Thursday, November 22, 2012

பாலைவன விழுதுகள் - 3


கப்பாப்(ரலி) – தியாகத்தின் உயிர் வடிவம்


சத்தியத்தின் தரிசனம்

ஒரு நாள் கப்பாபின் வீட்டருகே மக்கத்து குறைஷிகள் ஆச்சரியத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என கேட்கிறீர்களா? ஆம் மக்காவில் வாட்களை திறம்பட செய்து தரும் மிகச் சிலரில் ஒருவரான கப்பாப் தன் வீட்டை விட்டு போக முடியா அளவு அவருக்கு ஆர்டர்கள் குவிந்திருக்கும். அதனால் தான் அவரை தேடி வந்த குறைஷிகள் கப்பாபை அவ்விடத்து காணாதது குறித்து ஆச்சரியப்பட்டனர்.

வெகு நேரம் கழித்து பிரகாசமான முகத்துடன் வந்த கப்பாப் தன் விருந்தினர்களை வரவேற்றவராக உள்ளே நுழைந்தார். தங்களுடைய வாட்கள் செய்தாயிற்றா என்ற குறைஷிகளின் கேள்விக்கு பதிலாக “என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது” என்று சம்பந்தமில்லாமல் உளறினார் கப்பாப். மேலும் அவர்களை நோக்கி “நீங்கள் அவரை பார்த்ததுண்டா ? அவரின் மொழிகளை கேட்டதுண்டா ? “ என்று கேட்ட போது ஒரு வேளை கப்பாபுக்கு சித்தம் கலங்கி விட்டதோ என்று அவர்கள் நினைத்திருந்தாலும் வியப்பதற்கில்லை.

இவ்வாறு கப்பாபும் குறைஷிகளும் கேள்வியும் பதிலுமாக உரையாடி கொண்டிருந்த வேளையில் அவர் பேசும் நபர் யாரென்பதை ஊகித்த குறைஷிகள் கேட்டார்கள் “ யாரை குறித்து பேசுகிறாய்”. “வேறு யாரை குறித்து நான் சொல்லியிருக்க முடியும். இச்சமூகத்தில் சத்தியத்தால் சூழப்பட்டும் ஒளியூட்டப்பட்டும் இருப்பவர் வேறு யார் உள்ளனர்” என்று கப்பாப் மறுமொழி மொழிந்தார்.

உடன் ஒரு குறைஷியன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எகிறியவனாய் “ முஹம்மதை குறித்து சொல்கிறாய்” என்றான். “ஆம், அவர் இறைவனின் தூதர். குப்ரின் இருளிலிருந்து ஈமானிய வெளிச்சத்துக்கு கொண்டு செல்ல வந்தவர்” என்று கப்பாப் முழங்கியது தான் தாமதம், அடுத்து அவர் மயக்கமாகும் அளவு நைய புடைத்தனர் அம்முரட்டு குறைஷிகள்.

தியாகத்தின் உயிர் வடிவம்

அன்றி்லிருந்து இஸ்லாத்தை ஏற்று கொள்வோர் அதுவும் யாரும் தட்டி கேட்க முடியா அடிமைகளாய் இருந்தால் எங்ஙனம் குறைஷிகள் கொடுமை புரிவார்கள் என்பதற்கும், எந்தளவு அக்கொடுமைகளை இஸ்லாத்திற்காக ஒரு மனிதர் தாங்க முடியும் என்பதற்கும் கப்பாப் உயிர் வடிவமாய் மாறிப் போனார். ஆம் புகலிடம் பெற கோத்திரமில்லா ஒரு அடிமை எல்லா எதிர்ப்புகளையும் மீறி இஸ்லாத்தை ஏற்று கொள்வதை பொறுக்க இயலா அம்மூடர்கள் கப்பாபுக்கு மறக்க முடியா பாடம் கற்பிக்க தீர்மானித்தனர்.

சிபா இப்னு அப்துல் உஸ்ஸாவும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து மக்காவின் உச்சி வேளை மண்டையை பிளக்கும் வெயிலில் கப்பாபின் உடைகளை கழற்றி விட்டு இரும்பாலான போர்க்கவச சூட்டை மாட்டி விட்டார்கள். ஏற்கனவே சூடான மணலில் அவரை அப்படியே கிடத்தி மேலும் சூடாக்கி கொடுமைப்படுத்துவார்கள். மேலும் கற்களை நெருப்பில் இட்டுச் சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அக்கற்கள் நெருப்பு கங்குகளாய் மாறிய பின் அவரை அந்நெருப்பு கங்குகளின் மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுத்தார்கள். அவரது முதுகு சதை துண்டுகள் அத்தீயினால் வெந்து விழ, அவரது காயத்திலிருந்து வழிந்த நீரால் அத்தீயே அணைந்து விடும்.

இப்படிப்பட்ட கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தான் கப்பாப் ஒரு தடவை முஹம்மது (ஸல்) அவர்களிடம் சென்று இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் கொடுமைகளை விவரித்தவராக முஸ்லீம்களுக்காக இறைவனிடம் துஆ செய்யும் படி கப்பாப் வேண்டினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் முகம் சிவக்க இவ்வாறு மறுமொழி சொன்னார்கள் ”உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட காரணத்தால் ரம்பத்தை கொண்டு அவர்களின் தலைகள் இரு கூறாக பிளக்கப்பட்டது. பழுக்க காய்ச்சிய இரும்பு சீப்புகளால் அவர் மேனி கோதப்பட்டு அது அவரின் இறைச்சியை தாண்டி அவர் நரம்பையும் சென்றடைந்தது. ஆனால் இவை யாவும் அவர்களை இம்மார்க்கத்திலிருந்து திசை திருப்பவில்லை. நிச்சயமாக ஒரு காலம் வரும். அப்போது ஸன் ஆவிலிருந்து ஹளரமெளத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எவ்வித அச்சமும் இல்லாமல் செல்வாள்” என பதில் சொன்னார்கள்.

இது ஒன்று போதுமானதாக இருந்தது அந்த ஸஹாபாக்களின் ஈமானை மேலும் மேலும் உறுதியடையச் செய்ய. குறைஷிகள் கப்பாபின் முன்னாள் எஜமானி உம்மு அம்மாரை தூண்டி விட்டு கப்பாபின் தலையில் காய்ச்சிய இரும்பால் சூடு போடுவர். அப்பெண்மணிக்கு சந்தோஷம் கொடுக்காமல் இருக்கும் பொருட்டு தன் வேதனையை மறைத்து கொள்வார். அவரின் தலைக்கு இரும்பு கோலால் சூடு போடப்படுவதை பார்த்த பெருமானார் “நிராகரிப்பாளர்களின் மேல் கப்பாபை வெற்றி கொள்ள வைப்பாயாக” என்று பிராத்தித்தார்கள்.

சில காலம் கழித்து அப்பெண்மணிக்கு இனம் புரியா ஒரு நோய் உண்டாயிற்று. அந்நோயின் காரணத்தால் நாய் குரைப்பது போன்று குரைப்பாள். கடைசியில் அந்நோய்க்கு மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைத்தது சூட்டுகோல் ட்ரீட்மெண்ட் தான். ஆம் தினந்தோறும் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ அவள் தலையில் சூட்டுகோல் டீரீட்மெண்ட் நிச்சயமாய் நடக்கும்.
வேறு சில அறிவிப்புகள் அத்துஆவை கப்பாபே கேட்டதாகவும் தெரிவிக்கின்றன. உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) அவர்களின் கையால் கப்பாபை கொடுமைப்படுத்திய சிபா இப்னு அப்துல் உஸ்ஸா கொல்லப்பட்டான்.

மறுமை மீதான நம்பிக்கை

தான் ஏற்று கொண்ட கொள்கைக்காக இத்துணையும் இழக்க தயாரான கப்பாபை குறித்து நமக்கு ஆச்சரியம் எழலாம். உண்மையில் மறுமையின் மீதான அழுத்தமான நம்பிக்கை தான் கப்பாபுக்கு அத்தகைய மனவலிமையை தந்தது. மறுமையின் மீது கப்பாப் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை நாம் பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மக்கத்து நகரில் ஆஸ் இப்னு வாயில் என்பவன் கப்பாபிடமிருந்து பெற்ற வாட்களுக்காக பெருந்தொகை கடன்பட்டிருந்தான். அவனிடமிருந்து கடனை வசூலிக்க கப்பாப் வந்த போது கப்பாபுக்கு இஸ்லாத்தின் மீதான உறுதியை சோதிக்க எண்ணியவன் முஹம்மதை நிராகரிக்காத வரை கப்பாபுக்கு பணம் தர முடியாது என்றான். குப்பார்களின் நெருப்புக்கே கலங்காத மனம் கொண்ட கப்பாப் தெளிவாக சொன்னார் “ அல்லாஹ் உம்மை மரணிக்க செய்து மீண்டும் எழுப்பும் வரை முஹம்மதை நிராகரிக்க முடியாது” என்றார்.

”அப்படியென்றால் மறுமையில் அல்லாஹ் என்னை எழுப்பும் போது என் கடனை வசூலிக்க வா. அல்லாஹ் எனக்கு அதிக செல்வங்களையும் வாரிசுகளையும் கொடுத்திருப்பான். அதிலிருந்து உனக்கு தருகிறேன்” என்று கப்பாபின் மறுமை நம்பிக்கையை ஏகடியம் பேசினான். அப்போது தான் அல்லாஹ் பின் வரும் வசனத்தை தன் திருமறையில் அருளினான்
“நம்முடைய வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தை செல்வமும் வழங்கப்படும் “ என்று இகழ்ச்சி பேசியவனை நீர் பார்த்தீரா? மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது கருணையாளனான இறைவனிடமிருந்து உறுதி மொழி பெற்றிருக்கிறானா “ (திருக்குரான் 19:77,78)

இப்படியாக இஸ்லாத்திற்காக எல்லா வித தியாகத்தையும் செய்த கப்பாப் பெருமானாருடன் எல்லா போர்களிலும் ஈடுபட்டவர் என்பதோடு அல்லாஹ் நான்கு கலீபாக்களின் காலத்திலும் வாழக் கூடிய அளவுக்கு கப்பாபுக்கு ஆயுளை நீட்டித்து கொடுத்திருந்தான். மேலும் உமர் ரலி இஸ்லாத்தை ஏற்ற சம்பவத்தில் கப்பாபுக்கும் முக்கிய பாத்திரம் உண்டு என்பது நாம் அறிந்ததே.

எளிமையும் தன் நிலை குறித்த பயமும்

உமர் மற்றும் உதுமான் (ரலி) ஆட்சி காலத்தில் பைத்துல்மால் நிரம்பி வழிந்த காரணத்தால் கப்பாபுக்கு உதவி தொகை தாராளமாக கிடைத்தது. தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு எளிய குடில் ஒன்றை அமைத்து கொண்ட கப்பாப் தன்னிடமுள்ள அத்துணை செல்வத்தையும் அக்குடிலின் நடுவே யாரும் வந்து எடுத்து கொள்ளும் அளவு நிரப்பி வைத்திருந்தார்.

காலமெல்லாம் வறுமையிலும் இறுதி காலத்தில் செல்வம் வந்த போது எளிமையாகவும் வாழ்ந்த கப்பாப் தன் மரண தறுவாயில் கண்ணீர் மல்க படுத்திருந்தார். அவரது கண்ணீரை கண்ட சக தோழர்கள் கண்ணீருக்கான காரணத்தை கேட்ட போது கப்பாப் சொன்னார் “"நான் இறப்பதற்காக அழவில்லை. ஆனால் எனக்கு முன்னால் இம்மார்க்கத்தை ஏற்று உயிர் நீத்த சகோதரர்கள் இவ்வுலகில் எதையும் அனுபவிக்காமலேயே மரணித்து விட்டார்கள்" என்று கூறி விட்டு தன் எளிய வீட்டை சுட்டி காட்டி சொன்னார்கள்  " எனக்கு கிடைத்த எல்லா பணத்தையும் அவ்வீட்டில் தான் வைத்திருந்தேன். எதையும் நான் எடுக்கவில்லை. கேட்ட யாருக்கும் எதையும் மறுக்கவில்லை" என்றார்கள். பின் தன் ஜனாஸா துணியை சுட்டி காட்டி கப்பாப் " உஹது போர்களத்தில் பெருமானாரின் மாமா ஹம்ஸாவின் உடலை மறைக்க சரியான துணி கிடைக்கவில்லை. தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது" என்று அழுதார்கள்.

ஒரு முறை கலீபா அலீ (ரலி) அவர்கள் சிப்பின் யுத்தத்திலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு புதிய கப்ரை கண்டு அதை பற்றி விசாரித்த போது அது கப்பாபுடையது என்று சொல்லப்பட்டது. அதற்கு அலீ (ரலி) "  உண்மை முஸ்லீமாகவும் அடிபணிந்த முஹாஜிராகவும் எத்தியாகத்துக்கும் தயாரான முஜாஹிதாகவும் உன் வழியில் போராடிய கப்பாபின் மேல் உன் கருணையை சொறிவாயாக" என்று பிராத்தித்தார்கள்.

ஆம். அப்பிராத்தனைக்கு உரித்தானவர் தான் கப்பாப் (ரலி). அதனால் தான் அவர்கள் ரலியல்லாஹு அன்ஹு.
(தொடர்ந்து வாழ்வோம்)

2 comments:

faizeejamali said...

Superb history

Anonymous said...

மிக்க நன்றி