதை நீக்கி விடுவான். அதற்கு பின் கொடுங்கோலர்கள் ஆட்சி அல்லாஹ் நாடும் வரை இருக்கும், அவன் நாடும் போது அதையும் நீக்கி விடுவான். பின் நுபுத்துவத்தின் வழிமுறையான கிலாபத் (இறையாட்சி) ஏற்படும் என்று கூறி விட்டு பின் அமைதியாக இருந்து விட்டார்கள்” (ஹீதைபா (ரலி) – முஸ்னத் அஹ்மத், திர்மிதி எண் 5378). நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட முன்னறிவிப்பின் படி பார்க்கையில் நுபுத்துவம், கிலாபத்தே ராஷிதியா, பரம்பரை முடியாட்சி அனைத்தும் நீங்கி கொடுங்கோலர்களின் ஆட்சியில் இருக்கும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் என்பது உண்மை. இப்போது நம்முன் உள்ள கேள்வி அல்லாஹ்வும் அவனது தூதரும் அளித்த வாக்குறுதிகளை உண்மையாக நம்பி நம் காலத்தில் வந்தாலும், வரா விட்டாலும் எதிர்கால தொலைநோக்கு அடிப்படையில் அவனுடைய மார்க்கம் மேலோங்க உழைக்க போகிறோமா? அல்லது நம்முடைய பலவீனத்திற்கு நியாயம் கற்பித்து இஸ்லாத்தை இஸ்லாம் அல்லாத வழிமுறைகளின் மூலம் நிலைநாட்டுவதாக எண்ணி இஸ்லாம் ஹராமாக்கிய ஒன்றை செய்ய போகிறோமோ?. அல்லாஹ்வும் தன் திருமறையில் “ மனிதர்களே ! உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கி போன்றே இவர்களையும் பூமிக்கு அதிபதியாக்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்” (அல்குர்ஆன் 24:55) என்று உற்சாகமளிக்கிறான்.

தியாகமும் மறுமை நம்பிக்கையும்
இந்தியாவில் வகுப்புக் கலவரங்களில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தை ஒரு கொள்கையாக எடுத்துச் சொன்னதற்காக, இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக நம் உயிரிழப்பும் அர்ப்பணிப்பும் மிக குறைவாகும். மக்காவின் சுடுமணலில் கொடுமைப்படுத்தப்பட்ட போது சுவனத்தின் வாடையை நுகர்ந்த பிலால் (ரலி), எலும்புக்குள்ளும் ஈமான் ஊடுறுவியுள்ளது என்று தூதரால் சொல்லப்பட்ட அம்மார்(ரலி), முழு சொத்தையும் அண்ணலாரோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), செல்வந்தராக பிறந்து இறக்கும் போது உடலை மூடவும் வழியின்றி மரணித்த முஸைப் (ரலி) ஆகியோரைப் போல் நாம் மறுமையை மனதிலே சுமந்தால் தீனை நிலைநாட்டும் பாதையில் தியாகங்களும் நமக்கு எளிதாக தெரியும், நம் பாதையும் தெளிவாகும்.

முடிவுரை
”(நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உங்களை ஆக்கியிருக்கின்றோம். ஆகவே அதனையே நீங்கள் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 45:18) என்று இறைவன் குறிப்பிடுவது போல் நிச்சயமாக இஸ்லாம் ஒன்று மட்டுமே அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ள கூடிய மார்க்கமாக இருப்பது போலவே அதை அடையும் வழிமுறையும் ஒன்றாக தான் இருக்க முடியும். “Un Islamic are Anti Islamic” என்று சொல்வது போல் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் தவிர மற்ற அனைத்தும் ஜாஹிலிய்யாவே. அவற்றை விரும்பி பின்பற்றுவதும் அதன் அடிப்படையில் போராடுவதும் அதை நிலை நாட்ட போராடுவதும் நிச்சயமாக ஹராமான ஒன்றே என்பதை குர்ஆன், சுன்னா, ஸலபுகள், சமகால அறிஞர்கள் கூற்று படி பார்த்தோம்.
”உலகத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் முதலில் உங்கள் உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துங்கள்” என்று ஹஸன் அல் ஹீஸைபி கூறியதை போன்று நாம் தனி நபராக இருந்தாலும் இப்ராஹீம் (அலை) அவர்களை போன்று ஒரு சமுதாயமாக நாம் செயல்பட வேண்டும். முதலில் நம்மை, நம் குடும்பத்தை, மஹல்லாவை, சமூகத்தை இஸ்லாமிய அச்சில் முழுமையாக வார்த்தெடுக்க நம் நேரம், உடல், பொருளாதாரம், உயிரையும் அர்ப்பணிப்போம். அல்லாஹ் திருமறையில் “நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) என்று குறிப்பிடுவது போல் நாம் விளங்கும் போது நிச்சயம் இந்த தீன் உலகை ஆளும் கொள்கையாக மாறும் இன்ஷா அல்லாஹ். எத்துனை அடிகள் எடுத்து வைத்தோம் என்பது முக்கியமல்ல. ஆனால் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய வழியில் இருக்கிறதா என்பது முக்கியம். பாதை தெரிகிறது என்பதற்காக மேற்கு நோக்கி பயணிப்பவன் ஒரு போதும் சூரிய உதயத்தை காண முடியாது.
ஒவ்வொரு கற்களாய் கொண்டு
வந்து மாளிகை செய்வோம்
நம் வியர்வையாலும் இரத்தத்தாலும்
மார்க்கத்துக்கு உரமிடுவோம்
அல்லாஹ்வின் உதவியும் நம் முயற்சியும்
ஒன்று சேரும் போது
இன்ஷா அல்லாஹ் இறையாட்சி
எனும் கனவும் நனவாகும்.

ஆக்கம் : முஹம்மது ஃபெரோஸ்கான்

உறுதுணை நின்ற நூல்கள், இணையத்தளங்கள், குறுந்தகடுகள்
அல் குர்ஆன், குறிப்பிடப்பட்ட ஹதீஸ் நூற்கள் மற்றும்
1. இஸ்லாத்தின் அரசியல் கொள்கை – மெளலானா மெளதூதி – IFT, சென்னை.
2. அழைப்பின் நிலம் – ஹஜ்ஜுல் அக்பர் – அல்ஹஸனாத், கொழும்பு.
3. தவ்ஹீத் இஸ்லாத்தின் அடித்தளம் – பிலால் பிலிப்ஸ் – IIM, சென்னை.
4. http://www.islamicnetwork.com/
5. http://www.brothermahdi.tripod.com/
6. http://www.scribd.com/
7. http://www.themodernreligion.com/
8. http://www.adduonline.com/
9. http://www.khilafah.com/
10. Peace Conference CD 2004 – Islam and Democracy – Abdur Rahim Green, U.K.

2 comments:

Abdul Haleem said...

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே

ஒரு அடிப்படையை தெளிவுபடுத்த உங்கள் கட்டுரையின் கீழ் எனக்கு கருத்தளிக்க வேண்டியதாயிற்று!!

இஸ்லாம் என்பது ஒரு பறந்து விரிந்த வாழ்க்கை, அரசியல், பொருளாதரம், சமூகம் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு நெறி.

ஒருவர் இஸ்லாம் கூறும் அனைத்தையும் தம்முடைய வாழ்நாளில் பின்பற்ற அல்லாஹ் பணிக்கவில்லை. ஒரு மனிதருக்கு கட்டாய கடமை என்று கூறப்பட்டுள்ள நம்பிக்கை மற்றும் தொழுகையை தவிர. நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் போன்றவை கூட அனைவருக்கும் கடமை என்றோ செய்தே ஆகவேண்டும் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அதற்கான தகுதியை நீங்கள் பெற்று இருந்தாலே தவிர... நீங்கள் கடமைப்பட்டு இருந்தாலே தவிர.....

அப்படி இருக்கும் போது இஸ்லாமிய அரசியல் குறித்த உங்கள் கட்டுரை அனைத்து முஸலீம்களும் கட்டாயம் இஸ்லாமிய அரசியலுக்கு உட்பட்டே வாழ வேண்டும் என்ற கருத்தை விதைக்கிறது. இது முற்றிலும் இஸ்லாத்துக்கு முராணானது. ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான் உங்களில் யாரையும் சக்திக்கு மீறி அல்லாஹ் சிறமப்படுத்துவதில்லை...
அல்பகரா 286.

மேலும் அல்லாஹ் ஆட்சியதிகரத்தை தான் நாடியோருக்கு வழங்குவான் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. யாருக்கு வழங்கப்பட்டுவிட்டதோ அவருக்குத்தான் அதை நடைமுறைப்படுத்திய விதம் குறித்த கேள்வி கேட்கப்படும் சாதராண மக்களுக்கு இதைபற்றிய கேள்வியே மறுமையில் இருக்காது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றுவது என்பது இஸலாமிய ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்று பொருள் இல்லை. அல்லாஹ் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினான் என்பதே பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாக ஆட்சியதிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் உத்தரவின் பேரிலே ஏற்படுத்தினார்கள்.

மேலும் அல்லாஹ் தீர்ப்பு நாளின் அதிபதி என்றுதான் கூறுகிறான். உலகத்தை பொருத்தவரை ஆட்சியதிகாரத்திற்கு கட்டுப்பட்டே வாழ பணிக்கிறான். பார்க்க 4-59...

எப்போது நீங்கள் முஸ்லீம்களாக வாழ ஆட்சியதிகாரம் அனுமதிக்கவில்லையோ அப்போது உங்களுக்கு அதை எதிர்த்து புரட்சி செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது.

நன்றி
அப்துல் ஹலீம்

Abdul Haleem said...

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே

ஒரு அடிப்படையை தெளிவுபடுத்த உங்கள் கட்டுரையின் கீழ் எனக்கு கருத்தளிக்க வேண்டியதாயிற்று!!

இஸ்லாம் என்பது ஒரு பறந்து விரிந்த வாழ்க்கை, அரசியல், பொருளாதரம், சமூகம் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு நெறி.

ஒருவர் இஸ்லாம் கூறும் அனைத்தையும் தம்முடைய வாழ்நாளில் பின்பற்ற அல்லாஹ் பணிக்கவில்லை. ஒரு மனிதருக்கு கட்டாய கடமை என்று கூறப்பட்டுள்ள நம்பிக்கை மற்றும் தொழுகையை தவிர. நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் போன்றவை கூட அனைவருக்கும் கடமை என்றோ செய்தே ஆகவேண்டும் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அதற்கான தகுதியை நீங்கள் பெற்று இருந்தாலே தவிர... நீங்கள் கடமைப்பட்டு இருந்தாலே தவிர.....

அப்படி இருக்கும் போது இஸ்லாமிய அரசியல் குறித்த உங்கள் கட்டுரை அனைத்து முஸலீம்களும் கட்டாயம் இஸ்லாமிய அரசியலுக்கு உட்பட்டே வாழ வேண்டும் என்ற கருத்தை விதைக்கிறது. இது முற்றிலும் இஸ்லாத்துக்கு முராணானது. ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான் உங்களில் யாரையும் சக்திக்கு மீறி அல்லாஹ் சிறமப்படுத்துவதில்லை...
அல்பகரா 286.

மேலும் அல்லாஹ் ஆட்சியதிகரத்தை தான் நாடியோருக்கு வழங்குவான் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. யாருக்கு வழங்கப்பட்டுவிட்டதோ அவருக்குத்தான் அதை நடைமுறைப்படுத்திய விதம் குறித்த கேள்வி கேட்கப்படும் சாதராண மக்களுக்கு இதைபற்றிய கேள்வியே மறுமையில் இருக்காது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றுவது என்பது இஸலாமிய ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்று பொருள் இல்லை. அல்லாஹ் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினான் என்பதே பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாக ஆட்சியதிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் உத்தரவின் பேரிலே ஏற்படுத்தினார்கள்.

மேலும் அல்லாஹ் தீர்ப்பு நாளின் அதிபதி என்றுதான் கூறுகிறான். உலகத்தை பொருத்தவரை ஆட்சியதிகாரத்திற்கு கட்டுப்பட்டே வாழ பணிக்கிறான். பார்க்க 4-59...

எப்போது நீங்கள் முஸ்லீம்களாக வாழ ஆட்சியதிகாரம் அனுமதிக்கவில்லையோ அப்போது உங்களுக்கு அதை எதிர்த்து புரட்சி செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது.

நன்றி
அப்துல் ஹலீம்