Saturday, March 28, 2015

தொலைக்காட்சி விவாதங்கள் எனும் நவீன காமெடி ரியாலிட்டி ஷோக்கள்

தொலைக்காட்சி என்றாலே பொழுது போக்கு தொலைக்காட்சிகள் என்ற நிலையில் இருந்த மக்களை செய்தி சானல்களின் பக்கம் மக்களை இழுக்க பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டன.

தேர்தல் நேரங்களின் போது சிறப்பு பேட்டிகள், சர்வேக்கள், எக்ஸிட் தேர்தல்கள் என அனைத்தையும் தாண்டி குழு விவாதங்கள் வரை விரிவடைந்தன. ஒரு தலைப்பு அல்லது செய்தி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரே நேரத்தில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் அறிவார்ந்த நிகழ்ச்சிகள் தற்பொழுது தரம் தாழ்ந்து கோமாளித்தனமான ரியாலிட்டி ஷோக்களாக மாறி வருகின்றன என்பது யதார்த்தமான உண்மை.

செய்திகளை கொன்றவர்

அறிவார்ந்த நிகழ்ச்சிகளாக போய் கொண்டிருந்த விவாதங்கள் இன்று தொகுப்பாளர்கள் தங்களை திறமையானவர்களாக பறை சாற்ற முயலும் நிகழ்ச்சிகளாக மாறியுள்ளது கிரிக்கெட் நடுவரே துவக்க ஆட்டக்காரராக மாறி சிக்சர் அடிக்க ஆசைப்படுவது போன்றதாகும். இத்தகைய மாற்றத்திற்கு வழிகோலியவர்களில் ஒருவரான டைம்ஸ் நவ் நியூஸ் ஹவரின் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி குறித்து பிரபல ஆங்கில நாளிதழான அவுட்லுக் " செய்தி நிகழ்ச்சிகளை கொன்றவர்" என்றே அட்டைபட கட்டுரை வெளியிட்டது பொருத்தமான ஒன்றே. கேரவானோ "சத்தத்தை உணர்வீர்" என்று அர்னாபின் நிகழ்ச்சியில் ஏற்படும் காட்டுக்கூச்சலை விமர்சித்திருந்தது.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் " எனும் சொல்வடைக்கேற்ப அர்னாப் கோஸ்வாமி தன்னிடத்தில் பேட்டி எடுத்த போது அவரை குறித்து சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி "முட்டாள், கோழை, நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதற்கு சற்றும் தகுதியில்லாதவன். மூளையை சற்றாவது உபயோகி. அமைதியாக இருப்பது உன் மரபணுவிலேயே கிடையாதா" என்று கூறியது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல என்பதை அர்னாபின் நிகழ்ச்சியை தொடர்ந்து காணும் அனைவரும் ஒத்து கொள்வர்.

டைம்ஸ் நவ்வின் நகைச்சுவை காட்சிகள்

ஆம். இந்தியாவின் மிக அதிகமான மக்களால் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து பார்க்கப்படும் ஆங்கில செய்தி சானலான டைம்ஸ் நவ்வில் ஒளிபரப்பாகும் "நியூஸ் ஹவர்" நிகழ்ச்சியை நீங்கள் தொடர்ந்து பார்த்தால் கீழ்கண்ட காட்சிகளை நிச்சயம் காணலாம்.

 ·        நிகழ்ச்சி தொகுப்பாளர் விருந்தினர்களை நோக்கி காளையை போல் மூர்க்கத்தனமாக பாய்வது

·         டாபர் மேன் போல் விருந்தினர் தொகுப்பாளரை நோக்கி குரைப்பது

·         ஒரே நேரத்தில் அனைவரும் பேசி கொண்டிருப்பது, என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது

·         தொகுப்பாளர் விருந்தினரை பெயர் சொல்லி ஒருமையில் அழைப்பது

·         விருந்தினரின் தேசப்பற்றை தொகுப்பாளரே அளவிடுவது (இந்திய நிறுவனங்களின் மீதோ, அரசியல் சாசனம் மீதோ, நீதித்துறை மீதோ உங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என்று சிபிஎம் (எம்.எல்) பொலிட்பீரோ உறுப்பினர் கவிதாவை பார்த்து பாண்டே பொரிந்தது)

·         இரண்டு தரப்பையும் அரவணைத்து செல்ல வேண்டியவர்  இப்படி தான் பேச வேண்டும் என்று கட்டளையிடுவது

·         போலி தேசியவாத வெறியை தூண்டுவது

இது போன்று பல்வேறு கோமாளித்தனமான நிகழ்ச்சிகளை நிச்சயம் நம்மால் பார்க்க முடியும்.

தேசிய வெறியும் டி.ஆர்.பி ரேட்டிங்கும்

ஈராக் மீதான அமெரிக்க போரின் போது அல் ஜஸீரா வெளியிட்ட நேரடி கள செய்திகள் செய்தி சானலுக்கான தேவையை வளரச் செய்தது.  பின்னர் சர்வதேச அளவில் இரட்டை கோபுர தாக்குதலும் இந்திய அளவிலும் மும்பை தாக்குதலும் செய்தி சானல்கள் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதற்கான சரியான சந்தர்ப்பமாக அமைந்தன என்பதை மறுக்க இயலாது. பரபரப்பு பத்திரிகையியல் மூலம் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதையும் டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏற்றி கொள்வதுமே இவர்களின் நோக்கம்.

குறிப்பாக கடந்த சில வாரங்களில் நியூஸ் ஹவரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியை பார்த்தால் போலி தேசிய வெறியை அர்னாபே தூண்டி விடுவதை தெளிவாக காணலாம். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடும் க்ரீன் பீஸ் செயற்பாட்டாளர் பிரியா பிள்ளை இந்தியாவில் காலடி வைக்க அனுமதி மறுத்து தில்லி விமான நிலையத்திலிருந்தே திருப்பி அனுப்பப்பட்டது குறித்த விவாதத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிரான இந்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்காமல் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டதை கண்டிக்கும் விதமாக 1947ல் நம் நாட்டை வெளியேறியவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்களை கொச்சைப்படுத்தினார்.

இந்தியாவின் மகள் எனும் பெயரில் தில்லி நிர்பயா வன்புணர்வு குறித்து ஆவணப்படம் போட்டியாளரான என்.டி.டி.வியில் ஒளிபரப்பாக இருந்த நிலையில் அப்படம் ஒளிபரப்பாவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனும் கருத்தில் அர்னாப் விவாதம் நடத்தியது அப்படம் இந்திய அரசால் தடை செய்யப்படுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது நம்மில் பலருக்கு தெரியாது. அது போல் காஷ்மீர் முதல்வர் முப்தி முஹமது சையதின் சில கருத்துக்களுக்காக பாகிஸ்தான் ஆதரவு முதல்வர் என்றே ஹேஷ்டேக் போடுமளவு தேசிய வெறி அர்னாபிடம் உள்ளதை உணரலாம்.

அரசின் கொள்கை பரப்பு செயலகங்களா ஊடகங்கள்?

சுருங்க சொன்னால் இரண்டு தரப்புக்கும் மத்தியில் நடுவராக இருந்து தேவையான தகவல்களை பெற்று மக்களுக்கு செய்தியை கொடுப்பதற்கு பதில் உச்சபட்ச தொனியில் தேசியவெறியுடன் சூடேற்றி தன் கருத்துக்கு உடன்படா விருந்தினர்களை தேசப்பற்று இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தி டி.ஆர்.பியை ஏற்று தொலைக்காட்சி உரிமையாளர்களான ஜெயின் சகோதரர்களை நன்கு குளிர்விக்கிறார் அர்னாப் கோஸ்வாமி. தற்போது அவரின் விவாத தலைப்புகளில் உண்மையாகவே தீப்பிழம்பை காண்பிக்கிறார்கள் என்பது வேறு விஷயம். காஷ்மீரில் ராணுவத்தினரின் மனித உரிமை மீறல் குறித்தோ அரசு பயங்கரவாதம் குறித்து எவ்வித நிகழ்ச்சியையும் நடத்தாமல் அரசின் கொள்கை பரப்பு செயலகங்களாகவே திகழ்கின்றனரோ என்ற அச்சத்தையும் புறம் தள்ள முடியவில்லை. கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்த அரசால் முண்ணணி பத்திரிகை ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட பெரும் நிதியையும் இவ்விடத்தில் நாம் நினைவு கூறலாம்.

விருந்தினர்களை தரக்குறைவாக நடத்தும் அர்னாபின் போக்கால் வெறுப்புற்றுள்ள அருணா ராய் போன்ற பல்வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இனி நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் பங்கு பெற மாட்டோம் என்றே பகிரங்கமாக அறிவித்துள்ளனர். பாகிஸ்தானின் ஜியோ டிவி ஆசிரியர் ஹமீது மிர் "ஒவ்வொரு பிரச்னையையும் இந்தியா பாகிஸ்தான் போராக அர்னாப் மாற்றுகிறார்" என்று கூறி தாம் இனி இந்நிகழ்ச்சியில் பங்கு பெற போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதை மனதில் கொண்டோ என்னவோ பிரசார் பாரதி தலைவர் சூர்ய பிரகாஷ் " செய்தி வேண்டுமெனில் நீங்கள் தூர்தர்ஷனை பாருங்கள். ஷோ பார்க்க வேண்டுமெனில் தனியார் தொலைக்காட்சிகளை பாருங்கள்" என்கிறார் போலும்.

குளோனிங்குகள் உருவாகும் அபாயம்

இந்நிகழ்ச்சிகள் வெற்றி பெறுவதின் அபாயம் இதை போலவே பிற தொலைக்காட்சிகளும் அடாவடி ஷோக்களை நடத்த ஆரம்பிக்கும் என்பதே. ஏற்கனவே நியூஸ் எக்ஸ், ஜீ பிஸினஸ், ஹெட்லைன்ஸ் டுடேவின் நிகழ்ச்சிகள் அர்னாபின் குளோன்களால நடத்தப்படுபவை போலவே இருக்கின்றன. தமிழகத்தில் நன்கு காலூன்றியிருந்த புதிய தலை முறையை விட அதிக டி.ஆர்.பி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தி டி.வி ரங்கராஜ் பாண்டே அர்னாப் ஸ்டைலில் நிகழ்ச்சி நடத்துவதை நாம் பார்க்கின்றோம். தங்களின் சித்தாந்த போக்கை பொது புத்தியில் திணிக்கும் இவர்களின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மிகப் பெரும் ஆபத்தை உருவாக்கும். தீவிரவாதத்தை எதிர்கொள்வது எனும் பெயரில் அர்னாப் எழுதிய புத்தகத்தையும் ஆர்.எஸ்.எஸ் குறித்து பாண்டே தினமலரில் எழுதிய கட்டுரையும் அவர்கள் எவ்வகை சித்தாந்தத்தை மக்களின் மனதில் திணிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாக புரியும்.

நடுவராக நடுநிலைமையாக செயல்படாமல் ஒரு பக்க சார்பாக தனக்கு பிடிக்காத தரப்பை கார்னர் செய்து கேள்விகளுக்கு பதில் அளிக்க விடாமல் கிடுக்கி பிடி போட்டு சென்ஷேஷனிலஸம் செய்யும் போக்கு உண்மையில் ஆபத்தான போக்கு. இப்படிப்பட்ட நியூஸ் ஷோக்கள் சூப்பர் சிங்கர் போன்ற அரசியல் ஷோக்களாகவே மாறும், செக்கு மந்தை சமூகத்தையே உருவாக்கும் என்பதில் மாற்று கருத்திருக்க வாய்ப்பில்லை.

-ஃபெரோஸ்கான்

நன்றி - இந்நேரம் 
http://inneram.com/opinions/politics/1928-tv-debates-are-modern-comedy-reality-shows.html

No comments: