Thursday, December 16, 2010

அரபு மன்னர்களும் ஈரானும் : தொடரும் துரோகம்

மீண்டும் இன்னொரு அரபுலகின் துரோகமா ? முதலாம் உலக போருக்கு முன்னதாக உதுமானிய கிலாபத்துக்கு எதிராக அணி திரண்டு கிலாபத்தை கவிழ்த்த அரபு கிளர்ச்சிக்கும் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ள ஈரானை தாக்க அரபுகள் அமெரிக்காவுக்கு கொடுத்த அழுத்தத்திற்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன.


சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அரபு கோத்திர தலைவர்கள் முஸ்லீம் மன்னரான உதுமானிய கலீபாவுக்கு துரோகமிழைத்து பிரிட்டனின் கூட்டாளிகளாய் மாறியதன் விளைவு உதுமானிய கிலாபத் கவிழ்க்கப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளாகவே மத்திய கிழக்கு பிரிட்டனின் காலனியாய் மாறி போனது. 3 தசாப்தங்களுக்குள்ளாகவே இஸ்ரேல் மத்திய கிழக்கில் மலர்ந்தது. சவூதி அரேபியா, ஈராக், குவைத், ஜோர்டான் மற்றுமுள்ள வளைகுடா நாடுகள் சுதந்திரமான நாடுகளாக அறிவிக்கப்பட்டாலும் மேற்குலகின் அடியாட்களாய் விளங்கின. லீவாட் சிரியா மற்றும் லெபனானாக பிரிக்கப்பட்டது. பலஸ்தீன் பிரிட்டனின் முழுமையான கட்டுபாட்டில் வந்தது.

உதுமானிய கிலாபத்துக்கு எதிரான அரபுலக கிளர்ச்சியை இயக்கியதில் முக்கிய பங்கு பிரிட்டிஷ் உளவாளி டி.இ.லாரன்ஸுக்கும் வெளியுறவு துறை ஆலோசகர் கெர்டுரூட் பெல்லுக்கும் இருந்தாலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை வகித்தவர்கள் சவூதி அரேபியாவின் தந்தை என அழைக்கப்படும் இப்னு சவூத் எனும் அப்துல் அஜீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல் சவூதும் மக்காவின் அன்றைய ஆளுநராக இருந்த ஹூசேன் பின் அலியும் ஆவார்கள்.

பிரித்தானியா அரசாங்கம் இருவரையும் மன்னராக்குவதாக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இருவரும் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பங்காற்றினர். ஒரு உறையில் இரண்டு வாட்கள் இருக்க முடியாது எனும் மரபுக்கேற்ப ஹூசைனை தோற்கடித்து தன்னை சவூதியின் மன்னராக இப்னு சவூத் அறிவித்து கொண்டார். பிரிட்டனிடம் தஞ்சமடைந்த ஹூசைனின் இரு மகன்களையும் ஜோர்டான் மற்றும் ஈராக்கின் மன்னர்களாக பிரிட்டன் முடி சூட்டியது. இந்த நன்றி கடனுக்காக மேற்குலகின் அடிவருடிகளாய் அரபு மன்னர்கள் மாறிய நிலை இன்றும் தொடர்கிறது.

உதுமானிய கிலாபத்தை கவிழ்த்த நூறு ஆண்டுகளுக்கு பின் இன்னொரு இஸ்லாமிய சக்தியான ஈரானுக்கு எதிரான அரபுலக சதி வீக்கிலீக்ஸ் உபயத்தால் அம்பலமாகியுள்ளது. இதில் ஆச்சரியமளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் ஈரானின் அழிவை தான் இஸ்ரேலும் ஆவலுடன் நோக்குகிறது. ஈராக்கை போல் ஈரானும் அமெரிக்காவால் தரைமட்டமாக்கப்படுவதை தான் அரபுலகும் விரும்புகின்றது என்றால் அரபுலகும் இஸ்ரேலும் கள்ள கூட்டாளிகளா என்பது தான் அரபுலகம் மற்றும் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகின் மக்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது.


ஈரானை ஒழிக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, 2006ம் ஆண்டு லெபனானில் இஸ்ரேலிய படைகளை புறமுதுகிட்டு ஓட செய்த போராளி இயக்கமான ஹிஸ்புல்லாவையும் ஒழிக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆதரவுடன் அரபு நாடுகளின் படைகள் ஹிஸ்புல்லாவை தோற்கடிக்க வேண்டும் என்ற சவூதி அரேபியாவின் சிறுமைத்தனமான எண்ணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இச்செய்திகள் கேள்விப்பட்ட அரபுலக மக்கள் கொதித்து போயுள்ளனர். அரபுலகம் சவூதியின் தலைமையில் அணி திரண்டு பலஸ்தீனை இஸ்ரேலிடமிருந்து விடுவிக்க போர் தொடுத்தியிருந்தால் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகமும் சவூதியை மனமார வாழ்த்தியிருக்கும். ஆனால் இவர்களோ இஸ்ரேலின் எதிரியான ஹிஸ்புல்லாவை அழிக்க நாடியுள்ளனர். இதனால் தானோ என்னவோ ஒரு முறை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சவூதி எங்களுக்கு நட்பு நாடு என்று கூறினார் போலும்.

ஆனால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸின் கேபிளில் ஒன்று கூட சவூதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க முனைந்ததாகவோ குறைந்த பட்சம் பலஸ்தீன் நாடு உருவாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா மூலம் அழுத்தம் கொடுக்க முனைந்ததாகவே சொல்லவில்லை. இஸ்லாமின் ஆரம்ப காலங்களில் இருந்த கிலாபத்தை போல் முஸ்லீம் நாடுகளின் பிரச்னைகளை கையில் எடுத்து போராடுவதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் தலைமைத்துவம் வழங்கும் தகுதி சவூதி அரேபியாவுக்கு உண்டு. தன் நிதி மற்றும் புனித தலங்களின் காப்பாளர் எனும் அடிப்படையில் வெகு எளிதாக முஸ்லீம் நாடுகளை ஒன்றிணைத்து பலஸ்தீனை மீட்டெடுக்க சவூதியால் முடியும். ஆனால் அதன் பொருளாதரம் கூட முஸ்லீம் நாடுகளுக்கு பயன்படுவதை விட சரிந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி பிடிக்க தான் உதவுகிறது என்பது தான் யதார்த்தம்.

சவூதியின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதற்கு உதாரணமாய் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக சவூதி ஆயுதங்கள் வாங்கியதை குறிப்பிடலாம். தற்போதைய சூழலுக்கு அவர்கள் அதை பயனபடுத்த போவதில்லை என்ற போதிலும் அவர்கள் வாங்குவதில் ஆர்வமாய் உள்ளனர். சவூதி அரசாங்கம் தன் நிதியை பயன்படுத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கு செலவழித்து மருத்துவம், பெளதிகம், இரசாயனம் என எல்லா துறைகளிலும் தலை சிறந்த சவூதி / அரபு / முஸ்லீம் விஞ்ஞானிகளை உருவாக்கலாம். இதற்கான ஆற்றல் படைத்தவர்கள் இல்லை என்பதல்ல, மாறாக சவூதிக்கு இப்படி உருவாக்க விருப்பமில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு மாறாக பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் பாதுகாவலன் அமெரிக்காவுக்கு தன் வளங்களை வாரி இறைத்து பொருட்கள் வாங்கவே விரும்புகிறது.

ஈரானின் அணு ஆயுத திட்டத்தை சவூதி எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம் ஆணு ஆயுத பலம் கொண்ட ஈரானால் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை தூண்டி விட முடியும் என்பது தான். ஏற்கனவே மக்கள் அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது சவூதி அறியாத ஒன்றல்ல. அதிருப்தி குரல்களும், எதிர்ப்பாளர்களும் துப்பாக்கி முனையில் கடத்தப்படுவதும், அமுக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றே. அதனால் தான் விக்கிலீக்கின் இன்னொரு கேபிளில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அல்-காயிதா, லஷ்கர் இ தொய்பா, தாலிபான் போன்றவற்றிக்கு சவூதி அரசு அல்ல சவூதி மக்களே நிதியுதவி செய்கின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார்.

அரசின் அடிவருடிகளாக உள்ள சில அறிஞர்களோ ஷியா ஈரான் சுன்னி இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி யூத இஸ்ரேலுடன் கை கோர்த்தாவது ஈரானை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பாவம் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு தலைமேயேற்க சவூதி வலுக்கட்டாயமாக மறுப்பதால் தான் அவ்வெற்றிடத்தை ஈரான் நிரப்புகிறது என்பதை மறந்து விட்டனர்.


அன்பு சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும். ஈரானின் மீது தாக்குதல் நடத்த சவூதி அரேபியா கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளதை தொடர்ந்து அஜீஸ் இஜ்ஜத்தீன் எழுதிய கட்டுரையை ஒரு சகோதரர் அவரின் கருத்துடன் அனுப்பியிருந்தார்.  அவரின் கருத்தையும் இத்துடன் மொழியாக்கம் செய்திருக்கின்றோம்
சகோதரரின் கருத்து

சர்வதேச முஸ்லீம் மற்றும் இஸ்லாமிய விஷயங்களில் ஆர்வமுள்ள அனைவராலும் ஈரானின் மேல் போர் தொடுக்க சவூதி கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது கவனிக்கப்பட கூடிய விஷயமாய் உள்ளது. இஸ்லாமிய விழுமியங்களையும் சுய கெளரவத்தையும் அற்ப உலகியல் இலாபங்களுக்காக பிரிட்டிஷாரிடம் விற்று தான் மன்னராக வேண்டுமென்பதற்காக முஸ்லீம் உலகுக்கு இப்னு சவூது ஏற்படுத்திய பாதிப்புகளை அஜீஸ் இஜ்ஜத்தீனின் கட்டுரை படம் பிடித்து காட்டுகிறது.

முஸ்லீம்களின் வீழ்ச்சியின் வரலாறு உதுமானிய கிலாபத்தின் மறைவிலிருந்து தொடங்குகிறது. இன்று முஸ்லீம் நாடுகளை வழி நடத்தும் தலைமை பொறுப்புக்கு ஈரான் முனைகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் சவூதி அரேபியா ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் குறிப்பாக அரபுலகத்திற்கும் செயத தவறுகளே என உறுதிபட கூற முடியும்.

இயற்கையாகவே முஸ்லீம் உலகுக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ள சவூதி அரேபியாவின் மன்னர்கள் தான் இஸ்ரேலுடன் கள்ள உறவு கொண்டு முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. பாலஸ்தீன விவகாரத்தைஒரு வேளை இதை படிக்கும் யாரும் என்னை ஷியா என்று நினைத்தால் தவறு. செத்து பிழைக்கும் சவுதி மன்னர்களை காட்டிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஈரானின் துணிவு எனக்கு பிடித்திருக்கின்றது. நான் சுன்னி தான் அதிலும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இப்னு தைமியா, அப்துல் வஹாபை பின்பற்றுகின்றவன் தான் நான்.

3 comments:

Abufaisal Sahib said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்! இந்த கட்டுரை தற்போதைய சவூதியை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது. சவுதிகள் மத்தியில் ஈரான் ஒரு முஸ்லிமல்லாத நாடு போன்ற தோற்றத்தையே இங்கு காண முடிகிறது ஒரு சில சதவீதத்தினரை தவிர அனைவரும் அரசு கூறுவதையே கண்மூடித்தனமாக நம்புகின்றனர் இவர்களிடம் எந்த குறையுமே இல்லாதது போல் ஈரானை அனைத்து விசயங்களிலும் குறை காணுகின்றனர் இன்னும் சொல்லப்போனால் அரசுக்கு எதிராக இல்லை அரசை பற்றி பேசினாலும் சிஐடிக்கள் மூலம் தகவல் பெறப்பட்டு அந்த நபர் அப்போதே கையும் களவுமாக பிடிக்கப்பட்டு இருட்டு சிறையில் அடைக்கப்படுவதால் பலரும் வாயை திறக்கவே அஞ்சுகின்றனர். உதாராணமாக இங்கு சவூதிகள் யாரிடமாவது போய் உங்கள் மன்னர் எப்படி? என்று கேட்டால் எதுவும் சொல்லாமல் பேசாமல் போய்விடுவார்கள் அவ்வளவு பயம் ஒற்றர் படை நிறைந்த இடம் இது யார் ஒற்றன் என்றே சொல்ல முடியாது. இதனாலேயே அரசு தான் நினைத்ததை எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை அல்லாஹ்தான் இதை மாற்றியமைக்க வேண்டும். என்ன இருந்தாலும் ஈரான் அதிபரின் வீரத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதிபர் சதாமிற்கு இணையாக அமெரிக்காவிற்கு எதிராக முஸ்லிம்கள் மட்டுமே சவால் விட முடியும் என்பதை உலகம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. அபூஃபைஸல் - ரியாத்

அப்துல் ரஹ்மான்.ஜ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஷியா-சுன்னி அரசியல் பிரிவினையை வைத்து காலம் ஓட்டுவார்கள் என்று பார்த்து விடுவோம்.

மாற்றம் வேண்டும்! அது மார்க்க மேதைகளின் கைகளில் உள்ளது.

இதனை நன்றாக உணர்ந்ததாலேயே சவூதி, பெஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் செல்லும் உலமாக்களை "ஸலஃபு கொள்கை" தான் பெருமானாரின் கொள்கை என்று ப்ரைன் வாஷ் செய்து ஷியாக்களை ஒட்டுமொத்தமாக காஃபிர்கள் என்று பிரச்சாரம் செய்யும் அளவு மாற்றி அனுப்புகின்றனர்.

இந்நிலை மாறும். உண்மை நீண்டநாள் உறங்காது. அதன் ஆதாரம் தான் இன்றைய விக்கிலீக்ஸ் பறைசாற்றுகிறது.

இஸ்லாத்திற்கு எதிரான மன்னராட்சி மறைவில் தன்னிலை மறந்து செயல்படும் சவூது பரம்பரையினர் தங்களின் அழிவின் பாதையில் உள்ளனர் என்பதை அல்லாஹ் புரிய வைப்பான் இன்ஷா அல்லாஹ்.

அருளாளனின் அடிமை said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கட்டூரை ஆசிரியருக்கும் அதை மொழிபெயர்த்த சகோதரருக்கும் ஜசகல்லாஹ் ஹைரன்.

///சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அரபு கோத்திர தலைவர்கள் முஸ்லீம் மன்னரான உதுமானிய கலீபாவுக்கு துரோகமிழைத்து ////

கிலாஃபாவை வீழ்த்த உதவியாய் இருந்த அரபுகளை அரபுகளாகவும், கிலாஃபாவின் தலைமையை முஸ்லிம்கலாகவும் கூறியிருப்பது சில உள்ளார்ந்த கருத்துக்களை உடையதாய் உள்ளது. அன்று இருந்த கிலாஃபாவும் ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சியாய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுடன் சவுதி அரேபியா கூட்டனி வைத்திருக்குமோ என்று சந்தேகத்துடன் எழுதியுள்ளீர்கள். நான் அறிந்தவரை இஸ்ரேல் தனது (திருட்டு)நாட்டில் விழையும் பொருட்களை எகிப்து வலியாக சவுதிக்கும் மற்ற அரபுநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.

இது போன்ற இன்னும் பல அறிவார்ந்த(intelectual) கட்டூரைகள் உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்.