Monday, June 24, 2013

விழுது – 5 ஜுலைபிப் : சாதாரண மனிதரின் அசாதரண தியாகம்

பெருமானார் (ஸல்) வாழ்ந்த அரபு சமூகத்தில் பெருமானாரை ஆதரித்த முஸ்லீம்களானாலும் இஸ்லாத்தை எதிர்த்த குறைஷிகளானாலும் இரு பாலர்க்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. சாதாரண மனித ரின் பெயர் சிறியதாக இருந்தாலும் கூடவே நிச்சயம் அவரின் தந்தை பெயர், குலப் பெயர் என மிகப் பெரும் பட்டியலே இருக்கும். நமதூரில் அரசியல் கட்சி கூட்டங்களில் பேச்சை கேட்க வரும் பொதுமக்கள் குறைவாக இருந்தாலும் பேச்சாளர்கள் பெயர்கள் அதிகமாய் நோட்டீஸில் காணப்படுவதை போல் அவர்களது வளமை, பெருமை, குலச்சொத்து எல்லாம் இப்பரம்பரையும் கோத்திரமும் தான்.

இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் ஒருவர் எவ்வித குலம், கோத்திரம் எதுவுமின்றி வாழ்ந்தால் ? அதுவும் இயற்பெயர் கூட வரலாற்றில் அறியப்படாமல் அவரின் அவலட்சணமான தோற்றத்தின் காரணமான பட்டப்பெயரை கொண்டே அழைக்கப்படும் ஒரு நபராக இருந்தால் ? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அல்லவா. ஆம். நாம் அப்படிப்பட்ட ஒரு மனிதரை பற்றி தான் பார்க்க போகின்றோம். ஜுலைபிப் என்பது தான் அவர் பெயர். 

ஜுல்பாப் என்றால் முந்தானை அல்லது தலை முக்காடு என்று பொருள்படும். அதிலிருந்து மருவிய ஜில்பாப் என்பதன் சற்றேறக்குறைய மொழிபெயர்ப்பு குட்டையான என்று அர்த்தப்படும். குட்டையன் எனும் பெயரோடு அழகற்றவன் என்று பொருள்படும் தமீம் எனும் உபரி பட்டப்பெயரும் ஜுலைபிப்புக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. இறையச்சத்தை பற்றியும் ரியாவை பற்றியும் சொற்பொழிவு ஆற்றினால் கூட அப்பேச்சை யாரும் வந்து பாராட்ட மாட்டார்களா என்று அங்கீகாரத்துக்கு ஏங்கி கொண்டிருக்கும் நமக்கு ஜுலைபிப்பாக இருப்பதன் கஷ்டம் புரிந்திருக்கும். 

அவர் ஒரு அன்ஸார் என்பதை தவிர வேறெந்த குறிப்பும் இல்லை. குலமே பிரதானமாய கோத்திரமே சிறப்பாய் விளங்கும் ஒரு சமூகத்தில் குலமுமின்றி, கோத்திரமின்றி, சொந்தமாய் ஒரு பெயருமின்றி வாழ்வது எவ்வளவு கொடுமை ?

பொதுவாக நம்மில் இப்படிப்பட்ட பலவீனர்களாக உள்ளவர்கள் சக ஆண்கள் எப்போதும் நக்கலும் நையாண்டியும் செய்வார்கள் என்பதால் இயல்பாக மென்மையான மனம் படைத்த எதிர்பாலினரிடம் ஆறுதல் தேடுவதை போல் ஜுலைபிபும் தேடியிருப்பார் போலும். அபூ பர்ஸா எனும் மனிதர் தம் மனைவியிடத்தில் அவர்களுக்கு மத்தியில் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது என்று எச்சரிக்கும் அளவு ஒரு ஜடப்பொருளாய் மதீனாவில் காலத்தை ஓட்டி கொண்டிருந்தார் ஜுலைபிப்.

இப்படியெல்லாம் இருந்த ஜுலைபிப்புக்கு நிச்சயம் திருமணம் முடிக்க ஆசை இருந்தாலும் யாரிடத்திலும் சென்று பெண் கேட்க நிச்சயம் துணிவு இருந்திருக்காது. மதீனாவில் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) உருவாக்கிய மதீனத்து சமூகத்தில் இன, குல வேறுபாடுகள் குறைந்து ஈமான் ஒன்றே உறவுக்கான அளவுகோலாக மாறி போனாலும் அச்சமூகமும் ஆரம்ப நிலையிலேயே இருந்தது என்பதை நாம் மறந்து விடலாகாது.
கருணையின் நாயகம் (ஸல்) ஜுலைபிப்பிற்காக பெண் கேட்க போனார்கள், அதுவும் மதீனத்து பிரமுகர்கள் திருமணம் செய்ய போட்டி போடும் அழகான பெண்ணை. முதலில் நபிகள் நாயகம் (ஸல்) பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று உரைத்ததை நபிகளார் தமக்காகவே கேட்டு வந்திருக்கிறார் என்று தப்பர்த்தம் செய்து கொண்ட பெண்ணின் தந்தை முகம் மலர்ந்தார். ஆனால் ஜுலைபிப்புக்காக பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று பெருமானார் சொன்னவுடன் அதிர்ந்து போன அத்தந்தை தம் மனைவியிடம் ஆலோசனை செய்வதாக சொல்லி நழுவினார்.

அப்பெண்ணின் தாயாரிடம் விஷயத்தை சொன்ன போது ஜுலைபிப்புக்கு தன் மகளை கொடுப்பது பற்றி தாம் நினைத்து கூட பார்க்க முடியாது என்று பட்டவர்த்தனமாக சொல்லி  விட்டார். ஒரு வேளை அரும்பாடுபட்டு தாம் வளர்த்த பெண்ணை எப்படி பாழும் கிணற்றில் தெரிந்தே தள்ளுவது என்று நினைத்தாரோ என்னவோ. மனைவியின் கருத்தை நபிகளாரிடம் சொல்ல அத்தந்தை முன் சென்ற போது அப்பெண் தந்தையை இடைமறித்து விபரம் கேட்க பெற்றோர் முழு விபரத்தையும் ஒப்புவித்தனர்.

ஊரே வெறுத்து ஒதுக்கும் ஜுலைபிப்(ரலி) புக்கு தான் தம்மை நபிகள் நாயகம் (ஸல்) பெண் கேட்டு வந்துள்ளார்கள் என்று தெரிந்தும் அப்பெண் தெளிவாக சொன்னார் "இறைதூதரின் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் என் கடமை. நான் ஜுலைபிப்பை மணமகனாக ஏற்கிறேன்" என்ற போது அப்பெண்ணின் பெற்றோர் மட்டுமல்ல, நாமும் கொஞ்சம் ஆடித் தான் போவோம். ஆடிப் போகும் உள்ளங்களுக்காகவே அப்பெண் கீழ் வரும் குரானின் வசனத்தை ஓதி காண்பித்தார்.
"மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை..." (33:36).
அப்பெண்ணின் முடிவை அறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணின் வாழ்வு சிறக்க இறைவனிடம் பிராத்தித்தார்கள். தாம் திருமணம் முடிக்க நினைக்கும் ஆடவனிடத்தில் அவன் தலைமுடியையும், நிறத்தையும், செல்வத்தையும், அழகையும் பார்க்கும் அளவு கூட மார்க்கத்தை பார்க்கா நமக்கு மத்தியில் திருத்தூதரின் தேர்வு என்பதால் தம் சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி ஜுலைபிப்(ரலி) பை மணமகனாக ஏற்ற அப்பெண்ணின் தியாகம் உண்மையில் அர்ப்பணிப்பின் உச்சகட்டம். நபிகளாரின் சிறப்பு பிராத்தனைக்கு உரித்தான அப்பெண்ணின் வாழ்வு ஜுலைபிப் (ரலி) இறக்கும் வரை மனமொத்து சிறப்பாய் இருந்ததை வரலாற்றில் பார்க்கின்றோம்.

ஒரு போர்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படையினரை பார்த்து அவர்கள் யாரையாவது போரில் இழந்து விட்டனரா என்று விசாரிக்க தாங்கள் யாரையும் இழக்கவில்லை என்று தோழர்கள் பதிலளித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "நான் ஜுலைபிப்பை இழந்து விட்டேன். அவரை களத்தில் தேடுங்கள்" என்றார்கள். தோழர்கள் சென்று தேடிய போது ஜுலைபிப் உதிரம் சொட்ட இறந்து கிடந்தார். அவரை சுற்றிலும் ஏழு எதிரிகள் இறந்து கிடந்தனர். ஏழு எதிரிகளை கொன்று ஜுலைபிப் (ரலி) ஷஹீதாகி கிடந்தார்.

ஜுலைபிப்பை பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நெகிழ்ந்து "ஜுலைபிப் என்னுடையவர், நான் அவருடையவர்" என்பதை திரும்ப திரும்ப கூறினார்கள். பின் தம் கரங்களாலேயே ஜுலைபிப்பை ஏந்தி சென்றதோடு தாமே குழி தோண்டி ஜுலைபிப் (ரலி) அவர்களை புதைத்து ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். யாருக்கு கிடைக்கும் இப்பெரும்பேறு.
உடலிலோ, அந்தஸ்திலோ சிறு குறை ஏற்பட்டாலும் துவண்டு துறவியை போல் வாழும் நம்மவர்கள் உருவம் சிறுத்தாலும் தம் செயலால் உயர்ந்து நின்ற ஜுலைபிப் (ரலி) வாழ்வை படிப்பதோடு வாழ வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சும்மாவா சொன்னார்கள் “ஜுலைபிப் என்னுடையவர், நான் அவருடையவர்" .

ஜுலைபிப் ரலியல்லாஹு அன்ஹீ

Monday, March 25, 2013

சுஹைப் (ரலி) அல்லாஹ் பொருந்திய வியாபாரத்தின் முன்மாதிரி


பாலைவன விழுதுகள்  விழுது-4

ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒருவியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (சூரா ஸப் 61:10)

மேற்காணும் வசனத்தில் அல்லாஹ் மனிதர்களை மறுமையின் தண்டனையிலிருந்து காப்பாற்ற கூடியவியாபாரத்தை அறிவிப்பதாக கூறி அதற்கு பதிலாக அல்லாஹ் மற்றும் அவனின் தூதர் மீதும் ஈமான் கொண்டுநமது உயிர்கள் மற்றும் பொருள்களை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போராடுவதே என்று கூறுகிறான்.

நாம் பார்த்த இவ்வசனத்தில் உள்ள பொருளை செலவு செய்வது குறித்த இன்றைய சமூக சூழலை கொஞ்சம்உற்று பார்த்தால் சமூகத்தின் நிலை  நன்கு விளங்கும். மார்க்கத்தை அதிகம் பேசுபவர்கள் கூட பொருளாதார ரீதியான தியாகம்என்றால் தங்கள் பர்ஸை இறுக்க பிடித்து கொள்வதை பார்க்கின்றோம். காற்று வீசுவதை விட வேகமாக தர்மம்செய்ய கூடிய காலத்திலிருந்து கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டிய ஜகாத்தே விவாத பொருளாக மாறி விட்டசூழலில் வாழும் நமக்கு மிக தேவையான படிப்பினை சுஹைப் (ரலி) அவர்களின் வாழ்வில் உள்ளது.

சுஹைப் (ரலி) ஈராக்கில் செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதிலும் ஈராக்ரோமர்களால் வெற்றி கொள்ளப்பட்ட போது அடிமையாக கொண்டு வரப்பட்டு மக்கத்து வீதிகளில் விற்கப்பட்டார். மக்கத்து மக்களிடத்தில் அதிகமாக இருந்த தங்கத்தை உருக்கும் சிறந்த பொற்கொல்லராக திகழ்ந்தசுஹைப் (ரலி) சத்திய இஸ்லாத்தை அதன் ஆரம்ப காலத்திலேயே ஏற்று கொண்டார்.

ஹிஜ்ரத்
இஸ்லாத்தை ஏற்று கொண்ட சுஹைப் (ரலி) மக்காவிலிருந்து மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் அபுபக்கருடன்ஹிஜ்ரத் செல்லும் போதே செல்ல நினைத்தாலும் சில காலம் கழித்தே ஹிஜ்ரத் செல்ல நேரிட்டது. சுஹைப் (ரலி)ஹிஜ்ரத் செல்வதை அறிந்த குறைஷிகள் அவரை பின் தொடர்கின்றனர். குறைஷிகள் தம்மை பின் தொடர்வதைஅறிந்த சுஹைப் (ரலி) ஓரிடத்தில் தம் குதிரையை நிறுத்தி அவர்களை நோக்கி கூறினார்கள் “ நான் அம்பெய்வதில் வல்லவன் என்பது உங்களுக்கு தெரியும். என்னிடத்தில் உள்ள அம்புகூட்டில் உள்ள அனைத்து அம்புகளையும் ஏவிஉங்களை கொல்வேன். அதுவும் தீர்ந்து போனால் என்னிடம் உள்ள கத்தியை கொண்டு அனைவரையும்கொல்வேன்” என்று கூறுகிறார்.

உம்முடைய வியாபாரம் வெற்றி அளித்து விட்டது
இவ்வாறு குறைஷிகளை பயமுறுத்திய சுஹைப் (ரலி) தன்னை பிடிக்க முயற்சிக்கவில்லை என்றால் தான் இளம் வயதிலிருந்து வியர்வை சிந்த பாடுபட்டு உழைத்த அத்துணை செல்வத்தையும் அக்குறைஷிகளுக்கு கொடுத்து விடுவதாக சொல்கிறார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா, நம்முடையை ஆடம்பர செலவுகள் போக குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் இருந்தால் அச்சொத்தில் 97.5% விட்டு விட்டு எஞ்சிய 2.5% அல்லாஹ்வுக்கு கொடுக்க சொல்வதையே விவாத பொருளாக்கிய நமக்கு குறைஷிகளுக்கு 100% ஜகாத் கொடுக்க முன் வந்த சுஹைப் (ரலி) செயல் நிச்சயம் வியப்பை அளித்திருக்கும்.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சுஹைப்பின் வாக்கின் மீது அவரின் எதிரிகளுக்கு கிஞ்சிற்றும் சந்தேகமும் ஏற்படவில்லை. தன் அத்துணை செல்வத்தையும் எதிரிகளுக்கு தாரை வார்த்தாலும் பெருமானாரை சந்திக்க போகிறோம், அவரின் நிழலில் வாழப் போகிறோம் எனும் ஆவலில் மதீனா விரைந்தார் சுஹைப் (ரலி).
சுஹைப் ரலி மதீனா செறடைந்தவுடன் அவரை பார்த்து சந்தோஷத்துடன் முஹம்மது (ஸல்) “ ஓ அபூ யஹ்யாவே ! உம்முடைய வியாபாரம் வெற்றி அளித்து விட்டது” என்று உரக்க கூறினார்கள். மேலும் அல்லாஹ்வும் சுஹைபின் செயலை பாராட்டி திருக்குரானின் கீழ்காணும் வசனத்தை அருளினான் " இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்”. (2:207).

ஆம். அல்லாஹ் பாராட்டுவதை போல் தன் அத்துணை செல்வத்தையும் அல்லாஹ்வுக்காக செலவு செய்தாலும் சுஹைப் (ரலி) அவர்களை பொறுத்த வரை மிக பெறுமானமான வியாபாரமாக தான் கருதினார்கள்.அல்லாஹ் இப்படிப்பட்ட மனிதர்களின் தியாகங்களை குறித்து தான் பின்வருமாறு குறிப்பிடுகிறான் 

ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
   تُؤ (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
(61:10,11)


சுஹைபும் நபிகளாரும்
சுஹைப் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகம் நேசித்ததோடு பல சமயங்களில் விளையாட்டாய் பேசுவார்கள். ஒரு முறை சுஹைப் (ரலி) ஒரு கண்ணில் கட்டியால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் போது பேரீத்தம் பழத்தை சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஒரு கண்ணில் கட்டியோடு எப்படி பேரீத்தம் பழம் சாப்பிடுகிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிண்டலாய் கேட்க தன் இன்னொரு கண்ணை சுட்டி காட்டி பேரீத்தம் பழம் சாப்பிட ஒரு கண் போதுமே என்று சொல்லும் அளவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுஹைபுடன் அந்நியோன்மாய் இருந்தார்கள்.

சுஹைபும் உமரும்

சுஹைப் (ரலி) ஏழைகளுக்கு தர்மம் செய்வதில் எந்தளவு தீவிரமாய் இருந்தார்கள் எனில் உமர் (ரலி) ஏழைகளுக்கு தர்மம் செய்வதில் சுஹைப் ஊதாரித்தனமாய் இருக்கிறார் என்று சொல்லும் அளவு சுஹைப் (ரலி) தர்மம் செய்பவராய் இருந்துள்ளார்.

உமர் (ரலி) பஜ்ர் தொழுகையை தொழ வைத்து கொண்டிருக்கும் நிலையில் கத்தி குத்துபட்டு இறக்கும் நிலையில் யாரை மக்களுக்கு இமாமாக தொழ வைப்பது என்று யோசனை செய்கிறார்கள். பொதுவாக கலீபா தான் மக்களுக்கு இமாமத் செய்வது வழக்கம். அடுத்த கலீபா தேர்ந்தெடுக்கப்படு வரை மக்களுக்கு இமாமத் செய்ய உமர் (ரலி) தேர்ந்தெடுத்தது யாரை தெரியுமா? சுஹைப் (ரலி) அவர்களை தான்.
ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியானவராக இருந்தார்.
அதனால் தான் அவர் ரலியல்லாஹு அன்ஹு.
Published in Iqrah magazine

Wednesday, March 20, 2013

மாற்றம் தேடும் வழி முறைகள்



'ஷஹாதத் கலிமா'வைச் சுமந்த முன்னோர்,
அளப்பரிய வெற்றிகளோடு உலகை ஆண்டார்கள்.
சகலதையும் சம்மதமாய்ப் பார்க்கும் நாமோ,
சொல்லொனா தோல்விகளால் தொடர்ந்தும் மடிகிறோம்.


குர்ஆன் ஹதீஸாக வாழ்ந்த முன்னோர்,
குவலயம் போற்றும் கோமான்களாய் வாழ்ந்தார்கள்,
குர்ஆன் ஹதீஸின் பெயரால் நாம்,
குரோதங்கள் வளர்க்கும் கொடுமையைப் புரிகின்றோம்!


முஸ்லிமை முகமனோடும், எதிரியை வாலோடும்,
சந்திப்பதே நம் வாழ்வும் வரலாறும்;,
இஸ்லாத்தின் எதிரியை அன்போடு அணைக்கின்றோம்,
ஈமானிய உறவுகளை வெறுப்போடு மறுக்கின்றோம்.


பூரண இஸ்லாத்தில் நுழைந்த முன்னோர்,
பாரெங்கும் பங்காற்றி சாதனைகள் புரிந்தார்கள்.
பாதி இஸ்லாத்தையும் புரியாத நாம்,
பாதையைக் காட்டும் குருடனாய் அலைகின்றோம்.


ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக் கென்றோர்,
அழைப்பாலும் அறப் போராலும் கண்டங்களை வென்றார்கள்,
ஆட்சி யதிகாரத்தை மனிதனுக்குத் தந்து,
எம் தேசங்களிலேயே சிறைப்படுத்தப் படுகின்றோம்.


ஒரு 'உம்மத்;' ஒரு 'கிலாபத்' கோட்பாட்டை
ஒரு கணமும் மறந்ததில்;லை முன்னோர்கள்.
'பிளவே எம் பாதை', 'பிரிவினையே எம் வேதம்' என்று
சிதறிய கண்ணாடித் துண்டுகளாக்கியது நம்மவர்கள்.


இறை சட்டங்களால் ஆளப்பட்டதைத் தான்,
'இகாமதுத் தீன்' என்றார்கள்,
விஷத்தில் சிறிது பாலிருந்தாலும்,
வாழும் மனிதனுக்கு தீர்வென்கிறோம் நாம்.


கொள்கைத் தெளிவோடும் தெளிவான வழியோடும்
அழைப்புப் பணிக்கு அழகு சேர்த்தார்கள்.
மயக்கமான கொள்கையோடும் மாறும் வழிமுறைகளோடும்,
முழு மனித வீழ்ச்சியின் கர்த்தாக்கள் ஆனோமே!


சுவனத்தை நாடியும் கோட்பாட்டை மதித்தும்
கட்டுப்பட்ட முன்மாதிரிப் படையே முன்னோர்கள்.
ஆட்களை மகிழ்வூட்டி உலகை அடைவதற்காய்,
கூலிக்கு மாரடிக்கும் ஊதியப் படையே நம்மவர்கள்.


மக்களே!
அனைத்து முஸ்லிம்களையும் அணைத்துக் கொள்வோமே.
நம் முன்னோரின் வழியில் முன்னேறிச் செல்வோமே!
செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருப்போமே!
இறை கலிமாவை உலகெங்கும் ஓங்கச் செய்வோமே!


மக்களே
சம்பூரண இஸ்லாத்தை ஏற்கத் தயங்காதீர்!
'ஷரீஅத்'தில்லா ஆட்சிக்கு வாக்கைத் தராதீர்!
'கிலாபத்' தானாய் வருமென்று தட்டிக் கழிக்காதீர்!
'மஹ்தி' மீட்கட்டுமே யென்று முடங்கிக் கிடக்காதீர்!


மக்களே!
நபி தந்த வழி முறையை பற்றிக் கொள்ளுங்கள்!
'இறையாட்சி தான் தீர்வென்று உரத்துக் சொல்லுங்கள்!
படையின் உதவியோடு தீனை நிலை நாட்டுங்கள்!
நபி வழி கிலாபத்தை மீண்டுமாய்க் கட்டி எழுப்புங்கள்!

Thanks to Thalamaithuvam

Monday, December 10, 2012

திருக்குரான் மாநாடு நிகழ்ச்சி நிரல்






மீண்டும் ஒரு மதீனத்து சமூகத்தை சமைக்கும் இலக்கோடு நடைபெறும் இம்மாநாடு வெற்றி பெற துஆ செய்யுங்கள். வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளூங்கள்.

அனைத்து சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளின் வாழ்த்துரையோடு கலிமத்துல் உள்ஹியா அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க செய்யும் பணியில் வஹ்ததே இஸ்லாமி உங்களை பங்கு பெற அழைக்கிறது.

Thursday, November 22, 2012

பாலைவன விழுதுகள் - 3


கப்பாப்(ரலி) – தியாகத்தின் உயிர் வடிவம்


சத்தியத்தின் தரிசனம்

ஒரு நாள் கப்பாபின் வீட்டருகே மக்கத்து குறைஷிகள் ஆச்சரியத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என கேட்கிறீர்களா? ஆம் மக்காவில் வாட்களை திறம்பட செய்து தரும் மிகச் சிலரில் ஒருவரான கப்பாப் தன் வீட்டை விட்டு போக முடியா அளவு அவருக்கு ஆர்டர்கள் குவிந்திருக்கும். அதனால் தான் அவரை தேடி வந்த குறைஷிகள் கப்பாபை அவ்விடத்து காணாதது குறித்து ஆச்சரியப்பட்டனர்.

வெகு நேரம் கழித்து பிரகாசமான முகத்துடன் வந்த கப்பாப் தன் விருந்தினர்களை வரவேற்றவராக உள்ளே நுழைந்தார். தங்களுடைய வாட்கள் செய்தாயிற்றா என்ற குறைஷிகளின் கேள்விக்கு பதிலாக “என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது” என்று சம்பந்தமில்லாமல் உளறினார் கப்பாப். மேலும் அவர்களை நோக்கி “நீங்கள் அவரை பார்த்ததுண்டா ? அவரின் மொழிகளை கேட்டதுண்டா ? “ என்று கேட்ட போது ஒரு வேளை கப்பாபுக்கு சித்தம் கலங்கி விட்டதோ என்று அவர்கள் நினைத்திருந்தாலும் வியப்பதற்கில்லை.

இவ்வாறு கப்பாபும் குறைஷிகளும் கேள்வியும் பதிலுமாக உரையாடி கொண்டிருந்த வேளையில் அவர் பேசும் நபர் யாரென்பதை ஊகித்த குறைஷிகள் கேட்டார்கள் “ யாரை குறித்து பேசுகிறாய்”. “வேறு யாரை குறித்து நான் சொல்லியிருக்க முடியும். இச்சமூகத்தில் சத்தியத்தால் சூழப்பட்டும் ஒளியூட்டப்பட்டும் இருப்பவர் வேறு யார் உள்ளனர்” என்று கப்பாப் மறுமொழி மொழிந்தார்.

உடன் ஒரு குறைஷியன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எகிறியவனாய் “ முஹம்மதை குறித்து சொல்கிறாய்” என்றான். “ஆம், அவர் இறைவனின் தூதர். குப்ரின் இருளிலிருந்து ஈமானிய வெளிச்சத்துக்கு கொண்டு செல்ல வந்தவர்” என்று கப்பாப் முழங்கியது தான் தாமதம், அடுத்து அவர் மயக்கமாகும் அளவு நைய புடைத்தனர் அம்முரட்டு குறைஷிகள்.

தியாகத்தின் உயிர் வடிவம்

அன்றி்லிருந்து இஸ்லாத்தை ஏற்று கொள்வோர் அதுவும் யாரும் தட்டி கேட்க முடியா அடிமைகளாய் இருந்தால் எங்ஙனம் குறைஷிகள் கொடுமை புரிவார்கள் என்பதற்கும், எந்தளவு அக்கொடுமைகளை இஸ்லாத்திற்காக ஒரு மனிதர் தாங்க முடியும் என்பதற்கும் கப்பாப் உயிர் வடிவமாய் மாறிப் போனார். ஆம் புகலிடம் பெற கோத்திரமில்லா ஒரு அடிமை எல்லா எதிர்ப்புகளையும் மீறி இஸ்லாத்தை ஏற்று கொள்வதை பொறுக்க இயலா அம்மூடர்கள் கப்பாபுக்கு மறக்க முடியா பாடம் கற்பிக்க தீர்மானித்தனர்.

சிபா இப்னு அப்துல் உஸ்ஸாவும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து மக்காவின் உச்சி வேளை மண்டையை பிளக்கும் வெயிலில் கப்பாபின் உடைகளை கழற்றி விட்டு இரும்பாலான போர்க்கவச சூட்டை மாட்டி விட்டார்கள். ஏற்கனவே சூடான மணலில் அவரை அப்படியே கிடத்தி மேலும் சூடாக்கி கொடுமைப்படுத்துவார்கள். மேலும் கற்களை நெருப்பில் இட்டுச் சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அக்கற்கள் நெருப்பு கங்குகளாய் மாறிய பின் அவரை அந்நெருப்பு கங்குகளின் மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுத்தார்கள். அவரது முதுகு சதை துண்டுகள் அத்தீயினால் வெந்து விழ, அவரது காயத்திலிருந்து வழிந்த நீரால் அத்தீயே அணைந்து விடும்.

இப்படிப்பட்ட கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தான் கப்பாப் ஒரு தடவை முஹம்மது (ஸல்) அவர்களிடம் சென்று இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் கொடுமைகளை விவரித்தவராக முஸ்லீம்களுக்காக இறைவனிடம் துஆ செய்யும் படி கப்பாப் வேண்டினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் முகம் சிவக்க இவ்வாறு மறுமொழி சொன்னார்கள் ”உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட காரணத்தால் ரம்பத்தை கொண்டு அவர்களின் தலைகள் இரு கூறாக பிளக்கப்பட்டது. பழுக்க காய்ச்சிய இரும்பு சீப்புகளால் அவர் மேனி கோதப்பட்டு அது அவரின் இறைச்சியை தாண்டி அவர் நரம்பையும் சென்றடைந்தது. ஆனால் இவை யாவும் அவர்களை இம்மார்க்கத்திலிருந்து திசை திருப்பவில்லை. நிச்சயமாக ஒரு காலம் வரும். அப்போது ஸன் ஆவிலிருந்து ஹளரமெளத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எவ்வித அச்சமும் இல்லாமல் செல்வாள்” என பதில் சொன்னார்கள்.

இது ஒன்று போதுமானதாக இருந்தது அந்த ஸஹாபாக்களின் ஈமானை மேலும் மேலும் உறுதியடையச் செய்ய. குறைஷிகள் கப்பாபின் முன்னாள் எஜமானி உம்மு அம்மாரை தூண்டி விட்டு கப்பாபின் தலையில் காய்ச்சிய இரும்பால் சூடு போடுவர். அப்பெண்மணிக்கு சந்தோஷம் கொடுக்காமல் இருக்கும் பொருட்டு தன் வேதனையை மறைத்து கொள்வார். அவரின் தலைக்கு இரும்பு கோலால் சூடு போடப்படுவதை பார்த்த பெருமானார் “நிராகரிப்பாளர்களின் மேல் கப்பாபை வெற்றி கொள்ள வைப்பாயாக” என்று பிராத்தித்தார்கள்.

சில காலம் கழித்து அப்பெண்மணிக்கு இனம் புரியா ஒரு நோய் உண்டாயிற்று. அந்நோயின் காரணத்தால் நாய் குரைப்பது போன்று குரைப்பாள். கடைசியில் அந்நோய்க்கு மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைத்தது சூட்டுகோல் ட்ரீட்மெண்ட் தான். ஆம் தினந்தோறும் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ அவள் தலையில் சூட்டுகோல் டீரீட்மெண்ட் நிச்சயமாய் நடக்கும்.
வேறு சில அறிவிப்புகள் அத்துஆவை கப்பாபே கேட்டதாகவும் தெரிவிக்கின்றன. உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) அவர்களின் கையால் கப்பாபை கொடுமைப்படுத்திய சிபா இப்னு அப்துல் உஸ்ஸா கொல்லப்பட்டான்.

மறுமை மீதான நம்பிக்கை

தான் ஏற்று கொண்ட கொள்கைக்காக இத்துணையும் இழக்க தயாரான கப்பாபை குறித்து நமக்கு ஆச்சரியம் எழலாம். உண்மையில் மறுமையின் மீதான அழுத்தமான நம்பிக்கை தான் கப்பாபுக்கு அத்தகைய மனவலிமையை தந்தது. மறுமையின் மீது கப்பாப் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை நாம் பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மக்கத்து நகரில் ஆஸ் இப்னு வாயில் என்பவன் கப்பாபிடமிருந்து பெற்ற வாட்களுக்காக பெருந்தொகை கடன்பட்டிருந்தான். அவனிடமிருந்து கடனை வசூலிக்க கப்பாப் வந்த போது கப்பாபுக்கு இஸ்லாத்தின் மீதான உறுதியை சோதிக்க எண்ணியவன் முஹம்மதை நிராகரிக்காத வரை கப்பாபுக்கு பணம் தர முடியாது என்றான். குப்பார்களின் நெருப்புக்கே கலங்காத மனம் கொண்ட கப்பாப் தெளிவாக சொன்னார் “ அல்லாஹ் உம்மை மரணிக்க செய்து மீண்டும் எழுப்பும் வரை முஹம்மதை நிராகரிக்க முடியாது” என்றார்.

”அப்படியென்றால் மறுமையில் அல்லாஹ் என்னை எழுப்பும் போது என் கடனை வசூலிக்க வா. அல்லாஹ் எனக்கு அதிக செல்வங்களையும் வாரிசுகளையும் கொடுத்திருப்பான். அதிலிருந்து உனக்கு தருகிறேன்” என்று கப்பாபின் மறுமை நம்பிக்கையை ஏகடியம் பேசினான். அப்போது தான் அல்லாஹ் பின் வரும் வசனத்தை தன் திருமறையில் அருளினான்
“நம்முடைய வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தை செல்வமும் வழங்கப்படும் “ என்று இகழ்ச்சி பேசியவனை நீர் பார்த்தீரா? மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது கருணையாளனான இறைவனிடமிருந்து உறுதி மொழி பெற்றிருக்கிறானா “ (திருக்குரான் 19:77,78)

இப்படியாக இஸ்லாத்திற்காக எல்லா வித தியாகத்தையும் செய்த கப்பாப் பெருமானாருடன் எல்லா போர்களிலும் ஈடுபட்டவர் என்பதோடு அல்லாஹ் நான்கு கலீபாக்களின் காலத்திலும் வாழக் கூடிய அளவுக்கு கப்பாபுக்கு ஆயுளை நீட்டித்து கொடுத்திருந்தான். மேலும் உமர் ரலி இஸ்லாத்தை ஏற்ற சம்பவத்தில் கப்பாபுக்கும் முக்கிய பாத்திரம் உண்டு என்பது நாம் அறிந்ததே.

எளிமையும் தன் நிலை குறித்த பயமும்

உமர் மற்றும் உதுமான் (ரலி) ஆட்சி காலத்தில் பைத்துல்மால் நிரம்பி வழிந்த காரணத்தால் கப்பாபுக்கு உதவி தொகை தாராளமாக கிடைத்தது. தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு எளிய குடில் ஒன்றை அமைத்து கொண்ட கப்பாப் தன்னிடமுள்ள அத்துணை செல்வத்தையும் அக்குடிலின் நடுவே யாரும் வந்து எடுத்து கொள்ளும் அளவு நிரப்பி வைத்திருந்தார்.

காலமெல்லாம் வறுமையிலும் இறுதி காலத்தில் செல்வம் வந்த போது எளிமையாகவும் வாழ்ந்த கப்பாப் தன் மரண தறுவாயில் கண்ணீர் மல்க படுத்திருந்தார். அவரது கண்ணீரை கண்ட சக தோழர்கள் கண்ணீருக்கான காரணத்தை கேட்ட போது கப்பாப் சொன்னார் “"நான் இறப்பதற்காக அழவில்லை. ஆனால் எனக்கு முன்னால் இம்மார்க்கத்தை ஏற்று உயிர் நீத்த சகோதரர்கள் இவ்வுலகில் எதையும் அனுபவிக்காமலேயே மரணித்து விட்டார்கள்" என்று கூறி விட்டு தன் எளிய வீட்டை சுட்டி காட்டி சொன்னார்கள்  " எனக்கு கிடைத்த எல்லா பணத்தையும் அவ்வீட்டில் தான் வைத்திருந்தேன். எதையும் நான் எடுக்கவில்லை. கேட்ட யாருக்கும் எதையும் மறுக்கவில்லை" என்றார்கள். பின் தன் ஜனாஸா துணியை சுட்டி காட்டி கப்பாப் " உஹது போர்களத்தில் பெருமானாரின் மாமா ஹம்ஸாவின் உடலை மறைக்க சரியான துணி கிடைக்கவில்லை. தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது" என்று அழுதார்கள்.

ஒரு முறை கலீபா அலீ (ரலி) அவர்கள் சிப்பின் யுத்தத்திலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு புதிய கப்ரை கண்டு அதை பற்றி விசாரித்த போது அது கப்பாபுடையது என்று சொல்லப்பட்டது. அதற்கு அலீ (ரலி) "  உண்மை முஸ்லீமாகவும் அடிபணிந்த முஹாஜிராகவும் எத்தியாகத்துக்கும் தயாரான முஜாஹிதாகவும் உன் வழியில் போராடிய கப்பாபின் மேல் உன் கருணையை சொறிவாயாக" என்று பிராத்தித்தார்கள்.

ஆம். அப்பிராத்தனைக்கு உரித்தானவர் தான் கப்பாப் (ரலி). அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு.
(தொடர்ந்து வாழ்வோம்)

Thursday, November 1, 2012

மரியம் ஜமீலா மரணம்



லாகூர் : சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மற்றும் அறிஞராக விளங்கிய மரியம் ஜமீலா இன்று (31.10.2012) லாகூரில் மரணமடைந்தார். சில மாதமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மரியம் ஜமீலா தன்னுடைய 78வது வயதில் இன்று காலமானார்.

மே 23, 1934 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஒரு யூத குடும்பத்தில் பிறந்த மார்கரெட் மார்கெஸ் எனும் இயற்பெயர் கொண்ட மரியம் ஜமீலா தன்னுடைய 19வது வயதிலிருந்து மதங்களை குறித்து ஆராய தொடங்கினார். மர்மடுகே பிக்தாலால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குரானும் யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவிய முஹம்மது அஸதின் புத்தகங்களும் தாம் மரியம் ஜமீலாவை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தன.

மே 24, 1961ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்ட மரியம் ஜமீலா தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியாகும் முஸ்லீம் டைஜஸ்டில் எழுத தொடங்கினார். அதே பத்திரிகைக்கு எழுதி கொண்டிருந்த ஜமாத்தே இஸ்லாமியின் நிறுவனர் மவுலானா சையது அலா மெளதூதியின் எழுத்துகளில் தன்னை பறி கொடுத்தார் மரியம் ஜமீலா.

மெளதூதியின் அறிவுரையின் பேரில் பாகிஸ்தானுக்கு 1962ல் சென்று மெளலானாவின் வீட்டோடு தன்னை இணைந்து கோண்டார். பின் பு முஹமது யூசுப் கான் என்பவருக்கு இரண்டாம் தாரமாக தானே முன் வந்து மணமுடித்து கொண்டார்.

மிகச் சிறந்த சிந்தனையாளரான மரியம் ஜமீலா எழுதிய புத்தகங்களில் சில பின்வருமாறு :

§  Islam and modernism
§  Islam versus the west
§  Islam in theory and practice
§  Islam versus ahl al kitab past and present
§  Ahmad khalil
§  Islam and orientalism
§  Western civilization condemned by itself
§  Correspondence between maulana maudoodi and maryum jameelah
§  Islam and western society
§  A manifesto of the Islamic movement
§  Is western civilization universal
§  Who is Maudoodi ?
§  Why I embraced Islam?
§  Islam and the Muslim woman today
§  Islam and social habits
§  Islamic culture in theory and practice
§  Three great Islamic movements in the Arab world of the recent past
§  Shaikh hasan al banna and ikhwan al muslimun
§  A great Islamic movement in turkey
§  Two mujahidin of the recent past and their struggle for freedom against  foreign rule
§  The generation gap its causes and consequences
§  Westernization versus Muslims
§  Westernization and human welfare
§  Modern technology and the dehumanization of man
§  Islam and modern man

அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து சுவனத்தை அளிப்பானாக.